Saturday, September 5, 2009

காஞ்சிபுரம் பட்டுப் புடவை கட்டி இருக்கீங்களா?

நேத்திக்கு ஜிமெயில் ஒரே தகராறு பண்ணிட்டு இருந்தது. வலைப்பூக்களைப் பார்க்கலாம்னா அதுவும் சரியா வரலை. சரினு மனசைத் தேத்திட்டு, தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்தேன். புத்தகம் படிக்கிறதுக்கு என்னமோ தோணலை. ஒவ்வொரு தொலைக்காட்சி சானல் நிகழ்ச்சிகளையும் பார்த்தப்போ, விஜய்(?) சானலில் ஏதோ நல்ல படம் மாதிரித் தெரிஞ்சது. பிரகாஷ்ராஜ் நடிச்சுட்டு இருந்தார். நான் பார்க்கும்போது, படம் ஏற்கெனவே ஆரம்பிச்சுடுத்து. வழக்கம்போல் நான் படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் கழிச்சே பார்க்க ஆரம்பிச்சேன். நல்லெண்ணெய் சித்ரா அரிசி புடைச்சுட்டு இருந்தார். பிரகாஷ் ராஜுக்கு மனைவியா, அக்காவா? யோசிக்கிறதுக்குள்ளே, சித்ராவே நாலு நாளா புருஷனைக் காணோம்னு வருத்தப் பட்டுட்டு இருந்தார் பிரகாஷ் ராஜ் கிட்டே. அவரைச் சமாதானம் செய்துட்டே பிரகாஷ் ராஜ் அன்னம் எங்கேனு கேட்கிறார். என்ன படம்னு யோசனை? படம் கறுப்பு, வெள்ளை, ஆனால் நடிகர்கள் இப்போதையவர்கள். வீடாக நடிச்சிருந்தது ஒரு குடிசை. மிகப் பழசு. உண்மையான ஒரு குடிசையோனு நினைக்கிறேன். பார்த்தால் செட் மாதிரித் தோணலை. அப்படி செட்டாக இருந்தால் ஆர்ட் டைரக்டரைத் தான் பாராட்டணும்.

உள்ளே சமீரா ரெட்டி, அப்பாடி, இவங்க தான் சமீரா ரெட்டியா? இப்படி ஒரு வேஷத்தில் நடிக்க, அதுவும் பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக நடிக்க நிச்சயம் துணிச்சல் அதிகம் தான் இவங்களுக்கு. கண்கள் பேசுது இவங்களுக்கு. திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு அப்புறமாத் தன் வேலையிலேயே கவனமாய் இருக்காங்க. என்ன சமையல் வேலைதான். விறகு அடுப்பு. ஊதுகுழல் வச்சு ஊதினாங்க. இந்தப் படம் கதைக்களத்தின் நிகழ்வு சுதந்திரத்துக்கு முன்னால், இரண்டாம் உலகப் போர் சமயம்னு அப்புறமாத் தெரிஞ்சது. ஆனாலும் இந்த விறகு அடுப்பு இன்னமும் நம் நாட்டில் இருக்கத் தான் செய்யுது. எனக்கு என் புக்ககத்தில் நானும் விறகு அடுப்பை ஊதியது எல்லாம் நினைவில் வந்தது. சிலசமயம் ஊதுகிற ஊதலில் அடுப்பு எரியுதோ இல்லையோ, அடுப்பின் சாம்பல் எல்லாம் உள்ளே போயிடும். இருமல் வந்துடும். இவங்க எப்படி டூப்பா போட்டிருக்காங்கனு பார்த்தா இல்லை. கோபம் அவங்களுக்குக் கணவனான பிரகாஷ் ராஜ் கிட்டே. குழந்தை ஒண்ணு பிறந்திருக்கு. பெண் குழந்தை. தூளியில் தூங்கிட்டு இருந்தது. குழந்தையைப் பார்த்துக் கணவன் ஆன பிரகாஷ் ராஜ் மனைவியோடு பேச்சைத் துவங்க எண்ண,அவரோ கோபத்துடனேயே பேசாமல் இருக்கிறார். என்ன சண்டை, எதுக்கு, ஏன், எப்படினு புரியலை. முந்தைய சீனின் தொடர்ச்சியோ? யோசிக்கிறதுக்குள்ளே பிரகாஷ் ராஜ் அவரைச் சமாதானம் செய்யும் விதமாய் அவரை அழைத்துக் கொண்டு போய் வீட்டின் ஒரு மூலையில் புதைத்து வைத்திருந்த ஒரு உண்டியலைக் காட்டுகிறார். அதைக் குலுக்கிக் காட்டுகிறார். மனைவிக்குக் கொடுக்கவெனப் பட்டுச்சேலை நெய்ய ஆரம்பித்து அதில் பணம் சேர்ப்பதாகவும்,முடியாததால் பெண் பெரியவளாய் ஆகும்போது அவளுக்குக் கல்யாணத்திற்கு இதில் ஒரு பட்டுச் சேலை கூட எடுக்க முடியும் என்றும் சொல்கிறார். மனைவியின் கையில் ஒரு நாணயத்தைக் கொடுத்து (எத்தனை ரூபாய் நாணயம் அது? தெரியலை) உண்டியலில் போடச் சொல்லி உன்னிடம் மிஞ்சும் பணத்தை நீயும் சேமித்து வை. நம் பெண்ணுக்காக என்று சொல்கிறார்.

அப்புறம் தான் புரிகிறது இது காஞ்சீபுரம் என்னும் நெசவாளர்களின் நிலைமை பற்றிய படம் என்று. பிரகாஷ் ராஜ் ஒரு முதலாளியிடம் நெசவாளராக இருக்கிறார். அந்த முதலாளி பல தறிகள் வைத்துள்ளார். அதில் பல நெசவாளிகளை வேலைக்கு வைத்துப் பிழியப் பிழிய வேலை வாங்குகிறார். நெசவு செய்யும் இடம் ஏதோ பழைய கோயில் பிரஹாரமாய் இருக்கிறது. ஆட்களை நன்கு சோதனை போடுகிறார். வேலை முடிந்து போகும்போது அவங்க ஏதாவது பட்டு நூலோ, அல்லது ஜரிகையோ எடுத்துப் போகாவண்ணம் சோதனை போடப் பட்டு அனுப்பப் படுகின்றனர். அப்படியும் பிரகாஷ் ராஜ் தன் வாயில் நூல் பத்தையை அடைத்துக் கொள்கின்றார். வாய் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு அடைத்து எடுத்து வருகிறார் வீட்டுக்கு. யாரானும் ஏதானும் பேசினால் பதில் இல்லை. தலையாட்டல் தான். எப்படியோ தப்பிவிடுகிறார். அந்த நூல்களை மீண்டும் சுத்தம் செய்து, தன் வீட்டிலேயே பின் பக்கமாய்க் கொஞ்சம் தள்ளி இருக்கும் தன்னுடைய சொந்தத் தறியில் அந்த நூல்களை வைத்து ஒரு புடவை நெய்கின்றார். ஆனால் இந்த விஷயம் மனைவிக்கும், தங்கைக்கும் தெரியாமல் பாதுகாத்து வருகின்றார். மனைவியிடமும், தங்கையிடமும் அந்த இடத்தில் பாம்புகளும், பூரான்களும் நெளிவதாகவும் அங்கே போகவேண்டாம் எனவும் பயமுறுத்தி வைக்கின்றார். மெள்ள மெள்ள நீலமும், சிவப்பும், மஞ்சளும் கலந்து ஓர் அழகான கொடி போன்ற டிசைனில் சேலை உருவாக ஆரம்பிக்கிறது.

அப்போது ஒருநாள் எப்படியோ தங்கையின் கணவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிவர, அவரோ தன் கையில் பணம் இல்லை எனவும், அதனால் குடித்தனம் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட்டு, வேண்டுமானால் பிரகாஷ்ராஜ் முடிந்தால் உதவி செய்தால் தங்கையை அழைத்துச் செல்வதாய்ச் சொல்கின்றார். முதலில் பேசாமல் இருக்கும் பிரகாஷ்ராஜ் அவர் திரும்பிப் போவதில் உறுதி காட்டவும், வேறு வழி இல்லாமல் தன் உண்டியலை எடுத்து உடைக்கிறார். அவர் மனைவியின் மனம் உடைகிறது. எனக்குள்ளே மறுபடியும் ஃபளாஷ் பாக் ஓடுகிறது. இதே மாதிரி ஒரு தேவைக்காக நாங்களும் குழந்தைகளின் உண்டியலை உடைச்சோம். நாங்க உடைச்சது ப்ளாஸ்டிக் உண்டியல், இது பழங்காலத்து மண் உண்டியல். மற்றபடி தேவை ஒன்றுதான். )) என்ன நடக்கப் போகிறதோ என நினைக்க, மனைவி ஒண்ணுமே சொல்லலை. உண்டியலை உடைச்சது சரிதான் எனப்புரிந்து விடுகிறது அவளுக்கும்.  அப்புறம் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகின்றாள்.

ஊருக்கு முதல்முதலாய் மோட்டார் வண்டி வருகிறது. முதலாளியே வாங்கி இருப்பதால் அதை ஓட்டி வரும்போது பார்க்க ஊரே செல்கிறது. அங்கே வண்டியைப் பார்த்த சந்தோஷத்தில் கூட்டம் ஓட்டமாய் ஓட, பிரகாஷ் ராஜ் தன் மகளுக்கு வேடிக்கை காட்டும் மும்முரத்தில் இருக்க, மனைவியோ கூட்டம் தள்ளிவிட்டதில் கீழே விழுந்துவிடுகிறாள். எழுந்திருக்க முயன்றாலும் கூட்டம் மேன்மேலும் வந்து அவளைக் கீழேயே தள்ளிவிடுகிறது. அனைவரும் அவளை மிதித்துத் துவைக்கின்றனர். மயக்கம் ஆனவளைத் தூக்கி வந்து நாட்டு வைத்தியம் செய்கின்றனர். ஓரளவு சுமாராகிறது என்றாலும் வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கிறது. தன் தோழன் ஆன ஒருவருடன் நெருங்கிப் பழகும் பிரகாஷ் ராஜ் அவன் மகனோடு தன் மகளையும் நன்கு பழக விடுகின்றான். இது நாளாவட்டத்தில் காதலாய் மாறுகின்றது. ஆனால் இது தெரியும் முன்னரேயே தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறாள். மனைவியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தன்னுடைய சொந்தத் தறியில் கொஞ்சம் கொஞ்சமாய்த் தயாராகும் சேலையைக் காட்டுகின்றார். இது மகளுக்குத் திருமணத்திற்கு எனச் சொல்லவும் மன நிறைவோடு(?) மனைவி இறந்துவிடுகிறாள்.

பெண்ணின் காதல் அப்பாவுக்குத் தெரிகிறது. ஆனால் பையனோ உலகமகா யுத்தம் நடப்பதால் யுத்தகளத்தில். பையன் இல்லாமலேயே அவனின் சம்மதத்துடன் இங்கே திருமண நிச்சயம் நடக்கின்றது. பெண்ணுக்குச் சீராகப் பட்டுச்சேலை கட்டி அனுப்புவதாய் வாக்குக் கொடுக்கின்றார் பிரகாஷ்ராஜ். அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படி நடக்கும் என்று. இதன் நடுவில் கம்யூனிஸ்ட் ஒருவர் மறைந்து வாழவேண்டி அங்கே வருபவர் நெசவாளர்களை முதலாளிக்கு எதிராய்த் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தச் சொல்ல, இரு முறை கொடுத்த கோரிக்கைகளை முதலாளி நிராகரிக்க வேலை நிறுத்தம் தொடருகிறது. மூன்று மாதங்கள் ஆகியும் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை. இதற்குள் யுத்தகளத்தில் இருந்து 20 நாட்கள் விடுமுறையில் பையன் வர, பையனின் அப்பாவும், பிரகாஷ்ராஜின் தோழருமானவர் திருமணத்திற்கு அவசரப் படுத்துகின்றார். பிரகாஷ்ராஜ் கொஞ்சம் அவகாசம் கேட்டும் பையன் ஒத்துக்கவே இல்லை. விடுமுறை கழிந்து சென்றால் வர ஒருவருஷமோ, இரண்டு வருஷமோ என்று சொல்லிவிட வேறு வழியில்லாமல், பிரகாஷ்ராஜ் தன் சக நெசவாளிகளில் சிலரை வேலை நிறுத்தத்தைக் கைவிடச் செய்து தானும் வேலைக்குப் போகின்றார்.

வேலைக்குப் போனால் தானே பட்டு நூல் கிடைக்கும். தன் மகளுக்குப் புடைவை நெய்யமுடியும்? ஆனால் அவரின் தோழருக்கு இது அதிர்ச்சியைத் தருகிறது. பிரகாஷ்ராஜ் முதலாளியிடம் பணம் வாங்கி இருப்பதாய்ச் சந்தேகம். சண்டை வலுக்க அவர் பிரகாஷ்ராஜைக் கேள்வி மேல் கேள்வி கேட்க, நூல்கண்டை வாயில் அடக்கிக் கொண்டு தப்ப நினைத்த பிரகாஷ்ராஜ் வாயிலிருந்து நூல்கண்டாய்க் கொட்ட மாட்டிக் கொள்கின்றார். அனைவரும் வேறுபாடு இல்லாமல் அடித்து நொறுக்க, பெண்ணை அவர் நண்பர் அழைத்துச் செல்கின்றார். பிரகாஷ்ராஜ் சிறைக்குச் செல்ல, நண்பர் பெண்ணுக்கு அவர் பையனோடு திருமணம் முடித்துவிடுவார். இதுக்கும் அதுக்கும் முடிச்சுப் போடமாட்டார்னு நான் நினைச்சிருக்க, திருமணம் நடக்கவில்லை. பெண் கிணற்றில் விழுந்து, முதுகுத் தண்டில் அடிபட்டு அசைய முடியாமல் கிடக்கிறாள். பரோலில் வெளிவருகின்றார் பிரகாஷ்ராஜ். வந்து பெண்ணுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுப் பின்னர் அரைப்பைத்தியம் ஆகிவிடுகின்றார். அந்த நிலைமையிலேயே மீண்டும் சிறைக்குச் செல்கின்றார். இது அவரோட நினைவலைகளில் வந்ததாய் எடுக்கப் பட்டிருக்கிறது என்று தெரிய வ்ருகின்றது. நாளை விமரிசனம்.

8 comments:

  1. \\நாளை விமரிசனம்.\\

    தலைவீஈஈஈஈஈஈஈஈஈ....அப்போ இது என்ன !!??

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. @திவா, என்ன ஆச்சு??? இவ்வளவு வருத்தம்? :))))))))))

    ReplyDelete
  3. @கோபி,
    ஹிஹிஹி, இது விமரிசனம் அப்படிங்கறீங்க??? ஓகே! அப்போ விட்டுடுவோம்! :)))))))))

    ReplyDelete
  4. I think this won him a National award. This film was premiered @ Toronto international film festival.I am not sure whether this is the same film that was also shown @ the Silk Screen Asian American Film Festval.
    அச்சா, இந்த வார பயணம் வீட்டு ஹாலுக்கா:))
    "அவர் காசு வாங்கிண்டு அழுதா, நாம காசு கொடுத்துட்டு அழுவோம்"- என் MIL சொல்லுவார்.:)))

    ReplyDelete
  5. @ஜெயஸ்ரீ, இப்போக் கொஞ்ச மாசங்களாவே பயணம் ஹாலோட முடிஞ்சுடுது! :)))))) அதானோ என்னமோ சென்னையைச் சுத்தி வந்துட்டு இருக்கோம்போல! :D
    அப்புறம் படத்துக்கெல்லாம் அழறதில்லை. காசு கொடுத்துப் படம் பார்த்தும் 20 வருஷத்துக்கு மேலே ஆச்சு. காசு கொடுத்துச் சென்னையிலே கடைசியாப் பார்த்தது மை டியர் குட்டிச் சாத்தானும், புரந்தரதாஸரும். அதுக்கப்புறம் ஆர்மி தியேட்டரில் பார்த்திருக்கோம்னாலும் எங்களுக்கெல்லாம் 1-50ரூக்கு மேல் வாங்கினதில்லை. ஸோ சினிமாவுக்கு நோ செலவு! :)))))))

    ReplyDelete
  6. Achcha!! vijay TV yum Cable tv thane athu kaasu illaiya Mrs Shivam?
    Purantharadasar tamizh movie aa? Paakaren.

    ReplyDelete
  7. ஹிஹிஹி ஜெயஸ்ரீ, அ.வ.சி. கேபிளுக்குக் கொடுக்கிறதைச் சொல்றீங்களா?? எங்க ஏரியாவிலே இன்னும் 100ரூ தான் வாங்கறாங்க கேபிள்காரங்க. இப்போதைக்கு விலை ஏறாமல் அது ஒண்ணுதான் இருக்கு. அதுக்கும் கண் பட்டுடப் போறது.
    புரந்தரதாஸர் தமிழ்ப்படம் தான், ஆனால் எண்பதுகளில் வந்தது, சின்னக் குழந்தைங்களா நடிச்சது. ரொம்பப் பேருக்கு அந்தப் படம் பத்தித் தெரியலை, முழிக்கிறாங்க. யாரும் பார்த்திருக்க மாட்டாங்கனு சொல்ல சான்ஸே இல்லை. தி.நகர் கிருஷ்ணவேணியில் கூட்டம் தாங்காமல் சிறப்பு நுழைவுச் சீட்டு வாங்கி என்னை உள்ளே தள்ளினார் என்னுடைய sil's husband. அப்புறமா ஏன் யாருக்கும் தெரியலை??? குழப்பமா இருக்கு! :(

    ReplyDelete