Saturday, August 22, 2009
தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! -லம்போதரன்!
7. லம்போதரன்: லம்போதர லக்குமிகரன். இத்தனை பெரிய வயிறு இருக்கே?? உலகையே உள்ளடக்கி இருப்பதால் வயிறு பெரிசா இருக்கு. அண்ட பகிரண்டத்தையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் பெரிய வயிற்றைக் கொண்டவன்.
8. கஜானனன்: கஜமுஹாசுரனை அடக்கியதால் ஏற்பட்ட பெயர். ஆணவத்தின் வடிவன் அவன். ஆனை முகம் கொண்ட அவனை அடக்கியதால் யானைமுகனும் இந்தப் பெயர் பெற்றான்.
9. ஹேரம்பன்:தன் பக்தர்கள் வேண்டிப் பிரார்த்தனை செய்து அபிஷேஹ ஆராதனைகள் செய்யணும்னு எல்லாம் காத்திருக்காமல், ஒரு அருகம்புல்லைச் சாத்தினாலே உள்ளம் குளிர்ந்து போய் கஷ்டப் படுபவர்களை ரக்ஷிக்கின்றான் விநாயகன். அதனால் ஹேரம்பன் என்னும் பெயர்.
10. வக்ரதுண்டன்: பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளைத் தடுப்பவன். தீமைகளைத் தடுக்கும் தன் மகனுக்கு அருமை அன்னை வைத்த பெயர் இது.
11. ஜேஷ்டராஜன்: மூத்தவன். அனைவருக்கும் மூத்தவன் என்பது இங்கே பொருந்துமோ? ஏனெனில் ஸ்கந்தபூர்வஜன் என்ற பெயரும் விநாயகனுக்கு உண்டு. முழுமுதல் பொருளாக இருப்பதால் ஜேஷ்டராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம்.
12. நிஜஸ்திதி: ஸ்திதி நிலைத்து இருப்பது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வது மண்ணும், நீரும் கொடுக்கும் வளங்களாலேயே. அந்த மண்ணிலும் நீரிலும் நிலைத்து இருப்பவன், மூலாதாரப் பொருளாக இருப்பவன் விநாயகனே. அதனாலேயே பிள்ளையார் பிடிக்கிறதுனால் களிமண்ணை நீரில் குழைத்துப் பிடிக்கிறோம். இப்படி உண்மையாக நிலைத்து அனைத்து உயிர்களிலும் இருப்பதால் அவன் நிஜஸ்திதியாகக்கூறப்படுவான்.
13. ஆஷாபூரன்: புருகண்டி முனிவர் விநாயகரைக் குறித்துத் தவம் இயற்றி, இயற்றிக் கடைசியில் விநாயகர் போல் அவருக்கும் தும்பிக்கை ஏற்பட்டது. விநாயகரின் உதவியால் தன்னுடைய ஆசைகள் நிறைவேறியதால் இப்பெயரை அவரே விநாயகருக்குச் சூட்டினார்.
14. வரதன்: அனைவருக்கும் வேண்டியவரங்களைக் கொடுப்பவன்.
15. விகடராஜன்: இந்த மாயாலோகம் என்று சொல்லப் படும் பிரபஞ்சத்தில் உண்மையாகப் பரம்பொருளாய்த் தோன்றுபவன்.
16. தரணிதரன்: இந்த பூமியை அவனே ஆள்கின்றான். ஆகையால் அதையே ஆபரணமாகவும் அணிகின்றான். எப்போதும் காத்து ரக்ஷிப்பவன் அவனே.
17. சித்தி, புத்தி பதி: மனிதருக்குத் தேவையானது சித்தியும், புத்தியும். சித்தி என்னப்படும் கிரியாசக்தியும், புத்தி எனப்படும் இச்சாசக்தியும் நன்கு வேலை செய்தாலே ஞானசக்தியை அடைய முடியும், அத்தகையதொரு சக்திகளை தன்னுள்ளே கொண்டவன் விநாயகன் ஞானசக்தியாகவே தென்படுகின்றான். ஞானத்தை அவனே அளிக்கின்றான். சித்தி, புத்திக்கு அவனே தலைவன்.
18. பிரம்மணஸ்பதி: பிரம்மா வைத்த பெயர் இது. பிரம்மம் என்றால் சப்தம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. வேத நாதமாக, ஓங்கார சொரூபமாக, வேத நாதத்திற்கும் ஆதாரமாய்க் காட்சி கொடுக்கும் விநாயகனை பிரம்மணஸ்தபதி என அழைத்தார் பிரம்மா.
19. மாங்கல்யேசர்: விநாயகர் அனைத்தையும் காத்து ரக்ஷிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
20. சர்வபூஜ்யர்: எந்தத் தெய்வ வழிபாடென்றாலும் விநாயக வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க முடியாது. முன்னதாக அவரை வணங்க வேண்டும். அனைவராலும் வழிபடப் படுபவர் விநாயகர். அதனாலே சர்வ பூஜ்யராக இருக்கின்றார்.
21. விக்னராஜன்: அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவர். திரிபுர சம்ஹாரத்திற்குச் சென்ற ஈசனின் தேர் அச்சு முறியவும், விநாயக வழிபாடு செய்யாததால் அவ்வாறு இடையூறு ஏற்பட்டதாகவும் , விநாயக வழிபாட்டுக்குப் பின்னர் தடை இல்லாமல் சம்ஹாரம் முடிந்ததாகவும், புராணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் தேவி மஹாத்மியத்தில் அசுரன் செய்த விநாயகனின் சக்கர வழிபாடு தேவியின் வதத்தைத் தடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதை முறித்த பின்னரே தேவியினால் வழிபட முடிந்தது என்றும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவனே விநாயகன்.
விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், புருவங்கள் காற்றையும் புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கின்றன.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு! ;)
ReplyDelete