Tuesday, February 14, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! சபாபதி நாவலர்!

தமிழ் சமயத்தை வளர்த்ததா அல்லது சமயம் தமிழை வளர்த்ததா? என்பதை எவராலும் கூற இயலாது. அந்த அளவுக்கு இரண்டுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து உள்ளது. சமயச் சான்றோர்கள் செந்தமிழ்ப் பாமாலைகளால் இறைவனை வாழ்த்திப் பாடியதினால் தமிழில் பல அரிய பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முக்கியமாய் சைவமும், வைணவமும் தமிழுக்குச் செய்திருக்கும் பாமாலை அலங்காரங்கள் சொல்ல வேண்டியதில்லை. இது நம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சமய ஆன்றோர்களால் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கையிலும் அவ்வாறான தமிழறிஞர்களால் சமயமும் வளர்ந்துள்ளது; கூடவே தமிழ் இலக்கியத்திற்கும் அதன் மூலம் பல நூல்கள் கிடைத்திருக்கின்றன. அப்படிச் சைவ சமயத்துக்குத் தமிழால் தொண்டாற்றிய தமிழறிஞர்களில் சிலரை நாவலர் என்ற பட்டம் சூட்டி நம் சைவ மடங்களின் ஆதீனகர்த்தர்கள் சிறப்புச் செய்தார்கள். அத்தகைய நாவலர் பட்டம் பெற்றவர்களுள் ஆறுமுக நாவலரை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அவரின் அடியொற்றியே அவரைப் போல் தமிழுக்குத் தொண்டாற்றிய இன்னும் இருவர் அதே போல் ஆதீனங்களால் நாவலர் பட்டத்தால் கெளரவிக்கப் பட்டார்கள். அவர்கள் அம்பலவாண நாவலர், சபாபதி நாவலர் ஆகிய இருவரும் ஆவார்கள். இவர்கள் இருவரில் நாம் முதலில் பார்க்கப் போவது சபாபதி நாவலர் அவர்களைத் தான்.

ஆறுமுக நாவலரின் சமகாலத்தவரான இவர் பிறந்ததும் யாழ்ப்பாணத்தில் வடகோவையில் சைவ வேளாண்மரபில் சுயம்புநாதப் பிள்ளைக்கும், தெய்வானை அம்மையாருக்கும் அவர்களின் அருந்தவப் பயனால் 1846-ஆம் ஆண்டு மகனாய்ப் பிறந்தார். சபாபதி எனப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்குத் தக்க பருவத்தில் வித்தியாரம்பம் செய்யப்பட்டது. பிரம்மஶ்ரீ ஜெகந்நாதையர் என்பார் அக்காலத்திலே வடகோவைப் பகுதியிலே வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளிலே விற்பன்னராக இருந்தார். அவரிடம் சபாபதிப் பிள்ளை சிலகாலம் பயின்றபின்னர் நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடமும் வடமொழி, தமிழ் இரண்டும் கற்றுத் தேர்ந்தார். அக்கால வழக்கப்படி ஆங்கிலக் கல்வியும் கற்றார் சபாபதிப் பிள்ளை. ஆங்கிலம், தமிழ், வடமொழி மூன்றிலும் சிறப்பான தேர்ச்சி பெற்ற பிள்ளையவர்களுக்குத் திடீரெனக் குன்மநோய் கடுமையாகத் தாக்கியது. உணவு உண்ணக்கூட இயலாத அளவுக்கு நோயின் கடுமை வாட்டியது. தீராத துன்பத்தினால் வருந்திய அவர் நோயால் வருந்துவதை விடவும் உயிரை விடலாம் எனத் தீர்மானித்துக்கொண்டார். உயிரை விடுவது என நிச்சயம் செய்தபின்னர் அந்த உயிர் சிவன் சந்நிதியில் போகட்டுமே என்ற எண்ணம் தோன்ற, நல்லூரை அடைந்து கந்தசாமிக் கோயிலில் உபவாசமிருந்து கந்தனைத் துதித்தவண்ணம் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தபுராணப் பாடல்கள், கந்தர் கலிவெண்பா ஆகியனவற்றைப் பாராயணம் செய்தவாறு இருந்து வந்தார்.

ஒரு மண்டலம் கடந்துவிட்டது. ஒரு நாள் இரவு தூக்கத்தில் கோயிலின் அர்ச்சகர் ஒரு கிண்ணத்தில் பாயசம் கொடுத்தாற்போல் கனவு கண்டார் சபாபதிப் பிள்ளைஅவர்கள். ஆனந்தமாய் எழுந்த அவர் இறைவனின் கருணையை நினைத்து நினைத்து வியந்து,

அந்தமி லொளியின்சீரா லறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் ணின்றும் வந்த வியற்கையாற் சத்தியாம்பேர்
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையாற் றனிவேற் பெம்மான்
கந்தனே யென்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம்

பாமாலைகளால் கந்தனைத் துதித்தார். இறைவனின் சந்நிதானத்தில் தொண்டுகளைச் செய்த வண்ணம் நல்லைச் சுப்பிரமணியக் கடவுளின் பெயரில் பதிகம் ஒன்றையும் பாடினார். அந்தப் பதிகம் முருகனின் திருவிளையாடல்களைக் குறித்துப் பாடப்பட்டன. இவர் தன்னுடைய உபாசனா மூர்த்தியாக சுப்பிரமணியக் கடவுளையே நினைத்திருந்தார். தமது நூல்கள் அனைத்திலும் சுப்பிரமணியக் கடவுளே வணக்கச் செய்யுட்களையும் புனைந்தார். ஆறுமுக நாவலர் அக்கால கட்டத்தில் இலங்கையில் பரப்பப் பட்டு வந்த கிறித்துவ மதத்தைக் கண்டித்துச் சைவத்தைப் பரப்பி வந்ததைக் கண்டு அவரைத் தம் மானசீகக் குருவாய்க் கொண்டிருந்தார் சபாபதிப்பிள்ளை. இவரின் புலமையை அறிய நேர்ந்த ஆறுமுக நாவலர் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தம்மால் நிறுவப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் தமிழ்ப் போதகாசிரியராக இருக்கும்படி கூற, சபாபதிப் பிள்ளையும் உடனே தமிழ்நாட்டுக்கு வந்து சிதம்பரம் வித்தியாசாலையில் பொறுப்பை ஏற்றார். தலைமை ஆசிரியர் பொறுப்பையும் சபாபதிப் பிள்ளைக்கு நாவலர் அளிக்க அவரும் சில ஆண்டுகள் திறம்பட அப்பொறுப்பை வகித்தார். சிதம்பரத்தில் இருக்கையிலே “ஏம சபாநாத மான்மியம்” என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழி பெயர்த்துச் சிதம்பரம் சபாநாத புராணம் என்னும் நூலை 893 செய்யுட்கள் கொண்டதாக எழுதி 1895-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் தம் உபாசனா மூர்த்தியான முருகக்கடவுளுக்கும் சேர்த்துக் காப்புச் செய்யுளில் கீழ் வருமாறு பாடியுள்ளார்.

கற்பக நாட்டும் வைவேற் கந்தவே டுணைவின் ணோர்க்குக்
கற்பக நாட்டில் வாழ்வு கண்டவ விடுவ சேனன்
கற்பக நாட்டி யத்திற் காதல வென்னிற் றில்லைக்
கற்பக நாட்டின் றேகுஞ் சமன்வலி கடப்பிக் கும்மே."

இதிலே மூத்த பிள்ளையான கணபதியோடு சேர்த்து இளையவரான கந்தனையும் துதித்திருக்கிறார்.

3 comments:

  1. புதிதாய் கேள்விப் படுகிறேன்..சபாபதி நாவலரைப் பற்றி!
    தங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தங்கள் கட்டுரை பார்த்தேன்.
    சபாபதி நாவலரின் புகைப்படம் எடுக்க முடியுமானால் அனுப்பி உதவ முடியுமா?
    அன்புடன்,
    முல்லைஅமுதன்
    mullaiamuthan@gmail.com

    ReplyDelete
  3. தங்கள் கட்டுரை பார்த்தேன்.
    சபாபதி நாவலரின் புகைப்படம் எடுக்க முடியுமானால் அனுப்பி உதவ முடியுமா?
    அன்புடன்,
    முல்லைஅமுதன்
    mullaiamuthan@gmail.com

    ReplyDelete