Wednesday, July 16, 2008

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள் தொடர்ச்சி 7

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே முந்தைய பகுதிகளை வாசிக்கவும். இப்போ நாம் காணப் போவது கைலாச நாதர் கோவில் இருக்கும் குகைப் பகுதி. இது உலகிலேயே ஒரே கல்லால் கட்டப் பட்ட மிகப் பெரிய குகைக்கோயில் என்று சொல்லப் படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் இங்கு மிகுந்து காணப் படுகின்றது. எதுவுமே பெரிய அளவிலேயே நம் முன்னோர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ஒரு சான்று. பெரிய புத்தர் சிலைகள், பெரிய சிவலிங்கம் என எல்லாமே மிகப் பெரிய அளவிலானது. இவை எல்லாம் செய்து முடிக்க எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. சற்றும் சலிக்காமல் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் அலுப்புக் கொள்ளாமல், உடல் வருத்தம் பாராமல் வெறும் உளியையும், சுத்தியலையும் வைத்துக் கொண்டு செதுக்கிய இந்தச் சிற்பங்களின் அளவையும், அழகையும், குகைக் கோயில்களின் அமைப்பையும் பார்த்தால் கட்டுமானத் துறையில் எத்துணை சிறந்தவர்களாயும், வல்லவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் நன்கு புலனாகின்றது அல்லவா??
குகைக்கோயில்களுக்குச் செல்லும்போது கடந்து செல்லும் பாதை இது. முற்றிலும் மலைப்பாறைகளினாலேயே ஆன பாதை இது. இந்தப் பாதையைக் கடந்ததும் வருவதே கைலாசநாதர் கோயில் ஆகும். முற்றிலும் ஒரே கல்லினால் ஆன இந்தக் கோயில் பெரிய அளவில் அலங்கரிக்கப் பட்டு மூன்று தளங்கள் கொண்டதாய விளங்குகின்றது. மேலிருந்து கீழே செதுக்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் வெளிச் சுவற்றில் இருந்து உள்ளே செல்லும் வழியில் ஒரு பெரிய முற்றம் காணப் படுகின்றது. முக்கியமான சிவன் கோயிலைச் சுற்றிலும் அது செல்லுகின்றது. எதிரே ஒரு பெரிய நந்தீஸ்வரர் காணப் படுகின்றார். மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டுள்ளது சிற்பங்களால். கிட்டத் தட்ட 20 மீட்டர் உயரம் உள்ள தூண்கள் இருபுறமும் காணப் படுகின்றன. மூன்று யானைகள் அவற்றை அலங்கரிக்கின்றது.
முற்றத்தின் இடது பக்கம் நதி தேவதைகளும், அதன் வலது பக்கத்தில் இலங்கேஸ்வரன் கோயிலும் உள்ளது. கோயில் மேற்கே பார்த்து எழும்பி உள்ளது. கீழ்த்தளத்தில் உள்ளது. கையில் தாமரைப் பூக்களை வைத்துள்ள யானைச் சிற்பங்கள் காணப் படுகின்றன. மேல் தளம் 16 அல்லது 14 தூண்கள் உள்ள மண்டபத்துடனும், மூன்று முக மண்டபங்களுடனும் காணப் படுகின்றது. நந்தி இருக்கும் கூடாரத்தை இவை ஒரு பாலத்தால் இணைக்கின்றது. கைலை என அழைக்கப் படும் கைலாசத்தின் கலாசார வடிவங்கள் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. துர்கை அம்மன் வலது பக்கமும், இடது பக்கம் நுழையும் இடத்தில் விநாயகர் சிற்பம் சற்றே சிதைந்த நிலையிலும் காணப் படுகின்றது. இரண்டு படிக்கட்டுகள் மேல்தளத்துக்குச் செல்லக் காணப் படுகின்றது. முக்கியமான கோயிலின் மண்டபத்தில் ராமாயணச் சிற்பக் காட்சிகளும், மகாபாரதக் காட்சிகளும் காண முடிகின்றது. கீழ்த்தளத்தில் ஈசன் கஜமுகாசுரராக யானையாக வந்த அசுரனைக் கொன்று அந்தத் தோலுடன் நடனமாடும் கோலத்தில் காண்கின்றோம். மேலே மண்டபத்தில் ஆஹா, இது என்ன?? ஜடாயுவா இது? ராவணனுடன் சண்டை போடுவதைப் பார்த்தால் நிஜம் போல் தோன்றுகின்றதே? இதோ இங்கே மகாலட்சுமி, இங்கே துர்க்கை. இன்னும் பார்க்க ஆசைதான், ஆனால் இதை முடித்துவிட்டு மேலே போய் அங்கிருந்து கீழே தெரியும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வண்டிக்கு வரச் சொல்லி வழிகாட்டி சொல்லிவிட்டாரே?? மற்ற குகைகள்?? மற்றவை கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளது. உள்ளே செல்ல அனுமதி இல்லை! அடக் கடவுளே? அப்போ ஜைனக் குகைகள்??சாப்பாடு முடிஞ்சு திரும்ப வருவோம். சரி, இப்போ சாப்பிட்டு விட்டே வருவோம். நமக்கும் கொஞ்சம் அலுப்பாய் இருக்கிறது. இதை ஆரம்பிச்சது என்னமோ எல்லோராவில். ஆனால் எல்லோரா வரதுக்கு முன்னாலே தேவகிரிக் கோட்டைக்கு மேலே ஏறிச் சென்றது வேறே ஆயாசம் அதிகமாய் உள்ளது. தேவகிரிக் கோட்டையும், மிச்சம் இருக்கும் ஜைனக் குகையும் நாளை பார்ப்போமா????

Wednesday, July 9, 2008

சினிமா விமரிசனம் எழுதி இருக்கேனே?


யோசிச்சுட்டு, இப்போ எல்லாரும் சினிமா விமரிசனம், அது, இதுனு தூள் கிளப்பறாங்க. நாமளும் எழுத வேண்டாமா?னு எழுத ஆரம்பிச்ச விமரிசனம் இது. நான் சமீபத்தில் பார்த்த படம் "உம்ராவ் ஜான்". ரொம்பவே புதுசு இல்லை?? :P நிஜமாவே இந்த உம்ராவ் ஜான் ரொம்பவே புதுசு தான். ஐஷுவும், அபிஷேக்கும் நடிச்சது. ஐஷுதான் உம்ராவ் ஜான். அபிஷேக் தான் அவங்க காதலன். சும்மா தூள் கிளப்பி இருக்காங்க இரண்டு பேரும். பத்தாதுக்கு சுனில் ஷெட்டி(???) பார்த்தா அவர் மாதிரித் தான் இருக்கு. ஷபனா அஸ்மி இரண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்க. அதிலும் தான் பிறந்து வளர்ந்த வீட்டை உம்ராவ் ஜான் மீண்டும் பார்க்க வரும் காட்சியில் ஐஷு ரொம்பவே உருக்கிட்டாங்க. அதிலும் அம்மா கிட்டே கெஞ்சும்போதும், தம்பியிடம் ஒரு காலத்தில் உயிராய் இருந்த தம்பி கிட்டே தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போதும், பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து மீண்டும் நாட்டிய நங்கையாக ஆட வரும்போது, கூடி இருக்கும் அனைத்து ஆண்களும் பேசுவதைக் கேட்டு மனம் நொந்து பாட்டிலேயே பதில் சொல்வதும், அந்தப் பாட்டும், ஆட்டமும் முடிந்ததும் ஏற்படும் மெளனமும், அருமை!

கண்ணும், உதடும், முகத்தின் ஒவ்வொரு தசையும் அருமையாக நடிக்கின்றது. உம்ராவ் ஜானாக வாழ்ந்தே காட்டி விட்டார். இதே ஐஷு தானா தேவதாஸில் அத்தனை மோசமாய் நடிச்சது?? ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இதே படம் ரேகா நடிச்சு வந்ததும் பார்த்திருக்கேன். ரேகாவின் நடிப்புக்கு ஈடு கொடுக்கும் விதத்திலே நடிச்சிருக்கார் ஐஸ்வர்யாவும். இம்மாதிரியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களிலே நடிச்சதிலே ருதாலியில் டிம்பிள், ஜுபைதாவில், கரிஷ்மா, மீண்டும் ஷக்தியில் கரிஷ்மா தான், இவ்வளவு அருமையான நடிப்புக் காட்டி இருந்தார்கள். அதிலும் ஷக்தியில் கரிஷ்மா குழந்தையைப் பிரிஞ்சு துடிக்கும் காட்சி ஒண்ணு போதும். என்ன, ஹிந்திப் படம் பத்தியே எழுதறேன்னு பார்க்கிறீங்களா? தமிழ்ப்படம் நான் பார்த்த சானல்களில் எல்லாம் நல்ல படமாவே இல்லை. எல்லாம் பாடாவதிப் படம். ஒண்ணிலே சபாபதினு ஒரு படம், மத்ததிலேயும் வேறே ஏதோ பழைய படங்கள், செளகார் ஜானகி கண்ணில்லாத பெண்ணாக நடிக்கும் படம் ஒண்ணு, பேர் என்ன? தெரியலை, மறந்துட்டேன்! சரி, வேண்டாம், பார்த்த படமா இருந்தாலும் உம்ராவ் ஜானே தேவலைனு அங்கே போய் செட்டில் ஆகிட்டேன்.

பொதிகை சானலில் இப்போ நிகழ்ச்சிகள் கொஞ்சம் தடுமாறுது, என்னனு புரியலை! காலம்பர 6-30-க்கும், சாயந்திரம் 6-30-க்கும் வேளுக்குடியின் நிகழ்ச்சி தவிர வேறே ஒண்ணும் சுகமாய் இல்லை. மற்றதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் பார்க்கிறாப்போல இருக்கிறதில்லை. அதிலும் இந்த சாமி படங்கள், சீரியல்கள்னு வந்தால் எங்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச பக்தியும் போயிடுமோனு பயம் வந்துடுது. அதனால் அதெல்லாம் கிட்டேயே போகிறதில்லை.
*************************************************************************************

மேடம், உங்களுக்கு என்ன உடம்பு சரியில்லையா?இது சிலர் கேள்வி!
கீதாம்மா, என்ன ஆச்சு? இதுவும் சிலர் கேள்வி??
கீதாக்கா, என்ன திடீர்னு இப்படி ஆயிட்டீங்க? இதுவும் சிலர் கேள்வி!
கீதா, என்னம்மா ஆச்சு? ஹிஹிஹி, இதுவும் சிலர் கேள்வி!

இப்படி எல்லாரும் கேட்கும்படியான அந்தக் காரணம் தான் என்ன?

தொலைபேசியில் பேசினாலும் இதே கேள்வி தான், சாட்டிங்கிலும் இதே கேள்வி தான், அந்தக் கேள்வி என்ன? யாராலயும் கண்டு பிடிக்க முடியலை! ம்ம்ம்ம்ம் சரி, சரி, நானே சொல்லறேன், ஆனால் அதுக்கு முன்னாலே ஒரு சான்ஸ்! யாரானும் கண்டு பிடிக்கிறாங்களானு பார்ப்போம்! மற்றக் கேள்விகள் இதோஇங்கே பதில் சொல்லுங்கப்பா!!!!!! இந்நேரம் என்னோட உபிச இருந்திருந்தா நடக்கிற கதையே வேறே! ம்ம்ம்ம்ம் அவங்க இல்லாம எவ்வளவு கஷ்டமா இருக்கு? :P :P

Sunday, July 6, 2008

வீட்டுக்கு வீடு வாசப்படி தான், எங்க வீட்டு வாசப்படி ரொம்பப் பெரிசு!

என்னத்தைச் சொல்றது?? பழைய ஐடியிலே இருந்து நினைவில்லாமல் வல்லியோட கமெண்டுக்கும், கோபியோட கமெண்டுக்கும் பதில் சொல்லிட்டேன். அப்புறம் என்னோட பதிலை, நானே போய் பப்ளிஷ் பண்ண வேண்டியதாப் போயிடுத்து! எல்லாம் அஜித் லெட்டர்! இன்னும் இங்கே சூடு பிடிக்கலை, இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் லீக் ஆயிட்டு இருக்கு! ஹிஹிஹி, வெட்கத்தை விட்டு நானே போய்க் கூப்பிட்டுட்டுத் தான் இருக்கேன் ஒவ்வொருத்தரா!! போகட்டும், இப்போத் தலையாய விஷயம் என்னன்னா, எனக்கும், கொத்தனார்களுக்கும் உள்ள ஜன்மப் பகை பத்தித் தான்!

கொத்தனார்னதும் எல்லாருக்கும் நினைவுக்கு இ.கொ. வந்தால் நான் பொறுப்பில்லை! நான் சொல்றது நிஜமான கொத்தனாருங்கோ!!! கல்யாணத்துக்கு முன்னாலே மதுரையிலெ இருந்தவரைக்கும், இந்தக் கொத்தனாருங்களோட அதிகம் பழக்கம் கிடையாது. ஒருமுறை புதுவீடு கட்டும்போது, சிமெண்ட் கலவையில் தெரியாத்தனமாக் கால்,கை வைத்து விழுந்துவிட்டு, குளியல் நடத்தினதிலே இருந்தே, சிமெண்ட் என்றாலே அலர்ஜி!!! தவிர, அப்போ எல்லாம் அப்பா கட்டிட்டு இருந்த வீட்டைக் கூடப் போய்ப் பார்த்ததில்லை! அப்பாவே போக மாட்டார்! அப்புறம் நாங்க எங்கே போறது? அப்புறமாக் கல்யாணம் ஆனதும் தான் இது பற்றிய அறிவாற்றல் பெருக ஆரம்பிச்சது! அதுவும் என்னோட ம.பா.வுக்கு நான் இவ்வளவு அறிவிலியாக இருப்பதைப் பற்றிய வருத்தம் அளவு கடந்து போகவே, அவர் என்னை இந்தக் கொத்தனாருங்களோட தனியாக மோத விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு ஆஃபீஸ் கிளம்பிப் போயிடுவார்.

இப்போத் தான் தொலைபேசியில் அழைப்பு, தொல்லைபேசியாக இருக்கு. செல்பேசியில் அழைப்பு செல்லாக அரிக்குது. செல் கண்டார், செல்லே கண்டாராக எல்லாரும் பேசித் தீர்க்கிறாங்க. நாங்க நினைவா, செல்போனை வெளியே போகும்போது வீட்டில் பத்திரமா வச்சுட்டே போவோம்!! எங்கேயாவது வெளியூர் போனால் நினைவு வச்சுட்டு எடுத்துட்டுப் போறதே அபூர்வம். இப்போ, இப்போ கொஞ்சம் நினைவு வந்து எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாலும், பக்கத்து வீட்டுக்கு வெத்திலை, பாக்குக்குப் போகறச்சே எடுத்துண்டு போகறதில்லை! ஆனால் எனக்குக் கல்யாணம் ஆனப்போ வீட்டில் தொலைபேசியும், கிடையாது, கிட்டப் பேசியும் கிடையாது. அதனால் அப்போ தொலைபேசி எல்லாம் கேட்டுக்க முடியாதே! காலையிலே அவர் சொல்லிட்டுப் போகிற எல்லாத்தையும் நான் சாயந்திரம் அவர் வரதுக்குள்ளே எல்லாத்தையும் நிறைவேத்தி வச்சுட்டு, ரிப்போர்ட் கொடுக்கணும். அவர் பார்த்து மார்க் போடுவார். சீச்ச்சீ, ஸ்கூல் நினைப்பிலே சொல்லிட்டேனே!

இப்படியாகத் தானே ஒரு மாதிரியா என்னையும் இந்த சித்தாள் வேலைக்குப் பழக்கப் படுத்தி வைச்சார். அப்போவும் வெள்ளை அடிக்கும்போது வீட்டிலே இருக்க முடியாது. நாங்க குடி இருந்த வீடு, குடி இருக்காத வீடு, அரசாங்க வீடு, சொந்த வீடுன்னு எல்லாம் பாரபட்சமே பார்த்ததில்லை. எங்கே போனாலும் போன ஒரு மாசம், 2 மாசத்துக்கெல்லாம், அவர் கொல்லுருவைக் கையில் எடுத்தால், நான் பாண்டில் சிமெண்டைத் தூக்கியே ஆகணும்!! வேறே வழியே இல்லை. அதிலும் அந்த வீட்டில், நாமளும் இருந்து கொண்டு, நம்ம சாமான்களையும் வைத்துக் கொண்டு, அவற்றை இடம் ஒதுக்கி வர ஆளுங்களுக்கு வேலை செய்ய ஒழிச்சுக் கொடுத்தது போக மிச்சம் இருக்கும் இடத்தில் தான் சமையல், டிபன், காபி, சாப்பாடு, தூக்கம் எல்லாம். அதுக்குத் தானோ என்னமோ தெரியலை, ஒவ்வொரு முறை மாற்றல் ஆகிப் போகும்போதெல்லாம் முன் பதிவு செய்யப் பட்ட முதல் வகுப்பு டிக்கெட்டையும், ஏசி டிக்கெட்டையும் வச்சுக் கொண்டு, அந்த வண்டியைக் கோட்டை விட்டுட்டு, வேறே வண்டியில் அன்ரிசர்வில் போக வச்சுப் பழக்கிட்டாரோனு தோணும். ஒரு ஸ்டவ் வக்கிற இடம் இருந்தாலே போதும், சின்ன டிரங்குப் பெட்டிக்குள் சமையல் பாத்திரங்களை வைத்து, சமைத்துத் திரும்பத் தேய்ச்சதும் அதிலேயே வைத்துனு மிக மிகக் குறைந்த அளவு பாத்திரங்களே போதும்னு ஆயிடும்.

பாத்திரங்கள் விஷயத்தில் தான் இப்படி, மத்தது எல்லாம் பூதம், பூதமா இருக்கும், பீரோ, கட்டில், மேஜை, நாற்காலி, காபி டேபிள்னு. அதை எல்லாம் எங்கே வைக்கிறது? எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு பெட்டி வேறே! அந்தப் பெட்டி நிறைய அவங்க அவங்க சேமிப்பான புத்தக மூட்டைகள்!இத்தனையையும் ஒரு பத்துக்குப் பத்து அடி அறையில் அடக்கிட்டு, ஒருத்தர் மேலே ஒருத்தர் பச்சைக் குதிரை தாண்டிட்டு, ஒரு மாதிரியா விளையாட்டு வீராங்கனையாவும் மாறியாச்சு! தாண்டிக் குதிச்சு, எடுக்கிறதிலேயும், எம்பி எடுக்கிறதிலேயும் என்னைவிடச் சிறந்தவங்க இப்போ இருக்கிறது கஷ்டம். இதிலேயே விருந்தாளிகள் உபசரிப்பும் நடக்கும். வந்தவங்க தான் பயப்படுவாங்க, சாப்பாட்டிலே சிமெண்ட் விழுமா, மணல் விழுமானு, நாங்க கவலையே பட்டுக்க மாட்டோம். இத்தனையும் எதுக்குனு கேட்கிறீங்களா? வீட்டிலே இப்போ கொஞ்சம் ரிப்பேர் வேலை நடக்குது. 2 அறையில் இருந்து சாமான்கள் வெளியே வந்து ஹாலை அடைச்சுட்டு இருக்கு. எடுத்து வைச்ச மேஸ்திரி, சித்தாள் எல்லாம், இந்த மாதிரியும் சாமான்கள் இருக்குமானு ஆச்சரியத்தோடு சுத்திச் சுத்திப் பார்த்துட்டு இருக்காங்க. நான் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூ.னு வசூல் பண்ணலாம்னு கூடச் சொன்னேன். கேட்கலை. :P

இந்த அழகிலே, சாப்பிடறது, தூங்கறது, எல்லாம் ஹாலிலே தான். கம்ப்யூட்டரும் ஹாலுக்கு வந்துடுச்சு, அதுக்குப் பிடிக்கவே இல்லைனு நல்லாத் தெரியுது, பின்னே? தனிக்காட்டு ராஜாவா இருந்தது. அங்கே இருந்து எடுத்து வந்து இங்கே கூட்டத்தோடு கூட்டமா இருந்தா இதை யார் கவனிப்பாங்க? அதான் ரொம்ப வருத்தத்தோட, அடிக்கடி மக்கர் செய்யுது. ஒருமாதிரியா சமாதானம் செய்து வச்சிருக்கேன். இன்னும் 2 நாள், இன்னும் 1 நாள் அப்படினு கவுண்ட் டவுன் சொல்லிக்கிட்டு வரேன். ஆனால் வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்சம் தூரம்னு ஆயிட்டு இருக்கு. பின்னே? யானை அசைஞ்சு திங்கும், வீடு அசையாம திங்கும் னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?? பேசாம ஒரு யானையே வாங்கி இருக்கலாமோ??

Saturday, July 5, 2008

சத்தம் போடாமல் ஒரு புதிரா, புனிதமா???


கே ஆர் எஸ்ஸுக்குப் போட்டியா ஒரு புதிரா, புனிதமா பாணியில் கொஞ்சம் கூட இல்லாமல் சில கேள்விகள் மட்டுமே கேட்டிருக்கேன். பதில் சொல்றவங்க தான் உண்மையான குண்டர், சீச்சீ, இல்லை, தொண்டர்னு தெரிஞ்சுடும்!

1.தொலைபேசி அழைப்பிலே அழுகை! ஏன், யாரிடம், எதுக்காக?

2.அம்பியை நேரிலே பார்த்தப்போ கூட அம்பியும் ஒரே வருத்தம்! ஏன்? எதுக்காக, யாரிடம்?

3.ரசிகன் இந்தியா வந்ததும் தொலைபேசியில் தன்னோட வருத்தத்தை யாரிடம் தெரிவித்தார்? ஏன், எதுக்காக, யாரிடம்?

4.கோபிநாத், சாட்டும்போது யாரிடம் ஒரு குரல் அழுதார்?? ஏன், எதுக்காக, யாரிடம்???

5.மதுரையம்பதியை வெறுப்படைய வைத்தது எது? பல நாட்களாய்ப் போராடுவது எதற்கு?
ஏன் எதுக்காக, யாரிடம்??

6.யாரைக் கண்டாலே அபி அப்பா ஓடி ஒளிஞ்சுக்கறார்? ஏன் , எதுக்காக, யாரிடம்?

7.இ.கொ. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், என்று சபதம் எடுத்தது ஏன், எதுக்காக, யாரிடம்?

8.மருத்துவர் ராமநாதன் தன்னோட சுட்டிகள் லிஸ்டிலே இருந்து யாரோட பதிவின் சுட்டியை நீக்கி உள்ளார்?? ஏன் எதுக்காக, யாரிடம்???

9.வலை உலகே என்ன ஆச்சோ எப்போ நிலைமை சீரடையுமோனு கவலையில் ஆழ்ந்திருப்பதாய்ச் செய்தி! ஏன் எதுக்காக, யாரிடம்???

10.இதெல்லாம் எதைக் குறிச்சுனு யாருக்காவது யூகம் செய்ய முடியுதா??


மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் திங்களன்று இந்திய நேரப்படி, 00-00 மணிக்கு வெளிவரும். அதுவரைக்கும் பதில்களை உங்கள் ஊகப்படி இங்கே பின்னூட்டமாய்த் தெரிவிக்கலாம்.

Thursday, July 3, 2008

காலமிது, காலமிது, மொக்கைகளின் காலமிது!!!

நல்லதுக்கே காலம் இல்லை, எல்லாம் இந்த சிஷ்ய கேடிங்க பண்ணற அடம் தான். ராமாயணம் எழுத ஆரம்பிச்சுட்டேனா? எல்லாம் கட்சி மாறிடுச்சுங்க, ஆனால் மொக்கைக்கு ஆபர் மேலே ஆபர் வந்துட்டே இருக்கே? என்ன செய்யறதுனு யோசிச்சேன்! எல்லாம் மொக்கைக்கே காலமாப் போச்சு, அட, ராமாயணத்துக்குத் தான் பின்னூட்டம் கொடுக்க மாட்டாங்க, சரி, போகட்டும்னா, எல்லாம் விழுந்து, விழுந்து, இந்த அம்பிக்கே, பின்னூட்டம் கொடுக்கிறதைப் பார்த்தால், ஹிஹிஹி, புகை எல்லாம் ஒண்ணும் இல்லை, கொஞ்சமே கொஞ்சம் தீசல் வாசனை தான் வரும்!! அப்படி என்னத்தைப் பெரிசா எழுதறார்? எல்லாம் சோகக் கதை, சொந்தக் கதை தான். அதிகம் வேறே ஒண்ணும் “ஜொள்”ளறதில்லை. ஒருவேளை அம்பி ரொம்பவே “ஜொள்”ளறதினாலேயே எல்லாரும் வராங்களோனு நினைக்க்கிறேன். புதுக்கடை ஆரம்பிச்சதை யார் கிட்டேயும் சொல்லலை, புதுசா வீடே இருக்கு, ஆனால் அது இன்னொருத்தர், பாவம் எனக்குத் , தானமாக் கொடுத்தது.. “தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடுங்கின கதை”யா ஆகிடும், அங்கே போய் மொக்கை போட்டால். அதான் இலவசமே போதும்னு இங்கே வந்துட்டேன். நாமதான் இலவசத்துக்கு அலைவோமே?? இ.கொ. உங்களை இல்லை! எதுக்கோ மூக்கிலே வேர்த்தாப்பலே வந்துடுவீங்களே இதுக்கு மட்டும்! :P

2 நாளா, 2 நாள் என்ன, இப்போ அடிக்கடி தொலைக்காட்சி பார்க்கிறதாலே, சில, படங்களும் பார்க்க முடிஞ்சது. ஹிஹிஹி, வேறே வழி இல்லை, தொலைக்காட்சியைப் பார்த்தாவது கொஞ்சம் மன ஆறுதல் அடையலாமே?? நல்ல படம்னு பார்த்தால், போன வாரம் பார்த்த, “KHOON BHARI MAANG” தான். ஏற்கெனவே தமிழ், ஹிந்தி எல்லா மொழியிலேயும் பார்த்தாச்சு. இருந்தாலும் ரேகாவின் நடிப்புக்காக இந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். சர்வ அனாயாசமான நடிப்பு. Born Actress? ம்ஹூம், அப்புறமா ஜெயபாதுரி சண்டைக்கு வருவாங்க, :P versatile actress??? இதான் சரியா இருக்குமோனு நினைக்கிறேன். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்ற பழமொழிக்கும் ஏற்ப இவரின் நடிப்பு இருக்குனு சொன்னால் அதிலே தப்பில்லை. அதிலும் வில்லனாய் வரும் கபூர்??? என்ன கபூர்?? பேர் மறந்துட்டேனே??? ரொம்பவே பிரசித்தம் தான், என்றாலும் மறந்து போச்சு! கபூரிடம் அவரோட காதலை நிஜம்னு நினைச்சுத் தடுமாறுவதும், தன்னோட சிநேகிதியான அனிதா ராஜ்(?) இவர் தான்னு நினைக்கிறேன், தன் கணவரோட ஏற்கெனவே தொடர்பு வச்சிருக்கிறதும் தெரியாத அளவுக்கு ரொம்பவே அப்பாவி!!! முன்னாலே தெரியாது, சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் தெரியலை! அப்புறமாய் வில்லன் தன்னைத் தண்ணீரில் தள்ளிக் கொலை செய்ய முயற்சிக்கும்போதும், அப்புறமாய் அவனைப் பழி வாங்க நினைக்கும்போதும், பழிவாங்கும் விதமாய் வித, விதமாய் ஆடை, அலங்காரத்தில் வருவதுமாய்த் திரையை ஆக்கிரமிக்கின்றார். ஒரே பாட்டுத் தான். திரும்பத் திரும்ப வருது. முதலில் ராகேஷ் ரோஷனும், ரேகாவும் பாடும் அந்தப் பாட்டு, டூயட்னும் சொல்ல முடியாது, இல்லைனும் சொல்ல முடியாது. பின்னர் ராகேஷ் ரோஷன் இறந்ததும் குழந்தைகளோடு அதே பாட்டுத் திரும்ப வருது! “ஹன்ஸ்தே, ஹன்ஸ்தே”னு ஆரம்பிக்கும் அந்தப் பாட்டின் அர்த்தம் என்னமோ அருமை!!! ஆனால் முதலில் ஒண்ணுமே தெரியாமல் அப்பாவியாக இருந்த ரேகா திடீர்னு இத்தனை கெட்டிக்காரியாக ஆனதின் காரணம் அத்தனை அழுத்தமாய் இல்லை. பழிவாங்கறதுதான் காரணம் என்றாலும், கொஞ்சமாவது முன்னாலே தைரியசாலிதான்னு காட்டி இருக்கவேண்டாமா? திரைப்படங்களில் தான் இப்படி ஒரே இரவில், அல்லது ஒரே பாட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கவோ, தைரியம் அதிகம் பெறவோ முடியும். அது என்னமோ தெரியலை, திரைப்படத்திலேயும் சரி, தொலைக்காட்சித் தொடர்களிலேயும் சரி, இந்த மாதிரி கணவனுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருக்கிறதைத் தெரிஞ்சுக்காத அப்பாவி நல்லவளாகவே எல்லா ஹீரோயின்களும் வராங்க. அதிலும், ஜெயாவில் வருது பாருங்க, ஒரு அறுவைத் தொடர், “அலை பாயுதே?” நல்ல பேர், ஆனால் சீரியல் மகா, மகா தண்டம்!!! அபத்தக் களஞ்சியம்! கலெக்டர் மனைவியாம், ஆனால் ரொம்பவே அநியாயத்துக்கும் நல்லவளா இருக்காங்க கெளசல்யா! எங்கே இருந்து இப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தாங்கனு புரியலை! கணவன் காதலிக்கும் பெண்ணை வீட்டுக்கே அழைத்து வருவதில் ஆரம்பிச்சு, ஒரே வீட்டிலேயே இருந்தும் தன் கணவனின் குழந்தைதான் அவள் வயித்திலே வளருகின்றது என்றும் புரியலையாம்! அப்புறம் உண்மை தெரிஞ்சதும் ஆட்டோ டிரைவர் கிட்டேப் போய் உதவி கேட்கிறதும், அந்த ஆட்டோக்காரர் மூலமாய் வேலைக்குப் போறதும், என்ன இது? படிக்கலையா? இல்லை படிச்சதுக்கான சான்றிதழ்கள் இல்லையா? இத்தனைக்கும் தங்கையைக் காப்பாற்ற மலேசியாவுக்குத் தனியாப் போய் தங்கையைக் காப்பாற்றிக் கூட்டிட்டு வந்தாங்க. திடீனு தன்னோட விஷயத்திலே இப்படி அபத்தமா ஏன் நடந்துக்கிறாங்க புரியலை! அதிலும் அந்த ஆட்டோ டிரைவர் சொல்லி வச்சாப்பலே ஒவ்வொரு முறையும் இவங்க தெருவிலே இறங்க வேண்டியது தான் வந்துடுவார். அவருக்கு வேறே ஆள் கிடைக்கலையா?? இவங்களுக்கு வேறே ஆட்டோவே கிடைக்காதா? வீட்டுக்கே வந்து பார்த்து இவங்க கணவர் கிட்டேயும் சவால் விடுவார் அந்த ஆட்டோக் காரர். ஆட்டோ டிரைவர் கிட்டே குடும்ப விஷயங்களைப் பேசுகிறதும், அவர் மூலமாக் கிடைச்ச வேலையிலே வீடு, வீடாய்ப் போய் வீட்டு உபயோகப் பொருட்களை விக்கிறதும், தலையிலே அடிச்சுக் கொண்ட வேகத்திலே தலைவலியே வந்துடுச்சு எனக்கு. அப்புறம் அந்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலே உட்காருவதே இல்லைனு சபதமே எடுத்துக் கொண்டுவிட்டேன். பேசாமல் அந்த ஆட்டோக்காரரை அந்த சீரியலை எடுக்கிறவரை மிரட்டறதுக்கு நாமளே அனுப்பலாம்னு முடிவும் பண்ணிட்டேன்.

அடுத்து சிம்ரன் திரை. முதலில் நல்லாவே போயிட்டிருந்தது. தர்ம யுத்தம் கொஞ்சம் சொதப்பல். அது எப்படி குழந்தைக்கான தடுப்பு ஊசி மருந்துகளினால் குழந்தைகள் செத்துப் போவதற்கு விஞ்ஞானிதான் ஒரே காரணம்னு அவரை மட்டும் தேடிப் பிடிச்சுக் கைது பண்றாங்க? லாஜிக்கே புரியலை! அந்த மருந்து தரமானதுனு தரக்கட்டுப்பாடுக்குப் போய் அங்கே சோதனை செய்து பார்க்கலையா? அதுக்கப்புறம்தானே மருந்துக் கம்பெனிகள் அதைத் தயார் செய்திருக்கணும்? பின்னரும் அதை விநியோகஸ்தர்கள் மூலமே விநியோகிக்கணும். அப்போவும் அரசின் மருந்தாளுநர்களின் தரக்கட்டுப்பாடு அதிகாரி அதைப் பார்த்திருக்கணுமே? திடீர்னு மருந்துப் பெட்டிகள் இடம் மாறுவது என்றால் அதை ஏன் யாருமே கவனிக்கலை? என்னதான் எல்லாருமே விஞ்ஞானிக்கு எதிராக வேலை செய்யறாங்கனு வச்சுக் கொண்டாலும், ஒருத்தர் கூடவா அது தப்புனு உணராமல் இருந்திருப்பாங்க? அதுக்கப்புறம் அந்த ஊசி மருந்துகளை உபயோகித்த செவிலியர், மருத்துவர்கள். மருந்துகள் வந்திருக்கிறதென்னமோ அரசாங்க மருந்துக் கிடங்கிலே இருந்துதான். அப்படி இருக்கும்போது அங்கே இருக்கும் அதிகாரிகளையோ, மற்ற ஊழியர்களையோ விசாரணை என்பது பேருக்குக் கூடச் செய்யவில்லை. செவிலியர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, மருந்து கையாண்டதோடு சரி, விட்டுடலாம். மத்தவங்க? ஏன் அவங்க யாரையுமே பிடிக்கலை?

விஞ்ஞானியை மட்டும் அதிலும் அவர் ஒருத்தரை மட்டும் குறி வச்சு ஏன் பிடிக்கணும்? இந்தச் சாதாரணச் சந்தேகம் யாருக்குமே வரலை! சிம்ரன், அவர் காதலிக்கும் போலீஸ் ஏ.சி. உள்பட. ஆனால் முதலிலேயே நமக்குப் புரிஞ்சுடுது, ஏ.சி.யின் அப்பாதான் வில்லன், அவர் தான் விஞ்ஞானிக்கு எதிரி, ஆனால் மறைமுக எதிரினு. அதற்கான காரணம் தான் சொதப்பலோ சொதப்பல்! வெறும் பொறாமை தான் காரணமாம். வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றது தான் காரணமாம். விருதுகள் கிடைச்சது தான் காரணமாம். அதுக்காக விஞ்ஞானியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இருந்தாலோ, அவர் பெண்களுக்குத் தீங்கு இழைச்சிருந்தாலோ ஏத்துக்கவோ, மன்னிக்கவோ முடியும். ஆனால் இப்படியா அநியாயமாய்க் குழந்தைகள், அதுவும் பச்சிளங்குழந்தைகள், உயிரோடு விளையாடுறது? இதைப் பார்க்கிற யாரேனும் நிஜமா இப்படிப் பண்ணாம இருக்கணுமேனு கவலை வந்துடுச்சு. என்னவோ போங்க! சினிமாதான் பிதற்றல்னால் தொலைக்காட்சித் தொடர்கள் அதுக்கு மேலே பேத்தல்! இப்போ புதுசா வேறே ஒண்ணு வருது. நான் திரும்பிக் கூடப் பார்க்கிறதில்லைனு முடிவு எடுத்துட்டேன். என்னோட ம.பா. தான் ரொம்பவே ஆர்வத்தோட பார்த்துட்டு இருக்கார். என்னைக் கூப்பிட்டதுக்கு, நான் வரலை, இனிமேல் இந்த மாதிரி சீரியல் பார்க்க வந்தால் என்னை நானே, கிளிப்பச்சைக் கலர் சப்பலாலோ, இல்லை பஞ்சு மிட்டாய்க் கலர் சப்பலாலோ அடிச்சுக்கறேன்னு சொல்லிட்டேன். செருப்புக் கடையிலே போய்ப் பார்த்து இந்தப் பழைய செருப்பை விட்டுட்டு, புதுசை லவட்டிட்டு வரணும் அதுக்கு,!!!!!! என்ன ராமாயணம் எழுதலைனு கேட்காதீங்க! அது தனிக்கதை! வரும், வரும், கொஞ்சம் வேலை இருக்கா? மொக்கைனால் ஆன்லைனிலே போடலாம். இந்த ராமாயணம் மட்டும் கொஞ்சம் தயார் பண்ணிக்க வேண்டி இருக்கு! 2 நாளா ஆன்லைனிலே போட்டேன், ஆனால் எனக்குத் திருப்தியா இல்லை! வரேன், எழுதி வச்சுட்டு! வர்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆஆஆஆ????????

Tuesday, July 1, 2008

சித்திரம் பேசுதடி- எல்லோரா குகைகள் தொடர் 6

7-ம் நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படும் இந்த இந்து சமயத்தைக் குறிக்கும் குகைகள் பெரும்பாலும் இந்துமதக் கடவுளரையே கொண்டுள்ளது. முதலில் நாம் காணும் கோயில் விஷ்ணுவின் கோயிலாக இருந்திருக்கின்றது. இந்துமதத்தின் பல்வேறு கடவுளரின் உருவங்களையும் காணலாம் இங்கே. நுழையும்போது துவாரபாலகர்களும், நதிகளின் தேவ உருவங்களையும் கொண்ட சிற்பங்களைக் காண முடிகின்றது. இடப்பக்கத்தில் துர்கை, மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, காண்கின்றோம். வலப்பக்கத்திலும் துர்கையோடு கூடிய நடனக் கோலத்தில் ஈசனின் சிற்பமும், ராவணன் கைலை மலையை அசைக்கும் கோலத்திலும் பார்க்க முடிகின்றது. இந்த ராவணனின் சிற்பத்தை வைத்தே இந்தக் குகையும் அவ்வாறே அழைக்கப் படுகின்றது.
இது தவிர, ராமாயணக் கதையைக் கூறும் சிற்பங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருப்பதையும் காண முடிகின்றது. அடுத்த குகை தசாவதாரக் குகை என அழைக்கப் படுகின்றது. ஆனால் இது ஒரு காலத்தில் புத்த மதக் குகையாக இருந்திருக்கலாம் எனவும், பின்னாட்களில் மாற்றப் பட்டிருக்கலாம் எனவும் சொல்லப் படுகின்றது. திறந்தவெளி ஒன்றும், ஒரே கல்லினால் மண்டபம் ஒன்று காணப்படுகின்றது. பக்கத்திலேயே இரண்டு தளம் கொண்ட கோயில் ஒன்றும் இருக்கின்றது. மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனை போன்ற நதியின் தேவதைகளின் உருவம் செதுக்கப் பட்டிருக்கின்றது. கூரையைப் பாருங்கள், அடடா, என்ன அழகு? என்ன அழகு?? இப்போதெல்லாம் அரசின் உதவி கிடைத்தாலும் கூட இம்மாதிரியான சிற்ப வேலைப்பாடுகளை இவ்வளவு தரத்தோடு செய்ய முடியுமா சந்தேகமே!

சிங்கங்கள், கணநாதர்கள், மேலே காண்கின்றார்கள். படிகள் மேலே உள்ள தளத்திற்குச் செல்ல ஏறுகின்றோம். ஒரு பெரிய விசாலமான கூடம் வருகின்றது. மண்டபம் எனவும் சொல்லலாமோ??? இங்கே தான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் செதுக்கி வைத்திருக்கின்றனர். இன்னும் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தோமானால், விஷ்ணு மட்டுமில்லாமல், சிவன், சிவ, பார்வதி சொக்கட்டான் ஆடும் கோலத்தின் சிற்ப வடிவம், ஆஹா, உமை அன்னையின் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம்?? கணவனோடு ஆடுவதாலா? அல்லது ஆடல்வல்லானை ஜெயித்துவிட்டோமென்றா?? புரியவில்லை!ஆஹா, இதோ, காரணம் புரிந்துவிட்டது. அம்மை ஈசனைத் திருமணம் செய்து கொண்டு இப்போதே வந்திருக்கின்றாள். அது தான் காரணம், நாணம் குமிழியிட, அது முகத்தில் சிரிப்பாய் மலர்ந்திருக்கின்றது. அதோ, அது என்ன??/

லிங்கத்தில் இருந்து சிவனா? அல்லது சிவன் லிங்கமாய் ஆவிர்ப்பவிக்கின்றாரா?? எதிரே யார்?/ ஓ, மார்க்கண்டேயரா?? ஆமாம், மார்க்கண்டேயரைக் காக்க இறைவன் லிங்க வடிவத்தில் இருந்து சிவனாக வந்து எமனைத் தண்டிக்கின்றார். அதுக்கும் முன்னால், இது என்ன?// கங்கையைத் தலையில் தாங்கும் கோலத்தில் சிவன்!!! பார்க்கக் கண் கோடி போதாது! இத்தனையும் செய்து முடித்த நம்ம முன்னோர்களின் புத்திசாலித் தனத்தைப் பாராட்டுவதா? அல்லது இப்போது கவனிப்பார் அதிகம் இல்லாமல் ஏதோ ஓரளவு கவனிப்போடு, மெல்ல, மெல்ல அழிந்து கொண்டிருப்பதை நினைத்து வருந்துவதா?? புரியவில்லை!