Saturday, December 24, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்---- அருள்நந்தி சிவம்

சந்தானக் குரவர் நால்வரில் அடுத்து அருள் நந்தி சிவம் என்பார் வருகிறார். இவர் மெய்கண்டாரின் சீடர் ஆவார். ஆனால் இவர்தான் மெய்கண்டாரின் பிறப்புக்கு முன்னர் அவர் பெற்றோருக்குக் கயிறு சாற்றிப் பார்த்தவர். இவர் கயிறு சாற்றிச் சொல்லியதன் பின்னரே மெய்கண்டார் பிறந்தார். ஆகவே இவர் மெய்கண்டாரை விட வயதில் மிகவும் மூத்தவர். எனினும் அவருக்குச் சீடர் ஆனார். இவரின் உண்மையான பெயர் எதுவென்று தெரியவில்லை. திருவெண்ணெய்நல்லூருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள திருத்துறையூர் என்னும் ஊரில் பிறந்தவர் எனத் தெரியவருகிறது. சிவாசாரியார் மரபினரான இவருக்கு ஆகமங்களில் மிகுந்த தேர்ச்சி உண்டு. அனைத்து ஆகமங்களிலும் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்ததால் சகலாகம பண்டிதர் என அழைக்கப்பட்டார். இவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறும் அளவுக்குச் சகல சாத்திரங்களையும் நன்கறிந்தவர். தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு வண்டியில் சாத்திரங்களைக் குறித்த ஏட்டுச் சுவடிகளை எடுத்துச் செல்வார்.

எல்லா ஏட்டுச்சுவடிகளையும் தம் கூடவே எடுத்துச் செல்லும் இவருக்குதாம் சொல்லி அதன் மூலம் பிறந்த சின்னஞ்சிறு குழந்தை இன்று மெய்கண்டார் என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலேயே குருவாகிப் பல சீடர்களோடு திகழ்வதைக் கேள்விப் பட்டார். திருவெண்ணெய் நல்லூர் சென்று அச்சுதகளப்பாளரையும் அவர் பெற்றெடுத்த குழந்தை மெய்கண்டாரையும் நேரில் கண்டு அவர்களின் அறிவையும், ஞானத்தையும் கண்டு ஆனந்திக்கவேண்டுமென்று எண்ணினார். திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்ற இவர் மெய்கண்டார் மாணவர் குழாத்துக்கு நடுவே ஆணவமலம் பற்றி உரை நிகழ்த்தக் கண்டார். உள்ளேயே செல்லாமல் வாயிலில் நின்றவாறு அதைக்கண்ட சகலாகம பண்டிதருக்குத் திடீரென ஆணவம் தலைக்கேறியது. நாம் சொல்லிப் பிறந்த இந்தக் குழந்தை, சின்னஞ்சிறு சிறுவன் இவனுக்கு அதற்குள் இத்தனை ஞானம், விவேகம் எல்லாம் வந்துவிட்டதா? ஆணவமலம் பற்றிப் பேசும் அளவுக்குத் தேர்ந்துவிட்டானா? ஆஹா, என்ன ஆணவம் இவனுக்கிருந்தால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு பாடம் நிகழ்த்துவான்! இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம், சகலாகம பண்டிதர் தாம் நின்ற இடத்தில் நின்றவாறே மெய்கண்டாரைப் பார்த்து, “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” என ஓங்கிய குரலில் கேட்டார்.

உரை நிகழ்த்திக்கொண்டிருந்த மெய்கண்டார் திரும்பினார். சகலாகம பண்டிதர் நின்றிருந்த கோலத்தைக் கண்டார். உடனேயே அவருக்கு விஷயம் விளங்கி விட்டது. வாயால் விடை கூறாமல் தம் கைகளைச் சுட்டி சகலாகம பண்டிதரையே காட்டினார். ஆணவமலத்தின் சொரூபம் சகலாகம பண்டிதரே என்பது புரியும்படிக்குத் தம் சுட்டு விரலால் பண்டிதரின் தலை முதல் கால்வரையும் விரலை ஆட்டிச் சுட்டிக் காட்டினார். சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிற்று. அவருக்குப் பரிபக்குவம் உண்டாகும் காலம் வந்துவிட்டது. உடனே மெய்கண்டாரின் வயதை நினையாமல் அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். மெய்கண்டாரும் அவரைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு அருள்நந்தி என்ற தீட்சாநாமத்தை அளித்தார். அன்றுமுதல் சகலாகம பண்டிதர் அருள் நந்தி ஆனார். ஏற்கெனவே இருந்த 48 மாணவர்களோடு அருள்நந்தி சிவத்தைச் சேர்த்து 49 ஆனது சீடர் குழாம். அருள்நந்தி நாளாவட்டத்தில் அருணந்தி என அழைக்கப்பட்டதோடு மெய்கண்டாரின் பிரதான சீடராகவும் ஆனார். மெய்கண்டாரை அடுத்து சந்தானகுரவரில் இரண்டாமவரும் ஆனார்.

வயதில் மூத்தவரானாலும் அருணந்தி சிவம் மெய்கண்டாருக்குப் பின்னர் ஆசாரியார் ஆனார். சைவ சித்தாந்தத்தை விளக்கிப் பாடம் சொல்லி வந்தார். மெய்கண்டாருடைய முதல் நூலான சிவஞான போதத்துக்குப் பாடம் சொல்லும் வழிநூலாக, “சிவஞான சித்தியார்”என்னும் நூலை எழுதினார். இது சாத்திர நூலாக மட்டுமின்றி, தோத்திர நூலாகவும், இலக்கிய நூலாகவும் இன்றளவும் விளங்கி வருகிறது.

காப்பு

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்,
உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்,
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே. 1

சிவஞான சித்தியாரின் காப்புச் செய்யுள் மேலே கொடுத்திருப்பது. இந்த சித்தியார் பரபக்க,, சுபக்கம் என்னும் இரு பாகங்களாகச் செய்யப்பட்டுள்ளது. இதிலே மேலே கொடுத்திருக்கும் செய்யுள் பரபக்கத்தில் காணப்படுவது. முதலில் வருவதும் பரபக்கமே. அதன் பின்னரே சுபக்கம். பரபக்கம் என்பது பிறர் பக்கத்தை அதாவது மற்ற சமயவாதிகளின் பக்கத்தை மறுத்து உரைப்பது. இது 301 பாடல்கள் கொண்ட தொகுதி. அடுத்து வரும் சுபக்கம் 328 பாடல்கள் கொண்டது. இந்த சுபக்கம் தம் பக்கமான சைவ சித்தாந்ததை விரித்துரைக்கிறது. இதிலே பாயிரம் மட்டும் 11 பாடல்கள் கொண்டதாய் விளங்குகிறது. இதிலே மெய்கண்டாருக்கு குரு துதியாக அருணந்தி சிவம் எழுதி இருக்கும் பாடல் குருவின் மேல் அவர் கொண்டிருக்கும் மதிப்பையும், மரியாதையும் எடுத்துக் கூறுவதோடு உள்ளத்தையும் தொடுகிறது.
மெய்கண்டதேவ நாயனார்

“பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்,
கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்,
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்,
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம். “
மேலும் இந்த நூலின் சிறப்பைப் பழைய செய்யுள் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழின் ஆறு சிறந்த நூல்கள் எனக் குறிப்பிடப் பட்டிருக்கும் அந்தச் செய்யுளில் சிவஞான சித்தியாரும் இடம் பெற்றிருக்கிறது.
வள்ளுவர் சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை—ஒன்றிய சீர்த்
தொண்டர்புராணம் தொகு சித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாம் தரம்.

திருவள்ளுவரின் திருக்குறள், மாணிக்கவாசகரின் திருவாசகம், தொல்காப்பியம், பரிமேலழகரின் திருக்குறள் உரை, திருத்தொண்டர் புராணம் என அழைக்கப்படும் பெரிய புராணம், சிவஞான சித்தியார் ஆகிய ஆறும் அவை. சித்தியார் தவிர இருபா இருபஃது என்னும் இன்னொரு நூலையும் எழுதிய அருணந்தி சிவம் மறைஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் திருத்துறையூரில் முக்தி அடைந்தார். இருபா இருபஃது நூலிலும் தம் ஆசிரியரை வாழ்த்திப் போற்றிப் பாடியுள்ளார் என்பதைக் கீழே உள்ள பாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

இவருடைய சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப் படுகிறது.

No comments:

Post a Comment