Tuesday, June 10, 2008

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள்

குகைகளின் அமைப்பை மேற்கண்ட படத்தில் பார்க்கலாம், இங்கே படங்கள் எடுக்கவேண்டுமானால் டிஜிட்டல் காமிராவில் தான் எடுக்க முடியும் அல்லது குறிப்பிட்ட வீடியோ காமிரா மட்டுமே. இவை இரண்டையும் தவிர, மற்ற ஃப்ளாஷ் அமைப்புக் கொண்ட கற்கால(எங்க கிட்டே அதான் இருக்கு, அப்போ கற்காலம் தானே) காமிராக்கள் அனுமதி இல்லை. மொபைலில் இருந்து கிளம்பும் ஃப்ளாஷ் கூட அனுமதிக்கப் படவில்லை. தெரியாத்தனமாய் ஒருத்தர் மொபைலில் இருந்து ஃப்ளாஷ் கிளம்ப அவர் அங்கே இருந்த ஊழியரால் வலுக்கட்டாயமாய் வெளியேற்றப் பட்டு பின்னர் மொபைலைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். மஹாராஷ்டிராவின் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இவை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. மேலும் வழிகாட்டியும் அங்கீகரிக்கப் பட்டவராய் இருந்தால் தான் நல்லது. இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் மூலமோ, அல்லது மஹாராஷ்டிர அரசின் சுற்றுலாத் துறையின் மூலமோ ஏற்பாடுகள் செய்து கொண்டு போவதே மிகச் சிறந்தது. இந்தியருக்குக்குறைந்த அளவுப் பணமே செலவு ஆகின்றது. எல்லோரா குகைகள், தெளலதா பாத், த்ருஷ்ணேஸ்வரர் ஜ்யோதிர் லிங்கம், பீபி கா மக்பரா, தண்ணீரில் ஓடும் மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவைகளை ஒரே நாளில் சென்று பார்க்க ஒரு நபருக்கு 200ரூ வசூலிக்கப் படுகின்றது, இது பேருந்துக்கான செலவு. அங்கே போனால் நுழைவுக்கட்டணம் 20 ரூயில் இருந்து 25 ரூக்குள் தான் இருக்கும். வழக்கம் போல் குழந்தைகளுக்கு அரைக்கட்டணம், வெளிநாட்டுக்காரர்களிடம் அதிகமாகவே வசூலிக்கின்றனர். அஜந்தா குகைகள் ஒளரங்காபாத்தில் இருந்து 120 கி.மீ தள்ளி இருப்பதால், அதற்குச் சென்றுவரபேருந்துக் கட்டணம் நபர் ஒருவருக்கு 300 ரூ. வழிகாட்டிகள் தனியாக டிப்ஸ் கொடுன்னு என்றெல்லாம் கேட்பதில்லை. இனி குகையின் அமைப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். குகையின் மேல் கஷ்டப் பட்டு ஏறி விட்டோம் நேற்றே. எதிரே தெரிந்தது பெரிய புத்தர் சிலை.
இந்த புத்தர் சிலையின் அமைப்பு புத்தர் தன் கொள்கைகளைச் சீடர்களுக்கு போதிக்கும் நிலையில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். தென்பகுதியில் இருக்கும் இந்த முதல் குகையில் புத்தரின் பெரிய உருவச் சிலை இருந்தாலும், இது புத்த சைத்தியமாய்த் தெரியவில்லை. இருபக்கங்களிலும் இருக்கும் அறைகளைப் பார்த்தால் பிட்சுக்களின் தங்குமிடங்களாய் இருந்திருக்கும் வாய்ப்பு உண்டெனத் தெரிகின்றது. நம் வழிகாட்டியும் அதே சொல்கின்றார். புத்தருக்குப் பின்னால் இது என்ன ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இடைவெளி??? இந்த இடைவெளியின் பின்னால் மறைந்து கொள்ளவும் முடியும், அங்கே இருக்கும் மற்றொரு வழியாக வேறு வழியில் செல்லவும் முடியும்! அப்பாடி??? அப்போ அந்தக் காலத்தில் புத்த பிட்சுக்கள் ராஜவம்சத்தினரைப் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டே? அப்போ இப்படித் தான் ஒளிந்து கொண்டிருப்பார்களோ????? அல்லது ஏதேனும் சதித்திட்டம் நிறைவேற்றப் போயிருப்பார்களோ?? ஆவல் அதிகரிக்கின்றது போய்ப் பார்க்க. ஆனால் வழிகாட்டியின் கண்டிப்பான கட்டளையால் புத்தர் சிலையின் பின்னால் சென்று பிரதட்சிணமாய் வர மட்டுமே முடிகின்றது நம்மால்.

புத்தரின் உருவங்களை பெரியதாக அமைத்ததின் காரணம் புரியவில்லை என்றாலும் அதன் அருகே நிற்கும்போது, நாம் எத்தனை சிறியவர் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதலில் இருக்கும் இந்தச் சில குகைகள் "தேராவாரா" குகைகள், அல்லது "தேதாவதா" குகைகள் என்றும் அழைக்கப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. தேரா என்றால் புத்தமதப் பிரசாரகர்கள் அல்லது ஆசிரியர்கள் எனவும் தெரிய வருகின்றது. பக்கத்துக்கு நான்காக இருபக்கமும் சேர்த்து, எட்டுத் தங்குமிடங்கள் அங்கே இருக்கின்றன. சிலது பூட்டி வைத்துள்ளது. திறந்தவற்றில் எட்டிப் பார்த்தால் இரு பக்கமும் இரு கல் திண்ணைகள், (நம்ம ஊர் மாப்பிள்ளைத் திண்ணை போல் அமைப்பில்) இருப்பதைக் காணலாம், ஒரு அறையில் இரு பிட்சுக்கள் வீதம் தங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு அறைக்கும் வெளியே தரையில் பெரிய, சிறிய அளவிலான குழிகள். சிலவற்றில் விளக்கு ஏற்றப் படும், சிலவற்றில் ஓவியத்திற்கான வண்ணங்கள் கரைக்கப் படும். எதிரே மாலைச் சூரியன் மயங்க, இங்கேயோ வண்ணங்கள் மயங்க, மெலிதான வெளிச்சத்தில் ஓவியங்கள் மட்டும் பிரகாசிக்க, அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகின்றது அல்லவா??? ஓவியங்களையும் சிற்பங்களையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. வெளியே வந்தால் பாறைகள், இந்தப் பாறைகளில் என்ன அழகு இருந்தது??? அதை எப்படி யோசித்தனர்?? எப்படி உயிரோட்டத்துடன் கூடிய சிற்பங்களை அமைத்தார்கள்??? யோசிக்க வேண்டிய விஷயம் இது! அடடா??? முதல் குகையிலேயே இத்தனை நேரம் ஆக்கினால் மிச்சம்??? இதோ அடுத்ததுக்குப் போவோமா??? சீக்கிரமாய் எல்லாம் வர முடியாது. ஏற வேண்டும், ஏறுவோம் வாருங்கள்!

டிஸ்கி: இந்த சஹ்யாத்திரி மலைத் தொடர்கள் "எரிமலைப் பாறைகள்" நிறைந்தவை என்பதை மறந்துவிட்டோம், நாங்கள் செல்லும்போது. வன வளம் கோடைநாட்களில் இருக்காது என்பதும் மறந்துவிட்டோம், மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் போல் இதுவும் வன வளம் நிரம்பியது என நினைத்து ஏப்ரல், மேயில் சென்றால் வறண்ட பாறைகளையும், காயந்த மரங்களையுமே பார்க்க முடியும். ஆனால் இதுவும் ஓர் அழகுதான். எப்படி முதியோருக்குப் பல் போய், இருந்தாலும் சிரிக்கும்போது அழகு தெரியுமோ, அதுபோல் காய்ந்த இந்த மொட்டைப் பாறைகளும் அழகாகவே தெரிந்தது. எனினும் மழைக்குப் பின்னர் ஒரு முறையாவது போகவேண்டும்,மேகங்கள் தவழ்வதையும், மேலிருந்து அருவிகள் கொட்டுவதையும், செடிகளின் பச்சையையும், கீழே ஓடும் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதையும் பார்த்துக் கொண்டே, மலைப்பாதையின் விளிம்பில் முன்னங்கால்களை மட்டும் வைத்து ஏறிக் கொண்டே ஒவ்வொரு குகையாகப் பார்க்க வேண்டும். போவதாய் இருந்தால் மழை முடிந்து ஆகஸ்டிலோ, செப்டம்பரிலோ போவதே சிறப்பு.

2 comments:

  1. சரியா நம்பர் போட விட்டுடீங்க! சிபேஎகு-3 ந்னு போடலாமோ?
    :-))

    ReplyDelete
  2. கமெண்ட் போட்டதே தெரியலை. தானே பப்ளிஷ் ஆயிருக்கு போல! :))))

    ReplyDelete