Thursday, July 9, 2009

பிகாபூ!!!! ஐ ஸீ யூ!!!!! முடிவு!

ஆயிற்று. எல்லாம் முடிந்துவிட்டது. கணவன் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அழக் கூடத் தெம்பில்லை அவனுக்கு. அவன் மனைவியும் அவனை விட்டுப் பிரியப் போகிறாள். பிரிந்து வெகு தூரம் போகின்றாள். இதோ அவள் சாமான்கள் எல்லாம் கட்டி வச்சாச்சு. பிரிவுக்குச் சம்மதமில்லை அவனுக்கு. ஆனால் அவளோ, பிரிந்தால் தான் இருக்கும் இந்த ஒரு குழந்தையையாவது தன்னால் வளர்க்க முடியும் என்று சொல்லி விட்டாள் தீர்மானமாய். இந்த ஒரு குழந்தையையும் இழக்கத் தான் தயாராய் இல்லை என்றும் இதைத் தொடர்ந்து வளர்க்கப் போவதாயும் சொல்லிவிட்டாள்.

இந்தக் குழந்தையின் திட்டமே அதுதான் என்பதை அவன் விளக்கியும் அவள் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் இறந்தது தன்னால் மறக்கவோ, ஆறுதல் அடையவோ முடியாது எனினும், அது தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை கணவன் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட்டிருந்தால், இந்தக் குழந்தையைக் கண்காணிப்பதை நிறுத்தி இருந்தால் எல்லாம் சரியாய் இருந்திருக்குமோ என்னமோ? ஆனால் இந்தக் குழந்தையைச் சந்தேகத்துடனும், துவேஷத்துடனும் பார்க்கும் கணவனோடு சேர்ந்து இதை வளர்க்கத் தயாராய் இல்லை அவள். பிரிவதே நல்லது என முடிவெடுத்து விட்டாள்.

கனத்த இதயத்துடனேயே இதைச் சொல்லுவதாகவும், அவனோடு வாழ்ந்த வருஷங்களைத் தன்னால் மறக்கவே முடியாது என்றும், இனிமையான நாட்களாகவே கழிந்ததையும் நினைவு கூர்ந்தாள். அப்படிப்பட்ட மென்மையான சுபாவம் கொண்ட அவன் இவ்வாறு மாறியது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சொல்லிவிட்டுத் தான் தன் குழந்தையுடன் தனியாகப் போவதாகவும், சீக்கிரமே விவாகரத்துக்கு அறிவிப்பு வரும் எனவும், அவள் மறு விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் சொன்னாள். பிரியப் பட்டால் அவன் செய்து கொள்ளலாம் என்பதற்காகவே தான் விவாகரத்துக் கொடுப்பதாகவும் சொன்னாள்.

பிரியும்படியாகவா வாழ்ந்தோம்? அடிப்பாவி! உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும், நிமிஷத்தையும், மணியையும், நாட்களையும், மாதங்களையும், வருஷங்களையும் பெரும் பொக்கிஷம் போல் பாதுகாத்து மனதுக்குள்ளாகப் பூட்டி வைத்திருக்கின்றேனே? நீ அறிய மாட்டாயா? உன்னை முதன்முதல் பார்த்தபோது என்ன உடை அணிந்திருந்தாய் என்பதில் இருந்து இன்று கடைசி நாளான இன்று நீ அணியும் உடை வரையில் என் விருப்பத்தை மதித்தும், எனக்குப் பிடித்தமானதாகவும் அல்லவோ இருந்தது??? என்னை மறந்துவிட்டாயே?? எப்படி நீ என்னைப் பிரிந்து வாழ்வாய்? அழுது அரற்றினான் அவன். கெஞ்சினான் மனைவியிடம். அவள் மட்டுமே போதும் என்றும், வேறு ஒன்றும் வேண்டாம் எனவும், அந்தக் குழந்தையை மட்டும் விட்டுவிடும்படியாகவும் கூறினான்.

எதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள். இதோ தயாராகிவிட்டாள். செல்லப் போகின்றாள். மூட்டை முடிச்சுகள் தயாராகிவிட்டன. எப்படி மனசு வந்து அவனைப் பிரியத் தயாராகிவிட்டாள் அவள்??? தாங்கவில்லை அவனுக்கு. வண்டியில் ஏறும் முன்னர் அவனிடம் வந்து, அவனை அவள் அழைக்கும் அந்தரங்கமான செல்லப் பெயரால் அழைக்கவும் இருவர் கண்களில் இருந்தும் அருவி போல் கண்ணீர் பெருகியது. ஓடிப் போய் அவளை அணைக்கப் போனான். தடுத்தாள் அவள். அருகில் நின்றிருந்த அந்தக் குழந்தையைக் கைகளில் தூக்கிக் கொண்டாள். இனி எனக்கு இவள் தான் உலகம். நான் பெற்றெடுக்காவிட்டாலும், பெற்ற குழந்தையைப் போல் இவளை வளர்க்கப் போகின்றேன். உனக்கு அது சம்மதமாய் இராது. ஆகவே உன்னைப் பிரிகிறேன். இனியேனும் அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள். மாசற்ற அன்பை உனக்கு நான் கொடுத்தேன். ஆனால் எனக்கு நீ கொடுத்ததோ?? 4 உயிர்கள்! இனி உன் வழி வேறு, என் வழி வேறு. நான் போகிறேன்.

திரும்பி நடந்தாள். அவள் கையில் அந்தக் குழந்தை அவளை அம்மாவென அழைத்துக் கட்டிக் கொண்டது. அவன் நிமிர்ந்து பார்த்தான். இப்போது குழந்தையின் முகம் அவள் தோளில். நிமிர்ந்தது குழந்தையும். அவனைப் பார்த்துச் சிரித்தது. வெற்றிச் சிரிப்பு.

அவன் துவண்டு சரிந்தான்.

**********************************************************************************

பல வருஷங்களுக்கும் முன்பு படித்த கதை இது. நாவல் என்றே சொல்லலாம். கதைக் கருவை மாற்றவில்லை. சம்பவங்கள் முன்பின்னாக இருந்திருக்கலாம். கதையின் பெயரோ, எழுதிய ஆசிரியரோ நினைவில் இல்லை. நான்காவது குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறப்பதும், அவனுடைய ஒரே பெண் லூசி(?)யை அந்தப் பிசாசுக் குழந்தை அவன் கண்ணெதிரே கொல்லுவதையும் படித்த நினைவு இருக்கிறது. மற்றவை முன்பின்னாக இருக்கலாம். ஒரிஜினல் படிச்சவங்களும் சரி, இனி தேடிப் பிடிச்சுப் படிக்கப் போறவங்களும் சரி, என்னை மன்னிக்கணும். என்னை மிகவும் பாதித்த மூன்று கதைகளில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு தமிழில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளும், ஆங்கிலத்தில் A Stone for Danny Fisher நாவலும். இந்தக் கதை ரொம்பவே ஆழமாய் மனசில் பதிந்துள்ளது. பொறுமையாப் படிச்ச புலிக்கும், கோபிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நடுவில் வந்து கொஞ்சமே கொஞ்சம் படிச்ச வல்லி, திவா, நானானி ஆகியோருக்கும் நன்னிங்கோ!

6 comments:

  1. பாவம் அவன்...;(

    நான் நீங்க படிச்சதை அப்படியே எழுதுறிங்கன்னு நினைச்சேன்..ம்ம்..நல்ல நடை தலைவி ;) கலக்குறிங்க ;)

    ReplyDelete
  2. // நடுவில் வந்து கொஞ்சமே கொஞ்சம் படிச்ச வல்லி, திவா, நானானி ஆகியோருக்கும் நன்னிங்கோ!//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    பின்னூட்டம் போட்டாதான் படிச்சதா அர்த்தமா?
    எல்லாக்கதைகளும் கடேசிலே நல்லது ஜெயிக்கிறாப்போலதான் இருக்கும். இது ஒண்ணு வித்தியாசமா முடிஞ்சுது. போகட்டும். அட் லீஸ்ட் அந்த ஆளு பிழைச்சாரே! (பிழைச்சு என்ன புண்ணியம். இனி அவர் வாழறது வாழ்க்கையாவா இருக்கும்?)

    ReplyDelete
  3. வாங்க கோபி, நன்னிங்கோ உங்க பாராட்டுக்கு!

    ReplyDelete
  4. திவா, ஹிஹிஹி, கொத்தனாரும் படிச்சிருக்கார், திட்டிட்டு இருக்கார்! முடிவைச் சொதப்பிட்டீங்களேனு! என்ன செய்யறது?? ஆனால் உங்க பாராட்டுக்கு நன்னி!

    ReplyDelete
  5. பிரமாதம். முழுக் கதையும் படித்தேன். நிறைய இடங்களில் உறைய வைக்கிறது. மிக யதார்த்தமான அமானுஷ்யம். அதனால் தான் திகில் சுவாரசியமாக இருக்கிறது. ரோல்ட் டால் எழுதிய கதைகளை நினைவூட்டுகிறது. புத்தகம் பெயர் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.
    சுட்டிக்கு ரொம்ப நன்றி. (இதை எதுக்கு ரொம்ப யோசிச்சு கொடுக்கணும்?)

    ReplyDelete
  6. முழு கதையும் படித்தோம் ..
    திகில் ..அமானுஷ்யம் ..!!

    ReplyDelete