Monday, June 9, 2008

சித்திரம் பேசுதடி - எல்லோரா தொடர் 2


முதலில் நாம் காணப் போவது எல்லோரா குகைக் கோயில்கள் ஆகும். எல்லோரா சஹ்யாத்திரி மலைத் தொடரில் அமைந்துள்ள குகைக் கோயில்கள் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சஹ்யாத்திரி மலைத் தொடரில் தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்தக் குகைக் கோயில்கள், புத்தமதக் குகைகள், இந்து மதக் குகைகள், ஜெயினர்களின் குகைகள் என மூவகைக் குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 40க்கு மேல் என்று சொல்லப் பட்டாலும், சில குகைக் கோயில்கள் மட்டுமே பார்க்கும்படியான நிலைமையில் உள்ளன என்பது மிகவும் வருந்தத் தக்க செய்தி ஆகும். மலைக்குன்றுகளில் குடையப் பட்ட இந்தக் கோயில்கள், தெற்கு வடக்காக வளைந்து செல்கின்றது. முகப்பு மேற்குப் பக்கத்தில் வருகின்றது. குறைந்த பட்ச அளவிலான வெளிச்சத்துக்காகவும், சிற்பங்கள் காற்றினால் வீணாவதைத் தடுக்கவும் இம்மாதிரித் தேர்ந்தெடுத்ததாயும் சொல்லப் படுகின்றது.

வடக்கு, தெற்காக வளைந்து செல்லும் அரை வட்டத்தின், தென்கோடியில் புத்த மதக் கோட்பாடுகளைக் குறிக்கும் குகைகள் அமைந்துள்ளன. மொத்தம் ஒன்றரை மைலுக்கு நீளம் உள்ள இந்த அரைவட்டப் பாதையின் நடுவில் இந்துமதக் கோட்பாடுகளைக் குறிக்கும் குகைகளும், அதன் பின்னர் வட பாகத்தில், இன்னும் சற்று தூரம் சென்றால் சமணர்களின் குகைகளும் வருகின்றன. சற்றுத் தூரத்தில் இன்னும் மேடான இடத்தில் அமைந்திருக்கும் சமணக் குகைகளுக்கு வண்டியிலேயே செல்ல வேண்டி உள்ளது. மொத்தம் உள்ள 47 குகைகளில், பார்க்கும்படியான குகைகள் பத்துக்குள் தான் என்றாலும் அவற்றையும் பார்க்க ஒரு நாளின் சில மணித் துளிகள் நிச்சயம் போதாதுதான். ஆனால் அங்கே தங்கி இருந்து பார்க்க முடியாது. அருகில் உள்ள நகரம் ஆன ஒளரங்காபாத்தில் இருந்து தினம் வரவேண்டும். 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, ஒளரங்காபாத்தில் இருந்து எல்லோரா குகைக் கோயில்கள். 12 புத்த மதக் குகைகள் தான் முதன் முதல் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயில்களில், "சைத்தியம்" என்று அழைக்கப் படும் வழிபாட்டு தலம், விஹாரம் என்று அழைக்கப் படும், பிட்சுக்களின் தங்குமிடங்கள் அடங்கும்.

இந்து மதக் குகைக் கோயில்களில் பதினேழு இருக்கின்றன. அவற்றில் தசாவதாரத்தைச் சிறப்பிக்கும் குகையும், கைலாசநாதர் கோயிலும் சிறப்பான ஒன்று. அதிலும் கைலாசநாதர் கோயில் உள்ள குகை ஒரே கல்லால் செதுக்கப் பட்ட உலகின் ஒரே பெரிய குகைக் கோயில் என்ற மாபெரும் சிறப்பைப் பெற்றது. இந்தக் கைலாசமலைக் கோயிலை மையமாக வைத்தே, தென் பக்கம் 16 குகைக் கோயில்களும், வடப்பக்கம் அதேபோல் 16 குகைக் கோயில்களும் அமைந்துள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது. அஜந்தாவின் ஓவியங்கள் காலப் போக்கில் மறைந்து, பின்னர் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது போல் இல்லாமல், எல்லோரா குகைக் கோயில்கள் தொடர்ந்து மனிதர்களால் பார்வை இடப் பட்டு வந்திருக்கின்றது. "வெருல்" என்று முன்னாட்களில் அழைக்கப் பட்ட இந்த எல்லோரா குகை இருக்கும் ஊர் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இன்றளவும் ஈர்த்து வருகின்றது.


இதோ இப்போது மேலே ஏறவேண்டும், ஏறும்போது சற்று நிதானமாகவே ஏறவேண்டி உள்ளது. படிகள் எல்லாம் உளியால் எப்போதோ செதுக்கப் பட்டவை. அதுவும் மலைப் பாறைகளின் போக்குக்கு ஏற்ப ஒரு இடத்தில் உயரமாயும், ஒரு இடத்தில் உயரம் குறைந்தும், ஒரு இடத்தில் அகலமாயும், ஒரு இடத்தில் அகலமே இல்லாமல் சும்மா கால் விரல்களை மட்டுமே ஊன்றி ஏறும்படிக்கும் உள்ளது அல்லவா? பார்த்து கவனமாய் ஏறவேண்டும். கடைசிப் படி மேலே ஏறும்போது உயரம் அதிகம். ஆனால் நாம் கால் வைத்திருக்கும் படியோ அகலமே இல்லை. எப்படி ஏறுவது? அம்மா, ஒரு வழியாய் ஏறியாச்சு, பின்னால் தள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் ஒரு 200 அடிக்கு மேல் கீழே விழுந்துடுவோம். ஏறி வந்தாச்சா??? எதிரே???? ஆஹா, எவ்வளவு பெரிய புத்தர்?????

No comments:

Post a Comment