
இவற்றின் விளக்கங்கள் வருமாறு:
1. கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன்.
2. ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா???
3. சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா? அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.
4. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன்.
5. டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர்.
6. மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இருந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார்.
நல்ல பதிவு தலைவி ;)
ReplyDelete