Tuesday, January 20, 2009

கண்டு பிடிங்க அம்பி!

நானும் பயணக்கட்டுரையைத் தொடரணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் இந்தத் தொண்டரடிப் பொடிங்க விட்டால் தானே? ஏற்கெனவே என்னோட மொக்கைகளுக்கே ஆதரவுனு சொல்லிட்டு எல்லாம் போய்ப் பதுங்கிட்டாங்க! இப்போ நேயர் விருப்பத்தை நிறைவேற்றலைனா அப்புறம் தலைவி பதவிக்கே கோவிந்தாவாயிடுமே! பதவி சுகத்தை அனுபவிச்சுட்டு விட்டுக் கொடுக்க முடியுமா?? அதுவும் இப்போக் கொஞ்ச நாளா உ.பி.ச.வும் இல்லாமல் தனியாப் போராட வேண்டிப் போச்சு! போன பதிவிலே அம்பியோட திடீர் தொலைபேசி அழைப்பைப் பத்திச் சொன்னேனா? மறு நாளே பாருங்க, யார் கூப்பிட்டிருப்பாங்கனு நினைக்கிறீங்க? கடைசியிலே வரும் அது! ஆனால் பேசி முடிக்கும்போது சொன்னார் பாருங்க ஒரு பஞ்ச் டயலாக்! அப்போ உடனேயே இதைக் கட்டாயமாப் பதியணும்னு முடிவு பண்ணிட்டேன். அது என்னனு கேட்கிறவங்க, கொஞ்சம் பொறுங்க!

பொங்கல் அன்னிக்கு மத்தியானமா, ஆற்காட்டாரின் திடீர் வரவினால் சும்ம்ம்ம்மா உட்காரவேண்டி இருந்தது. புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு, எதைப் படிக்கலாம் என ஒரு சிறு பாட்டி மன்றம், சீச்சீ, பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தேன். மனசுக்குள்ளே என்னமோ தொலைக்காட்சிக்கே ஓட்டு விழ, தொலைக்காட்சி பார்க்கலாமா? நமீதாவும், நவ்யா நாயரும் கொண்டாடும் பொங்க"ளை"ப் பார்க்கணுமேனு அலுப்பாவும் இருந்தது. காமெடி திரையில் வழக்கம்போல் அறுவைகளே. திடீர்னு தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பேசினால், பேசினவரும், அம்பியைப் பத்தி நான் எழுதின பதிவைப் படிச்சுட்டுப் பேச எண்ணி இருக்கார். யாருனு சொல்லலை. ஆனால் எனக்குப் புரிஞ்சுது யாருனு. அவரோ என்னமோ எனக்குப் புரியாதபோல் பேசறார். சரினு நானும் காட்டிக்கவே இல்லை. என்ன திடீர்னு கேட்டதுக்கு ரங்கமன்னாரைப் படிச்சேன்னு பதில் வந்தது. அப்புறமா அவருக்கு சந்தேகம் தான் யாருனு எனக்குத் தெரியுதானு? நான் யாருனு புரிஞ்சுட்டுத் தான் பேசறீங்களானு கேட்டாரே ஒரு கேள்வி! ஆப்பீச்சு வேலையிலே இப்படிக் கூப்பிடறது, வேறே யாராய் இருக்கப் போகுதுனு நானும் உடனேயே பதில் சொல்லவும், மனுஷனுக்கு இப்போத் தான் சந்தேகம் தீர்ந்தது.

அப்புறமா அவங்க வீட்டில் வளர்க்கும் பாம்புகள், தவளைகள், எலிகள், பூனைகள் என அவர் ஆரம்பிச்சு உதார் விட, நாம என்ன சளைத்தவங்களா?? இதோ பார்சல் அனுப்பறேன்னு சொன்னதும் கொஞ்சம் நிறுத்திக்கிட்டார். அப்புறமா அபி அப்பா, உங்களைப் பத்தியும் ரொம்ப விசாரிச்சார். சொன்னேன், உங்களைப் பத்தியும். அவரோட குழந்தையைப் பத்தியும், அவளைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறதையும் பத்தியும் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்தப் பகுதி தான். :)))))))) அதுக்கப்புறம் தான் வந்துச்சு பாருங்க பஞ்ச் டயலாக். என்னங்க இன்னிக்கு இவ்வளவு நேரம் பேசறீங்கனு கேட்டேனா?? என்ன சொன்னார் தெரியுமா? "மேடம், நான் என்ன அம்பினு நினைச்சீங்களா? மாமனார் தொலைபேசியிலே பேசறதுக்கு? இது என்னோட சொந்த தொலைபேசிங்க! அதிலே இருந்து தான் பேசறேன்"னு சொன்னாரே பார்ப்போம்! யாருனு கண்டு பிடிச்சுச் சொல்லவேண்டியது அம்பியோட வேலை. நான் சொல்லப் போறதே இல்லை. என்னோட வேலை கடைசி பஞ்ச் டயலாக் எழுதறதுக்காகப் பதிவு எழுதினது மட்டுமே! கண்டு பிடிங்க அம்பி! அப்பாடா, தலைப்பு என்ன வைக்கிறதுனு மண்டை காய்ஞ்சுட்டு இருந்தது. கண்டு பிடிச்சுட்டேன்.

அர்ச்சனா அப்பா, ஒரு வாரம் ஆனாலும் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்திட்டேன். நாராயணா! நாராயணா!

Wednesday, January 14, 2009

ரெங்க ராமனா? ரெங்கமன்னாரா?? மாமனார் வீடே சொர்க்கம்!

ஹிஹிஹி, ஹெஹ்ஹே, ஹெஹ்ஹே! எல்லாம் நம்ம அம்பியைப் பத்தித் தான்! நேத்திக்குப் பாருங்க, திடீர்னு சீக்கிரமே brunch முடிச்சுட்டு, (breakfast+lunch=brunch) பேப்பரைப் புரட்டலாமா? இல்லைனா வந்திருக்கிற புத்தகமா? இல்லை கணினியா? இல்லை தொலைக்காட்சியா? இல்லைனா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேனா?? அப்போப் பார்த்து, தொலைபேசி அழைப்பு! எடுத்தால் யாருங்கறீங்க?? என்ன ஆச்சரியம்? என்ன ஆச்ச்ச்ச்சரியம்?? வழக்கமா சென்னைக்கு வந்தால் ஓசைப் படாமல் வந்துட்டு, ஓசைப்படாமல் திரும்பியும் போயிட்டு எப்போவோ பதிவு எழுதும்போது மட்டுமே அதைக் குறிப்பிடும் அம்பிங்க தொலைபேசியிலே. என்னடா இது?? பெரிய, பெரிய ஆளுங்க எல்லாம் நம்மளை நினைப்பு வச்சுட்டுக் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்களேனு ஒரே பயமாப் போச்சு! என்ன பேசறது, எப்படிப் பேசறதுனு ஒண்ணும் புரியலை!

அம்பியா, அவர் பாட்டுக்கு, என்னமோ அவரோட குரலினிமை நமக்குப் புரியாத மாதிரி அல்ட்டிக்கிட்டே இருக்கார். அப்புறமா கேட்டேன் பாருங்க ஒரு கேள்வியை! என்ன மாமனார் வீடா? மாமனார் தொலைபேசியானு! அசடு வழிய ஆமாம்னு ஒத்துக்கிட்டார் அம்பி. எப்படித் தெரியும்னு வேறே ஆச்சரியம்! அதான் இத்தனை நேரம் பேசறீங்களே! உங்க தொலைபேசினாலோ, பங்களூரில் இருந்து பேசினாலோ உடனேயே வச்சுட மாட்டீங்க?னு ஒரு கேள்வியைக் கேட்டேன், பதிலே இல்லை! அதிசயமாப் பொங்கல் வாழ்த்தெல்லாம் சொல்லி, (ம்ம்ம்ம்ம்ம் ஒரு தீபாவளி, புது வருஷம், பிறந்த நாள் வாழ்த்துக் கூடச் சொல்லமாட்டார்) திடீர்னு எனக்கு வந்த அதிர்ஷ்டத்திலே பிரமிச்சுப் போயிட்டேன். அதிலேயும் எதுக்குக் கூப்பிட்டாருனு நினைக்கிறீங்க. இந்த முறையும் அம்பத்தூருக்கு வரலைனு சொல்றதுக்காக. அவர் எங்கே நம்ம வீட்டுக்கெல்லாம் லேசிலே வரப்பட்ட மனுஷனா??? நானும் எதிர்பார்க்கலை, விட்டுட்டேன்! அடுத்த முறைனு சொல்லி இருக்கார். அதுவும் தினத்தந்தியிலே சிந்துபாத் முடிஞ்சாத் தான் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு! பெரியவங்க கூப்பிட்டுப் பேசினதே பெரியவிஷயம்னு நினைச்சேன். அதையே நினைச்சுட்டு இருந்தால், என்ன அதிசயம்?? இன்னிக்குக் காலம்பர வழக்கமா ஆறரை மணிக்கு வரவேண்டிய வேளுக்குடி ஏழு மணிக்கு வந்தார்.

வந்ததும் என்ன சொன்னார்னு நினைச்சீங்க?? மாமனார் வீட்டிலே இருக்கிறது தான் சொர்க்கம்னு முதமுதல்லே கண்டு பிடிச்சதே அந்த ரங்கமன்னார் தானாம். எந்த ரங்கமன்னார்?? எல்லாம் பாற்கடலிலே பள்ளி கொண்டிருக்காரே அவரே தான்! பூவிருந்த வல்லியிலே வல்லியைக் கல்யாணம் செய்துட்டு அங்கேயே மாமனார் வீட்டோடு தங்கிட்டாராம் ரங்கமன்னார். சரிதான், ரங்கன்னு பேர் வச்சாலே இப்படித் தான் போலிருக்குனு நினைச்சேன். நீங்க என்ன சொல்றீங்க?? பெருமாளே இப்படி மாமனார் வீடே கதினு இருந்தால் அம்பி என்ற ரெங்கராமன் வேறே என்னத்தைச் செய்ய முடியும்? அதான் அம்பி மாமனார் வீட்டுக்கு வந்திருக்கார் லீவுக்காகத் தானே, பெருமாள் மாதிரி இல்லையேனு நினைச்சுக்கிட்டேன். அம்பி கல்யாணத்துக்கு நான் மொய் எழுதலையாம், அதனால் எங்க வீட்டுக்கு வரலைனு புரளி கிளப்பிட்டு இருக்கார். அவரோட கல்யாணத்துக்கு எனக்கு வந்து சேரவேண்டிய ரிவர்சிபிள் புடவையோ, போன வருஷம் தீபாவளிக்கு வரவேண்டிய நகாசு பட்டுப் புடவையோ இன்னும் வந்து சேரவே இல்லை. என்னத்தை மொய் எழுதறது? கணேசனுக்குக் கல்யாணம்னால் முன்னாலேயே சொன்னால், யு.எஸ். போக டிக்கெட் எடுத்து வச்சுப்பேன், வசதியா இருக்கும்னு சொல்லி வச்சிருக்கேன். இப்போ கணேசன் கல்யாணத்துக்காக வாங்கற பரம்பரா பட்டும் சேர்ந்து மூன்று புடவையா வரணும் அம்பி! நினைவில் இருக்கட்டும்.

Sunday, January 11, 2009

அக்கிரமமா இல்லை???

என்னவோ போங்க, எங்கே பார்த்தாலும், எப்போப்பார்த்தாலும் ஒரே சண்டையாவே இருக்கு. கணினியிலே தான் கூகிளுக்கும், யாஹூவுக்கும் சண்டை நடந்தது. மைக்ரோ சாஃப்ட் உதவி செய்யறேன்கற பேரிலே வேடிக்கை பார்த்துட்டுக் கை கொட்டிச் சிரிச்சது எல்லாம் நடந்துச்சு. இப்போ க்ரோம் ப்ரவுசருக்கும், எக்ஸ்ப்ளோரருக்கும் சண்டை! இந்த அமளியிலே நெருப்பு நரி, தான் பாவம், தானுண்டு, தன்னோட நீட்சிகள் உண்டுனு தேமேனு இருக்கு. இதுதான் போகட்டும்னு தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் ஒரே சண்டைமயம். எந்தப் படத்தைப் பார்த்தாலும் சண்டை தான். விஜய்-அஜீத் ரசிகர்கள் சண்டையாம், வடிவேலு-விவேக் ரசிகர்கள் சண்டையாம், என்னத்தைச் சொல்றது? எங்கே போய் ஆத்திக்கிறது இந்தக் கஷ்டத்தை எல்லாம். விளம்பரமாவது பார்க்கலாம்னு பார்த்தா அதிலேயும் ஹார்லிக்ஸுக்கும், காம்ப்ளானுக்கும் ஒரே சண்டை, அடிதடி, ஹார்லிக்ஸ் சீப்பான பொருள் வாங்காதேனு காம்ப்ளான் சொல்ல, காம்ப்ளானிலே ஒண்ணுமே இல்லை, விலையும் அதிகம்னு ஹார்லிக்ஸ் சொல்ல, ஒரே பிரச்னைதான் போங்க! இந்த டவ் சோப்பு விளம்பரத்தைப் பார்த்தால் பாதி முகம் போதும்னு ஒரே பிரச்னை பண்ணறாங்க. பாதி முகத்தை அவங்க கிட்டக் கொடுத்துட்டு மீதி முகத்தை மட்டும் வச்சுட்டு என்ன செய்யறது?

சரி, ஏதோ நம்ம வீட்டிலேயாவது சண்டை இல்லாமல் இருக்கும்னு பார்த்தால், அங்கேயும் சண்டையாப் போச்சு போங்க, நேத்திக்கு! ஒரே கத்தி சண்டை தான்! நேத்துக் காலம்பர 4-30 மணிக்கு எழுந்தேன், திருவாதிரையாச்சேனு. கூடவே ம.பா.வும் எழுந்து வந்துட்டார். உடனேயே எனக்கு வயித்தைக் கலக்க ஆரம்பிச்சது. அதுக்கு ஏத்தாப் போல பல்லைத் தேய்ச்சதும், தேய்க்காததுமாய், வாக்வம் க்ளீனரை எடுத்துட்டு எனக்கு உதவி செய்கிறேன்கற பேரிலே கணினியைச் சுத்தம் பண்ண வந்துட்டார். எனக்கு வேலையே ஓடலை போங்க! முன்னே ஒரு தரம் நான் இல்லாதப்போ இப்படித் தான் சுத்தம் பண்ணி வயர்களை எல்லாம் மாத்திட்டு, கணினியிலே எதுவுமே எடுக்காமப் போய் அப்புறமா மெகானிக்கைக் கூப்பிட்டுச் சரி பண்ண வேண்டிப் போச்சு! அதனால் இந்த முறை முன்னெச்சரிக்கை முத்தம்மாவா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டுப் போய் நின்னுட்டேன். ஒருவழியா தர்ணா நடத்தி, போராட்டம் செய்து, ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறிவிப்புக் கொடுத்து, அவரை உட்கார வச்சேன்.

இது மட்டுமா?? புத்தகங்கள் எல்லாம் தாறுமாறாக் கிடக்குதே? அடுக்கி வைக்கிறேன்னு வேறே ஒரே பரிவு. நான் என்னமோ அடுக்கித் தான் வைக்கிறேன். அவர் கண்ணுக்கு அதெல்லாம் தாறுமாறாக் கிடக்குதுனு தெரியுது! அது தான் ஏன்னு புரியலை! :P அவ்வளவு தான். நான் பக்கம் பார்த்து அடையாளம் வச்சிருக்கிறதெல்லாம் ஷெல்புக்குப் போயிடும். அப்புறம் நான் தேடோ தேடுனு தேடவேண்டி இருக்கும். ஏற்கெனவே இந்த மாதிரிப் பலதடவை நடந்தாச்சு. சரிதான், இன்னிக்குச் சமையல், சாப்பாடு எதுவுமே நடக்காது போலிருக்கேனு நினைச்சுக்கிட்டேன். ஒருவழியா காபியைக் கொடுத்து அவரை உட்கார்த்தி வச்சுட்டேன். வேலையைக் கவனிச்சுட்டு, திருவாதிரைக் களியும், குழம்பும் பண்ணி முடிக்கும்போது எட்டு மணியாயிடுச்சு. ஸ்வாமி நைவேத்தியம் பண்ணிட்டு சாப்பிடக் கொடுத்தா, என்ன சொன்னார் தெரியுமா?? அவரோட சண்டை போட்டதிலே உப்பு, உறைப்பு, களிக்கு வெல்லம் எல்லாம் சரியா வந்திருக்காம். அதனாலே இனிமே தினமும் காலம்பர சீக்கிரமே எழுந்து வரப் போறாராம். இது எப்படி இருக்கு?

அக்கிரமமா இல்லை?

Saturday, January 3, 2009

திகிலூட்டும் அனுபவங்கள் தான் எப்போவுமே!

கல்யாணத்துக்காகக் கும்பகோணம் போனப்போ முதல்நாள் காலையிலேயே டிக்கெட் வாங்கிட்டுப் பின்னாடி சாயந்திரமாக் கோவிந்தபுரமும், திருவிசநல்லூரும் போனோம்னு ஏற்கெனவே எழுதி இருந்தேன் இல்லையா? மறுநாள் கல்யாணம் முடிந்ததுமே காலை ஆகாரம் சாப்பிட்டுட்டு, பக்கத்திலே உள்ள சக்ரபாணி கோயிலுக்குப் போகலாம் என்று கிளம்பினோம்.
சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில். கும்பகோணத்திலே வேறே எத்தனை மாடக் கோயில் இருக்குனு நினைவிலே இல்லை. அடிக்கடி போகிறதில்லை, கும்பகோணத்துக்கு மட்டும் அடிக்கடி போவோம், ஆனால் கும்பேஸ்வரர் கோயில் தவிர வேறே கோயிலுக்குப் போனதில்லை. கும்பேஸ்வரர் கோயிலே சமீப காலங்களில் தான் போறோம்.

சந்நிதிக்குள்ளே நுழைய இரு வாயில்கள் உண்டு. ஒன்று தட்சிணாயன வாயில். மற்றொன்று உத்தராயன வாயில். சூரியன் பயணம் செல்லும் திசைக்கேற்ப வாயில்கள். இதற்கு முக்கியக் காரணம் சூரியன் தினமும் வந்து சக்ரபாணியை வழிபட்டுச் செல்கின்றான் என்று தான். ஒருமுறை சூரியனுக்குக் கர்வம் வந்துவிட்டதாம், தான் தான் மிக மிக அதிக ஜோதி ஸ்வரூபமாய் இருக்கின்றோம் என. மகாவிஷ்ணுவோடு போட்டி போட, அவர் தன்னுடைய சக்கரத்தை ஏவ, அந்தச் சக்கரத்தின் ஒளியின் முன்னே சூரியனே மங்கிப் போக அவன் கர்வம் அடங்கிற்றாம். பின்னர் பரமாத்மாவின் பாதம் பணிந்த சூரியனை மன்னித்தாராம் மகாவிஷ்ணு. எனினும் தினமும் தான் உதித்ததும் அவரை வணங்காமல் இருப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்ட சூரியன் தட்சிணாயன காலங்களில் தென் பகுதி வாயில் வழியாகவும், உத்தராயன காலங்களில் வட பகுதி வாயில் வழியாகவும் வந்து தரிசித்துச் செல்வதாய் ஐதீகம். மற்ற வாயிலை அடைத்துவிடுவார்கள். ஒரு பக்க வாயில் மட்டுமே திறந்திருக்கும்.
உள்ளே போனால் எட்டுக் கைகளோடு திவ்ய தரிசனம் கிடைக்கும். தாயார் சுதர்சனவல்லி. சூரியனைத் தவிர, பிரம்மாவும், அக்னியும் கூட இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர். இங்கே மகாவிஷ்ணுவுக்கு நெற்றியில் மூன்றாவது கண் உண்டு. விஷ்ணுவே சக்கர உருவில் தோன்றி சூரியனின் கர்வத்தை அடக்கியதாயும், அதனால் மூன்று கண்கள் என்றும் சொல்கின்றனர். ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர் இந்தக் கோயிலின் சக்ரபாணிக்கு. கோயிலின் பெரும்பாலான கட்டிடங்கள் நாயக்கர் காலத்தில் ஆரம்பித்து, பதினேழாம் நூற்றாண்டு வரையில் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், முக்கியச் சந்நிதியானது பிற்காலச் சோழர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.

எத்தனை முறை சென்றாலும் கோயிலின் அமைப்பும், தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியும், முன்னோர்களின் கட்டிடக் கலை அமைப்பும் கண்ணையும், கருத்தையும், மனதையும் கவரும். இந்தக் கோயிலுக்குப் போயிட்டு, கும்பேஸ்வரரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, கல்சட்டி வாங்கிக் கொண்டு, பின்னர் அறைக்குத் திரும்பி சாமானெல்லாம் கட்டி வைச்சுட்டு, சத்திரத்தில் போய்ச் சாப்பிட்டுவிட்டுச் சொல்லிக் கொண்டு, பஸ்ஸுக்குக் கிளம்பினோம். பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டோம். எங்களோடு அம்பத்தூரிலேயே இறங்க வேண்டிய வேறே ஒரு தம்பதிகளும் அதே பேருந்துக்குக் காத்திருந்தனர். ஆனால் பேருந்து வர நேரம் ஆச்சு. என்னடானு நினைச்சுக் கவலையோட உட்கார்ந்திருந்தால் கடைசியில் பேருந்தும் வந்தது. அதிலே ஏற்கெனவே பயணிகள் இருந்தனர். சரி, இறங்கப் போறாங்கனு நினைச்சா, இல்லையாமே! நாங்க முன்பதிவு செய்து வச்சிருந்த சீட்டெல்லாம் அவங்களோடது விட மாட்டேன்னு ஒரே தகராறு. என்ன செய்யறது?? ஒண்ணுமே புரியலை!