Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

செயலற்றுப் போன கள்வர்கள் தங்கள் செயலுக்கு வருந்தி அடிகளாரிடம் மன்னிப்புக் கேட்டுத் தங்களை விடுவிக்கும்படி இறைஞ்ச, பெருமானும் மனமிரங்கி அவர்களை விடுவித்தார். வண்டியோடு அடிகளைச் சுற்றி வந்து நிலத்தில் விழுந்து வணங்கிய இருவரும் இனி திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு உழைத்துப் பிழைப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் ஓடிய சேவகனும் நடந்ததை எல்லாம் பார்த்துவிட்டு அடிகளின் பெருமையை அறிந்து கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.”



வேலாயுத முதலியார் தொடர்ந்து சென்னையில் இருக்கையிலும் இது போன்றதொரு சம்பவம் நடந்ததாய்க் கூறவே ஆறுமுக முதலியார் அது என்ன எனக் கேட்க, வேலாயுத முதலியார், “அப்போதெல்லாம் அடிகளின் காதில் கடுக்கன் போட்டிருந்தார். ஒரு நாள் தூங்குகையில் அடிகளின் ஒரு காதில் இருந்த கடுக்கனைக் கழற்றினான் கள்வன். அடிகளோ தூங்கவில்லை; ஆனாலும் கள்வனுக்கு வசதியாகத் திரும்பிப் படுத்து மறு காதையும் காட்டவே அவன் இரண்டு கடுக்கன்களையும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதன் பின்னர் சுவாமிகள் கடுக்கனே அணியவில்லை என்று கூறினார். இருவரும் அடிகளின் வாழ்க்கையில் நடந்த இந்தத் திருவிளையாடல்களைக் குறித்து ஒருவருக்கொருவர் பேசிப் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது இருவரும் பேசுவதைக் கேட்ட வண்ணம் அடிகளாரே அங்கு வந்தார். அடிகளார் தம்மிடம் இருந்து திருடிச் சென்றதைத் தாம் பெரிய விஷயமாக நினைக்கவில்லை எனவும், தம்மை ஆண்டவன் அருள் காக்கும் எனவும் கூறினார். ஆனால் மிகவும் கடினமாக உழைத்துச் செல்வம் சேர்க்கும் மக்களிடமிருந்து இந்தக் கள்வர்கள் திருடிச் செல்வதைத் தான் தம்மால் தாங்க முடியவில்லை என்றும் கூறி வருந்தினார். அதை நினைத்தால் தம் உள்ளமும், உடலும் நடுக்குறுகிறது எனவும் கூறினார். அதைக் குறித்து ஒரு பாடலும் பாடினார்.

“இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த

இருப்பெல்லாம் கள்லர்கள் கூடிக்

கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்றெனது

காதிலே விழுந்தபோதெல்லாம்

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி

வெதுப்பல்போல் வெம்பினேன் எந்தாய்

உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்

டுளம் நடுக்குற்றான் பலகால்.”



சிலநாட்களில் சிதம்பர தரிசனத்திற்காகத் தில்லை சென்றார் அடிகளார். அங்கே நடராஜ மூர்த்தியின் சந்நிதியில் நின்று மெய்ம்மறந்து மனமுருகினார். ஈசனின் பேரருளை நினைத்து நினைத்து வியந்தார். தம்மை ஆட்கொண்ட விதத்தில் மனம் உருகினார். தம்மை இந்தச் சன்மார்க்க வழியில் செல்லுமாறு பணித்த இறைவனின் திருவிளையாடலை நினைத்து நினைத்து மனம் விம்மிப் பெருமிதமுற்றார். பல சமயங்கள், பல மதங்கள் என்று போராடி, வாதாடிக் களைப்புற்றுப் போர் செய்து ஏதும் அறியாமல் இறந்து வீணாகும் மக்களைத் தடுத்தாட்கொண்டு உண்மையை அறியச் செய்யவேண்டி தமக்கிட்ட பணியை நினைத்து ஆனந்தம் கொண்டார். தம்மைத் தன் பிள்ளை போல் கருதி இறைவன் இட்ட கட்டளையைத் தாம் சிரமேல் தாங்கி நடத்திச் செல்வதாகவும் உறுதி கொண்டார். சன்மார்க்க நெறியை, உண்மைப் பொருளை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய இறைவனின் அருளை வேண்டினார். இந்த நடராஜ மூர்த்தியின் கருணை இல்லாம் தாம் இவ்வாறு அரிய செயல்கள் செய்திருக்க முடியாது என்றுணர்ந்து உள்ளம் உருகி நடராஜ மூர்த்தியைப் போற்றிப் பாடினார்.

“உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன் ஆணை இதுநீ

என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்

என்ன செய்வேன் எங்குறுவேன் எவருக்குரைப்பேன் எந்தாய்

அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்

அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாதென்றே

இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்

இது தருணம் அருட்சோதி எனக்கு விரைந்தருளே”

என்று பாடினார். அருகே இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த சிவாசாரியார் ஒருவர், ஆஹா அற்புதமான மனதை மயக்கும் இனிய குரல். தாங்கள் தான் வள்ளல் பெருமான் எனத் தெரிகிறது. தங்கள் அருட்பாக்களைப் படித்திருக்கிறேன். நான்கு திருமுறைதான் தெரியும். இன்றுதான் இந்தத் தில்லை அம்பலத்திலே தங்கள் திருவாயால் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.” என மகிழ்ந்தார். அடிகளாரும் அவரை மரியாதை நிமித்தம் வணங்கினார். அந்த சிவாசாரியார் தமக்கு அருகிலுள்ள துக்குடி ஆடூர் என்னும் கிராமம் என்றும் தம் பெயர் சபாபதி சிவாசாரியார் எனவும் கூறி அறிமுகம் செய்து கொண்டார். தாமே அவரைச் சந்திக்க எண்ணம் கொண்டிருந்ததாய் அடிகளார் தெரிவிக்கவே சிவாசாரியாரும் தம்மைச் சந்திக்க விரும்பிதன் காரணத்தைக் கேட்டார்.


அப்போது அடிகளார் அவர் வேத ஆகமக் கடல் என்பதைத் தாம் அறிந்திருப்பதாய் சிவாசாரியாரின் பெருமையைப் போற்றிவிட்டுத் தம் தருமச் சாலைக்கு அருகே வடற்பெருவெளியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ஒன்றைத் தாம் ஏற்படுத்த வேண்டி ஆண்டவர் திருவருள் எனவும் அதற்கு ஆண்டவன் கட்டளை கிடைத்திருப்பதாயும் கூறினார். சிதம்பரம் எவ்வாறு பூர்வ ஞான சிதம்பரமாக இருக்குமோ அவ்வாறே தம் சத்திய ஞான சபை இருக்கப் போகும் வடலூர் உத்தர ஞான சிதம்பரமாக விளங்கும் எனவும் கூறினார். சத்திய தருமச்சாலை எவ்வாறு மக்களின் பசியைத் தீர்க்கிறதோ அவ்வாறே சத்திய ஞானசபை அருட்பெரும்சோதி, தனிப்பெரும் கருணையான ஈசனின் ஞான அருளைப் பெற்று அடியார்களை உய்விப்பதாகும். ஆகவே அந்தச் சத்திய ஞானசபையைத் தாம் ஏற்படுத்தப் போகும் காலம் சபாபதி சிவாசாரியாரின் சேவை தமக்குப் பயன்படும் எனவும் கூறினார். தாம் போய் சரியான தேதியைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவதாகவும் சிவாசாரியார் அவர்கள் வந்து பணி ஏற்றுத் தம்மைப் பெருமைப் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment