Saturday, November 28, 2009

என் பயணங்களில் - திருப்புட்குழி!

காஞ்சிபுரத்தை முடித்துக் கொண்டு அடுத்துத் திருப்புட்குழிக்குப் பயணம் ஆகவேண்டும். வரதராஜர் கோயில் சந்நிதித் தெரு பூராவும் துணிக்கடைகள். எங்க பேருந்து நின்ற இடத்திலும் ஒரு துணிக்கடை. மற்றவர்கள் வர நேரம் பிடிக்க, வழக்கம்போல் சீக்கிரமாய் வந்திருந்த நாங்க இரண்டு பேரும், பொழுது போகாமல் தவித்துக் கொண்டிருந்தோம். துணிக்கடை அப்போத் தான் திறந்து பணியாளர்கள் வந்துட்டு இருந்தாங்க. உள்ளே போய்ப் பார்க்கலாம் என்பது ரங்ஸின் விருப்பம். ஆனால் வாங்கறதா இருக்கணும், இல்லாட்டிப் போகக் கூடாது, அதுவும் காலங்கார்த்தாலே போய்ட்டு ஒண்ணும் வாங்காம வரது சரியில்லைனு என்னோட வாதம். கடைசியில் வழக்கம்போல் ரங்ஸ் தான் ஜெயிச்சார். ஹிஹிஹி, கடைக்குள்ளே போனோம். ஏதோ பத்து லக்ஷம் ரூபாய்க்குப் புடவை வாங்கப் போறோம்னு நினைப்பிலே கடைக்காரங்க ஏக உபசாரம். நான் அழுத்தம் திருத்தமாய் பருத்திப் புடவைகள்தான் வேண்டும் என்றும், வேறு புடவைகள் வேண்டாம் என்றும் முதலிலேயே சொல்லிட்டேன். குறைந்த பக்ஷம் 250ரூபாயிலிருந்து பருத்திப்புடவைகள் போட்டார்கள். கைத்தறி என்பது பார்த்ததுமே புரிந்தது. அம்பி வஸ்த்ரகலா புடைவையை என்ன கலரில் வாங்கறாரோனு ஒரே கவலை. இருந்தாலும் பரவாயில்லை அது பட்டு, இது காட்டன் தானேனு, க்ரே கலரில் ஒரு புடைவையை எடுத்துக் கொண்டேன். 350ரூ ஆச்சு. இன்னிக்கு இதை எழுதும்போதும் அந்தப் புடைவைதான் கட்டிக் கொண்டு எழுதறேன். அதிலேயே ப்ளவுஸ் இருக்குங்கறாங்க. ஆனால் ப்ளவுஸ் கட் பண்ணினால் புடைவை நீளம் போதாது. ரன்னிங்கிலே இருந்தால் கட் பண்ணாமல் கட்டுவதே சரியாய் இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் புடைவை யோகம் அடிச்சது. அதுக்குள்ளே மத்தவங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. வேலூர் போறோமே, அங்கே ஆரணி புடைவை பார்த்திருக்கலாமேனு ஒரு எண்ணம் வந்தது. சரி, அப்புறமாப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆரணிப் புடைவையும் நல்லா இருக்கும். புடைவை கட்ட ஆரம்பிச்ச நாளிலே முதல்லே கட்டிய பட்டுப்புடைவைகள் எல்லாமே ஆரணிதான். தகதகவென்று இருக்கும். இப்போ அந்தத் தரம் இருக்குமா தெரியலை. பார்க்கணும். அடுத்த தீபாவளிக்கு அம்பி அலையவேண்டாம் பாருங்க.

இப்போ பேருந்தில் எல்லாரும் ஏறியாச்சு. திருப்புட்குழியை நோக்கிப் பேருந்து போயிட்டு இருக்கு. அதன் தலபுராணத்தை சுற்றுலா நடத்துநர் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தார். திருப்புட்குழியை முடிச்சதும், அடுத்து வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆலயம். ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸவாமிகள் நடத்தும் ஆலயம் அது. அங்கே போயிட்டு பின்னர் வேலூர் போய்ச் சாப்பாடு. அதன் பின்னர் ஸ்ரீபுரம். தி.வா. கவனிச்சுக்குங்க. இன்னும் இரண்டுபதிவுக்கு அப்புறம் தான் ஸ்ரீபுரம் வரும். பேருந்து திருப்புட்குழியை வந்தடைந்தது. திருப்புட்குழி நூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்ட கோயில். ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் தகனம் செய்து ஈமக்கிரியைகள் புரிந்த இடம் என்று சொல்கின்றது தலவரலாறு. பெருமாளின் பெயர் விஜயராகவப் பெருமாள். மரகதவல்லித் தாயார் அருள் பாலிக்கிறாள். மூலவரின் தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். உற்சவரின் திருவீதி புறப்பாடுகளில் ஜடாயுவுக்கும் சகலவிதமான மரியாதைகளும் செய்யப் படுகின்றன. ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகள் செய்த தலமாதலால், கொடிமரம் கோயிலின் உள்ளே கிடையாது. பலிபீடமும் கோயிலுக்கு வெளியே காணப்படுகிறது. தலவரலாறு நாளை காண்போமா?

1 comment:

  1. வைத்தீஸ்வரன் கோவிலிலே கூட ஜடாயு குண்டம் இருக்கே!

    ReplyDelete