Friday, April 17, 2009

தேரையோடு ஒரு விளையாட்டு!

எல்லாரும் செல்லங்களா என்ன என்னமோ வளர்ப்பாங்க. ஆனால் எங்க வீட்டிலே நாங்க வளர்க்கவே வேண்டாம். எல்லாம் வந்து குடியேறுது. அதிலும் இப்போ இரண்டு நாட்களாய் சமையல் அறையில் இந்தத் தேரை அடிக்கும் கொட்டம் இருக்கே தாங்க முடியலை. எந்த நேரம் எங்கே வந்து விழுமோனு சர்வ ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு. திடீர்னு நேத்துக் காலையிலே சமையல் அறை ஜன்னலிலே உட்கார்ந்திருந்தது. ஜன்னல் என்னமோ திறக்கறதே இல்லை, தேசீயப் பறவைக்குப் பயந்து. தேசீயப் பறவை அதுக்காக வராம எல்லாம் இருக்கிறதில்லை. வந்துட்டுத் தான் இருக்கு. இந்தத் தேரை எங்கே இருந்து வந்ததுனு தெரியலை. ஜன்னலில் இருந்ததை எப்படியானும் எடுத்து வெளியே தள்ளிடலாம்னு ஜன்னல் கதவைத் திறக்கப் போனால், இண்டக்ஷன் ஸ்டவ் பக்கம் வந்து உட்கார்ந்தது.

சரினு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பித் தேரையார் என்ற சித்தர் மன்னனின் தலையில் குடைந்த தேரையை வெளியே எடுக்கச் செய்தாப்போல் செய்யலாம்னு நினைச்சேன். அப்படியாவது காரியம் சித்திக்குமா என்ற எண்ணம் தான். காரியமும் சித்திக்கலை, நானும் சித்தர் ஆக முடியலை. என்னத்தைப் பண்ணறது? அந்தத் தேரை படு ஸ்மார்ட்! க்ளீனாய் ஒரே தாவு தாவி, கீழே போய் ஒளிஞ்சு கொண்டது. அதைப் பிடிக்கணும்னா நான் முதலில் அந்த மேஜையைக் காலி செய்யணும். அதிலே இருக்கும் சாமான்களை நினைச்சால் தேரை அங்கேயே இருக்கட்டும்னு தோணும். அதை அப்படியே மறந்தாச்சு. அந்த நாளும் கழிஞ்சது. தேரையும் செளக்கியமாய் சமையல் அறையிலேயே.

மறுபடி இன்னிக்குக் காலையிலே எழுந்து சமையல் அறைக்குள்ளே நுழையும் முன்னே வரவேற்புக் கொடுத்ததே நம்ம தேரையார் தான். எங்க மன்னி அப்படியே துண்டையோ, வேஷ்டியையோ(ம்ஹும் இல்லை, இல்லை, புடவை இல்லை, நாம பிடிச்சா தேரை பயத்தில் நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் போனால், புடவை வீணாகாது?? அதான், எப்போவும் வேஷ்டிதான்) போட்டு அப்படியே பிடிப்பாங்க. அது மாதிரிப் பிடிக்கலாம்னு துண்டை எடுக்கப் போனால் திரும்பி வரதுக்குள்ளே அது ஷெல்பில். நடுவில் காய்கறி ஸ்டாண்ட். ஸ்டாண்டை நகர்த்திப் பிடிக்கலாம்னா அதுக்குள்ளே மறுபடி மறைவிடம். ம.பா. கிட்டேச் சொன்னால் அவரைக் கண்டதுமே எங்கேயோ ஓடிப் போய் ஒளிஞ்சுக்கறது. அதோட விளையாட்டெல்லாம் என்னோட மட்டுமே. நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கு அது கூட நான் ஒரு இ.வா.னு. என்னத்தைச் சொல்றது?
சரினு வீட்டு வாசலிலே வேப்பமர நிழலிலே உட்கார்ந்து துக்கத்தை ஆத்திக்கலாம்னா அங்கே ஒரு பெரிய ராக்ஷஸத் தவளை. பெரிய, பெரிய, மிகப் பெரிய சைஸ் தவளை. அந்த மாதிரித் தவளையைப் பார்த்திருக்கவே மாட்டோம். தினமும் காலம்பரக் கோலம் போடும்போது அது சரியாக் கோலத்தின் நடுவே உட்கார்ந்துக்கும். வெள்ளைக் கோலத்தின் நடுவே பச்சைத் தவளை, கவிதை, கதை, கற்பனை எல்லாம் வந்தது. ஆனால் எழுத முடியலை, பயம். அடுத்து இதைப் பிடிக்கப் பாம்பும் வருமே! இந்தத் தவளை கத்தறதோட நின்னா சரிதான். ஆனால் அது கடிக்குமோனு ஒரு சந்தேகம், மெதுவா வாசல் கதவைத் திறந்து அதை விரட்டினேன். இதுங்க எல்லாம் இருக்கிறதாலே பாம்பும் வரும்னு என் தம்பி மனைவி பயமுறுத்தினா. சரிதான், அந்தக் கதை தெரியாதா? பாம்பு ஏற்கெனவே இங்கே தான் இருக்குனு அலட்சியமாச் சொல்லிட்டேன்.

இந்தத் தேரையை சமையல் அறையில் இருந்து எப்படி விரட்டறது? இப்போது தலையாய பிரச்னை அதுதான். இந்தக் கவலையில் டாட்டா இண்டிகாமின் கண்ணாமூச்சி விளையாட்டுக் கூடப் பெரிசாத் தெரியலை.

Wednesday, April 15, 2009

ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல!

முன்னொரு காலத்தில் இது தண்டிரவனம் என்ற பெயரில் அழைக்கப் பட்டு வந்தது. இங்கே முக்தாபாய், சானதேவன் என்ற இரு வயது முதிர்ந்த தம்பதிகள் வசித்தனர். அவர்களின் ஒரே மகன் புண்டரீகன் என்ற பெயரில் வளர்ந்து வந்தான். அப்போது விருத்தாசுரனை வதம் செய்த இந்திரன், அதன் காரணமாய் சாபம் பெற்று ஒரு செங்கல்லாய் மாறி, அங்கே இருந்து வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாய் வரும் நாளில் தனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

புண்டரீகன் இயல்பாகவே அவன் தாய், தந்தையரிடம் அதிக அபிமானமும் பற்றும் கொண்டவனாய் இருந்தான். தாய், தந்தையருக்குச் சேவை செய்வதே தன் கடமை எனக் கருதி வந்தான். ஒரு நாள் அவ்வாறு தாய், தந்தையரின் சேவையின் அவன் மிகவும் மும்முரமாய் இருந்த சமயம், வாசலில் ஒரு குரல் கேட்டது. "புண்டரீகா, புண்டரீகா, உடனே வா!" என்றது அந்தக் குரல்.

புண்டரீகன், "ஐயா, சற்றே மெதுவாய்ப் பேசுங்கள். என் தாயும், தந்தையும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இப்போது சப்தம் போட்டுப் பேசினால் அவர்களின் ஓய்வு நேரத்திற்கு ஊறு நேரிடும்." என்று சொல்கின்றான். "புண்டரீகா, நான் யார் தெரியுமா?நான் சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே வந்திருக்கிறேன் அப்பா. உன்னைக் கடைத்தேற்றி உனக்கு முக்தி கொடுக்கவே வந்துள்ளேன். சற்றே வந்து நான் சொல்வதைக் கேட்பாய்." இது வந்தவரின் குரல்.

"நீர் யாராக வேண்டுமானாலும் இரும். எனக்குக் கவலையில்லை ஐயா. காத்திருக்க முடியுமானால் காத்திரும். நான் சற்றுப் பொறுத்து வந்து உம்மைக் காண்கின்றேன்." புண்டரீகன் பதில் கொடுத்தான். "ஆஹா, இந்தக் குடிசைக்கு முன்னால் ஒரே சேறாய் இருக்கிறதே. நான் எங்கே காத்திருப்பது? உட்காரக் கூட இடம் இல்லையே?" வந்தவரின் அங்கலாய்ப்பு. புண்டரீகன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்ணில் பட்டது ஒரு செங்கல். அந்தச் செங்கல்லைக் கையில் எடுத்துத் தூக்கி எறிந்தான். "இதோ, இந்தக் கல் மீது நீர் நின்று கொள்ளும். நான் இதோ வருகிறேன்."

கல்லைத் தூக்கி எறிந்தான் புண்டரீகன். பகவானின் பாதம் பட்டதோ இல்லையோ, இந்திரனுக்குச் சுய உருவம் வந்துவிட்டது. புண்டரீகனுக்கும், பகவானுக்கும் தன் நன்றிகளைச் சொன்னான் இந்திரன். சற்றுப் பொறுத்து வெளியே வந்து பார்த்த புண்டரீகன், கல்லில் நிற்கும் சாட்சாத் மஹாவிஷ்ணுவையும், அவரை வணங்கிய வண்ணம் நிற்கும் இந்திரனையும் கண்டு அதிசயித்தான். புண்டரீகன் மனம் வருந்தினான் பகவானையே தான் காக்க வைத்ததை எண்ணி, எண்ணி. பகவானோ அவனைத் தேற்றுகின்றார். "புண்டரீகா, நீ பெற்றோரிடம் கொண்டிருக்கும் பக்தியை வெளி உலகுக்குக் காட்டவேண்டியே நாம் இவ்வாறு ஒரு சோதனை செய்தோம். உனக்காக நாமே இங்கே காத்திருந்தோம். இதேபோல் எம்மைத் தேடி வரும் அடியாருக்காக நாம் இங்கேயே இருந்து காத்திருக்கவும் முடிவு செய்துள்ளோம்." என்றார். அது முதல் புண்டரீகன் தூக்கி எறிந்த அந்தச் செங்கல் மீது நின்ற வண்ணமே பண்டரிநாதன் பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான். அன்று முதல் இறைவன் அங்கேயே கோயிலிலும் குடி கொண்டான் விட்டலன் என்ற பெயரிலேயே.

அனைத்துக் கோயில்களிலும் குடி கொண்டிருக்கும் பகவானுக்காகப் பக்தர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இங்கோ பகவானே பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான், நின்ற வண்ணமே. சந்திரபாஹா நதியில் குளித்து, முடித்துப் பின்னர் தரிசனத்துக்குச் சென்றோம். எல்லா வட இந்தியக் கோயில்களிலும் இருப்பது போல் இங்கேயும் சோதனை, சோதனை, சோதனைமேல் சோதனை. முடிந்து, காமிரா, செல்போன் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டு தரிசனத்துக்கு உள்ளே விட்டனர். கூட்டம் அமைதியாகவும், நிதானமாகவும், ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் சென்று கொண்டிருந்தது. இலவச தரிசனம் தான். எல்லாருக்குமே. ஆகவே எந்தவிதமான முட்டல், மோதல் இல்லை. ஒரு மணி நேரத்தில் சந்நிதிக்குச் சென்று விட்டோம்.

அதி அற்புத தரிசனம். நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றான் விட்டோபா. அவன் சந்நிதியைக் கண்டதும், நம்மையும் அறியாமல் கண்கள் மழையை வர்ஷிக்கின்றன. நெருங்க, நெருங்க மனம் சொல்லவொண்ணா ஆனந்தத்தில் ஆழ்கின்றது. இன்று காலையில் விட்டோபாவுக்கு அலங்காரம் செய்வதைக் காட்டினார்கள். அந்த அலங்காரத்திலேயே தலையில் தலைப்பாகையுடன், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றான். உச்சியில் இருந்து, பாதம் வரைக்கும் அவனைத் தொட்டு அனுபவிக்கலாம். அவ்வாறே தொட்டுப் பார்த்துப் பாதங்களில் நம் சிரத்தை வைத்து நமஸ்கரித்துவிட்டுப் பின்னரும் திருப்தி அடையாமல் நிமிர்ந்தால் பிடித்து இழுத்துப் போகச் சொல்லி விடுகின்றனர். என்ன செய்யறது?? நம்மைப் போல் பின்னால் கூட்டம் கூட்டமாய் மக்கள் வருகின்றனரே. வேண்டுமானால் நாம் திரும்பவும் நின்று பார்த்துவிட்டு வரலாம். இந்த அளவுக்கு இங்கே நம்ம ஊரில் எல்லாம் முடியாது அல்லவா? ஆகவே அரை மனசோடு அங்கிருந்து ருக்மாயி, இங்கே தமிழ்நாட்டில் ரெகுமாயி என்றாகி விட்டது. ருக்மாயியைக் காணச் சென்றோம்.

ரெகுமாயியிடம் நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டுச் சற்று நேரம் நின்றோம். கொஞ்சம் நிதானமாய்த் தரிசிக்கலாம் ரெகுமாயியை, எனினும், கூட்டம் இங்கேயும் வந்துவிடுகின்றது. பின்னர் ஒருமுறை வரலாம் எனக் கிளம்பினோம். அதற்குள் பயண அமைப்பாளர்கள் அழைப்பு வேறே. பின் தங்குமிடம் வந்து சாப்பிட்டுவிட்டு ஒரு முறை செல்லலாம் என நினைத்துக் கொண்டு வந்தால், சாப்பிட்டதும் சற்று ஓய்வுக்குப் பின்னர் மாலை நாலுமணிக்கெல்லாம் ரயில் நிலையம் சென்றுவிடுவோம் எனச் சொல்லிவிட்டனர். இன்னொருமுறை பண்டரிபுரம் பயணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எப்போது கிடைக்குமோ???

Tuesday, April 14, 2009

ஜெய, ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல!

இந்தப் பாண்டுரங்கன் காலையிலே ஜெயா தொலைக்காட்சியில் பார்த்ததும் மனதிலேயே நிற்கின்றான். சோகாமேளரைப் பண்டரிநாதன் பிடிச்சு இழுத்தாற்போல் மனதைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான். அதி அற்புத தரிசனம். அதுவும் அவனைத் தொட்டுத் தடவி, பாதங்களில் சிரத்தை வைத்து அவன் ஆசிகளையும் அன்பையும் கருணையையும் நேரில் பெற்றுக் கொண்டதில் இருந்து இன்னொரு முறை சென்று நிதானமாய்த் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தீரவில்லை. இன்றைக்குக் காலையில் ஆறு மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் பண்டரிபுரம் கோயில் பற்றிய ஒரு தொகுப்பு வந்தது.

சென்ற வருஷம் ஏப்ரல் மாதம் தான் பாரத் தர்ஷன் ரயில் மூலம் நாங்க முதன்முதலாய்ப் பண்டரிபுரம் சென்றோம். மந்திராலயம், நாசிக், த்ரயம்பகேஸ்வர், பஞ்சவடி,ஷிர்டி, சனிஷிங்கனாபூர், பண்டர்பூர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். முழுதும் ரயில் பயணம். இதிலே ஷிர்டி செல்ல மட்டும் நாசிக்கில் இருந்து பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. முதலில் சனிஷிங்கனாபூர் சென்று விட்டு, அங்கிருந்து ஷிர்டி போனோம். ஷிர்டிக்கே நாங்கள் பயணம் செய்த ரயில் பின்னர் வந்தது. அங்கிருந்து ரயிலில் ஏறி, முதலில் ஷோலாப்பூரில் இறங்கி, அங்கிருந்து பண்டர்புர் மீண்டும் பேருந்தில் செல்லவேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தனர். பின்னர் எங்கள் ரயிலுக்குச் சிறப்புச் சலுகை கொடுத்து, நேரே பண்டர்புரம் போகவும் சிக்னல் கிடைக்கவே, நேரே பண்டர்பூர் ரயிலிலேயே சென்று இறங்கினோம். ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்றது. பயண அமைப்பாளர்கள் ஒரு பெரிய கூடம் ஒன்றிலேயே தங்க வைப்பதால் தனியாக அறை வேண்டுமென்போர் கேட்டுக் கொள்ளலாம். அவ்விதம் நாங்களும் தனி அறை ஒன்று எடுத்துத் தங்கிக் கொண்டோம்.

பின்னர் அப்போது அங்கே ஓடிக் கொண்டிருந்த பீமா நதியில் நீர் நிறையச் சென்று கொண்டிருந்ததால் அங்கேயே போய்க் குளிக்கலாம் என்று சொன்னார்கள். பீமா நதி பண்டர்பூர் அருகே பிறைச் சந்திரன் வடிவில் செல்லுகின்றது. ஆகவே அந்த நதிக்கு இங்கே சந்திரபாஹா என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. இனி பண்டர்பூர் பற்றிய ஒரு சிறு அறிமுகம். அடுத்து வரும்.

Sunday, April 5, 2009

அணிலே, அணிலே, ஓடி வா!

இந்த ராமர் வந்து முதுகில் தடவிக் கொடுத்ததாலேயே அணிலுக்கு முதுகில் மூணு கோடுகள்னு சொல்லுவாங்க. அதி புத்திசாலியாவும் இருக்குங்க இதெல்லாம். பிப்ரவரி மாதம் பரோடா கிளம்பும்போது தினமும் காக்கையும், அணில்களும், குருவிகளும் சாப்பாட்டுக்கு வந்து ஏமாந்து போகுமேனு தோணியது. ஒவ்வொரு முறை வெளி ஊர் போகும்போதெல்லாம் நினைப்பு வரும். இந்த முறையும் வந்தது. கடவுள் அதுக்குக் கொடுக்காமலா இருக்கப் போறார்? என்றாலும் என்னுடைய ஈகோ?? அதுங்க கஷ்டப் படுமேனு நினைச்சேன். பரோடா போனால் எனக்கு மேலே எங்க மாமியார் அணில்களைப்பழக்கி வச்சிருக்காங்க. பூனையும், எலியும் கூட இருந்ததாம், அதுங்களை எப்படியோ விரட்டி இருக்காங்க, சாமானெல்லாம் வீணாப் போறதுனு இல்லாமல், அதுங்களோட ஓடிப் பிடிச்சு விளையாடவும் முடியலைனு.

இந்த அணிலும் முதல்லே சமையல் அறையிலே மேடைக்குக் கீழே தான் குடித்தனம் ஆரம்பிச்சிருக்கு. சமைக்கும்போது குறுக்கும், நெடுக்குமா ஓடறதும், பிடிக்கறதுமா இருந்திருக்குங்க ரெண்டும். கால்லே மிதிபட்டுடுமோனு கவலையாவும் போயிருக்கு. ஒருநாள் என்ன நினைச்சாங்களோ தெரியலை, ஒரு கிண்ணத்திலே சாதம் வைத்து ஜன்னலுக்கு வெளியே வச்சிருக்காங்க. அதுங்களும் சாப்பிடப் போயிருக்குங்க. உடனே அதுங்களைப் பார்த்து, "சமையல் அறையிலே உன்னோட வீட்டை வச்சுக்காதே, உனக்கு மட்டுமில்லாமல் உன்னோட குழந்தைங்களுக்கும் ஏதானும் ஆயிடும். வேறே இடம் பார்த்துக்கோ"னு சொன்னாங்களாம். அதுங்க என்ன புரிஞ்சுண்டதோ தெரியலை, கொண்டு வந்த பஞ்சுப் பொதியைத் (கூட்டில் வைக்கக் கொண்டு வந்ததை)திருப்பி எடுத்துண்டு ஓடிப் போயிடுச்சுங்க.

அப்புறம் பார்த்தால், எங்களுக்கு ஒதுக்கி இருந்த அறையிலே என்னோட கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஜன்னலில் அழகாய் வீடு கட்டிக் குடித்தனம் ஆரம்பிச்சிருக்கு. தலைமாட்டிலே வெடுக், வெடுக், வெடுக் குனு ஒரே சத்தம். சில சமயம் ஒரே சண்டை. சில சமயம் ஒரே ஓட்டம், பிடி. ஜன்னல் கம்பி அதிருது, சத்தத்திலே. அணில் பிள்ளைகள் எல்லாம் சின்னச் சின்னதாய் பார்க்கவே அழகோ அழகு. எங்கே இருந்தோ கொட்டை எல்லாம் எடுத்து வந்து பல்லால் கடிச்சு, நொறுக்கிக் குட்டிக் குழந்தைங்களுக்கு ஊட்டியும் விடுது. அம்மா யாரு, அப்பா யாருனு தெரியலை. என்றாலும் பாச உணர்வு என்பது இவைகளிடையேயும் இருக்கிறதைப் பார்த்தால் ஒவ்வொரு நிமிஷமும் படைச்சவனை நினைத்து வியக்காமல் இருக்க முடியலை.