Sunday, August 21, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

மதுரை திருஞானசம்பந்தர் மடம். மிகப்புராதனமான மடம். சந்நிதானம் பீடத்தில் அமர்ந்து தமக்கு வந்த கடிதங்களைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார். அங்கே கணக்கில் அவதானியாக தேவிபட்டினத்தைச் சேர்ந்த முத்துசாமிப்பிள்ளை என்பவர் இருந்தார். அவரும் உடன் இருந்தார். அங்கே அப்போது திருக்கழுக்குன்றம் திருச்சிற்றம்பல ஞானியார் வந்து சந்நிதானத்தை வணங்கினார். சந்நிதானமும் வரவேற்று அமர வைத்து என்ன விஷயம் என விசாரித்தார்கள். பின்னர் அவரிடம் ஞானியாரை விசாரித்து வந்திருக்கும் திருமுகம் பற்றிக் கூறினார் சந்நிதானம் அவர்கள். ஞானியார் ஆச்சரியத்துடன் யாரிடமிருந்து வந்திருக்கிறது என வினவ, வடலூர் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளிடமிருந்து ஞானியாரை விசாரித்துக் கடிதம் வந்திருப்பதாய்த் தெரிவித்தார். கடிதத்தில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென ஞானியார் விண்ணப்பித்துக் கேட்க அதன் மேல் சந்நிதானமும், கூடலூர் ஜில்லாவின் கருங்குழியிலிருந்து வந்திருக்கும் புருஷோத்தம ரெட்டியாரைக் காணோம் என அவர் குடும்பத்தினர் கலங்கிப் போய் விசாரித்ததில் அவர் இங்கே நம் மதுரை ஆதீனம் மடத்திற்குவந்திருக்கலாம் எனக் கண்டு பிடித்திருக்கின்றனர். அதன் பேரில் வடலூர் பெருமானிடம் இது குறித்து விண்ணப்பிக்க அவரும் அது குறித்து எழுதிக் கேட்டிருக்கிறார். புருஷோத்தம ரெட்டியார் இங்கிருந்தால் அவரை உடனே அனுப்பி வைக்கும்படி ஆலோசனைகளும், புத்திமதிகளும் கூறும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.



அப்போது ஞானியார் புருஷோத்தம ரெட்டியார் இங்கே தான் இருப்பதாகவும், அவரைத் திரும்ப அனுப்பும் இந்தப்பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாய்ச் சொல்ல, சந்நிதானமும் ஒப்புக்கொண்டார். ஆனால் அது வரை அங்கிருந்து இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த அவதானியார் குறுக்கிட்டுப் பணிவுடன் தாம் சொல்லுவதையும் கேட்டுக்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொண்டார். அதன் பேரில் ஆச்சரியமடைந்த சந்நிதானமும், என்ன விஷயம் எனக் கேட்க, கடிதம் ஸ்ரீராமலிங்க சுவாமிகளால் எழுதப் பட்டதைத் தாம் அறிந்ததில் இருந்து அந்தக் கடிதத்தைத் தாமும் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டிருப்பதாயும் ஆகையால் கடித்ததைத் தம்மிடமும் பகிர்ந்து கொள்ளும்படியும் வேண்டிக்கொண்டார். மாமுனிவர் என்றும் அட்டமாசித்திகளெல்லாம் பெற்ற மாசித்தர் எனவும் பலரும் பலவிதமாய்ப் போற்றிய ஈடுஇணையற்ற ஞான வள்ளலான சுவாமிகளின் திருக்கரங்களால் எழுதப்பட்ட கடிதத்தைத் தாமும் படிக்க வேண்டும் என ஆசைப்படுவதாய் அவதானியார் தெரிவிக்க சந்நிதானம் கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பணிவோடு அதை வாங்கிப் படித்த அவதானியாருக்கு படித்து முடித்ததும் கேலிப்புன்னகை தோன்ற அலட்சியமாக அதைத் திரும்ப சந்நிதானம் அவர்களிடம் கொடுக்க சந்நிதானத்தின் ஆச்சரியம் மிகுந்தது.



என்ன விஷயம் என ஆச்சரியமாக சந்நிதானம் கேட்க, அவதானியார் தயங்கினார். மேலும் மேலும் ஞானியார் சுவாமிகளும், சந்நிதானமும் வற்புறுத்த வள்ளலாரின் கடிதத்தில் கற்றுணர்ந்த அறிஞரின் பாண்டித்தியம் துளிக்கூட இல்லையே, இவரின் படிப்பு இலக்கணமில்லாப் படிப்போ எனக் கேட்க, ஞானியார் சுவாமிகளுக்குப் படபடப்பு ஏற்பட்டது. சந்நிதானம் குறுக்கிட்டு, விவாதம் செய்யும் வழக்கம் உள்ள தேவிபட்டினம் முத்துசாமி பிள்ளையின் விவாதத்தினால் நன்மையே விளையும் என்றபடி அந்த விவாதத்தை ஊக்குவித்தார். முத்துசாமிப்பிள்ளை ராமலிங்க சுவாமிகளின் கடிதம் கற்றுக்குட்டித்தனமாக இருந்ததாய்க்கூற ஞானியாருக்கு இன்னமும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஏதோ பூடகமாகச் சொல்கிறார் என்றவரை புரிந்து கொண்ட ஞானியார் விளக்கமாய்ச் சொல்லும்படி வேண்ட சந்நிதானமும் அவதானியார் விளக்கமாய்ச் சொல்லட்டும் என ஆமோதித்தார். மீண்டும் வள்ளலாருக்கு இலக்கண சுத்தமில்லாப் படிப்பே அமைந்திருப்பதாய்க்கூறினார் அவதானியார்.



ஒரே ஒரு கடிதத்தை வைத்து எடைபோடுவதா என ஞானியார் அதை மறுக்க உடனே அவதானியார் ஞானியாரிடம் வள்ளலாரின் இலக்கண சுத்தமான படிப்பை அவர் தக்க ஆதாரங்களோடு மெய்ப்பிக்கவேண்டும் எனக் கேட்கின்றார். அதற்கு நடுவராக சந்நிதானத்தையும் நியமித்துக் கூறினார். சந்நிதானமோ இளநகை மாறாமலேயே ஞானியாரிடம் வள்ளலாரிடமிருந்து அவதானியாரின் மனதிற்கு ஏற்ற வகையில் இலக்கண சுத்தமான ஒரு கடிதத்தை வரவழைக்கும்படி கூற ஞானியாரும் அவ்வாறே செய்யப் போவதாய்க் கூறினார். பின்னர் புருஷோத்தம ரெட்டியாரை அவர் வீட்டிற்குத் திரும்பச் செல்லும்படி புத்திமதி கூறும்படி ஞானியாரிடம் கூறிவிட்டு சந்நிதானம் ஓய்வுக்குச் சென்றார். ஞானியார் வள்ளலாரிடமிருந்து இலக்கண சுத்தமான கடிதத்தைப் பெறும் விதம் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார்.

No comments:

Post a Comment