Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

அவதானியார் கடிதத்தை வாங்கிப் படித்தார். அப்போது சந்நிதானம் அந்தக் கடிதத்தை உரக்கப் படிக்க வேண்டுமென அவதானியாரை வற்புறுத்த வேண்டாவெறுப்பாக அவதானியாரும் அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார். கடிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.

“உணர்ந்தோரா னியல் வகைய வின்ன வென்றவற்றிற் பின்மொழி மதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய பின்மொழியடைசார் முன்மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு பொய்யற் கெதிர்சார்புற்ற மூலியொன்று வளைத்து வணக்கஞ்செய்த சுகநநீ ரெழிலென்றும் வான் வழங்கு பண்ணிகார மென்றும் நாகச்சுட்டு மீனென்றும் வேறு குறிப்ப தொன்று.



அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மையும்மையடுத்த பல்லோர்வினாப்பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றனோடு புணர்ப சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது



இரண்ட னுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மையாறாவதன் பொருட்டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந்தலைமகட் பெயர விரண்டினோ டிரண்டிரண்ட் டூகக் கழிவிலைப் பெயரவு மகார வீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப்பாற் சிறத்தும்



இருவகை முதற்பொரு ளொன்றன் பாகுபாட்டுறுப்பிற் குறித்த வைம்பெரும் பூதத்தோர் விசேடனத் தெதிர்மறை நடுக்குறை யியற்சொற் பெயர வுயிர்ப் பெயராக வெதிர்காலங் குறித்து நின்றது சிலவினைச் சார்பான் விலங்கு சூடிய வரையில் வெளியாம்.



இதனோ டீரிரு வகைப்பட்ட வோர் சார் புது நிலஞ் செலவுய்த்தனம். வேண்டுழி வேண்டியாங் குய்க்க மற்றைய பின்னர் வரைதும்.



இற்றே விசும்பிற் கனைச்சலம்

பார்வதிபுரம் இங்ஙனம் நங்கோச் சோழன்

சுக்கில வருஷம் வீரமணி சூடியார்

துலாரவி திருவாணைப்படிக்கு அடிமை

உஎவ தொழுவூர் வேலாயுதம்

இந்தக் கடிதத்தைப் படித்த அவதானியார் திரும்ப சந்நிதானத்திடம் கொடுக்க சந்நிதானமோ விடாமல் கடிதத்தின் பொருளைப் பற்றிக் கேட்க அவதானியாரோ கடிதம் எழுதியவர் ஒரு வித்வான் தான் எனத் தான் ஒப்புக் கொள்வதாயும், கடிதம் புரியாமல் இருக்கிறபடியால் அதைக் குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை என்றும், இந்தக் கடிதம் வேண்டுமென்றே அவரைப் பழிவாங்கவென வடலூர்ப் பெருமானும், அவரது ஆணைப்படி வேலாயுதமும் எழுதி இருப்பதாகவும் அது மட்டும் தனக்கு நன்கு புரிவதாயும் கோபத்துடன் கூறினார். மேலும் இந்தத் திருமுகத்தின் அமைந்த வார்த்தைகளின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்வது கடினம் எனவும் கூறினார்.



உள்ளுக்குள்ளாகச் சிரித்துக்கொண்ட சந்நிதானம் ராமலிங்க சுவாமிகளின் கடிதம் புரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுமாறு அவதானியாரைக் கேட்க, அவதானியாரோ அதை ஒத்துக்கொள்ளாமல், சாதுர்யமாக ஒரு வித்துவான் வார்த்தை விளையாட்டுப் போட்டுப் பூட்டிவிட்டால் எவராலும் திறக்க இயலாது என்றும், அதைத் தான் இங்கே வள்ளலார் செய்திருப்பதாகவும் கூறினார். உடனே ஞானியார் சுவாமிகள் அவதானியாரிடம் அவரையும் இப்படி ஒரு பூட்டுப் போடச் சொல்லிக் கூறினார். மேலும் அவதானியார் போடும் அந்தப் பூட்டை வள்ளலார் எளிதாய்த் திறப்பார் என்றும் சவால் விடுத்துக் கூறினார். சந்நிதானமும் இது நல்ல ஏற்பாடு தான் என ஆமோதித்தார். அவதானியாரோ ஆணவம் மீதூறத் தாம் பூட்டுப் போடுவதாயும் இதுவரை தாம் போட்ட பூட்டைத் திறக்க எவரும் முன்வந்ததில்லை எனவும் கூறி, தான் போட்ட பூட்டைத் தன்னைத் தவிர எவரும் திறக்க இயலாது என்றும் கூறிப் பதிலுக்குச் சவால் விட்டார். ஞானியாருக்கு வெளிப்படையாகவே இப்போது கோபம் வர, அவதானியாரிடம் இது அகந்தைப் பேச்சு என்றும் அவரின் அகந்தை அழிய வேண்டும் எனத் தாம் விரும்புவதாயும் கூறிவிட்டு அவதானியார் போடும் பூட்டை வள்ளலார் திறப்பதோடு அல்லாமல் பூட்டின் சாவியையும் சேர்த்தே அனுப்பி வைப்பார் என்றும் கூறினார்.



பார்க்கலாம் என்று சவால் விட்ட அவதானியாரின் கோபத்தைக் கண்ட சந்நிதானம் ஞானியாரையும் அவரையும் சமாதானப் படுத்த எண்ணி, அவதானியாரைச் சீக்கிரம் பூட்டுப் போடச் சொல்லி, அதை உடனே வடலூருக்கு அனுப்பலாம் என்றும் அவரிடம் சமாதானமாகக் கூற அவதானியாரோ பூட்டுத் தயாராக இருப்பதாயும், தாம் இப்போதே படிப்பதாகவும் கூறிப் படிக்க ஆரம்பித்தார்.

“தகரவரிக் கூந்தலர்கா மாதிமுந்நீர் தாழும்

தகரவரி நாலைந்து சாடும்- தகரவரி

மூவொற்றி யூர் பொருளை மூன்று மங்கை யேந்துமொரு

சேவொற்றி யூரானைச் செப்பு.”



இந்த வெண்பா தான் பூட்டு என்றும் இதைத் திறக்கவும், திறப்பதற்கான சாவியை அனுப்பி வைக்கவும் இன்றே வடலூருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவதானியார் கூறினார். கடிதம் வடலூருக்கு அனுப்பப் பட்டது.

No comments:

Post a Comment