Tuesday, August 25, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! - பாலசந்திரன்!


“மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

“செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும் அப்பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.”

நாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம்.

“வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேதமுடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

வேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

காசியபரின் காரியசித்தி மாலை நாளை நிறைவு பெறும்.

No comments:

Post a Comment