Sunday, January 11, 2009

அக்கிரமமா இல்லை???

என்னவோ போங்க, எங்கே பார்த்தாலும், எப்போப்பார்த்தாலும் ஒரே சண்டையாவே இருக்கு. கணினியிலே தான் கூகிளுக்கும், யாஹூவுக்கும் சண்டை நடந்தது. மைக்ரோ சாஃப்ட் உதவி செய்யறேன்கற பேரிலே வேடிக்கை பார்த்துட்டுக் கை கொட்டிச் சிரிச்சது எல்லாம் நடந்துச்சு. இப்போ க்ரோம் ப்ரவுசருக்கும், எக்ஸ்ப்ளோரருக்கும் சண்டை! இந்த அமளியிலே நெருப்பு நரி, தான் பாவம், தானுண்டு, தன்னோட நீட்சிகள் உண்டுனு தேமேனு இருக்கு. இதுதான் போகட்டும்னு தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் ஒரே சண்டைமயம். எந்தப் படத்தைப் பார்த்தாலும் சண்டை தான். விஜய்-அஜீத் ரசிகர்கள் சண்டையாம், வடிவேலு-விவேக் ரசிகர்கள் சண்டையாம், என்னத்தைச் சொல்றது? எங்கே போய் ஆத்திக்கிறது இந்தக் கஷ்டத்தை எல்லாம். விளம்பரமாவது பார்க்கலாம்னு பார்த்தா அதிலேயும் ஹார்லிக்ஸுக்கும், காம்ப்ளானுக்கும் ஒரே சண்டை, அடிதடி, ஹார்லிக்ஸ் சீப்பான பொருள் வாங்காதேனு காம்ப்ளான் சொல்ல, காம்ப்ளானிலே ஒண்ணுமே இல்லை, விலையும் அதிகம்னு ஹார்லிக்ஸ் சொல்ல, ஒரே பிரச்னைதான் போங்க! இந்த டவ் சோப்பு விளம்பரத்தைப் பார்த்தால் பாதி முகம் போதும்னு ஒரே பிரச்னை பண்ணறாங்க. பாதி முகத்தை அவங்க கிட்டக் கொடுத்துட்டு மீதி முகத்தை மட்டும் வச்சுட்டு என்ன செய்யறது?

சரி, ஏதோ நம்ம வீட்டிலேயாவது சண்டை இல்லாமல் இருக்கும்னு பார்த்தால், அங்கேயும் சண்டையாப் போச்சு போங்க, நேத்திக்கு! ஒரே கத்தி சண்டை தான்! நேத்துக் காலம்பர 4-30 மணிக்கு எழுந்தேன், திருவாதிரையாச்சேனு. கூடவே ம.பா.வும் எழுந்து வந்துட்டார். உடனேயே எனக்கு வயித்தைக் கலக்க ஆரம்பிச்சது. அதுக்கு ஏத்தாப் போல பல்லைத் தேய்ச்சதும், தேய்க்காததுமாய், வாக்வம் க்ளீனரை எடுத்துட்டு எனக்கு உதவி செய்கிறேன்கற பேரிலே கணினியைச் சுத்தம் பண்ண வந்துட்டார். எனக்கு வேலையே ஓடலை போங்க! முன்னே ஒரு தரம் நான் இல்லாதப்போ இப்படித் தான் சுத்தம் பண்ணி வயர்களை எல்லாம் மாத்திட்டு, கணினியிலே எதுவுமே எடுக்காமப் போய் அப்புறமா மெகானிக்கைக் கூப்பிட்டுச் சரி பண்ண வேண்டிப் போச்சு! அதனால் இந்த முறை முன்னெச்சரிக்கை முத்தம்மாவா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டுப் போய் நின்னுட்டேன். ஒருவழியா தர்ணா நடத்தி, போராட்டம் செய்து, ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறிவிப்புக் கொடுத்து, அவரை உட்கார வச்சேன்.

இது மட்டுமா?? புத்தகங்கள் எல்லாம் தாறுமாறாக் கிடக்குதே? அடுக்கி வைக்கிறேன்னு வேறே ஒரே பரிவு. நான் என்னமோ அடுக்கித் தான் வைக்கிறேன். அவர் கண்ணுக்கு அதெல்லாம் தாறுமாறாக் கிடக்குதுனு தெரியுது! அது தான் ஏன்னு புரியலை! :P அவ்வளவு தான். நான் பக்கம் பார்த்து அடையாளம் வச்சிருக்கிறதெல்லாம் ஷெல்புக்குப் போயிடும். அப்புறம் நான் தேடோ தேடுனு தேடவேண்டி இருக்கும். ஏற்கெனவே இந்த மாதிரிப் பலதடவை நடந்தாச்சு. சரிதான், இன்னிக்குச் சமையல், சாப்பாடு எதுவுமே நடக்காது போலிருக்கேனு நினைச்சுக்கிட்டேன். ஒருவழியா காபியைக் கொடுத்து அவரை உட்கார்த்தி வச்சுட்டேன். வேலையைக் கவனிச்சுட்டு, திருவாதிரைக் களியும், குழம்பும் பண்ணி முடிக்கும்போது எட்டு மணியாயிடுச்சு. ஸ்வாமி நைவேத்தியம் பண்ணிட்டு சாப்பிடக் கொடுத்தா, என்ன சொன்னார் தெரியுமா?? அவரோட சண்டை போட்டதிலே உப்பு, உறைப்பு, களிக்கு வெல்லம் எல்லாம் சரியா வந்திருக்காம். அதனாலே இனிமே தினமும் காலம்பர சீக்கிரமே எழுந்து வரப் போறாராம். இது எப்படி இருக்கு?

அக்கிரமமா இல்லை?

4 comments:

  1. //அவரோட சண்டை போட்டதிலே உப்பு, உறைப்பு, களிக்கு வெல்லம் எல்லாம் சரியா வந்திருக்காம். அதனாலே இனிமே தினமும் காலம்பர சீக்கிரமே எழுந்து வரப் போறாராம்.//

    இந்த முறை எப்படிப் போட்டாரோ அதை எல்லாம் எழுதி வெச்சுக்கச் சொல்லுங்க. அடுத்த முறையும் செய்ய வசதியா இருக்கும். தேமேன்னு கணினியும் புத்தகமுமா இருக்கும் நீங்கள் சமயலறை பக்கம் வந்தா என்ன ஆகிறது....

    ReplyDelete
  2. வாங்க கொத்தனாரே, எங்கெங்கே மொக்கை இருப்பினும் அங்கங்கே நீங்க இருப்பீங்கனு தெரியுது! :P

    ReplyDelete
  3. காபில தூக்க மாத்திரை போட்டீங்கதானே?

    ReplyDelete
  4. @ரங்கதிவா, தூக்க மாத்திரை எல்லாம் எதுக்குப் போடணும்?? தலையணைனு சொன்னாலே சிலபேர் குறட்டை விடற டைப்! :P:P:P:P

    ReplyDelete