Sunday, July 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

கருங்குழி. அங்கிருந்த களத்துமேட்டுத் திடலின் அரசமரத்தடியில் சன்மார்க்க சங்கத்து அன்பர்கள், பொதுமக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரே நின்றிருந்தார் வள்ளலார். அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்பது புரிந்து அனைவரும் பணிவோடும், கவனத்துடனும் காத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார் வள்ளலார் பெருமான். “கருணைத் தெய்வமான ஆண்டவனுக்கு அந்ந்த கோடி வணக்கங்கள். சன்மார்க்க அன்பர்களே, பொதுமக்களே, சில நாட்களாக என்னுள் ஒரு விஷயம் குறித்துத் தீவிர சிந்தனை ஏற்பட்டு அதற்கெனத் திட்டமிட்ட்தன் காரணமாக இன்று இங்கே இந்த சபையிலே உங்களை எல்லாம் அழைத்தேன். என் அழைப்பை ஏற்று எல்லாரும் வந்திருக்கிறீர்கள். இது கடவுளின் அருளாணையினாலேயே நடந்த்து. இவ்வளவு காலம் பல ஊர்களுக்கும் சென்று வந்து பார்த்து அறிந்து கொண்ட ஒரு விஷயம் என்னுள் சொல்லொணா வேதனையில் ஆழ்த்துகிறது. அந்த வருத்த்த்தை நீக்குவதற்காகவே உங்கள் ஒத்துழைப்பை நாடி இன்று உங்களை இங்கே வரவழைத்தேன்.” வள்ளலார் பேச்சை நிறுத்தினார்.



அனைவரும் திட்டம் என்னவென்று சொல்லுங்கள், செயலாக்குவோம் என ஒருமித்த குரலில் கூற வள்ளலாரும் மேலே சொல்ல ஆரம்பித்தார். “ பசி எல்லா உயிருக்கும் ஏற்படுகிறது. அது பொதுவானது. மிக மிக்க் கொடியது. கொடியனவற்றுள் எல்லாம் மிக்க் கொடியது பசியே. துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணமும் பசியே. பசி இல்லை எனில் துன்பமும் இல்லை. கொடிய இப்பசித் தீயினால் வரும் அவஸ்தைகள் சொல்லி முடியாது. இந்தப் பசியானது ஏழைகள் வயிற்றில் பெரு நெருப்பாக எரியும்பொது அவர்களுக்கு உரிய நேரத்தில் ஆகாரத்தை அளித்து அவிக்கிறது தான் ஜீவகாருண்யம் ஆகும். இந்தப் பசியாகிய விஷக்காற்று ஏழைகளின் அறிவான விளக்கையே அணைத்து விடுகிறது. அதை மீண்டும் ஏற்றவேண்டுமானால் அவர்களுக்குத் தகுந்த நேரத்தில் உணவு அளித்து அறிவாகிய விளக்கு அணையாமல் ஏற்றவேண்டும். இவ்வுடம்பாகிய ஆலயம் இயற்கையான கடவுள் விளக்கத்திற்கு ஏற்ற இடம். இவ்வாலயத்தைப் பசியினால் பாழாக்க்க் கூடாது. ஆகாரம் கொடுத்து அவ்வாலயத்தை விளக்கம் செய்விக்கவேண்டும். இதுவே உண்மையான ஜீவகாருண்யம்.”



அங்கிருந்த கல்பட்டு ஐயா மனம் உருகியது. “சத்தியம், சத்தியம் சுவாமி, சத்தியம்” என்றார். ஆமாம் என ஆமோதித்த வள்ளலார், ஒரு அருமையான பாடலைப் பாடினார்.

“எட்டரும்பொருளே திருச்சிற்றம்பலத்தே

இலகிய இறைவனே உலகில்

பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்

பரதவிக்கின்றனர் என்றே

ஒட்டிய பிறரால் கேட்ட போதெல்லாம்

உளம்பகீர் என நடுக்குற்றேன்

இட்ட இவ்வுலகில் பசி எனில் எந்தாய்

என்னுளம் நடுங்குவதியல்பே!” என்று கல்லும் கசிந்து உருகும் வண்ணம் பாடினார் வள்ளலார் பெருமான். அவர் கண்களில் இருந்து ஏழைகளின் துயரத்தை நினைந்து பாடிய மாத்திரத்தில் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடியது. அதைக் கண்ட அனைவரும் சுவாமிகள் உடம்பெல்லாம் நடுங்க கண்ணீர் ஆறாய்ப் பெருக இவ்விதம் துன்பம் அடைகிறாரே! இவர்தம் துன்ப நிலையைக் காணச் சகிக்கவில்லையே. என்று அவர்களும் அழ ஆரம்பித்தனர். கல்பட்டு ஐயா பாவம் செய்துவிட்டோமே என்று புலம்பினார்.



தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்ட வள்ளலார், கூட்ட்த்தினரையும் சமாதானம் செய்தார். பின்னர் மேலே பேச ஆரம்பித்தார். “கொடிய பசியைத் தீர்க்கும் பொருட்டு ஓர் அன்ன சத்திரத்தை, அதாவது சத்திய தருமச் சாலையை நிறுவ நினைப்பதாயும் அதற்கெனக் கட்டிடம் கட்ட் ஓர் இடம் தேவைப்படுவதாயும் கூறி நிறுத்தினார். உடனே அனைவரும் தர்மசாலைக்கட்டிடம் எங்கே கட்ட விரும்புகிறார் என வள்ளலாரைக் கேட்டார்கள். வள்ளலார் அதற்கு தருமசாலை திருவதிகை, திருமுதுகுன்றம், திருப்பாதிரிப் புலியூர், திருச்சிற்றம்பலம், திருக்கூடலையாற்றூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே, தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய நதிகள் சூழப் பெற்று வடற்பெருவெளியாய் போவோர் வருவோர் அனைவருக்கும் பசிதீர்க்கப் போதியதாய் அமைய விரும்புவதாய்த் தெரிவித்தார். அத்தகைய இடம் ஒன்றை தாம் ஏற்கெனவே பார்த்துத் தேர்ந்தெடுத்திருப்பதாயும் கூறினார். அதை விலைக்கு வாங்கிவிடலாம் என அனைவரும் பேசிக்கொள்ள, சுவாமிகளோ, அதற்கு அவசியம் இல்லை என்றார். அனைவரும் வியப்பாய்ப் பார்க்க சுவாமிகள் மேலும் பேசினார்:



கருங்குழியில் இருந்து மூன்று கல் தொலைவில் இருக்கும் வடலூர் என்னும் பார்வதிபுரம் கிராமத்தின் வடக்கே வெட்டவெளியாய் ஒரு பெருவெளி இருப்பதாயும், அங்கேயே தர்மசாலை கட்ட நினைப்பதாயும் கூறினார். சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் பெரிய பாட்டைக்கும், கடலூர் மஞ்சக்குப்பத்திலிருந்து விருத்தாசலம் போகிற பாட்டைக்கும் நடுவில் அந்த இடம் அமைந்துள்ளதால் ஓரு முக்கியமான இடமாக இருக்கும் என்றும் தர்மசாலை கட்டுவதற்கேற்ற ஞானபூமியும் அதுவே என்றும் கூறினார். அந்த இடம் பார்வதிபுரம் மக்களுக்குச் சொந்தமானது எனவும், அருள் உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அவ்வூர் மக்கள், நாம் கேட்டால் தர்ம காரியத்திற்கு என அந்த இட்த்தை இனாம் சாசனம் செய்து கொடுப்பார்கள் எனத் தாம் நம்புவதாயும் கூறினார்.



மேலும் மறுநாளே தம் நேரில் சென்று அக்கிராமத்து மக்களைப்பார்த்துப் பேசி முடிவு செய்து கொண்டு வரப் போவதாயும் கூறினார். அனைவரும் இதற்கு ஒத்துக்கொண்டு, சிலர் தாங்களும் சுவாமிகளோடு உடன் செல்ல வேண்டுகோள் விடுக்க சுவாமிகள் ஒப்புதல் அளித்தார். அவ்வளவில் சபை கலைந்த்து.



1867-ம் ஆண்டு, பிரபவ ஆண்டு, வைகாசித்திங்கள், பதினோராம் நாளன்று பார்வதிபுரம் என்னும் வடலூர் விழாக்கோலம் பூண்டு காட்சி அளித்த்து. ஆம், அன்றுதான் தர்மசாலை திறப்பு விழா. சன்மார்க்க சங்கத்தினருக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணவளிக்கப் போகும் ஓர் தரும சாலை. எல்லா வீடுகளும், சாலைகளும், மாவிலைத் தோரணங்களாலும், பன்ங்குருத்துத் தோரணங்களாலும் வாழைக்கன்றுகளாலும்,தென்னை குருத்தோலைகளாலும் அலங்கரிக்கப் பட்டுக் காட்சி அளித்த்து. ஒரு மண் கட்டிடம் எளிமையாக்க் கட்டப் பட்டு அலங்கரிக்கப் பட்டிருந்த்து. ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க உள்ளே சமையலறையில் உணவு தயாராகிக்கொண்டிருந்த்து. கட்ட்ட்த்தின் எதிரே தென்ன்ங்கீற்றுப் பந்தல் போடப் பட்டு மேடை போடப் பட்டிருந்த்து. சன்மார்க்க சங்கச் சாதுக்கள், துறவிகள், தர்மசாலையின் சம்பந்திகள்,. அணுக்கத் தொண்டர்கள், ஊர் மக்கள், பணியாளர்கள், என ஆயிரக்கணக்கானோர் பந்தலில் அமர்ந்திருந்தனர்.



விழா தொடங்கியது.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சுந்தரம் பிள்ளை எழுதிக்கொண்டிருக்கும் மநோன்மணீயம் நாடக நூல் பற்றித் தம்மிடம் தெரிவித்ததாய் சுந்தர ஸ்வாமிகள் கூறிவிட்டு சன்மார்க்க அடியார்கள் காத்திருப்பதைக் கவனித்து அவர்களை அருகே அழைத்தார். அவர்கள் வந்த காரணத்தையும் விசாரித்து அறிந்தார். இராமலிங்க ஸ்வாமிகள் அனுப்பி வந்திருக்கிறதைத் தெரிந்து கொண்ட சுந்தரஸ்வாமிகள் அளவற்ற ஆனந்தம் கொண்டு, அடிகளின் அருளாற்றல் குறித்தும், பிரசங்கம் செய்யும் அருமை, அருட்பாக்கள் இயற்றும் திறமை, ஐயங்களைத் தீர்த்து வைக்கும் பொறுமை என அனைத்தையும் குறித்துத் தாம் அறிந்திருப்பதாய்க் கூறித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வந்தவர்களும் மகிழ்வுற்று அடிகளார் காண விரும்புவதைத் தெரிவிக்க, தாமே வந்து அவரைக் காண்போம் என சுந்தர ஸ்வாமிகள் தெரிவித்து அடிகளார் எழுந்தருளி இருக்கும் இடத்தையும் கேட்டு அறிந்து கொண்டார்.

பின்னர் அடிகளாரைத் தரிசிக்க வடக்குச் சந்நிதி வீதிச் சத்திரத்துக்குக் கிளம்பினார் கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள். மாலை ஆகி விட்டிருந்தது. அடிகளார் தம் அன்பர்கள் மற்றும் வேலூரிலிருந்து காண வந்திருந்த நாகப்பிள்ளை ஆகியோரோடு அளவளாவிக்கொண்டிருந்தார். அப்போது சுந்தர ஸ்வாமிகள் அங்கே நுழைய அவரைக் கண்டதும் இன்னார் என அறிந்து கொண்ட வள்ளலார், தாமும் எழுந்து நின்று அவரை வணக்கம் தெரிவித்து வரவேற்றார். பரஸ்பர அறிமுக வணக்கங்கள் முடிந்ததும், ஸ்வாமிகளை அமர வைத்தார் வள்ளலார். ஆனால் சுந்தர ஸ்வாமிகளோ வள்ளலாருக்குச் சமமாகத் தாம் அமருவதா என நினைத்துக்கொண்டு சற்று ஓரமாய்ப் போய் ஒதுங்கி அமர, அடிகளாருக்கு ஆச்சரியம் மேலிட்டது. இது என்ன வழக்கம் என சுந்தர ஸ்வாமிகளை வள்ளலார் வினவ, பெரியோருக்கு எதிரே சமமாக அமர்வது பண்பாடில்லை என்பதால் ஒதுங்கி அமர்ந்ததாய் சுந்தர ஸ்வாமிகள் கூற வள்ளலாருக்கு வியப்பும் அதை விட அதிகமாய் வருத்தமும் மேலோங்கியது.

"ஆஹா, எப்பேர்ப்பட்ட மஹான் தாங்கள்? தங்களை விடவா நான்?? இந்த சிதம்பரத்தில் தாங்கள் எழுந்தருளி இருப்பதைத் தெரிந்துகொண்டு தங்களைத் தரிசிக்க எண்ணினேன். நானோ வெள்ளாடைத் துறவி. ஆனால் துவராடைத் துறவியான தங்களை நானல்லவோ வந்து தரிசித்தல் முறை. அதனாலேயே என் அன்பர்களை அனுப்பித் தங்கள் வசதியைத் தெரிந்து வரச் சொன்னேன். ஆனால் தாங்களோ வழக்கத்தை மீறி என்னைத் தரிசிக்க என் இருப்பிடம் வந்துவிட்டீர்களே! அதோடு இப்படி ஓரமாயும் அமர்ந்துவிட்டீர்களே
!" என்று வருந்தினார் வள்ளலார்.

சுந்தர ஸ்வாமிகளோ தம் மனம் தமக்கு இட்ட கட்டளையையே தாம் பின்பற்றியதாய்க் கூறவே வள்ளலாரும் அவர் கூறியதன் உட்பொருளை உணர்ந்து கொண்டார். வள்ளலார் அதன் மேல் சுந்தர ஸ்வாமிகள் திருவையாறோடு சேர்ந்த ஸப்தஸ்தானத் தலங்களுக்கும், திருமழபாடியிலும் பல முயற்சிகளின் பேரில் திருப்பணிகள் செய்வித்து ஒரே நாளில் கும்பாபிஷேஹமும் செய்வித்ததைத் தாம் கேள்விப் பட்டதாயும் அருமையான இத்தகைய சிவ கைங்கரியத்தைச் செய்ததுக்கு சுந்தர ஸ்வாமிகளைப் பாராட்டியும் மகிழ்ந்தார். அப்போது நாகப்பிள்ளை என்பவர் அடிகளார் பாடியிருந்து மகாதேவமாலை பற்றிக் குறிப்பிட, சுந்தர ஸ்வாமிகள் மனம் மகிழ்ந்து அந்த மகாதேவ மாலையிலிருந்து ஒரு பாடலை அடிகளார் தம் குரலில் பாடிக்கேட்க வேண்டுமென்ற ஆசையையும் தெரிவித்தார். அனைத்து அன்பர்களுக்கும் அதே ஆசை உள்ளூர இருக்கவே அனைவரும் ஆவலோடு வள்ளலாரைப் பார்த்தார்கள். தத்துவராயர் இயற்றிய பாடுதுறையில் பயிற்சி பெற்ற சுந்தரஸ்வாமிகளின் விருப்பத்திற்கு மறுப்புச் சொல்ல முடியாது என்ற வள்ளலார் மஹாதேவமாலையைப் பாடப் பாடத் தம் வாய் மணக்கும், மனம் இனிக்கும் கேட்கும் அனைவரின் உள்ளமும் குளிரும் என்ற வண்ணம் கூறிவிட்டு மகாதேவமாலையைப் பாட ஆரம்பித்தார்.

"பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடையெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவதேவே." என்று பாடி முடித்தார்.

பக்தியும், ஞானமும் நிறைந்திருந்த அந்த அருட்பாடல்களால் தம் மெய்ம்மறந்த சுந்தரஸ்வாமிகள், அடிகளாரைப் பிள்ளைப் பெருமான் என அழைத்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டார். அதைக கண்ட வள்ளலார் தாம் எவ்வளவு படித்திருக்கிறோமோ அவ்வளவு அநுபவத்தில் வந்த விசேஷம் என சுந்தரஸ்வாமிகளும் அடிகளார் கூறியதைப் பூரணமாய்ப் புரிந்து கொண்டார். இறை அருளாலேயே இன்று அடிகளாரின் தரிசனம் கிடைத்தது எனக் கூறிவிட்டு மேலும் சற்று நேரம் வேதாந்த விசாரங்கள் செய்துவிட்டுப் பின்னர் நடராஜ தரிசனம் காணவேண்டிப் பிரியாவிடை பெற்றுச் சென்றார்.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

ரத்தின முதலியாரைத் தம் நிபந்தனையைத் தளர்த்திக்கொள்ளுமாறு அனைவரும் கேட்க அவரும் அவ்விதமே செய்வதாய் உறுதி அளித்தார். அவ்வளவில் அந்தச் சபை கலைந்தது. ஆனால் அனைவருக்கும் சுவாமிகளைப் பார்க்கும் ஆவல் மேலிட அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைக் காணவேண்டும் என முடிவெடுத்தார்கள். சென்னையிலிருந்து கிளம்பி வடலூர் வந்து சேர்ந்தார்கள். அங்கே சுவாமிகள் தியானம் முடித்து ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையில் இவர்கள் போய்ச் சேரவும் சாட்சாத் அந்த மும்மூர்த்திகளே நேரில் வந்தவண்ணம் இருப்பதாய்க் கூறி வள்ளலார் ஆனந்தம் அடைந்தார். அனைவரையும் வரவேற்று அமர வைத்து, அனைவரின் நலமும், சென்னையின் மற்ற நண்பர்கள் நலமும் விசாரித்துத் தெரிந்து கொண்டார். பின்னர் சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டதும் வந்த காரியம் என்னவென்று வினவ, நேரில் பேசவேண்டியவை இருப்பதாய் வேலாயுத முதலியார் பணிவோடு கூறினார். சுவாமிகளுக்கு உடனே புரிந்து விட்ட்து. தன் பாடல்களைப் புத்தகமாய்ப் போடுவது பற்றித்தானே என வினவினார். சுவாமிகள் அவற்றை அச்சிட்டுக்கொள்வதற்குத் தாம் அநுமதி கொடுத்துவிட்ட்தாயும், இரத்தின முதலியார் ஒருவேளை உணவு உட்கொள்ளும் நிபந்தனையைப் போட்டு தம்மைச் சம்மதிக்க வைத்துவிட்டதையும் கூறிவிட்டு இதை விட இன்னும் வேறு ஏதேனும் உண்டோ என வினவினார்.

சுவாமிகள் பாடிய எல்லாப் பாடல்களையும் தாம் தொகுத்திருப்பதாய்க் கூறிய வேலாயுதமுதலியார், சுவாமிகளுக்கு இதில் இஷ்டமில்லை என்பது தெரிந்தும் உலக மக்களுக்கு சுவாமிகளின் கருத்துகள் பயனாகவேண்டும் என்பது கருதியே சுவாமிகளுக்குப் பிடிக்காத இவ்விவகாரத்தில் இறங்கியதாய்க் கூறி மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர். இதோடு 1851-லே வந்த கந்தகோட்டத்து முருகன் தெய்வமணிமாலைப் பாடலையும் சேர்த்துக்கொள்வதாயும் அநுமதி வாங்கிக்கொண்டனர். அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்த வள்ளலார், தன்னை சுவாமிகள் என அழைக்கவேண்டாம் என்று கடுமையாகக் கூறினார். அதனால் சற்றே பயந்த நண்பர்களிடம் வந்த வேலையை முழுதும் கூறவே இல்லை என்றும் அதைக் கூறும்படியும் வள்ளலார் கூற அவர்களும் கூற ஆரம்பித்தனர்.

வேலாயுத முதலியார் தாம் திருமுறைப்படுத்தி வைத்திருந்த சுவாமிகளின் பாடல் தொகுப்பை அவரிடம் கொடுத்துச் சரிபார்த்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டுப் பெரும்புலவர் ஆன வேலாயுதமுதலியார் அருமையாகத் திருமுறைப்படுத்தி இருப்பதாய்ப் பாராட்டினார். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் செய்யவேண்டி இருப்பதாயும் கூறினார். சமரச சன்மார்க்கப் பாடல்களை ஆறாம் திருமுறையாகத் தொகுத்திருப்பதைத் தற்சமயம் புத்தக வடிவில் கொண்டுவரவேண்டாம் என்றும் அப்பாடல்களில் உள்ள கருத்துகள் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டியவை ஆகும் எனவும் கூறிவிட்டு, பொதுமக்களிடையே தற்சமயம் உலவவிடவேண்டாம் எனவும் அதற்கான காலம் கனியவில்லை என்றும் கூறினார். பின்னர் அனைவரும் கூடிப் பேசிக்கொண்டு, சுவாமிகள் வெளிப்படுத்தும் காலம் வரும் வரை ஆறாம் திருமுறைப்பாடல்கள் வேலாயுத முதலியாரிடமே பத்திரமாய் இருக்கவேண்டும் என்றும் முதலில் நான்கு திருமுறைகளை வெளியிடலாம் எனவும் முடிவு செய்ய அதற்கு சுவாமிகளும் சம்மதித்தார்.

சிதம்பரத்தில் அப்போது கோடகநல்லூரில் இருந்து சுந்தரசுவாமிகள் என்பவர் தமது சீடர்களோடு வந்து கீழவீதியில் ஒரு சத்திரத்தில் தங்கி இருந்தார். ஒரு நாள் தம் சீடர்களோடு பேசிக்கொண்டிருந்த சுந்தர சுவாமிகளைப் பார்த்த சன்மார்க்கிகள் இருவர் சுந்தரசுவாமிகளை யார் எனத் தெரிந்து கொண்டு, இவரைத் தான் வள்ளலார் பார்த்துவரச் சொன்னதாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அங்கே நடப்பனவற்றைக் கவனித்தார்கள். சுந்தர சுவாமிகள் இயற்றிய சிவாநுபூதி ரஸாயனம், சிவாநுபூதி ரஸமஞ்சரி, நிஜாந்ந்த விலாசம் போன்ற நூல்களின் சிறப்பைப் பற்றி சைவ மடங்களிலெல்லாம் பாராட்டிப் பேசுவதாய் சுவாமிகளைக் காண வந்த அன்பர்கள் கூறிக்கொண்டிருந்தனர். நடராஜப் பெருமானின் அருளை எண்ணி அவருக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பிப்பதாய் சுந்தரசுவாமிகள் கூறிக்கொண்டிருந்தார். சூத சம்ஹிதை பற்றி விரிவாய் சுவாமிகள் செய்யும் பிரசங்கத்தால் மக்கள் மனதில் சிவ பக்தியும் சிவாநுபவமும் ஏற்பட்டு வருவதாயும் அனைவரும் பாராட்டிக்கொண்டிருந்தனர். அம்பலவாணன் ஆன நடராஜப் பெருமானின் திருவருளாலேயே இவ்விதம் நடப்பதாய் சுந்தரசுவாமிகளும் கூறினார். அப்போது சுவாமிகளின் பிரதம சீடர் ஆன சுந்தரம் பிள்ளை எழுதிக்கொண்டிருக்கும், “மநோன்மணீயம்” பற்றிய பேச்சும் வந்தது.

அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை!

அடிகளார் மிகுதியாய் இருந்த நீரை ஊற்றி மீண்டும் விளக்கை எரிக்க விளக்குச் சுடர் விட்டுப் பிரகாசித்தது. இறைவனின் பேரருளை எண்ணிப் பரவசம் அடைந்த அடிகள் அதைக் குறித்து ஒரு பாடலை எழுதினார்:


“மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்

கில்லையென்றார் மேலோர் நானும்

பொய் விளக்கே விளக்கெனவுட் பொங்கிவழி

கின்றேனோர் புதுமை யன்றே

செய்விளக்கும் புகழுடைய சென்னநகர்

நண்பர்களே செப்பக் கேளீர்

நெய்விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கு

மெரிந்து சந்நிதி முன்னே”


என்று பாடலை முடித்துவிட்டுத் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று பக்தி உணர்வில் கூறிக்கொண்டே தியானத்தில் ஆழ்ந்தார். தன் பொருட்டு ஈசன் செய்த இந்தப் பெருஞ்செயல் அவர் மனதை உருக்கியது. மேலும் அந்த தீப ஒளியில் இதுவரையிலும் தமக்காக ஈசன் செய்த அருட் செயல்கள் அனைத்தும் காட்சிகளாய்த் தெரிய உடலும் உள்ளமும் நெகிழ்ந்து குழைந்து மெழுகெனக் கரைந்தார். மேலும் ஒரு பாடல் புனைந்தார்.



“என் வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே

என்முன் அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்

தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பை அவிழ்த் தெனக்குத்

தகுசுடர்ப்பூ அளிக்கவும் நான் தான் வாங்கிக் களித்து

மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்

வேண்டுமென முன்னாது விரும்பியளித்தனம் நாம்

உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்

ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே!’


என்று பாடி தீபத்தை நமஸ்கரித்துவிட்டு உலாவுவதற்காக ஓடைக்கரைக்குச் சென்றார்.


சென்னை நகரில் அவர் நண்பர்கள் அனைவரும் ஒருங்கே கூடி அடிகளாரின் பாடல்களைத் தொகுப்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் இரத்தின முதலியார் வீட்டிலே. இங்கே இரத்தின முதலியார் வீட்டில் ஒரே கலகலப்பு. புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் ஆகியோர் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தபால் ஒன்று வந்தது. கடிதம் அடிகளிடமிருந்து என்று கண்டதும் அனைவரும் மகிழ்ந்தனர். கடித்த்தைப் படிக்கச் சொன்னார்கள் மற்றவர்கள் அனைவரும். அவ்வாறே இரத்தின முதலியார் கடிதத்தைப் படித்தார். அனைவருக்கும் தம் ஆசிகளைத் தெரிவித்திருந்த அடிகள் தாம் இதுவரையில் எழுதிய பாடல்களைச் சிதற விட்டிருப்பதாயும் அவைகளைச் சேர்ப்பிக்க இரண்டு மாதம் பிடிக்குமென்றும் பங்குனி மாதத்துக்குள் சேர்ப்பித்துவிட்டுச் சென்னை வருவதாயும் எழுதி இருந்தார். மேலும் இரத்தின முதலியார் தம் பாடல்களைப் பற்றியும் அவை சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் தம்மிடம் தெரிவித்திருந்தவைகளையும் குறிப்பிட்டுவிட்டு இரத்தின முதலியார் உணவு கூட உட்கொள்ளாமல் தம் பாடல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று எழுதி இருந்ததைப் படித்த தமக்கும் உணவு உடலில் பொருந்தாமல் இருப்பதாயும் குறிப்பிட்டிருந்தார்.



மேற்கண்ட விஷயங்களைக் கடிதம் மூலம் படித்த இரத்தின முதலியார் ஆஹா, ஸ்வாமிகளுக்கு மனவேதனையைக் கொடுத்துவிட்டேனே என்று கலங்கிப் போனார். அனைவருக்கும் அந்தக் கலக்கம் அதிகம் ஆனது. மேலே கடிதத்தைப் படித்த இரத்தின முதலியார் எதுவும் பேசாமல் கண்கள் கலங்கி தேம்ப ஆரம்பிக்க, வேலாயுத முதலியார் கடித்த்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அதிலே ஸ்வாமிகள், இரத்தின முதலியாரை போஜனம் ஒருவேளை மட்டுமே உட்கொள்ளும் நிபந்தனை வைத்திருந்ததை நீக்கித் தமக்கு அமைதியைத் தருமாறும், அதுவரையிலும் தாமும் ஒருவேளையே போஜனம் உட்கொள்ளுவதாயும் மும்முறை சத்தியம் செய்து எழுதி இருந்தார். இதைப் படித்த வேலாயுதம் முதலியாரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். கடிதத்தை மேற்கொண்டு அவராலும் படிக்க இயலவில்லை. இரண்டு மாதத்துக்குள்ளாகப் பாடல்களைச் சேர்ப்பித்து அனுப்பி வைப்பதாகவும் ஆகவே இரத்தின முதலியார் நிபந்தனையைத் தளர்த்திக்கொண்டு உணவு உட்கொள்ள ஆரம்பிக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அடிகள் கடிதத்தை முடித்திருந்தார். இரத்தின முதலியாரின் வேதனை அதிகமாயிற்று. கதறி அழ ஆரம்பிக்க, அனைவரும் அவர் செய்த இச்செயலால் நன்மையே விளைந்தது என்றும், இல்லை எனில் அடிகளார் தம் பாடல்களைப் பதிப்பிக்க ஒத்துக்கொண்டிருக்க மாட்டார் எனவும், வருங்கால சந்ததியினருக்கு அடிகளாரைப் பற்றியும், அவர் தம் பாடல்கள் குறித்தும் தெரியாமல் போயிருக்கும் என்றும் பலவாறு அவரைத் தேற்றி, இரத்தின முதலியார் உணவு உட்கொள்ள ஏற்படுத்தி இருந்த நிபந்தனையை விலக்கிக் கொள்வதாய்க் கடிதம் எழுதுமாறும் ஆலோசனை கூற இரத்தின முதலியாரும் அதை ஒத்துக்கொண்டு அவ்விதமே கடிதம் எழுதினார்.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சுவாமிகள் பேச ஆரம்பித்தார்:”விக்ரஹம் என்பதற்கு விசேஷமான இடம் என்றே பொருள். ஆன்மா இருப்பதற்கான கிரகம் மானிடம் முதலிய தேகங்கள் என்பதைப் போலவே பிரம்மப் பிரகாசம் வெளிப்படுவதற்குரிய தேவ தேகம் விக்ரஹம் ஆகும். ஆகவே இந்த விக்ரஹங்களில் முறைப்படியும், விதிப்படியும் உபாசனைகள் செய்யவேண்டும். இவ்வாறு செய்து வர வர பிரம்மப்பிரகாசம் வெளிப்பட்டு அனுகிரஹம் கிடைக்கும். மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறு அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஆலய வழிபாடுகள் தாராளமாய்ச் செய்யலாம். நாளடைவில் பிரம்மஞானம் தானே சித்திக்கும்.” என்று கூறி நிறுத்தினார் அடிகள்.


நண்பர்கள் மேலும் கூறும்படிக் கேட்க, அடிகளும் மேலும் கூறலானார். “இவ்விதம் வழிபாடுகள் செய்பவர்களுக்குச் சில அபூர்வமான சித்திகள் கிடைக்கும். சிலருக்குக் குன்மம் போன்ற வியாதிகளைத் தீர்த்து வைக்கும் சக்தியும் இன்னும் சிலர் மேலும் ஒருபடி போய் இறந்தவர்களைப் பிழைக்கவும் வைப்பார்கள். செயற்கரிய பல செயல்களைச் செய்வார்கள் சிலர். இப்போதும் சிலர் அவ்வாறு இருந்து வருகிறார்கள். ஆனால் பிரம்ம சமாஜிகளோ வேத சமாஜிகளோ அவ்விதம் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கான அடையாளம் இதுவல்ல.” என்றார்.



“ஸ்ரீதர அடிகள் கூறியவாறு பிரம்மத்தைத் தியானிப்பதற்கும் முதலில் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானித்துப் பழகிய பின்னரே பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலும். மனத்தால் உருவமற்ற ஒன்றைப் பற்றுதல் முதலில் கடினமாகவே இருக்கும். உருவமாய் இருந்து அதைத் தியானித்து வர, வர உருவம் மெல்லக் கரைந்து அருவமாகும். இரண்டான துவைதம் எவ்வாறு ஒன்றான அத்வைதமாகிறதோ அதே தான் இங்கேயும். இப்போது புரிகிறதா?” என்று கேட்டார் சுவாமிகள். அனைவரும் மகிழ்ச்சியுடன்,”புரிகிறது சுவாமி!” என்றனர். விக்கிரக ஆராதனை என்பது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்று அடிகள் தீர்மானமாய்ச் சொன்னார். அதன் மேல் அடிகள் அங்கிருந்து சென்று தாம் ஏகாந்தத்தில் இருக்கப்போவதாய்ச் சொல்ல சபையோர்கள் அனைவரும் சமணர்களை வாதில் வென்ற திருஞானசம்பந்தர் இவரோ என எண்ணி எண்ணி மயங்கினார்கள்.



அடிகள் கூடலூரில் இருந்து கருங்குழிக்கு மீண்டும் வந்துவிட்டார். சில நாட்கள் சென்றன. தினமும் தனியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதும், அருட்பாடல்களை இயற்றுவதும், உலாவுதலும், அன்பர்களோடு இறை அருளைப் பற்றி உரையாடுவதுமாயும், அவ்வப்போது அருகிலுள்ள சிதம்பரம் போன்ற தலங்களுக்குச் சென்று வருவதுமாய் அடிகளாரின் பொழுது இனிமையிலும் இனிமையாகக் கடந்து கொண்டிருந்த்து. ஒரு நாள் அவரைக் கவனித்துக்கொள்ளும் ரெட்டியாரின் மனைவி முத்தியாலு அவசர வேலையாக வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மறுநாள் காலை அடிகளுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்பதால் அதிகாலையிலேயே ஊருக்குத் திரும்பியும் விட்டார். வந்தவர் அடிகளாரின் அறையைப் பெருக்கிக் கூட்டி முடித்துச் சுத்தம் செய்யவேண்டி அறைக்குள் நுழைந்தவள் திகைத்துப் போனாள்.



அறையில் இரவு முழுதும் அகல்விளக்கு எரிந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் மண்கலயத்தில் எண்ணெயோ குறைவாய்த் தான் முத்தியாலு வைத்துவிட்டுப் போயிருந்தார். அந்தக் குறைவான எண்ணெய் எடுக்கப் படவே இல்லை. வேறொரு புத்தம்புது மண்கலயம் பழக்கப் படுத்துவதற்காக நீர் நிரப்பி வைத்திருந்தது. ஆனால் அதிலே தண்ணீரே இல்லை. சுத்தமாய்க் காலியாகி இருந்த்து. அகல் விளக்கிலும் எண்ணெய் விட்டு எரித்த அடையாளமே இல்லாமல் தண்ணீராக அல்லவோ இருக்கிறது? நீரில் விளக்கு இரவு முழுதும் எரிந்ததா? அது எப்படி முடியும்?? இது என்ன அதிசயம்? எனில் சுவாமிகள் இரவு தியானம் செய்யாமல் அருட்பாக்களும் எழுதாமல் இருந்துவிட்டாரா? தண்ணீரில் விளக்கு எரிந்திருக்கவே முடியாது. அடாஅடா, இரவு முழுதும் சுவாமிகள் இருட்டில் அன்றோ இருந்திருப்பார்.



யோசித்து யோசித்து மண்டை குழம்பியது முத்தியாலு அம்மாவுக்கு. அதற்குள்ளாக வெளியே சென்றிருந்த அடிகளும் திரும்பிவிட்டார். அவசரம் அவசரமாகச் சுவாமிகளின் முன்னே சென்று, “வாருங்கள் சுவாமி!” என்று வரவேற்றாள். சுவாமிகளும் அவரைப் பார்த்து,”என்ன ரெட்டியாரம்மா, ஊருக்குப் போய்விட்டு உடனே திரும்பிவிட்டாற்போல் இருக்கிறதே?” என்று விசாரித்தார். மேலும் ஊரில் சுற்றத்தாரின் நலம் குறித்தும் விசாரித்தார். முத்தியாலுவுக்கோ தன் சந்தேகம் தீர்த்துக்கொள்ளவேண்டிய அவசரம். ஆகவே, சுவாமிகளிடம், “எல்லாரும் நலமே சுவாமி. ஆனால் ஒரு சந்தேகம்…” என்று இழுத்தார். அடிகளும் என்ன சந்தேகம் என்று கேட்க, “சுவாமி! இரவு முழுதும் விளக்கு எரிந்த்தா? இருட்டில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்டாள். சுவாமிகளும் அவரை அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு, “ஏன் கேட்கிறீர்கள்? விடிய விடிய விளக்கும் எரிந்த்து. நானும் தியானம் செய்தேன். வழக்கம்போல் பாடல்களும் எழுதினேன். ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள் ? புரியவில்லையே?” என்று வினாவினார்.



சுவாமிகள் அருகிலிருந்து புதிய மண்கலயத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டே ,”இதோ இந்தக் கலயத்தில் இருந்த எண்ணெயை ஊற்றித் தான் விளக்கை எரித்துக்கொண்டேன்.” என்றார். முத்தியாலு அம்மாவிற்கு விஷயம் புரிந்து விட்ட்து. வியப்புக்கு ஆளாகி மேனி சிலிர்க்க, மனம் உருக, “ இது எண்ணெய்க் கலயம் அல்ல சுவாமி. தண்ணீர்க் கலயம். புது கலயம் என்பதால் பழக்குவதற்காக நீர் ஊற்றி வைத்திருந்தேன். வாய் உடைந்த பழைய கலயத்தில் நான் வைத்துவிட்டுப் போன எண்ணெய் அப்படியே இருக்கிறது சுவாமி. இரண்டு கலயங்களும் அருகருகே இருந்தமையால் தாங்கள் தண்ணீர்க் கலயத்தில் இருந்து நீரை எடுத்து எண்ணெய் என நினைத்து வார்த்திருக்கிறீர்கள். விளக்கும் இரவு முழுதும் எரிந்திருக்கிறது. சுவாமி, சுவாமி, தங்கள் அருளால் அன்றோ இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது? தண்ணீர் விளக்கும் எரியும் அற்புதம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. சுவாமி தாங்கள் இங்கே தங்கவும் இத்தகைய அற்புதங்கள் எங்கள் இல்லத்தில் நடக்கவும் எத்தனை ஜென்மங்களில் நாங்கள் புண்ணியம் செய்தோமோ! இறைவன் திருவருள்தான் இவை எல்லாம்!” என்று கண்ணீர் மல்கக் கூறிக்கொண்டே அடிகளின் பாதங்களில் பணிந்து வணங்கினார்.



அதைக் கேட்டுக்கொண்டே வந்த ரெட்டியாரோ, “நமிநந்தி அடிகளுக்கு இறைவன் ஆணை கிடைத்து நீர் ஊற்றி விளக்கை எரித்தார். ஆனால் இங்கே அடிகளுக்கோ அவ்விதம் ஆணை எதுவும் இல்லை. எண்ணியும் செய்யவில்லை. தற்செயலாகத் தானாகவே நடந்திருக்கிறது. திருவருட்செயல் தான் இது. சுவாமிகளும் ஒரு ஏமச்சித்தர் தான்.” என்று வியந்து பாராட்டி வணங்கி மகிழ்ந்தார். அடிகளும் ரெட்டியாரிடம் இது இறைவன் திருவருள் தானே தவிர தன்னால் எதுவும் இல்லை எனவும், தன் சென்னை நண்பர்களுக்கு இது குறித்துத் தெரிவிக்க விரும்புவதாயும், தம்மைத் தனிமையில் விட்டுச் செல்லவேண்டும் எனவும் இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு பாடலை எழுதப் போவதாகவும் கூற அவ்வளவில் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

பிரம்ம சமாஜிகளுக்குத் தங்கள் குருவான ஸ்ரீதர நாயக்கர் விக்ரஹ ஆராதனை கூடாது என்பதை நிரூபித்து பிரம்ம சமாஜக் கொள்கையை நிலைநாட்டவேண்டும் என்ற ஆவல் மூண்டெழுந்தது. ஆகவே அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் ஸ்ரீதரநாயக்கர் எல்லோரையும் பார்த்து, “அந்த முக்காட்டுச் சாமியாரைச் சரியான மறுப்போடு என்னுடன் விவாதிக்கச் சொல்லுங்கள். “ என்று அடிகளிடம் கொண்ட கோபத்தோடும், வெறுப்போடும் கூறினார். அடிகளோ தன் சாந்தமான நிலையில் இருந்து முற்றும் மாறாமல், பிரம்ம சமாஜத்தின் கோட்பாடை விளக்கச் சொல்லி வேண்டினார். உடனே தன் வாதத்தைத் தொடங்கிய ஸ்ரீதர நாயக்கர், நித்திய, நிரஞ்ச, நிர்மல, நிராமய, நிராலம்ப சொரூபமானதும், அவாங் மநோகோசரமும் ஆன பிரம்மத்தை நினைத்தாலே போதுமானது. விக்ரஹ ஆராதனை என்பது சிறிதும் உதவாத ஒன்று. இதுவே பிரம்ம சமாஜத்தின் கோட்பாடு.” என்று கூறினார்.



அடிகள் உடனே,” மநோகோசரமான மனதிற்கு பிரம்மம் எட்டுமா?? அப்படி எட்டாத பிரம்மத்தை எவ்வாறு நினைப்பீர்கள்? இது ஆகாயத்தை அடியாலும், படியாலும் அளக்கலாம், காற்றையும் கையால் பிடிக்கலாம் என்பது போல் அன்றோ உள்ளது. கொஞ்சமும் பொருந்தாத ஒன்று.” என்றார். ஸ்ரீதர நாயக்கரோ, “நம் ஞானம் ஓர் எல்லையிலே நிற்கிறது என்பதால் பிரம்மம் மனதுக்கு எட்டாது என்று கூற முடியுமா? இது சரியில்லை.” என்றார்.



“அடிகளே, மெய்வாதம் புரியவேண்டும். தாங்கள் பொய்வாதம் புரிகிறீர்கள்.” என்றார் ராமலிங்க அடிகள் நாயக்கரிடம். மேலும், “பிரம்மம் மனதுக்கு மட்டுமல்ல, புத்தி, சித்தம், அஹங்காரம் போன்ற அந்தக்கரணங்களுக்கும், கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒருக்காலும் விஷயமாக ஆகாது. பிரம்மத்தின் நாமரூபமே விஷயமாகும். அதோடு மனம் லயமடைய வேண்டாமா? மனம் லயமடைந்தாலே பிரம்மாநுபவம் ஏற்படும். அதை உணரவும் முடியும். அங்கே மனதின் முனைப்பு ஒரு கடுகளவு தென்பட்டாலும் ஆத்மஞானம் புரியாது, பிடிபடாது. சுருதி, யுக்தி, அநுபவம் ஆகிய மூன்றும் இதை நிரூபித்துக் காட்டும்.” என்றார். அங்கிருந்த வள்ளலாரின் அடியார்கள் மகிழ்வு பொங்க ஆரவாரம் செய்தார்கள். ஸ்ரீதர நாயக்கரைப் பார்த்து அடிகளார் அற்புத விளக்கம் கொடுத்திருப்பதாயும் இதை எதிர்த்தோ அல்லது மறுத்தோ உங்களால் கூற முடியுமா எனவும் வினவினார்கள். ஸ்ரீதர நாயக்கருக்கு உள்ளூரக் கொஞ்சம் பயம் தான். ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “பிரம்மத்தை மனதால் தியானிக்கலாம் என்பதை நான் அறிவேன். வேறொன்றும் அறிய மாட்டேன். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.” என்று கூறி விவாதத்தை முடிக்க நினைத்தார்.



ஆனால் அடிகளோ, “பொதுவாய்ச் சொன்னால் எப்படி? பிரம்மம் மாயாதீதமானது. மாயா காரியம் ஆன மனதிற்கு அது புலப்படாது. ஆகவே இதைத் தாங்கள் தெளிவுபட விளக்கவேண்டும்.” என்றார்.



ஸ்ரீதரநாயக்கருக்கு வேறு வழி தென்படவில்லை. ஆகவே அவர் அடிகளிடம், “நான் விளக்குவதை விடுங்கள். இப்போது நீங்களே விளக்குங்கள். அந்தக்கரணங்களாலும், பஞ்ச இந்திரியங்களாலும் அறிய முடியாதென்று நீங்கள் சொல்லும் பிரம்மத்தை அறிவது பின் எவ்வாறு? அதைச் சொல்லுங்கள் முதலிலே!” என்று எகத்தாளமாய்க் கூறினார். இதற்கு அடிகளால் பதில் கூற இயலாது என்றே நாயக்கர் நினைத்தார். ஆனால் அடிகளோ, “ ஆன்மஞானத்தால் பிரம்மத்தை உணரலாம். அதைத் தாங்கள் அறியவேண்டும்.” என்று கூறினார். நாயக்கரால் பதில் பேச முடியவில்லை. அப்போது அடிகளாரின் நண்பர்கள் மேலும் ஸ்ரீதர நாயக்கரைப் பார்த்து, “இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா? அல்லது இன்னும் மறுக்கிறீர்களா?” என்று கேட்க ஸ்ரீதர நாயக்கர் எழுந்து கிளம்ப ஆரம்பித்தார். கிளம்பும்போது, இந்த விஷயத்திற்குப் பதிலைத் தாம் கடிதம் மூலம் அடிகளுக்கு அனுப்புவதாயும் கூறினார். அனைவரும் கேலியாகச் சிரித்தனர். அடிகள் அதைத் தவறு என்று கண்டித்தார். ஸ்ரீதர நாயக்கருக்கோ அவமானத்தால் உடம்பும், உள்ளமும் கூசிற்று. சினமும் ஏற்பட்டது. உடனேயே அனைவரையும் பார்த்து, “எண்ணி எட்டே நாள்! உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தி நான் சிரிக்கிறேன்.” என்று சவால் விட்டார். அவர் நிலை பரிதாபமாய்த் தோன்றிற்று அனைவருக்கும். அதே சமயம் கண்டிக்கவும் நினைத்தனர். ஆனால் அடிகளோ அவர் மேல் இரக்கம் கொண்டு, “ஸ்ரீதர நாயக்க அடிகளே, இது என்ன கர்வம் கொண்டு பேசுகிறீர்?? இவ்வாறு பேசாதீர்கள். இது உமக்குத் தகாது.” என்று கூற ஸ்ரீதர நாயக்கரும் அவரின் சீடர்களும் அவசரம் அவசரமாக அந்தச் சபையை விட்டு வெளியேறினார்கள்.



மற்றுமுள்ள தம் நண்பர்கள் அனைவரையும் பார்த்து ராமலிங்க அடிகளார், இது விஷயமாய் உங்களில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர் விக்கிரஹ ஆராதனைக்கு விளக்கம் கேட்ட நண்பரைப் பார்த்து, விக்கிரஹ ஆராதனை எல்லாரும் நினைப்பது போல் மூடப் பழக்கம் அல்ல.” என்று கூறிவிட்டு நிறுத்தினார். அனைவரும் தொடருங்கள் சுவாமி என்று அவர் மேலே சொல்லக் காத்திருந்தனர். அடிகள் பேச ஆரம்பித்தார். “மனம் வாக்குக்கு எட்டாத பிரம்மத்தை ஆராதனை செய்வதற்கு முதல் படியே விக்கிரஹ ஆராதனை. இதைச் செய்து வர வரத் தானே பிரம்மாநுபவம் ஏற்படும். இதைச் செய்யாமல் பிரம்மாநுபவம் ஏற்படாது.” என்று திட்டவட்டமாய்க் கூறினார். மேலும் விக்கிரஹத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

Monday, July 11, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

தன் தந்தை குருவாக ஏற்றுக்கொள்ளச் சொன்னவரைப் பற்றிய வர்ணனையைப் பிள்ளை அவர்கள் மேலும் விவரித்தார். முக்காடு போட்டவர் என்றதுமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் முதலியார். பின்னர் மேலும் பிள்ளை அவர்கள் தொடர்ந்து தன் தந்தை அவ்வாறு சொல்லிவிட்டுப் போய் மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகியும் அப்படி எந்த குருவும் வரவில்லை என்றும் தேவநாயகம் பிள்ளைக்கு அதனால் வியாகூலம் ஏற்பட்டதாயும் கூறினார். அப்போது முதலியார் அவரிடம், எனில் நீர் குருவைத் தேடி அலைந்திருப்பீர் என்று கூற அமைதியாகப் பிள்ளை அவர்கள், “அதுதான் இல்லை, சொன்னால் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அதிசயங்கள் நடப்பது உண்டுதான், ஆகவே சொல்லுங்கள் கேட்கலாம் என்று முதலியார் தூண்ட, பிள்ளை உற்சாகத்தோடு, “திடீரென ஒரு நாள் சுவாமிகள் கருங்குழியிலிருந்து இங்கு வந்தார். என் தந்தையின் வியோகஸ்தானத்தைப் பிரம்பால் தட்டிக் காட்டி, இதுதான் உம் தந்தையின் வியோகஸ்தானமா என்று கேட்டார். உடனே இவர் தான் என் குரு என்று எனக்குப் புரிந்துவிட்டது. அன்று முதல் அவரைக் குருவாய் ஏற்றுக்கொண்டேன். அவரின் அடிமையாகவே ஆகிவிட்டேன். “

சுந்தர முதலியாருக்கு வியப்பாய் இருந்த்து. பிள்ளையோ மேலும் சுவாமிகளின் சீடனாய் ஆன பின்னும் அவர் பெற்ற அதிசய அனுபவங்கள் பற்றிக் கூற ஆரம்பித்தார். தான் இரச வாதத்தில் பொருளை இழந்தது பற்றி நினைவு கூர்ந்த பிள்ளை அதை எவ்வாறோ சுவாமிகள் அறிந்து கொண்டதாயும், உடனே தனக்காகவே ஓர் இரும்புத் தகடைக் கொண்டு வந்து அதைப் பொன்னாக்கிக் காட்டியதாயும் கூறினார். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த தன்னிடம், சுவாமிகள் அறிவுரை கூறும் தொனியில், “இச்சை இல்லாதவர்களுக்கே இந்த இரசவாத வித்தை எல்லாம் கை கூடும். ஆகவே இனி இவ்வேலை வேண்டாம்.” என்று கூறிவிட்டு அந்தப் பொன் தகட்டையும் தூக்கி எறிந்துவிட்டதாய்க் கூறினார். மேலும் அன்றிலிருந்து தன் மனம் மாற்றம் அடைந்து இரசவாதத்தில் ஈடுபாடு போய்விட்டதாயும் கூறினார். அடுத்த நிகழ்வையும் கூற ஆரம்பித்தார் பிள்ளை அவர்கள்.
“ஒரு சமயம் சுவாமிகள் செஞ்சி மலையைச் சுற்றிப் பார்க்க்க் கிளம்புகையில் நானும் உடன் சென்றேன். சுவாமிகள் மலை மீது பல இடங்களிலும் சுற்றினார். ஆனால் எனக்குக் களைப்பாகிவிட்டது. பசி வேறு வாட்டி எடுத்தது. சுவாமிகள் அதைக் கண்டு என்னை ஓர் மரத்தடி நிழலில் அமர வைத்துவிட்டுச் சற்றுத் தூரம் சென்று பின் திரும்ப வந்தார். வரும்போது அவர் கையில் பெரிய லட்டு ஒன்றும் தண்ணீர்ச் செம்பும் இருந்தது. என்னிடம் அதைக் கொடுத்துச் சாப்பிட வைத்து நீரும் அருந்தக் கொடுத்தார். செம்பை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டு வருவதாய்ச் சொல்லிச் சிறிது தூரமே சென்றார். ஆனால் திரும்பி வருகையில் அவர் கையில் செம்பே இல்லை.”


தேவநாயகம் பிள்ளையின் பேச்சைக் கேட்ட சுந்தர முதலியார் வியப்பின் எல்லைக்கே போய்விட்டார். ஆஹா, எவ்வளவு அற்புதம்! எவ்வளவு ஆநந்தம்?? பிள்ளைவாள் கொடுத்து வைத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு அவரைப் பாராட்டினார். பின்னர் பிள்ளையோடு தானும் சுவாமிகளைத் தரிசிக்க வருவதாய்க் கூறவே பிள்ளைக்கு ஆச்சரியமும் ஆநந்தமும் சேர்ந்து வந்தது.

கருங்குழிக்கும் மேட்டுக்குப்பம் என்னும் ஊருக்கும் நடுவே ஓர் அற்புதமான தண்ணீர் ஓடை இருந்த்து. சிவராமன், குருமூர்த்தி என்னும் இரு நண்பர்கள் சுவாமிகளைத் தரிசிக்க வந்து அவர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து ஓடைக்கரையிலே மர நிழலிலே அமர்ந்து சுவாமிகளின் அற்புத சக்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சுவாமிகளின் “கோடையிலே” என்று ஆரம்பிக்கும் பாடலை இருவரும் ஆசை தீரப் பாடினார்கள். சுவாமிகளைக் காண முடியவில்லையே என்று வருத்தமும் கொண்டார்கள்.
அவர்கள் பேச்சிலிருந்து சுவாமிகள் கூடலூருக்குப் போயிருந்ததாயும் மூன்று நாளைக்கும் மேல் ஆகியும் திரும்பவில்லை என்றும் தெரிந்த்து. கூடலூரில் பல அற்புதங்களை சுவாமிகள் நிகழ்த்தி வருவதாயும் அதைப் பற்றி கூடலூர் இராமசாமி செட்டியார் என்பவர் சொன்னதாயும் கூறிக்கொண்டார்கள். மஞ்சக்குப்பத்தில் வசித்த ஆசிரியர் ராமகிருஷ்ணனுக்கு வழித்துணையாக சுவாமிகள் சென்றதாயும், வீட்டை அடையும்போது சுவாமிகள் கண்ணில் படமாட்டார் என்றும், கூறினார். மேலும் தாசில்தார் ஒருவர் தன் ஊழியனைச் சரியாக நடத்தாததையும் கண்டித்து அந்த ஊழியன் சார்பாய்ப் பேசியதாயும், பசித்துக் களைத்திருக்கும் ஊழியனைச் சாப்பிட வைத்ததாயும் கூறினார். ஜீவகாருண்யமே சுவாமிகளின் உயிர் மூச்சாக இருப்பதையும் பேசிக்கொண்டார்கள். சுவாமிகளின் மனம், வாக்கு, மெய், அனைத்தும் ஜீவகாருண்யத்தைத் தவிர்த்து மற்றதை நினைப்பதில்லை என்றும் கூறிக்கொண்டார்கள். கண்களில் கண்ணீர் ததும்ப இருவரும் பேசிக்கொண்டார்கள். கூடலூரில் வணிகர் ஒருவரின் பணியாளுக்கு வளர்ந்திருந்த உள்நாக்கைத் திருநீறு கொடுத்துக் குணமாக்கியதையும், கண்ணோய்க்காரன் ஒருவனுக்கும் அவ்வாறே கண்களில் ரஸ்தாளி வாழைப்பழத்தை வைத்துக் கட்டச் சொல்லிக் குணமாக்கியதையும் பெருமையுடன் பேசிக்கொண்டனர். அப்போது ஓர் நாள் கூடலூரின் தென்பெண்ணை ஆற்றங்கரையில் திருவிழா நடை பெறும்போது சுவாமிகள் அங்கே தம் சீடர்களோடு சென்றிருந்தார். பிரம்மசமாஜத்தைச் சார்ந்த ஸ்ரீதர நாயக்கர் என்பவரும் தம் சீடர்களோடு அங்கே கூடி இருந்து அவரவர் கோட்பாடுகளைப் பற்றி சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த அறிஞர்களின் ஒருவர் சுவாமிகளிடம் சந்தேகம் ஒன்று கேட்கவேண்டும் என்று தயங்கியவாறே கூற, சுவாமிகள் தமக்கும் ஸ்ரீதர நாயக்கருக்கும் இடையில் விவாதம் ஆரம்பித்து வைக்கவே இப்படிக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டு, “நல்லது ஆரம்பியுங்கள்” என்றார்.


உடனே அந்த அறிஞர் பிரம்ம சமாஜியான ஸ்ரீதர நாயக்கர் விக்ரஹ ஆராதனையை மறுத்தும் கண்டித்தும் பேசி வருகிறாரே என்று சுவாமிகளைக் கேட்க அது பிரம்ம சமாஜத்தின் கொள்கை என்று சுவாமிகள் மறுமொழி கூறினார் சந்தேகமே தமக்கு அதிலே தான் என்ற அந்தச் சீடர் விக்ரஹ ஆராதனை என்பதே இன்றி பிரம்மத்தை எப்படி வழிபடுவது, துதிப்பது என்று புரியவில்லையே என்றும் சுவாமிகளே அதைத் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் வேண்டினார்.

சுவாமிகளும்,” பிரம்மத்தை யார் எவ்விதம் அறிகின்றனரோ அவர்கள் அவ்விதமே அறிதலைத் தொடர்தல் வேண்டும். அருவமாக அறிகின்றவர்கள் அருவமாகவே அறிய வேண்டும். சிலருக்கு விக்ரஹ ரூபத்தில் அறிய முடிகிறது என்றால் அதற்கும் தடையில்லை. அவர்களும் விக்ரஹ ஆராதனைகள் மூலமே அதனைச் செய்தல் வேண்டும். ஆனால் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டுத் தெளிவடைந்த யோகிகளுக்கும், ஞாநிகளுக்கும் விக்ரஹ ஆராதனை என்பதே தேவையில்லை. “ என்று கூறினார். உடனே ஸ்ரீதர நாயக்கரை அனைவரும் பார்த்து இது குறித்து அவர் கருத்தைச் சொல்லும்படி தூண்ட, அவரோ விவாதம் வேண்டாம் என்று எண்ணுவதாயும் தனிப்பட்ட முறையில் கடிதம் போட்டு சுவாமிகளுக்குத் தெரிவிப்பதாயும் கூற, மற்றவர்களோ தொடர்ந்து பிடிவாதம் பிடித்தனர். மேலும் ஸ்ரீதர நாயக்கரின் கருத்தை வலுப்படுத்த விரும்பினால் அதற்கேற்றவாறு தக்க காட்சி, கருத்து, உரை ஆகிய மூன்று பிரமாணங்களையும் கூறவேண்டும் என்றும் இது தான் விவாதச் சபையின் பொது விதி என்றும் கூறி, விவாதத்தில் ஈடுபடுமாறு கூறினார்கள். சற்று நேரத்தில் அங்கே மிகப் பெரிய வாக்குவாதம் ஒன்று ஆரம்பிக்கும் அறிகுறி தென்படலாயிற்று. பிரம்ம சமாஜியின் சீடர்களுக்குக் கோபம் வர, ஸ்ரீதர நாயக்கர் செய்வதறியாது விவாதத்தில் பங்கேற்றாலொழிய இது முடியாது என்பதை உணர்ந்து விவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர் ஆனார்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

கடலூர் நகரில் பங்குனி உத்திரக் கிண்ணித் தேர் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. அதை முன்னிட்டு தேரடிக்கு அருகில் உள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டுக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இராமலிங்கஸ்வாமிகளின் சித்துத் தன்மை பற்றி அனைவரும் வியந்து பேச துரைசாமி பிள்ளை தானும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர் என்று கூறினார். அப்பாசாமி செட்டியாரின் தமையனாருக்கு வந்திருந்த புற்று நோயை ஸ்வாமிகள் திருநீறு கொடுத்துக் குணப்படுத்தியதையும் பற்றி அனைவரும் வியந்து பேச, அப்போது அங்கே வந்த அப்பாசாமி செட்டியாரின் தமையனாரான ராமசாமி செட்டியார் ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்று தம்பியிடம் கேட்க, அனைவரும் ஸ்வாமிகள் வந்திருப்பதை இதுகாறும் ஏன் சொல்லவில்லை என்று அப்பாசாமிச் செட்டியாரிடம் கேட்கின்றனர். ஸ்வாமிகளின் ஏகாந்தத்துக்கு இடஞ்சல் விளைவிக்கக் கூடாது என்ற எண்ணத்திலே சொல்லவில்லை என்று அப்பாசாமி செட்டியார் மறுமொழிகூறினார். அப்போது அங்கே எங்கிருந்தோ புதிய மனிதர் ஒருவர் வேகமாய் வந்தார். அவருடைய முகத்து ஒளி அனைவரையும் கவர்ந்தது. இதற்கு முன்னால் இவரைப் பார்த்ததே இல்லையே என அனைவரும் வியந்து பேசிக்கொண்டிருந்தனர். குழப்பம் மேலிட அனைவரும் பேசிக்கொண்டு வந்தவர் யாராயிருக்க முடியும்?? வீட்டுக்குள் போய் ஸ்வாமிகளைக் கேட்கலாமா வேண்டாமா என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.


இராமசாமி செட்டியார் உள்ளே போனவர் ஸ்வாமிகளின் ஏகாந்தத்தைக் கலைத்துப் பேசிக்கொண்டிருப்பாராகையால் நாமும் போய் என்னவென்று பார்க்கலாம் என்று கூற அனைவரும் உடன்பட்டு உள்ளே சென்றனர். அங்கே ராமலிங்க அடிகளின் எதிரே ஒரு பெரிய லட்டு மட்டும் இருந்தது. மனிதர் எவரையும் காணோம். அனைவரும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆவலை அடக்க முடியாமல் ஸ்வாமிகளிடமே எவரோ வந்திருந்தார்களே எனக் கேட்க, அடிகளும் ஒரு சித்தர் வந்துவிட்டுச் சென்றதாகவும், அவர் காசிக்குப் போகவேண்டும் என்பதால் உடனே சென்றுவிட்டதாயும் இந்நேரம் காசியில் இருப்பார் என்றும் கூறிவிட்டு அவர் கொடுத்தது தான் இந்த லட்டு என்றும் கூறினார். அனைவருக்கும் மீண்டும் இந்தச் செய்தி ஆச்சரியத்தையே கொடுத்தது. அற்புதமான நிகழ்வு என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, அடிகள் அனைவரையும் பார்த்துச் சிரித்து, விண்ணில் செல்லும் வல்லமை பெற்ற சித்தர் ஒருவர் வந்து தன்னைக் கண்டு சென்றதாகவும், இது ஆண்டவன் திருவிளையாடல்களில் ஒன்றெனவும், லட்டைத் தான் சிறிது எடுத்துக்கொண்டு அனைவருக்கும் தருவதாயும் கூறிவிட்டுத் தான் சிறிதளவு எடுத்துக்கொண்டு மீதியை அப்பாசாமி செட்டியாரிடம் கொடுத்தார்.


லட்டை உண்ட அனைவரும் அதன் சுவையில் மயங்கினார்கள். சித்தர் ஒருவரே நம் அடிகளை நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிரசாதமும் கொடுத்துச் சென்றாரெனில் அடிகள் சித்தர்களுக்கெல்லாம் தலைமைச்சித்தர் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அங்கே இருக்கையிலேயே ஒரு நாள் அடிகளைக் காணவந்தவர்கள் செட்டியார் வீட்டு வாழைத்தோட்டத்துக்கு தற்செயலாய் வந்தனர். கூடவே அடிகளும் வந்தார். தோட்டத்தைப் பார்த்துவிட்டு வாழைமரங்களில் கண்ணாடி இலைகள் விட்டிருப்பதையும் பூவிடும் நேரம் வந்துவிட்டதாயும் ஒருவருக்கொருவர் சிலாகித்துப் பேசிக்கொண்டனர். தோட்டம் நன்றாய்ப் பராமரிக்கப் பட்டிருந்ததைப் பற்றி அனைவரும் பேசிக்கொள்ள அடிகள் குறிப்பிட்ட ஒரு வாழைமரத்தடிக்கு வந்ததும் நின்றார். அங்கே இருந்த ஒரு நல்லபாம்பு சீறியது. அடிகளை அது தீண்டிவிடப் போகிறதெனப் பயந்த செட்டியார் அடிகளைத் தூரப் போகச் சொல்ல பாம்போ சத்தம் கேட்டதும் பயத்தில் அடிகளைத் தீண்டியது. செட்டியார் பதறிவிட்டார். அனைவரையும் கூக்குரலிட்டு அழைத்தார். அடிகளைப் பாம்பு தீண்டியதையும் தலையில் ரத்தம் வருவதையும் சொல்லி உடனே வைத்தியரையும் அழைக்கச் சொன்னார்.


ஆனால் அடிகளோ அமைதியாகவே இருந்தார். அவர் செட்டியாரிடம் புன்முறுவலோடு வைத்தியரை அழைக்கவேண்டாம் எனவும், தன்னிடம் இருக்கும் திருநீற்றைவிடச் சிறந்த மருந்து வேறெதுவுமில்லை என்றும் கூறிவிட்டு இடுப்பிலிருந்து விபூதிப்பையில் இருந்த விபூதியை எடுத்துத் தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் தடவிக்கொண்டார். அதற்குள் ஓடி வந்த மற்றவர்கள் இன்னும் கோபம் அடங்காமல் படம் எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பாம்பை அடிக்கப் போனார்கள். அப்போது அடிகள் அவர்களைத் தடுத்து, அந்தப் பாம்பு தான் சாகவே தன்னைத் தீண்டியதாய்க் கூறி பாம்பை அடிக்கவேண்டாம் எனத் தடுத்தார். அனைவருக்கும் குழப்பம் மீதூற அந்தப் பாம்போ இறந்து போய் வாழைமரத்திலிருந்து கீழே விழுந்தது. மீண்டும் அனைவரும் திகைக்க ராமலிங்க அடிகள் நான் சொன்னது சத்தியம் எனப் புரிந்ததா எனக் கேட்டார். தங்கள் அறியாமையை மன்னிக்கும்படி அனைவரும் வேண்ட, காலம் வரும்போது அனைவருக்கும் ஞாநம் பிறக்கும் என்றும் அறியாமைக்காக வருந்தவேண்டாம் எனவும் பாம்பை எரிக்காமல் புதைக்குமாறும் சொல்லிச் சென்றார். அனைவரும் இவர் அந்த நஞ்சுண்டகண்டனின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார் எனத் தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.


கடலூரில் இருந்த தேவநாயகம் பிள்ளை அவர்கள் அப்பாசாமிச் செட்டியார் வீட்டில் இருந்த அடிகளைக் காணக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் பிள்ளையவர்களைக் காண அங்கே சுந்தரமுதலியார் என்பவர் வந்தார். தாம் வந்ததால் பிள்ளைஅவர்களின் பயணம் தடைப்பட்டுவிட்டதோ என அவர் வருந்த, பிள்ளை முதலியாரைச் சமாதானம் செய்துவிட்டு வந்த காரணத்தை வினவினார். முதலியார் தாம் ஒரு அலுவலாகத் தாசில்தாரைக் காண வந்ததாகவும் பிள்ளை அவர்களைக் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டதால் காண வந்ததாகவும் கூறினார். மேலும் கருங்குழி அடிகளிடம் பித்துக்கொண்டு அவரோடு சுற்றிக்கொண்டு இருப்பதைக் கேள்விப் பட்டு அதை விசாரிக்க வந்ததாகவும் கூறினார். பிள்ளைஅவர்கள் ஏற்கெனவே ரசவாதத்தில் அதிகப் பணத்தையும், பொருளையும் இழந்ததையும் நினைவூட்டினார்.


தேவநாயகம் பிள்ளைக்குக் கோபம் வந்தது. பலரும் தம்மைத் தவறாய்ப் புரிந்து கொண்டிருப்பதை ஏற்கெனவே அறிந்த அவருக்கு இப்போது சுந்தர முதலியாருக்குப் பதில் கூறுவதன் மூலம் அந்த எண்ணத்தைப் போக்க நினைத்தார். ஆகவே தம் தந்தையார் இறக்கும் தருவாயில் தம்மிடம், தலையில் முக்காடு போட்டுக்கொண்டும், கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டும் துறவி ஒருவர் வந்து உன்னிடம் இதுதானா உன் தந்தையின் வியோகஸ்தானம் என இந்த இடத்தைச் சுட்டிக் கேட்பார். அவர்தான் உனக்கு குரு. அவரைக் குருவாக ஏற்றுக்கொள் எனக் கூறியதாகச் சொன்னார். மேலும்………..

Friday, July 1, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலாரின் சீடர்களில் ஒருவரான கல்பட்டு ஐயா உடனே, வள்ளலாரிடம், “சுவாமி, சமரச சுத்த சன்மார்க்கத்தின் வழிமுறைகளும், கொள்கைகளும் என்ன என்று தெரிந்தால் நாங்கள் அதன்படியே நடப்போம்,” என்று கூற, அடிகளாரும் மிகவும் எளிய கொள்கைகளே அவை என்று கூறிவிட்டு ஒவ்வொன்றாய்க் கூறலானார்.

“இறைவன் ஒருவரே! ஒருவனாகிய இறைவனை நம் உண்மையான அன்போடு ஒளிவடிவில் வழிபட்டு வரவேண்டும். இந்த ஒரே இறைவனை ஒளிவடிவில் வழிபடுவது தவிர மற்றச் சிறுதெய்வங்கள் வழிபாடு கூடாது. உயிர்ப்பலியும் கூடாது. புலால் உண்ணுவதையும் தவிர்க்கவேண்டும். சாதிவேறுபாடுகளோ, சமய வேறுபாடுகளோ காட்டி ஒருவரை மற்றவர் தாழ்த்தக் கூடாது. அனைத்து உயிர்களும் நம் உயிர் போல் கண்ணுக்குக் கண்ணாகக் கருத வேண்டும். ஏழைகளின் பசி அறிந்து அவர்கள் பசியைப் போக்குதலே முக்கியக் கடமையாகக் கொள்ளவேண்டும். புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்காது. இறந்தவரைப் புதைக்கவேண்டும். அவர்களுக்கான ஈமச் சடங்குகளையும் தவிர்த்தல் நன்று. இக்கொள்கைகளைப் பின்பற்றவும் இவற்றைப் பரப்பவுமே இந்த சுத்த சமரச சன்மார்க்கநெறியை உங்கள் அனைவரின் உதவியோடு கடைப்பிடிக்கவுமே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் நிறுவி இருக்கிறேன். இறைவன் என்னை மனிதனாகப் பிறப்படைய வைத்ததின் காரணமும் இதுதான்.” என்றார்.

“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற்கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே”
என்ற பாடலைப் பாடிய வள்ளலார், இந்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்து உய்வடையும்படி அனைவரையும் அழைப்பதாயும் கூறியதோடு, இந்த மார்க்கத்தைப்பின்பற்றுவதால் ஏற்படும் பயனையும் கூறினார்.

“மார்க்கம் எலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மை இது
தூக்கம் எலாம் நீக்கித் துணிந்துளத்தே-ஏக்கம்விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள்.”
அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளலார் புறப்பட அவருடைய அணுக்கத் தொண்டர்களான வேலாயுத முதலியார், கல்பட்டு ஐயா, வேங்கட ரெட்டியார் ஆகியோர் அவரைத் தொடர்ந்தனர்.

கடலூர். பங்குனி உத்திரம் கிண்ணித் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அப்பாசாமிச் செட்டியார் என்பவரது வீட்டில் நண்பர்கள் கூடி இருந்தனர். புதுவையைச் சேர்ந்த உறையூர் துரைசாமிப் பிள்ளை என்பவர் செட்டியாரிடம் அவர் தமையனாரின் நாக்குப் புற்றுநோய் பற்றி விசாரித்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்றும் கேட்டார். அப்பாசாமிச் செட்டியார் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அப்படியே விட்டு விடாதீர்கள், வேறு வைத்தியம் பாருங்கள் என்று துரைசாமிப் பிள்ளை குறுக்கிட்டார். அப்பாசாமிச் செட்டியார், அப்படியே விடவில்லை என்றும் கருங்குழியில் உள்ள அருட்சித்தரிடம் கொண்டு காட்டியதாகவும் கூறினார்.

துரைசாமிப் பிள்ளைக்கு ஆச்சரியம் மேலிட, “இராமலிங்க அடிகளாரையா சொல்கிறீர்?” என்று கேட்க,”ஆம், அவரை உமக்குத் தெரியுமா?” என்று செட்டியார் வினவ, தாமும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவரே எனப் பிள்ளை தெரிவித்தார். பின்னர் செட்டியார் தம் தமையனாரைக் கருங்குழிக்கு அழைத்துச் சென்றதாயும் அடிகளார் தமையனாரிடம் மூன்று வேளை பூசிக்கொள்ளவும், உட்கொள்ளவும் திருநீறு கொடுத்ததாயும், அவ்வாறே செய்ததில் முற்றிலும் குணமாகிவிட்டதாயும் கூறினார். அது சமயம் அப்பாசாமிச் செட்டியாரின் தமையனாரே அங்கே வர, அவைடமே துரைசாமிப் பிள்ளை விசாரித்தார். அவரும் அடிகளார் செய்த அற்புதத்தைக் கூறிவிட்டுத் தம்பிடம், “அடிகளார் உள்ளே இருக்கிறாரா?” என்று வினவ, பிள்ளையவர்கள், அடிகளார் வந்திருக்கும் செய்தியைக் கூறவே இல்லையே என வருந்தினார். அப்பாசாமிச் செட்டியார், தான் நேரிலே சென்று அடிகளாரைக் கிண்ணித் தேர் விழாவுக்காக அழைத்து வந்ததாயும், சுவாமிகள் ஏகாந்தத்தில் திளைத்திருப்பதால் அவருக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற எண்ணத்தினாலேயே கூறவில்லை என்றும் கூறினார்.
அடிகளார் ஏகாந்த்த்தை விட்டுவிட்டு நம்மை அழைக்கும் வரை காத்திருப்போம் என அனைவரும் முடிவெடுக்க, அப்போது புதிய மனிதர் ஒருவர் வெகுவேகமாய் அவர்களைக் கடந்து உள்ளே சென்றார். அனைவரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர். வந்தவரின் ஒளி வீசும் தோற்றத்தைக் குறித்து அனைவரும் வியந்து பேசிக்கொள்ள, உள்ளே சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தனர்.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சமரச சன்மார்க்க சங்கம்!

மீண்டும் தில்லை சென்ற ராமலிங்க அடிகளுக்குத் தான் சிறு வயது முதல் தில்லைக்கு வந்ததும், நடனசபாபதியின் பேரருளும், அவரின் ஆநந்தத் தாண்டவத்தையும் , சிறு குழந்தையாய் இருந்தபோதே தனக்கு ஈசன் காட்டித் தந்து அருளியதும் நினைவில் மோதியது. பெருமான் நிகழ்த்திய செயல்கள் அனைத்தும் அவருக்குக் கண் முன்னால் தோன்றின. ஈசன் சிறு குழந்தையாய் இருந்த தனக்கு ஆநந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளியதோடு அல்லாமல், அம்பலவாயிலில் திருவருளை நினைந்து அழுது நின்ற தன்னை, அருள்மொழி கூறித் தேற்றிச் சிலம்பொலி கேட்கும் வண்ணம், வந்து ஞாநயோக அநுபவங்களை அருளியதும், ஸ்பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, திருவடி தீக்ஷை ஆகிய தீக்ஷைகளைத் தமக்கு முறைப்படி அருளியதும் நினைவில் மோதின. மேலும் அம்பலத் திருவாயிலில் ஈசன் தம்மோடு கலந்து தன்னை இறவாநிலை பெற்று வாழப் பணித்ததையும், இனி பிரிய மாட்டோம் என வாக்கு அளித்ததையும் நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தினார். அவற்றை எல்லாம் குறிக்கும் வண்ணம் ஓர் அற்புதப் பாடலையும் புனைந்தார்.

“கருவிற் கலந்த துணையே என்
கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியே என்
கருத்தில் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த சுகமேஎன்
னுடைய ஒருமைப்பெருமானே
தெருவில் கலந்து விளையாடுஞ்
சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத்
தேவே உலகத் திரளெல்லாம்
மருவி கலந்து வாழ்வதற்கு
வாய்த்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன்.
எந்தாய் கருணை வலத்தாலே”

என்று பாடிக்கொண்டே, “திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்” என உருகி தொழுதார். கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் அமர்ந்திருந்த அடிகளைத் தேடிக்கொண்டு ஸ்ரீநிவாச வரதாசாரியார் என்பவர் வந்தார். திருவஹீந்திரபுரம் சென்றதாயும் கோயில் வைபவங்கள் இப்போதெல்லாம் சிறப்பாக நடைபெறுவதில்லை எனவும் கோயில்களில் ஆரவாரம் அதிகமாகிவிட்டதாயும், அதிகாரிகளுக்கும், செல்வந்தர்களுக்குமே முன்னுரிமை கொடுப்பதாயும் வருந்தினார். அடிகளாரும் ஆமோதித்தார். திருத்தலங்களில் தங்குவதற்கு முன்னைவிட இப்போது வசதிகள் குறைவாகவும், மனநிம்மதியுடன் தரிசிக்க முடிவதில்லை எனவும் ஒத்துக்கொண்டார். அப்போது தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு வரவில்லை என எண்ணி வருந்தி ஏங்கிய பெற்றோர்களிடம் கலைமகல் வாழ்த்தைக் கொடுத்து அதைப் பாராயணம் செய்யும்படி சொன்னார்.

“கலைபயின்ற உளத்தினிக்கும்கரும்பினைமுக்
கனியை அருட்கடலை ஓங்கும்
நிலபயின்ர முனிவரரும் தொழுதேத்த
நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயின்ற மறை பயின்று மூவுலகும்
காக்கின்ற தாயை வாகைச்
சிலை பயின்ற நுதலாளைக் கலைவாணி
அம்மையை நாம் சிந்திப்போமே.”

இம்மாதிரி மூன்று பாடல்களை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீநிவாச வரதாசாரியார் ஸ்ரீராமன் மேலும் பதிகங்கள் பாடித் தரும்படி விண்ணப்பிக்க அவ்வாறே பத்துப் பாசுரங்கள் பாடிக் கொடுத்தார். அடிகளாரின் தகவல்கள் அவ்வப்போது கிடைக்கப் பெற்ற அவருடைய நண்பர்கள் வேலு முதலியார், வீராசாமி நாயக்கர், ரத்தினமுதலியார் போன்றவர்கள், சிதம்பரம் நடராஜரின் மேல் அடிகளார் தொத்திர மாலைகளும், சாத்திரமாலைகளுமாக சுமார் இருநூறு பாடி இருப்பதையும், தேவார நால்வர் ஆன ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் பக்தியைப் போற்றி ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பிகள் அருள் மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை போன்ற நான்கு பாமாலைகளும் பாடியதாகவும் மனமகிழ்வோடும், பெருமையோடும் பேசிக்கொண்டனர். நண்பர்களுக்கு அடிகளைக் காணவேண்டும் என்ற அவா உந்த, கருங்குழிக்குப் புறப்பட்டுச் செல்ல முடிவெடுத்தனர்.

கருங்குழியில் களத்து மேடு. வருடம் 1865. தொழுவூர் வேலாயுத முதலியார், கல்பட்டு ஐயா, வேங்கட ரெட்டியார் ஆகியோர் பணிவுடன் நின்றிருக்க ராமலிங்க அடிகளார் வீற்றிருந்தார். எப்போதும் இல்லாத மகிழ்வோடும், ஆநந்தத்தோடும் முகமும் உடலும் பிரகாசிக்க அடிகளார், தாம் கண்டறிந்த உண்மைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்ற ஒன்றை நிறுவி இருப்பதாய்த் தெரிவித்தார். மேலும் அதைப் பற்றி விவரித்தார் அடிகளார். முன்னோர்கள் வகுத்த நான்கு மார்க்கங்கள்
தாசமார்க்கம், இது இறைவனுக்கே அடிமையாதலைக் குறிக்கும் எனவும்
சற்புத்திரமார்க்கம், இறைவனுக்கு நல்ல மகனாதலைக் குறிக்கும் எனவும்
சகமார்க்கம் இறைவனுடன் நண்பனாய்ப் பழகுதலைக்குறிக்கும் எனவும்
சன்மார்க்கம் என்பது இறைவனுடன் ஒன்றி அவனே தானாதலைக்குறிக்கும் எனவும் விளக்கிச் சொன்னார்.

இந்தக் கருத்தையே பெரும்பாலும் ஆன்றோர்கள் கூறி வருவதாயும் தம் கருத்து இதனின்று வேறுபடுவதாயும் கூறினார் அடிகளார். அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்க அடிகளார் விளக்க ஆரம்பித்தார்.

தாசமார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் தன் அடிமைகளாய்ப்பாவித்தல் என்றும்
எல்லா உயிர்களையும் தன் மகனாய்ப் பார்த்தல் சற்புத்திரமார்க்கம் என்றும்
எல்லா உயிர்களையும் தன் நண்பனாய்ப் பார்த்தல் சக மார்க்கம் என்றும்
எல்லா உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தலே சன்மார்க்கம் எனவும், இதுவே ஜீவ நியாயம் எனவும் எடுத்துக் கூறினார். இவை நான்கிலும் சன்மார்க்கமே சிறந்தது எனவும், மற்ற மூன்றும் சன்மார்க்கத்தை நோக்கிச் செலுத்தும் படிகளே என்றும் கூறினார். சன்மார்க்கமே கடைசியில் பரமுத்தியைத் தரும் வல்லமை பெற்றது எனவும் கூறினார். சன்மார்க்கமே இறவாநிலை தரும் எனவும், இறவாநிலை பெற்றவனே சன்மார்க்கி எனவும் கூறினார்.