Friday, May 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞான சம்பந்தர்!

கொட்டும் மழையிலும் கைவிளக்கோடு ஞானசம்பந்தர் நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி வட்டமாக மழைத்துளி விழாமல் இறையருள் காத்து நின்றது. மழை நீர் கூட அவர் இருந்த பக்கம் வராமல் அஞ்சியதைப் போல் ஒதுங்கியே ஓடிற்று.  விடிய விடிய நின்று கொண்டிருந்தார் ஞானசம்பந்தர்.  மெல்ல மெல்லப் பொழுதும் விடிந்தது.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  ஆகையால் அவருக்கு மனைவி  இருந்தார்.  அவர் காலையில் எழுந்து வாசலைத் திறந்து விளக்கு ஏற்றிக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறந்தார்.  திறந்தவர் அதிர்ந்து போனார்.  ஞானசம்பந்தர் கைவிளக்கோடு நின்று கொண்டிருப்பதையும், கை விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்ததையும், மழை லேசாகத் தூறலாகப் போட்டுக் கொண்டிருந்ததையும், இரவில் நல்ல மழை பெய்திருப்பதற்கான அடையாளங்களையும் கண்டார்.   ஞானசம்பந்தரைப் பார்த்தார்.  அவர் நனையவில்லை என்பதையும் அந்த மழையிலும் விளக்கும் அணையவில்லை என்பதையும் கண்டார்.  வியந்தார். உடனே ஓடிச் சென்று தன் கணவரிடம் விஷயத்தைக் கூறினார்.  அப்போது தான் கமலை ஞானப் பிரகாசருக்கு முதல் நாள் இரவில் ஞானசம்பந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு வழி காட்டி வந்திருக்கும் விபரம் புரிந்தது.  வெளியே ஓடோடி வந்தார்.

பதறிப் போனார். விடிய விடிய இரவு முழுதும் இப்படி நிற்க வேண்டுமெனில் எவ்வளவு ஆழமான குரு பக்தி இருக்க வேண்டும். இதை நினைத்து இப்படியும் ஒரு சீடனா தமக்கு என எண்ணி ஒரு பக்கம் ஆனந்தம் அடைந்தார்.  கண்களில் கண்ணீர் பெருகியது.  இப்படியும் ஒரு சீடனா எனக்கு என அவரை ஆரத் தழுவிக் கண்ணீர் சொரிந்தார்.  “அன்பரே, நீர் சீடராயிருக்கும் நிலையைக் கடந்து விட்டீர்.  உம்மைப் போன்ற சீடன் எனக்குக் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேனோ! நீர் இனி ஆசாரியராக இருக்கும் தகுதியைப் பெற்று விட்டீர்கள்.  நீர் சாதாரணமான ஞானசம்பந்தனும் இல்லை.  குரு ஞானசம்பந்தர்.  தகுந்த இடத்தில் சென்று இரும்.  உம்மைத் தேடி வரும் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு சிவஞானப் பொருளை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவீராக.  சைவ சமயப் பரிபாலனமும் உம்மால் நடைபெறட்டும்.” என ஆசிர்வாதம் அளித்து அவரைத் தனியாகப் போய் ஆசாரியராக இருக்கும்படி கட்டளையும் இட்டார்.

ஆனால் குருஞானசம்பந்தருக்கோ தன் குருவை விட்டுப் பிரிய மனமில்லை.  மனம் வருந்தி குருவானவர் எப்படி இவ்வாறு சொல்லலாயிற்று என்பதை ஒரு பாடல் மூலம் உணர்த்தினார்.  “கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்
சினக்கும் கமலையுள் ஞானப் பிரகாச சிதம்பர, இன்று
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே.”
இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த கமலை ஞானப் பிரகாசர், குரு ஞானசம்பந்தரைத் தேற்றினார். அண்மையில் காவிரிக்கரையில் தெற்குப்பக்கம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று அங்கே மடம் அமைக்கக் கூறினார்.  வில்வாரண்யம் யமன் வழிபட்டுப் பேறு பெற்றதால் தருமபுரம் என்ற பெயரிலும் அழைக்கப் படும் எனவும் கூறி அங்கே சென்றிருந்து மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்க்குமாறு கட்டளையிட்டார்.  தன்னை வாரந்தோறும் வந்து தரிசிக்கலாம் எனவும் கூறி ஆறுதல் சொன்னார்.

அதன்படி குருஞானசம்பந்தர் திருவாரூரினின்று கிளம்பி மயிலாடுதுறை வந்து தருமபுரத்தை அடைந்தார்.  தருமபுரீசுவரரையும், அபயாம்பிகையையும் வணங்கித் தாம் தங்க ஒரு மடமும், அதில் தாம் அன்றாடம் வணங்கும் சொக்கலிங்கத்திற்கு ஒரு கோயிலும் அமைத்தார்.  அதுகாறும் தருமபுரீஸ்வரர் கோயிலை நிர்வகித்த நிர்வாகிகளான முனிவர்கள் இவரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்துவிட்டு ஓய்வும், தவம் செய்யவும் வேண்டித் தென்னாடு சென்றனர். குருஞானசம்பந்தர் நிலையாகத் தருமபுரத்திலேயே தங்கினார்.  வாரந்தோறும் ஆரூர் சென்று குருவையும், ஆரூர்த் தியாகேசனையும் வணங்கி வந்தார்.  குருஞானசம்பந்தரின் ஞானமும், அறிவும் நாலாதிசையிலும் பரவலாயிற்று.  சீடர் பலர் வந்து அவரிடம் சரணடைந்தனர்.  தருமை ஆதீனம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

சிதம்பர வழிபாட்டிற்காக ஒரு முறை சிதம்பரம் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.  அப்போது இரவு, பகலாக நிட்டையில் இருந்த இவருக்கு சிவகாமி அம்மை அர்த்த ஜாமப் பள்ளியறைப் பிரசாதங்களைக் கொடுத்து அருளினார்.  இவர் காலத்தில் வில்வாரண்யத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாக வரலாறு சொல்கிறது.  இதை தருமை ஆதீனத்தின் முத்திரைச் சின்னத்தில் ஓவியமாகக் காண முடிகிறது.  குரு ஞானசம்பந்தர் அருளிய  நூல்களாவன:

1.சொக்கநாதக் கலித்துறை
2. சொக்கநாத வெண்பா
2. சிவபோத சாரம்
4. பண்டாரக் கலித்துறை என்னும் ஞானப் பிரகாச மாலை
5. நவரத்ன மாலை
6. சோடசகலாப் பிராசாத சட்கம்
7. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
8. முத்தி நிச்சயம்.

இவற்றை ‘குரு ஞானசம்பந்தர் அட்டகம்” என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  இதைத் தவிர ஞானாவரண விளக்கம், சிவபூசா பத்ததி போன்ற நூல்களையும் இவர் இயற்றி இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து, மதுரையில் சொக்கநாதரின் திருவருளைப் பெற்று, திருவாரூரில் குரு கமலை ஞானப் பிரகாசரின் மூலம் குருவருள் பெற்று, மயிலாடுதுறைக்கருகே தருமபுரத்தில் தாமே குருவாய் அமர்ந்த குருஞானசம்பந்தர் விரைவில் தமது முத்திப்பேற்றுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார்.  தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கவும் ஆதீனத்தில் ஆட்சி புரியும், தம் மாணாக்கர்களில் சிறந்தவரான ஆனந்த பரவசர் என்பாருக்கு ஞான உபதேசம் செய்து ஆசாரியத் தலைமையை நல்கித் தாம் புதிதாய்க் கட்டிய ஞானபுரீசுவரர் கோயிலில் சிவலிங்கப் பெருமான் திருவடி நிழலில் நிட்டையில் ஆழ்ந்து முத்தி அடைந்தார்.

தேவாரம் தளத்தின் உதவியோடு எழுதப் பட்டது.

Tuesday, May 22, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!

ஆனால் இறைவன் தன் அடியார்களை ஒரு போதும் கைவிட மாட்டான் அல்லவோ!  கமலை ஞானப் பிரகாசருக்கும், அன்றிரவு, ஈசன் கனவில் வந்து, “ஞானப் பிரகாசா, நம் அன்பன் ஞானசம்பந்தன் நின்னை நாடி வருகின்றான்.  அவனுக்கு ஞானம் வழங்குவாயாக!” என்று கூறி மறைந்தார்.  ஆக குருவும் சீடனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  திருவாரூர் தியாகேசர் கோயிலின் உட்கோயிலான சித்தீசுவரத்தில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்து கொண்டு ஞானசம்பந்தரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  மதுரையிலிருந்து கிளம்பிய ஞானசம்பந்தர் திருவாரூரை அடைந்தார்.  முதலில் பெருமானை வழிபட வேண்டும் என எண்ணி அங்கு பெருமானை வழிபட்டு வலம் வரும் நேரத்தில் சித்தீசுவரத்தில் தமக்காக குருவானவர் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் காத்திருப்பதைக் கண்டு, குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

பின்னால் ஒரு ஆதீனத்தையே ஸ்தாபித்து குருமுதல்வராகப் போகும் தம் சீடனின் வரவுக்குக் காத்திருந்த குருவும் அவரை அங்கே வடக்கு நோக்கி அமரச் செய்தார்.  தாம் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவுக்கு முன்னிலையில் ஞானசம்பந்தருக்கு நயன, வாசக, ஸ்பரிச, அத்தமத்தகசையோக, திருவடி முதலான தீக்ஷைகளை வழங்கி ஞானோபதேசம் செய்து ஆட்கொண்டார்.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  குருஞான சம்பந்தரோ இளம் துறவி.  இருவருமாகத் திருவாரூரில் தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தனர்.  குருவின் அருகேயே இருந்து சேவைகள் செய்தும், பாடங்கள் கேட்டும், கற்றும் பல விதங்களில் தம் ஞானத்தை மேம்படுத்திக் கொண்டார் குரு ஞானசம்பந்தர்.  தினம் தினம் தியாகேசனின் அர்த்தஜாம வழிபாட்டை இருவருமாகச் சீடர்கள் புடை சூழச் சென்று கண்டு விட்டு வருவது வழக்கம். அவ்வாறே ஒரு நாள் அனைவரும் சென்று விட்டு கமலை ஞானப் பிரகாசரின் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

அன்றைய தினம் கைவிளக்கு எடுத்துக் கொண்டு கூட வரும் பணியாள் வரவில்லை.  அவனுக்குப் பதிலாக சீடர் ஞானசம்பந்தர் கைவிளக்கை எடுத்துக் கொண்டு குருவுக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு வந்தார்.  சிவதரிசனம் கண்ட பேரானந்த நிலையில் இருந்த ஞானப் பிரகாசர் தம் இல்லத்திலிருந்து கோயிலுக்குச் செல்கையிலோ, அல்லது திரும்பி இல்லம் செல்கையிலோ கை விளக்கு ஏந்தும் பணியாள் வரவில்லை;  அதற்குப் பதிலாக சீடன் குருஞானசம்பந்தர் கை விளக்கு ஏந்தி வருகிறார் என்பதை அறிந்தார் இல்லை.  ஆகவே கோயிலில் இருந்து இல்லத்திற்குத் திரும்பியதும், பணியாளை, “நில்” என்று சொல்லி அங்கேயே நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் வழக்கப்படி அன்றும், கை விளக்கு ஏந்தி வந்த ஞானசம்பந்தரை, “நில்” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.  பணியாள் தினமும் அதன் பின்னர் தன் வேலை முடிந்தது என விளக்கை சமாதானம் செய்துவிட்டு வீடு சென்றுவிடுவான்.  ஆனால் ஞானசம்பந்தரோ, “நில்” என குரு கூறியதைக் கட்டளையாகக் கொண்டு விடிய, விடிய அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

விளக்கில் இருந்த எண்ணெயெல்லாம் தீர்ந்து போயும் எண்ணெய் இல்லாமலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதோடு சோதனையாக அன்றிரவு பெருமழையும் பெய்தது.  கன மழை பெய்தும் ஞானசம்பந்தர் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே கை விளக்கோடு நின்று கொண்டிருந்தார்.  ஆஹா, என்ன ஆச்சரியம்!  ஞானசம்பந்தரின் மேல் மழைத்துளியும் படவில்லை.  அவர் உடல் மழையில் நனையவில்லை. விளக்கும் அணையவில்லை.  அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டாற்போல் அந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை.  அந்த இடத்து பூமியும் காய்ந்தே காணப்பட்டது.

Monday, May 21, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!


சைவ உலகில் இருந்த ஞானசம்பந்தர்களில், திருஞானசம்பந்தரை நன்கறிவோம். அடுத்து சந்தான குரவர்களில் ஒருவரான மறைஞான சம்பந்தரைப் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கப் போவது குருஞான சம்பந்தர் ஆவார். இவர் தருமை ஆதீன குரு முதல்வரும் கூட. இப்போது இவரைக் குறித்து அறிவோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்த காலம் அது. அங்கு கார்காத்த வெள்ளாளர் குலத்தில் சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும், மீனாக்ஷி அம்மையாருக்கும் ஒரு சோமவார நன்னாளில் அவர்களின் தவப் பயனாய் ஆண் மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் குழந்தை அந்த ஞானசம்பந்தனைப் போல் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி ஞானசம்பந்தன் என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை சீரும் சிறப்புமாக வளர்ந்தது. இயல்பாகவே மொழியில் பற்று மிகுந்திருந்ததால் வடமொழியும், தமிழும் நன்கு கற்றுத் தேர்ந்தார் ஞானசம்பந்தர்.



 இவருக்குப் பதினாறு வயது ஆகும் சமயம் பெற்றோர்கள் இவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாக்ஷியையும், சொக்கேசரையும் வழிபட வந்தனர். சில நாட்கள் மதுரையிலேயே தங்கி இருந்து ஆலயம் சென்று அம்மையையும், அப்பனையும் வழிபட்டு வந்தனர். பின்னர் பெற்றோர் ஊருக்குத் திரும்ப எண்ணினார்கள். மகனையும் உடன் அழைக்க, மகனோ மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல மறுத்துவிட்டார். மதுரையை மிகவும் பிடித்து விட்டதாயும், ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணி அம்மையையும் விட்டுப் பிரிய மனம் இல்லை எனவும் கூறிவிட்டுத் தந்தையோடும், தாயோடும் சொந்த ஊர் செல்ல மறுத்தார். திரும்பத் திரும்பப் பிடிவாதமாய் இவர் இப்படிச் சொல்லவும் பெற்றோர் சில காலம் விட்டுப் பிடிக்கலாம் என எண்ணிப் பையனை அங்கேயே விட்டு விட்டுச் சொந்த ஊர் திரும்பினார்கள்.



ஞானசம்பந்தர் தன் இருப்பைப் பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றிக் கொண்டார். தினந்தோறும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கேசரையும், மீனாக்ஷி அம்மையையும் வழிபட்டுவிட்டு. பொற்றாமரைக் குளக்கரையில் மற்றச் சிவனடியார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பரவசநிலையில் ஆழ்ந்திருக்க எண்ணினார். அதற்கு முதலில் சிவ வழிபாடு செய்ய வேண்டுமே. என் செய்வது? தம் விருப்பத்தைச் சொக்கேசனிடம் விண்ணப்பித்துக் கொண்டார். சில நாட்கள் சென்றன. தினம் தினம் சொக்கேசனிடம் சிவ வழிபாடு செய்ய ஒரு வழிகாட்டுமாறு விண்ணப்பிப்பதே அவரின் லட்சியமாயிற்று. ஒரு நாள் இரவு தூங்குகையில் கனவில் சொக்கேசன் தோன்றி, “ஞானசம்பந்தா, பொற்றாமரைக் குளத்தின் ஈசான்ய மூலையில் நீருக்கடியிலே ஒரு பெட்டகத்துள்ளே இலிங்க வடிவில் நாம் குடி இருக்கிறோம். நீ அதனை எடுத்து உனக்கேற்ற வழியில் வழிபடுவாயாக!” என்றார். உடனே கண் விழித்த ஞானசம்பந்தர் விடியும் வரை காத்திருந்து, விடியற்காலையில் பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று ஈசான்ய மூலையில் இறங்கி நீருக்குள்ளாக மூழ்கிப் பெட்டகத்தைத் தேடினார். சிறிது நேரத் தேடலிலேயே பெட்டகம் அவர் கைகளில் கிடைக்க, சொக்கேசன் சந்நிதிக்கு ஓடோடிச் சென்ற ஞான சம்பந்தர், மகிழ்வோடு அவரை வணங்கித் துதித்து, பெட்டகத்தினுள் இருந்த இலிங்க வடிவை, சொக்கலிங்கம் என்ற பெயரோடு தினந்தோறும் வழிபட்டு வரலானார்.

" கண்ணுக்கினிய பொருளாகி யேஎன் கரத்தில் வந்தாய்
 விண்ணும் பரவிடும் அற்புத மே என்ன விஞ்சையிதான்
 மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே
 நண்ணும்படி செய் மதுரா புரிச் சொக்க நாயகனே!’

 என்ற பாடல் குருஞானசம்பந்தரால் பாடப் பட்ட சொக்கநாதக் கலித்துறையின் பதினோரு பாடல்களில் முதற்பாடலாகும்.


 இந்த இலிங்க வடிவே இன்னுமும் தருமை ஆதீனத்தில் ஆன்ம பூஜா மூர்த்தியாய் எல்லா குருமகா சந்நிதானங்களாலும் வழிபடப் பெற்று வருகிறார். நம் ஞானசம்பந்தருக்கோ மூர்த்தி கிடைத்துவிட்டது எனச் சும்மா இருக்க இயலவில்லை. தமக்கு ஞானமும் கிட்ட வேண்டும் என எண்ணினார். ஞானம் பெறுவது என்பது ஒன்றும் சுலபமான ஒன்றில்லை. தக்க குருவின் மூலம் உபதேசங்கள் பெற வேண்டும். அதற்கான குரு யார்? எவர்? எங்கிருக்கிறார்? அனைத்திற்கும் வழிகாட்டிய சொக்கேசனே இதற்கும் வழிகாட்ட வேண்டும். மீண்டும் சொக்கனின் இறைஞ்சினார் ஞானசம்பந்தர். சொக்கேசனும் மனம் இரங்கி இவரது கனவில் தோன்றி. “ திருவாரூரில் ஞானப் பிரகாசன் என்றொரு பக்தன் இருக்கிறான். அவனுக்கு நாம் உபதேசித்தருளிய ஞானம் பரம்பரையாக வந்தது. நீ திருவாரூர் செல். ஞானப் பிரகாசனிடம் உபதேசம் பெறுவாய்! ஞான மார்க்கத்தை உனக்கு அவன் காட்டுவான்! “ என்று கூறினார். இவ்வாறு கனவு கண்ட ஞானசம்பந்தர் ஈசனின் அருள் தனக்குக் கிட்டியதை உணர்ந்து மகிழ்ந்து அங்கே சொக்கேசனிடம் விடை பெற்றுக் கொண்டு தியாகேசனைத் தரிசிக்கவும், ஞானோபதேசம் பெறவும் வேண்டி திருவாரூருக்குப் புறப்பட்டார். குரு ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் ஒரு பக்கம்.

Tuesday, April 3, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 3

துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவ்வூரில் பர்த்ருஹரி/பத்திரகிரியார் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரண்மனையில் செல்வம் மிகுந்திருந்தது; இது காட்டின் கொள்ளையர்களைக் கவர்ந்தது. அவர்கள் அரண்மனைக்குக் கொள்ளையடிக்கச் சென்றனர். செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர். அவ்விதமே கொள்ளை வெற்றியாய் முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் சந்நிதி முன் வீசிவிட்டுச் சென்றனர். அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது.

கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்க, காவலர்களோ, இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்; இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர். மன்னனும் விசாரிக்கப் பட்டினத்தார் எதுவும் சொல்லவில்லை. உடனே மன்னனுக்குக் கோபம் வந்து, “கள்வனைக் கழுவில் ஏற்றுக!” என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப் பட்டது, பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப் பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் மனம் தளராது, “விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது, இதை அறிந்த அரசன் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அரசனைக் கண்ட பட்டினத்தாருக்கு அவனும் ஞான வழியில் செல்லப் பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதும் தெரியவரவே அதை மன்னனுக்குச் சூசகமாக உணர்த்தினார். மன்னனும் மனைவியைச் சோதித்துப் பார்த்து அவள் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார். ராணியோ இறந்துவிடுகிறாள். அவள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து ராஜா பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார். தம்மைச் சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு சித்தர் வந்து பிக்ஷை கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை. அதோ இருக்கிறானே என் சீடன். சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கேளுங்கள்.” என்று கை காட்டி விடுகிறார்.

இதை அந்தச் சித்தர் வாயிலாக அறிந்த பத்திரகிரியார் ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது.” அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார் பத்திரகிரியார். அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது. அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார். பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்துவிட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் உன்னை நாடி வருவாள்.” என்று சொல்கிறார்.

அதன்படியே அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து வருந்தியதாலும் நாய்ப் பிறவி எடுத்ததாலும் காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள். பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர். காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள். தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள். திருவிடைமருதூர் குறித்துக் கூறி அங்கே ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள். மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான். பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்டார் பத்திரகிரியார். பத்திரகிரியாரோ சிவஞானத்தில் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டார். அவர் இது என்ன புதுத் தொல்லை என நினைத்த வண்ணம் தன் குருநாதரான பட்டினத்தாரைப் போய்ப் பார்த்து, “குருவே, இது என்ன?? நாய்க்குப் பிறவி ஞானம் வரலாமா? மங்கையாய்ப் பிறப்பெடுத்து வந்திருக்கிறதே, “ என வினவ, “இதுவும் ஈசன் செயல்,” என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண் மட்டுமில்லாமல் பத்திரகிரியாரும் சேர்ந்து மறைந்தார். இருவரும் சிவஞானப் பெரும் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்தார் சமூகத்தினரின் முக்கியமான கோயிலாகவும் விளங்கி வருகிறது.

திருவொற்றியூர்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2

திருவொற்றியூரில் பட்டினத்தார் பாடியதாகச் சொல்லப் படும் பாடல்கள். ஐந்தெழுத்தின் மகத்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. திருவொற்றியூரில் நடப்பவரின் பொற்பாதங்கள் நம் தலைமேற்படும்படி நன்கு உருண்டு கிடக்கவேண்டும் என்றும் கூறுகிறார், இது மேலோட்டமான பொருள். உட்பொருள் அறிந்தவர் சொல்ல வேண்டும்.

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 2

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.
அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!//
அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

Sunday, March 4, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் பகுதி 1

திருவேகம்ப விருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாயடியேனுமறிந்திலேன்
இன்னமெத்தனை யெத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சியேகம்பநாதனே

----பட்டினத்துப் பிள்ளையார்

இப்போது நாம் காணப்போவது பட்டினத்தார் பற்றி. பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் என அனைத்தும் ஒருவரையே குறிக்கிறது என்று சொல்கின்றனர். என்றாலும் ஒரு சிலர் பட்டினத்தார் என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவர் எனவும் அவர் பாடிய பாடல்களுக்கும், பட்டினத்தடிகள் பாடிய பாடலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு எனவும் கூறுகின்றனர். இந்த வேறுபாடு உடைய பாடல்கள் பின்னாட்களில் வேறு யாரேனும் பாடித் தொகுத்திருக்கலாம் என்றும் ஒரு கூற்று உள்ளது. மேலும் இவர் வரலாறும் இரு விதமாய்க் கூறப்படுகிறது. புனைவு என்பாரும் உண்டு. பட்டினத்தார் இயற்றிய பாடல்களிலும் பட்டினத்தடிகள் இயற்றிய பாடல்களிலும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டும் ஆய்வாளர்கள் இருவரும் ஒருவரே அல்ல எனச் சொல்கின்றனர். ஆனாலும் இப்போது நாம் பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மூவரையும் ஒருவர் எனக் கருதிக் கொண்டே இவரைக் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார். திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி மன்னர்களுக்குச் சமானமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார். மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான். ஆகவே திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார். உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். திருவெண்காடருக்கு சிவகலை என்னும் பெண்ணரசி மனைவியாக வாய்த்தாள். அவளுடன் நல்லறம் நடத்தி வந்தார். ஆனால் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தது. ஆகவே அங்கிருந்து திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார்.

அவ்வூரிலே சிவசருமர் என்னும் அந்தணர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். அன்றாட வாழ்க்கைக்கு உரிய பொருள் இல்லா நிலையில் இருந்த அவரிடம் ஈசன் கருணை கொண்டு தாம் ஒரு குழந்தையாக அவர் முன் தோன்றுவதாகவும், “மருதவாணன்” என்ற பெயரைத் தமக்கு இட்டுத் தம்மை காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து திருவிடைமருதூர் வந்திருக்கும் திருவெண்காடர் என்னும் வணிகரிடம் கொடுக்குமாறும், அதற்கு அவர் பொருள் தருவார்; அந்தப்பொருளை வைத்து வறுமையிலிருந்து மீளலாம் என்றும் கூறுகின்றார். அவ்வாறே ஒரு குழந்தையாக சிவசருமர் முன்னே தோன்ற, குழந்தையைக் கண்ட சிவசருமருக்கு அதைப் பிரிய மனம் இல்லை எனினும் வேறு வழியின்றித் திருவெண்காடரிடம் சென்று , ஈசனின் ஆணையைக் கூறிக் குழந்தையைக் கொடுக்கிறார். ஈசனின் ஆணை என்றதும் திருவெண்காடரும் குழந்தையை வாங்கிக் கொண்டு சிவசருமருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். குழந்தைக்கு மருதவாணர் என்ற பெயரையே நிலைத்திருக்குமாறு செய்து குழந்தையோடு காவிரிப் பட்டினம் திரும்புகிறார்.

மேற்சொன்ன வரலாறு வேறுவிதமாகவும் கூறப்படும். செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன். ஆனால் குபேரனாயிற்றே. செல்வத்துக்கு அதிபதி அல்லவா? ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன். திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர். ஒரே சகோதரி இருக்கிறாள். திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார். ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார். அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார். அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார். தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்கள் கடக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை.

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாததொரு வாழ்க்கையாக இருந்து வந்தது. சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

Sunday, February 19, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! சபாபதி நாவலர்! 2

பின்னர் இவர் திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார். அங்கே அப்போது பதினாறாம் பட்டம் மகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுபதேசம் பெற்று கிட்டத்தட்ட 12 வருடம் அங்கேயே இருந்து இலக்கணம், இலக்கியம், சித்தாந்தம், தத்துவம், வேதாந்தம் அனைத்தும் கற்று ஞான நூல்களையும் கற்றுத் தேர்ந்து மஹா சந்நிதானத்தின் அருளுபதேசத்தையும் பெற்றார். ஆதீனத்தின் வித்துவானாகவும் விளங்கினார். ஆதீனத்தினால் “நாவலர்” என்னும் பட்டமும் வழங்கப் பட்டு கெளரவிக்கப்பட்டார். மாதவச் சிவஞான யோகிகளின் திருக்கரத்தால் எழுதப் பட்ட சிவஞான மாபாடியத்தின் மூல ஓலைச்சுவடியை வேறு யாருக்குமே கொடுக்காத ஆதீனகர்த்தா சபாபதி நாவலரிடம் கொடுத்துப் படிக்கச் செய்யும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தார்.

சிதம்பர சபாநாத புராணம் தவிரவும் வடமொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த மற்ற நூல்களில் அப்பைய தீக்ஷிதரின் சிவகர்ணாம்ருதம், அரதத்தாசாரியாரின் சதுர்வேத தாற்பரிய சங்கிரஹம் ஆகிய மொழிபெயர்ப்புக்களையும் செய்தார். சிவகர்ணாம்ருதம் சிவபரத்துவத்தைப் பூர்வபக்கம், சித்தாந்தம் என இருபகுதிகளாய்ச் சொல்லப்பட்டுத் திருப்பனந்தாள் காசி மடத்து அதிபதியவர்களின் அருளாசியோடு 1885-ஆம் ஆண்டில் வெளி வந்தது. சதுர்வேத தாற்பரிய சங்கிரஹமோ முதல் இரண்டு பதிப்புக்கள் யாரால் வெளியிடப்பட்டன எனச் சொல்லமுடியவில்லை. ஆனால் மூன்றாம் பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1924-இல் வெளியிடப்பட்டதாக அறிகிறோம். அதோடு இந்நூலின் சிறப்பைப் பாராட்டியும், வடமொழியில் இருந்த இந்நூல் வடமொழி தெரிந்தோர்க்கே பயன்பட்டு வந்த நிலையில் சபாபதி நாவலர் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலின் பொருளைத் தெளிவான தமிழில் அழகுற விளக்கிப் பெரும் தொண்டாற்றி இருக்கிறார் சபாபதி நாவலர் எனக் கூறி இருப்பதாகவும் அறிகிறோம்.

மேற்கண்ட நூற்களைத் தவிர அப்பைய தீக்ஷிதரின் மேலும் இரு நூல்களான பாரத தாற்பரிய சங்கிரஹம், இராமாயண தாற்பரிய சங்கிரஹம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். ஈழத்தில் அந்நாட்களில் பெரிதும் செய்யப்பட்ட மதமாற்றத்தைக் கண்டிக்கும் வகையில் இயேசுமத சங்கற்ப நிராகரணம் என்னும் நூலையும் எழுதினார். இதைப் பாராட்டி திரு சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தம் சிறப்புப் பாயிரத்தில் கீழ்க்கண்ட வண்ணம் பாராட்டி உள்ளார்.

சைவமாகிய தாமரைத் தடமொளி தழைப்பப்
பொய்வரும் விவிலிய கயிரவம் பொலிவிழப்ப
மெய்வரும் புலவோ ரளிகூட்டுண விவனூல்
தெய்வஞா யிறொன் றெழுந்தெனத் திகழ்ந்ததையன்றோ.

இது யாழ்ப்பாணம் நல்லூரில் வெளியிடப் பட்டது. இலக்கண விளக்கச் சூறாவளிக்கு ஏற்பட்ட பழியை மறுத்து இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, வைதிக காவியங்களான ராமாயணம், பெரிய புராணம், தணிகைப் புராணம் போன்றவற்றை மறுத்துச் சிலர் பெரிதும் பாராட்டிய சிந்தாமணியை மறுத்து வைதிகக் காவியங்களின் மாட்சியை நிலைநாட்டும் வண்ணம் எழுதப் பட்டது வைதிக காவிய தூஷண மறுப்பு என்னும் நூல். மேலும் ஞானசூடாமணி, ஞானாமிர்தம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி, சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக் கோவை, வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை, நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம், வதிரிநகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம், புறவார்பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம், சிவஞானயோகிகள் குருபூசைமகோற்சவம், திராவிடப்பிரகாசிகை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.


திராவிடப் பிரகாசிகையின் சிறப்புப் பாயிரத்தில் சபாபதி நாவலர் அவர்கள்,

“தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், அதனிலக்கிய மரபினையும், சாத்திரமரபினையும், நல்லாசிரியர் வழிநின்று தெளிதரற்குரிய நற்றவ அறிவு மாட்சியுடையரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாம் தாம் அறிந்தவற்றால் முறை பிறழக் கொண்டு தமிழ்மொழியினும் பிறமொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம்பழித்தானும் அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதைநீரார் அவற்றினை மெய்யெனக் கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப்புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் தாரதம்மிய முறையினும் வரன்முறை போற்றாது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடுசூழதலானுந் தமிழுலகமற்றவற்றின் உண்மைதேறி உறுதிப்பயன் எய்துதற்பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கித் திராவிடப்பிரகாசிகை என்னும் பெயரினால் இவ்வசன கிரந்தம் இயற்றுவோமாயினோம்.”


என்று கூறியுள்ளார். இராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களால் கெளரவிக்கப்பட்ட சிலருள் சபாபதி நாவலரும் ஒருவர். சிதம்பரம் கோயிலின் குடமுழுக்குக்காகச் சிதம்பரம் சென்ற ராஜா சேதுபதி அவர்கள் நாவலரைக் கண்டும், அவரின் தமிழ்ப்பற்றையும், சைவப் பற்றையும் கண்டு வியந்து பாராட்டி அவரைத் தம்மோடு அழைத்துச் சென்றார். அங்கே தம் அரண்மனையில் சபாபதி நாவலரைத் தங்க வைத்து சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்.

நாவலரைத் தம்முடன் திரு உத்தரகோசமங்கை, திருச்செந்தில் , திருக்குற்றாலம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று அங்கெல்லாம் பெரியபுராணச் சொற்பொழிவுகளும், சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளும் செய்ய வைத்து மக்களும், அறிஞர் பெருமக்களும் நாவலரின் சொற்திறனையும், அறிவையும், கல்வியையும், ஞானத்தையும் வியந்து பாராட்டும்படி செய்தார். சேதுபதி மன்னர் நாவலரை “சைவ சிகாமணி” “பரசமய கோளரி” என்னும் பட்டப் பெயர்களால் அழைத்து மகிழ்ந்தார். நாவலரை அடிக்கடி தம் ஊருக்கு அழைத்துச் சொற்பொழிவுகள் செய்ய வைத்துப் பரிசில்களை அளிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். ஓர் முறை இரண்டாயிரம் வெண்பொற்காசுகளை அவருக்குப் பரிசாக அளித்ததோடு அல்லாமல், மேலும் உதவியும் செய்வதாக வாக்களித்தார்.

சேதுபதி மன்னர் அளித்த பரிசோடு சென்னை வந்த நாவலர், “சித்தாந்த வித்தியாநு பாலன சாலை” என்னும் பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவினார். அதன் மூலம் “ஞானாமிர்தம்” என்னும் செந்தமிழ்ச் செய்தித் தாளை வெளியிட்டார். “சுதேச வர்த்தமானி” என்னும் பத்திரிகையும் வெளியிட்டார். இவரின் ஞானாமிர்தத்தைப் பாராட்டி அக்காலம் வெளிவந்து கொண்டிருந்த,”பிரம்ம வித்யா” என்னும் பத்திரிகைத் தலைவர் சபாபதி நாவலரைத் திருப்பாற்கடலாக வர்ணித்து, அத்தகைய திருப்பாற்கடலில் பிறந்த ஞானாமிர்தம் புத்தி என்னும் மந்தரத்தால் கடையப்பட்டு வெளிவருவதாய்ப் பாராட்டியுள்ளார். சிலகாலம் அந்தச் செய்தித் தாள் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் சபாபதி நாவலர் மயிலையில் தங்கி இருந்து கபாலீஸ்வரர் கோயிலில் மண்டபத்திலும், திருவள்ளுவ நாயனார் கோயிலிலும் சொற்பொழிவுகள் செய்து வந்தார். இவ்வாறு சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய சபாபதி நாவலர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு தமது 58-ஆம் வயதில் சிதம்பரம் சென்று தில்லையெம்பெருமானைத் தரிசிக்கச் சென்றவர் தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார்.

தம் நண்பர்களான சிவப்பிரகாச பண்டிதர், பொன்னம்பலப் பிள்ளை, சாமிநாதப் பண்டிதர் ஆகியோரை அழைத்துத் தேவாரப் பாடல்களின் பொருளுரைக்கச் சொல்லிக் கேட்டவண்ணம் தம் இன்னுயிரை நீத்தார்.

நீண்டுயர் சோலை வடகோவை நற்பதி மேவுதமிழ்
மாண்புடைச் சைவன் சபாபதி நாவலன் வான்சிறப்ப
ஆண்டுயர் சோபகிரு தானிமாத மமரபக்கம்
வேண்டிய பஞ்சமி வான்பதம் புக்கான் விருந்துகந்தே.


நாவலரிடத்தில் மாணவர் பலர் வந்து கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். அவர்களுள்,

சிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார்,
விழுப்புரம் இராமசாமி பிள்ளை,
மாகறல் கார்த்திகேய முதலியார்,
மயிலை சு. சிங்காரவேலு முதலியார்,
மாவை விசுவநாத பிள்ளை,
சிதம்பரம் சிவராமச் செட்டியார்,
திருமயிலை பாலசுந்தர முதலியார்,
கழிபுரம் சிப்பிரகாச பண்டிதர்

முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்

நண்பர்களுக்கு,

நான் எழுதி வரும் இந்தத் தொடர்களின் குறிப்புகளுக்கு உதவிய நூல்களைக் குறித்துக் குறிப்பிட்டதில்லை. திரு இன்னம்புரார் அவர்கள் நினைவூட்டினார். ஆகவே கீழே தகவல்கள் கொடுத்திருக்கிறேன். இதுவரை குறிப்பிடாமைக்கு மிகவும் மன்னிக்கவும்.


பொதுவாய்த் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் படித்துக் குறிப்புகள் எடுத்தவையே. பெயரைக் குறிப்பிட்டு கூகிளில் தேடும்போது உதவிக்கு வருவது விக்கிபீடியா தான். விக்கியே தகவல்கள் கொடுக்கின்றன. கோபாலகிருஷ்ண பாரதியார், மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா. போன்றவற்றிற்கு தெய்வத்தின் குரலில் கிடைத்த சில விஷயங்கள். எந்த பாகம்னு நினைவில் இல்லை. அதுவும் காமகோடி தளத்தில் இணையத்திலேயே கிடைக்கிறது. குறிப்பிடக் கூடாது என்றில்லை. தோன்றவில்லை. :((((இனிமேல் குறிப்பிடுகிறேன். மிகவும் மன்னிக்கவும். ஆனால் படித்த நினைவுகளிலேயே சிலவற்றை எழுதுவதால் எதில் படித்தேன் எனச் சொல்ல முடியவில்லை. :(((((

மெய்கண்டார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் போன்றோரைக் குறித்தெல்லாம் நான் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையிலேயே தகவல்கள் சேகரித்தேன். எங்கள் கட்டளை தீக்ஷிதர்கள் உதவினார்கள். அதைச் சிதம்பர ரகசியம் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். மன்னியுங்கள். சபாபதி நாவலர் குறித்த குறிப்புகளுக்குப் பெரும்பாலும் "நூலகம்" தளத்தின் குறிப்புக்கள் உதவின.