Friday, December 31, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!

திருப்பாவையில் நான்காம் பாடலைப் போல் இந்தப்பாடலும் மழை வேண்டிப் பாடும் ஒரு பாட்டு.

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்= மழை மேகமானது கடல் நீர் ஆவியாவதில் தோன்றுகிறதல்லவா! அதைச் சுட்டுகிறது. கடல் நீரைச் சுருக்கி கடலின் நீர் குறையுமாறு நீரை உன்னுள் முகந்து கொண்டு ஏ, மேகமே நீ எழுந்து மேலே போய் விண்ணில் மழைமேகமாகி

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்= எம்மை ஆட்கொண்டு அருள் பார்வையை எம்மேல் செலுத்திக் கடாக்ஷிக்கும் அன்னையின் மெல்லிய இடையில் தரித்திருக்கும் மேகலாபரணங்களின் ஒளி மின்னல் போல் மின்னுகிறதே, அவ்வாறு நீயும் மின்னலைத் தோற்றுவித்து, மேலும் எம் பிராட்டியாரின் சிறிய திருவடிகளில்

பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்= திருவடிகளில் அன்னை அணிந்திருக்கும் சிலம்பின் சப்தங்கள் போன்ற சப்தங்களை உண்டாக்கி, மேலும் அவளுடைய பிறைச்சந்திரன் போன்ற நெற்றியில் காணப்படும் வில் போன்ற புருவங்களைப் போல் விண்ணில் வானவில் கோலங்களையும் உருவாக்கி

தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு= பிராட்டியை கணநேரமும் பிரியக்கூடாதெனத் தன் உடலில் அவளுக்கும் ஒரு பாகம் அளித்து எந்நாளும் அவளைப் பிரியாத எம் கோமான் , நம் போன்ற பக்தர்களுக்கு

முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே= அன்னை முன்னின்று அருள் செய்யத் தாமும் அருள் செய்யவென எழுந்தருளி இருக்கிறார். அத்தகைய அருள் மழையை ஈசனும், இறைவியும் நம் போன்ற பக்தர்களுக்குக் கேட்காமலே கொடுக்கிறார்கள் அன்றோ.

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!=அத்தகைய கருணை மழை போல நீயும் பொழிவாய் மழையே! இங்கு கருணாமூர்த்தியாகிய ஈசனின் கருணையை மழையோடு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருப்பதாயும் கொள்ளலாம்.

Wednesday, December 29, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம் பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்= இங்கே ஈசன் திருநாமத்தைச் சொல்லும்போதும் அதை நினைக்கும்போதும் சிவனடியார்கள் அடையும் நிலை பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதிலும் இந்தப் பாவை நோன்பு வழிபாட்டு முறையில் ஈடுபட்டிருக்கும் அழகான கச்சணிந்த, ஆபரணங்களைப் பூண்ட பெண்கள் இருக்கின்றனரே அவர்களில் ஒருத்தி, ஓரொரு சமயம் ஈசன் நாமத்தைக் கூறும்போதெல்லாம் எம்பெருமான் அவன் நம்பெருமான் என்று பெருமூச்சு விடுகிறாள். மனதினுள்ளே சிவநாமத்தின் இனிமையில் தன்னை மறக்கிறாள்.

சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர= அவள் மனம் மகிழ்ந்து ஈசன் புகழை நினைத்ததை எல்லாம் வாய் ஓயாமல் கூறி இன்புறுகிறாள். அவளிடமிருந்து வேறு பேச்சுக்களே வருவதில்லை. எந்நேரமும் சிவநாமத்தை நினைப்பதோடல்லாமல் அதன் ஈடு, இணையற்ற சிறப்புக்களை எடுத்துச் சொல்லவும் செய்கிறாள்.

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்= அவ்வாறு கூறும்போது அவள் உள்ளம் ஈசன் மேல் கொண்ட காதலால் கனிந்து கண்களில் கண்ணீர் பனிக்கிறது. வாயோ தழுதழுக்கிறது. உள்ளத்தில் நிறைந்திருக்கும் சிவாநந்தப்பெருவெள்ளம் கண்களின் வழியே தாரைதாரையாகக் கொட்டுகிறது.

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள்= செய்வதென்ன என அறியாமல் நிலத்தில் விழுந்து பலமுறை என் ஈசனே, என் பெருமானே, என் சிவனே என்றெல்லாம் கூறிக்கொண்டு வணங்கி எழுகிறாள். மற்றத்தெய்வங்களோ, தேவர்களோ அவள் கண்களில் படுவதில்லை. பட்டாலும் அவர்களை வணங்குவதும் இல்லை.

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்= அரசனுக்கெல்லாம் அரசனான, ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான மாபெரும் அரசனாகிய சிவபெருமானுக்கு அடியார்கள் ஆனால் இப்படித்தான் பித்துப்பிடித்தவர் செயல்கள் போல் இருக்குமோ? அவ்வளவு ஆழமாக அவன் மேல் பக்தி மீதூறி பித்தர்கள் போல் நடந்துகொள்கின்றனரே!

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்= ஆஹா, இவ்வண்ணம் தன் பக்தர்களை ஆட்கொள்ளும் வித்தகரன்றோ நம்பெருமான்.

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி= அழகிய கச்சணிந்த ஆபரணங்களால் அழகு செய்து கொண்ட பெண்களே, வாருங்கள்,

ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!= இந்த அழகான மலர்கள் நிறைந்திருக்கும் பொய்கைநீரில் துள்ளிக்குதித்துப் பாய்ந்து பாய்ந்து நீரைக் குடைந்து நீராடுவோம். ஈசன் புகழைச் சொல்லிப் பாடுவோம், ஆடுவோம்.


பத்துடையீர் : இதற்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். உடலின் கண் தோன்றும் மெய்ப்பாடுகள் :(1) இறைவனைப் போற்றிப்பாடும் பொழுது மிடறு (தொண்டைப்பகுதி) பெருக்கம்.
(2) நாதழுதழுத்தல்
(3) இதழ் துடித்தல்
(4) உடல் குலுங்குதல்
(5) மயிர்சிலிர்த்தல்
(6) வியர்த்தல்
(7) சொல்லெழாமை
(8) கண்ணீர் அரும்புதல்
(9) வாய்விம்முதல்
(10) மெய்ம் மறத்தல்

திரு கன்னியப்பன் அவர்கள் கூறிய மேற்கண்ட விளக்கம் இந்தப் பாடலுக்கு முற்றும் பொருந்துகிறது. நன்றி திரு வடிவேல் கன்னியப்பன் அவர்களுக்கு.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப்புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதார் குழையாடப்பைம்பூண் கலனாடக்= காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடவும், கழுத்தில் அணிந்திருக்கும் மற்ற அணிகலன்கள் ஆடவும்,

கோதை குழலாட வண்டின் குழாமாடச்= அழகிய பெண்களின் நீண்ட குழல் விரிந்து பரந்து ஊஞ்சல் ஆடுவதைப் போல் ஆடவும், அப்போது அந்தக் கூந்தலில் அந்தப் பெண்கள் சூடி இருக்கும் மலர்களும் சேர்ந்து ஆடவும் அதைக் கண்ட வண்டுகளின் கூட்டம் அந்தப் பூக்களின் தேனை மாந்தும் நோக்கத்தோடு ர்ரூம்ம்ம்ம்ம் என ரீங்காரமிட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வரவும்

சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி= இந்த அழகிய தண்மையான குளிர்ந்த நீரில் மூழ்கி நாமும் ஆடுவோம். அதுமட்டுமா? ஆடும்போது அந்தச் சிற்றம்பலத்தானைக் குறித்துப் பாடி ஆடுவோம்.

வேதப் பொருள்பாடி அப்பொருளாமாபாடிச் = வேதங்களின் பொருளாகவே அமைந்த அந்த சர்வேசனின் புகழைப் பாடி, அவர்தம் பெருமைகளைப் புகழ்ந்து கூறும் பாடல்களைப் பாடி, அனைத்துக்கும் அவனே காரணமும், காரியமுமாய் அமைந்ததைக் குறித்து வியந்து பாடுவோம்.

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி= இறைவன் சோதி வடிவானவன். அத்தகையவனின் சோதியின் திறம் பற்றி நம்மால் இயன்றவரை எடுத்துப் பாடுவோம் அவன் சூடும் கொன்றாஇ மலர்களால் ஆன மாலையைப்பாடுவோம்

ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்= ஆதியும் அவனே, அந்தமும் அவனே, அவனே முதலும், முடிவும் அவனே. இதையும் நாம் உணர்ந்து பாடுவோம்.

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்= நம் ஒவ்வொருவரின்கர்ம வினைக்கேற்றவாறும், இயல்புக்கேற்றவாறும் நம்மை வகைப்படுத்தி, வேறுபடுத்தி நம்மை வளர்த்து ஆளாக்கும் அன்னை , அவள் கைகளின் வளையல்களும் ஆட,

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.= அவள் திருவடிகளின் பெருமையையும் புகழ்ந்து பாடி ஆடுவோமாக.

இங்கே மாணிக்க வாசகர் தில்லையில் இடைவிடாது ஆடிக்கொண்டே தன் கூத்தின் மூலம் இவ்வுலகை ஆட்டி வைக்கும், இயக்கும் நடராஜப் பெருமானின் ஆட்டத்தையும், அதன் உள்ளார்ந்த தத்துவத்தையும் குறித்துப் பாடுகிறார். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் இவ்வுலகம் இயங்குவதையும் குறிப்பிடுகிறார்.

Monday, December 27, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி!

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் = குவளை மலர்களின் கருங்குவளைப் பூக்கள் நிறைந்தும், செந்தாமரை மலர்கள் நிறைந்தும் காணப்படும் திருக்குளத்தில், நீர்ப்பறவைகளும் நிறையவே இருந்தனவாம். குருகினம் என்றால் பறவையினம். அவைகள் போடும் கீச் கீச்சென்ற சப்தமும் நிரம்பிக் குளக்கரையே சல்லென்ற சப்தத்தால் நிரம்பி இருந்ததாம். ஒருபக்கம் வண்டுகளின் ரீங்காரம், மற்றொரு பக்கம் பறவைகளின் கலகலத்வனி. இன்னொரு பக்கம் குளிக்க வரும் பெண்களின் கைவளைகள் சப்தம், கால் சிலம்புகள் சப்தம், இதற்கு நடுவே மரங்களின் மர்மர சப்தம், அத்தனைக்கும் நடுவே குளிக்கும் பெண்களின் நமசிவாய என்னும் மந்திர சப்தம், என நிரம்பி இருக்கும் குளக்கரையில்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த= இதை வெளிப்படையாய்ப் பார்த்தால் மலம் கழித்துவிட்டு வந்து கழுவுவதை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் நம் மும்மலமாகிய ஆணவன், கன்மம், மாயை போன்றவற்றையே குறிக்கும். அத்தகைய மும்மலங்களை இத்திருக்குளத்தில் நீராடி ஈசன் திருநாமத்தை உச்சரித்து அவனையே தியானிப்பதன் மூலம் கழுவலாம் என்பது மணிவாசகர் கூற்று. இங்கே திருக்குளத்தைப் பிராட்டியும் ஈசனும் போல எனக்குறிப்பிட்டிருப்பதும் பொருந்தி வரும். பொதுவாக நீர்நிலைகளைப் பெண்ணாகவே வழிபடுகிறோம். திருக்கைலையும், மானசரோவர் ஏரியும் ஈசனும் அம்மையும் இணைந்திருப்பதாகவே ஐதீகம். அதேபோல் மாணிக்கவாசகர் திருவண்ணாமலை ஐயனின் உருவமாக வழிபட்டதால், திருக்குளத்தை அம்பிகையாக எண்ணி இருவரும் இணைந்திருக்கும் அர்த்தநாரீசுவரக் கோலம் என்று கூறுகிறார். மேலும் குவளை மலரின் கரிய நிறமானது அம்பிகையின் கரிய நீண்ட கண்களையும் செந்தாமரை மலரின் செந்நிறமானது ஈசனின் சிவந்த திருமேனியையும் சுட்டுவதாயும் கூறுகிறார். அதோடு குருகு என்பதும் அம்பிகையின் கைவளையல்களையும் அவை எழுப்பும் சப்தத்தையும் குறிப்பதோடு அரவம் என்பது இங்கே பாம்பையும் குறிப்பதால் நீர்ப்பாம்புகள் ஐயனின் ஆபரணங்களாய்த் தோற்றமளித்ததாயும் கூறுகிறார்.

பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!= ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பொங்கி மேலெழுந்து வருகிறதாம். குளங்களுக்குள்ளே ஆழமாக மடுவென்று ஒரு இடம் உண்டு. அதுதான் ஊற்றுக்கண் என்பார்கள். அந்த ஊற்றுக்கண் ஆழம் அதிகம் என்பதால் மடுப்பக்கம் போகவேண்டாம் என்பார்கள். ஆனால் இங்கேயோ இந்தப் பெண்கள் அத்தகைய ஆழமான பொங்கும் மடுவுக்குள்ளும் பாய்ந்து புகுந்து அவர்கள் கால் சிலம்புகள் சப்திக்கவும், ஈசன் திருநாமத்தைச் சொல்லி நீராடும்போது பூரிக்கும் மனதையும் கூறுகிறார். இத்தகைய பூரிப்பான மகிழ்வான எண்ணங்களோடு குடைந்து குடைந்து நீராடும்போது குளத்து ஆழத்து நீரும் மேலெழும்பும். அவாறு குளித்து ஈசன் புகழைப்பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர். இங்கே கொங்கைகள் என மார்பைச் சுட்டி இருப்பது பக்தியின் குறியீடு. பக்தி மேலீட்டினால் இதயம் விம்முவதையும், மகிழ்வினால் விம்முவதையும், நாம் பலமுறை உணர்ந்திருப்போம் அல்லவா?

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி!


ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.


நம் இருவினைப் பாசங்களால், அதாவது நல்வினை, தீவினை ஆகியவற்றால் கட்டுண்டு கிடக்கும் பிறவியால் ஏற்படும் துன்பம் ஒழிந்து ஈசனின் நாமம் ஒன்றே நம்மை உய்விக்கும் திறன் படைத்தது என்னும்படிக்கு அவன் நாமாவளியாகிய அமுதக் கடலில் மூழ்கும் தீர்த்தமாக ஐந்தெழுத்து மந்திரம் இங்கே விளங்குகிறது.

நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்= சுற்றிலும் நெருப்பெரிய நடுவே தில்லையம்பலத்து நடராஜர் ஆடுவதாக ஐதீகம். ஆதிரை நக்ஷத்திரமும் செக்கச் சிவந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்டு விண்ணில் அசைந்து ஆடுவது ஈசன் எல்லையில்லாப் பெருவெளியில் ஆடுவது போலவே தோற்றமளிக்கும் என்பதும் கூறப்படுகிறது. அதே போல் அம்பலக்கூத்தனும் ஆடுகிறான். ஆட்டுவிக்கிறான். இது வெளிப்படையான பொருளென்றாலும் நம் உடலே பஞ்சாக்ஷரத்தால் ஆனது. அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி நம் உள்ளத்தினுள்ளே மனதுக்குள்ளே ஓதிக்கொண்டு வந்தோமானால் உள்ளே ஈசன் உறைந்திருப்பது கண்கூடு. மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் "சிவாய நம" என ஓதே." (உண்மை விளக்கம்-மாணிக்க வாசகர்)

"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.

இவ்வானும், குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி= எப்போப் பார்த்தாலும் ஆடுகிறாப் போல் இருக்கும் ஈசன் உண்மையில் அவன் ஆட்டத்தின் மூலமே பஞ்சத் தொழில்களையும் நடத்துகிறான் அன்றோ! டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.


வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்=அப்படிப்பட்ட ஈசனின் திருநாமத்தைப்பேசிக் கைவளைகள் ஒலிக்கும்படியும், இடையில் அணிந்துள்ள மேகலாபரணங்கள் ஒலிக்கும்படியும், நீண்ட கருங்கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படியும்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.=பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி, பூக்களால் நிரம்பிய குளமோ என்னும்படிக்குஇருக்கும் இக்குளத்து நீரில் மூழ்கிக் குளித்து ஈசன் திருநாமத்தைப் பேசி மகிழ்வோம். பாடி ஆடுவோம்.

Sunday, December 26, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

சிறந்த சிவபக்திச் செல்வத்தில் சிறந்து விளங்கிய மணிவாசகர் திருவண்ணாமலையில் தங்கி இருக்கும்போது அங்கிருந்த பெண்கள் தினமும் காலையிலே குளித்து நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டதும், அவரையே நினைந்து நினைந்து உருகியதையும் கண்டு தம்மையும் ஒரு பெண்பாலாக நினைந்து அவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை என்ற ஒரு கூற்றும் உண்டு. மேற்சொல்லி இருக்கும் திருவெம்பாவையில் குளத்தில் பெண்கள் அதிகாலையில் குளிப்பது பற்றிச் சொல்கையில் குளத்து நீரைக் கைகளால் அடித்துச் சத்தம் வரும்படி நீருக்குள் புகுந்து, குளித்ததாய்ச் சொல்கிறார்.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடைந்து= குளத்து நீரெல்லாம் அசுத்தமாகாத பொற்காலம் அது. தாமரைகள் பூத்திருக்கும். தாமரைப் பூவின் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும். அப்படி வண்டுகள் நிறைந்திருக்கும் திருக்குளத்தில் அந்தத் தண்ணீரில் தங்கள் கைகளால் முகேர் என்ற சப்தம் வரும்படி நீரை அடித்துக்கொண்டு பாய்ந்து, நீருக்குள் புகுந்து, புறப்பட்டுக் குளித்து

உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்= என் ஈசனே, என் ஐயனே, உன் திருவடிகளின் புகழைப்பாடுகின்றோம்; பரம்பரை பரம்பரையாக உன் புகழன்றி நாங்கள் வேறொருவரை நினைத்ததில்லை. உன்னடியார்களாகவே உன்னாலேயே உன்னருளாலேயே நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

ஆரழல் போல் செய்யாவெண்ணீறாடி செல்வா= மாலுக்கும், அயனுக்கும் அடிமுடிகாணமுடியா அழல் போன்ற உருவெடுத்த உன் நிறமும் அத்தகைய நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையது அன்றோ, செக்கச் சிவந்த மேனியன் அன்றோ, வெண்மையான திருநீற்றினால் அன்றோ நீ குளிக்கிறாய்

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா= சிறுத்த இடையுடன் கூடிய, மை தீட்டப் பெற்ற அழகிய அகன்ற கண்களை உடைய மடந்தையாகிய உமையின் மணவாளனே

ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்= ஐயா, என் ஈசனே உன்னுடைய திருவிளையாடல்கள் எல்லையற்றவை. அவை அனைத்தும் எம்மை ஆட்கொள்ளவேண்டியே நீ நடத்துகிறாய்.

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோய்= அந்தத் திருவிளையாடல்களின் உய்யும் வழியெல்லாம் பெற்று அநுபவித்துக் கழித்துவிட்டோம்.

எய்யாமற்காப்பாய் எமையேலோர் எம்பாவாய்= எங்கள் வினையெல்லாம் தீர இனியேனும் நாங்கள் பிறவி என்னும் பெருங்கடலில் மூழ்கி இளைத்துச் சோர்ந்து போகாமல் எங்களைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுவாய்

Saturday, December 25, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாண்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே = பாதாளங்கள் என்று பூமிக்குக் கீழே ஏழு இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம் என்பவை அவை. இவ்வாறு இத்தனை பாதாளங்களுக்கும் கீழே கீழே ஈசனின் திருவடி வியாபித்திருக்கிறது. அப்படியும் அதைக் காண இயலவில்லை. எல்லாவற்றுக்கும் கீழே சொல்லுக்கும் அடங்காத நிலையைப் பெற்ற அந்தத் திருவடிகளையும், அழகிய புத்தம்புது மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அவன் திருமுடியையும் எல்லாப் பொருள்களுக்கும் ஆரம்பமும், முடிவும் அதுவே எனப் படுகிறது.

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்= அவன் உடலின் ஒருபாகத்தில் அம்பிகையும் இடம்பெற்றிருக்கிறாள். ஆகவே அவனுடைய திருமேனியும் ஒரே விதமானது அல்ல. ஒரு பக்கம் ஆணின் மேனியும், இன்னொரு பக்கம் பெண்ணின் மேனியும் கொண்டு விளங்குகிறான். இந்த அர்த்தநாரீசுவரத் தத்துவம் உள்ளார்ந்த பொருள்பொதிந்த ஒன்று. ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஆண், பெண் தன்மைகள் கலந்தே இருக்கின்றன். ஈசன் மேல் பக்தி மீதூறி, அவனைத் தியானித்து, அவன் பஞ்சாக்ஷரத்தை ஓதும் அடியார்களுக்கு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தங்களுக்குள்ளே உள்ள பெண் வடிவைக் காணவும் இயலும். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கண்டது போல. ஆகவே அவ்வளவு ஆழ்ந்து ஊறிப் போய் பக்தி செய்யவேண்டும்.

இப்படிப் பக்குவப்பட்ட ஆன்மா, பக்குவப்படாத மற்றவர்களைப் பார்த்து நீங்களும் விழித்தெழுங்கள், உங்களுள்ளே இருக்கும் சோதியைக் கண்ணார, மனமாரக் கண்டு மகிழுங்கள் என்பதே திருவெம்பாவையின் முழுத் தத்துவம், இது என்னோட கருத்து மட்டுமே. மாற்றுக்கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்= வேதங்களுக்கு முதல்வன் இவனே. விண்ணோரான தேவாதிதேவர்களும் சரி, மண்ணுலகில் வாழும் மக்களும் சரி, இவனைப் புகழ்ந்து எவ்வளவு பாராட்டிப் பாடினாலும்

ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்= ஈசனின் புகழ்ச்சி என்பது முற்றுப் பெறா ஒன்றாகும். தொண்டர்களுக்கு எல்லாம் இவன் தோழனாகவே இருக்கிறான். சுந்தரருக்காகத் தூது போனதை அறிவோம் அல்லவா?

கோதில் குலத்து அரன் தன் கோய்ல் பிணாப்பிள்ளைகாள்= ஏ, பெண்களே, இவ்வளவு பெருமையும், புகழும் வாய்ந்த சொல்லுக்கடங்கா ஈசனின் திருக்கோயிலில் தொண்டு செய்வதையே உங்கள் முழுநேர வேலையாகக் கொண்டு சிவத் தொண்டு செய்யும் பெண்களாகிய நீங்கள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்= ஈசனின் சொந்த ஊர் எது? அவனுடைய உண்மையான பெயர் என்ன?? அவனுடைய உற்றார் உறவினர் யார்? அவனுக்கு அயல் மனிதர்கள் எவர்?

இங்கே சொல்லி இருப்பது, முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான ஈசனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, உற்றார், உறவினரும் இல்லை. அவனுக்குப் பெயரும் நாம் சூட்டியதே. மேலும் இவர் உற்றார், இவர் அயலார் என்று அவன் பேதம் காட்டுவதில்லை. எல்லாருக்குமே ஒரே மாதிரியாகத் தன் அருள் மழையைப் பொழிகிறான். அவனிடம் பேதம் ஏதும் இல்லை.

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்= இவ்வளவு புகழ் வாய்ந்த ஈசனைப் பாடும் தன்மை கூட நமக்குப் புரியவில்லை. நாம் ஏதோ பாடுகிறோம், அவனோ அதையும் ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் செய்வது ஒன்றே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

"முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்ப்பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப்பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.

முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே= இவ்வுலகம் தோன்றியதற்கெல்லாம் கால நிர்ணயம் செய்கின்றனர். மற்ற வேத, வேதாந்தங்களுக்கு, காவியங்களுக்கு அனைத்துக்குமே ஒருவாறு கால நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் ஈசன் எப்போது தோன்றினான்? தோற்றுவித்தவர் யார்? அவன் இருப்பைக்கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றே சொல்லலாம். அத்தகைய கால நிர்ணயமே செய்ய முடியாத காலத்துக்கும் முன்னே தோன்றிய மிகப் பழைய, ஆதியான பொருளே, அவன் தான் ஈசன்,

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே= பின்னால் எத்தனையோ புதுமைகள் தோன்றின. தோன்றுகின்றன, தோன்றவும் தோன்றும். ஆனால் இவை எதுவுமே முன்னால் இல்லைனு சொல்ல முடியுமா? இல்லைஅல்லவா? ஏற்கெனவே இருந்த ஒன்றைத் தான் நாம் கண்டு பிடிக்கிறோம். புதுமை எனச் சொல்கிறோம். அத்தகைய புதுமைகளுக்கும் புதியவனாக இனி வரும் சமூகமும் காணவேண்டிய புதிய இளையவனாக ஈசன் இருக்கிறான். ஏனெனில் அவன் இல்லை எனக் கூறுபவர்களும் அவனை உணர வைக்கும் தன்மை கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே இல்லை என்ற மறுப்பும் தோன்றுகிறது. இந்த வாதம் புதியது போல் இன்று பேசப்பட்டாலும் அநாதிகாலந்தொட்டே இவையும் பேசப்படுகிறது. ஆகவே புதுமை என்றாலும் மீண்டும் மீண்டும் அதே தன்மை, பொருள் கொண்டவையாகவே இருக்கிறது. அத்தகைய தன்மை உள்ளவன் ஈசன்.

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம்= அப்பா, உன்னை எங்கள் தலைவனாய்ப் பெற்ற நாங்கள் உன்னை எவர் தலைவராய் நினைந்து வணங்குகிறாரோ அத்தகைய சிறப்பான அடியார்களையே அவர்கள் திருவடிகளையே பணிந்து ஏத்துவோம்.

ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார்= அவர்களுக்கே நாங்கள் உரிமை உள்ளவர்கள் ஆவோம். அப்படிப்பட்ட சிவனடியார்களையே தேடித்தேடி எங்கள் கணவராக்கிக்கொள்வோம்.

அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்= அவ்வடியார்கள் தங்கள் மனம் மகிழ்ந்து சொன்ன ஆணைகளையே நாங்கள் அவர்களுக்குச் சேவகர்களாய் இருந்து நிறைவேற்றித் தருவோம்.

இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனே எமக்கு எம் அரசனாகிய நீர் இவ்வண்ணம் அருள் புரியும்படி கேட்டுக்கொள்கிறோம். அத்தகைய அருள் பெற்றாலே நாங்கள் எக்குறையும் இல்லாதவராய் வாழ்வோம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருவெம்பாவை எட்டாம் நாள்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

பொழுது விடியும்போது சேவலும், கோழியும் கூவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்= அவ்வாறு கோழி மட்டும் சிலம்பவில்லை, குருகு=பறவையினங்கள் அனைத்துமே விழித்துக்கொண்டு ஒலியெழுப்புகின்றன.

ஏழில் இயம்ப இயம்பும்வெண்சங்கெங்கும்= உதய கீதங்கள் கோயிலில் இசைக்கப்படும், அவ்வொலியோடு வெண்சங்கு ஊதும் ஒலியும் கேட்கிறது.

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை= ஒளிச்சுடராய் விளங்கிய ஈசனின் ஒப்பற்ற பெரும் கருணையைப் புகழும்

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ= ஈசன் புகழ் பாடும் பொருள் கொண்ட சிறப்பான பாடல்களை நாங்கள் பாடினோமே? உனக்குக் கேட்கவில்லையா?

வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்= அடி பெண்ணே இப்படிக் கிடக்கிறாயே? நீ வாழி, உனக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும், வாயைத் திறக்க மாட்டாயா?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ= ஆழி இங்கே கடல் . கடல் போன்ற அன்புள்ள ஈசனின் திருவடிக்கு அன்பு செய்யும் நெறிமுறை இதுவா??

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.= ஊழிக்காலத்திலும் அவன் ஒருவனே நிரந்தரமாய் இருப்பான். அத்தகைய உலக முதல்வனை, ஏழைகளுக்கெல்லாம் கருணை செய்பவனைப் பாடித் துதிக்கலாம் வா. இங்கே ஏழைப்பங்காளன் வெளிப்படையான பொருளில் பணமில்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கும் கடவுளே தெய்வம் என்ற கோணத்தில் திக்கற்றவர்களுக்கு தெய்வம் என்றும் கொள்ளலாம். இன்னொரு பொருளில் பக்தியில் ஏழையாக இருந்தாலும் அவன் அதைக் கண்டு கொள்ள மாட்டான். நீ அவனை மனமார ஒருமுறை நினைத்தாலே போதும், உன்னைத் தடுத்தாட்கொள்வான் என்றும் கொள்ள முடியும். பொதுவாய் ஆன்றோர் கூறுவது, இங்கே ஏழை என்பது பல்வேறு அணிகள்பூண்ட உமையைக் குறிக்கும், பங்காளன்=உமைக்குத் தன் உடலில் சரிபாதி பங்கு கொடுத்த ஈசன் என்றும் பொருள் கொள்கிறார்கள். மேலும் அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது. ஆகவே அதுவும் பொருந்தும்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருவெம்பாவை ஏழாம் நாள்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!

இவை வெளிப்படையாகத் தூங்கும் பெண்ணை எழுப்புவதைக் குறித்தாலும் நம் மனம் விழிப்புறுதலையே குறிக்கும். நம்முள்ளே உறையும் ஈசனை நாம் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் தூங்கும் ஒரு பெண்ணை எழுப்புவதுபோல் நம் அனைவரையும் ஈசனின் சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்க அழைக்கிறார்.

எவ்வளவு எழுப்பியும் இன்னமும் தூங்குகிறாள் அந்தப் பெண். மாயையில் நாம் ஆழ்ந்து கிடக்கிறதையே இது உணர்த்தும். எத்தனையோ சோதனைகள் மூலம் ஈசன் தன்னிருப்பைக் காட்டினாலும் நாம் எங்கே புரிந்து கொள்கிறோம்?? திரும்பத் திரும்ப இவ்வுலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலேயே மனம் செல்கிறது.

அன்னே இவையும் சிலவோ பல அமரர்=அம்மா, தாயே என்று சொல்வோம் அல்லவா, அத்தகையதொரு விளி இது. தாயே, இப்படியும் முன்னுக்குப் பின் முரணாகச் செய்வாயா நீயும்? உனக்கு இப்படியும் நடந்து கொள்ளத் தெரியுமா?

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்= ஈசனை உன்னி மனம் நினைக்கவும் அரியவன் ஆயிற்றே, தேவாதிதேவர்களாலும் இயலாத ஒன்றாயிற்றே, சீரும், சிறப்பும் நிறைந்தவன் அன்றோ,

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்= அத்தகைய பெருமை வாய்ந்த ஈசனின் திருச்சின்னங்கள் ஆன எக்காளம், சங்கு போன்றவற்றின் ஒலிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே நீ சிவன் நாமத்தைக் கூறுவாயே!

தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்=தென்னாடுடைய சிவன் என்பதற்காக, தென்னா என்று ஆரம்பிக்கும்போதே தீயிலிட்ட மெழுகைப் போல் உருகுவாளாம். அப்படி இருந்த நீயா இவ்வாறு மாறிவிட்டாய்?
என்னானை என் அரையன் இன்னமுதென்றெல்லோரும்= என் அப்பன், என் அரசன், என் இன்னமுது, என்று இங்கே உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு பெயரையும் சொல்லிவிட்டோம். அப்படியுமா தூக்கம்??

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்= இப்படி கடூரமான கடின இதயம் கொண்ட அறிவிலிகளைப் போல் சும்மா படுத்துக்கிடக்கிறாயே இன்னமும்?? இந்தத் தூக்கத்தின் வலிமைதான் எவ்வளவு ஆழமாய் உள்ளது?

எப்படிச் சொன்னாலும் திரும்பத் திரும்ப இருளாகிய அறியாமையின் பாலே மனம் செல்கிறது. அதிலே கிடைக்கும் அற்ப சுகங்களிலே மனம் லயிக்கிறது. ஆனந்திக்கிறது. அந்த மனத்தை விழிக்கச் செய்து தன்னுள்ளே ஒளிரும் ஒளியான ஈசனைக் காணச் செய்யவேண்டும்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருவெம்பாவை ஆறாம் நாள்

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.


மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே = அழகிய மான் போன்ற பெண்ணே! நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறி இருந்தாயே? அப்படிச் சொன்னதை மறந்தாயோ? எங்கே போயிற்று அந்த வார்த்தைகள்? உனக்கு நாணமாய் இல்லையா?

போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ= அவ்வார்த்தைகள் எந்தத் திசையில் சென்றன பெண்ணே, இன்னமுமா உனக்குப் பொழுது புலரவில்லை??

வானே நிலனே பிறவே அறிவரியான்= இந்த வானும் சரி, நிலமும் சரி, பிற எவ்வுலகங்களும் சரி, இறைவனைச் சரிவர அறிந்தவரில்லை. எவர் அறிவார் அவன் பெருமையை?? இது உணர்வால் மட்டுமே இயலும் ஒன்று.

தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்= ஆனாலும் அந்தப் பரமன் தானே வலிய வந்து அவனிடம் பக்தி செலுத்தும் நம்மிடம் அன்பு பூண்டு நம்மை ஆட்கொண்டருளுகிறான்.

வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்=அப்படிப்பட்ட ஈசனின் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து பாடித் துதித்து இங்கே வந்துள்ள எங்களுக்கு நீ வாயைத் திறந்து உன் பதிலையாவது கூறுவாய்.

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்= ஆ, ஆ, நீ இவ்வளவு கல்நெஞ்சுக்காரியாய் இருக்கிறாயே? பரமன் பெயரை நாங்கள் சொன்னதைக் கேட்டதுமே நீ வாயையும் திறக்காததோடு உன் ஊனும் கூட உருகவில்லையே?? இது என்ன அதிசயம்? இத்தகைய நிலை உனக்கு ஒருத்திக்குத் தான் இருக்கும். அடிபெண்ணே,

ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்= ஈசன் எங்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்கும் தலைவன் ஆவான். அவன் புகழைப் பாட இனியாவது நீ வருவாயாக.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருவெம்பாவை ஐந்தாம் நாள்

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ள இருவரும் தாமே பெரியவர் என்று அறுதியிட்டுக் கூற, பின்னர் ஈசனிடம் சென்று கேட்டால் அவன் உண்மையுரைப்பான் எனத் தோன்ற ஈசனிடம் சென்று எங்கள் இருவரில் யார் பெரியவர் எனக் கேட்கிறார்கள். ஈசனும் அடிமுடி கண்டுபிடிக்க முடியாத பெரும் சோதி வடிவில் நின்றான். இருவரையும் இதற்கு மூலமும், முடிவும் கண்டு வரச் சொல்ல பிரம்மாவோ ஈசனின் தலையைக் காணவும், விஷ்ணுவோ அடியைப் பணியவும் தேடிச் சென்றனர். ஆனால் விஷ்ணுவால் காணமுடியாமல் திரும்பி வந்து தான் தோற்றதை ஒத்துக்கொண்டார். மேலே,மேலே, மேலே சென்ற பிரம்மாவோ,விண்ணையும் தாண்டிச் சென்றும் முடியைக்காண இயலவில்லை. அப்போது ஈசன் சடாமுடியில் சூடி இருந்த தாழம்பூ ஒன்று கீழே விழுந்தது. கீழே கீழே வந்த தாழம்பூவைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா இது நிச்சயம் ஈசன் முடியிலிருந்து வந்ததால் நாம் முடியைக் கண்டோம் எனச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தாழம்பூவைச் சாட்சி சொல்ல அழைக்க, தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.

ஈசன் முடியைக் கண்டதாக பிரம்மா கூற ஈசன் உண்மை தெரிந்து பிரம்மாவை சபிக்கிறார். தாழம்பூவுக்கும் இனி என் வழிபாட்டில் நீ இடம்பெற மாட்டாய் என்று ஒதுக்கிவிடுகிறார். அப்படி அடிமுடி தேடிய விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் காண முடியாமல் நின்ற ஈசனை நாம் உணர்வோம் என்று பொய்யுரை பேசுகிறாளாம் இந்தப்பெண்.

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்= ஆஹா இனிமையான சொற்களால் பொய்யுரைகளை பேசும் வஞ்சகப் பெண் இவள் அன்றோ, வாசற்கதவைத்திறப்பாயாக!

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்= இந்த மண்ணகத்தில் உள்ளவராயினும், விண்ணகத்தில் உள்ளவராயினும் மற்றும் உள்ள எவராலும் அறிய முடியாத, காண முடியாத பரம்பொருளின்

கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்= திருமேனியின் அழகும், நம்மையும் நம் போன்ற எளியோரையும் ஆட்கொண்டருளும் அருட்குணத்தையும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று= ஐயனவன் சீலத்தையும் பாடி என் சிவனே என் சிவனே என்று

ஓலம் இடினும் உணராய் உணராய் காண்= எத்தனை முறை ஓலம் இட்டோம். அவ்வாறு கூவியும், நீ எழுந்துவரவே இல்லையே,

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்= ஈசனுக்கல்லாது உன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் பக்தி எங்கே போயிற்று? என்று எழுப்பவந்த தோழியர் அழைக்கின்றனர்

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!


ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

எழுப்பவந்த பெண்கள் உள்ளே தூங்கும் பெண்ணைப் பார்த்து,

ஒண்ணித்தில நகையாய் இன்னமு புலர்ந்தின்றோ= ஒளி பொருந்திய முத்துப்பற்களை உடைய பெண்ணே, இன்னமுமா உனக்கு விடியவில்லை?? பொழுது எப்போதோ புலர்ந்துவிட்டதே! என்று கூறுகின்றனர். உள்ளே இருந்தவள் இதுக்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.

வண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ= கிளியைப் போன்ற அழகான குரலில் இனிமையாக மிழற்றும் நம் மற்றத் தோழியர் அனைவரும் வந்தனரோ? என்று நிதானமாக விசாரிக்கிறாள்.

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்= இங்கே வா பெண்ணே, எண்ணிக்கொள் , அத்தனை பேரையும் உள்ளபடியே சொல்லுவோம்.
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே= நாங்க எண்ணிண்டு இருக்கும்போது நீ பாட்டுக்குக்கண்ணை மூடிக்கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுப் ப்பொழுதை வீணாக்காதே.

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளை= விண்ணுக்கு ஒரு மருந்தை இங்கே தேவர்களுக்கு அமுதம் போன்றவன் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலும் உள்ளார்ந்து யோசித்தால், பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஹாலாஹால விஷத்தை உண்டு அனைவரையும் காத்தவன் என்ற பொருளையும் கூறலாம் என்று தோன்றுகிறது. ஈசன் புரிந்த இத்தகைய தியாகத்தாலேயே தேவர்களுக்கு அமுதம் கிடைத்தது. ஈசனை விடவும் உயர்ந்த அமுதம் வேறு இல்லை எனினும் தேவர்களைக் காக்கவேண்டி அவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தான். அத்தகைய அமுதம் போன்ற ஈசன், வேதங்களுக்கெல்லாம் அவனே பொருளாய் இருப்பவன்,

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்= நம் கண்களுக்கு இனியவனை, பார்ப்பவர்கள் கண்களுக்கெல்லாம் இனியவனை, அழகனை பாடி உள்ளம் காதலால் கசிந்து உருக

உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்= உள்ளம் நெக்கு உருகி மனம் கசிந்து கண்கள் ஆறாய் நீரைப் பெருக்க, ஈசனைப் போற்றிப் புகழ்ந்து பாட வந்த எங்களால் இப்போது எவர் வந்தனர், எவர் வரவில்லை என்ற கணக்கெடுக்க இயலாது பெண்ணே! நீயே எழுந்து வா. வந்து நீயே எண்ணிக்கொள், எவரேனும் ஒருவர் குறைந்தாலும் மீண்டும் போய்த் தூங்கிக்கொள்வாய்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 3


முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

முத்தன்ன வெண்ணகையாய்= முத்துப் போன்ற வெள்ளைச் சிரிப்புடையவளே, முத்து ஒளிர்வது போல் உள்ளத்தில் கள்ளமில்லாமல் வெள்ளைச் சிரிப்புடையவளே என்றும் கூறலாம்.
தோழியை இவ்வாறு அழைத்து மேலும் கூறுகிறாள்.
முன் வந்து எதிர் எழுந்து= எங்களுக்கெல்லாம் முன்னாடியே நீ எழுந்துவிடுவாயே?

என் அத்தன் ஆநந்தன் அமுதன் என்றள்ளூறி= ஈசனை என் அப்பன், என் தந்தை இன்பமே வடிவானவன், அமுதமானது அதை உண்டவரை எவ்வாறு வாழ்விக்கிறதோ அவ்வாறே ஈசனின் நாமத்தை நினைப்பவரையும், சொல்பவரையும் வாழ்விப்பவன் என்று உன் வாயில் எச்சில் ஊறும் வண்ணம்

தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடைதிறவாய்= இனிமையான மொழிகளைப் பேசுவாயே, இப்போது வந்து உன் வீட்டு வாசல் கதவைக் கூடத் திறக்காமல் இருக்கிறாயே?? வந்து கதவைத் திற.

என்று இவ்விதம் தோழிப் பெண்கள் கூற வீட்டினுள் இருப்பவள் உள்ளே இருந்த வண்ணமே கூறுகிறாள்.
பத்துடையீர்= இந்தப் பத்துடையீருக்கு இருவிதமான பொருள் சொல்லப் படுகிறது. ஒரு பொருளானது ஈசன் மேல் தீராத பற்றுடைய பக்தர்கள் என்றும், மற்றொரு பொருள், சிவனடியார்களுக்குப் பத்து குணங்கள் உண்டு எனவும் அதைச் சுட்டுவதாயும் கூறுகின்றனர். எது சரியான பொருள் எனக் கற்றறிந்த அறிஞர்களே தெளிவாக்கவேண்டும். அடியார்களுக்கான பத்து குணங்களாய்ச் சொல்லப்படுபவை:
1.நீறும், சிவமணியும் அணிதல்
2.குருவழிபாடு
3.சிவதோத்திரம் செய்தல்
4.மந்திரம் செபித்தல்
5.இறைவழிபாடான சிவபூசை செய்தல்
6.பதிபுண்ணியங்களைச் செய்தல்
7.சிவபுராணம் கேட்டல்
8.சிவாலய பரிபாலனம் செய்தல்
9.சிவனடியாரிடம் உணவு அருந்துதல், அருந்துவித்தல்,
10.அடியார்களுக்கெல்லாம் அடியானாக இருத்தல். மேற்கண்ட பத்து குணங்களையும் உடையவர்கள் என்று உள்ளிருப்பவள் தன் தோழிப்பெண்களைச் சொல்வதாயும் பொருள் வருகிறது.
ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்= ஈசனின் பழமையான அடியார்களான நீங்கள் அனைவரும் எனக்குத் தோழிகள் ஆவீர்கள்.
புத்தடியோம் புன்மை தீர்த்து= ஆ, ஆ, நானோ இப்போது தான் புதியவளாக ஈசனின் அடியாராக ஆகியுள்ளேன். அத்தகைய புத்தடியாரான எங்கள் சிறு சிறு குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு எம்மை மன்னித்து ஆட்கொண்டால் பொல்லாதோ=ஆட்கொண்டால் அது உமக்கு ஒருக்காலும் தீங்காகாதே?" என்று கேட்க, அழைக்க வந்த தோழிகள் மறுமொழியாய்
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ= நீ எவ்வளவு அன்புள்ளவள் என்பதை நாங்கள் அறியாமலா இருப்போம்?

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை= உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் அந்த ஈசனையே நினைப்பதால் அழகியான பெண்கள் சிவனைப் பாடாமல் இருப்பார்களா?

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்= உன்னை அழைக்க வந்த எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும், சரி, போனால் போகட்டும் நீ எழுந்து வா பெண்ணே!

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 2

இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை. தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்புகிறார். மார்கழி மாதத்தில் பராசக்தியை நோக்கி வழிபாடுகள் செய்து நல்ல கணவனுக்காகவும்,நாட்டில் மழை பொழிந்து வளம் சிறக்கவும் பெண்கள் பிரார்த்தனைகள் செய்வார்கள். ஆகவே அந்தப்பாவை நோன்பின் போது ஒரு பெண் மற்றவளைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல்களே இவை எல்லாமே. அனைத்துப்பாடல்களும் நாடு வளம் பெறவும், நாட்டு மக்கள் மனம் வளம் பெறவுமே பாடப்பெற்றதாகும்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!"

வாள் தடங்கண் மாதே,= வாளைப் போல் ஒளி வீசும் அழகிய அகன்ற கண்களை உடைய பெண்ணே,

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வளருதியோ= அடியும் முடியும் காணமுடியாத பெரும் சோதி வடிவான ஈசனைக் குறித்துப் போற்றி நாங்கள் பாடிய பாடல்களைக் கேட்டும் இன்னமும் தூங்குகிறாயா?? என்ன அழகான சொல் வளருதியோ? வளருதியோ என்றால் தூங்குவது! இப்போ இத்தகைய சொற்பிரயோகங்களையே காணமுடிவதில்லை.

வன்செவியோ நின்செவிதான்= உன்னுடைய காது என்ன செவிட்டுக் காதா? உனக்குக் கேட்கவே இல்லையே?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்கேட்டலுமே= அந்த மஹாதேவனின் சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திப் பாடிய வாழ்த்தொலியைக் கேட்டதுமே அந்த மற்றொருத்தி என்ன செய்தாள் தெரியுமா?? அவள் மனம் ஈசனின் நினைவால் நெக்குருகியது. பக்தி மிகுதியால் கண்கள் கண்ணீரைப் பெருக்கியது.

விம்மி விம்மி மெய்ம்மறந்து= விம்மி விம்மி தன்னை மறந்து ஈசன் திருவடி ஒன்றையே நினைத்த வண்ணம் இருந்தாள்.

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்= போதார் அமளி இங்கே படுக்கையைக் குறிக்கும். படுக்கையிலிருந்து புரண்டு எழுந்து, நின்று, கிடந்து என என்ன செய்வது எனப் புரியாமல் அவன் திருவடி ஒன்றையே நினைத்து நினைத்து மனம் உருகிக்கொண்டிருக்கிறாள். நீயானால் நாங்கள் இவ்வளவு எழுப்பியும் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே?
********************************************

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

நேரிழையாய் நேரிழையீர்= உனக்கேற்ற அழகான ஆபரணங்களைப் பூண்ட பெண்ணே,

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போதெப்போபோதிப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ = நாம் பேசும்போதெல்லாம் இரவும் பகலும் எல்லா நேரமும் என் அன்பு, பக்தி அனைத்தும் அந்தப் பரஞ்சோதியான ஈசனுக்கே என்பாயே? இப்போ என்னவென்றால் படுக்கையை விட்டே எழுந்திராமல் இந்தப் படுக்கையின் மேல் பாசமும், நேசமும் வைத்தாயோ?" துயிலெழுப்ப வந்த பெண்கள் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணைக் கேட்க அவள் பதில் கூறுகிறாள்.

சீசீ இவையும் சிலவோ விளையாடி=பெண்களே, இது என்ன விளையாட்டு??
ஏசும் இடம் ஈதோ=இப்படி என்னை ஏசிக்கொண்டு இத்தைய சொற்களைப் பேசும் இடம் இதுவல்லவே என்று அவர்களைக் கடிந்து கொள்கிறாள். வந்த பெண்களும் மனம் மகிழ்ந்தார்கள். மேலும் சொல்கின்றனர்.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்= விண்ணோர்களான தேவாதி தேவர்களே புகழ்ந்து பாராட்டக் கூசுகின்ற அழகான மலர்ப்பாதங்களை உடைய ஈசனின் திருவடிகளை நமக்குப் பற்றெனப் பிடிப்பதற்காகத் தந்தருள இவ்வுலகில் எழுந்தருளிய ஞானகுருவான

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு =சிவலோகத்துக்கு அதிபதியும், தில்லைச் சிற்றம்பலத்தில் நித்தியம் நடனம் ஆடிக்கொண்டிருப்பவும் ஆன ஈசனுக்கு

அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்= நாம் செய்யும் அன்பு எவ்வளவு உயர்ந்தது?? அன்பு செய்யும் அடிமைகளாகிய நாம் மேலும் மேலும் ஈசனிடம் அன்பு செய்யும் வண்ணம் எழுந்து வா என்றார்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

மின் தமிழில் சைவத்தைப் பற்றிய கட்டுரைகள் வருவதில்லை என்பது ஒரு கருத்து. அதனால் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணிக்க வாசகரின் திருவெம்பாவை பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். எளிமையாகவே கூற முயற்சிக்கிறேன். கடினமான வார்த்தைகளைப் போட்டோ, தத்துவங்களைக் கூறியோ எழுதப்போவதில்லை. என் போன்ற சாமானியருக்கும் மனதில் பதியுமாறு எழுத முயல்கிறேன்.
********************************************
முதலில் மாணிக்கவாசகர் பற்றிய சிறு குறிப்பு:

காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே வாதவூரார் எனவும் அழைக்கப் பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான்.

எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை. என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல் மக்கள் பணியே மகேசன் பணி எனத் தொண்டாற்றி வந்தார். ஒரு சமயம் சோழநாட்டுக் கடற்கரையில் நல்ல குதிரைகள் வந்திருப்பதைக் கேள்விப் பட்ட மன்னன் தன் குதிரைப் படைக்கு அவற்றை வாங்க நினைத்து திருவாதவூராரிடம் வேண்டிய பொருளைக் கொடுத்துக் குதிரைகள் வாங்கி வர அனுப்பி வைத்தான். பரிவாரங்கள் உடன்வர வாதவூரார் சொக்கநாதரைத் தொழுதேத்திவிட்டுக் கிளம்புகிறார்.

திருப்பெருந்துறை என்னும் ஊரைக் கடந்தே குதிரைகள் வந்திருக்கும் துறையை அடையவேண்டும். திருப்பெருந்துறைக்கு அருகே செல்லும்போது அங்கே ஓர் அழகான சோலையில், "ஹர ஹர" என்ற சிவநாம முழக்கம் கேட்டது. வாதவூரார் மனம் உருகி சோலையை நோக்கிச் சென்றார். அங்கே ஓர் குருந்த மரத்தினடியில் தன் சீடர்கள் புடைசூழக் குருவாக அமர்ந்திருந்த ஈசனைக் கண்டு மெய்ம்மறந்தார் வாதவூரார். கண்ணீர் சோர ஈசனின் திருவடிகளில் விழுந்து பணிந்து, தம்மை ஆட்கொள்ளவேண்டும் என வேண்ட, ஈசனும் அவர் பால் மனம் கனிந்து அவருக்கு உண்மைப் பொருளை உபதேசித்தார். பேராநந்தப்பெருவெள்ளத்தில் திளைத்த வாதவூரார் ஈசனின் அடிகளை நினைந்து நினைந்து மனம் உருகித் தம்மை மறந்து அழகிய தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைவனுக்குப் பாமாலை சூட்டினார். அவற்றைக் கேட்ட ஈசன் மனம் மகிழ்ந்து ஒவ்வொன்றும் மாணிக்கம் போன்று மாசற்று ஒளிவீசித் திகழும் பாக்கள் எனப் பாராட்டிவிட்டு, வாதவூராரின் பெயரை இனி மாணிக்கவாசகர் என அழைக்கவேண்டும் என்ற சிறப்புப் பெயரையும் சூட்டினார். சில நாட்கள் இங்கே தங்கி எமக்குப் பணிவிடைசெய்வாயாக என மாணிக்க வாசகரைப் பணித்துவிட்டு ஈசன் மறைகிறார்.

ஓர் அமைச்சனாக சர்வ பரிவாரங்களோடும், படைகளோடும் அரசவை வேலைக்குரிய ஆடைகள் அணிந்து வந்த மாணிக்க வாசகர் இப்போது அனைத்தையும் துறந்தார். ஓர் மெய்த்துறவியாக மாறினார். எந்நேரமும் சிவநாமமே தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வெண்ணீறணிந்து ஈசன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு அதனால் மனம் கனிந்து கண்ணீர் பெருக்கி ஈசன் நினைவாகவே இருந்தார். தாம் கொண்டு வந்த பொருளை எல்லாம் திருக்கோயில் பணிகளுக்கு எனச் செலவிட்டுவிட்டார். குதிரைகள் வாங்கவே இல்லை. மாணிக்கவாசகரின் இந்தச் செயல் மன்னன் காதுகளுக்கு எட்ட அவரின் பக்திக்காக அரசாங்கப் பணத்தைச் செலவிட்டுவிட்டாரே எனக் கோபம் கொண்ட மன்னன் அவரை உடனே குதிரையுடன் வருமாறு ஓலை அனுப்பினான்.

எங்கே போவது குதிரைகளுக்கு?? மாணிக்கவாசகர் பெருந்தூக்கத்திலிருந்து விழித்தவர் போலானார். பாண்டியனது ஓலையைக் கண்டதும் செய்வதறியாது துடித்தார். பெருந்துறைப் பெருமானிடமே வேண்டினார். அவரின் துன்பம் கண்டு மனம் பொறுக்காத ஈசன், அவரைப் பாண்டிய நாடு செல்லுமாறும் தாம் ஆவணி மாதம் மூல நக்ஷத்திர தினத்தன்றுக் குதிரைகளோடு வருவதாயும் கூறி, ஒரு மாணிக்கக் கல்லையும் கொடுத்து அதை மன்னனுக்குக் கையுறையாகக் கொடுக்குமாறும் கூறினார். ஈசனின் இந்த வாக்குறுதியால் மனம் தெளிந்த மாணிக்க வாசகர் மதுரை புறப்பட்டுச் சென்றார். மதுரையை அடைந்து பாண்டியனைக் கண்டு மாணிக்க மணியைக் கொடுத்ததுமே மன்னனின் கோபம் சற்றுத் தணிந்தது. குதிரைகளும் வந்து சேரும் என்ற செய்தியும் கேட்ட மன்னன் தனக்குச் செய்தி தவறாய் வந்திருக்கிறது, மாணிக்க வாசகர் தவறு செய்யவில்லை என நினைத்து மனம் மகிழ்ந்தான். அவருக்கு முதல் அமைச்சருக்குரிய மரியாதைகளைச் செய்து சிறப்பித்தான்.

நாளை மூல நக்ஷத்திரம். ஆனால் இன்று வரை குதிரைகள் வரவே இல்லையே?? மன்னன் கோபம் அடைவானே?? மாணிக்கவாசகர் தவிக்க, மன்னனுக்கு மீண்டும் சந்தேகம் வர, ஒற்றர்களை அனுப்பி விசாரித்து வரச் செய்திருந்தான். அவர்கள் கூறிய தகவல்களால் உண்மை தெரியவர மன்னனுக்குக் கோபம் எல்லை மீறியது. மாணிக்க வாசகரைச் சிறையில் போட்டு அவரிடம் கொடுத்த பொருளை எல்லாம் அவர் திரும்பத் தர நிர்ப்பந்திக்குமாறு ஏவலாளர்களை ஏவினான். அவ்வாறே சென்ற மன்னனின் ஏவலாளர்கள் மாணிக்க வாசகரைச் சிறையிலிட்டுத் துன்புறுத்தினார்கள். மாணிக்கவாசகர் ஈசனை நினைந்து மனம் ஆறுதலுடன் அவன் நினைவாகவே இருந்தார். எவ்வாறேனும் ஈசன் வந்து தன்னைக் காப்பான் என்ற உறுதியுடன் இருந்தான்.

அந்த சர்வேசனோ தன் அடியார்கள் துன்புறத் தான் இன்புறுவானா? அவனுக்கு எல்லாமே விளையாட்டுத் தான் என்றாலும் அடியாரைச் சோதனை செய்வது என்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது மாணிக்கவாசகர் சிறையில் வருந்துவதைக்கண்டதும், சோதனை போதுமெனக் கருதிக் குதிரைச் சேவகனாக வேடமிட்டுக்கொண்டுக் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் பரிகளாக்கினார். என்னே இறைவன் திருவிளையாடல்? அவன் நினைத்தால் குதிரைகளையே கொடுத்திருக்கலாம் அல்லவா?? மீண்டும் ஏன் இப்படிச் செய்கிறான்? மாணிக்கவாசகரின் பெருமையை மன்னன் அறியவேண்டும் என்பதோடு ஒரு சாமானியப்பெண்ணான வந்தி என்னும் கிழவிக்கும் இதன் மூலம் நன்மை செய்யவேண்டும். மன்னனும் குடிமக்கள் அனைவரும் தம் பிள்ளைகளே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அனைத்துக்குடிமக்களையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும் என்பதற்காகவுமே. மன்னன் என்ற மமதை இருக்கக் கூடாது என்பதால்.

நரிகளைப் பரிகளாக்கிய ஈசன் அவற்றை மன்னனிடம் அளிக்கக் குதிரைகளைப் பார்த்துப் பிரமித்த மன்னன் மனம் மகிழ்வடைந்து வாதவூராரைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்கிறான். குதிரைகளை எல்லாம் குதிரைச்சேவகனாக வந்த ஈசன் முறைப்படி நடத்திக்காட்டிக் கயிறு மாற்றி மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். அன்றிரவு குதிரை லாயத்தில் நரி ஊளையிடும் சப்தம். ஏற்கெனவே லாயத்தில் இருந்த குதிரைகள் கனைத்துக்கொண்டும், கால்மாற்றி வைத்துக்கொண்டும் அவஸ்தைப்பட்டன. என்னவென்று பார்த்தால் குதிரைச் சேவகன் கொடுத்த குதிரைகளெல்லாம் நரிகளாய் மாறியதோடல்லாம, ஏற்கெனவே இருந்த குதிரைகளையும் கடித்துக் கொன்று அவைகளுக்கு ஊறுகள் விளைவித்துக்கொண்டிருந்தன. இவர்களைப் பார்த்ததும் அனைத்தும் ஓடி மறைந்தன. மன்னின் கோபம் இப்போது கட்டுக்கடங்காமல் போகவே மாணிக்கவாசகரைக்கூட்டி வந்து அவர் முதுகில் கற்களை ஏற்றி வையை நதியின் நடுவில் நிறுத்தித் துன்புறுத்தினான். ஆனால் அப்போதும் மாணிக்க வாசகர் திருவாசகப் பாடல்களைப் பாடி மனம் ஆறுதல் கொண்டார்.

எனினும் தம் அன்பர் துன்புறுவதை ஈசன் பொறுப்பானா?? வையையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம். கரை புரண்டு ஓடிற்று. எப்படி அடைத்தாலும் வெள்ளம் அடைபடவே இல்லை. பாண்டியன் அணைபோட்டு வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். வீட்டுக்கு ஒருவர் என மதுரை நகரின் ஆண்கள் அனைவரும் வெள்ளத்துக்கு அணை போட வரவேண்டும் என ஆணையிட்டான். அங்கே வந்தி என்னும் மூதாட்டி ஒருத்தி பிட்டுச் சுட்டு விற்று வாழ்க்கை நடத்தி வந்தாள். அவளுக்கென அளந்து விட்டிருந்த பங்கை அடைக்க ஆளே இல்லாமையால் மனம் வருந்தி ஈசனே துணை என முறையிட்டாள்.
வந்தார் ஈசன். தலையில் முண்டாசு, தோளில் மண்வெட்டி. அரைப்பாய்ச்சுக் கட்டிய வேட்டியோடு வந்தார். வந்திக்கிழவியிடம் தான் அவளின் பங்குக்கு உள்ள வேலையைச் செய்வதாய்க் கூறத் தன்னால் கூலியும் கொடுக்க இயலாது என அவள் மனம் வருந்தினாள். கூலியைப்பணமாய்க் கொடுக்க வேண்டாம் எனவும், பிட்டாய்க் கொடுக்குமாறும் ஈசன் வேண்ட, திகைப்புற்ற வந்தி பின்னர் அதற்குச் சம்மதித்தாள். ஆயிற்று கூலியாளை வேலைக்கு அனுப்பவேண்டும். அவனோ முதலில் உணவைக் கொடு உண்டுவிட்டுப் போகிறேன் என்றான். சரி என்று பிட்டைக் கொடுத்தால் உண்டுவிட்டு, உண்டபின்னர் உறங்குவது என் வழக்கம் உறங்கிவிட்டு வருகிறேன் என்று உறங்க ஆரம்பித்தான்.

மிகவும் கஷ்டத்தோடு அவனை எழுப்பி வேலைக்கு அனுப்பினாலோ, உறங்கி எழுந்த பின்னர் உண்ணவேண்டாமா என்றான். ஒருவழியாக அவனைச் சமாளித்து வேலைக்கு அனுப்பினால் மண்வெட்டியால் மண்ணை ஒரு முறை அள்ளுவான். பின்னர் நிமிர்ந்து ஓய்வெடுப்பான். பெருமூச்சுவிட்டுக்கொண்டே சும்மாட்டை அவிழ்த்து மண்ணைக் கொட்டுவது போலத் தட்டுவான். மீண்டும் மண்வெட்டியால் ஒரு போடு , மீண்டும் மேற்சொன்னவை அனைத்தும் நடக்கும். அதற்குள் பசி வந்துவிடும், பிட்டுச் சாப்பிடப் போவான். சாப்பிட்டதும் உறக்கம் வந்துவிடும். அப்படி ஒருமுறை உறங்கும்போது மேற்பார்வை பார்த்தவர்கள் கூறிய தகவலின் படி வந்தியின் பங்கு அடைபடாமல் இருப்பதைக் கவனிக்க வந்தான் மன்னன்.

வந்தால் வந்தி நியமித்த ஆள் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால் அவன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடித்து எழுப்பினான். சுளீர்! என்ன இது? அடித்தது மன்னன், அடி வாங்கியதோ, வந்தியின் கூலியாள்! ஆனால் மன்னனின் முதுகில் அடி விழுந்த உணர்வு! மன்னன் திகைக்க அங்கிருந்த மக்கள் அனைவருக்குமே அந்த அடி முதுகில் பட்டது. அனைவருமே அடி வாங்கிய உணர்வில் அலறித்துடிக்க, வாதவூராருக்கு எந்த அடியுமே படவில்லை. அவ்வளவில் கரை தானாக அடைபட்டுப் போக கூலியாள் மறைந்தான். வாதவூரார் உண்மையை உணர்ந்து ஈசனைப் போற்றிப் பாடினார். பாண்டியனுக்கு அப்போது தான் வாதவூராரின் பெருமையும், வந்தியின் பக்தியும், தன் மமதையும் புரிந்தது. மன்னனை மன்னித்து அருளுமாறு வாதவூரார் வேண்ட அவ்வாறே ஆகட்டும் என ஈசன் திருவருள் புரிந்தார்.

அதன்பின்னர் அமைச்சர் பதவியைத் துறந்த மாணிக்கவாசகர் பல ஊர்களுக்கும் தல யாத்திரை மேற்கொண்டார். திருப்பெருந்துறை, திரு உத்தரகோசமங்கை போன்ற ஊர்களுக்குச் சென்று தில்லையை அடைந்தார். அங்கே தில்லை வாழ் அந்தணர்களோடு வாதப் போருக்கு வந்த புத்த பிக்ஷுவை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார். தில்லையம்பலவாணன் மாணிக்கவாசகர் கூறத் தன் திருக்கைகளால் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எழுதிக்கொண்டு கடைசியில் திருவாதவூரன் சொல்லத் திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது எனக் கைச்சாத்திட்டுவிட்டுக் கனகசபையில் அவற்றை வைத்துவிட்டு மறைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் அந்தச் சுவடியைக் கண்டு வியந்து மாணிக்கவாசகரிடம் காட்டிப் பொருள் கூறி விளக்கும்படி வேண்ட, அவரோ அனைத்துக்கும் பொருளே இந்தப் பரம்பொருள் எனக்கூறி தில்லையம்பலவாணனின் திருவடிகளில் சென்று மறைந்தார்.

Monday, August 23, 2010

மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்!

நடந்தது நடந்துவிட்டது. தேவி முதலிலேயே கூறினாள். இப்போது இந்தப் பிறவியில் என் எண்ணம் ஈடேறாது என. ஆனால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க எனக்குப் பொறுமையில்லை. இந்த சாம்ராஜ்யத்திற்குக் குறைந்த பக்ஷமாக முந்நூறு ஆண்டுகள் கிடைக்கும் என தேவியின் ஆசிகள். நீங்கள் இந்த நகரத்திற்கு "விஜயநகரம்" என்று பெயர் வையுங்கள். மேன்மேலும் வெற்றிகள் குவியட்டும். ஹிந்துக்களுக்கும், மற்ற மதத்தவர்களுக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் சமமாக எண்ணி நல்லாட்சி புரிந்து வாருங்கள்.

அந்நிய மதத்தினரால் இடிக்கப் பட்ட கோயில்களைப் புனர் உத்தாரணம் செய்து கொடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் அனைத்துக் கோயில்களையும் செப்பனிடுங்கள். பொதுமக்களையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துங்கள். நான் இந்த சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கவேண்டியே தாது வருஷத்தின் இந்த குருவாரத்தையும், வைசாக மாதத்தையும் , சப்தமி திதியையும் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் ஒரு சின்னத் தவறினால், ஒரு சங்கோசையினால் அது மாறிவிட்டது. எனினும் முந்நூறு ஆண்டுகளுக்கு இந்த ராஜ்யம் நிலைபெற்றிருக்கும். " என்று ஆசி வழங்கினார்.

ஹரிஹரனும், புக்கனும் தங்கள் குருவின் பெயரான வித்யாரண்யர் என்ற பெயரின் முதல் மூன்றெழுத்தான வித்யாவில் இருந்து வித்யாநகரம் என்ற பெயரிட ஆசை கொண்டனர். ஆனாலும் குருவின் கட்டளையை மறுக்கத் துணிவில்லாமல் தங்கள் சாம்ராஜ்யத்தையே அவர் காலடியில் சமர்ப்பித்து அவர் கட்டளைப்படியே விஜயநகரம் என்ற பெயரிட்டனர்.

இதுதான் ஆரம்பம், பின்னர் ஹரிஹரனோ, புக்கனோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சநாதன தர்மம் இன்று வரையிலும் கொஞ்சமாவது நிலைத்திருப்பதற்குக் காரணமே வித்யாரண்யர் தான் என்று அறுதிபடச் சொல்லமுடியும். ஆரம்பத்தில் ஒரு ஏழை பிராமணனுக்குப் பிள்ளையாகப் பிறந்து பின்னர் தனது ஆன்மீகத் தேடலின் விளைவாக அப்போது சிருங்கேரியின் குருமஹா சந்நிதானமாக இருந்த வித்யாசங்கர தீர்த்தரிடம் சந்நியாச தீக்ஷைபெற்றுக் காசிக்குச் சென்றார் வித்யாரண்யர். கடும் தவத்தின் விளைவாக அவருக்கு வேத வியாசரே தரிசனம் கொடுத்து பதரிகாசிரமத்துக்கு வரச் சொன்னதாகவும் அங்கேதான் ஸ்ரீவித்யா மந்திரம் அவருக்கு உபதேசிக்கப் பட்டதாயும் சிருங்கேரி மடம் மற்றும் சில தளங்களின் தகவல்கள் சொல்கின்றன. வித்யாரண்யரின் பூர்வாசிரமத் தம்பியாக இருந்தவர் பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்ற பெயரில் வித்யாசங்கரருக்கு அடுத்த பட்டத்துக்கு நியமிக்கப் பட்டதாயும், அவரும் சமாதி அடைந்த பின்னர் வித்யாரண்யர் சிருங்கேரி பீடத்தின் 12-வது தலைமை மஹா சந்நிதானமாக நியமிக்கப் பட்டதாயும் அறிகிறோம். 1331-ம் ஆண்டு சிருங்கேரி பீடத்தில் பட்டம் எறிய வித்யாரண்யர் 1386 வரையிலும் அந்தப் பீடத்தின் குருவாகவும், விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமை ஆலோசகராகவும் இருந்து சநாதன தர்மத்தையும் கட்டிக் காத்ததோடு அத்வைதத்தைப் பரப்பவும், வேதங்கள், உபநிஷதங்கள் பற்றியும் பல நூல்கள் எழுதியும் சேவை செய்து வந்திருக்கிறார்.


இவர் சிருங்கேரி பீடத்தில் ஏறிய காலம் பற்றியும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப் படுகிறது. சிருங்கேரி மடத்தின் அதிகார பூர்வத் தளத்தில் இவர் பீடம் ஏறிய ஆண்டு 1381 என்றும் 1386 வரை ஐந்தாண்டுகளே பீடத்தில் இருந்ததாயும் குறிப்பிட்டிருந்தாலும், பல தளங்களிலும் இவர் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்ததையும், பல வருடங்கள் சிருங்கேரி பீடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இவரின் குரு வித்யாசங்கரர் யோக முறையில் சமாதி அடைய பாதாளத்தில் தவம் இருந்ததாயும் அப்போது பீடத்தில் இருந்த இவரின் பூர்வாசிரமத் தம்பியான பாரதிகிருஷ்ண தீர்த்தரால் அந்த இடத்தின் மேலே வித்யாசங்கரருக்கு ஒரு கோயில் கட்டப் பட்டதாயும் தெரிய வருகிறது. பாரதி கிருஷ்ண தீர்த்தரும் சீக்கிரமே சமாதி அடைய இவர் பட்டம் ஏறியதாயும் சொல்லப் படுகிறது. இன்னும் சில தகவல்கள், விஜயநகரத்திலேயே வித்யாரண்யர் தமக்கென ஒரு மடம் அமைத்துக்கொண்டதாய்க் கூறுகிறது.

Sunday, August 15, 2010

மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! விஜயநகரம்!

தன்னெதிரே வந்து நின்றவனைப்பார்த்த வித்யாரண்யர் தாம் அவனுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப் போவதாய்ச் சொல்கிறார். மிரண்ட அவனைச் சமாதானம் செய்து போர்ப்பயிற்சி அளிக்கிறார். இன்னும் சில புத்தகங்களில் சந்திர வம்சத்தவர் ஆன திம்ம தேவர் நாடிழந்து மாதவாசாரியாரைத் தஞ்சம் அடைந்ததாயும் கூறுகின்றனர். திம்ம தேவருக்குப் பிறந்தவர்களே ஹரிஹரனும், புக்கனும் என்றும் கூறுவார்கள். ஆனாலும் ஒரு சில ஆதாரங்களின்படி ஹரிஹரனும், புக்கனும் திம்மதேவரின் மகன்களே ஆனாலும் அவர்கள் முகமதியர்களால் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப் பட்டதும், பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே முகமதியர் அதிகாரத்திற்கேற்ப மாற்றி அமைக்க அனுப்பப் பட்டதும், அப்போது மாதவரைச் சந்தித்ததும் சொல்கின்றன. ஆகவே நாம் இங்கே புக்கணனையே தயார் செய்தார் என எடுத்துக் கொள்வோம். இப்படித் தயார் செய்யப் பட்ட புக்கணன் தான் பின்னர் சாம்ராஜ்யத்தையும் ஆண்டான்.

தனக்கு உணவளித்த திம்மதேவனின் வம்சம் என்றும் தழைத்துச் சிறப்போடு விளங்கும் எனவும் வித்யாரண்யர் ஆசீர்வதிக்கிறார். தெய்வீக அம்சங்களோடு விளங்கும் எனவும் சொல்கிறார். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, பட்டத்து யானையின் கழுத்தில் மாலையைக் கொடுத்து அனுப்புகின்றனர் மந்திரி பிரதானிகள். மாலையை எடுத்துக்கொண்டு யானை நேரே காட்டுக்குள் வந்து தவம் செய்து கொண்டிருந்த மாதவாசாரியாரின் கழுத்தில் போட அவர் திகைக்கிறார். ஏற்கெனவே மஹாலக்ஷ்மியின் கடாட்சம் வேண்டுமென்பதற்காக அவர் துறவறம் மேற்கொண்டார். அரண்மனையும் சிம்மாதனமும் எப்படிச் சரிவரும்?

யோசித்த அவர் புக்கணனையும், ஹரிஹரனையும் அழைத்து அவர்களை ஆசீர்வதித்துப் பட்டம் கட்டினார். வராஹச் சின்னம் பதித்த தேவியின் மோதிரத்தை அவர்களுக்கு அளித்து அவர்கள் எடுக்கும் எந்தப் புதிய காரியமும் வெற்றியடையும் எனவும், அவர்களால் ஸ்தாபிக்கப் படும் சாம்ராஜ்யம் மிகவும் பிரபலமாகவும், புகழோடும் விளங்கும் எனவும் ஆசீர்வதிக்கிறார். சாம்ராஜ்யத் தலைநகராக ஒரு இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார். முறைப்படி இருவரின் ஜாதகத்தையும் பார்த்து ஒரு நல்ல நாளையும் தேர்ந்தெடுக்கிறார். அந்த நாளில் புதிய தலைநகருக்கான அஸ்திவாரம் கட்ட வேண்டும் என்பது வித்யாரண்யரின் ஆணை.

குருவின் ஆணையை மறுக்காமல் ஹரிஹரனும், புக்கனும் தலைநகருக்கான கட்டுமானங்களை ஆரம்பிக்க அஸ்திவாரம் எடுக்க ஆயத்தம் செய்கின்றனர். வித்யாரண்யர் அஸ்திவாரம் தோண்டிவிட்டு, கட்டட வேலை ஆரம்பிக்கும் முன்னர் தாம் தேவியை வழிபட்டுவிட்டு வருவதாகவும், தேவியின் ஆக்ஞையைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். தேவியின் வழிபாடு முடிந்ததுமே கட்டட வேலை ஆரம்பிக்கவேண்டும் எனவும், தாம் வழிபாடு செய்யுமிடத்தில் இருந்து இங்கே வந்து சொல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால் தாம் வழிபாடு முடிந்து தேவியின் ஆக்ஞை கிடைத்ததும், சங்கை எடுத்து ஊதுவதாகவும், சங்கோசை கேட்டதும் கட்டட வேலையை ஆரம்பிக்கலாம் எனவும் கூறுகிறார்.

அப்படியே செய்ய ஆரம்பிக்கின்றனர் இருவரும். அஸ்திவாரம் தோண்டிக் கட்டட வேலை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து, இங்கேயும் தேவி வழிபாடும் நடந்து முடிகிறது. இனி குருநாதரின் ஆக்ஞை வரவேண்டியது தான் பாக்கி. சங்கோசை கேட்கவேண்டுமே! இதோ சங்கோசை!

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மகிழ்வோடு இருவரும் கட்டட வேலையை ஆரம்பிக்கின்றனர். ஒரு நாழிகை ஆனதும் மீண்டும் சங்கோசை.
பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்தச் சங்கோசை சற்றே வித்தியாசமாய் ஏதோ செய்தியைத் தெரிவிக்கிறதே? பதறிப் போனார்கள் இருவரும். உடனே குதிரைகளில் ஏறி குருநாதர் வழிபாடு செய்யும் இடம் செல்ல, அங்கே இவர்களைக் கண்ட குரு திகைக்கிறார். கட்டட வேலையை ஆரம்பிக்காமல் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, கட்டடவேலையை ஆரம்பித்துவிட்டோமே? திரும்பவும் இரண்டாம் முறையாகவும் சங்கோசை கேட்கிறதே எனப் பார்க்க வந்தோம் என இருவரும் சொல்கின்றனர்.

என்ன இது? இரண்டாம் முறையா? நான் ஒரு முறைதான் சங்கை ஊதினேன் என குரு சொல்ல, ஆஹா, குருநாதர் எவ்வாறு பொய் சொல்லுவார்? எங்கோ தவறு நடந்துள்ளது? இருவரும் விசாரிக்க ஆணையிட, நகர் நிர்மாணத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இடையன் அவைகளை ஒன்று சேர்க்க சங்கை எடுத்து ஊதியதாக ஒத்துக்கொண்டதைக் கேட்டனர். குருவிடம் வந்து நடந்ததைச் சொல்ல மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த குரு, பின்னர் மீண்டு வந்து. இந்த சாம்ராஜ்யம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கவேண்டும் என தேவியைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்னுடைய கடும் தவத்தால் அடுத்த பிறவியில் நடக்கவேண்டிய ஒன்றுக்கு தேவி இப்போதே சம்மதம் சொன்னாள். ஆனால் அது ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும் தேவி குறிப்பிட்டிருந்தாள். ஆனால் அந்த நேரத்திற்கு முன்னரே நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள். தேவி சொல்கிறாள், விதி வலியது, மாதவா, விதியை எவராலும் வெல்ல முடியாது. இந்த சாம்ராஜ்யத்திற்கு முந்நூறு ஆண்டுகளே உயிர் இருக்கும். பின்னர் அழிந்து போய்விடும். அதுவும் ஆரம்பித்த நேரம் சரியில்லாமையால், பல இடிபாடுகளுக்கும் உள்ளாகும். அந்நிய சக்திகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும் என்று சொல்லிவிட்டாள் என்றார் வித்யாரண்யர்.

Sunday, July 4, 2010

ஒரு மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்!

ஏற்கெனவே சொன்னபடி வித்யாரண்யர் கதையைப் பல விதங்களிலும் சொல்கின்றனர். அவர் தமிழ்நாட்டின் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் மாதவர் என்றும் கூறுகின்றனர். இப்படியும் ஒரு கூற்று உண்டு. துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் என்றும், சிறு வயதில் இருந்தே வேத, வேதாந்தங்களின் மீது கொண்ட பற்றுக் காரணமாயும், மேலே படிக்கவும் காஞ்சிக்கு வந்தார் என்றும் சிலர் கூற்று. இல்லறத்தில் வறுமை பொறுக்க முடியாமல் காஞ்சி ஸ்ரீமடத்தில் படித்து வந்த மாதவர் ஸ்ரீவித்யா வழிபாட்டில் தேர்ந்து விளங்கினார். ஸ்ரீவித்யா வழிபாட்டில் தேவியிடம் பொன்னும், பொருளும் கிடைக்கும் வண்ணம் உள்ள வழிபாட்டைச் செய்து தேவியிடம் பொன்னும், பொருளும் வேண்டினார். ஆனால் இதற்குப் பலனே இல்லை என்றும், அதனால் கோபமுற்ற மாதவர் ஸ்ரீசக்கரத்தை எரிக்க ஆரம்பிக்க, அந்தத் தீயிலிருந்து அரைகுறையாக எரிந்த ஆடையோடு தேவி தோன்றி, "இப்பிறவியில் நீ செல்வத்தை அனுபவிக்க முடியாது. சென்ற பிறவியில் எவருக்கும் ஒரு அரிசிமணிகூடத் தானம் அளிக்கவில்லை. எந்தவிதமான நற்செயல்களும் செய்யாத நீ அடுத்த பிறவியில் தான் செல்வத்தை அநுபவிக்க முடியும்." என்கிறாள். (இது எல்லாருமே ஒரே மாதிரி சொல்கின்றனர்)

தான் நினைத்தபடி செல்வம் கிடைக்கவில்லை என்றதும் மாதவருக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். பின்னர் சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டால் அது இன்னொரு ஜன்மத்திற்குச் சமம் என்பது நினைவில் வர சந்நியாசம் மேற்கொள்ளுகிறார். அப்போது தான் வித்யாரண்யரின் உதவி வேண்டி வந்த ஹரிஹர, புக்கர்களின் அறிமுகமும் கிடைத்ததாயும் புக்கன் தினமும் அளிக்கும் பாலை மட்டுமே அருந்தி அருந்தவம் இயற்றியதாயும் ஒரு கூற்று உண்டு. நீண்ட வருடங்கள் தவம் செய்த மாதவரை சந்நியாசம் வாங்கியதும் வித்யாரண்யர் என்று அழைக்க ஆரம்பித்திருந்தனர். தவத்தின் பலனாக அவர் முன் கலைமகளும், அலைமகளும் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க, சநாதன தர்மம் நிலைத்து நிற்கவும், அந்நியர்களை நாட்டை விட்டு ஓட்டவும் ஓர் இந்து சாம்ராஜ்யத்தை அமைக்க ஆசிவேண்டும் என்றும், அதற்குரிய பொருளுதவியும் வேண்டும் என்றும் கேட்கிறார் வித்யாரண்யர். பொருள் கொடுத்துவிடலாம். ஆனால் சநாதன தர்மத்தை நிலைநாட்ட மாபெரும் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தும் தருணம் இதுவல்ல. இப்போது ஏற்படுத்தும் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நிற்காது எனக் கலைமகளும், அலைமகளும் சொல்லியும் வற்புறுத்தித் தனக்கு வேறு வரம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் வித்யாரண்யர்.

அவ்வாறே வரம் கொடுத்தனர் தேவியர் இருவரும். அளவிடமுடியாத செல்வத்தைப் பார்த்துத் திகைத்த வித்யாரண்யருக்கு ஒரு கணம் வருத்தமும் மேலோங்கியது. இத்தனை செல்வத்தையும் தான் பயன்படுத்த முடியாது. அதற்குத் தனது சந்நியாச ஆசிரமம் இடம் கொடுக்காது என்பது புரியவர அவர் வருத்தம் மேலும் அதிகமானது. ஆனாலும் இந்தச் செல்வத்தை ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு தன் மனதிற்கு வலு சேர்த்துக்கொண்டார். அப்போது அந்தத் தேசத்தின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, மந்திரி பட்டத்து யானையை அலங்கரித்து அதன் கையில் மாலையைக் கொடுத்து நாட்டை வலம் வர வீரர்கள் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறான். நாட்டை எல்லாம் விடுத்துக் காட்டில் நுழைந்த பட்டத்து யானை வித்யாரண்யர் கழுத்தில் மாலையைப் போட சந்நியாசியான அவர் தான் அரசாள முடியாது என்பதைத் தெளிவாக்கித் தனக்கு அத்தனை வருடங்களாக உணவு அளித்துப் பாதுகாத்த ஹரிஹர, புக்கர்களை அரசராக்கும்படி கூறுகிறார். அவரின் வித்யையினால் விளைந்த தேஜஸைக் கண்ட மந்திரி, பிரதானிகள் அவர் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் புக்கனை அரசனாக்குகின்றனர். ஹரிஹரன் சுற்று வட்டாரங்களில் போர் புரிந்து அந்நியர் படையை அழித்துத் தன் சகோதரனுக்கு உதவி புரிகிறான்.


வாராஹியின் சின்னம் கொண்ட மோதிரத்தை புக்கனுக்கு அளித்து ஆசீர்வதிக்கிறார் வித்யாரண்யர். பின்னர் புதியதாய்த் தலைநகரம் நிர்மாணிக்கச் சொல்கின்றார். தலைநகரம் நிர்மாணிக்கும் முன்னர் தேவியின் வழிபாட்டில் இறங்கிய வித்யாரண்யர் பின்னர் எழுந்து தன் சீடர்களான ஹரிஹர, புக்கர்களிடம், நகர் நிர்மாணத்திற்கான நாளைக் குறித்துத் தருகிறார். இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் நிர்மாண வேலையை ஆரம்பிக்கும்படியும், அப்போது ஆரம்பிக்கும் வேலையால் நிர்மாணிக்கப் படும் நகரமும், அதைச் சார்ந்த சாம்ராஜ்யமும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் என்றும் சநாதன தர்மம் செழித்து ஓங்கும் என்றும் கூறுகிறார்.//

இப்படியும் ஒரு கதை விளங்கி வருகிறது. எது எப்படியோ ஹரிஹர, புக்கர்களை அரசனாக்கி அழகு பார்த்தவர் வித்யாரண்யரே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சென்ற அத்தியாயத்தில் கூறியபடி போர் வீரன் போல் வாட்டம் சாட்டமாய் இருந்த புக்கனைக் கூப்பிட்டுப்போர்ப் பயிற்சி அளித்து வீரனாக்கியதாயும், தன்னைத் தேடி வந்த சாம்ராஜ்யத்தை அவனை ஆளச் சொன்னதாகவும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கும் நம் கலாசாரமும் சரி, சநாதன தர்மமும் சரி ஓரளவுக்காவது நீடித்திருக்கிறது என்றால் அது வித்யாரண்யராலேயே.

Thursday, June 24, 2010

ஒரு மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்

இந்த வித்யாரண்யரைப் பற்றிய பல கதைகள் இருக்கின்றன. என்றாலும் அவர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர் என்பதிலும் தேவியை ஆராதனை செய்தவர் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. இவர் பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்றும், சிலர் இவருடன் படித்த சீடர்களில் ஒருவரே மாதவர் என்றும் சொல்கின்றனர். என்றாலும் எவரும் இவருடைய தவத்தையும், சீலத்தையும், உறுதியையும், மறுக்கவில்லை. முதலில் காஞ்சி மடத்தின் மூலம் தெரிந்து கொண்ட வரலாற்றைப் பார்க்கலாம். மற்றவற்றில் சிறிதே மாற்றம் இருக்கும்.


வித்யாரண்யர் பற்றிய கதைகள் பலவிதமாய்க் கூறப் படுகின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தண குலத்தவர் எனவும், திருமணம் ஆனவர் எனவும் சிலர் கூற்று. வறுமையில் வாடிய அவர் காஞ்சி மடத்தில் வேத, வேதாந்தங்களைப் படித்து வந்ததாகவும் கூறுவார்கள். தன்னுடைய வறுமையைப் போக ஸ்ரீவித்யா வழிபாடு செய்து வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு இப்பிறவியில் செல்வம் கிட்டாது எனவும், அடுத்த பிறவியில் தான் செல்வம் கிட்டும் எனவும் அன்னை கூறியதாகவும், சொல்கின்றனர். ஆனால் செல்வம் வேண்டும் என ஆசைப்பட்ட அவரோ அன்னையைக் குறித்துத் தவம் இருந்தார். இந்தப் பிறவியிலேயே தனக்குச் செல்வம் வேண்டுமெனப் பிரார்த்தித்து வந்தார். தேவியோ முன் பிறவியில் வித்யாரண்யர் செய்த பெரும்பாவத்தினால் இப்பிறவியில் அவருக்குச் செல்வம் கிடைக்காது, தானம் என்பதே செய்ததில்லை முன் பிறவியில், அதன் பலனை அநுபவித்தே ஆகவேண்டும் என்கிறாள். கோபம் கொண்ட மாதவர் தான் வழிபட்டு வந்த ஸ்ரீசக்கரத்தை எரித்ததாயும், பாதி உடை எரிந்த நிலையில் அவர் முன் தேவி தோன்றியதாகவும் கூறுகின்றனர். அப்போதும் தேவி அடுத்த பிறவியில் தான் கேட்டது கிடைக்கும் எனக் கூறி மறைகின்றாள். ஆனால் வித்யாரண்யருக்கோ இந்தப் பிறவியிலேயே எப்படியேனும் வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல். என்ன செய்யலாம்????

நாட்டில் அப்போது ஒரு கஷ்டமான கால கட்டம் கடந்து கொண்டிருந்தது. முகலாயர் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி அதன் செல்வத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு முகலாயர் கூட்டம் கூட்டமாய்ப் படை எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதனாலும் கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல் சிருங்கேரியில் மடாதிபதிகள் எவரும் சரியாக இல்லாமலும் சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாய் க்ஷீணித்துக்கொண்டிருந்தது. காஞ்சி மடாதிபதியாக அப்போது இருந்தவர் வித்யாதீர்த்தேந்திர சரஸ்வதி என்பவர்,. அவரிடமே மாதவன் என்ற பூர்வாசிரமப் பெயர் பெற்றிருந்த வித்யாரண்யரும், சாயனர் என்பவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். சிருங்கேரி மடத்தின் நிலைமையையும், அந்நியர் படை எடுப்பையும் உணர்ந்த காஞ்சி மடாதிபதி மாதவனுக்கு வித்யாரண்யர் என்ற பெயரை அளித்து சிருங்கேரிக்கு அனுப்புகிறார். இங்கே வந்த வித்யாரண்யரோ தவம் செய்வதில் ஈடுபட்டுக் கலைமகளிடமும், அலைமகளிடமும் செல்வம் வேண்டிப் பிரார்த்திக்கிறார். சந்நியாசம் என்பது மறுபிறவிக்குச் சமானம் என்பதால் அலைமகளும் அவருக்கு அளப்பரிய செல்வத்தை அளித்துச் செல்கிறாள்.

திடீரென ஏற்பட்ட இத்தனை செல்வத்தையும் கண்ட வித்யாரண்யர் திகைத்துப் போய் என்ன செய்வது என்று யோசிக்கிறார். பின்னர் சநாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டவேண்டி இந்தச் செல்வத்தைப் பயன்படுத்த எண்ணிக் கலைமகளிடம் அநுமதி வேண்ட, அவளோ இப்போது அவசரம் வேண்டாம், இப்போது நிர்மாணிக்கும் அரசு வெகுகாலம் நிலைத்து நிற்காது. ஆகவே அடுத்த பிறவியில் முயலவும் என்கிறாள். ஆனால் வித்யாரண்யரோ பிடிவாதமாகத் தன் விருப்பம் நிறைவேறப் பிரார்த்தனையும் தவமும் செய்ய அவ்வாறே ஆசி அளித்து மறைகிறாள் கலைமகள். செல்வமும், வித்யையும் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் வித்யாரண்யரால் நாட்டை ஏற்படுத்தி ஆள முடியாதே? அவரோ துறவறம் மேற்கொண்டிருக்கிறாரே? என்ன செய்யலாம்? யாரிடம் போய்க் கேட்பது?

ஒரு நாள் அந்தக் காட்டில் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தான் ஒருவன். பார்க்க என்னமோ வாட்டம் சாட்டமாய்ப் போர்வீரன் போல் இருந்தான். ஆனால் மாடு மேய்க்கிறானே?

Friday, June 11, 2010

ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!


ராமாயணத்தின் கிஷ்கிந்தாவான இங்கே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஒரு குகையில் சீதையின் நகைகளைக் கண்டெடுத்த சுக்ரீவன் பாதுகாத்து வைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. இலங்கைக்குச் செல்லத் திட்டம் வகுக்கும்போது ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததாய்ச் சொல்லப் படும் குகையும் இங்கே உள்ளது. அருமையான குகை. குளிரூட்டப் பட்ட இடம் போல் இயற்கையின் குளுமை அங்கே தனி ஆட்சி செலுத்துகிறது. இரு பக்கமும் துங்க-பத்ரா ஓட நடுவே உள்ள குகையில் இருந்து எதிரே பார்த்தால் வாலி ஒளிந்திருந்ததாய்ச் சொல்லப் படும் குகை தென்படும். இங்கே இருந்து அம்பு போட்டால் விழும் தூரம் அது எனவும் ராமர் எங்கே இருந்து அம்பை எய்திருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எதிரே உள்ள வாலி குகைக்குச் செல்லக் கீழே இறங்கி ஆற்றைப் படகில் கடந்து செல்லவேண்டும். அந்தப் பக்கம் எதிரே தென்படும் மலைகளை ரிஷ்யமுகம் எனவும், மதங்க பர்வதம் என்ற பெயராலும் அழைக்கின்றனர். இப்போது சாம்ராஜ்யம் எப்படி யாரால் ஏற்படுத்தப் பட்டது என்பதைப் பார்ப்போமா?

முஹமது பின் துக்ளக்கின் ஆட்சி நடந்த காலம். ஹொய்சளர்களின் ஆட்சி நடந்த காலம். .மூன்றாம் வல்லாளனுடைய படையின் ஒரு பகுதிக்குத் தலைவனாக சங்கமன் என்னும் (குறும்பர் இனத்தைச் சேர்ந்தவன் எனச் சிலரால் கூறப்படுகிறது.) வீரன் இருந்தான். அப்போது நாட்டில் நடந்து கொண்டிருந்த அந்நியர் ஆதிக்கத்தை ஹொய்சளமும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது. அவ்வளவு ஏன் தத்தளித்துக்கொண்டிருந்தது என்றும் சொல்லலாம். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் அந்நியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு முன்னால் ஹொய்சள வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சங்கமனின் இரு வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களும் முழு உத்வேகத்துடன் தென்னாட்டை ஆக்கிரமிக்க வரும் அந்நியர்களை எதிர்த்தனர். தக்ஷிண பீடபூமியில் துக்ளக்கின் அதிகாரத்தை எவ்வாறேனும் குறைக்கவேண்டும் என்பதே அவ்விரு இளைஞர்களின் நோக்கம். ஆனால், அந்தோ! என்ன பரிதாபம்! இரு இளைஞர்களும் சிறை பிடிக்கப் பட்டனர்.

சிறை பிடிக்கப் பட்ட இளைஞர்கள் டில்லிக்குக் கொண்டு செல்லப் பட்டு கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஆனால் இளைஞர்களின் வீரத்தையும், விவேகத்தையும் கண்ட டில்லி சுல்தான் அவர்களைத் தென்னாட்டைக் காக்கவேண்டி தெற்கே அனுப்பினான். தென்னாட்டுக்கு வந்த இரு இளைஞர்களும் அப்போது சுல்தான்களை எதிர்த்துப் புரட்சி செய்து கொண்டிருந்த வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டனர். இளைஞர்கள் அதற்கு முன்னரே தங்கள் மதம் மாற்ற அடையாளங்களைத் துறந்திருந்தனர். எனினும் வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டதில் மனம் வெறுத்துக் காட்டில் சுற்றித் திரிந்தனர். ஒரு நாள் ஹரிஹரன் கனவில் ரவணசித்தர் தோன்றி மதங்க மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் வித்யாரண்யரின் உதவியையும் வழிகாட்டுதலையும் கேட்குமாறு கூறி மறைந்தார்.

Wednesday, June 9, 2010

ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!


ஹம்பி! அடிக்கடி கேட்டிருக்கும் ஒரு பெயர் இல்லையா?? சரித்திரப் பாடங்களிலும் படிச்சிருக்கோம். இதைப் பற்றி ஆராயப் போனால் ராமாயண காலத்துக்கே போகணும். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆம், ராமாயணத்தில் பம்பா நதிக்கரையில் கிஷ்கிந்தாவில் ராமர் சுக்ரீவனுடனான நட்பை ஏற்படுத்திக்கொண்டதாய்ப் படிச்சிருக்கோம். அந்தப் பம்பா நதி தான் இன்றைய துங்க பத்திரா நதி. கிஷ்கிந்தை என அழைக்கப் படும் இடமும் மலைகளுக்கு இடையே துங்க பத்திரை நதிக்கரையில் காணக்கிடைக்கும். அங்கே வாலியை வதம் செய்த இடமும், ராமர் கிஷ்கிந்தையின் மழைக்காலத்தில் தங்கி இருந்த குகையும் காணலாம். வாலி மறைந்துவிட்டான் என எண்ணி சுக்ரீவன் மூடி விட்டு வந்த குகையும் அங்கே உள்ளது. அந்தக் குகைக்கு நாங்க போகமுடியலை. ஆனாலும் ராமர் தங்கின குகையைப் பார்த்தோம். எந்த இடத்தில் இருந்து ராமர் அம்பை எய்திருப்பார் என்பதையும் பார்த்தோம். இப்போ ஹம்பியும், கிஷ்கிந்தையும் ஒன்றாகவே கருதப் படுகின்றன என்றே சொல்லலாம். ஹம்பியின் சரித்திர ஆதாரங்கள் கி.,மு. முதல் நூற்றாண்டுக்கும் முன்னால் செல்கிறது.

பெரும்பாலோர் இதை விஜயநகரத்துடன் சம்பந்தப்படுத்திக்கொண்டு இதுதான் விஜயநகரம் எனவும் நினைக்கின்றனர். அல்ல. விஜயநகரம் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. விஜயநகரத்தின் ஒரு சிறு கிராமமே ஹம்பி எனலாம். ஹம்பியில் விஜயநகரக் கட்டிடக் கலையின் சான்றுகளும், அதன் அழிவுகளும் காணக்கிடைப்பதால் இதை விஜயநகரம் என்றே நினைக்கின்றனர். ஏன் ஹம்பியைச் சுற்றி நகரை நிர்மாணித்தார்கள் என்றால் துங்கபத்திரை கொடுத்த பாதுகாப்பு எனலாம். ஒரு பக்கம் துங்கபத்திரை நதி பாதுகாத்தாள் எனில் மற்ற மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்கள் பாதுகாப்பு அளித்து இயற்கை அரணாகச் செயல்பட்டன. ஹம்பியின் தற்போதைய இடிபாடுகளிலும் ஒவ்வொரு பர்லாங்குக்கும் ஹிந்துக் கடவுளரின் எதேனும் உருவச் சிற்பங்களை இடிபாடுகளுடன், அல்லது சில சிற்பங்கள் அதிசயமாய்த் தப்பி இடிபாடு இல்லாமலும் காணப் படுகிறது. இதை ஐநாவின் உலகப் பாரம்பரியக் கலைச்சின்னங்களில் ஒன்றாகச் சேர்த்திருக்கின்றனர்.

இனி ஹம்பியைச் சுற்றித் தோன்றிய விஜயநகரத்தையும், அதன் சாம்ராஜ்யத்தையும் பற்றி அறிவோமா??

Tuesday, June 1, 2010

என்ன பேருனு சொல்றீங்களா இல்லையா???

பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.

இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.

நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.

கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???

இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D

ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!

Sunday, May 16, 2010

என்ன செய்யலாம்????

ரொம்ப நாளா இந்தப் பக்கத்திலே ஒண்ணும் எழுதலை, சித்தர் ஆசிரமம் போயிட்டு வந்தது எழுதணும் பாக்கி இருக்கு. ஆனால் அடுத்தடுத்து ஏதோ வேலைகள் வந்ததிலே கவனம் திசை மாறிப் போய் இங்கே வரவே இல்லை. இப்போ ஒரு கதை எழுதலாமானு யோசனை! முடியுமா???

Monday, January 18, 2010

தாம்பரத்தை நோக்கிய பயணத்தில் 2

தேனுபுரீஸ்வரர் கோயில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் அவனுக்கு முதல் மந்திரியாய் இருந்த அநிருத்த பிரமாதி ராயரால் கட்டப் பட்டது. ஹிஹிஹி, பொன்னியின் செல்வனில் வருவாரே?? நம்ம ஆழ்வார்க்கடியானோட குருவே தாங்க! கஜப்ருஷ்ட விமானம். கற்றளியாகவே கட்டப் பட்டிருக்கிறது. ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்துள்ளது. கபில முனிவர் சகரனின் மக்களைச் சபிச்ச கதை, அதனால் அவங்க எல்லாரும் எரிஞ்சு சாம்பலானது, அவங்களுக்கு முக்தி கொடுக்க பகீரதன் கங்கையைக் கொண்டுவந்ததுனு எல்லாம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். சகர புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடரவே பகீரதன் கங்கையைக் கொண்டு வர நேர்ந்தது. தனது கோபத்தினால் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு மனம் வருந்திய கபில முனிவர் தாமும் சிவ பூஜை செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ள நினைத்தார். இடக்கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு வலக்கையால் மலர்களைத் தூவி அர்ச்சிக்க, ஈசன் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு சொல்ல, மணலில் வைக்க மனமில்லை என மறுக்கிறார் கபிலர். லிங்கத்தைக் கையில் வைத்து வழிபட்ட முறை சரியல்ல என்று சொல்லி அவரைப் பசுவாகப்பிறக்கச் செய்தார். பசுவாகப் பிறந்த கபிலர் தன் கொம்புகளால் மணலில் புதையுண்டு கிடந்த லிங்கத்தைத் தேடி எடுத்து வழிபட்டதாகவும், அதன் பின்னரே கபிலருக்கு முக்தி கிடைத்ததாகவும் வரலாறு. பின்னர் இந்தப் பகுதியை ஆண்ட மன்னனால் கோயில் எழுப்பப் பட்டு அதன் பின்னர் அநிருத்த பிரமராயரால் கஜப்ருஷ்ட விமானத்தில் எழுந்தருளினார் தேனுபுரீஸ்வரர்.

கையில் வைத்து வழிபட்ட லிங்கம் என்பதாலோ என்னமோ மூலஸ்தானத்தில் லிங்கம் மிகச் சிறியது. ஒரு சாண் உயரம் தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. பீடம் சதுர வடிவம். சந்நிதிக்கு இடப்பக்கம் கபிலர் இடக்கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட வண்ணம் காட்சி கொடுக்கிறார். அதே தூணின் மற்றொரு பக்கம், பூவராஹர் காட்சி கொடுக்கிறார். மடியில் ஸ்ரீ, சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடை உடுத்தி அமர்ந்திருக்கிறாள். ஈசனை வழிபடும் பெருமாளையும் காணமுடியும். இங்கே முருகன் யானை மீது அமர்ந்த வண்ணம் இடக்கையில் சேவலை ஏந்திக் காட்சி கொடுக்கிறார். பைரவர் மனைவியுடன் காட்சி கொடுக்கிறார்.

முக்கியமான விசேஷம் இங்கே பின்னாட்களில் , பிற்காலச் சோழர் காலத்தில் சாளுக்கிய சம்பந்தத்தின் காரணமாய் சரப வழிபாடு ஆரம்பித்து இன்று வரை நடந்து வருவதே. இந்தக் கோயிலில் உள்ள சரபரை மிகவும் சிறப்பாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் தூண்களே சிற்பங்கள் நிறைந்தவையே. ஆனாலும் படம் எடுக்க அநுமதி இல்லை. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சரபர் சந்நிதியில் ராகு காலத்தில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். சரபருக்கு எனத் தனி உற்சவரும் இருப்பதாய்ச் சொன்னார்கள். பார்க்க முடியலை. கூட்டம் இருந்தது. கோயில் அமைப்பைப் பார்த்தாலே ஆயிரம் வருஷங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப் புரிகிறது. பிராகாரம் சுற்றும்போதே நம்ம ரங்க்ஸ் அட, கஜப்ருஷ்ட விமானம், பாருனு சொன்னார். அப்புறம் தான் கவனிச்சேன் விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைக்கப் பட்டிருக்கிறது. தக்ஷிணாமூர்த்தியும் மனைவியோடு காட்சி கொடுக்கிறார். தனி சந்நிதி தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் இருக்கிறார். துர்கையோ கையில் கிளி கொஞ்ச காட்சி கொடுத்தாள்.

தூணில் மட்டுமல்லாமல் தனியாகவும் வடுக பைரவர் இருக்கிறார். வடுக பைரவருக்கு திராட்சை மாலை போடுகிறார்கள். இங்கே காட்சி கொடுக்கும் பிரம்மாவிற்கு ஐந்து முகங்களைப் பார்க்க முடியும். சீதா, ராமரும் அனுமன் வணங்கும் கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி ஏதோ மண்டபம் போன்ற அமைப்பு இருப்பதாய்ச் சொல்கிறார்கள். அது பற்றி சரியாய்த் தெரியவில்லை. கிட்டே போய்ப் பார்க்கணும். முடியவில்லை. பலவிதமான சிற்ப அதிசயங்கள் நிறைந்துள்ள கோயில். கோயிலுக்குப் பெரிய குளம். குளக்கரையில் சுற்றி அனைவரும் வீடு கட்டிக் கொண்டு குடி இருப்பதைப் பார்த்தால் அங்கேயே போய் விடவேண்டும் போல் இருக்கு. அவ்வளவு அருமையான இயற்கைச் சூழல். எதிரே வெட்டவெளி. வயல்கள். அதைத் தாண்டினால், கிழக்குக் கடற்கரைச் சாலை, நீலாங்கரை செல்லும் சாலை, மஹாபலிபுரம் செல்லும் சாலை எல்லாம் வரும் என்றும், பாண்டிச்சேரி அங்கே இருந்து மிக அருகே இருப்பதாயும் சொன்னார்கள்.

நகரின் சந்தடியை விட்டுத் தள்ளி ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்தாலும் கோயிலுக்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டு தானிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாலையில் கூட்டம் நிறைய இருக்கும் என்றும் சொன்னார்கள். கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கோயிலின் படம் தேடுகிறேன். கிடைச்சால் போடுகிறேன். அங்கே இருந்து எதிரே இருக்கும் தெருவில் வலப்பக்கம் திரும்பி நடந்தால் பதினெட்டு சித்தர்கள் இருக்கும் பீடம். அது பற்றிய தகவல்கள், நாளை.

Sunday, January 17, 2010

தாம்பரம் நோக்கிய ஒரு பயணத்தில்!!


தாம்பரம் சேலையூருக்கு அருகே மானம்பாக்கம் என்னும் இடத்தில் இருக்கிற உறவினர் பல வருடங்களாக அவர் வீட்டுக்குக் கூப்பிட்டுட்டு இருந்தார். தம்பி அங்கே காம்ப் ரோடு பக்கத்திலே இருக்கும்போதே போகணும்னு நினைச்சுப் போகவே முடியலை. திடீர்னு இந்த மாதம் ஒரு ஞாயிறன்று போக முடிவு செய்தோம். நாங்க திடீர்னு முடிவு செய்தாலும் எங்க வீட்டிலே வேலை செய்யற பொண்ணு இந்தத் திடீர் முடிவுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டா. அவளோட வசதியையும் பார்த்துக்கணுமே. முதல்நாளில் இருந்தே அவளைத் தாஜா பண்ணி, (என்னங்க?? நல்ல ஃபில்டர் காபியாக் கொடுக்கச் சொல்றீங்களா??ஹிஹிஹி, தினமும் நல்ல காபிதான் கொடுக்கிறோம். அதுக்கெல்லாம் ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்க! )மறுநாள் காலம்பர ஆறு மணிக்கே வரச் சொன்னால் ஒருவழியா ஏழு மணிக்கு வந்து சேர்ந்தாள்.

ஏழு மணிக்கு வந்தால் போதும்தான், ஆனால் அதைச் சொன்னால் எட்டுமணிக்கு வந்து நிப்பாளே? அதான் ஆறு மணிக்குக் கிளம்பணும்னு சொல்லிடுவேன். ஏழு மணிக்குள்ளாவது வந்துடுவா. நாங்க அதுக்குள்ளே குளிச்சு, முடிச்சு, முதல்லே ஒரு காபி சாப்பிட்டு, அப்புறம் டிபனும் சாப்பிட்டு, இரண்டாம் காபி குடிச்சு, ஒரு சண்டையும் போட்டு முடிச்சுட்டு அலுத்துப் போய் உட்கார்ந்தோம். அவளும் வந்தாள். அவளோட எல்லாம் சண்டை போட முடியாது, நாமதான் போட்டுக்கணும். அவள் கிளம்ப அரை மணி ஆச்சு. அதுக்கப்புறமாக் கிளம்பி, ரயிலா, பஸ்ஸா? னு ஒரு நீண்ட விவாதம். முதல்நாளே பையர் தொலைபேசியில் ரயிலில் போங்கனு அதட்டி இருந்தார். அதனால் ரயில்தான்னு நான் நினைச்சுட்டு இருந்தா காலம்பர எழுந்துக்கும்போதே கால் தகராறு. இந்தக் காலோடயா போறதுனு மனசுக்குள்ளே நினைப்பு. ஆனால் அவங்க கிட்டே சொல்லியாச்சு வரோம்னு. மாத்தினால் நல்லா இருக்காது. நான் தத்தித் தத்தி குழந்தை போல் நடந்ததைப்பார்த்த நம்ம ரங்க்ஸ், கால் டாக்ஸியைக் கூப்பிடுவாரோனு ஒரு நப்பாசை. ஆனால் அவரோ அவரோட புஷ்பகத்தைத் தான் வெளியே எடுத்தார்.

கீழே இறக்கிட்டு, என்னையும் கீழே இறக்க வழியும் பார்த்து வைச்சார். (தெரு இன்னமும் அப்படியே தான் இருக்கு, ஆனாலும் விடாமல் போக நாங்க பழகிக்கிட்டோம்)ஒரு வழியா நானும் கீழே இறங்கினதும், இங்கே அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் போயிட்டு அங்கே இருந்து ரயிலில் போகலாம் என்று ஒரு அற்புதமான ஐடியாவைக் கொடுத்தார். தலையில் அடிச்சுக்கலாமானு நினைச்சேன். கஷ்டப்பட்டு அடக்கிண்டு, ஏன் அதுக்கு தாம்பரம் பஸ்ஸிலேயே போயிடலாமேனு சும்மா சொல்லி வைச்சேன். உடனே சரி, அதுவும் நல்ல ஐடியாதான்னு சொல்லிட்டார். கேட்டால் உனக்கு ஓவர் பிரிட்ஜ் எல்லாம் எப்படி ஏறமுடியும்? ரயிலிலே போனால்?? அதோட பீச் வண்டி கிடைக்கலைனா செண்டரலில் சுரங்கப்பாதையிலே வேறே போகணும், அவ்வளவு தூரம் நடப்பியானு கேள்வி. வேறே வழியே இல்லை. பேருந்துதான். இந்தத் தாம்பரம் பேருந்து கொஞ்சம் வசதியாவே இருக்கும். ஏசி பஸ்ஸும் இருக்கு. மனசை சமாதானம் செய்துட்டு வழக்கம்போல் அடுத்த தெரு முக்கு வரை நடந்து போய் வண்டியிலே ஏறி அம்பத்தூர் பேருந்து நிலையம் போயாச்சு.

தாம்பரம் பேருந்தும் கிடைச்சுப் போய்ச் சேர்ந்தாச்சு.நினைச்ச நேரத்துக்கு முன்னாலேயே போயாச்சு. உறவினர் கிட்டே பேருந்தில் ஏறியதுமே கைபேசி மூலம் தகவல் சொல்லிட்டதாலே, அவர் காம்ப்ரோடிலே வந்து காத்திருப்பதாகவும், அங்கே இருந்து ஸ்கந்தாஸ்ரமம் போயிட்டுப் பின்னர் வீட்டுக்குப் போகலாமென்றும் சொல்லி இருந்தார். அதனால் இறங்கினதும் மறுபடி உறவினரைக் கூப்பிட்டு, வந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு ஆட்டோ ஒண்ணு பிடிச்சு காம்ப்ரோடு போனோஓஓஓஓஓஓஓஒ,ம். அப்பாடி, எவ்வளவு தூரம் இருக்கு??? போயிட்டே இருக்கே? ஆனால் ஆட்டோக்காரர் குறைந்த பணத்துக்குத் தான் வந்திருக்கார். அம்பத்தூருக்கு இது தேவலை போலிருக்கே? அங்கே போனதும் உடனே உறவினரும் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் வந்து சேர்ந்தார். அங்கே இருந்து இன்னொரு ஆட்டோ பிடிச்சு ஸ்கந்தாசிரமம் போனோம்.

சென்னையின் ஆரவாரக்கூட்டத்திலிருந்து விலகி, சேலையூரின் கம்பர் தெருவில் இருக்கிறது ஸ்கந்தாஸ்ரமம். முற்றிலும் ஒதுக்குப் புறமான இடம். ராஜகீழ்ப்பாக்கம் என்று இந்தப் பகுதிக்குப் பெயர். ஸ்ரீ சாந்தாநந்த ஸ்வாமிகளால் ஏற்படுத்தப் பட்டது. முதல் முதல் ஸ்கந்தாஸ்ரமம் சேலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. சாந்தாநந்த ஸ்வாமிகள் அவதூதர்களின் பரம்பரையில் வந்தவர் என்கின்றனர். சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அறுபதுகளின் கடைசியில் சேலத்தில் முதலில் ஸ்கந்தாசிரமம் ஏற்படுத்திய பின்னர் சென்னையில் கட்டி இருக்கின்றனர். சென்னையிலும் 2000-ம் ஆண்டு வரையிலும் கூட இங்கே விநாயகர், முருகன், மற்றும் அம்பாள் போன்ற சில கடவுளர் விக்ரஹங்களே இடம் பெற்றிருக்கின்றன. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்துக் கடவுளருக்கும் சந்நிதி ஏற்படுத்தி இருக்கின்றனர். நட்ட நடுவில் மகாமேருவை வைத்துச் சுற்றி மற்ற சந்நிதிகள் இருக்குமாறு அமைப்பு செய்யப் பட்டுள்ளது.

உள்ளே நுழைந்ததும் கோபுர தரிசனம். பின்னர் முதலில் ஹேரம்ப கணபதி ஐந்து முகங்களோடு காட்சி கொடுக்கிறார். அதன் பின்னர் சித்திவிநாயகர். சித்தி விநாயகருக்குப் பின்னே அம்மை புவனேஸ்வரி மாதா. அருமையாக அலங்காரம் செய்திருந்தனர். ஏற்கெனவே வெளியே இருந்த பஞ்சமுக ஹேரம்ப விநாயகரையும், இன்னும் சிலரையும் எடுத்துவிட்டு உள்ளே வந்திருந்தோம். புவனேஸ்வரியைப் படம் எடுக்கும்போது ஸ்கந்தாஸ்ரம நிர்வாகிகள் வந்துட்டாங்க. காமிரா பிடுங்கப் பட்டது. படங்கள் அழிக்கப் பட்டன. அதோடு ஆன்மீகக் கண்காட்சியில் எடுத்த சிலபடங்களும் சேர்ந்து போயிடுச்சு. வெங்கையா நாயுடுவின் படமெல்லாம் அதான் போடமுடியலை. போகட்டும்.

புவனேஸ்வரிக்கு அப்புறம் அவளுக்கு இடப்புறமா சாந்தாநந்த ஸ்வாமிகள், பஞ்சமுக ஆஞ்சநேயர். அடுத்து சரபர். அதிலும் வீர சரபேஸ்வரர். இவரும் அருமையாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். சனைசரர் அருமையாகத் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கிறார். எல்லாருக்குமே பெரிசு பெரிசா அறைகள். அதனாலே எல்லாக் கடவுளரும் தனித்தனி அறையிலே தனித்தனியா வாசம். முருகன், குகன் ஸ்வாமிநாதனாய்க் காட்சி கொடுத்தான். வடநாடுகளில் இருப்பதுபோல் இங்கேயும் தத்தாத்ரேயருக்கு முக்கியத்துவம். முதலில் தூரக்கே இருந்து பார்த்தப்போ பிரம்மானு நினைச்சேன். கிட்டே போனதும் தத்தாத்ரேயர்னு தெரிஞ்சது. சரபருக்கு எதிரே ப்ரத்யங்கிரா தேவி. இவங்களுக்கு நட்டநடுவே மகா ஸ்ரீசக்ரமேரு. ஐயப்பன், அருகே எட்டுக்கைகளுடன் கூடிய துர்கை, பட்டீஸ்வரம் துர்கையைவிடப் பெரிய துர்கைனு நினைக்கிறேன்.

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய லிங்கம், அதிலே சஹஸ்ரலிங்கங்கள், எதிரே நந்திகேஸ்வரர், சக்கரத்தாழ்வார், அவருடன் இணைந்த நரசிம்மமூர்த்தி, என அனைத்து தெய்வங்களுமே குடி கொண்டிருந்தனர். முக்கியமாய் துர்கைக்கும் பிரத்யங்கிரா தேவிக்கும் இங்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கலியுகத்திற்கு அவசியமான பெண்தெய்வங்கள் இவர்களே என்று சொல்லப் படுகிறது. ஆஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள தேவதைகளுக்கு தினமும் யாகம் செய்து வரப்படுகிறது. யாகசாலைக்கு அடுத்து, பெரிய அன்னதானக் கூடம் இருக்கிறது. வெளியில் இருந்தும் சிலர் உணவு எடுத்து வந்து அங்கே உண்ணுவதைக் கண்டோம். அன்னதானம் தினமும் உண்டுனு சொன்னாங்க. அங்கே எல்லாத்தையும் பார்த்து முடிச்சுட்டு, வழக்கம் போல் நம்ம ரங்ஸுக்குனு ஒரு சாமி படமும், எனக்கு ஒரு புத்தகமும் வாங்கினோம். அப்புறம் நினைவா காமிராவைக் கேட்டு வாங்கிட்டோம். கொடுத்துட்டாலும் அவருக்குச் சந்தேகம். வாசல்வரை வந்து வழி அனுப்பிட்டே உள்ளே போனார். க்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே சேர்த்திருக்கிற படங்கள் அவங்களோட அதிகாரபூர்வமான தளத்திலிருந்து எடுத்ததே. நாம எடுத்த படம் இல்லை. எல்லாத்தையும் சுட்டுட்டாங்க! :( இதை எல்லாம் பத்துமணிக்குள்ளே பார்த்து முடிச்சாச்சு. வீட்டுக்குப் போறதுக்குள்ளே மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குப் போய் சரபரைப் பார்க்கணும்னு நம்ம ரங்க்ஸ் ஆசை. எனக்கு அது பக்கத்திலே இருக்கிற பதினெட்டு சித்தர்களைப் பார்க்கணும்னு. இரண்டும் அடுத்தடுத்தே இருக்கிறதாம். அங்கே போயிட்டு அங்கே இருந்து வீடு கிட்டேனு சொன்னார். சரினு வேறே ஒரு ஆட்டோவைப் பிடிச்சு, அங்கேயே காத்திருந்து வீட்டில் கொண்டுவிடும் வரை பேசிக் கொண்டு கிளம்பினோம் தேனுபுரீஸ்வரரைக்காண.