Thursday, June 26, 2008
சித்திரம் பேசுதடி!!-எல்லோரா குகைகள் தொடர் 5
ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது, அஜந்தா பற்றி எழுதி. வேலை அதிகம், மேலும் முன்கூட்டி எழுதி வச்சுக்கவும் முடிவதில்லை. அப்போ, அப்போ நேரம் கிடைக்கும்போது எழுதுவதால் இது தள்ளிப் போட்டாச்சு. தாமதத்திற்கு மன்னிக்கவும். இனி அடுத்த குகைக்குப் போவோமா???
************************************************************************************************************
. புத்த மதக் குகைகள் மொத்தம் 12 என்று சொல்லப் படுகின்றது. பனிரண்டும் இருந்தாலும் வழிகாட்டிகள் காட்டுவது முக்கியமான மூன்று அல்லது நான்கு குகைகள் மட்டுமே. மற்றவை சிதிலமடைந்து வருகிறபடியால் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகத்தரத்துக்கு மேற்பட்ட ஒப்பற்ற அமைப்புகளுடன் கூடிய இந்தக் குகைக்கோயில்கள் பாதுகாக்கப் பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். நம்முடைய நாகரீகமும், கலாசாரமும், ஆடை, அலங்காரமும், கட்டிடக் கலைத் திறமையும் இந்தக் குகைக்கோயில்களின் மூலம் நன்கு வெளிப்படுகின்றது. வெறும் உளியும், சுத்தியும் வைத்துக் கொண்டே, இவ்வளவு திறமையாக யோசித்து அமைத்திருப்பது இந்தியர்களின் கட்டிடக் கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.
எட்டாவது குகையின் புனிதக் கோயில் பின்பக்கத்துச் சுவற்றில் இருந்து சற்றே தனித்துக் காணப்படும் ஒரே மடாலயம் ஆக உள்ளது.வட்டவடிவமான பாதையுடன் கூடிய இந்தக் குகையின் மூன்று தங்கும் அறைகளும், மற்றவை முடிக்கப்படாமலும் காண்கின்றோம். அடுத்துள்ள ஒன்பதாவது குகைக்கு மேல்தளம் இருக்கின்றது. என்ன ஆச்சரியம்?? அந்தத் தளத்தில் பால்கனியும் இருக்கு!!!! மேலும் தேவதையான தாரா, பக்தர்களைப் பாம்பு, கத்தி, யானை, நெருப்பு, மற்றும் கடல்புயலினால் ஏற்பட்ட கப்பல் சேதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் காட்சியை முன்பக்கத்தில் காணலாம். பத்தாவது குகை விஸ்வகர்மா என்ற தேவலோகச் சிற்பியின் பெயரால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த குகை புத்த சைத்தியங்கள் அந்தக் காலங்களில் எவ்வாறு அமைக்கப் பட்டிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. விஸ்வகர்மாவை தேவதைகளின், அல்லது கடவுளரின் சிற்பி என்றே சொல்கின்றனர், என்பதில் இருந்து கலாசாரம் அன்றே எவ்வாறு இருந்திருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. மிகப் பெரிய கூடத்தின் மூன்று பக்கங்களும், மிருகங்களின் சிற்பங்களால் ஏற்படுத்தப்பட்ட அஸ்திவாரத்தின் மேலேயே எழும்பி உள்ளது. மிருகவேட்டை ஆடுவோரின் தோற்றங்கள் உள்ள ஓவியம் மேலே காணப்படுகின்றது. ஒரு பெரிய ஸ்தூபம் பக்கத்துச் சுவரின் நடுவே காணப்படுகின்றது. அழகிய புத்தரின் சிற்பமும் அதில் உள்ளது.
வெராந்தா என்று சொல்லப் படும் இடத்தில் இருந்து படிகள் மேலே செல்கின்றன. மேலேயும் அழகான ஒரு சைத்தியம் காண்கின்றோம். போதி சத்துவர்களும், தெய்வ உருவங்களும் பெண் உதவியாளர்களும் காண்கின்றோம். தாமரைப் பூக்களும், பெண்கள் அணிந்திருக்கும் உடை அமைப்பும், தலை அலங்கார அமைப்பும், போட்டிருக்கும் நகைகளில் இருந்தும் அன்றைய கலாசாரம் புரியவருகின்றது. அதே சமயம் ஆப்பிரிக்க இனத்தவர்கள் போன்ற சிலரும் ஓவியங்களில் காணக் கிடைக்கின்றனர். 11-ம் குகை இரண்டு தளங்கள் உள்ளது. கீழ்த்தளம் முழுக்க இடிந்துவிட்டதாயும், தற்சமயம் காணக்கிடைக்கும் தாழ்தளம் புத்தரின் போதிக்கும் சிற்பத்துடனும், இரண்டு அறைகளுடனும், , நடுத்தளம் முடிவடையாத நிலையிலும் உள்ளது. இதனுள் செல்ல அனுமதி இல்லை, எனினும் இது பின்னாட்களில் இந்துக்களால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஏனெனில் இங்கே துர்கை, விநாயகர் காணப்படுகின்றனர். பனிரண்டாம் குகை மூன்று தளங்கள் உள்ளது.
கீழ்த் தளம் இருபக்கமும் அறைகளுடன், ஒரு மடாலயமாகக் காணப்படுகின்றது. அடுத்து வரும் நடுத்தளமும் கீழ்த்தளம் போன்றே இருக்கின்றது. மேல் தளத்தில் ஏழு வகையான புத்தர் சிலைகள் சுற்றிலும், தெய்வ உருவங்களுடன் காண்கின்றோம். மேலும் உள்ளே சென்றால் பனிரண்டு தேவதைகள், ஈரிதழ்த் தாமரையில் அமர்ந்த கோலத்தின் காணலாம். பதின்மூன்றாம் குகை சாமான்கள் மட்டும் வைக்கும் இடமாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு. இனி நாம் காணப்போவது இந்துமதக் குகைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
என்னத்தைச் சொல்ல, நான் வொர்டு வெரிபிகேஷனே கொடுக்கலை, அது எப்படி வந்துச்சுனு புரியலையே??? :)))) கணினி மாறினா இதுவும் மாறுமோ???
ReplyDelete