Tuesday, July 1, 2008

சித்திரம் பேசுதடி- எல்லோரா குகைகள் தொடர் 6

7-ம் நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படும் இந்த இந்து சமயத்தைக் குறிக்கும் குகைகள் பெரும்பாலும் இந்துமதக் கடவுளரையே கொண்டுள்ளது. முதலில் நாம் காணும் கோயில் விஷ்ணுவின் கோயிலாக இருந்திருக்கின்றது. இந்துமதத்தின் பல்வேறு கடவுளரின் உருவங்களையும் காணலாம் இங்கே. நுழையும்போது துவாரபாலகர்களும், நதிகளின் தேவ உருவங்களையும் கொண்ட சிற்பங்களைக் காண முடிகின்றது. இடப்பக்கத்தில் துர்கை, மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, காண்கின்றோம். வலப்பக்கத்திலும் துர்கையோடு கூடிய நடனக் கோலத்தில் ஈசனின் சிற்பமும், ராவணன் கைலை மலையை அசைக்கும் கோலத்திலும் பார்க்க முடிகின்றது. இந்த ராவணனின் சிற்பத்தை வைத்தே இந்தக் குகையும் அவ்வாறே அழைக்கப் படுகின்றது.
இது தவிர, ராமாயணக் கதையைக் கூறும் சிற்பங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருப்பதையும் காண முடிகின்றது. அடுத்த குகை தசாவதாரக் குகை என அழைக்கப் படுகின்றது. ஆனால் இது ஒரு காலத்தில் புத்த மதக் குகையாக இருந்திருக்கலாம் எனவும், பின்னாட்களில் மாற்றப் பட்டிருக்கலாம் எனவும் சொல்லப் படுகின்றது. திறந்தவெளி ஒன்றும், ஒரே கல்லினால் மண்டபம் ஒன்று காணப்படுகின்றது. பக்கத்திலேயே இரண்டு தளம் கொண்ட கோயில் ஒன்றும் இருக்கின்றது. மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனை போன்ற நதியின் தேவதைகளின் உருவம் செதுக்கப் பட்டிருக்கின்றது. கூரையைப் பாருங்கள், அடடா, என்ன அழகு? என்ன அழகு?? இப்போதெல்லாம் அரசின் உதவி கிடைத்தாலும் கூட இம்மாதிரியான சிற்ப வேலைப்பாடுகளை இவ்வளவு தரத்தோடு செய்ய முடியுமா சந்தேகமே!

சிங்கங்கள், கணநாதர்கள், மேலே காண்கின்றார்கள். படிகள் மேலே உள்ள தளத்திற்குச் செல்ல ஏறுகின்றோம். ஒரு பெரிய விசாலமான கூடம் வருகின்றது. மண்டபம் எனவும் சொல்லலாமோ??? இங்கே தான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் செதுக்கி வைத்திருக்கின்றனர். இன்னும் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தோமானால், விஷ்ணு மட்டுமில்லாமல், சிவன், சிவ, பார்வதி சொக்கட்டான் ஆடும் கோலத்தின் சிற்ப வடிவம், ஆஹா, உமை அன்னையின் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம்?? கணவனோடு ஆடுவதாலா? அல்லது ஆடல்வல்லானை ஜெயித்துவிட்டோமென்றா?? புரியவில்லை!ஆஹா, இதோ, காரணம் புரிந்துவிட்டது. அம்மை ஈசனைத் திருமணம் செய்து கொண்டு இப்போதே வந்திருக்கின்றாள். அது தான் காரணம், நாணம் குமிழியிட, அது முகத்தில் சிரிப்பாய் மலர்ந்திருக்கின்றது. அதோ, அது என்ன??/

லிங்கத்தில் இருந்து சிவனா? அல்லது சிவன் லிங்கமாய் ஆவிர்ப்பவிக்கின்றாரா?? எதிரே யார்?/ ஓ, மார்க்கண்டேயரா?? ஆமாம், மார்க்கண்டேயரைக் காக்க இறைவன் லிங்க வடிவத்தில் இருந்து சிவனாக வந்து எமனைத் தண்டிக்கின்றார். அதுக்கும் முன்னால், இது என்ன?// கங்கையைத் தலையில் தாங்கும் கோலத்தில் சிவன்!!! பார்க்கக் கண் கோடி போதாது! இத்தனையும் செய்து முடித்த நம்ம முன்னோர்களின் புத்திசாலித் தனத்தைப் பாராட்டுவதா? அல்லது இப்போது கவனிப்பார் அதிகம் இல்லாமல் ஏதோ ஓரளவு கவனிப்போடு, மெல்ல, மெல்ல அழிந்து கொண்டிருப்பதை நினைத்து வருந்துவதா?? புரியவில்லை!

No comments:

Post a Comment