Monday, February 28, 2011

நந்தன் புகழ் பாடிய கோபாலகிருஷ்ண பாரதி!

கோபாலகிருஷ்ண பாரதியார் காலம் 1811-1896

தஞ்சை ஜில்லா நரிமணம் என்னும் ஊரில் பிறந்த இவர் ஸத்குரு தியாகராஜ ஸ்வாமியின் சம காலத்தவர் ஆவார். இவரின் சங்கீத ஞானத்தைத் தியாகராஜரும், தியாகராஜரின் ஞானத்தை இவரும் பாராட்டினதாயும் சொல்லுவார்கள். பாரதியாரின் தந்தை ராமஸ்வாமி பாரதி ஒரு பாடகராய் இருந்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் அத்வைதம், யோக சாஸ்திரம் போன்றவற்றை மாயவரத்தில் ஓர் குருவிடம் இருந்து கற்றார். உலக வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபடாவிட்டாலும் தன்னளவில் இவர் ஓர் துறவியைப் போலவே வாழ்ந்தார். குடும்பப் பின்னணியும் சங்கீதத்தைச் சார்ந்தே இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தால் ஈர்க்கப் பட்டார். தானே பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இயல்பாகவே இவருக்கு வந்தது. அவர் காலத்தில் இருந்த மற்ற சங்கீத வித்வான்களின் கச்சேரிகளையும் அடிக்கடி கேட்டுத் தன் சங்கீத்தத்தை மேலும் மெருகேற்றினார்.

அத்வைத சித்தாந்த்தை ஒட்டியே இவர் பாடிய பல கிருதிகள் மற்ற சங்கீத வித்வான்களாலும் பாடப் பட்டு இவர் காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. பல சங்கீத வித்வான்கள் இவரிடம் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கீர்த்தனைகளை இயற்றித் தரும்படிக் கேட்டுக் கொண்டு பாடுவதுண்டு. இவர் தன் பாடல்களில் கடைசியில் தன் பெயரான கோபாலகிருஷ்ணா வரும்படியாக இயற்றி வந்தார். இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் ஒரு சங்கீத கதா காலட்சேபமாக இவர் காலத்திலும், அதற்கு அப்பால் இன்று வரையிலும் நிலை பெற்று இருக்கிறது.

இதை ஒட்டியே நந்தனார் என்னும் திரைப்படமும் பின்னாட்களில் எடுக்கப் பட்டு இவர் பெயரும், நந்தனார் சரித்திரமும் வரலாற்றில் சொல்லும்படியாக நிலை பெற்றது. நந்தன் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபால கிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள் இதில் உள்ள இலக்கணப் பிழைகளை மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தில் பிழை எனச் சொல்லி இந்த நந்தனார் சரித்திரத்திற்குப் பாயிரம் எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார். பின்னால் கோபால கிருஷ்ண பாரதியார் நடையாக நடந்து, மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தன்னுடைய என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார். பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற பாலசரஸ்வதி இவரின் குறிப்பிட்ட சில பாடல்களைத் தன் அபிநயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். எம்.எம். தண்டபாணி தேசிகர் என்னும் சங்கீத வித்வானை நந்தனாராக நடிக்க வைத்து எடுக்கப் பட்ட கோபாலகிருஷ்ணபாரதியின் நந்தன் சரித்திரம் இன்றளவும் பேசப் படுகின்றது.

அப்போது சுதந்திரப் போராட்ட நாட்களாகவும் இருந்த காரணத்தால் தீண்டாதவர் குலத்தில் பிறந்த நந்தனாரைக் கதாநாயகராய்ப் போட்டு எடுத்த இந்தப் படத்தை மஹாத்மா காந்தி தன் மற்ற சீடர்களுடன் பார்த்து மனம் உருகினார் என்று சொல்லப் படுகிறது. நந்தனார் எவ்வாறு சிதம்பரம் நடராஜரைப் பார்த்து மகிழவேண்டும் என உள்ளம் உருகத் துடித்தாரோ , முக்தி பெற வேண்டும் என உருகினாரோ அவ்வாறே மஹாத்மா காந்தியும் இந்திய சுதந்திரத்தைக் காணத் துடித்ததாக அந்நாட்களில் பேசப் பட்டது. காந்தியை நந்தனார் இடத்திலும், இந்திய சுதந்திரத்தை நடராஜராகவும் உருவகப் படுத்தப் பட்டதாய்ச் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. நந்தனார் சரித்திரத்தில் இருந்து சில பாடல்கள் கீழே:-



சிதம்பரம் போகாமல்...
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி

பல்லவி
சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்

சரணம்
பக்தியும் மனமும் பொருந்தின தங்கே
சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே
ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே.






ஆண்டிக் கடிமைகாரன்...

ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ரூபகம்

பல்லவி
ஆண்டிக் கடிமைகாரன் அல்லவே - யான்
ஆண்டிக் கடிமைகாரன் அல்லவே (ஆண்டை)

அநுபல்லவி
மூன்று லோகமும் படைத்தளித்திடும்
ஆண்டவர் கொத்தடிமைக்காரன் (ஆண்டை)

சரணம்
ஆசைக் கயிற்றினில் ஆடி வரும் பசு
பாசம் அறுத்தவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

தில்லை வெளிகலன் தெல்லை கண்டேறித்
தேறித் தெளிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)

சீதப் பிறையணிந் தம்பலத் தாடிய
பாதம் பணிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)


சபாபதிக்கு வேறு தெய்வம்...

ராகம்: ஆபோகி
தாளம்: ஆதி

பல்லவி
சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானமாகுமா [தில்லை சபாபதிக்கு]

அநுபல்லவி
கிருபானிதி இவரைப்போல
கிடைக்குமோ இந்த தரணி தனிலே [சபாபதிக்கு]

சரணம்
ஒரு தரம் சிவ சிதம்பரம்
என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமோ
ஆரியர் புலயர் மூவர் பாதம்
அடைந்தார் என்று புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம்
கோபாலக்ருஷ்ணன் பாடும் தில்லை [சபாபதிக்கு]



அடுத்து வருவது கோபாலகிருஷ்ண பாரதியார் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சிறப்புப் பாயிரம் வாங்கியதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

பாட்டுப் பாடிக் கொடி ஏற்றிய உமாபதி சிவாசாரியார்

2. உமாபதி சிவாசாரியார் - சிதம்பரம்


தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் அறிவுத் திறனை உணர்ந்த சோழ மன்னன் அவருக்கு முத்துப்பல்லக்கு, நாகரா, பகலிலும் விளக்குடன் செல்லும் உரிமை போன்றவற்றை அளித்திருந்தான். ஒரு நாள் இவர் நடராஜரைத் தரிசித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது சைவ சித்தாந்ததில் ஊறியவரும், வேதாந்தியும் ஆன மெய்கண்டாரை அவர் சீடர்களுக்குப் பாடம் சொல்லும்போது காண நேர்ந்தது. உமாபதி சிவாசாரியார் தெருவைக் கடந்து செல்லுவதாயும் மெய்கண்டாரின் சீடர்கள் கூறினர். உடனேயே மெய்கண்டார் ,"பட்ட கட்டையில் பகற்குருடன் போகிறான் பாருங்கள்" என்று பரிகாசம் செய்தார். இதைக் கேட்ட உமாபதி சிவாசாரியாருக்கு உடனேயே தன் தவறு புரிந்து விவேகமும் அதீத ஞானமும் தோன்ற அங்கேயே மெய்கண்டாரின் காலில் விழுந்து அவரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டதாய்ச் சொன்னார். imagesஉமாபதி.jpg

ஒருநாள் தன் ஞானகுருவான மெய்கண்டாருடன் நெசவாளர் தெருவழியாக நடந்து செல்லுகையில் துணிக்குப் போடும் கஞ்சியை எடுத்துக் குடித்தார் மெய்கண்டார். அந்தக் கஞ்சியானது அவரின் தோள் வழியே வழிந்தது. வழிந்த கஞ்சியை ஒரு பிரசாதமாய்க் கருதித் தானும் பருகினார் உமாபதி சிவாசாரியார். இந்தத் தீவிரமான குருபக்தியைக் கண்டு ஒருபக்கம் வியந்தாலும், சிதம்பரம் தீக்ஷிதர்கள் அவரைத் தங்கள் குழுவில் இருந்து விலக்கி வைத்தனர். அன்றிலிருந்து தில்லைக்கு வெளியே கொற்றவன் குடி என்னும் இடத்திலே தங்கி இருந்து வந்தார் உமாபதி சிவாசாரியார்.
13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர், தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாய்க் கொண்ட இவர் தம் குருவிடம் சைவ நூல்களைப் பயின்றார். இவர் இயற்றிய பல நூல்களுள் "உண்மை நெறி விளக்கம், வினா-வெண்பா, கொடிக்கவி" ஆகியன மிக மிக முக்கியமானவை. "கோயிற்புராணம்" என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் "சேக்கிழார் புராணம்" என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், "பெளஷ்கர ஆகமம்" என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.

தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை, வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.

கீழே அந்தக் கொடிக்கவிப் பாடல்களைக் கொடுத்துள்ளேன்.




கொடிக்கவி
1.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

Friday, February 25, 2011

மலயத்வஜன் பெற்ற பெருவாழ்வே வருக வருக!


திருப்பனந்தாள் காசி மடம்

காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத் தவிர இந்தக் காசி மடம். கங்கையின் கரையிலேயே அனேகக் கோவில்கள். அதற்கு என்று உள்ள மடங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இந்தக் காசி மடம் ஸ்தாபித்தது யார் என்று நினைக்கிறீர்கள்? "ஸ்ரீகுமரகுருபரஸ்வாமிகள்" தான் 17-வது நூற்றாண்டில் இதை ஸ்தாபித்தார். 1625-ம் ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவின் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர். திருச்செந்தூரிலேயே தங்கி முருகனை வழிபட்டு வந்த குமரகுருபரர் தல யாத்திரை கிளம்பும் சமயம், அசரீரியாக இறைவன், "நீ யாத்திரை செல்லும் சமயம் எந்த இடத்தில் உன் வாக்குத் தடை பெறுகிறதோ, அவரே உன் குரு. ஞான உபதேசம் அவரிடம் பெற்றுக்கொள்" என உத்தரவு வர மகிழ்ந்து தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் வந்து "கைலைக்கலம்பகம்" என்னும் நூலை இயற்றினார். இதன் ஒரு பகுதிதான் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பின் மதுரை வந்தார்,. திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம் அது. குமரகுருபரர் திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்க நாயக்கர் கனவில் மீனாட்சி அம்மை வந்து, "திருப்பரங்குன்றத்தில் தங்கி இருக்கும் குமரகுருபரர் பெரிய மகான். புலமை மிகுந்தவரும் கூட.அவரை உரிய மரியாதையுடன் அழைத்து வந்து என் சந்நிதியில் அமர்த்தி என் பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்வாயாக." என்று கூறி மறைந்தாள். அம்மன் வாக்குப் படியே திருமலை மன்னர் குமரகுருபரரை அழைத்து வந்து சந்நிதியில் அமர்த்தி அரங்கேற்றம் நிகழச் செய்தார். அர்ச்சகரின் சிறு பெண் குழந்தை வடிவில் வந்த அன்னை மீனாட்சி மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்தாள். மதுரையில் இருந்து புறப்பட்ட குமரகுருபரர் திருவாரூரை அடைந்து தருமபுர ஆதீன மாசிலாமணி தேசிக ஸ்வாமிகளைச் சந்தித்தார். ஆதீனத்தின் ஆதி முதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளுபதேசம் பெற்ற இந்த ஊரில் மாசிலாமணி தேசிகர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி வரும்போது திடீரென குமரகுருபரர் வாக்கு தடை பெற்றது. "இவரே தன் குரு" எனத் தெளிந்த குமரகுருபரர் அவரிடம் தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்படைத்தார்.இப்போதும் தருமபுர ஆதீனத்துடன் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு நெருக்கமான தொடர்பு உண்டு என்கிறார்கள்.

மாசிலாமணி தேசிக ஸ்வாமிகள் குமரகுருபரரைக் காசி சென்று வருமாறு பணிக்க,முதலில் கொஞ்சம் தயங்கிய குமரகுருபரர், பின் குருவே துணை என்று நம்பிக் கிளம்பச் சம்மதித்தார். காடு, மலைகளையும், சிங்கம், புலி போன்ற மிருகங்களையும் எதிர்கொண்டு காசிக்குச் சென்று வரக் கிளம்பினார். வழியில் திருவேங்கட மலைவாழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த சிங்கத்தைத் தன் தவ வலிமையால் அடக்கி அதன் மீது அமர்ந்தார். ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் இந்தப் படம் பலர் வீட்டில் இருக்கும். பார்த்திருப்பீர்கள். காசி நகரை குமரகுருபரர் அடைந்த சமயம் டெல்லியை ஆண்டு வந்த பாதுஷா இவரின் ஆற்றலை உணர்ந்து காசியில் கருடன் வட்டமிடும் இடங்களை இவரின் சமயப்பணிக்குத் தருவதாய் ஒப்புக் கொண்டார். காசியில் தான் தனக்கு இந்துஸ்தானியில் புலமை வேண்டி ஸ்ரீகுமரகுருபரர் "சகலகலாவல்லி மாலை" பாடி இந்துஸ்தானியில் பேசும் திறன் பெற்றார்.

காசியில் "பூ மணக்காது, பிணம் எரியும்போது நாறாது, கருடன் வட்டமிடாது, பசுமாடு முட்டாது," என்பார்கள். இந்நிலையில் கருடன் எப்படிப் பறந்து இவருக்கு இடத்தைக் காட்டுவது என எல்லாரும் திகைக்க, முனிவரின் தவ வலிமையால் கருடன் ஒரு குறிப்பிட்ட பகுதியை வட்டமிட்டது. பாதுஷா தன் வாக்குறுதியை நிறைவேற்ற குமரகுருபரர் "ஸ்ரீகுமாரசாமி மடம்" என்ற பெயரில் ஒரு மடத்தை அங்கே நிறுவி ஆன்மீகப் பணி ஆற்றத் தொடங்கினார். கங்கைக் கரையில் பழுதடைந்திருந்த கேதாரீஸ்வரர் கோவிலைத் தென்னிந்திய முறைப்படிச் செப்பனிட்டுக் கும்பாபிஷேஹம் செய்வித்தார். இன்றைக்கும் "கேதார் காட்" டில் உள்ள கேதாரீஸ்வரர் கோவில் திருப்பனந்தாள் காசி மடத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணலாம். பூஜை செய்பவர்களும் தமிழர்கள் தாம்.

குருநாதரைப் பார்க்க வேண்டி பொன், பொருளோடு வந்த குமரகுருபரரை மாசிலாமணி தேசிகர் காசியிலேயே அவற்றை அறப்பணிகளுக்குச் செலவிடுமாறு சொல்லித் திரும்ப அனுப்பினார். 1688-ம் ஆண்டு தன் சீடர்களுள் ஒருவரான சொக்க நாதரைத் தன் வாரிசாக நியமித்து விட்டுப் பூரணத்தில் இணைந்தார். முதல் 5 பரம்பரையில் வந்தவர்கள் காசியிலேயே தங்கி இருந்தார்கள். 6-வது குரு பரம்பரையில் தான் திருப்பனந்தாளிலும் காசிமடம் ஸ்தாபிக்கப்பட்டது. காரணம் சரபோஜி மஹாராஜா. இவர் அன்னம் பாலிக்கக் கொடுத்த பல கிராமங்களின் நிர்வாகத்தைக் கவனிக்கத் திருப்பனந்தாளிலும் காசி மடம் ஏற்பட்டது.

இதன் 20-வது மஹாசந்நிதானமாக இருந்த ஸ்ரீ அருள்நம்பித் தம்பிரான் காலத்தில் மடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள காசித் திருமடங்களின் அறப்பணிகள் இவர் காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டது. 21-வது பொறுப்பில் இப்போது இருப்பவர் காசிவாசி முத்துக்குமாரஸ்வாமித் தம்பிரான். ஸ்ரீகுமரகுருபரர் காலத்தில் இருந்து எல்லாப் பணிகளும் இன்றைக்கும் குறைவின்றி நடந்து வருகிறது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது காசிமடம். திருப்பனந்தாளிலேயே நிறையப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்க ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கிறார்கள். தமிழ் இலக்கிய நூல்களும் தரமாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் படுகிறது. "ஸ்ரீகுமரகுருபரர் "பெயரில் ஒரு மாதப் பத்திரிகையும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் மாபெரும் சேவை செய்து வருகிறது. கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேஹத்திற்குத் தேவையான "அஷ்டபந்தன மருந்து" இங்குக் குறைந்த அளவு தொகை செலுத்திப் பெறலாம். மருந்து தயாரிக்கும் செலவு அதிகம் என்றாலும் ஆலயப் பணிகளும் ஆன்மீகமும் சிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு சேவையாகச் செய்து வருகிறார்கள். கங்கைக் கரையில் கேதார்காட் போய்க் காசி மடம், கேதார் நாத் கோவில், அங்கு சாயங்காலம் சூரியன் மறையும் சமயம் கங்கைக்கும், கேதாரீஸ்வரருக்கும் ஒரே சமயம் காட்டப்படும் ஆரத்தி எல்லாம் தரிசனம் செய்யலாம்.


தமிழ் மரபு விக்கியின் வலைப்பக்கத்துக்காக எழுதிய கட்டுரைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். விஜயநகரம் பற்றிய கட்டுரை பூர்த்தி அடையவில்லை. அதிலே கொஞ்சம் வேலை இருக்கு. நிறையப் படிக்கணும். அதோடு ஹம்பிக்குப் போய்ப் பார்த்துட்டு எழுதினால் இன்னும் நல்லா இருக்கும்னு ஒரு எண்ணம். இறைவன் திருவுளப்படி நடக்கும். பொறுமையாய்ப் படிக்கும் ஓரிருவருக்கு என் நன்றி.

Tuesday, February 8, 2011

பறவை போல் பறந்த பெண் சித்தர்! சக்கரத்தம்மாள்!


சித்தர்கள் பற்றிப் படிக்கும்போது பெண் சித்தரான சக்கரத்தம்மாள் பற்றியும் அறிய நேர்ந்தது. ஆனாலும் அவர் சரித்திரம் முழுதும் தெரியவில்லை. தேடிக்கொண்டிருந்த சமயம் இரண்டு வருடம் முன்னர் தமிழ் ஹிந்து தளத்தில் முதன்முதல் சக்கரத்தம்மாள் பற்றிய குறிப்புகளை எவரோ எழுதி இருந்தனர். யார் என நினைவில் இல்லை. அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவருடைய அதிஷ்டானம்/சமாதி திருவான்மியூரில் உள்ளது என்பதும், அவரை ஆதரித்தவர் ஸ்வாமி விவேகாநந்தரின் சீடரான மருத்துவர் நஞ்சுண்ட ராவ் என்பவர் என்பதும் தெரிய வந்தது. நஞ்சுண்ட ராவ் அவர்கள் ஆங்கில மருத்துவர். பல் மருத்துவர் என்று திவாவிடம் கூறினேன். இல்லை. ஆங்கில மருத்துவரே.

ஆனால் மிகச் சிறந்த தேசபக்தரான இவர் மஹாகவி பாரதியையும் ஆங்கிலேய அரசிடமிருந்து பாதுகாத்திருக்கிறார். சக்கரத்தம்மாளின் பரிபூரணப் பேராநந்த நிலையைக் கண்டு பல முறை வியந்திருக்கிறார். அதை அவர் வார்த்தைகளில் சொல்வதைக் கேட்போம்.

"முக்தி என்றால் என்ன என்பதை எழுத்தறிவற்ற இந்த எளிய அந்தணப் பெண்மணியிடம் தான் தெரிந்து கொண்டேன். எப்போதும் பரிபூரணப் பேராநந்த நிலையில் அவர் இருக்கிறார். அவருடைய உடலின் ஒவ்வொரு அணுவும் அந்தப் பரிபூரணப் பேராநந்தத்தை வெளிப்படுத்துகிறது." இனி சக்கரத்தம்மாள் பற்றிக் காண்போமா?

1854-ம் வருடம் வட ஆற்காடு மாவட்டத்தில் போளூரின் ஒரு சிறு கிராமம் ஆன தேவிகாபுரத்தில் வசித்த சிவாச்சாரியார் ஆன சேஷ குருக்களுக்குப்பிறந்தார் சக்கரத்தம்மாள். இவரின் பெயர் அப்போது அநந்தாம்பாள் என்று வைத்திருந்தனர். பிறந்த சில காலத்திலேயே பெற்ற தாயை இழந்த அநந்தாம்பாளைச் சிறிய தாயாரான சுப்பம்மா வளர்த்து வந்தார். சிறிய தாயாரின் சகோதரர் ஆன சாம்பசிவ சிவாசாரியார் சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் கோமளீஸ்வரன் மடத்து அதிபதியாக இருந்தார். திடீரென அவர் மனைவி இறந்து போக அநந்தாம்பாளை சாம்பசிவ சிவாசாரியாருக்கு மறுமணம் செய்து வைக்கத் தீர்மானிக்கப் பட்டது. அப்போது அநந்தாம்பாளின் வயது ஒன்பது. சாம்பசிவ சிவாசாரியாரின் வயது 24.

சிவாசாரியார் மனைவியின் மிக மிக இளவயது காரணமாயும், பல்வேறு துர் சகவாசங்கள் காரணமாயும் துர் நடத்தை கொண்டு வாழ்ந்து வந்தார். எனினும் அநந்தாம்பாள் கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைத் தவறாமல் செய்து வந்ததோடு மற்ற நேரங்களில் எந்நேரமும் கோயிலில் அடியார் கூட்டத்துடன் கலந்து வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அதில் செலுத்தினார். நாள் ஆக, ஆக அவரின் சிவ-சக்தி வழிபாட்டில் மனம் பூரணமாய்ச் சென்றது. இவ்வுலக வாழ்க்கையில் பற்று அறுந்து இறைவன் -இறைவி மேல் பக்தியும், பற்றும் வளர்ந்தது.

இங்கே சிவாசாரியாரோ பலவிதமான துர் நடத்தைகளின் காரணமாய் தனது 34-ம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார். 20 வயதான அநந்தாம்பாள் தன் தலையை மழித்துக்கொண்டு வெள்ளுடை தரிக்க ஆரம்பித்தார். எனினும் தன் யோகப் பயிற்சியை விடாமல் தினமும் மொட்டை மாடியில் அமர்ந்து யோகப் பயிற்சியை விடாமல் செய்து நாளாக ஆக, மோனத் தவத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த மோனத் தவம் தொடர்ந்தது. குளியல் இல்லை; உணவு கிடையாது; நீர் அருந்தவில்லை. கடைசியில் பரவொளியைக் கண்டே விட்டார் அநந்தாம்பாள். இந்தப் பேரின்ப ஒளி அவர் மனதை நிறைத்தது. மனம் மகிழ்வில் ஆழ்ந்து எல்லை இல்லாப் பரவசம் அடைந்தார். அதன் பின்னர் அவர் மனம் எந்நேரமும் அந்த ஜோதி ரூபத்தின் மேலேயே சென்றது. கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு உரக்கச் சிரித்துக்கொண்டும் தானே பேசிக்கொண்டும் இருப்பதைப் பார்த்த ஊர் மக்கள் பைத்தியமோ என்று எண்ணினார்கள். விலகிச் சென்றனர். முதன் முதல் இவரைக் கண்ட மருத்துவர் நஞ்சுண்டராவும் இவரைப் பைத்தியம் என்றே எண்ணினார்.


ஆனால் சக்கரத்தம்மாளுக்குப் பலவிதமான சித்திகளும், முக்கியமாய்ப் பேரானந்தநிலையும் கை கூடி இருப்பதை நஞ்சுண்ட ராவ் உணர்ந்துவிட்டார். ஆகவே அவரே சக்கரத்தம்மாளின் புகழைப் பரப்பவும் ஆரம்பித்தார். பரவொளி தரிசனத்தின் பின்னர் அநந்தாம்பாளுக்குப் பலவிதமான சித்திகள் கைகூடின. ஒரு சமயம் சக்கரத்தம்மாளைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார் நஞ்சுண்ட ராவ். அப்போது விருபாக்ஷி மலைக் குகையில் பகவான் ஸ்ரீரமணர் இருந்ததாகவும், அவருடன் சில சூக்ஷ்மங்களைச் சக்கரத்தம்மாள் பகிர்ந்து கொண்டதாயும் கூறுகின்றனர். அவருக்குக் கிடைத்த அட்ட சித்திகளில் முக்கியமாய்க் கூறத்தக்க சித்தி லஹிமா என்னும் சித்தியாகும். இந்த சித்தி பரிபூரணமாய்க் கைவரப் பெற்றவர்கள் தங்கள் உடலை மிக மிக லேசாக்கிக்கொண்டு பறவையைப் போல் ஆகாய மார்க்கத்தில் பறப்பது ஆகும். கர்ம சித்தி வகையைச் சேர்ந்தது என்று கூறப்படும் இந்த சித்தியை அற்புதமாய்க் கையாண்ட சக்கரத்தம்மா அவர் வாழ்ந்த காலகட்டத்து அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறார் என்பதைத் திரு வி.க. என்னும் திரு வி.கல்யாணசுந்தரனார் தெரிவிக்கிறார், கேட்போமா?

"அம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர். அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து நின்றுகொண்டு அம்மையார் நிலையை ஆராய்வர். நான் தேசபக்தன் ஆசிரியனாக இருந்த காலத்தில் டாக்டர் நஞ்சுண்டராவ் அவர்களிடம் நெருங்கிப் பழகி வந்தேன். பறவையாரைப் பர்றி நான் வரிடம் விசாரித்து அறிந்து கொண்டேன். அவர் அம்மையாரைச் சித்தர் இனத்தில் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தார். " தமிழ்த்தென்றல் ஆன திரு வி.க. அவர்க்ள் தாம் எழுதிய "உள்ளொளி" என்னும் நூலில் நேரில் கண்ட சாட்சியமாகச் சக்கரை அம்மாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப்படும் கோமளீஸ்வரன் பேட்டையில் மடத்தில் விடாமல் ஸ்ரீசக்ர பூஜை செய்து வந்ததாலேயே , அநந்தாம்பாள் என்ற பெயர் மாறியது சக்கரத்தம்மாள் என்றானது. சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த அம்மாவின் பேரன் உறவின் முறைக்கார சிவாசாரியார் தற்சமயம் கோமளீஸ்வரர் மடத்தில் சிவாசாரியாராக இருந்து வருவதாய்த் தெரிகிறது. கோமளீஸ்வரன் ஆலயத்தில்/மடத்தில் சக்கரை அம்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இதைத் தவிரவே திருவான்மியூரில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோமளீஸ்வரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா மொட்டை மாடியில் அமர்ந்து தியானம் செய்த திண்டு, படங்கள் இருப்பதாயும் திருவான்மியூர் கோயிலுக்கு சிறப்பு தினங்களில் இங்கிருந்து சென்று வழிபாடுகள் செய்வதாயும் தெரிய வருகிறது.

தன் பூவுடலைத் துறக்கும் நேரம் வந்துவிட்டது என்றுணர்ந்த அம்மாள், திருவான்மியூர் மருந்தீசர் கோயிலை அடைந்தார். அங்கே நஞ்சுண்ட ராவிடம் தன் உடலை நீக்கப் போவதாய்த் தெரிவிக்கவும் அவர் தன் சொந்த இடத்தில் சமாதிக்கோயில் எழுப்ப அம்மாளின் சம்மதம் கேட்க அம்மாளும் அநுமதி வழங்கியதோடு தற்சமயம் இருக்கும் இந்த இடத்தைச் சுட்டிக் காட்டி இங்கே எழுப்புங்கள் என்றாராம். ஆள்நடமாட்டமே இல்லாத அந்தக் காலத்தில் அந்த இடத்தில் கோயில் கட்டினால் யார் வருவார்கள் என்று கேட்ட மருத்துவரிடம் நூறாண்டுகள் கழித்துப் பார்க்கவேண்டும் என்றாராம் அம்மாள். 1901-ம் வருடம் பெப்ரவரி மாதம் 28-ம் தேதி தனது 47-வது வயதில் ஜீவசமாதியில் ஆழ்ந்த சக்கரத்தம்மாள் சொன்னது போல் இங்கு சரியானபடி ஆலயம் அமைக்கவும் 2002-ம் ஆண்டு தான் நேரம் வாய்த்தது. கும்பாபிஷேஹம் செய்யப் பட்டு தற்சமயம் பிரபலமாய் விளங்குகிறது. இங்கே சென்றவர்களின் மன உளைச்சல், தீராத வியாதி, குடும்பத்தில் மன வருத்தங்கள் ஆகியனவற்றுக்குத் தீர்வு கிடைப்பதாயும் கூறுகின்றனர். 1948-ம் ஆண்டு ஜனவரியில் இங்கே வந்திருந்த பரமாசாரியார் அவர்கள் இங்கே ஐந்து நாட்கள் தங்கி தியானம் செய்தாராம்.


திருவான்மியூர் மருந்தீசர் கோயிலுக்கு வெளியே, தெப்பக்குளத்தை ஒட்டி இடப்பக்கமாய், கலாக்ஷேத்ரா காலனியை நோக்கிச் செல்லும் சாலையில் செல்லவேண்டும். அந்தச் சிறிய சாலையில் இடையில் குறுக்கிடும் சாலையையும் கடந்து நேரே சென்றோமானால் இடப்புறம் ஸ்ரீசக்கரை அம்மா ஆலயம் என்று ஆலயத்தின் பெயரோடு கண்களில் படும். அழகாய் சோலை போல் மரம், செடி,கொடிகள் வளர்க்கப்பட்டு காட்சி அளிக்கும் அந்தச் சிறிய ஆலயம் நேர்த்தியாகவும் இருப்பதாய்த் தெரிய வருகிறது. கோயிலில் சந்நிதியும் சின்னது. கருவறையில் உள்ளே சக்கரை அம்மாவுக்கு கல் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதிர்வலைகள் தியானத்தை நோக்கி நம்மைத் தூண்டும் என்கின்றனர்.

இதைத் தவிர உபந்நியாசங்கள் செய்யும் சிறிய அரங்கம், அரங்கின் பின்னால் டாக்டர் நஞ்சுண்டராவின் மார்பளவு சிலை போன்றவை காணப்படுகிறது. ஆலயத்தின் பின்னால் இருக்கும் சிறிய கூடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகள், போதிக்கப் படுகின்றனர். கோயிலை நிர்வகிப்பது டாக்டர் நஞ்சுண்டராவ் பிரைவேட் ரிலீஜியஸ் ட்ரஸ்ட் ஆகும். தற்சமயம் அறங்காவலராக இருப்பது சுமனா சுரேஷ் என்பவர் என்கின்றனர். நஞ்சுண்டராவ் அவர்களின் பேரன் இங்கே இலவச மருத்துவத் தொண்டு செய்து வருகிறார்.

இவற்றைத் தவிர தியான மண்டபம், புல்வெளியில் செயற்கை நீரூற்று, புத்தர் சிலை, எண்கோண மண்டபத்தினுள்ளே கண்ணாடிப்பேழையில் சக்கரை அம்மாவின் சிலை போன்றவையும் இருக்கின்றன. கண்மூடி நம்மை மறந்து தியானம் செய்ய வசதியான இடம் என்றும் மனம் அமைதியை எட்டும் என்றும் கூறுகின்றனர்.

இன்னும் போகலை. போகணும், அதனால் படங்கள் போயிட்டு வந்து.