Thursday, March 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!! 5

மற்றொருநாள் திருஒற்றியூரிலே இரவு அர்த்தஜாம வழிபாடு முடிந்து திரும்பும்வேளையில் வானம் கருத்து பாதை தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருக்கவே அடிகளார் தாமும், தம்முடன் வந்த நண்பர்களும் கோயிலின் மகாமண்டபத்தில் தங்கிச் செல்லலாம் என யோசனை சொல்ல அனைவரும் ஒப்புக் கொண்டனர். மகாமண்டபத்திற்குச் சென்று அங்கே படுத்துக் கொண்டனர் அனைவரும். ஆனால் யாருக்கும் தூக்கமே வரவில்லை. அனைவருக்குமே பசி வயிற்றைக் கிள்ளியது. ராமலிங்க அடிகள் மட்டுமே தூங்க ஆரம்பித்தார். அப்போது நண்பர்கள் அனைவரும் புரண்டு படுக்கும் ஓசை கேட்டுக் கண்விழித்து, என்ன முதலியாரே? உறங்கவில்லையா எனக் கேட்க, அவரோ பசி வயிற்றைக்கிள்ளுவதாய்க் கூறினார். தனக்கும் பசி இருப்பதாய் அடிகள் ஒப்புக் கொள்ள அனைவரும் சேர்ந்து திரு ஒற்றியூர் தியாகராஜப் பெருமானைத் தான் வேண்டிக்கொள்ளவேண்டும் என முடிவு செய்து கொண்டனர். அவ்விதமே அனைவரும் வேண்டிக் கொண்டனர்.



தியாகராஜப் பெருமான் தம் அடியார் பசி பொறுக்காமல் தவிக்க விடுவாரா? கோயிலின் தலைமை குருக்கள் போல் மாறி கையில் பிரசாதத்தட்டோடு சென்றவர் தற்செயலாய்ப் பார்த்தவர் போல் நடித்து அவர்கள் முன்னிலையில் வந்து நின்றார். அவர்கள் அனைவருமே கோயிலின் குருக்கள் என்றே நினைத்தனர். என்ன இன்னுமா வீட்டிற்குப் போகவில்லை என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, தலைமை குருக்களும் இவர்கள் பசியோடிருக்கும் நிலையைப் புரிந்துகொண்டாற்போல் தம்மிடமிருக்கும் பிரசாதங்களைக் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். ஆனாலும் சோமு செட்டியாருக்கோ சந்தேகமாகவே இருந்தது. அவர் முகத்தைப் பார்த்த ராமலிங்க அடிகள் என்னவென்று கேட்க கோயிலின் தலைமை குருக்கள் இரண்டு நாளாக வரவில்லை என்றும், வெளியூர் சென்றிருப்பதாகவும் நாளைக்குக் கூட வருவது சந்தேகம் என்றும் கோயிலின் மற்ற குருக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதாய்ச் சொன்னார். அப்படி எனில் வந்தவர் யார்?? தலைமை குருக்கள் இல்லையா???

அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ராமலிங்கம் அனைத்தையும் கேட்டுவிட்டு மெளனமாகக் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.



அவர் கண்களில் ஐயன் உருவம் நன்கு தெரிந்தது. தலைமை குருக்களாக மாறிய ஐயன் மீண்டும் ஐயனாகவும் மாறவே வந்தது யார் எனப் புரிந்து கொண்ட அடிகள் வந்தது “தியாகராஜனே! ஒற்றியூர் மாமணியே!” என வியந்து போற்றிப் பாடல் ஒன்றை அக்கணமே புனைந்தார்.



நான் பசித்தபோதெல்லாம் தான் பசித்ததாகி

நல் உணவு கொடுத்தென்னைச் செல்வம் உற வளர்த்தே

ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே

ஒள்ளியதென் அமுதெனக்கிங்குவந்தளித்த ஒளியே.”

ராமலிங்க அடிகளின் பக்தியினாலும் அவரின் தவத்தாலும் தங்கள் அனைவருக்கும் கிடைத்த பெறர்கரிய பேறை எண்ணி எண்ணி அனைவரும் வியந்தனர். அடிகளாரின் வீட்டில் இதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர். அடிகளாரின் அண்ணனுக்கும், அண்ணிக்குமே மிகவும் பெருமிதமாகவும் இருந்தன அனைத்தும். அடிகளாரின் பக்தியும் ஆன்மீக ஈடுபாடுகளும், புராணப் பிரசங்கங்களும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. ஆனால் அவர் தாயாருக்கோ தம் இளைய மகன் இத்தனை வயது ஆகியும் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்தவில்லையே என எண்ணி மனம் வருந்தினார். திருமணம் செய்விக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும்படி ராமலிங்க அடிகளின் அண்ணனாகிய சபாபதிப்பிள்ளையை வேண்டினார்.



தன் தம்பி ராமலிங்கத்தின் மனப்போக்கை நன்கறிந்திருந்த சபாபதிப்பிள்ளை அவருக்கு இல்வாழ்க்கையில் நாட்டமில்லை என்பதையும் புரிந்து கொண்டிருந்தார். ஆனாலும் அவர் அன்னைக்கு இது சம்மதமாய் இல்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். அவர் வற்புறுத்தலின் பேரில் அடிகளாரின் நண்பராகிய ஒரு துறவியின் மூலம் அடிகளாரின் சம்மதத்தைப் பெற்று அவருக்குத் திருமணமும் நடத்தினார்கள். கடும் முயற்சிக்கும், கடும் விவாதத்துக்கும் பின்னர் திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்திருந்த அடிகளாரின் மனமோ திருமணத்திலே ஈடுபடவே இல்லை. என்றாலும் தாயின் மன அமைதிக்காகவும் திருஞானசம்பந்தரை மேற்கோள் காட்டியும் ராமலிங்க அடிகளைச் சம்மதம் கூற வைத்த துறவியாராலேயோ, அல்லது அடிகளாரின் அண்ணனாலேயே திருமணம் முடிந்த கையோடு திரு ஒற்றியூருக்குத் தன்னந்தனியாக வந்து வழிபாடு நடத்தி இறைவன் திரு உருவத்தின் முன்பு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்த ராமலிங்கத்தைத் தடுக்க முடியவில்லை. பெருமானிடம் முறையிட்ட வண்ணமே அடிகளார் பாடியதாவது:



முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ

தெரிந்திலேன் மோகமேலின்றித்

தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்

ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்

குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக்

கலப்பிலேன் மற்றிது குறித்தே

பனித்தனன் நினைத்த தோறும் உள் உடைந்தேன்

பகர்வதென் எந்தை நீ அறிவாய்!”


இவ்வாறு பாடி முடித்துவிட்டு வெடவெடத்த நடுக்கும் உடலோடு, ஆறாய்ப் பெருகிய வியர்வை வெள்ளத்தோடு மகாமண்டபத்திற்கு வந்து தியானத்தில் அமர்ந்து சிவசிந்தையோடு தியானத்தில் ஆழ்ந்தார். தம்மை மறந்தார்

2 comments:

  1. //தியாகராஜப் பெருமான் தம் அடியார் பசி பொறுக்காமல் தவிக்க விடுவாரா? கோயிலின் தலைமை குருக்கள் போல் மாறி கையில் பிரசாதத்தட்டோடு சென்றவர் தற்செயலாய்ப் பார்த்தவர் போல் நடித்து அவர்கள் முன்னிலையில் வந்து நின்றார்.//
    முன்னர் வடிவுடை அம்மன் வந்து பசிக்கு உணவு கொடுத்து சென்றார்
    இப்போது தியாகராஜபெருமான் உணவு கொடுக்க வந்து இருக்கிறார் .,
    கடவுளுனின் கருணையை என்னவென்று சொல்வது !
    சொல்ல தான் நான் யார் என்று தோன்றுகிறது ....................

    இந்த நிகழ்வுகளை பதிவின் மூலம் தெரிய படுத்தியதற்கு நன்றி கீதாம்மா

    ReplyDelete
  2. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ப்ரியா.

    ReplyDelete