Tuesday, December 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


தனது பக்தனுக்காகத் தாமே வந்து கடன் அடைத்துச் சென்றது சாக்ஷாத் அந்த ஸ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை புரிந்து கொண்ட தானீஷா, தான் மஹாபாபியாக இருந்து இறைவனே நேரில் வந்ததைத் தெரிந்து கொள்ளவில்லையே என நினைத்து நினைத்து ஏங்கினான்.  அங்கே சிறையில் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோபன்னா எழுந்து பார்த்தபோது விஷக்கிண்ணம் கவிழ்ந்து கிடப்பதையும் தானீஷா கையொப்பம் இட்டுக் கடன் தீர்ந்துவிட்டதாக அறிவித்த ரசீதையும் பார்த்தார்.  திகைத்தார்.  ஏதோ அதிசயம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். ராமன் திருவடியை அடைய முடியாமல் வந்து தடுத்துவிட்டானே என ஏங்கினார். ராமனைத் தாம் நிந்தித்ததால் இவ்வாறு செய்துவிட்டான் போலும் என எண்ணினார்.  அதனால் தான் விஷத்தைக் கொட்டி விட்டான் போலும் என எண்ணினார். அப்போது சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன.  தானீஷா பரிவாரங்களோடு அங்கே வந்து கொண்டிருந்தான்.  மறு விநாடிக் கதவு திறந்து தானீஷா எதிரே நின்றான்.  கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கோபன்னாவின் கர்ருணையால் அன்ன்று தாம் இறைவனையே கண்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  கோபன்னாவுக்கோ, ஸ்ரீராமனே நேரில் வந்தானா, தானீஷாவுக்குக் காட்சி கொடுத்தானா என எண்ணித் தமக்கு அந்தக் காட்சி கிட்டவில்லையே என ஏங்கினார்.  தானீஷாவோ அவர்கள் வந்ததையும், தம்முடன் பேசியதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  பிரசாதத்துக்கு ஆசைப் பட்டு கோபன்னாவிடம் பணி புரிவதாய்க் கூறினார்களே என  அதிசயித்தான்.  கோபன்னாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தானீஷாவைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, “நீர் செய்த பாக்கியம் தான் என்னே!  இறைவனைக் காணும் பேறு கிடைத்தது.  பனிரண்டு வருடமாய்க் கதறிக் கதறி அழைத்து இந்த நடுநிசியில் மூட்டை தூக்கி வந்து என் கடனை அடைத்துச் சென்றுவிட்டானா?  எனக்குக் காட்சி கிடைக்கவில்லையே! ஏ, ராமா, எனக்குக் காட்சி கொடுக்க மாட்டாயா?” எனக் கதறினார்.  தானீஷா, அவரிடம், நீர் சாதாரண கோபன்னா இல்லை;  ராமதாஸர்! ராமன் திருவடிக்கே தொண்டு பூண்ட பெரியவர். உம் அருமை தெரியாமல் நான் உம்மைத் துன்புறுத்தி மஹா பாவத்தைச் செய்து விட்டேன்.”  என்றான்.  எல்லையற்ற மன நிறைவோடு மீண்டும் பத்ராசலம் வந்தார் ராமதாஸரான கோபன்னா.  தானீஷா ராமனுடைய சேவைக்காக ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினான்.  நெடுநாட்கள் அதன் பின்னர் ராமனின் புகழைப் பாடி வந்தார் ராமதாஸர்.  ஒருநாள் பொன்மயமானதொரு தேர் விண்ணிலிருந்து இறங்கியது.  ராமதாஸர் வீட்டு வாசலில் நின்றது.  தன் மனைவியையும் அழைத்தார் ராமதாஸர்.  கைவேலையை முடித்துவிட்டு வருவதாய் அந்த அம்மாள் சொல்ல, “நீ கொடுத்து வைக்கவில்லை!” எனச் சொல்லிக் கொண்டே தேரின் மீது ராமதாஸர் ஏறிக் கொண்டு ராம நாம உபதேசத்தைக் கூறிக் கொண்டே தேரோடு விண்ணில் எழும்பிச் சென்றார். அவர் மனைவி உள்ளிருந்து வந்து பார்க்க, “நீ உன் மகனுக்குப் பணிசெய்யும் பொருட்டே உன்னைத் தங்க வைத்தோம்!” என அசரீரி வாக்குக் கேட்க அந்த அம்மாளும் தன் விதியை நினைந்தபடி தங்கிவிட்டார்.  பத்ராசல ராமதாஸர் ராமன் மேல் எண்ணற்ற பாடல்களைப் புனைந்து பாடினார்.  பாரதத் திருநாட்டில் ஹைதராபாத்திலே செல்வம் கொழித்திருப்பதன் காரணமும் பத்ராசல ராமதாஸருக்கு ராமன் அளித்த செல்வம் என்றே கூறப்படுகிறது.

பத்ராசலம் ராமதாஸர் கதை நிறைந்தது.

Sunday, December 9, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


விஷம் குடிப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை ஸ்ரீராமனையும், அவன் பிரிய மனைவியான சீதம்மாவையும் நினைத்த கோபன்னா, சீதம்மா நீயாவது உன் கணவனிடம் போய்ச் சொல்ல மாட்டாயா?  இன்னும் எத்தனை காலம் எனக்கு இந்த தண்டனை? என மனமுருகிப் பிரார்த்தித்தார்.  தியானத்திலும் ஆழ்ந்து போனார்.  அங்கே சீதம்மா மாயம்மாவுக்கு மனதில் ஒரே வேதனை.  இந்த கோபன்னா இத்தனை தூரம் மனமுருகிப் பிரார்த்தனைகள் பல செய்தும் நம் கணவர் வேடிக்கை பார்க்கிறாரே இது என்ன நியாயம் என மனதிலேயே கேட்டுக் கொண்ட கேள்வியை இன்று நேரிலும் கேட்டுவிட்டாள்.  “சுவாமி, கோபன்னா எத்தனை நல்லவன்?  நம் கோயிலுக்காக அன்றோ அவன் உழைத்தான்!  ஒரு காசு கூட சொந்தமாக எடுத்துக் கொள்ளவில்லையே.  அதோடு நம்மிடம் எவ்வளவு பக்தியுடனும் பிரேமையுடனும் இருக்கிறான்.  அவனை இப்படிப் பரிதவிக்க விட்டு விட்டுத் தாங்கள் இங்கே ஆனந்தமாய்க் காலம் கழிக்கலாமா?” என வினவ, ஸ்ரீராமனின் முகத்தில் இளநகை பூத்தது.  “சீதே, போன பிறவியிலும் பரம பக்தன் ஆன இவன், ஒரு கிளியைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்து வந்தான்.  பனிரண்டு ஆண்டுகள் அவ்விதம் வளர்த்து வந்ததால் அதே பனிரண்டு ஆண்டுகள் இவனும் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.  இன்றோடு அந்தச் சிறை வாசம் முடிவடைகிறது.  நானும், லக்ஷ்மணனுமாய் நாளை தானீஷாவைப் போய்ப் பார்த்து இவன் கடன்களை அடைக்கப் போகிறோம். “ என்றான் ஸ்ரீராமன்..

“வெகு அழகு ஸ்வாமி, ஆயுளையே உங்கள் சேவையில் கழித்து வரும் கோபன்னாவை விட்டுவிட்டு, தானீஷாவுக்குப் போய் தரிசனம் கொடுக்கப்போகிறீர்களே!” என்றால் சீதை ஏமாற்றமுடன். 
“சீதே, தானீஷா கோபன்னாவைச் சிறையில் அடைத்த குற்றம் ஒன்று மட்டுமே செய்தான்.  ஒரு நல்ல அரசனாகக் குடிமக்களை நன்கு பேணி வருகிறான்.  நீதிமானாகவும், நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும் உள்ளான்.  மேலும் அவன் போன பிறவியில் காசியில் அந்தணனாகப் பிறந்து ஈஸ்வரனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேஹம் செய்யப் பிரார்த்தித்துக் கொண்டவன்.  இதன் மூலம் பெரிய பதம் கிடைக்கும் என எண்ணினான்.  ஆனால் 999 –வது குடம் வந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை, என ஆயிரமாவது குடத்தை அந்த ஈசன் தலையிலேயே போட்டு உடைத்துவிட்டான்.  அந்த வினைப்பயன் தான் அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.  மேலும் அவனுக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் என ஈசனே வாக்குக் கொடுத்துள்ளார்.  ஈசன் வாக்குப் பொய்யாகலாமா?”  என்றான் ஸ்ரீராமன்.

மறுநாள் நடு நிசி. தானீஷாவின் அந்தப்புரத்திலே அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.  ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தான்.  அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்தப்புர பாராக் காவலையும் தாண்டிக் கொண்டு இரு சிப்பாய்கள் கையிலே ஒரு பெரிய பணப்பையோடு இடையிலே கால் சராய் தரித்து, வாளை இடுப்பிலே ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்கள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அரசகுமாரர்களோ என்னும்படி இருந்தது.  இருவரும் பாராக் காவற்காரர்களிடம் வந்தபோது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  சிரித்துக்கொண்ட இருவரும் அந்தப்புரக் கதவில் கை வைக்கக் கதவு தானாகத் திறந்தது.  கனவு கண்டதில் விழித்த தானீஷா அந்தப்புரக் கதவு திறப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் பார்க்க எதிரே இரு சுந்தரபுருஷர்கள் நின்றனர்.  அறையே கோடி சூரியப் பிரகாசமாக ஜொலித்தது.  அந்த வெளிச்சத்தையும் இரு இளைஞர்களின் அழகையும், அவர்களின் தேஜஸையும் கண்ட தானீஷா இருவரையும் பார்த்து யார் எனக் கேட்க, அவர்கள், “நாங்கள் கோபன்னாவின் வேலையாட்கள்.  என் பெயர் ராம்ஜி. இவன் பெயர் லக்ஷ்மண்ஜி. பத்ராசலத்திலிருந்து வருகிறோம்.”  என்றனர்.

“வேலையாட்களா?  எத்தனை வருடங்களாகச் செய்கிறீர்கள்? என்ன சம்பளம் உங்களுக்கு?” தானீஷா கேட்டான்.

“ஐயா, நாங்கள் பல தலைமுறைகளாகச் செய்து வருகிறோம்.  சம்பளமெல்லாம் கிடையாது.  அந்த ராமர் கோயில் பிரசாதத்துக்காகச் செய்கிறோம்.”
“ஆச்சரியமாய் உள்ளதே.  இப்போது என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“ஐயா, கோபன்னா உங்களிடம் கடன் பட்டிருக்கிறாராமே.  அதை அடைக்கச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்.  பணத்தைக் கொண்டு வந்துவிட்டோம்.  இதோ உமக்குச் சேர வேண்டிய ஆறு லக்ஷம் பொன்கள். “ கையிலிருந்த பணப்பையைப் பிரித்து அவிழ்த்துக் கொட்ட, கலகலவென சப்தித்துக்கொண்டு தங்க நாணயஙக்ள் உருண்டோடின.  “இவற்றைச் சரி பார்த்துக் கொண்டு, கடன் தீர்ந்ததற்கான ரசீதைக் கொடுங்கள் ஐயா, “ என அவர்கள் அவசரப் படுத்த இந்த நட்ட நடுநிசியில் இந்த இருவரும் எங்கிருந்தோ வந்து கோபன்னாவின் கடனைத் தீர்ப்பதை எண்ணி எண்ணிப் பார்த்த தானீஷாவுக்கு வியப்புத் தாங்கவில்லை.  அது சரி இவர்களை உபசரிக்கக் கூட இல்லையே.  எப்படி உபசரிப்பது?  தானீஷா குழப்பத்துடன் அவர்களிடம் இந்த நடுநிசியில் உங்களை எப்படி உபசரிப்பது எனத் தெரியவில்லை, என்று சொல்ல, இருவரும் வேலைக்காரர்களான தங்களுக்கு எந்த விதமான உபசாரமும் வேண்டாம் எனவும், ரசீதைக் கொடுக்கும்படியும் திரும்பக் கேட்டனர்.  தானீஷா ரசீதைக் கொடுக்க இருவரும் இருண்ட சிறையிலிருந்து கோபன்னாவைப் பார்க்கப் போனார்கள்.  கோபன்னாவைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு மனம் உருக, அண்ணனிடம், “நீ செய்தது அநியாயம், நமக்கு வானளாவக் கோயில் எடுத்தவன் சிறையில் வாடுகிறான்.  அவன் நிலைமையைப் பாருங்கள்.  எலும்பும் தோலுமான உடலுடனும், குழி விழுந்த கண்களோடும், சடாமுடியோடும், தாடியோடும் பிச்சைக்காரனைப் போல் நிர்க்கதியாய்ப் படுத்திருக்கிறான்.  நீங்கள் இன்னும் முன்னமே உங்கள் கருணையைக் காட்டி இருக்கலாகாதா?” என்று சொல்ல, ஸ்ரீராமனோ, “அப்பனே, இது பூர்வ ஜன்ம வினை. இதை இவன் அனுபவித்தே தீர வேண்டும்.  ஊழ்வினையைத் தடுக்க என்னாலும் இயலாது.  சரி, நீ இப்போது  உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்த்து வா!” எனச் சொல்ல லக்ஷ்மண்ஜியும் ஆதிசேஷனாக மாறி உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்க்கிறான்.  ரசீதை கோபன்னாவின் பக்கத்திலே வைக்கிறார்கள்.  பின்னர் இருவரும் மறைந்தனர்.

அரசன் தங்க நாணயங்களைப் பார்த்துப் பார்த்து அதிசயித்தான்.  அவற்றின் முத்திரையைச் சோதிக்க ஸ்ரீராம் என அவற்றில் எழுதி இருந்தது.  இயன்றவரை பல நாணயங்களைச் சோதித்தும் அனைத்திலும் ராமன் பெயரே இருக்கவும்.  தானீஷாவுக்கு உண்மை புரிந்தது.  கோபன்னாவுக்காக வந்தது சாக்ஷாத் ஶ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை உணர்ந்தான்.  கோபன்னா எத்தனை பெரிய மஹான் என்பதும் புரிந்தது அவனுக்கு.  

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


ஹைதராபாத் நகரில் அவரைக் காவலில் வைத்தனர் சேவகர்கள்.  கோபன்னாவின் மாமன்மாருக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  இருண்ட சிறைச்சாலையில் மாமன்மார் வந்து பார்த்து கோபன்னாவைக் கோபம் பொங்கத் திட்டித் தீர்த்தனர்.  தானீஷாவின் முன்னிலையில் கோபன்னா விசாரணைக்கு வந்தார்.  மன்னனிடம் தாம் மன்னனைக் கேளாமல் செய்தது தவறே என ஒப்புக் கொண்ட கோபன்னா, இந்தத் திருப்பணியை மன்னனே முன்னின்று நடத்தி இருக்க வேண்டும் என்றும் இதனால் விளைந்த, விளையப் போகிற நற்பலன்கள் அனைத்தும் அரசுக்கே ஏற்படும் என்றும் கூறிய கோபன்னா ஸ்ரீராமனின் மகத்துவத்தையும் பக்தியின் பெருமையையும் அதன் விளைவாய் ஏற்படும் ஞானத் தத்துவங்களையும் மன்னனிடம் எடுத்து உரைத்தார்.  ஆனால் மன்னன் மனம் மாறவில்லை.  கோபன்னாவின் அறிவாற்றலும், ஞானத்தையும் கண்டு உள்ளூர வியந்தாலும் பண விஷயத்தில் இம்மியும் விட்டுக் கொடுக்க மன்னன் தயாராக இல்லை.  மேலும் கோபன்னா ஒருவரை விட்டு விட்டால் பின்னர் இம்மாதிரியே எல்லாரும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  எல்லாரும் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திருப்பணி என்பார்கள்.  ஆகவே இந்த கோபன்னாவிடம் நயந்தும், பயந்தும் பேசியே பணத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.  கோபன்னாவ்விடமிருந்து ஆறு லக்ஷம் வராஹன்கள் வரும் வரையிலும் சிறையில் அடைக்குமாறு கூறி மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டான் தானீஷா.  மக்கள் செய்தியறிந்து வீதிக்கு வீதி இது குறித்தே விவாதித்து வந்தனர்.

கோபன்னா சிறையில் இருந்தார்.  கரடுமுரடான தரை.  கிழிந்ததொரு பாய்.  போர்த்திக்கொள்ள மிக மோசமானதொரு கம்பளி.  அந்த அறையில் படுக்கவே முடியவில்லை. ஆனால் அங்கே படுக்கையிலே காட்டிலே ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமன் கட்டாந்தரையிலே புற்படுக்கையிலே படுத்தது அவர் மனதில் வந்தது.  ஆஹா, அந்த ஸ்ரீராமன் காட்டில் புழுதியிலே கட்டாந்தரையிலே புற்களால் ஆன படுக்கையில் அல்லவா படுத்திருந்தான்.  அதுவும் ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா!  ப்தினான்கு ஆண்டுகள். ஸ்ரீராமா நீ எப்படித்தான் தூங்கினாய் அப்பா. என மனம் உருகினார்.  உணவும் சரியாக அமையவில்லை கோபன்னாவுக்கு.  உப்பும் அரிசியும் சரிசமமாகக் கலக்கப்பட்ட அன்னத்தைக் காவலன் கொடுக்க அதுவும் ஸ்ரீராமன் அருளால் கிடைத்த பிரசாதமே என மனம் உருகி வாங்கி உண்டார் கோபன்னா.  தன் மனதுக்குள்ளாக ஸ்ரீராமனுக்கு மானஸ பூஜை செய்து கொண்டே இருந்தார்.  அவர் உடல் தான் சிறையில் இருந்ததே தவிர உள்ளம் முழுதும் ஸ்ரீராமனிடம் மூழ்கி இருந்தது.  ஆகவே சிறைச்சாலையின் துன்பங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை.  சிறையிலும் ஆனந்தமாக அவர் இருப்பதைக் கேள்விப் பட்ட தானீஷா, ஆஹா, இது சரியில்லை;  இவனை முச்சந்தியிலே நிறுத்துக் கசையடி கொடுங்கள்.  பணத்திற்கு அப்போதானும் வழி சொல்லுவான் எனக் கூறினார்.

தண்டனைச் செய்தி ஹைதராபாத் நகரம் முழுதும் பரவியது. மக்கள் துடிதுடித்தனர்.  ஆஹா, கோபன்னா எத்தகைய ராமபக்தர்!  அவருக்கா இத்தகைய தண்டனை! பணத்தை அவரா எடுத்துக் கொண்டார்.  தம் மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்தாரா!  இல்லையே.  அல்லது தமக்கென நிலம், நீச்சு என வாங்கிச் சேர்த்தாரா.  அதுவும் இல்லையே.  பத்ராசலம் கோயிலுக்கன்றோ செலவழித்தார்.  கோபன்னா திருப்பணிக்கு முன்னர் பத்ராசலம் எப்படி இருந்தது!  இப்போதோ, பூலோக வைகுண்டம் போல் அல்லவா ஒளிர்கிறது.  கோயில் மட்டுமா அழகாக அமைந்துள்ளது!  வழிபாடுகளில் என்ன விமரிசை, என்ன பக்தி.  இப்படி எல்லாம் நடக்க ஏற்பாடு செய்த ஒரு பரமபக்தரை இப்படியா தண்டிப்பது.  இது தகாது.  அநியாயம்.  என ஓலமிட்டனர் மக்கள்.  “ஏ ராமா, இது என்ன நீயும் தானீஷாவுடன் சேர்ந்து வேடிக்கையா பார்க்கிறாய்.  அல்லது இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றோ! என ஸ்ரீராமனையே பலரும் கேட்டனர்.  கோபன்னாவும் வீரர்கள் காவலுடன் முச்சந்தியை நோக்கி அழைத்து வரப் பட்டார்.  ஊரார் சிலர் வேடிக்கை பார்க்க, பெரும்பான்மை மக்கள் கதறி அழ கோபன்னாவுக்கு தண்டனை நிறைவேறத் தொடங்கியது.  ஸ்ரீராமன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார் கோபன்னா.  அடியோ மேன்மேலும் விழுந்தது.  முதுகிலே ரத்தம் பீறிட பத்துப் பிரம்புகளுக்கும் மேல் முறிந்து விழ, ராமசந்திரனுக்கு மங்களம் என்ற வார்த்தையையே கோபன்னா திரும்பத் திரும்பக் கூற அவரை அடிப்பதிலும் பயனில்லை என உணர்ந்த சேவகர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  அடிக்குப் பயந்து பணத்துக்கு ஏற்பாட்டு செய்வார் என தானீஷா எதிர்பார்த்ததும் நடக்காமல் போகவே தலையில் பாறாங்கல்லைச் சுமந்து கொண்டு நகர் முழுவதும் வலம் வரச் சொல்லி தண்டனை கொடுத்தான் தானீஷா.

அந்த தண்டனையையும் ஸ்ரீராமன் பெயரைச் சொல்லிக் கொண்டே நிறைவேற்றினார் கோபன்னா.  பின்னர் கைகால்களைக் கட்டி மணலில் உருட்டினர்.  அப்போதும் மனம் தளராமல் ஸ்ரீராமன் பெயரைச் சொன்ன வண்ணம் நிறைவேற்றினார்.  இப்படியே வருடங்கள் உருண்டன.  கோபன்னாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  தண்டனைகளும் நிற்கவில்லை.  கோபன்னாவின் மன உறுதியும் தளரலாயிற்று.  இந்த ஸ்ரீராமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறானே.  அவனும் ஒரு மனிதனாகத் தானே இருந்தான்.  மனிதன் படும் துயரம் எத்தகையது எனப் புரிந்து கொள்வான் என நினைத்தேனே.  நான் அவனை இறைவன் என நினைத்தது தவறு.  எல்லாப் பொருட்களையும் எனக்கா செலவு செய்து கொண்டேன்.  ஏ, ராமா, உனக்கல்லவோ செலவு செய்தேன்.  உன் கோயில் பிராகாரங்களுக்கே லக்ஷம் பொன் செலவிட்டேனே.  உனக்குத் தான் ஆடை, ஆபரணங்கள், நகைகள் போன்றவை வாங்கினேன்.  அத்தனையையும் நீ தானே அனுபவிக்கிறாய்.  எவ்வளவு வாங்கினேன்.  உன் மாமனாரான ஜனகனா கொடுத்தான்.  அத்தனையும் தானீஷாவுக்குச் சேர வேண்டிய வரிப்பணம்.  உனக்காகத் தானே செலவழித்தேன்.  அப்போது நீ பேசாமல் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு இருந்துவிட்டு இப்போதும் வேடிக்கையா பார்க்கிறாய்!  என் துன்பம் உனக்குப் புரியவில்லையா!  இந்த கோபன்னாவுக்கு இன்னும் எத்தனை அடிகளும், தண்டனைகளும் இருக்கிறதோ அத்தனையும் தாங்கட்டும் என நினைக்கிறாயா?

இவ்வாறே அவர் ஸ்ரீராமனைப் போற்றியும் நிந்தித்தும் பல பாடல்களைப் புனைந்து பாடினார்.  அப்போது ஒரு நாள் திடீரென அவருக்கு சீதையின் தோற்றம் கண்களில் தெரிந்தது.  “அம்மா, தாயே, உன்னை மறந்துவிட்டேனே.  என் துன்பத்தை நீயாவது உன் கணவனுக்கு எடுத்துச் சொல்லமாட்டாயா. என் கடவுள் என உன் கணவன் ஸ்ரீராமனை நான் எண்ணியது அத்தனையும் வீண்.  அவனுக்கும் உனக்கும் தானே நான் செலவு செய்தேன்.  அவனாவது ஒரு வார்த்தை தானீஷாவிடம் போய்ச் சொல்லக் கூடாதா!  அவன் சொல்லவில்லை;  சொல்லவும் மாட்டான்.  தாயே, நீ தான் எனக்காக எடுத்துச் சொல்லக் கூடாதா?  நானும் எத்தனை வருடங்கள் இன்னமும் பொறுப்பது!  உன் கணவனுக்குக் கல் நெஞ்சம் அம்மா.  அவன் இரக்கமே காட்ட மாட்டான்.  கடினமான மனம் இருந்ததால் தானே, உன்னை, “தீக்குளித்துவிட்டு வா!” என்று சொன்னான். அதோடு விட்டானா!  நிறை கர்ப்பிணியான உன்னைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னானே.  அப்போதே அவன் குணம் எல்லாருக்கும் புரிந்துவிட்டது.  நான் தான் புரிந்து கொள்ளவில்லை.  அவன் கருணையே இல்லாதவன் அம்மா;  இவனைப் போய்க் கருணாசாகரன் எனச் சொல்வது தப்பு. வேண்டாம் தாயே, வேண்டாம்.  நீயும் அருள் புரிய வேண்டாம்.  உன் கணவனும் உதவி செய்ய வேண்டாம். நான் விஷம் குடித்து உயிரை விட்டு விட்டு நேரிலேயே வந்து உன் கணவனைக் கேட்கிறேன்.  ஆம் அது தான் சரி. இவ்வாறெல்லாம் எண்ணிய கோபன்னா எங்கிருந்தோ விஷம் எடுத்து வர ஏற்பாடு செய்து அதை நீரிலே கரைத்துவிட்டுக் குடிக்க ஆயத்தமானார்.  சீதம்மா, நீயாவது உன் கணவனிடம் சொல்ல மாட்டாயா எனக் கேட்டுக் கொண்டே விஷத்தைக் குடிக்க ஆயத்தம் ஆனார்.


Saturday, November 10, 2012

ஸ்ரீமஹா பக்த விஜயம்! பத்ராசலம் ராமதாஸர்!


தங்கத் தகடுகளால் கொடிமரம் வேயப் பட்டது.கோபுரங்களில் தங்கக் கலசங்கள் பதிக்கப்பட்டன. பீடங்களோ வெள்ளியால் ஆனவை. ஆராதனைக்கான உபகரணங்கள், பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப் பட்டன. பஞ்சலோகங்களால் ஆன ஸ்ரீராமனின் உற்சவ விக்ரஹத்திற்கு நவரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் சூட்டப்பட்டன. அனைத்தும் முடிந்து முறைப்படியான யாகங்கள் செய்து கோயிலில் கும்பாபிஷேஹமும் முடிந்தது. இயற்கையான மலை அழகிலே ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமன் இப்போது தன் பக்தன் ஆன கோபன்னா செய்த செயற்கையான அலங்காரங்களையும் ஏற்று அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருந்தான். கோயிலின் நந்தவனத்தில் ஜாதிப்பூக்கள், சண்பகப் பூக்கல், வில்வம், துளசி போன்றவை வளர்க்கப் பட்டு முறையே இறைவனுக்குச் சார்த்தப் பட்டது. பழங்கள் வித விதமாகப் படைக்கப்பட்டன. சந்தனம், ஊதுபத்தி, தசாங்கம் போன்றவற்றின் சுகந்தம் வேறு மனதையும் மூக்கையும் நிறைத்தட்து. கோபன்னா ஆனந்தத்தில்திளைத்தார். கோயிலுக்கு பக்தர்கள் வருகையும் பெருகியது.

இது இவ்வாறிருக்க, ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியும் பத்ராசலம் தாலுகாவின் வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை தானீஷா அறிந்தான். கோபன்னாவின் மாமன்மார்களை அழைத்து, கோபன்னாவை நம்பிக்கையானவன் எனக் கூறி ராஜ சேவகத்துக்கு சிபாரிசு செய்தீர்களே! இப்போது வரிப்பணம் வரவில்லையே எனக் கேட்க, தங்கள் மருமகனால் தங்கள் பெயர் கெடுகிறதே எனக்கவலையுற்ற அவ்விருவரும் ஒரு தூதுவனை பத்ராசலத்துக்கு அனுப்பி வைத்தனர். தூதுவனும் கோபன்னாவைக் கண்டு மன்னன் கொடுத்த ஓலையைக் கொடுத்தான். கோபன்னா அந்த ஓலையைப் படித்துவிட்டு தூதுவனை ஸ்ரீராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் பண்ண வைத்தார். தாம் செய்துள்ள திருப்பணிகளை எல்லாம் காட்டினார். தூதுவன் ஆச்சரியக்கடலில் முழுகினான்.  அருமையான பணியைச் செய்திருந்தாலும் இதற்குப் பெயரும் புகழும் கிடைத்திருந்தாலும் அனைத்தும் அரசாங்கப் பணத்தில் செலவிடப் பட்டவை. ஆகவே இது திருட்டுக் குற்றமே.  அரசனின் கோபத்திற்கும் ஊராரின் பழிக்கும் ஆளாகி இருக்கும் கோபன்னா என்ன பதில் சொல்ல முடியும் எனக் கேட்டான். கோபன்னாவோ தனக்கு எதுவுமே விளங்கவில்லை என்றும், இது அரசனே முன்னின்று செய்திருக்க வேண்டிய ஒன்று என்றும், தான் தனக்கு என ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார். மேலும் தான் ஸ்ரீராமனையே நம்பி இருப்பதால் அவன் தன்னை எந்த அவமானமும் துன்பமும் நேராமல் காப்பான் என நம்புவதாயும், தானீஷா பெருந்தன்மையாகத் தன்னை மன்னிப்பார் எனவும் கூறினார். பின்னர் எதற்கும் இந்த விஷயத்தை முதலில் தம் மாமன்மாரிடமே சொல்லும்படியும் அவர்கள் பின்னர் ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனவும் கூறினார் கோபன்னா.

தூதுவனும் அவ்வாறே வந்து மாமன்மாரிடம் கோபன்னா கூறியவற்றைக் கூறத் திகைத்த மாமன்மார் எப்படியும் இங்கே வந்து தான் ஆகவேண்டும்; அதுவரை பொறுப்போம் என எண்ணினார்கள். தானீஷாவின் சபை கூடி வரவு, செலவுகள் குறித்த விவாதங்கள் நடந்தன.  எங்கெங்கே வரவு பாக்கி இருக்கிறது என்பது குறித்தும் பேசப்பட, பத்ராசலம் தாலுகாவில் பாக்கி உள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்த தானீஷா, கோபன்னா இன்னமும் பாக்கி வைத்திருக்கிறாரா? ராஜபக்தி உள்ள மனிதன் ஆயிற்றே என தூதுவர்களை அழைத்து விசாரிக்க பத்ராசலம் சென்று வந்த தூதுவன் தான் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தானிஷாவிடம் தெரிவித்தான். தானிஷாவின் முகம் சுருங்கியது. எவ்வளவு பாக்கி என விசாரிக்க ஆறு லக்ஷம் வராஹன்கள் பாக்கி என அறிந்த தானீஷா கோபம் எல்லை மீற பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் விசாரணைக்கு வரவேண்டும் எனவும் தக்க காவலுடன் கைது செய்து அழைத்து வரவேண்டும் எனவும் கட்டளை இட்டான். ராஜ சேவகர்கள் பத்ராசலம் சென்று அரசனின் கட்டளையைத் தெரிவிக்க கோபன்னாவோ, சேவகர்களுக்கு விருந்து படைக்க ஆயத்தம் செய்தார். வந்த வேலை முடியும் முன்னர் உணவு உண்ண மாட்டோம் என மறுத்தனர் சேவகர்கள்.  அவர்களிடம் தன்னிடம் செப்புக்காசு கூடக் கிடையாது எனக் கூறிய கோபன்னாவை இந்த விஷயத்தை அரச சமூகத்தில் வந்து தெரிவிக்குமாறு சேவகர்கள் கூறினர். ஏவலாளர் புடை சூழக் கிளம்பிய கோபன்னாவை, இப்போது குற்றவாளியாகச் செல்வதால் இம்மாதிரி வர முடியாது எனவும், தக்க காவலுடன் தாங்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினர் சேவகர்கள் அதற்குள் ஊர்மக்களுக்கு விஷயம் தெரிந்து சத்யாக்ரஹம் செய்ய முன் வந்தனர். மக்களை சமாதானம் செய்த கோபன்னா தன் மனைவியிடமும், மகனிடமும் விஷயத்தைத் தெரிவித்து, ஸ்ரீராமன் இருப்பதாகவும் அவன் தம்மைக் காப்பான் எனவும் கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

Sunday, October 28, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்-- பத்ராசலம் ராமதாஸர் !

வருமானம் இல்லாமல் வந்த விருந்தினர்க்கு உணவு படைத்துக் கொண்டே இருந்தால்
எத்தனை நாட்களுக்கு வரும்?  நாளாவட்டத்தில் கோபன்னாவின் வீட்டில் வறுமை
தாண்டவம் ஆடியது.  அடியார்களை உபசரிக்க முடியாமல் வருந்திய கோபன்னாவுக்கு
ஹைதராபாத் மன்னனான தானீஷாவின் அமைச்சரவையில் உயர்ந்த பதவிகள் வகித்த தனது
தாய் மாமன்களின் நினைவு வந்தது.  அவர்கள் மூலம் தானும் அரசாங்க வேலை
ஏதேனும் ஒன்றைப் பெற்று வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொண்டால்
வருங்காலத்துக்கு மட்டுமின்றி அடியார்களையும் தக்க முறையில் உபசரிக்கலாம்
என நினத்தார் கோபன்னா.  ஹைதராபாத் சென்று தன் மாமன்களான அக்கன்னா,
மாதன்னா இருவரையும் வணங்கித் தன் கோரிக்கையை முன் வைத்தார்.  தானீஷா
நல்லவனாக இருந்தாலும் பண விஷயத்தில் படு கஞ்சன் எனக் கூறிய மாமன்மார்கள்
வரி வசூல் போன்ற வேலைகளில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என
புத்திமதியும் கூறினார்கள்.  பின்னர் மறுநாள் தர்பாரிலே தங்கள் மருமகனை
அறிமுகம் செய்வித்து வந்த நோக்கத்தையும் தெரிவித்தனர்.  அப்போது
பத்ராசலம் தாலுகாவில் வேலை காலியாக இருந்ததால் தானீஷா உடனே அந்தத்
தாலுகாவின் தாசில்தாராக கோபன்னாவை நியமித்தார்.  கிஸ்தியை ஒழுங்காக
வசூலிக்க வேண்டும் எனக் கண்டிப்பாய்க் கூறி முத்திரையிட்ட கடிதமும்
கொடுத்து அனுப்பி வைத்தார்.

பத்ராசல க்ஷேத்திர மஹிமையையும், அங்குள்ள ஶ்ரீராமர் கோயிலின் புகழையும்
குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த ராமதாஸர் தனக்கு அளிக்கப்பட்ட
பல்லக்கில் ஏறி அந்த ஊரை அடைந்து, ஊருக்கு முன்னால் கீழே இறங்கி மலையை
வலம் வந்தார்.  கோயிலுக்குச் சென்று தன் குடும்பத்தோடு குடியிருந்த
ஶ்ரீசீதாராமரை, பரத, லக்ஷ்மண, சத்ருக்கன, ஆஞ்சநேயரோடு தரிசனமும்
செய்தார்.  புதிய தாசில்தாரைக் குறித்தும், அவர் கண்டிப்பைக் குறித்தும்
கவலையுற்றிருந்த பத்ராசலம் மக்கள் பக்திப் பரவசத்தோடு காட்சி அளித்த
இவரைப் பார்த்து மகிழ்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.  பதவி ஏற்ற நாள் முதல்
சிறப்பாகப் பதவிக்கு உரிய வேலைகளைத் தவறாது செய்துவந்தார் கோபன்னா.
குடிகளைத் தம்மிலிருந்து பிரித்து நினையாமல் இருந்து வந்ததால் எப்போதும்
ஊர் பாடல்,  ஆடல், பஜனை, வழிபாடுகள் எனக் கோலாகலமாக இருந்து வந்தது.
மக்களும் தவணை தவறாமல் கிஸ்தியைச் செலுத்தி வந்தனர்.  மற்ற தாலுகாவின்
தாசில்தார்களுக்கு எல்லாம் ஓர் நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார் கோபன்னா.

பத்ராசலம் கோயில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது.  அதற்குத்
திருப்பணி செய்ய வேண்டும் என நினைத்தார் கோபன்னா.  அதற்கு முன்னால் அதன்
பூர்வ சரித்திரம் என்ன என்பதை ஆராய்ந்தார்.  “தம்மக்கா என்னும் அந்தணப்
பெண் தன் மகளோடு இவ்வூரில் வாழ்ந்து வருகையிலே அவள் கனவிலே ஸ்ரீராமர்
தோன்றித் தாம் மலை மீது இருப்பதைச் சொல்ல, மலை ஏறிப் பார்த்தபோது ஒரு
புதரில் சீதாசமேத ஶ்ரீராமர், பரத, லக்ஷ்மண, சத்ருக்ன, அநுமனோடு காட்சி
கொடுத்தார்.  அவர்களுக்குக்கோயில் கட்டி இந்த விக்ரஹங்களைப் பிரதிஷ்டை
செய்ய வேண்டும் என நினைத்த தம்மக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினாள்.
நகரில் வாழ்ந்து வந்த பத்திர ரெட்டி என்பவரும், மற்றும் ஊராரும் பண உதவி
செய்ய, கோயில் வேலைகள் நடந்தன.  அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றோடு
ஸ்ரீராமர் அங்கே தன் குடும்பத்தோடு கோயில் கொண்டார்.  நாளடைவில் தம்மக்கா
ஶ்ரீராமரோடு ஐக்கியமானாள்.  பின்னர் ஒரு அரசன் ஏதோ திருப்பணி என்ற
பெயரில் செய்தான்.  ஆனால் இப்போதோ கோயில் முட்புதர்களும், செடிகொடிகளும்
மண்டி சுவற்றிலேயும் மரங்கள் வேரோட ஆரம்பித்துவிட்டிருந்தது.  இத்தகைய
நிலைமையைக் கண்ட கோபன்னாவுக்குக் கண்ணீர் வந்தது.

யோசித்தார்.  தானீஷாவுக்கு பத்ராசலம் தாலுகாவின் வசூல் என்பது ஒன்றும்
பெரிய விஷயம் அல்ல.  பத்ராசலம் அவன் ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதியே ஆகும்.
பார்க்கப் போனால் இது தானீஷாவே முன்னின்று ஏற்று நடத்தி இருக்க வேண்டிய
பணி.  இந்தக் கோயிலைச் சீர்திருத்திக் கட்டினால் எத்தனை மக்கள்
பயனுறுவார்கள்.  ஆகவே இதை நாமே ஏற்று நடத்திவிடலாம். என நினைத்தார்
கோபன்னா. உடனே தனக்கு உதவியாக  இருந்த கணக்கனிடம் வரிப்பணம் எவ்வளவு எனக்
கேட்க, அவன் ஆறு லக்ஷம் பொன் இருப்பதாய்த் தெரிவித்தான்.  கோயில்
திருப்பணிக்கு எவ்வளவு தேவை எனக் கணக்குப் போட்டால் ஆச்சரியவசமாக அதுவும்
ஆறு லக்ஷம் பொன்னாக இருந்தது.  கோபன்னா உடனே திருப்பணியை ஆரம்பிக்க அந்த
மலைப் பிரதேசத்தில்  உளியின் சப்தமும், ஆட்களின் கூக்குரலும்
சம்மட்டிகளின் ஓசையும் கேட்க ஆரம்பித்தது.  திருப்பணி வேலைகள் வெகு
சுறுசுறுப்பாக நடந்தது.  பல ஊர்களில் இருந்து சிற்பிகளும், ஆட்களும்
வந்து வேலை செய்தனர்.  மிகப் பிரம்மாண்டமாகக் கோயில் எழுந்தது.
தூண்களில் செதுக்க வேண்டிய சிற்பங்களைத் தெரிவு செய்தார் கோபன்னா.
அலங்கார மண்டபம், கர்பகிரஹம், பலிபீடங்கள், கொடிமரம், எல்லாம் உருவாகின.
ராமாயணக் கதையையே சிற்பங்களாக வடித்தார் ஒரு சிற்பி.

Thursday, October 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்!--பத்ராசலம் ராமதாஸர்!


குழந்தை போனது என்னமோ போனதுதான்.  ஆனால் பக்தர்களோ இன்னும் சாப்பிடவே இல்லை.  இப்போது போய்க் குழந்தை போனதைச் சொன்னால் அத்தனை பக்தர்களும் பட்டினி கிடக்க நேரிடும்.  எல்லாம் வீணாவதோடு குழந்தை ஒன்றும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை.”  ஒரு முடிவுக்கு வந்த ராமதாஸரின் பத்தினி குழந்தையை, அதாவது குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் ஓர் அறையிலே கொண்டு வைத்துப் போர்வையால் மூடிவிட்டு எதுவுமே நடவாதது போல் தன் காரியங்களைக் கவனிக்கலானாள்.  சமாராதனை முடிந்தது.  அனைவரும் தாம்பூலம் பெற்றுச் சென்றனர்.  மெல்லக் கணவனிடம் வந்த ராமதாஸரின் பத்தினி தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள்.  பின்னர் அழைத்துச் சென்று குழந்தையைக் காட்டினாள்.  அந்தக் குழந்தையின் உடலை எடுத்து வந்த பத்ராசல ராமதாஸர் குழந்தையைச் சந்நிதியில் கிடத்தினார்.  “ஏ, ராமா, இதுவும் உன் சோதனையா?  அடியவரைக் காப்பது, இடர் தீர்ப்பது என்பது உன் கடமையன்றோ!  நின் கடன் அடியேனைத் தாங்குதலும் சேர்ந்தன்றோ! இதெல்லாம் பொய்யா?  இப்படியும் நடக்குமா?  இந்தச் செல்வம் நீயன்றோ எங்களுக்குத் தந்தாய்!  நீயே இப்படித் திரும்பப் பிடுங்கலாமா?” என்றெல்லாம் கதறி அழுதார்கள்.  பல மணி நேரம் கதறி அழுத அவர்களைக் குழந்தையின் குரல் அப்பா, அம்மா என அழைப்பது கேட்டது.  திடுக்கிட்ட அவர்கள் பார்த்தபோது இறந்த குழந்தை உயிருடன் வந்திருப்பதைக் கண்டனர்.  இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லில் அடங்காத ஒன்று. இதன் மூலம் ஸ்ரீராமன் மேல் அவர்கள் வைத்த பக்தி மேலும் பெருகிற்று.

ஸ்ரீராமனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவல் ராமதாஸரின் நெஞ்சில் இருந்து வந்தது. தன் குருவான கபீர்தாஸரின் நினைவு வந்தது.  “எப்போது நீ நினைத்தாலும் அப்ப்போது நான் வருவேன்.” என்று தன்னிடம் கூறிச் சென்றிருந்த குருநாதரஇ நினைத்தார் கோபன்னா.  நினைத்த மாத்திரத்தில் வந்து நின்றார் கபீர்தாஸர்.  ஸ்ரீராமனைத் தரிசிக்கவேண்டும்; நேரிலே தரிசனம் கிடைக்கும்படி என்ன வழி எனக் கேட்ட கோபன்னாவிடம் கபீர்தாசர் அது அதற்கென்று உரிய காலத்திலே தான் கிடைக்கும் எனவும், அதுவரை ராமதாஸர் தனக்கென விதித்துள்ள செயல்களைச் செய்து வரவேண்டும் எனவும் கூறினார்.  ஆனால் இந்த பதில் கோபன்னாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை.  கபீரோ,” புலன்களை அடக்கித் தவம் செய்து வரும் மாமுனிவர்களுக்கெல்லாம் கூட எளிதில் கிட்டாத பொருள் ஸ்ரீராம தரிசனம்.  அதை இப்போதே பார்க்க வேண்டும் என்றால் இயலுமா? முதலில் உன் பக்தியை மேம்படுத்திக்கொள்ளும் வழியைப் பார்.” என்றார்.  ராமதாஸருக்கோக் காத்திருக்க விருப்பம் இல்லை;  பொறுமையும் இல்லை.  இப்போதே, இங்கேயே உடனே பார்க்க வேண்டும் எனக் கபீர்தாசரை வற்புறுத்த, “நாளைப் பகல் ஒருமணிக்குக் காட்சி கொடுப்பார்.” என்று சொல்லிவிடுகிறார்.  இந்தச் செய்தி எப்படியோ ஊரெல்லாம் பரவ ராமதாஸரின் இல்லத்தில் ஊர் மக்கள் கூட்டம் தாங்கவில்லை.  

கபீரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது.  ஸ்ரீராமரிடம் தன் சீடனான கோபன்னாவின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படியும் அவனுக்கு ஶ்ரீராமர் மறுநாள் உச்சி வேளையில் தரிசனம் கொடுப்பார் எனத் தான் வாக்களித்திருப்பதையும் கூறித் தன் வாக்கைக் காப்பாற்றும்படி ஸ்ரீராமனை வேண்டினார்.  ஸ்ரீராமரோ கோபன்னாவுக்கு இன்னமும் தெளிவோ, மனம் பண்படுதலோ ஏற்படவே இல்லை எனக் கூறிப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என மறுக்கக் கபீரோ ஒரு பக்தனாகிய தன் வாக்கை எவ்வாறேனும் காக்கவேண்டியது ஸ்ரீராமரின் கடமை எனக் கெஞ்சினார். கோபன்னாவின் வீடு திமிலோகப் பட்டது.  பஜனை, பூஜைகள், என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.  ஆங்காங்கே மக்கள் மிருதங்கம், ஜால்ரா முதலியனவற்றை ஒலிக்கச் செய்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.  உச்சி வேளை நெருங்க நெருங்க, அங்கே சூழ்நிலையில் பரபரப்புக் கூடலாயிற்று.  நடுக் கூடத்திலே இறைவனுக்கெனத் தனியானதொரு ஆசனம் அமைக்கப் பட்டிருந்தது.  இறைவனின் சேவைக்கு வேண்டிய மலர்கள், பழங்கள், நிவேதனங்கள், அதோடு ஷோடச உபசாரங்களுக்கு ஏற்பட்ட சாமக்ரியைகள் முதலியனவும் தயாராகக் காத்திருந்தது.  அப்போது பார்த்து ஒரு எருமை மாடு அங்கே வந்தது.  அதன் உடல் முழுக்கச் சேறு. கொம்பெல்லாம் சேற்று மண் ஒட்டிக் கொண்டிருந்தது.  அந்த்அ மாடு நேரே நடந்து இறைவனுக்கு அமைக்கப் பட்டிருந்த ஆசனத்துக்கு அருகே சென்றட்து.  செல்லும்போதே கீழே இருந்த நிவேதனங்கள், மலர்கள், பழங்கள், ஷோடச உபசார சாமக்ரியைகள் என அனைத்தையும் உருட்டிக் கொண்டே சென்றது.  கூடி இருந்த அனைவருக்கும் பொறுமை போயிற்று.  கோபம் பொங்கியது.  ஒரு தடியை எடுத்து மாட்டை நன்றாக அடித்து விரட்டினார்கள்.  மாடும் “அம்மா” எனக் கத்திக் கொண்டே ஓடிப் போய்விட்டது.

கபீரிடம் சென்ற ஸ்ரீராமர், “கபீர், உன் சீடன் என்னை நன்றாக அடித்துவிட்டான்;  இதோ பார்!  அடித்த அடையாளங்கள்.  அவன் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை.” எனக் கூற, கபீர் கோபத்துடன், “ராமா, நீ எருமையாகப் போவாய் என அவனுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க, “அவனுக்கு இன்னும் உரிய பக்குவ நிலை வரவில்லை கபீர்.  அது வந்ததும் அவனுக்கு நான் காட்சி தருவேன்.”  எனக் கூறி மறைந்தான்.

Monday, September 17, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம்--பத்ராசலம் ராமதாஸர்!


ஆத்தங்குடி மாளிகைச் சித்திரங்களில் காணப்பட்டவை பத்ராசல ராமதாஸர் கதை எனச் சொல்ல, ராஜம் அம்மாவும் அதை உறுதிப்படுத்தினார்.  உடனே நம் காளைராஜன் அவர்கள் அந்தக் கதையைக் கூறுமாறு கேட்டிருந்தார்.  இரண்டு நாட்களாக இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தேன்.  இப்போது தான் எழுதலாம் எனக் கொஞ்சம் தைரியம் வந்தது.

சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவரான சத்குரு தியாகப் பிரம்மம் அவர்களால் போற்றப் பட்ட பெரியார் பத்ராசலம் ராமதாஸர்.  தம்மை "ராமதாஸ தாஸன்" எனச் சொல்லிக் கொண்டவர் தியாகப் பிரம்மம்.  ராமதாஸருக்கு அருள் புரிந்து அவரது துன்பங்களைப் போக்கி அருளியது போல் எனக்கும் அருள் செய்வாய் எனப் பாடி இருக்கிறார். அத்தகைய பெருமை வாய்ந்த பத்ராசலம் ராமதாஸர் காலம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலம் ஆகும். கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்த காலத்தில் கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கன்னா என்னும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  இவரது மனைவி காமாம்பாள் என்பவர்.  இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கோபன்னா என்னும் பெயர் கொண்ட பின்னால் ராமதாஸர் என அழைக்கப்படப் போகும் பக்தர் ஆவார்.

கோபன்னா இளவயதிலேயே புராணப்ரவசனம் நடக்கும் இடங்களிலே முன் வரிசையிலே அமர்ந்து ராமாயணக் கதையை ஆவலுடன் கேட்பார். ராமரிடம் எல்லையற்ற அன்பு கொண்டார்.  ராமரை வழிபடுவதே தம் வாழ்க்கையின் முக்கிய லக்ஷியமாய்க் கொண்டார்.  தாயும், தந்தையும் ஒருவர் பின் ஒருவராக மறைய குடும்பத்தில் பெரியோர் வழிபட்டு வந்த ஶ்ரீராமரின் விக்ரஹம் இவருக்கு வந்து சேர்ந்தது.  அந்த விக்ரஹத்தை வைத்து வழிபட்டு வந்த சமயம் ஒரு நாள் முதியவர் ஒருவர் அங்கே வந்தார்.  இவரது பக்தியைக் கண்டு வியந்தார் அவர்.  ஶ்ரீராமரின் விக்ரஹத்தின் மேல் கோபன்னா வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு உள்ளூர ஆனந்தம் அடைந்த அந்தப் பெரியவர் அவரைச் சோதிக்க எண்ணி அந்த விக்ரஹம் இருந்த பெட்டியை விக்ரஹங்களோடு குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார்.  இதை அறியாத கோபன்னா விக்ரஹங்களைக் காணாமல் தவித்தார்; துடித்தார்.

அப்போது முதியவர் அவரிடம் என்ன விஷயம் எனக் கேட்க, தான் வழிபட்டு வந்த ஶ்ரீராமர் விக்ரஹத்தைக் காணவில்லை என கோபன்னா கூற, தாம் வேறு விக்ரஹம் தருவதாய்ச் சொல்லிச் சமாதானம் செய்து பார்க்கிறார். கோபன்னா, தாம் வழிபட்டு வந்த விக்ரஹம் தான் தனக்கு வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.  அதன் பின்னர் இவருக்கும் முதியவருக்கும் வாக்குவாதம் நடக்க முடிவில் பெரியவர் ஶ்ரீராமநாமத்தைச் சொல்லிப் பேழையைக் குளத்திலிருந்து மீட்டுக் கொடுத்துத் தாம் கபீர்தாசர் என்பதையும் அவருக்குத் தெரிவித்து, கோபன்னாவின் தலை மீது கைவைத்து ஸ்பரிச தீக்ஷையும் கொடுத்து அருளிச் சென்றார்.

பின்னரும் தெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டு அடியார்களுக்கு அன்னமும் இட்டு வந்தார் ராமதாஸர்.  ஊர் மக்கள் இவை எல்லாம் இல்லறத்திலிருந்து கொண்டு செய்வதே மேன்மை தரும் என வற்புறுத்திச் சொல்ல, கோபன்னா ஒருவழியாகத் திருமணத்துக்குச் சம்மதம் கொடுத்தார்.  திருமணமும் நடந்தது.  இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.  ஒரு முறை ஶ்ரீராமநவமி சமயம்.  பஜனையும், சமாராதனையும் பெரிய அளவில் செய்வதற்கான ஏற்பாடுகளை கோபன்னாவும், அவர் மனைவியும் செய்து கொண்டிருந்தனர்.  சமையல் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அன்னம் வடிக்கப் பட்டுக் கஞ்சி ஓடி, ஓடி, ஒரு குழியிலே வந்து தேங்கி இருந்தது.  ஶ்ரீராமனது திவ்ய மங்கள விக்ரஹம் சகல அலங்காரங்களுடன் பூஜை முடிந்து கற்பூர ஆரத்தியை ஏற்றுக் கொண்டிருந்த நேரம்.  நாமாவளிகளின் கோஷம் ஊரையே நிறைத்தது.  ஆயிற்று;  சிறிது நேரத்தில் இலை போட்டுப் பரிமாற வேண்டியதுதான்.

அப்போது ஏதோ வேலையாக வீட்டின் பின்புறம் சமையல் நடக்கும் இடத்துக்குச் சென்றாள் கோபன்னாவின் மனைவி.  கையில் குழந்தை.  குழந்தை துள்ளி விளையாடும் பருவம்.  அவளே எதிர்பாராமல் கஞ்சி நிரம்பியிருந்த குழியில் குழந்தை விழுந்துவிட்டது.  துடித்துப் போன கோபன்னாவின் மனைவி குழந்தையை உடனே தூக்கினாள்.  ஆனாலும் குழந்தையின் உடல் துவண்டது.  உயிரில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.  செய்ய வேண்டியது என்ன? சற்றே நிதானித்தாள் அவள்.

Friday, May 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞான சம்பந்தர்!

கொட்டும் மழையிலும் கைவிளக்கோடு ஞானசம்பந்தர் நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி வட்டமாக மழைத்துளி விழாமல் இறையருள் காத்து நின்றது. மழை நீர் கூட அவர் இருந்த பக்கம் வராமல் அஞ்சியதைப் போல் ஒதுங்கியே ஓடிற்று.  விடிய விடிய நின்று கொண்டிருந்தார் ஞானசம்பந்தர்.  மெல்ல மெல்லப் பொழுதும் விடிந்தது.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  ஆகையால் அவருக்கு மனைவி  இருந்தார்.  அவர் காலையில் எழுந்து வாசலைத் திறந்து விளக்கு ஏற்றிக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறந்தார்.  திறந்தவர் அதிர்ந்து போனார்.  ஞானசம்பந்தர் கைவிளக்கோடு நின்று கொண்டிருப்பதையும், கை விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்ததையும், மழை லேசாகத் தூறலாகப் போட்டுக் கொண்டிருந்ததையும், இரவில் நல்ல மழை பெய்திருப்பதற்கான அடையாளங்களையும் கண்டார்.   ஞானசம்பந்தரைப் பார்த்தார்.  அவர் நனையவில்லை என்பதையும் அந்த மழையிலும் விளக்கும் அணையவில்லை என்பதையும் கண்டார்.  வியந்தார். உடனே ஓடிச் சென்று தன் கணவரிடம் விஷயத்தைக் கூறினார்.  அப்போது தான் கமலை ஞானப் பிரகாசருக்கு முதல் நாள் இரவில் ஞானசம்பந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு வழி காட்டி வந்திருக்கும் விபரம் புரிந்தது.  வெளியே ஓடோடி வந்தார்.

பதறிப் போனார். விடிய விடிய இரவு முழுதும் இப்படி நிற்க வேண்டுமெனில் எவ்வளவு ஆழமான குரு பக்தி இருக்க வேண்டும். இதை நினைத்து இப்படியும் ஒரு சீடனா தமக்கு என எண்ணி ஒரு பக்கம் ஆனந்தம் அடைந்தார்.  கண்களில் கண்ணீர் பெருகியது.  இப்படியும் ஒரு சீடனா எனக்கு என அவரை ஆரத் தழுவிக் கண்ணீர் சொரிந்தார்.  “அன்பரே, நீர் சீடராயிருக்கும் நிலையைக் கடந்து விட்டீர்.  உம்மைப் போன்ற சீடன் எனக்குக் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேனோ! நீர் இனி ஆசாரியராக இருக்கும் தகுதியைப் பெற்று விட்டீர்கள்.  நீர் சாதாரணமான ஞானசம்பந்தனும் இல்லை.  குரு ஞானசம்பந்தர்.  தகுந்த இடத்தில் சென்று இரும்.  உம்மைத் தேடி வரும் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு சிவஞானப் பொருளை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவீராக.  சைவ சமயப் பரிபாலனமும் உம்மால் நடைபெறட்டும்.” என ஆசிர்வாதம் அளித்து அவரைத் தனியாகப் போய் ஆசாரியராக இருக்கும்படி கட்டளையும் இட்டார்.

ஆனால் குருஞானசம்பந்தருக்கோ தன் குருவை விட்டுப் பிரிய மனமில்லை.  மனம் வருந்தி குருவானவர் எப்படி இவ்வாறு சொல்லலாயிற்று என்பதை ஒரு பாடல் மூலம் உணர்த்தினார்.  “கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்
சினக்கும் கமலையுள் ஞானப் பிரகாச சிதம்பர, இன்று
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே.”
இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த கமலை ஞானப் பிரகாசர், குரு ஞானசம்பந்தரைத் தேற்றினார். அண்மையில் காவிரிக்கரையில் தெற்குப்பக்கம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று அங்கே மடம் அமைக்கக் கூறினார்.  வில்வாரண்யம் யமன் வழிபட்டுப் பேறு பெற்றதால் தருமபுரம் என்ற பெயரிலும் அழைக்கப் படும் எனவும் கூறி அங்கே சென்றிருந்து மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்க்குமாறு கட்டளையிட்டார்.  தன்னை வாரந்தோறும் வந்து தரிசிக்கலாம் எனவும் கூறி ஆறுதல் சொன்னார்.

அதன்படி குருஞானசம்பந்தர் திருவாரூரினின்று கிளம்பி மயிலாடுதுறை வந்து தருமபுரத்தை அடைந்தார்.  தருமபுரீசுவரரையும், அபயாம்பிகையையும் வணங்கித் தாம் தங்க ஒரு மடமும், அதில் தாம் அன்றாடம் வணங்கும் சொக்கலிங்கத்திற்கு ஒரு கோயிலும் அமைத்தார்.  அதுகாறும் தருமபுரீஸ்வரர் கோயிலை நிர்வகித்த நிர்வாகிகளான முனிவர்கள் இவரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்துவிட்டு ஓய்வும், தவம் செய்யவும் வேண்டித் தென்னாடு சென்றனர். குருஞானசம்பந்தர் நிலையாகத் தருமபுரத்திலேயே தங்கினார்.  வாரந்தோறும் ஆரூர் சென்று குருவையும், ஆரூர்த் தியாகேசனையும் வணங்கி வந்தார்.  குருஞானசம்பந்தரின் ஞானமும், அறிவும் நாலாதிசையிலும் பரவலாயிற்று.  சீடர் பலர் வந்து அவரிடம் சரணடைந்தனர்.  தருமை ஆதீனம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

சிதம்பர வழிபாட்டிற்காக ஒரு முறை சிதம்பரம் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.  அப்போது இரவு, பகலாக நிட்டையில் இருந்த இவருக்கு சிவகாமி அம்மை அர்த்த ஜாமப் பள்ளியறைப் பிரசாதங்களைக் கொடுத்து அருளினார்.  இவர் காலத்தில் வில்வாரண்யத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாக வரலாறு சொல்கிறது.  இதை தருமை ஆதீனத்தின் முத்திரைச் சின்னத்தில் ஓவியமாகக் காண முடிகிறது.  குரு ஞானசம்பந்தர் அருளிய  நூல்களாவன:

1.சொக்கநாதக் கலித்துறை
2. சொக்கநாத வெண்பா
2. சிவபோத சாரம்
4. பண்டாரக் கலித்துறை என்னும் ஞானப் பிரகாச மாலை
5. நவரத்ன மாலை
6. சோடசகலாப் பிராசாத சட்கம்
7. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
8. முத்தி நிச்சயம்.

இவற்றை ‘குரு ஞானசம்பந்தர் அட்டகம்” என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  இதைத் தவிர ஞானாவரண விளக்கம், சிவபூசா பத்ததி போன்ற நூல்களையும் இவர் இயற்றி இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து, மதுரையில் சொக்கநாதரின் திருவருளைப் பெற்று, திருவாரூரில் குரு கமலை ஞானப் பிரகாசரின் மூலம் குருவருள் பெற்று, மயிலாடுதுறைக்கருகே தருமபுரத்தில் தாமே குருவாய் அமர்ந்த குருஞானசம்பந்தர் விரைவில் தமது முத்திப்பேற்றுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார்.  தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கவும் ஆதீனத்தில் ஆட்சி புரியும், தம் மாணாக்கர்களில் சிறந்தவரான ஆனந்த பரவசர் என்பாருக்கு ஞான உபதேசம் செய்து ஆசாரியத் தலைமையை நல்கித் தாம் புதிதாய்க் கட்டிய ஞானபுரீசுவரர் கோயிலில் சிவலிங்கப் பெருமான் திருவடி நிழலில் நிட்டையில் ஆழ்ந்து முத்தி அடைந்தார்.

தேவாரம் தளத்தின் உதவியோடு எழுதப் பட்டது.

Tuesday, May 22, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!

ஆனால் இறைவன் தன் அடியார்களை ஒரு போதும் கைவிட மாட்டான் அல்லவோ!  கமலை ஞானப் பிரகாசருக்கும், அன்றிரவு, ஈசன் கனவில் வந்து, “ஞானப் பிரகாசா, நம் அன்பன் ஞானசம்பந்தன் நின்னை நாடி வருகின்றான்.  அவனுக்கு ஞானம் வழங்குவாயாக!” என்று கூறி மறைந்தார்.  ஆக குருவும் சீடனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  திருவாரூர் தியாகேசர் கோயிலின் உட்கோயிலான சித்தீசுவரத்தில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்து கொண்டு ஞானசம்பந்தரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  மதுரையிலிருந்து கிளம்பிய ஞானசம்பந்தர் திருவாரூரை அடைந்தார்.  முதலில் பெருமானை வழிபட வேண்டும் என எண்ணி அங்கு பெருமானை வழிபட்டு வலம் வரும் நேரத்தில் சித்தீசுவரத்தில் தமக்காக குருவானவர் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் காத்திருப்பதைக் கண்டு, குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

பின்னால் ஒரு ஆதீனத்தையே ஸ்தாபித்து குருமுதல்வராகப் போகும் தம் சீடனின் வரவுக்குக் காத்திருந்த குருவும் அவரை அங்கே வடக்கு நோக்கி அமரச் செய்தார்.  தாம் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவுக்கு முன்னிலையில் ஞானசம்பந்தருக்கு நயன, வாசக, ஸ்பரிச, அத்தமத்தகசையோக, திருவடி முதலான தீக்ஷைகளை வழங்கி ஞானோபதேசம் செய்து ஆட்கொண்டார்.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  குருஞான சம்பந்தரோ இளம் துறவி.  இருவருமாகத் திருவாரூரில் தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தனர்.  குருவின் அருகேயே இருந்து சேவைகள் செய்தும், பாடங்கள் கேட்டும், கற்றும் பல விதங்களில் தம் ஞானத்தை மேம்படுத்திக் கொண்டார் குரு ஞானசம்பந்தர்.  தினம் தினம் தியாகேசனின் அர்த்தஜாம வழிபாட்டை இருவருமாகச் சீடர்கள் புடை சூழச் சென்று கண்டு விட்டு வருவது வழக்கம். அவ்வாறே ஒரு நாள் அனைவரும் சென்று விட்டு கமலை ஞானப் பிரகாசரின் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

அன்றைய தினம் கைவிளக்கு எடுத்துக் கொண்டு கூட வரும் பணியாள் வரவில்லை.  அவனுக்குப் பதிலாக சீடர் ஞானசம்பந்தர் கைவிளக்கை எடுத்துக் கொண்டு குருவுக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு வந்தார்.  சிவதரிசனம் கண்ட பேரானந்த நிலையில் இருந்த ஞானப் பிரகாசர் தம் இல்லத்திலிருந்து கோயிலுக்குச் செல்கையிலோ, அல்லது திரும்பி இல்லம் செல்கையிலோ கை விளக்கு ஏந்தும் பணியாள் வரவில்லை;  அதற்குப் பதிலாக சீடன் குருஞானசம்பந்தர் கை விளக்கு ஏந்தி வருகிறார் என்பதை அறிந்தார் இல்லை.  ஆகவே கோயிலில் இருந்து இல்லத்திற்குத் திரும்பியதும், பணியாளை, “நில்” என்று சொல்லி அங்கேயே நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் வழக்கப்படி அன்றும், கை விளக்கு ஏந்தி வந்த ஞானசம்பந்தரை, “நில்” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.  பணியாள் தினமும் அதன் பின்னர் தன் வேலை முடிந்தது என விளக்கை சமாதானம் செய்துவிட்டு வீடு சென்றுவிடுவான்.  ஆனால் ஞானசம்பந்தரோ, “நில்” என குரு கூறியதைக் கட்டளையாகக் கொண்டு விடிய, விடிய அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

விளக்கில் இருந்த எண்ணெயெல்லாம் தீர்ந்து போயும் எண்ணெய் இல்லாமலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதோடு சோதனையாக அன்றிரவு பெருமழையும் பெய்தது.  கன மழை பெய்தும் ஞானசம்பந்தர் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே கை விளக்கோடு நின்று கொண்டிருந்தார்.  ஆஹா, என்ன ஆச்சரியம்!  ஞானசம்பந்தரின் மேல் மழைத்துளியும் படவில்லை.  அவர் உடல் மழையில் நனையவில்லை. விளக்கும் அணையவில்லை.  அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டாற்போல் அந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை.  அந்த இடத்து பூமியும் காய்ந்தே காணப்பட்டது.

Monday, May 21, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!


சைவ உலகில் இருந்த ஞானசம்பந்தர்களில், திருஞானசம்பந்தரை நன்கறிவோம். அடுத்து சந்தான குரவர்களில் ஒருவரான மறைஞான சம்பந்தரைப் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கப் போவது குருஞான சம்பந்தர் ஆவார். இவர் தருமை ஆதீன குரு முதல்வரும் கூட. இப்போது இவரைக் குறித்து அறிவோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்த காலம் அது. அங்கு கார்காத்த வெள்ளாளர் குலத்தில் சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும், மீனாக்ஷி அம்மையாருக்கும் ஒரு சோமவார நன்னாளில் அவர்களின் தவப் பயனாய் ஆண் மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் குழந்தை அந்த ஞானசம்பந்தனைப் போல் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி ஞானசம்பந்தன் என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை சீரும் சிறப்புமாக வளர்ந்தது. இயல்பாகவே மொழியில் பற்று மிகுந்திருந்ததால் வடமொழியும், தமிழும் நன்கு கற்றுத் தேர்ந்தார் ஞானசம்பந்தர்.



 இவருக்குப் பதினாறு வயது ஆகும் சமயம் பெற்றோர்கள் இவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாக்ஷியையும், சொக்கேசரையும் வழிபட வந்தனர். சில நாட்கள் மதுரையிலேயே தங்கி இருந்து ஆலயம் சென்று அம்மையையும், அப்பனையும் வழிபட்டு வந்தனர். பின்னர் பெற்றோர் ஊருக்குத் திரும்ப எண்ணினார்கள். மகனையும் உடன் அழைக்க, மகனோ மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல மறுத்துவிட்டார். மதுரையை மிகவும் பிடித்து விட்டதாயும், ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணி அம்மையையும் விட்டுப் பிரிய மனம் இல்லை எனவும் கூறிவிட்டுத் தந்தையோடும், தாயோடும் சொந்த ஊர் செல்ல மறுத்தார். திரும்பத் திரும்பப் பிடிவாதமாய் இவர் இப்படிச் சொல்லவும் பெற்றோர் சில காலம் விட்டுப் பிடிக்கலாம் என எண்ணிப் பையனை அங்கேயே விட்டு விட்டுச் சொந்த ஊர் திரும்பினார்கள்.



ஞானசம்பந்தர் தன் இருப்பைப் பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றிக் கொண்டார். தினந்தோறும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கேசரையும், மீனாக்ஷி அம்மையையும் வழிபட்டுவிட்டு. பொற்றாமரைக் குளக்கரையில் மற்றச் சிவனடியார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பரவசநிலையில் ஆழ்ந்திருக்க எண்ணினார். அதற்கு முதலில் சிவ வழிபாடு செய்ய வேண்டுமே. என் செய்வது? தம் விருப்பத்தைச் சொக்கேசனிடம் விண்ணப்பித்துக் கொண்டார். சில நாட்கள் சென்றன. தினம் தினம் சொக்கேசனிடம் சிவ வழிபாடு செய்ய ஒரு வழிகாட்டுமாறு விண்ணப்பிப்பதே அவரின் லட்சியமாயிற்று. ஒரு நாள் இரவு தூங்குகையில் கனவில் சொக்கேசன் தோன்றி, “ஞானசம்பந்தா, பொற்றாமரைக் குளத்தின் ஈசான்ய மூலையில் நீருக்கடியிலே ஒரு பெட்டகத்துள்ளே இலிங்க வடிவில் நாம் குடி இருக்கிறோம். நீ அதனை எடுத்து உனக்கேற்ற வழியில் வழிபடுவாயாக!” என்றார். உடனே கண் விழித்த ஞானசம்பந்தர் விடியும் வரை காத்திருந்து, விடியற்காலையில் பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று ஈசான்ய மூலையில் இறங்கி நீருக்குள்ளாக மூழ்கிப் பெட்டகத்தைத் தேடினார். சிறிது நேரத் தேடலிலேயே பெட்டகம் அவர் கைகளில் கிடைக்க, சொக்கேசன் சந்நிதிக்கு ஓடோடிச் சென்ற ஞான சம்பந்தர், மகிழ்வோடு அவரை வணங்கித் துதித்து, பெட்டகத்தினுள் இருந்த இலிங்க வடிவை, சொக்கலிங்கம் என்ற பெயரோடு தினந்தோறும் வழிபட்டு வரலானார்.

" கண்ணுக்கினிய பொருளாகி யேஎன் கரத்தில் வந்தாய்
 விண்ணும் பரவிடும் அற்புத மே என்ன விஞ்சையிதான்
 மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே
 நண்ணும்படி செய் மதுரா புரிச் சொக்க நாயகனே!’

 என்ற பாடல் குருஞானசம்பந்தரால் பாடப் பட்ட சொக்கநாதக் கலித்துறையின் பதினோரு பாடல்களில் முதற்பாடலாகும்.


 இந்த இலிங்க வடிவே இன்னுமும் தருமை ஆதீனத்தில் ஆன்ம பூஜா மூர்த்தியாய் எல்லா குருமகா சந்நிதானங்களாலும் வழிபடப் பெற்று வருகிறார். நம் ஞானசம்பந்தருக்கோ மூர்த்தி கிடைத்துவிட்டது எனச் சும்மா இருக்க இயலவில்லை. தமக்கு ஞானமும் கிட்ட வேண்டும் என எண்ணினார். ஞானம் பெறுவது என்பது ஒன்றும் சுலபமான ஒன்றில்லை. தக்க குருவின் மூலம் உபதேசங்கள் பெற வேண்டும். அதற்கான குரு யார்? எவர்? எங்கிருக்கிறார்? அனைத்திற்கும் வழிகாட்டிய சொக்கேசனே இதற்கும் வழிகாட்ட வேண்டும். மீண்டும் சொக்கனின் இறைஞ்சினார் ஞானசம்பந்தர். சொக்கேசனும் மனம் இரங்கி இவரது கனவில் தோன்றி. “ திருவாரூரில் ஞானப் பிரகாசன் என்றொரு பக்தன் இருக்கிறான். அவனுக்கு நாம் உபதேசித்தருளிய ஞானம் பரம்பரையாக வந்தது. நீ திருவாரூர் செல். ஞானப் பிரகாசனிடம் உபதேசம் பெறுவாய்! ஞான மார்க்கத்தை உனக்கு அவன் காட்டுவான்! “ என்று கூறினார். இவ்வாறு கனவு கண்ட ஞானசம்பந்தர் ஈசனின் அருள் தனக்குக் கிட்டியதை உணர்ந்து மகிழ்ந்து அங்கே சொக்கேசனிடம் விடை பெற்றுக் கொண்டு தியாகேசனைத் தரிசிக்கவும், ஞானோபதேசம் பெறவும் வேண்டி திருவாரூருக்குப் புறப்பட்டார். குரு ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் ஒரு பக்கம்.

Tuesday, April 3, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 3

துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவ்வூரில் பர்த்ருஹரி/பத்திரகிரியார் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரண்மனையில் செல்வம் மிகுந்திருந்தது; இது காட்டின் கொள்ளையர்களைக் கவர்ந்தது. அவர்கள் அரண்மனைக்குக் கொள்ளையடிக்கச் சென்றனர். செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர். அவ்விதமே கொள்ளை வெற்றியாய் முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் சந்நிதி முன் வீசிவிட்டுச் சென்றனர். அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது.

கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்க, காவலர்களோ, இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்; இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர். மன்னனும் விசாரிக்கப் பட்டினத்தார் எதுவும் சொல்லவில்லை. உடனே மன்னனுக்குக் கோபம் வந்து, “கள்வனைக் கழுவில் ஏற்றுக!” என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப் பட்டது, பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப் பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் மனம் தளராது, “விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது, இதை அறிந்த அரசன் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அரசனைக் கண்ட பட்டினத்தாருக்கு அவனும் ஞான வழியில் செல்லப் பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதும் தெரியவரவே அதை மன்னனுக்குச் சூசகமாக உணர்த்தினார். மன்னனும் மனைவியைச் சோதித்துப் பார்த்து அவள் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார். ராணியோ இறந்துவிடுகிறாள். அவள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து ராஜா பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார். தம்மைச் சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு சித்தர் வந்து பிக்ஷை கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை. அதோ இருக்கிறானே என் சீடன். சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கேளுங்கள்.” என்று கை காட்டி விடுகிறார்.

இதை அந்தச் சித்தர் வாயிலாக அறிந்த பத்திரகிரியார் ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது.” அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார் பத்திரகிரியார். அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது. அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார். பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்துவிட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் உன்னை நாடி வருவாள்.” என்று சொல்கிறார்.

அதன்படியே அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து வருந்தியதாலும் நாய்ப் பிறவி எடுத்ததாலும் காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள். பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர். காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள். தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள். திருவிடைமருதூர் குறித்துக் கூறி அங்கே ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள். மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான். பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்டார் பத்திரகிரியார். பத்திரகிரியாரோ சிவஞானத்தில் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டார். அவர் இது என்ன புதுத் தொல்லை என நினைத்த வண்ணம் தன் குருநாதரான பட்டினத்தாரைப் போய்ப் பார்த்து, “குருவே, இது என்ன?? நாய்க்குப் பிறவி ஞானம் வரலாமா? மங்கையாய்ப் பிறப்பெடுத்து வந்திருக்கிறதே, “ என வினவ, “இதுவும் ஈசன் செயல்,” என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண் மட்டுமில்லாமல் பத்திரகிரியாரும் சேர்ந்து மறைந்தார். இருவரும் சிவஞானப் பெரும் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்தார் சமூகத்தினரின் முக்கியமான கோயிலாகவும் விளங்கி வருகிறது.

திருவொற்றியூர்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2

திருவொற்றியூரில் பட்டினத்தார் பாடியதாகச் சொல்லப் படும் பாடல்கள். ஐந்தெழுத்தின் மகத்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. திருவொற்றியூரில் நடப்பவரின் பொற்பாதங்கள் நம் தலைமேற்படும்படி நன்கு உருண்டு கிடக்கவேண்டும் என்றும் கூறுகிறார், இது மேலோட்டமான பொருள். உட்பொருள் அறிந்தவர் சொல்ல வேண்டும்.

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 2

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.
அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!//
அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

Sunday, March 4, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் பகுதி 1

திருவேகம்ப விருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாயடியேனுமறிந்திலேன்
இன்னமெத்தனை யெத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சியேகம்பநாதனே

----பட்டினத்துப் பிள்ளையார்

இப்போது நாம் காணப்போவது பட்டினத்தார் பற்றி. பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் என அனைத்தும் ஒருவரையே குறிக்கிறது என்று சொல்கின்றனர். என்றாலும் ஒரு சிலர் பட்டினத்தார் என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவர் எனவும் அவர் பாடிய பாடல்களுக்கும், பட்டினத்தடிகள் பாடிய பாடலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு எனவும் கூறுகின்றனர். இந்த வேறுபாடு உடைய பாடல்கள் பின்னாட்களில் வேறு யாரேனும் பாடித் தொகுத்திருக்கலாம் என்றும் ஒரு கூற்று உள்ளது. மேலும் இவர் வரலாறும் இரு விதமாய்க் கூறப்படுகிறது. புனைவு என்பாரும் உண்டு. பட்டினத்தார் இயற்றிய பாடல்களிலும் பட்டினத்தடிகள் இயற்றிய பாடல்களிலும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டும் ஆய்வாளர்கள் இருவரும் ஒருவரே அல்ல எனச் சொல்கின்றனர். ஆனாலும் இப்போது நாம் பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மூவரையும் ஒருவர் எனக் கருதிக் கொண்டே இவரைக் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார். திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி மன்னர்களுக்குச் சமானமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார். மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான். ஆகவே திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார். உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். திருவெண்காடருக்கு சிவகலை என்னும் பெண்ணரசி மனைவியாக வாய்த்தாள். அவளுடன் நல்லறம் நடத்தி வந்தார். ஆனால் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தது. ஆகவே அங்கிருந்து திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார்.

அவ்வூரிலே சிவசருமர் என்னும் அந்தணர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். அன்றாட வாழ்க்கைக்கு உரிய பொருள் இல்லா நிலையில் இருந்த அவரிடம் ஈசன் கருணை கொண்டு தாம் ஒரு குழந்தையாக அவர் முன் தோன்றுவதாகவும், “மருதவாணன்” என்ற பெயரைத் தமக்கு இட்டுத் தம்மை காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து திருவிடைமருதூர் வந்திருக்கும் திருவெண்காடர் என்னும் வணிகரிடம் கொடுக்குமாறும், அதற்கு அவர் பொருள் தருவார்; அந்தப்பொருளை வைத்து வறுமையிலிருந்து மீளலாம் என்றும் கூறுகின்றார். அவ்வாறே ஒரு குழந்தையாக சிவசருமர் முன்னே தோன்ற, குழந்தையைக் கண்ட சிவசருமருக்கு அதைப் பிரிய மனம் இல்லை எனினும் வேறு வழியின்றித் திருவெண்காடரிடம் சென்று , ஈசனின் ஆணையைக் கூறிக் குழந்தையைக் கொடுக்கிறார். ஈசனின் ஆணை என்றதும் திருவெண்காடரும் குழந்தையை வாங்கிக் கொண்டு சிவசருமருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். குழந்தைக்கு மருதவாணர் என்ற பெயரையே நிலைத்திருக்குமாறு செய்து குழந்தையோடு காவிரிப் பட்டினம் திரும்புகிறார்.

மேற்சொன்ன வரலாறு வேறுவிதமாகவும் கூறப்படும். செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன். ஆனால் குபேரனாயிற்றே. செல்வத்துக்கு அதிபதி அல்லவா? ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன். திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர். ஒரே சகோதரி இருக்கிறாள். திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார். ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார். அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார். அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார். தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்கள் கடக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை.

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாததொரு வாழ்க்கையாக இருந்து வந்தது. சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

Sunday, February 19, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! சபாபதி நாவலர்! 2

பின்னர் இவர் திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார். அங்கே அப்போது பதினாறாம் பட்டம் மகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுபதேசம் பெற்று கிட்டத்தட்ட 12 வருடம் அங்கேயே இருந்து இலக்கணம், இலக்கியம், சித்தாந்தம், தத்துவம், வேதாந்தம் அனைத்தும் கற்று ஞான நூல்களையும் கற்றுத் தேர்ந்து மஹா சந்நிதானத்தின் அருளுபதேசத்தையும் பெற்றார். ஆதீனத்தின் வித்துவானாகவும் விளங்கினார். ஆதீனத்தினால் “நாவலர்” என்னும் பட்டமும் வழங்கப் பட்டு கெளரவிக்கப்பட்டார். மாதவச் சிவஞான யோகிகளின் திருக்கரத்தால் எழுதப் பட்ட சிவஞான மாபாடியத்தின் மூல ஓலைச்சுவடியை வேறு யாருக்குமே கொடுக்காத ஆதீனகர்த்தா சபாபதி நாவலரிடம் கொடுத்துப் படிக்கச் செய்யும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தார்.

சிதம்பர சபாநாத புராணம் தவிரவும் வடமொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த மற்ற நூல்களில் அப்பைய தீக்ஷிதரின் சிவகர்ணாம்ருதம், அரதத்தாசாரியாரின் சதுர்வேத தாற்பரிய சங்கிரஹம் ஆகிய மொழிபெயர்ப்புக்களையும் செய்தார். சிவகர்ணாம்ருதம் சிவபரத்துவத்தைப் பூர்வபக்கம், சித்தாந்தம் என இருபகுதிகளாய்ச் சொல்லப்பட்டுத் திருப்பனந்தாள் காசி மடத்து அதிபதியவர்களின் அருளாசியோடு 1885-ஆம் ஆண்டில் வெளி வந்தது. சதுர்வேத தாற்பரிய சங்கிரஹமோ முதல் இரண்டு பதிப்புக்கள் யாரால் வெளியிடப்பட்டன எனச் சொல்லமுடியவில்லை. ஆனால் மூன்றாம் பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1924-இல் வெளியிடப்பட்டதாக அறிகிறோம். அதோடு இந்நூலின் சிறப்பைப் பாராட்டியும், வடமொழியில் இருந்த இந்நூல் வடமொழி தெரிந்தோர்க்கே பயன்பட்டு வந்த நிலையில் சபாபதி நாவலர் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலின் பொருளைத் தெளிவான தமிழில் அழகுற விளக்கிப் பெரும் தொண்டாற்றி இருக்கிறார் சபாபதி நாவலர் எனக் கூறி இருப்பதாகவும் அறிகிறோம்.

மேற்கண்ட நூற்களைத் தவிர அப்பைய தீக்ஷிதரின் மேலும் இரு நூல்களான பாரத தாற்பரிய சங்கிரஹம், இராமாயண தாற்பரிய சங்கிரஹம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். ஈழத்தில் அந்நாட்களில் பெரிதும் செய்யப்பட்ட மதமாற்றத்தைக் கண்டிக்கும் வகையில் இயேசுமத சங்கற்ப நிராகரணம் என்னும் நூலையும் எழுதினார். இதைப் பாராட்டி திரு சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தம் சிறப்புப் பாயிரத்தில் கீழ்க்கண்ட வண்ணம் பாராட்டி உள்ளார்.

சைவமாகிய தாமரைத் தடமொளி தழைப்பப்
பொய்வரும் விவிலிய கயிரவம் பொலிவிழப்ப
மெய்வரும் புலவோ ரளிகூட்டுண விவனூல்
தெய்வஞா யிறொன் றெழுந்தெனத் திகழ்ந்ததையன்றோ.

இது யாழ்ப்பாணம் நல்லூரில் வெளியிடப் பட்டது. இலக்கண விளக்கச் சூறாவளிக்கு ஏற்பட்ட பழியை மறுத்து இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, வைதிக காவியங்களான ராமாயணம், பெரிய புராணம், தணிகைப் புராணம் போன்றவற்றை மறுத்துச் சிலர் பெரிதும் பாராட்டிய சிந்தாமணியை மறுத்து வைதிகக் காவியங்களின் மாட்சியை நிலைநாட்டும் வண்ணம் எழுதப் பட்டது வைதிக காவிய தூஷண மறுப்பு என்னும் நூல். மேலும் ஞானசூடாமணி, ஞானாமிர்தம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி, சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக் கோவை, வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை, நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம், வதிரிநகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம், புறவார்பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம், சிவஞானயோகிகள் குருபூசைமகோற்சவம், திராவிடப்பிரகாசிகை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.


திராவிடப் பிரகாசிகையின் சிறப்புப் பாயிரத்தில் சபாபதி நாவலர் அவர்கள்,

“தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், அதனிலக்கிய மரபினையும், சாத்திரமரபினையும், நல்லாசிரியர் வழிநின்று தெளிதரற்குரிய நற்றவ அறிவு மாட்சியுடையரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாம் தாம் அறிந்தவற்றால் முறை பிறழக் கொண்டு தமிழ்மொழியினும் பிறமொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம்பழித்தானும் அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதைநீரார் அவற்றினை மெய்யெனக் கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப்புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் தாரதம்மிய முறையினும் வரன்முறை போற்றாது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடுசூழதலானுந் தமிழுலகமற்றவற்றின் உண்மைதேறி உறுதிப்பயன் எய்துதற்பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கித் திராவிடப்பிரகாசிகை என்னும் பெயரினால் இவ்வசன கிரந்தம் இயற்றுவோமாயினோம்.”


என்று கூறியுள்ளார். இராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களால் கெளரவிக்கப்பட்ட சிலருள் சபாபதி நாவலரும் ஒருவர். சிதம்பரம் கோயிலின் குடமுழுக்குக்காகச் சிதம்பரம் சென்ற ராஜா சேதுபதி அவர்கள் நாவலரைக் கண்டும், அவரின் தமிழ்ப்பற்றையும், சைவப் பற்றையும் கண்டு வியந்து பாராட்டி அவரைத் தம்மோடு அழைத்துச் சென்றார். அங்கே தம் அரண்மனையில் சபாபதி நாவலரைத் தங்க வைத்து சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்.

நாவலரைத் தம்முடன் திரு உத்தரகோசமங்கை, திருச்செந்தில் , திருக்குற்றாலம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று அங்கெல்லாம் பெரியபுராணச் சொற்பொழிவுகளும், சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளும் செய்ய வைத்து மக்களும், அறிஞர் பெருமக்களும் நாவலரின் சொற்திறனையும், அறிவையும், கல்வியையும், ஞானத்தையும் வியந்து பாராட்டும்படி செய்தார். சேதுபதி மன்னர் நாவலரை “சைவ சிகாமணி” “பரசமய கோளரி” என்னும் பட்டப் பெயர்களால் அழைத்து மகிழ்ந்தார். நாவலரை அடிக்கடி தம் ஊருக்கு அழைத்துச் சொற்பொழிவுகள் செய்ய வைத்துப் பரிசில்களை அளிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். ஓர் முறை இரண்டாயிரம் வெண்பொற்காசுகளை அவருக்குப் பரிசாக அளித்ததோடு அல்லாமல், மேலும் உதவியும் செய்வதாக வாக்களித்தார்.

சேதுபதி மன்னர் அளித்த பரிசோடு சென்னை வந்த நாவலர், “சித்தாந்த வித்தியாநு பாலன சாலை” என்னும் பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவினார். அதன் மூலம் “ஞானாமிர்தம்” என்னும் செந்தமிழ்ச் செய்தித் தாளை வெளியிட்டார். “சுதேச வர்த்தமானி” என்னும் பத்திரிகையும் வெளியிட்டார். இவரின் ஞானாமிர்தத்தைப் பாராட்டி அக்காலம் வெளிவந்து கொண்டிருந்த,”பிரம்ம வித்யா” என்னும் பத்திரிகைத் தலைவர் சபாபதி நாவலரைத் திருப்பாற்கடலாக வர்ணித்து, அத்தகைய திருப்பாற்கடலில் பிறந்த ஞானாமிர்தம் புத்தி என்னும் மந்தரத்தால் கடையப்பட்டு வெளிவருவதாய்ப் பாராட்டியுள்ளார். சிலகாலம் அந்தச் செய்தித் தாள் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் சபாபதி நாவலர் மயிலையில் தங்கி இருந்து கபாலீஸ்வரர் கோயிலில் மண்டபத்திலும், திருவள்ளுவ நாயனார் கோயிலிலும் சொற்பொழிவுகள் செய்து வந்தார். இவ்வாறு சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய சபாபதி நாவலர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு தமது 58-ஆம் வயதில் சிதம்பரம் சென்று தில்லையெம்பெருமானைத் தரிசிக்கச் சென்றவர் தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார்.

தம் நண்பர்களான சிவப்பிரகாச பண்டிதர், பொன்னம்பலப் பிள்ளை, சாமிநாதப் பண்டிதர் ஆகியோரை அழைத்துத் தேவாரப் பாடல்களின் பொருளுரைக்கச் சொல்லிக் கேட்டவண்ணம் தம் இன்னுயிரை நீத்தார்.

நீண்டுயர் சோலை வடகோவை நற்பதி மேவுதமிழ்
மாண்புடைச் சைவன் சபாபதி நாவலன் வான்சிறப்ப
ஆண்டுயர் சோபகிரு தானிமாத மமரபக்கம்
வேண்டிய பஞ்சமி வான்பதம் புக்கான் விருந்துகந்தே.


நாவலரிடத்தில் மாணவர் பலர் வந்து கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். அவர்களுள்,

சிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார்,
விழுப்புரம் இராமசாமி பிள்ளை,
மாகறல் கார்த்திகேய முதலியார்,
மயிலை சு. சிங்காரவேலு முதலியார்,
மாவை விசுவநாத பிள்ளை,
சிதம்பரம் சிவராமச் செட்டியார்,
திருமயிலை பாலசுந்தர முதலியார்,
கழிபுரம் சிப்பிரகாச பண்டிதர்

முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்

நண்பர்களுக்கு,

நான் எழுதி வரும் இந்தத் தொடர்களின் குறிப்புகளுக்கு உதவிய நூல்களைக் குறித்துக் குறிப்பிட்டதில்லை. திரு இன்னம்புரார் அவர்கள் நினைவூட்டினார். ஆகவே கீழே தகவல்கள் கொடுத்திருக்கிறேன். இதுவரை குறிப்பிடாமைக்கு மிகவும் மன்னிக்கவும்.


பொதுவாய்த் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் படித்துக் குறிப்புகள் எடுத்தவையே. பெயரைக் குறிப்பிட்டு கூகிளில் தேடும்போது உதவிக்கு வருவது விக்கிபீடியா தான். விக்கியே தகவல்கள் கொடுக்கின்றன. கோபாலகிருஷ்ண பாரதியார், மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா. போன்றவற்றிற்கு தெய்வத்தின் குரலில் கிடைத்த சில விஷயங்கள். எந்த பாகம்னு நினைவில் இல்லை. அதுவும் காமகோடி தளத்தில் இணையத்திலேயே கிடைக்கிறது. குறிப்பிடக் கூடாது என்றில்லை. தோன்றவில்லை. :((((இனிமேல் குறிப்பிடுகிறேன். மிகவும் மன்னிக்கவும். ஆனால் படித்த நினைவுகளிலேயே சிலவற்றை எழுதுவதால் எதில் படித்தேன் எனச் சொல்ல முடியவில்லை. :(((((

மெய்கண்டார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் போன்றோரைக் குறித்தெல்லாம் நான் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையிலேயே தகவல்கள் சேகரித்தேன். எங்கள் கட்டளை தீக்ஷிதர்கள் உதவினார்கள். அதைச் சிதம்பர ரகசியம் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். மன்னியுங்கள். சபாபதி நாவலர் குறித்த குறிப்புகளுக்குப் பெரும்பாலும் "நூலகம்" தளத்தின் குறிப்புக்கள் உதவின.

Tuesday, February 14, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! சபாபதி நாவலர்!

தமிழ் சமயத்தை வளர்த்ததா அல்லது சமயம் தமிழை வளர்த்ததா? என்பதை எவராலும் கூற இயலாது. அந்த அளவுக்கு இரண்டுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து உள்ளது. சமயச் சான்றோர்கள் செந்தமிழ்ப் பாமாலைகளால் இறைவனை வாழ்த்திப் பாடியதினால் தமிழில் பல அரிய பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முக்கியமாய் சைவமும், வைணவமும் தமிழுக்குச் செய்திருக்கும் பாமாலை அலங்காரங்கள் சொல்ல வேண்டியதில்லை. இது நம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சமய ஆன்றோர்களால் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கையிலும் அவ்வாறான தமிழறிஞர்களால் சமயமும் வளர்ந்துள்ளது; கூடவே தமிழ் இலக்கியத்திற்கும் அதன் மூலம் பல நூல்கள் கிடைத்திருக்கின்றன. அப்படிச் சைவ சமயத்துக்குத் தமிழால் தொண்டாற்றிய தமிழறிஞர்களில் சிலரை நாவலர் என்ற பட்டம் சூட்டி நம் சைவ மடங்களின் ஆதீனகர்த்தர்கள் சிறப்புச் செய்தார்கள். அத்தகைய நாவலர் பட்டம் பெற்றவர்களுள் ஆறுமுக நாவலரை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அவரின் அடியொற்றியே அவரைப் போல் தமிழுக்குத் தொண்டாற்றிய இன்னும் இருவர் அதே போல் ஆதீனங்களால் நாவலர் பட்டத்தால் கெளரவிக்கப் பட்டார்கள். அவர்கள் அம்பலவாண நாவலர், சபாபதி நாவலர் ஆகிய இருவரும் ஆவார்கள். இவர்கள் இருவரில் நாம் முதலில் பார்க்கப் போவது சபாபதி நாவலர் அவர்களைத் தான்.

ஆறுமுக நாவலரின் சமகாலத்தவரான இவர் பிறந்ததும் யாழ்ப்பாணத்தில் வடகோவையில் சைவ வேளாண்மரபில் சுயம்புநாதப் பிள்ளைக்கும், தெய்வானை அம்மையாருக்கும் அவர்களின் அருந்தவப் பயனால் 1846-ஆம் ஆண்டு மகனாய்ப் பிறந்தார். சபாபதி எனப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்குத் தக்க பருவத்தில் வித்தியாரம்பம் செய்யப்பட்டது. பிரம்மஶ்ரீ ஜெகந்நாதையர் என்பார் அக்காலத்திலே வடகோவைப் பகுதியிலே வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளிலே விற்பன்னராக இருந்தார். அவரிடம் சபாபதிப் பிள்ளை சிலகாலம் பயின்றபின்னர் நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடமும் வடமொழி, தமிழ் இரண்டும் கற்றுத் தேர்ந்தார். அக்கால வழக்கப்படி ஆங்கிலக் கல்வியும் கற்றார் சபாபதிப் பிள்ளை. ஆங்கிலம், தமிழ், வடமொழி மூன்றிலும் சிறப்பான தேர்ச்சி பெற்ற பிள்ளையவர்களுக்குத் திடீரெனக் குன்மநோய் கடுமையாகத் தாக்கியது. உணவு உண்ணக்கூட இயலாத அளவுக்கு நோயின் கடுமை வாட்டியது. தீராத துன்பத்தினால் வருந்திய அவர் நோயால் வருந்துவதை விடவும் உயிரை விடலாம் எனத் தீர்மானித்துக்கொண்டார். உயிரை விடுவது என நிச்சயம் செய்தபின்னர் அந்த உயிர் சிவன் சந்நிதியில் போகட்டுமே என்ற எண்ணம் தோன்ற, நல்லூரை அடைந்து கந்தசாமிக் கோயிலில் உபவாசமிருந்து கந்தனைத் துதித்தவண்ணம் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்தபுராணப் பாடல்கள், கந்தர் கலிவெண்பா ஆகியனவற்றைப் பாராயணம் செய்தவாறு இருந்து வந்தார்.

ஒரு மண்டலம் கடந்துவிட்டது. ஒரு நாள் இரவு தூக்கத்தில் கோயிலின் அர்ச்சகர் ஒரு கிண்ணத்தில் பாயசம் கொடுத்தாற்போல் கனவு கண்டார் சபாபதிப் பிள்ளைஅவர்கள். ஆனந்தமாய் எழுந்த அவர் இறைவனின் கருணையை நினைத்து நினைத்து வியந்து,

அந்தமி லொளியின்சீரா லறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் ணின்றும் வந்த வியற்கையாற் சத்தியாம்பேர்
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையாற் றனிவேற் பெம்மான்
கந்தனே யென்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம்

பாமாலைகளால் கந்தனைத் துதித்தார். இறைவனின் சந்நிதானத்தில் தொண்டுகளைச் செய்த வண்ணம் நல்லைச் சுப்பிரமணியக் கடவுளின் பெயரில் பதிகம் ஒன்றையும் பாடினார். அந்தப் பதிகம் முருகனின் திருவிளையாடல்களைக் குறித்துப் பாடப்பட்டன. இவர் தன்னுடைய உபாசனா மூர்த்தியாக சுப்பிரமணியக் கடவுளையே நினைத்திருந்தார். தமது நூல்கள் அனைத்திலும் சுப்பிரமணியக் கடவுளே வணக்கச் செய்யுட்களையும் புனைந்தார். ஆறுமுக நாவலர் அக்கால கட்டத்தில் இலங்கையில் பரப்பப் பட்டு வந்த கிறித்துவ மதத்தைக் கண்டித்துச் சைவத்தைப் பரப்பி வந்ததைக் கண்டு அவரைத் தம் மானசீகக் குருவாய்க் கொண்டிருந்தார் சபாபதிப்பிள்ளை. இவரின் புலமையை அறிய நேர்ந்த ஆறுமுக நாவலர் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தம்மால் நிறுவப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் தமிழ்ப் போதகாசிரியராக இருக்கும்படி கூற, சபாபதிப் பிள்ளையும் உடனே தமிழ்நாட்டுக்கு வந்து சிதம்பரம் வித்தியாசாலையில் பொறுப்பை ஏற்றார். தலைமை ஆசிரியர் பொறுப்பையும் சபாபதிப் பிள்ளைக்கு நாவலர் அளிக்க அவரும் சில ஆண்டுகள் திறம்பட அப்பொறுப்பை வகித்தார். சிதம்பரத்தில் இருக்கையிலே “ஏம சபாநாத மான்மியம்” என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழி பெயர்த்துச் சிதம்பரம் சபாநாத புராணம் என்னும் நூலை 893 செய்யுட்கள் கொண்டதாக எழுதி 1895-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் தம் உபாசனா மூர்த்தியான முருகக்கடவுளுக்கும் சேர்த்துக் காப்புச் செய்யுளில் கீழ் வருமாறு பாடியுள்ளார்.

கற்பக நாட்டும் வைவேற் கந்தவே டுணைவின் ணோர்க்குக்
கற்பக நாட்டில் வாழ்வு கண்டவ விடுவ சேனன்
கற்பக நாட்டி யத்திற் காதல வென்னிற் றில்லைக்
கற்பக நாட்டின் றேகுஞ் சமன்வலி கடப்பிக் கும்மே."

இதிலே மூத்த பிள்ளையான கணபதியோடு சேர்த்து இளையவரான கந்தனையும் துதித்திருக்கிறார்.

Monday, February 13, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள்!

பிள்ளையவர்களின் வரலாற்றை அவருடைய முதன்மை மாணாக்கரான ஐயரவர்கள் 1933-34 ஆம் ஆண்டுகளில் இரு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐயரை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பிள்ளையவர்களுக்கு சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது. ஆனால் அந்நாட்களில் தமிழ் கற்போர் பலரும் தமிழ்ப் பாடல்களைப் பண்களில் அமைத்துப் பாடும் வண்ணமே கற்று வந்தார்கள். அதற்காகவென்றும், சங்கீத பரம்பரையான குடும்பத்தில் பிறந்ததாலும் ஐயரவர்களும் சங்கீதம் கற்று வந்தார். அந்நாட்களில் பிரபலமான கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சங்கீதம் கற்று வந்தார். ஆனால் இதைப் பிள்ளையவர்களின் சம்மதம் பெறாமலேயே செய்ய வேண்டி வந்தது. மேலும் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இசைப்பாடலாக இயற்றியதில் இலக்கணத் தவறுகளும், சொற்குற்றமும், பொருட்குற்றமும் நிரம்பி இருந்ததாகவும் பிள்ளையவர்களின் கருத்தாக இருந்தது. அதற்காகவே கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிக் கொடுக்க மிகுந்த தாமதம் செய்துவிட்டுப் பின்னர் பாரதியார் வாயிலாகவே பாடல்களைக் கேட்டு மனம் உருகி எழுதிக் கொடுத்தார். ஆனால் அதற்காகவெனத் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.

திருவாசகத்தில் தில்லையைக் குறித்த பாடல்களே பெரும்பாலும் காணப்படுவதைப் போல, பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் என்னும் பிள்ளையின் பாடல்களே காணப்படுவதைப் போல, பிள்ளையவர்களின் வாழ்நாளில் பாதி திருவாவடுதுறை ஆதீனத்திலேயே கழிந்தது. இவர் அங்கிருக்கையிலேயே பல தல புராணங்களையும் பாடி இருக்கிறார். காசி ரகசியம், சூத சங்கிதை ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு அல்லாமால் குசேலோபாக்கியானமும் எழுதினார். ஆனால் குசேலோபாக்கியானம் மட்டும் இவரது மாணாக்கரான வல்லூர் தேவராசப் பிள்ளை என்பவர் பெயரால் வந்துள்ளதாய்க் கூறப்படுகிறது. எழுபது புராணங்கள், பதினொரு அந்தாதிகள், பத்துப் பிள்ளைத்தமிழ்கள், இரண்டு கலம்பகங்கள், மூன்று கோவைகள், ஏழு மாலைகள், உலா, லீலை ஆகியவற்றில் ஒவ்வொன்றும் எழுதி இருப்பதாய்க் கூறுவார்கள். அந்தாதிகளில் பதிற்றுப்பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி ஆகியன அடங்கும். இவரது சீடரான ஐயரவர்கள் இவற்றை எல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்து திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் வெளியிட்டிருக்கிறார்.

சங்கத் தமிழ் தந்த சாமிநாதையரைத் தமிழுலகுக்குத் தந்தவரே பிள்ளையவர்கள் எனலாம். தம் மாணாக்கரிடம் ஆசிரியரும், ஆசிரியரிடம் மாணாக்கரும் கொண்டிருந்த பற்றும் பாசமும் வியக்கத்தக்கது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பிள்ளையவர்களின் கடைசிக்காலம் வரையிலும் அவரிடம் பாடம் கேட்டவர் சாமிநாதையர். பிள்ளையவர்களின் சமகாலத்தவரான ஆறுமுக நாவலரிடமும் பிள்ளையவர்கள் மிக்க மரியாதை கொண்டிருந்தார். இருவரும் உரையாடுவதைக் கேட்கவென்றே சீடர்கள் ஆவலோடு காத்திருப்பார்களாம். ஆறுமுக நாவலரும் பிள்ளையவர்களும் கொண்டிருந்த நட்பைக் குறித்த செவிவழிச் செய்தி ஒன்று கூறுவதாவது: மார்கழிக் குளிரில் ஒருமுறை மதுரை வையை நதியில் இருவரும் சீடர்கள் சூழக் குளிக்கையில் குளிர் தாங்காமல் நாவலர், “பனிக்காலம் கொடியது.” எனச் சொல்ல அதைக் கேட்ட பிள்ளையவர்கள்,” பனிக்காலம் மிக நல்லது.” என பதிலிறுத்தாராம். நாவலர் அவர்கள் கருத்தைப் புரிந்து கொண்டு நகைக்கச் சுற்றிலும் இருந்தவர் விளங்காமல் திகைக்கப் பின்னர் விளக்கினார்களாம். பனிக்கு, அதாவது குளிருக்கு ஆலம்(விஷம்) மிக நல்லது எனப் பிள்ளையவர்கள் கூறியதாகத் தெரிவித்தாராம் நாவலர். இது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.

இவ்வாறு பணிவும், பொறுமையும் நிரம்பப் பெற்று எப்போது வேண்டுமானாலும் பாடல்களைப் புனையும் திறமையையும் பெற்று பிறரிடம் குற்றம் காணாமல், அனைவருக்கும் உதவிகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்த பிள்ளையவர்கள், 1876-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் தம் மாணவரில் ஒருவரான சவேரிநாதப் பிள்ளையின் மடியில் சாய்ந்து உயிரை விட்டார். இவரது முழுமையான வரலாற்றை உ.வே.சாமிநாதையர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Wednesday, January 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள்!

1815-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள் பிறந்த பிள்ளையவர்கள் 61 வயது வரை வாழ்ந்தார். தம் வாழ்நாளில் பாதிக்காலத்துக்கும் மேல் திருவாவடுதுறை ஆதீனத்துடன் உள்ள தொடர்புகளுடனேயே கழித்தார். மூன்று பட்டத்து குருமகாசந்நிதானங்களுடன் நெருங்கிப் பழகிய பிள்ளையவர்களுக்குப் பல சீடப்பிள்ளைகள் உண்டு. அவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவரும் நாம் அனைவரும் அறிந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆவார். தெய்வங்களில் மும்மூர்த்திகள் என பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சொல்வது போல இசைக்கலைக்கு மும்மூர்த்திகளாக கர்நாடக இசைக்கு முத்துசாமி தீக்ஷிதரையும், தியாராஜரையும், சியாமா சாஸ்திரியையும் சொல்லுவதுண்டு. அதுபோல் தமிழிசைக்கு மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் ஆகியோரைச் சொல்வார்கள். அதுபோலத் தமிழ் உலகில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழின் மும்மூர்த்திகளாகச் சொல்லப்படும் மூவரில் பிள்ளையவர்கள், ஆறுமுக நாவலர், வள்ளலார் ஆகியோரை ஆன்றோர் கூறுகின்றனர். தமிழ்ப் பதிப்புலகிலும் அவ்வாறு பெருமை பெற்றிருக்கும் மூவரில் நாவலரோடு சி.வை. தாமோதரம் பிள்ளையும், தமிழ்த்தாத்தாவையும் சொல்வார்கள். இத்தனை பெருமைகளைப் பெற்றிருக்கும் பிள்ளையவர்கள் தங்கள் ஆதீனத்தில் இருப்பதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் ஆதீனகர்த்தர்கள் தங்களுக்குக் கிடைத்தற்கரிய கெளரவமாகக் கருதினார்கள்.

பிள்ளையவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாடம் சொல்லுவார் எனத் தமிழ்த்தாத்தா சொல்கின்றார். கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் உண்ணும்போதும், பயணங்களிலும், உறங்கப் போகையிலும் கூடப் பாடம் சொல்லுவாராம். பாடங்களுக்குக் குறிப்புப் புத்தகங்களோ, ஏடுகளோ இல்லாமல் மனதில் மனப்பாடமாக இருந்தவற்றில் இருந்தே பாடம் சொல்லுவாராம். மாணாக்கர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியன கிடைக்கிறதா என்பதில் மிகவும் அக்கறை காட்டுவாராம். ஒரு சமயம் மாணாக்கர்களுக்குத் தங்கிப் பாடம் சொல்லவென்றே மாயவரத்தில் வீடு ஒன்றை வாங்கி மாணாக்கர்கள் அங்கேயே தங்கி உண்டு, உறங்கிப் பாடம் கேட்குமாறு ஏற்பாடுகள் செய்தார். பாடம் சொல்வதில் இனபேதமோ, மதபேதமோ இல்லாமல் அனைத்து இனத்தவருக்கும், மதத்தவருக்கும் பாடம் சொல்லி இருக்கிறார் பிள்ளையவர்கள். சில மாணாக்கர்களின் திருமணத்தையும் தம் சொந்தப் பொறுப்பில் நடத்திக் கொடுத்திருக்கிறார். சவேரிநாதர் என்ற கிறித்துவரும், நாகூர் குலாம்காதர் நாவலர் என்னும் இஸ்லாமியரும் அதில் குறிப்பிடத் தக்கவர்கள். சவேரிநாதர் பிள்ளையவர்களுக்கு அருகேயே எப்போதும் இருந்து சேவைகள் செய்தும் வந்திருக்கிறார். பிள்ளையவர்களின் மாயவரம் வீடு கிட்டத்தட்ட ஒரு குருகுலமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது. தமக்குக் கிடைக்கும் சொற்பப் பணத்தையும் மாணாக்கர்களின் நலனுக்கெனச் செலவிட்டு விடுவார் பிள்ளையவர்கள். திருவாவடுதுறை ஆதீனம் தவிர, குன்றக்குடி ஆதீனமும், தருமை, திருப்பனந்தாள் ஆதீனங்களும் பிள்ளையவர்களின் வித்தையை மதித்துக் கெளரவித்தார்கள்.

திருவாவடுதுறை ஆதீனத்திலோ ஒரு படி மேலே போய்ப் பிள்ளையவர்களிடம் தங்களுக்குள்ள அன்பையும், மரியாதையையும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டனர். மதிய உணவு அளிக்கும்போது போடும் பந்திக்குப் பந்திக்கட்டு எனப் பெயர். அதில் துறவறத்தார் வரிசையில் எப்போதுமே ஆதீனகர்த்தர்களே முதலிடம் பெறுவார்கள். அதே போல் இல்லறத்தார் வரிசையில் எப்போதுமே பிள்ளையவர்களுக்கே முதலிடம் அளித்து மரியாதை செய்து வந்தார்கள். இம்மாதிரி ஆதீனங்களில் மதிய உணவு உண்ணும்போதே நல்ல சத்தான சிறப்பான உணவு பிள்ளையவர்களுக்குக் கிடைத்து வந்திருக்கிறது. மற்றபடி தம் வீட்டில் அவருக்கு அவ்வளவு சிறப்பாக உண்ணமுடியாமல் உணவில் நெய் கூடச் சேர்த்துக்கொள்ள முடியாமல் நெய்யில்லாமலே உண்டிருக்கிறார் என்பதைப் பிள்ளையவர்களின் சரித்திரத்தை எழுதிய தமிழ்த்தாத்தா மூலம் அறிகிறோம். அந்நிகழ்ச்சி வருமாறு:

ஒருமுறை ஆதீனத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரம் படிக்கப்பட்டது. பிற்பகலில் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சரித்திரம் முடிக்கையில் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல்(பனிரண்டு மணி) ஆயிற்று. அதன் மேல் வீட்டிற்குச் சென்று உணவு உண்ண வேண்டாம் எனப் பிள்ளையவர்களை ஆதீனத்திலே உணவு உண்டுச் செல்லும்படி சொல்லவே பிள்ளையவர்களும் அதற்கு இசைந்து உணவு அங்கேயே உட்கொண்டார். பின்னர் தம்முடைய மாணாக்கர் விடுதியில் உணவை முடித்துக்கொண்டு தம்மைத் தம் வீட்டிற்குக் கொண்டு விட வந்த தம் அருமைச் சீடர் ஆன உ.வே.சாமிநாதையரிடம் பிள்ளையவர்கள், “இன்று மடத்தில் உணவு உட்கொண்டதால் நெய் கிடைத்தது.” எனச் சிறு குழந்தையைப்போன்ற சந்தோஷத்துடன் கூறினாராம். இதைக் கேட்ட ஐயரவர்களின் மனம் வருந்தியது என எழுதியுள்ளார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் இல்லாமல் நெய் இல்லாமலேயே உணவு அருந்தி வந்தாராம் பிள்ளையவர்கள். குறிப்பறிந்து எவரும் கொடுத்தாலொழியத் தாமாக இது வேண்டும்; அது வேண்டும் எனக் கேட்டுப் பெறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. விடாமல் பாடம் சொல்லும் ஆசிரியருக்கு நெய் சேர்த்து உணவு அருந்துவது எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து கொண்டிருந்த ஐயரவர்கள், தம் ஆசிரியரின் வறுமை நினைந்து வருந்தினார்.

பெரிய கவிஞராகவும், பெரிய பெரிய பிரபுக்களால் கொண்டாடப்பட்டவரும், பெரியதொரு ஆதீனத்தின் வித்துவானுமான பிள்ளையவர்களின் நிலை இருந்தால் விருந்து; இல்லையேல் மருந்து என்னும்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இதேபோல் ஒரு நாள் காலை பிள்ளையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணிப் பலகை போட்டு அமர்ந்திருந்தார். அவருக்கு எண்ணெய் தேய்க்கும் ஆள் சமையலறையில் சென்று எண்ணெய் கேட்க எண்ணெயோ இல்லை; ஆகையால் வரவே இல்லை. ஆனால் பிள்ளையவர்களுக்கோ இதில் கவனம் இல்லை; நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் நேரமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். பாடம் சொல்லும் கவனத்தில் தாம் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டி அமர்ந்திருந்ததையே மறந்துவிட்டார். இதைக் கவனித்த ஐயரவர்கள் வேறு வேலையாகப் போவது போல் எழுந்து வெளியே போய்க் காவிரிக்கரையிலுள்ள ஒரு கடையில் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து சமையலறைத் தவசிப்பிள்ளையிடம் கொடுத்துக் காய்ச்சித் தர வேண்ட, அவரும் அவ்விதமே கொடுத்தார். அதன் பின்னர் காய்ச்சிய எண்ணெய் வந்து பிள்ளையவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாமலேயே எண்ணெய்க் குளியலும் நடந்தது.

ஆனால் பிள்ளையவர்களின் இந்த வறுமைக்கு முக்கியக் காரணம் அவரின் வள்ளல் தன்மையே ஆகும். தம்மிடம் வரும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தம் சக்திக்கு மீறிச்செலவு செய்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வந்தார். அதனாலே அவருக்கு வறுமை ஏற்பட்டது என்பது சிலரின் கூற்று. அந்நாட்களில் சைவத் திருமடங்களில் தமிழ் கற்றுக் கொடுத்தாலும் அவற்றில் சங்கப்பாடல்கள் இடம்பெறாது. ஏனெனில் சங்கப் பாடல்களில் காதலும், வீரமுமே முதன்மை பெற்றிருந்தது. பெரும்பாலான புலவர்கள் சங்கப் பாடல்களை அறிந்திருந்ததில்லை. காப்பியங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள், பிரபந்தங்களே கற்பிக்கப்பட்டன. சங்கப் பாடல்களுக்கு அசைவ நூல்கள் என மறைமுகப் பெயரால் அழைத்தனர். ஆகவே பிள்ளையவர்களும் அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் சங்க இலக்கிய ஏடுகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றைக்கூடக் கற்பித்ததில்லை. ஐயரவர்களுக்கும் பிள்ளையவர்கள் சங்கப் பாடல்களைக் கற்பித்ததில்லை. 1871-ஆம் ஆண்டு முதல் பிள்ளையவர்களின் இறுதிக்காலமான 1876-ஆம் ஆண்டு வரை அவரிடம் பாடம் கேட்ட சாமிநாத ஐயரவர்களுக்கு இந்தப் பெயரைச் சூட்டியதும் பிள்ளையவர்களே ஆகும். உ.வே.சாமிநாத ஐயர் என இன்று அறியப் படும் தமிழ்த்தாத்தாவின் உண்மைப் பெயர் வேங்கடராமன் ஆகும். அந்தப் பெயராலே அவர் அறியப் பட்டிருந்தார். ஆனால் ஐயரவர்களின் வீட்டில் சாமா என்னும் பெயரால் அழைப்பதை அறிந்த பிள்ளையவர்கள் கிட்டத்தட்ட தீக்ஷா நாமம் என்று சொல்லும்படி ஐயரவர்களின் பெயரை "சாமிநாதன்" என மாற்றினார்.