Saturday, January 3, 2009

திகிலூட்டும் அனுபவங்கள் தான் எப்போவுமே!

கல்யாணத்துக்காகக் கும்பகோணம் போனப்போ முதல்நாள் காலையிலேயே டிக்கெட் வாங்கிட்டுப் பின்னாடி சாயந்திரமாக் கோவிந்தபுரமும், திருவிசநல்லூரும் போனோம்னு ஏற்கெனவே எழுதி இருந்தேன் இல்லையா? மறுநாள் கல்யாணம் முடிந்ததுமே காலை ஆகாரம் சாப்பிட்டுட்டு, பக்கத்திலே உள்ள சக்ரபாணி கோயிலுக்குப் போகலாம் என்று கிளம்பினோம்.
சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில். கும்பகோணத்திலே வேறே எத்தனை மாடக் கோயில் இருக்குனு நினைவிலே இல்லை. அடிக்கடி போகிறதில்லை, கும்பகோணத்துக்கு மட்டும் அடிக்கடி போவோம், ஆனால் கும்பேஸ்வரர் கோயில் தவிர வேறே கோயிலுக்குப் போனதில்லை. கும்பேஸ்வரர் கோயிலே சமீப காலங்களில் தான் போறோம்.

சந்நிதிக்குள்ளே நுழைய இரு வாயில்கள் உண்டு. ஒன்று தட்சிணாயன வாயில். மற்றொன்று உத்தராயன வாயில். சூரியன் பயணம் செல்லும் திசைக்கேற்ப வாயில்கள். இதற்கு முக்கியக் காரணம் சூரியன் தினமும் வந்து சக்ரபாணியை வழிபட்டுச் செல்கின்றான் என்று தான். ஒருமுறை சூரியனுக்குக் கர்வம் வந்துவிட்டதாம், தான் தான் மிக மிக அதிக ஜோதி ஸ்வரூபமாய் இருக்கின்றோம் என. மகாவிஷ்ணுவோடு போட்டி போட, அவர் தன்னுடைய சக்கரத்தை ஏவ, அந்தச் சக்கரத்தின் ஒளியின் முன்னே சூரியனே மங்கிப் போக அவன் கர்வம் அடங்கிற்றாம். பின்னர் பரமாத்மாவின் பாதம் பணிந்த சூரியனை மன்னித்தாராம் மகாவிஷ்ணு. எனினும் தினமும் தான் உதித்ததும் அவரை வணங்காமல் இருப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்ட சூரியன் தட்சிணாயன காலங்களில் தென் பகுதி வாயில் வழியாகவும், உத்தராயன காலங்களில் வட பகுதி வாயில் வழியாகவும் வந்து தரிசித்துச் செல்வதாய் ஐதீகம். மற்ற வாயிலை அடைத்துவிடுவார்கள். ஒரு பக்க வாயில் மட்டுமே திறந்திருக்கும்.
உள்ளே போனால் எட்டுக் கைகளோடு திவ்ய தரிசனம் கிடைக்கும். தாயார் சுதர்சனவல்லி. சூரியனைத் தவிர, பிரம்மாவும், அக்னியும் கூட இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர். இங்கே மகாவிஷ்ணுவுக்கு நெற்றியில் மூன்றாவது கண் உண்டு. விஷ்ணுவே சக்கர உருவில் தோன்றி சூரியனின் கர்வத்தை அடக்கியதாயும், அதனால் மூன்று கண்கள் என்றும் சொல்கின்றனர். ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர் இந்தக் கோயிலின் சக்ரபாணிக்கு. கோயிலின் பெரும்பாலான கட்டிடங்கள் நாயக்கர் காலத்தில் ஆரம்பித்து, பதினேழாம் நூற்றாண்டு வரையில் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், முக்கியச் சந்நிதியானது பிற்காலச் சோழர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.

எத்தனை முறை சென்றாலும் கோயிலின் அமைப்பும், தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியும், முன்னோர்களின் கட்டிடக் கலை அமைப்பும் கண்ணையும், கருத்தையும், மனதையும் கவரும். இந்தக் கோயிலுக்குப் போயிட்டு, கும்பேஸ்வரரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, கல்சட்டி வாங்கிக் கொண்டு, பின்னர் அறைக்குத் திரும்பி சாமானெல்லாம் கட்டி வைச்சுட்டு, சத்திரத்தில் போய்ச் சாப்பிட்டுவிட்டுச் சொல்லிக் கொண்டு, பஸ்ஸுக்குக் கிளம்பினோம். பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டோம். எங்களோடு அம்பத்தூரிலேயே இறங்க வேண்டிய வேறே ஒரு தம்பதிகளும் அதே பேருந்துக்குக் காத்திருந்தனர். ஆனால் பேருந்து வர நேரம் ஆச்சு. என்னடானு நினைச்சுக் கவலையோட உட்கார்ந்திருந்தால் கடைசியில் பேருந்தும் வந்தது. அதிலே ஏற்கெனவே பயணிகள் இருந்தனர். சரி, இறங்கப் போறாங்கனு நினைச்சா, இல்லையாமே! நாங்க முன்பதிவு செய்து வச்சிருந்த சீட்டெல்லாம் அவங்களோடது விட மாட்டேன்னு ஒரே தகராறு. என்ன செய்யறது?? ஒண்ணுமே புரியலை!

No comments:

Post a Comment