Saturday, December 24, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்---- அருள்நந்தி சிவம்

சந்தானக் குரவர் நால்வரில் அடுத்து அருள் நந்தி சிவம் என்பார் வருகிறார். இவர் மெய்கண்டாரின் சீடர் ஆவார். ஆனால் இவர்தான் மெய்கண்டாரின் பிறப்புக்கு முன்னர் அவர் பெற்றோருக்குக் கயிறு சாற்றிப் பார்த்தவர். இவர் கயிறு சாற்றிச் சொல்லியதன் பின்னரே மெய்கண்டார் பிறந்தார். ஆகவே இவர் மெய்கண்டாரை விட வயதில் மிகவும் மூத்தவர். எனினும் அவருக்குச் சீடர் ஆனார். இவரின் உண்மையான பெயர் எதுவென்று தெரியவில்லை. திருவெண்ணெய்நல்லூருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள திருத்துறையூர் என்னும் ஊரில் பிறந்தவர் எனத் தெரியவருகிறது. சிவாசாரியார் மரபினரான இவருக்கு ஆகமங்களில் மிகுந்த தேர்ச்சி உண்டு. அனைத்து ஆகமங்களிலும் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்ததால் சகலாகம பண்டிதர் என அழைக்கப்பட்டார். இவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறும் அளவுக்குச் சகல சாத்திரங்களையும் நன்கறிந்தவர். தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு வண்டியில் சாத்திரங்களைக் குறித்த ஏட்டுச் சுவடிகளை எடுத்துச் செல்வார்.

எல்லா ஏட்டுச்சுவடிகளையும் தம் கூடவே எடுத்துச் செல்லும் இவருக்குதாம் சொல்லி அதன் மூலம் பிறந்த சின்னஞ்சிறு குழந்தை இன்று மெய்கண்டார் என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலேயே குருவாகிப் பல சீடர்களோடு திகழ்வதைக் கேள்விப் பட்டார். திருவெண்ணெய் நல்லூர் சென்று அச்சுதகளப்பாளரையும் அவர் பெற்றெடுத்த குழந்தை மெய்கண்டாரையும் நேரில் கண்டு அவர்களின் அறிவையும், ஞானத்தையும் கண்டு ஆனந்திக்கவேண்டுமென்று எண்ணினார். திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்ற இவர் மெய்கண்டார் மாணவர் குழாத்துக்கு நடுவே ஆணவமலம் பற்றி உரை நிகழ்த்தக் கண்டார். உள்ளேயே செல்லாமல் வாயிலில் நின்றவாறு அதைக்கண்ட சகலாகம பண்டிதருக்குத் திடீரென ஆணவம் தலைக்கேறியது. நாம் சொல்லிப் பிறந்த இந்தக் குழந்தை, சின்னஞ்சிறு சிறுவன் இவனுக்கு அதற்குள் இத்தனை ஞானம், விவேகம் எல்லாம் வந்துவிட்டதா? ஆணவமலம் பற்றிப் பேசும் அளவுக்குத் தேர்ந்துவிட்டானா? ஆஹா, என்ன ஆணவம் இவனுக்கிருந்தால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு பாடம் நிகழ்த்துவான்! இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம், சகலாகம பண்டிதர் தாம் நின்ற இடத்தில் நின்றவாறே மெய்கண்டாரைப் பார்த்து, “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” என ஓங்கிய குரலில் கேட்டார்.

உரை நிகழ்த்திக்கொண்டிருந்த மெய்கண்டார் திரும்பினார். சகலாகம பண்டிதர் நின்றிருந்த கோலத்தைக் கண்டார். உடனேயே அவருக்கு விஷயம் விளங்கி விட்டது. வாயால் விடை கூறாமல் தம் கைகளைச் சுட்டி சகலாகம பண்டிதரையே காட்டினார். ஆணவமலத்தின் சொரூபம் சகலாகம பண்டிதரே என்பது புரியும்படிக்குத் தம் சுட்டு விரலால் பண்டிதரின் தலை முதல் கால்வரையும் விரலை ஆட்டிச் சுட்டிக் காட்டினார். சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிற்று. அவருக்குப் பரிபக்குவம் உண்டாகும் காலம் வந்துவிட்டது. உடனே மெய்கண்டாரின் வயதை நினையாமல் அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். மெய்கண்டாரும் அவரைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு அருள்நந்தி என்ற தீட்சாநாமத்தை அளித்தார். அன்றுமுதல் சகலாகம பண்டிதர் அருள் நந்தி ஆனார். ஏற்கெனவே இருந்த 48 மாணவர்களோடு அருள்நந்தி சிவத்தைச் சேர்த்து 49 ஆனது சீடர் குழாம். அருள்நந்தி நாளாவட்டத்தில் அருணந்தி என அழைக்கப்பட்டதோடு மெய்கண்டாரின் பிரதான சீடராகவும் ஆனார். மெய்கண்டாரை அடுத்து சந்தானகுரவரில் இரண்டாமவரும் ஆனார்.

வயதில் மூத்தவரானாலும் அருணந்தி சிவம் மெய்கண்டாருக்குப் பின்னர் ஆசாரியார் ஆனார். சைவ சித்தாந்தத்தை விளக்கிப் பாடம் சொல்லி வந்தார். மெய்கண்டாருடைய முதல் நூலான சிவஞான போதத்துக்குப் பாடம் சொல்லும் வழிநூலாக, “சிவஞான சித்தியார்”என்னும் நூலை எழுதினார். இது சாத்திர நூலாக மட்டுமின்றி, தோத்திர நூலாகவும், இலக்கிய நூலாகவும் இன்றளவும் விளங்கி வருகிறது.

காப்பு

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்,
உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்,
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே. 1

சிவஞான சித்தியாரின் காப்புச் செய்யுள் மேலே கொடுத்திருப்பது. இந்த சித்தியார் பரபக்க,, சுபக்கம் என்னும் இரு பாகங்களாகச் செய்யப்பட்டுள்ளது. இதிலே மேலே கொடுத்திருக்கும் செய்யுள் பரபக்கத்தில் காணப்படுவது. முதலில் வருவதும் பரபக்கமே. அதன் பின்னரே சுபக்கம். பரபக்கம் என்பது பிறர் பக்கத்தை அதாவது மற்ற சமயவாதிகளின் பக்கத்தை மறுத்து உரைப்பது. இது 301 பாடல்கள் கொண்ட தொகுதி. அடுத்து வரும் சுபக்கம் 328 பாடல்கள் கொண்டது. இந்த சுபக்கம் தம் பக்கமான சைவ சித்தாந்ததை விரித்துரைக்கிறது. இதிலே பாயிரம் மட்டும் 11 பாடல்கள் கொண்டதாய் விளங்குகிறது. இதிலே மெய்கண்டாருக்கு குரு துதியாக அருணந்தி சிவம் எழுதி இருக்கும் பாடல் குருவின் மேல் அவர் கொண்டிருக்கும் மதிப்பையும், மரியாதையும் எடுத்துக் கூறுவதோடு உள்ளத்தையும் தொடுகிறது.
மெய்கண்டதேவ நாயனார்

“பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்,
கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்,
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்,
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம். “
மேலும் இந்த நூலின் சிறப்பைப் பழைய செய்யுள் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழின் ஆறு சிறந்த நூல்கள் எனக் குறிப்பிடப் பட்டிருக்கும் அந்தச் செய்யுளில் சிவஞான சித்தியாரும் இடம் பெற்றிருக்கிறது.
வள்ளுவர் சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை—ஒன்றிய சீர்த்
தொண்டர்புராணம் தொகு சித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாம் தரம்.

திருவள்ளுவரின் திருக்குறள், மாணிக்கவாசகரின் திருவாசகம், தொல்காப்பியம், பரிமேலழகரின் திருக்குறள் உரை, திருத்தொண்டர் புராணம் என அழைக்கப்படும் பெரிய புராணம், சிவஞான சித்தியார் ஆகிய ஆறும் அவை. சித்தியார் தவிர இருபா இருபஃது என்னும் இன்னொரு நூலையும் எழுதிய அருணந்தி சிவம் மறைஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் திருத்துறையூரில் முக்தி அடைந்தார். இருபா இருபஃது நூலிலும் தம் ஆசிரியரை வாழ்த்திப் போற்றிப் பாடியுள்ளார் என்பதைக் கீழே உள்ள பாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

இவருடைய சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப் படுகிறது.

Friday, December 16, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! ஆறுமுக நாவலர் 2

தமிழ்நாட்டில் இருந்தது போல் ஆதீனங்கள், மடங்கள் ஆகிய எதுவும் இலங்கையில் இல்லை. மதமாற்றம் என்பது ஆளவந்தவர்களால் தீவிரமாக்கப்பட்டதொரு சூழ்நிலையில் நாவலர் தன்னந்தனியராக இருந்து அவரே ஓர் அமைப்பாக இயங்கினார். சைவசமய நூல்களைச் சரியானபடி போர்க்கலன்களாக இயங்கும்படி படைத்தார். அப்படி அவர் படைத்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை சைவ சமய தூஷணப் பரிகாரம், 1854-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் சுப்பிரபோதம் 1853 இலும் வெளிவந்து அனைவரின் பேராதரவைப் பெற்றது என்று சொல்வதை விட மாற்றுச் சமயத்தினரும் வியந்து பாராட்டத்தக்க அளவுக்குச் செல்வாக்கைப் பெற்றது என்பதே உண்மையாகும். கிறிஸ்தவப் பாதிரிமார்களே இவருடைய கிறிஸ்தவமதக் கண்டனங்களை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால் இவரின் எழுத்தாற்றலைக் குறித்து என்ன சொல்ல முடியும்!

அதன் பின்னர் சைவ சமய வழிபாட்டு முறைகளை விளக்கும் நூல்களைச் சிறிது சிறிதாக வெளியிட்டார். நித்ய கர்ம அனுட்டான விதி, ஆலய தரிசன விதி போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. யாழ்ப்பாணத்து நல்லூரின் சைவ சமயம் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் கிறிஸ்துவப் பாதிரிமார்களோ சுப்பிரமணியர் வழிபாட்டையும் நல்லூரில் இருந்த கந்தசாமிக் கோயிலையும் குறித்து இழிவாகப் பேசி வந்தனர். இதை முறியடிக்க நாவலர் சுப்பிரமணிய போதம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். கந்தபுராணத்துக்கு இவர் எழுதிய உரையும் வெளிவந்தது. இவருடைய கந்தபுராணச் சொற்பொழிவுகளும் பெரும் ஆதரவைப் பெற்றன. உயிர்ப்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடுகளை முற்றிலும் எதிர்த்தார். ஆகமவழியான கோயில்களில் முறைப்படி ஆகமம் கற்றவர்களே வழிபாடுகள் செய்யத் தக்கவர்கள் எனக் கூறினார். தேவதாசிகள் முறை, வாணவேடிக்கைகள், கோயில்களில் ஊழியர்கள் செய்யும் அட்டூழியம் போன்றவற்றையும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.

இவர் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். சென்னையைத் தம் சென்மபூமியிற் சிறந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் சைவத் தொண்டுகள் செய்யவெனச் சென்ற நாவலர் அங்கே ஓர் பாடசாலையையும் ஆரம்பித்தார். 1864-ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாசாலை என்னும் பெயரில் தொடங்கினார். சென்னை தங்கசாலையில் வித்தியாநுபாலன யந்திரசாலையும் நிறுவிப் புத்தகங்களை அச்சிட்டார். தமிழ்ப்பணி வேறு, சைவ சமயப்பணி வேறு என வலியுறுத்தி வந்தார். சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படிப்பறிவில்லா ஜனங்களே சைவ சமயத்தைத் தமிழ்ச்சமயம் எனவும், சைவக்கோயிலைத் தமிழ்க்கோயில் எனவும் கூறுவதாகவும் தமிழ் என்பது சமயம் அல்ல எனவும் அது ஒரு மொழி எனவும் தெளிவுபடக் கூறினார். சிதம்பரத்தில் இவர் தங்கி இருந்த சமயம் வள்ளலார் வடலூரில் பிரபலம் அடைந்திருந்தார். சிதம்பரம் கோயிலில் வள்ளலாரால் பாடப்பட்ட திருஅருட்பா நாவலருக்கு உகந்ததாக இல்லை. அதைத் தீவிரமாக எதிர்த்தார்.

1868-ஆம் ஆண்டு சென்னையிலும், சிதம்பரத்திலும் மாறி மாறி அருட்பா மறுப்பு குறித்துச் சொற்பொழிவுகள் இயற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் போலி அருட்பா மறுப்பு என்னும் நூலும் வெளிவந்தது. நாவலரின் சமய வாழ்க்கையில் இது சற்றுக் கசப்பான நிகழ்வாகும். வள்ளலாரையும், சிதம்பரம் கோயிலின் தீக்ஷிதர் ஒருவரையும் எதிர்த்துக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நாவலரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதம்பரம் சபா நடேச தீக்ஷிதருக்கு 50ரூ அபராதமும் கட்டத்தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனையும் கொடுத்தார். வள்ளலாரின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமின்மையாலும், வள்ளலார் தாம் நாவலரை எதுவும் சொல்லவில்லை என்றதாலும் தள்ளுபடி செய்யப்பட்டது. என்றாலும் இவ்வழக்கின் மூலச்சான்றுகள் சரிவரக் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளை ஒட்டிப் பலரும் எழுதி இருப்பவையே கிடைக்கின்றன.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி ஒரு பிற்போக்குவதி எனப்பட்டார். வர்ணாசிரமத்தை ஆதரித்தும், தீண்டாமைக் கருத்துக்களை ஆதரித்தும் தம் சைவ வினா-விடை புத்தகத்தில் எழுதி உள்ளார். இவ்வளவு அருந்தொண்டாற்றிய நாவலரின் கடைசிப் பிரசங்கம் 1879-ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருநக்ஷத்திரமான ஆடி சுவாதி தினத்தன்று நடந்தது. வண்ணார்பண்ணையில் நடந்த அந்தப் பிரசங்கத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் குன்றினார் நாவலர். 1879-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் மிகவும் உடல்நலம் குன்றி குளிக்கக் கூட முடியாமல் இருந்தார் நாவலர். வேறொருவரைக் கொண்டு அன்றாட வழிபாடுகளைச் செய்ய வைத்தார். கார்த்திகை 21-ஆம் நாள் வெள்ளியன்று இரவு அடியார்களை தேவாரம், திருவாசகம், போன்றவற்றை ஓதச் சொல்லிக் கேட்டவண்ணம் கங்காதீர்த்தம் அருந்தி, விபூதியைத் தரித்துக்கொண்டு, உருத்திராக்ஷ மாலையையும் அணிந்து கொண்டு பஞ்சாக்ஷரத்தை நினைத்தவண்ணம் தலைமேல் கைகளைக்கூப்பிய வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

ஆறுமுக நாவலருக்கெனத் தனி இணைய தளம் உள்ளது. அவரின் சிலையும், மண்டபமும் யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.

Sunday, December 11, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! ஆறுமுக நாவலர் 1

நாவலர் என அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1822-ஆம் ஆண்டு சைவ வேளாளக் குடும்பத்தில் கந்தர் என்னும் பரம்பரைச் சிவபக்திச் செல்வருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்த இவர் வடமொழியும், தமிழும் படித்தார். இரண்டிலும் நல்ல புலமை பெற்று விளங்கினார். நல்லூரில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் கற்று அதிலும் புலமை பெற்றார். படிப்பு முடிந்ததும் ஜஃப்னாவில் உள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். கூடவே பள்ளியின் நிறுவனரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கிங் ஜேம்ஸ் பைபிளையும் மற்றக் கிறிஸ்துவ இலக்கியங்களையும் மொழி பெயர்க்கும் வேலையைச் செய்து வந்தார். 1841-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரையிலும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டார். அதிலும் அப்போது கிறிஸ்துவ மிஷனரிகளின் பிரசாரங்களால் மக்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது. மொழிபெயர்ப்புக்காக பெர்சிவல் பாதிரியுடன் சென்னைக்கு வந்து பைபிளை அச்சிட்டுக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார்.

வேதம், ஆகமம், புராணங்கள் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற நாவலர் சைவர்களுக்குத் தங்கள் சமயம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் இருப்பதையும், சரியானதொரு வழிகாட்டி அமையவில்லை என்பதையும் கண்டார். அதோடு வாத, விவாதங்களிலே பங்கு பெற்றுத் தம் சமயத்தைக் குறித்து ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்கும் இயலாமல் இருப்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே சைவ சமயத்திற்குத் தொண்டாற்றுவதையே தம் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொள்ள நினைத்து வெஸ்லி மிஷன் பள்ளியின் நிறுவனர் அதிகச் சம்பளத்தோடு தந்த வேலையையும் மறுத்துப் பள்ளி ஆசிரியர் வேலையையே உதறி எறிந்தார். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நிச்சயித்துக்கொண்டு தம் குடும்பத்தையும் துறந்து சொத்து சுகங்களையும் துறந்தார். தம் நான்கு சகோதரர்களிடமும் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அன்றிலிருந்து இறுதி வரையிலும் அவருடைய கொள்கைகளில் உறுதியும், உண்மைத்தன்மையும் இருப்பதாய்க் கருதும் நபர்களிடமிருந்து மட்டுமே தேவையான உதவிகளைப் பெற்றார். கோயில்களுக்குச் சென்று தேவார, திருவாசகங்களைப் பாடி மக்கள் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டினார். இவருடைய முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில் நடந்தது. 1847-ஆம் ஆண்டு நடந்த இதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் இவ்வாறு சைவ சமயத்தைக் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் பேசிச் சொற்பொழிவாற்றி வந்தார். யாழ்ப்பாணத்து சைவ மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். பைபிளின் மொழிபெயர்ப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததால் அதிலுள்ள கேள்விகளுக்கும் சரியான மறுமொழியை இவரால் தர முடிந்தது. சொல்லப் போனால் பைபிளின் மூலம் நடந்து வந்த பிரச்சாரத்திற்கு ஒரு மாற்றாகவே இவருடைய பிரசாரம் அமைந்தது.

1848-ஆம் ஆண்டு பெர்சிவல் எனப்படும் வெஸ்லி பள்ளித் தலைமை ஆசிரியரைப் பிரிந்து தம்முடைய சொந்தப் பள்ளியை நிர்மாணித்தார். வண்ணார்பண்ணையில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிக்கு சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவரை மத்திய கல்லூரியில் 3 பவுன் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியராக இருந்ததையும் தூக்கி எறிந்து முழுநேர சமயப்பணியைத் துவக்கினார். பள்ளிப்பிள்ளைகளுக்குத் தேவையான பாடநூல்கள் அச்சிட யந்திரம்தேவையாக இருந்தது. ஆகவே 1949-ஆம் வருடம் மீண்டும் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார். வந்த சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமயச் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார். அங்கேதான் அவருக்கு நாவலர் பட்டமும் வழங்கப்பட்டது. சிலகாலம் இந்தியாவில் சென்னையில் தங்கி சூடாமணி நிகண்டுரையும், செளந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதிப்பித்தார். பின்னர் யாழ்ப்பாணம் திரும்பினார். தமது இல்லத்திலேயே வித்தியா அனுபாலன யந்திரசாலை என்னும் பெயரில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். மாணாக்கர்கள் பயன்பெறும் விதத்தில் பாலபாடம், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, போன்றவைகளும், சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படையுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார்.

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.”

மேலும் தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

Wednesday, December 7, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மெய்கண்டார் 2

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது. அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார். ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார். உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார்.

சிவஞான உபதேசமும் செய்வித்தார். பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும். அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷாதிருநாமமாக மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார். அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார். சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார். இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற ஒருநாள் அவரைக்காணச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர். அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்; சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய்நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.

Wednesday, November 30, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மெய்கண்டார் 1

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள். சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள். ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள். சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன. சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும். அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். இவர்களில் உமாபதி சிவாசாரியார் பற்றி நாம் இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம். இப்போது மெய்கண்டார் பற்றிப் பார்க்கலாம், காலம் கி.பி. 1223

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர். சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை. ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.” என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார். ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை; ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.” என்று அருளுகிறார். அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது. குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று. குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

Sunday, November 27, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! தாயுமானவர் 2


குருவால் ஆட்கொள்ளப்பட்ட தாயுமானவர் ஆன்ம சாதனங்களில் வெகு விரைவில் முன்னேற்றம் அடைந்தார். ஆச்சாரியருக்கு பக்திபூர்வமாகப் பணிவிடைகள் புரிந்தார். குருவிடம் மாறாத பக்தியும், பாசமும் வைத்திருந்த தாயுமானவருக்குச் சில காலம் குருவைப் பிரிய நேரிட்டது. பிரிந்திருக்கும் காலத்தில் மனம்குழம்பித் தவித்தார் தாயுமானவர். குருவோ இதற்கெனக்கவலைப்பட வேண்டாம் எனவும், சீடன் தனது கர்மாக்களின் பெரும்பகுதியைப் பூர்த்தி பண்ண வேண்டியே இப்பிரிவு எனவும், அதன் பின்னர் அமையப்போகும் குரு-சீடன் உறவு மிக மிகச் சிறப்பாக அமையும் எனவும் உறுதிமொழி கூறியதோடு அல்லாமல் சீடனுக்குப் பிரியும் வேளையி, "சும்மா இரு" எனும் மந்திர உபதேசம் செய்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து அதையே பீஜ மந்திரமாய்க் கொண்ட தாயுமானவ சுவாமிகள் தன் அனைத்துப் பாடல்களிலும் இந்த உபதேச மொழியை முக்கியக் கருத்தாக அமைத்திருப்பது தாயுமானவரின் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுவோர்க்கு நன்கு விளங்கும்.


இவ்வுலகத்தின் பந்த பாசங்களில் அகப்பாடமல் இருக்க வேண்டி எந்நாளும் இறைவனைப் பிரார்த்தித்துப் பற்றற்ற வாழ்க்கை வாழ விரும்பிய தாயுமானவரை அவரின் பெற்றோர்கள் திருமணக் கோலத்தில் காண விரும்பினார்கள். தாய், தந்தையரின் விருப்பத்தைத் தட்ட முடியாத தாயுமானவர் மட்டுவார் குழலில் என்னும் பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இல்லறம் மேற்கொண்ட பிறகு அதற்குரிய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதே தர்மம் எனப் புரிந்த தாயுமானவர் மனைவியோடு அறவழியில் இல்லறத்தை நடத்தி கனகசபாபதி என்னும் பெயருடைய ஆண் மகவு ஒன்றையும் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்திலேயே தாயுமானவரின் மனைவி மட்டுவார் குழலி அம்மை காலமானார். தாயுமானவர் வேறொரு திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானவரின் தமையனார் சிவசிதம்பரமும், அவரின் மனைவியும் ஏற்றுக் கொண்டனர். அத்தோடு ஆத்மசாதனைக்குத் தடை என நினைத்த தாயுமானவரின் இல்லற வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது.



இதனிடையே தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்ப பிள்ளையும் மரணமடையவே திருச்சி அரசு மீகாமன் இல்லாத கப்பல் போலத் திண்டாடியது. அரசர் தாயுமானவரே இந்த மாபெரும் பொறுப்பை ஏற்க வல்லவர் என்றுணர்ந்து அவரை அழைத்துத் தகப்பனாரின் பதவியில் தாயுமானவர் அமர்ந்து அரசருக்கும், அரசாட்சிக்கும் உதவும்படி கேட்டுக்கொண்டார். தந்தை மூலம் இந்த விஷயங்களில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்த தாயுமானவர் அரசரின் சொல்லைத் தட்ட முடியாமல் பொறுப்பை ஏற்றார். வெகு விரைவில் இதில் திறமை பெற்றவராகித் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்ற ஆரம்பித்தார். நாளடைவில் மன்னனும் மடிய அவன் மனைவியான ராணி மீனாக்ஷி பட்டத்தை ஏற்றாள். ராணி மீனாக்ஷிக்குத் தாயுமானவரின் இளமையும், தேஜஸும் கண்டு மனம் பேதலித்தது. ஆனாலும் வெளிப்படையாகச் சொல்லாமல் தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள். ஒருநாள் அரசாங்க வேலைகளைப் பனை ஓலைகளில் குறிப்பெடுத்து வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்த தாயுமானவர் திடீரென முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர் அதைக் கசக்கித் தூர எறிந்தார். இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க, அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் , திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம் அணைத்ததாகவும் கூறினார். இதை நம்பாத ராணி மீனாக்ஷி கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.

உண்மையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது குறித்துத் தெரிந்ததும் ராணிக்கு இவர் எவ்வளவு பெரிய மஹான் என்பது புரிந்தது. தாயுமானவருக்கும் அரசல் புரசலாக ராணியின் தகாத ஆசை தெரிந்திருந்ததால் தான் பதவியை விட்டு விலகுவதே சரி என்றும், தீர்மானித்து விட்டார். உடனே அரசியிடம் தன் மனம் இவ்வுலக வாழ்வை நாடவில்லை என்றும், தன் போக்கில் செல்லத் தன்னை அனுமதிக்குமாறும் கூறி அரசுப் பதவியை விட்டு விலகிவிட்டார். வெளியேறி வந்த தாயுமானவருக்கு மீண்டும் தம் குருவின் தரிசனமும் கிட்டி அவர் மூலம் சந்நியாச ஆசிரமமும், உபதேசமும் கிடைக்கப் பெற்றது. அன்று முதல் கோவணாண்டியாகவே இருந்து கொண்டு அதே திருச்சியில் வசித்து வந்தார். அவர் இருந்த உத்தியோகத்தின் மேன்மையையும் செல்வாக்கையும், செல்வநிலைமையையும், இப்போது இருக்கும் நிலையையும் பார்த்த அன்பர் ஒருவர் அவருக்குக் குளிர்காலத்திற்குப் போர்த்திக்கொள்ளவென ஒரு அழகான காஷ்மீரப் பட்டுச் சால்வையைப் பரிசளிக்க அவரோ அதை உடுத்த உடை இல்லாதிருந்த ஒரு பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டார். தாம் கொடுத்த சால்வை எங்கே எனக் கேட்ட அன்பரிடம், அகிலாண்டேஸ்வரிக்கே கொடுத்துவிட்டதாய்ப் பதிலளித்தார். இப்படிப் பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் இறையைப் பார்த்த தாயுமானவர், யாத்திரையாகக் கிளம்பி ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் காலையில் ராமநாதபுரத்திற்கு வெளியே லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார். இவரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும்.

Friday, November 25, 2011

மெரினாவுக்கு ஈடு, இணை உண்டா?

கடற்கரையில் லைட் ஹவுஸ்


பசுமையோடு காட்சி அளிக்கும் கடற்கரையின் ஒரு தோற்றம்.



ஹூஸ்டன் நகரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறு கடற்கரைப் பிரதேசம் ஒரு சுற்றுலாத்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பல கடற்கரை விளையாட்டுகள், காட்சிகள், பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள், கடல் நீரைப் பார்த்த வண்ணம் அமர்ந்து உணவு உண்ணும்படியான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என உள்ளன. குழந்தைகள் விளையாடப் பலவிதமான விளையாட்டுகளும் காணப்படுகின்றன. குட்டி ரயிலில் அந்தக் கடற்கரைப் பிரதேசத்தைச் சுற்றி வரலாம். ரோலர் கோஸ்டரில் ஏறிச் செல்லலாம். இன்வெர்டர் என அழைக்கப்படும் லிஃப்ட் போன்ற தூக்கும் வசதி கொண்ட ஒரு பெட்டியில் அமர்ந்து பெல்டினால் நம்மை இறுகக் கட்டிக்கொண்டால் அது நம்மை மேலும் கீழும் தூக்கி விளையாட்டுக் காட்டிவிட்டுப் பின்னர் தலைகீழாகவும் நம்மைத் தூக்கும். அதன் பின்னர் கிட்டத்தட்ட 150 அடி உயரத்தில் காணப்படும் கம்பத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று நேரம் வைத்திருந்துவிட்டுப் பின்னர் அதிவேகமாய்க் கீழே இறங்கும்.
சிலருக்கு இதைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஆகவே மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே விளையாடலாம். இதை போர்ட் வாக் டவர் ட்ராப் ஜோன் எனக் கூறுகின்றனர்.


இதைத் தவிரவும் குழந்தைகள் ஆடுகுதிரையில் விளையாடலாம். இந்தக் குதிரை விளையாட்டு இரு தளங்களாக அமைக்கப்படுகிறது. மேல் தளத்தின் குதிரைகள் அருகிலும், கீழ்த்தளத்தின் குதிரைகள் அருகேயும் ஒவ்வொரு காப்பாளர் அருகே நின்று கொண்டே குதிரைகள் இயக்கப்படுகின்றன. இந்த விளையாட்டு வைப் அவுட் என அழைக்கப்படுகிறது. இதைத் தவிரக் குடைராட்டினமும் உள்ளது. உயரம் மிக அதிகமாகவும் உள்ளது. 65 அடி உயரத்தில் சுற்றுவதாய்க்கூறுகின்றனர். இதை விடவும் உயரத்தில் ஏவியேட்டர் என்னும் சக்கரச் சுற்றும், பலூன் வீல் எனப்படும் கூண்டு அமைக்கப்பட்ட குடைராட்டினமும் குழந்தைகள் கண்ணையும், கருத்தையும் கவரும்.
இன்னமும் பாட்டில்களைக்குறி தவறாமல் அடித்துப் பரிசாக பொம்மைகள் மற்றும் பல பொருட்களைத் தரும் கடைகள், ஐஸ்க்ரீம் ஸ்டால்கள், காஃபிக் கடைகள், துணிக்கடைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், செயற்கை மணிமாலைகள், முத்துமாலைகள் விற்கும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளும் காணப்படுகின்றன. என்றாலும் சுற்றுவட்டாரம் சுத்தமாய்ப் பராமரிக்கப்படுகிறது. கடைகளின் பக்கவாட்டுத் தோற்றம்.


வேகமாய்ச் செல்லும் படகுகளிலும் அரைமணிநேரப் பிரயாணம் செய்யலாம். நாற்பது மைல் வேகத்தில் செல்லும் படகுகளின் பயணம் உற்சாகம் கொடுக்கும்.

எல்லாவற்றுக்கும் மேல் கடற்கரை சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. அத்தனை மக்கள், குழந்தைகளோடு வந்து விளையாட்டுகள் விளையாடி, உணவு உண்டு, என அத்தனையும் செய்த போதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளிலேயே குழந்தைகளைக் கூடக் குப்பைகளைப் போடும்படி பழக்கி இருக்கின்றனர். உணவுப் பொருட்களின் மிச்சமோ, துணிகளோ, ப்ளாஸ்டிக் கவர்களோ, பேப்பர் குப்பைகளோ காண முடியாது. அதோடு எங்கே சென்றாலும் வசதியான கழிப்பறைகளும், அவைகளின் சுத்தமான பராமரிப்பும், மக்கள் அவற்றைச் சுத்தமும், சுகாதாரமும் நீடித்து இருக்குமாறு பயன்படுத்துவதும், சிறு குழந்தைகளுக்குப் பொதுக்குழாயில் கைகளைக் கழுவ வேண்டி சின்னதாய் வடிவமைத்து ஆங்காங்கே காணப்படும் ஸ்டூல்களும், சின்னஞ்சிறு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துக்குழந்தைகளுக்கும், டயப்பர் மாற்றத் தனி இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை.

Thursday, November 17, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! தாயுமானவர்

தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார். வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது. அப்போது நாயக்கர் ஆட்சிக் காலம். திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார். கேடிலியப்ப பிள்ளை மன்னரை முறைப்படி வரவேற்று மரியாதைகள் எல்லாம் செய்து தரிசனமும் செய்து வைத்தார். கோவில் வழிபாட்டில் இருந்த நியமங்களையும், கோயிலின் சுத்தத்தையும், ஒழுங்கான முறையான நிர்வாகத்தையும் கவனித்த அரசர் நிர்வாகியான கேடிலியப்ப பிள்ளையின் கல்வித்தேர்ச்சியையும் கவனித்துக்கொண்டார். இத்தனை திறமை வாய்ந்த அவர் இருக்குமிடம் இதுவல்ல என முடிவு செய்த அரசர் அவரைத் திருச்சி அழைத்தார்.
கேடிலியப்ப பிள்ளையைத் திருச்சிக்கு வந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள ஆணையிட்டார். கோயிலின் நிர்வாகத்தைத் தக்க நபரிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். கேடிலியப்ப பிள்ளைக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. கோயிலைத் தக்க மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்குச் செல்லத் தீர்மானித்தார். கேடிலியப்ப பிள்ளைக்கும் அவர் மனைவியான கெஜவல்லி அம்மைக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான். ஆனால் கேடிலியப்ப பிள்ளையவர்களின் அண்ணாவான வேதாரண்யம் பிள்ளைக்கு மகப்பேறு வாய்க்காததால் சிவசிதம்பரம் என்னும் பெயர் கொண்ட தம் மகனைத் தம் அண்ணனுக்கே முழு மனதோடு சுவீகாரம் செய்து கொடுத்திருந்தார் கேடிலியப்ப பிள்ளை. பின்னரே திருச்சிக்கு மனைவியோடு வந்தார்.


அங்கே மலைக்கோட்டையில் வீற்றிருந்த தாயுமானவரைத் தினம் தினம் தரிசனம் செய்து வந்தார். அவர் மனைவியும் அவருடன் செல்வார். ஈசன் தாயுமானவராகச் செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத் தாயும் ஆன கதையை நினைந்து நினைந்து மனம் நெகிழ்வார். ஏற்கெனவே பிறந்த பிள்ளையை அண்ணனுக்குக்கொடுத்துவிட்டதால் தனக்கு இன்னொரு மகன் பிறக்க வேண்டும் என ஈசனிடம் முழு மனதோடு வேண்டினார். சிறிது காலத்தில் அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். தாயுமானவர் அருளால் பிறந்த அந்தப்பிள்ளைக்குத் தாயுமானவர் என்ற பெயரையே பெற்றோர் சூட்டினார்கள். குழந்தை பிறந்த உடனேயே அதன் அங்க அடையாளங்களில் நிறைநிலைகள் பல தென்பட்டன. அதோடு குழந்தை ஒரு ஞானியாக, யோகியாக பர நாட்டத்தில் மேன்மை அடைவான் என ஜோதிடரும் கணித்துச் சொல்லவே பெற்றோர் மனம் மகிழ்ந்தனர். குழந்தைக்கு வயது ஐந்து ஆயிற்று. பெற்றோர்கள் குழந்தைக்கு வித்யாரம்பம் பண்ணி வைத்தார்கள்.


திருச்சியில் சிறப்பான பாடசாலை ஒன்றில் கல்வி கற்றார் தாயுமானவர். தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் தாயுமானவர் நிபுணராக விளங்கினார். சைவத்தில் அதிகம் ஈடுபாடுடன் தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள், அருணகிரியாருடைய திருப்புகழ் போன்றவற்றையும் நன்கு கற்று வந்தார். தினம் மலைக்கோட்டையில் மலை ஏறித் தாயுமானவன் ஆன சிவனைத் தரிசனம் செய்துவிட்டுப் பின்னர் திருவானைக்கா சென்று அகிலாண்ட நாயகியை வழிபடுவதைத் தன் நித்திய கர்மமாக வைத்திருந்தார் தாயுமானவர். ஒருநாள் மலைக்கோட்டை தரிசனம் முடிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தவரை வழியில் ஒரு முனிவர் கண்டார். அவரைப் பாரத்ததுமே உடலும், உள்ளமும் அவர் பால் ஈர்த்தது தாயுமானவருக்கு. அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார். அதிகம் பேசாமல் மெளனமாக இருந்ததால் மெளன குரு என அழைக்கப்பட்டு வந்தார் அந்த முனிவர். அவருடைய வாயினின்று எப்போதேனும் அபூர்வமாகவே சொற்கள் வெளிவரும். மேலும் அவர் திருமூலர் மரபில் வந்தவராகவும் கூறுகின்றனர். அதை ஒட்டியே தாயுமானவர் தம் பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது. தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆட்பட்டார்.

Thursday, September 29, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளல் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையினுள் தாம் யோகத்தில் அமரும் திருவறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு திருவிளக்கின் முன் அமர்ந்து கண்மூடி யோகத்திலாழ்ந்தார். பின்னர் தீபத்தை நோக்கிக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் இறைவனால் தமக்குக் கிட்டிய பலன்களை எல்லாம் நினைந்து நினைந்து உருகினார். தன் பிள்ளையாய்த் தம்மை ஏற்றுக்கொண்ட இறைவனின் பெருங்கருணையை நினைந்து மகிழ்ந்தார். அடிமுடி காட்டியும், சூட்டியும், இறைவனின் திருக்கரத்தைத் தம் தலைமீது வைத்து தீக்ஷை அருளியதையும், நயன, ஸ்பரிச, வாக் தீக்ஷைகள் அளித்ததையும் எண்ணி எண்ணி அதற்காகத் தாம் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்தாலும் போதாது என எண்ணினார். ஆனால் இறைவனோ சற்றும் தயங்காது தம் உடல் பொருள் ஆவியைத் தமக்குக் கொடுத்து சுத்த, பிரணவ, ஞான தேகங்களை அளித்ததை எண்ணி வியந்தார். கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி போன்ற மூவகைச் சித்திகளோடு எல்லாம் வல்ல சித்தியையும் அருளிய பெருமான் தமக்கு ஐந்தொழில் ஆற்றலையும் கொடுத்ததையும் எண்ணி, மரணமில்லாப் பெருவாழ்வில் வைத்தருளியதை நினைந்து மனமுருகப் பாடினார்.



“காற்றாலே புவியாலே ககனமதனாலே

கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே

கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தை அருட்பெரும்சோதி இறைவனைச் சார்வீரே.”



இதைப் பாடிய வண்ணமே மீண்டும் யோகநிலையில் ஆழ்ந்தார். சன்மார்க்கக் கொடி கட்டிய ஒருமாதத்தில் ஒரு நாள் முன்னிரவு. தம் திருவறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கைக் கூடத்தில் வைத்துவிட்டு கூடியிருந்தோரைப் பார்த்து, “இந்த விளக்கை அருட்பெரும்சோதி ஆண்டவரின் நினைவாக இங்கே வைத்துள்ளேன். இதைத் தடைபடாது வழிபட்டு வாருங்கள். ஆண்டவர் இப்போது தீபமுன்னிலையில் விளங்குகிறார். உங்கள் காலத்தை வீணாகக் கழிக்காதீர். “நினைந்து, நினைந்து” எனத் தொடங்கும் இருபத்தெட்டுப் பாடல்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்த தீபத்தில் செய்துவாருங்கள். நான் இப்போது இந்த உடம்பில் உள்ளேன். இனி, எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன். இப்போது நான் எனது அறைக்குள்ளே சென்று கதவைச் சார்த்திக்கொள்வேன்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்று கதவைச் சார்த்தினார். கூடியிருந்தோர் அனைவரும் செய்வதறியாது திகைத்தாலும் வள்ளலார் கூறிச் சென்றபடி தீபத்தை ஆராதித்துப் பாடல்களைப் பாடி வந்தனர்.



பெருமானோ ஈசனோடு இரண்டறக் கலப்பதற்கான சாதனைகளைச் செய்து வந்தார். பலநாட்கள் உள்ளே இருப்பார். நடுவில் சில நாட்கள் வெளியே வருவார். ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து நான்காம் ஆண்டு, ஜனவரி மாதம் முப்பதாம் நாள்; ஸ்ரீ முக ஆண்டு தைத்திங்கள் பத்தொன்பதாம் நாள், பூசமாக இருந்தது. முன்னிரவு நேரம். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் இருந்த அனைவரையும் நோக்கிப் பேசலானார்.

“கார்த்திகை மாதம் தொடங்கி இரு மாதங்களாக இந்த தீப ஆராதனை செய்து வருகின்றீர்கள். இனியும் அவ்வாறே செய்து வரவும். இன்று தைப்பூசம். வடலூரில் ஜோதி தரிசனம் கண்டு களித்து, தீப ஆராதனை செய்து வருகிறீர்கள். நான் இப்போது என் தனி அறைக்குச் சென்று கதவை சார்த்திவிட்டு உடம்பை மறைத்துக்கொள்ளப்போகிறேன். யார் கண்களுக்கும் தோன்ற மாட்டேன். இந்தத் திருமாளிகையை வெறும் வீடாகவே காண்பீர்கள். என் ஆண்டவர் என்னைக் காட்டிக்கொடுக்கமாட்டார். இனி நீங்கள் எல்லோரும் நான் கூறியவாறு நடந்து அருட்பெரும்சோதி ஆண்டவரை வழிபட்டுப் பேரானந்தப் பெருவாழ்வு அடையுங்கள். நான் சென்று அறைக்கதவைச் சார்த்திக்கொள்கிறேன்.” பெருமான் உள்ளே சென்று கதவைச் சார்த்தினார்.



அசரீரியாகப் பெருமான் குரலில் திருவருட்பா ஒலித்தது.



“பெற்றேன் என்றும் இறவாமை

பேதம் தவிர்ந்தே இறைவன் எனை

உற்றே கலந்தான் நானவனை

உற்றே கலந்தேன் ஒன்றானோம்

எற்றே அடியேன் செய்ததவம்

யாரே புரிந்தார் இன்னமுதம்

துற்றே உலகீர் நீவீர் எலாம்

வாழ்க வாழ்க துனி அற்றே.”



அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை

தனிப்பெரும் கருணை அருட்பெரும்சோதி.



துணை நூற்கள்: திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு, எழுதியவர் குறிஞ்சி, ஞான. வைத்தியநாதன், ரவி ராமநாதன் தயாரிப்பில் பிரேமா பிரசுரம் வெளியீடு.


http://www.vallalar.org/


http://en.wikipedia.org/wiki/Ramalinga_Swamigal



http://www.vallalar.net/

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இந்த அருட்பெரும்சோதியான அகண்டத்தின் ஒளியானது ஆறடி ஒன்பதங்குல உயரமும், நான்கடி இரண்டங்குல அகலமும் உள்ள நிலைக்கண்ணாடியில் மாபெரும் பேரொளியாகப் பிரதிபலிப்பதையே ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் செய்து வரும் அருட்பெரும்சோதி தரிசனம் எனச் சொல்லப் படுகிறது. வள்ளலார் இதற்காகவே அந்தக் கண்ணாடியைச் சென்னையில் இருந்து தருவித்து மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக மாளிகையில் ஒரு மண்டலம் வழிபாட்டில் வைத்துவிட்டுப் பின்னர் சபையில் அதை நிறுவச் செய்தார். ஜோதியை நடுவில் அமைத்ததன் காரணம், இந்த அகண்டத்தின் ஒளியே ஞானமாகிய அருட்பெரும்சோதி. நம் மனமே நிலைக்கண்ணாடியாகும். மனத்தை மறைக்கும் மாயையே ஏழு திரைகள் ஆகும். ஜீவகாருண்யம், தோத்திரப் பாடல்கல் போன்றவற்றால் இந்த மனமாகிய கருங்கல் கரைந்து, பாறை உருகி, ஓட ஓட, இம்மாயைத் திரைகள் ஏழும் ஒவ்வொன்றாக விலக்கப்படும். மனம் தூய கண்ணாடியாய் விளங்க, அதன் மூலம் அருட்பெரும்சோதியின் தரிசனம் கிடைக்கப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம் என்பதே இதன் தத்துவம் ஆகும்.



“நினைந்து நினைந்துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே

நிறைந்து நிறைந்தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு

நனைந்து நனைந்தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும் நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியஞ்சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.”



இதுவே வள்ளலார் அமைத்த சத்திய ஞானசபையாகும். இதை நிறுவியதுமே வந்த முதல் தைமாதம் பதின்மூன்றாம் நாள் வியாழக்கிழமை தைப்பூச நன்னாளில் முதன் முதலாக வழிபாடு தொடங்கப் பட்டது. தமிழகத்தின் அனைத்துத் தொலைதூர நகரங்களில் எல்லாம் இதுவே பேச்சு. சுற்றுவட்டாரம் முழுதும் இந்த தரிசனத்திற்காகவே காத்துக்கிடந்தது. வடற்பெருவெளியும், சத்திய ஞானசபையும், பார்வதிபுரமும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த வருடம் பனி அதிகம் இருந்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூடியது. இதோ! நேரம் வந்துவிட்டது. கீழ் வானில் சூரியன் உதயம் ஆகும் அதே நேரம் மேல்வானில் சந்திரன் அஸ்தமனம் ஆகி இருவரும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அதிகாலை நேரம் ஆறுமணி. சபையினுள் கிழக்குச் சாளரத்தில் கட்டப்பட்டிருந்த காண்டாமணி ஓம், ஓம், ஓம் என ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது. அதன் எதிரொலி போல் சுற்றுவட்டார மரங்களின் கிள்ளைகள் இனிமையாகப் பாடல் இசைத்தன. சபையின் திருக்கதவம் திறக்கப்பட்டுக் கருப்புத் திரை தெரிந்தது. பின்னர் கருப்புத் திரை விலகியதை மாயை விலகியதாய்க் குறிப்பிட்டு க்ரியாசக்தியான நீலத்திரை தெரிந்தது. பின்னர் அதுவும் விலகி பராசக்தியான பச்சைத் திரை தெரிந்தது. அது விலக, இச்சாசக்தியான சிவப்புத் திரை தெரிந்து, பின்னர் அதுவும் விலகி ஞான சக்தியான மஞ்சள் திரை தெரிந்தது. ஞாசக்தியும் விலகி ஆதிசக்தியான வெள்ளைத் திரை தெரிந்தது. இப்படியே அனைத்துத் திரைகளும் விலகிக் கலப்புத் திரை தெரிந்தது.



அப்போது சிற்சக்தி விலகியதாய் ஐதீகம். கலப்புத் திரை விலகியதுமே அருட்பெரும்சோதியை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து தாங்கள் பெற்ற பெரும்பேற்றை எண்ணி மகிழ்ந்து ஆடிப் பாடினார்கள். ஜோதியைக் குறித்த வழிபாட்டுப் பாடல்கள் பாடப்பட்டன. அனைவரும் மனமகிழ்வோடு தங்கள் இருப்பிடம் சென்றனர். சில நாட்களில் வள்ளலார் சித்திவளாக மாளிகை முகப்பில் நின்ற வண்ணம் பக்தர்களுக்கு அருளுரை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மீனவர் இருவர் வந்தனர். சுவாமிகளை வணங்கித் தம்மை மன்னிக்கும்படி வேண்டினர். விஷயம் என்னவென சுவாமிகள் கேட்க, இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற ஒரு நாள் சுவாமிகள் அவர்கள் இருவரையும் அழைத்து இந்தத் தொழிலை விடுமாறு கேட்டுக்கொண்டதை நினைவூட்டினார்கள். ஆனாலும் அவர்கள் கேட்காமல் வலைத்தொழிலுக்கே போய்க்கொண்டிருக்க, மீண்டும் அவர்களை அழைத்த அடிகளார், சிறுவலை வீசிச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துச் சிறு பொருளையே பெற முடிகிறது உங்களால். பெரும் பொருள் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பெரிய வலையை வீசுங்கள் எனக் கூற அவர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாத மீனவர்கள் இருவரும்பெரிய வலையைத் தந்து உதவுமாறு கேட்க, அன்பாகிய வலையையே தான் பெரிய வலை என்றதாகவும் அன்பு வலையை வீசினால் ஆண்டவன் அதற்குள் அகப்படுவான் என்று கூறியதாகவும் சொல்லவே மீனவர் இருவரும் ஏமாற்றம் அடைந்தனர்.



அதன் பின்னர் அன்றைய தினத்தில் இருந்துஎத்தனை முறை போய் வலை வீசினாலும் மீன்கள் கிட்டாமல் வலைகள் அறுந்து இருவரும் துன்பம் அடைந்தனர். பல நாட்கள் இவ்வாறு சென்றபின்னரே சுவாமிகள் கூறியதன் உட்பொருள் புரிந்துகொண்டனர். ஆகவே சுவாமிகளின் அடியாராக மாறி அவரின் ஆசிகளைப் பெறவே வந்திருப்பதாய்க் கூறி வணங்கினர். அவர்களுக்கு ஆசிகள் கூறி வாழ்த்திய வள்ளலார் இவர்களுக்காக இறைவனிடம் முறையிட்டுத் தாம் அழுததைக் கூறினார். கூடி இருந்த மக்கள் கூட்டமும் அடியார் கூட்டமும் வள்ளலாரை வாழ்த்தி மகிழ்ந்தனர். பின்னர் ஓர் நாள் சரணாலய சுவாமிகளைச் சந்திக்க வேலாயுத முதலியார் வந்தார். அடிகளாரை எங்கே காணோம் என்று கேட்டார். இரண்டு நாட்கள் முன்னர் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு யோகத்தில் அமர்ந்த அடிகள் வெளியே வரவே இல்லை எனச் சரணாலய சுவாமிகள் கூற வேலாயுத முதலியாருக்குக் கவலை வந்தது. வள்ளலார் வரும்வரையிலும் இருவரும் சன்மார்க்கக் கொள்கைகள் குறித்த கலந்துரையாடலைச் செய்தனர். பின்னர் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி மூன்றாம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபத்திரண்டாம் தேதியில் சன்மார்க்கக்கொடியை வள்ளலார் ஏர்றினார்.



பின்னர் அனைவரையும் நோக்கி வீண் பொழுது போக்காமல் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் நம்முடைய நிலையைக் குறித்து விசாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கூடிப் பேசிக்கொண்டு இருக்குமாறு கூறினார். ஆன்ம அறிவை விளக்கம் ஏதுமின்றி மறைத்துக்கொண்டிருக்கும் திரைகளில் ஒன்றாகிய பச்சைத் திரை நீங்கும் என்றும் அது விலகினால் மற்றத் திரைகள் சடுதியில் விலகும் எனவும் கூறினார். மேலும் அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை, தனிப்பெரும் கருணை என்னும் திருமந்திரத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டிருக்கும்படியும் கூறினார். இவ்வண்ணம் சாதனம் செய்து வந்தால் சாதனம் முதிர்ந்து முடிவான இன்பானுபவம் கிடைக்கும் என்றார். உடனே சரணாலயர் சன்மார்க்கக் கொடியின் பொருளையும் கூறும்படி கேட்க, வள்ளலார் அதையும் கூறலானார்.



சன்மார்க்கக் கொடி யாதெனில் நம் உடலில் தொப்புள்கொடி முதல் புருவ மத்தி வரையிலும் உள்ள ஒரு நாடியின் நுனியில் புருவ மத்தியில் உட்புறத்தில் தொங்கும் சவ்வின் அடிப்புறம் வெள்ளை வர்ணமாகவும், மேற்புறம் மஞ்சள் வர்ணமாகவும் காட்சி அளிக்கும் என்றார். அந்தச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் உள்ளதாகவும், இக்கொடியை நாம் சாதாரணக்கண்களால் காண்பது அரிது எனவும், அனுபவத்தின் காரணமாகவே விளங்கும் என்றும் கூறினார். இந்த அடையாளங்களைக் கருத்தில் கொண்டே சன்மார்க்கக் கொடி கட்டப் பட்டதாகவும் கூறினார். அனைவரும் வள்ளலார் கூறிய விளக்கத்தில் மனம் மகிழ்ந்து அருட்பெரும்சோதி, அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை, தனிப்பெரும் கருணை என்ற மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தனர்.

Saturday, September 24, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

மண்டபத்தை அடுத்துள்ள திருச்சபை மண்டபத்தின் மேற்புறம் பளபளவென ஜொலிக்கும் வெள்ளி ஒளியோடு விளங்குவதுதான் சிற்சபை எனச் சொல்லப்படும் வெள்ளியம்பலமாகும். கீழ்ப்புறம் அதே அமைப்பில் பொன்னிறத்தில் விளங்குவது கனகசபை எனப்படும் பொன்னம்பலம் ஆகும். இவற்றுக்கு வடக்கே தென்புறமாய்த் திகழ்வது சத்திய ஞானசபையாகும். ஞானசபைக்கு மூன்று கண்ணாடிக்கதவுகள் உண்டு. அவை சூரியன், சந்திரன்,அக்கினி ஆகியவற்றைக்குறிக்கும். இவற்றை அடைய அமைக்கப்பட்ட ஐந்து படிகளும் “சிவாய நம” என்னும் பஞ்சாக்ஷரத்தைக்குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சாக்ஷரத்தைக் குறிக்கும் திருவருட்பா பாடல் பின்வருமாறு:



பெற்றதாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே!” என்று பாடியுள்ளார் வள்ளல் பெருமான்.



சத்திய ஞான சபையின் பிரகாரத்தில் பதினான்கு சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நமது சைவ சித்தாந்த சாத்திரங்களைக் குறிக்கும். சபையின் உள் அமைப்பில் கண்டால், உள்ளே அமைந்துள்ள பனிரண்டு தூண்களும் மெய்கண்டாரின் சிவஞானபோதத்தில் அருளியுள்ள பனிரண்டு சூத்திரங்களைக்குறிக்கும். உள்ளே அதிட்டான பீடத்திற்கு நடுவே உள்ள நாற்கால் மண்டபம் ஜோதி ஞானபீடம் என அழைக்கப்படும். அப்பீடத்துக்கு நான்கு படிகள் உள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் ஞான பாதங்கள் நான்கைக் குறிப்பன. அதன் வடதிசையில் உள்ள ஒங்கார வளைவுக்கு நடுவே உள்ள ஞானவெளியில் தான் ஆண்டவன் அருட்பெரும் சோதியாக விளங்குகிறான்.



“அருட்பெரும் சோதி என் ஆருயிரில் கலந்தாடுகின்ற

அருட்பெரும் சோதி என் அன்பிற் கலந்தறிவாய் விளங்கும்

அருட்பெரும் சோதித்தெள்ளார் அமுதாகி உள் அண்ணிக்கின்ற

அருட்பெரும் சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே.”



இந்த அருட்பெரும் சோதியை மறைத்தவண்ணம் தொங்கும் வண்ணத் திரைகள் ஏழாகும். ஏனெனில் ஆண்டவனைக் காணவிடாமல் ஆன்மாவைத் தடுப்பவை மாயாசக்திகள். இவை ஏழு சக்திகளாகும். அவை மாயாசத்தி, கிரியாசத்தி, பராசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, ஆதிசத்தி, சிற்சத்தி என்னும் ஏழாகும். அவை ஏழுக்கும் முறையே கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை நிறம், கலப்பு நிறங்களில் திரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஏழு திரைகளும் விலகியதும் பிரணவ வடிவான வட்டத்தினுள்ளே ஞானபீடத்தின்மீது அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிப்பதைக் காணலாம்.



கரைவின்மா மாயைக் கரும்பெருந்திரையால்

அரைசதுமறைக்கும் அருட்பெரும் சோதி

பெருறு நீலப்பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெரும்சோதி

பச்சைத்திரையால் பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெரும் சோதி

செம்மைத்திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

பொன்மைத்திரையால் பொருளுறு வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

வெண்மைத்திரையால் மெய்ப்பதிவெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

கலப்புத்திரையால் கருதனுபவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெரும்சோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடர்புற மறைக்கும் அருட்பெரும்சோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்

அத்திறம் மறைக்கும் அருட்பெரும்சோதி

திரைமறைப்பெல்லாம் தீர்த்தாங்காங்கே

அரைசுறக் காட்டும் அருட்பெரும்சோதி

தோற்றமா மாயைத் தொடர்பறுத்தருளின்

ஆற்றலைக் காட்டும் அருட்பெரும் சோதி.”

Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

ஒரு சமயம் இறப்புக் குறித்து சுவாமிகளைச் சரணாலயர் கேட்டபோது, அவர் பிரதம பத்திரிகை ஒன்று எழுதிக் கொடுத்ததாயும், அதில், “திருச்சிற்றம்பலம். இஃது தூற்றாமல் வைக்க. சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள் தொட்டு இந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர் உறவினர் அடுத்தோர் வார்திபர் வாலிபர் பாலியர் குமாரர் ஆண்மக்கள் பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்தில் தருக்கம் செய்யப்படாது. உண்மை!” என எழுதிக் கொடுத்திருந்தார். சரணாலயர் மேற்கண்ட செய்தியைச் சொன்னதுமே வேலாயுத முதலியார், சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் என்பதற்கு சுவாமிகள் விளக்கம் சொல்லி இருப்பது சரி என்றாலும் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்து வருவர் என்ற சுவாமிகளின் கொள்கை விளங்கவே இல்லை என்று கூறினார். சரணாலயர் இப்போதைக்கு இதைக் குறித்து நாம் எந்தத் தருக்கமும் செய்யாமல் இதைத் தூற்றாமல் இருப்பதே நன்மை எனக் கூறி வற்புறுத்த அதை அவ்வாறே வேலாயுத முதலியாரும் ஏற்றுக்கொண்டார்.



மேலும் சரணாலயர் கூறியதாவது வள்ளல்பெருமான் எழுதிய திருமுகம் ஒன்றில் சுவாமிகள் சாலை சம்பந்திகளுக்கு எழுதிய சமாதிக்கட்டளை பற்றிக்கூறலானார். அது வருமாறு:

“திருச்சிற்றம்பலம். சுவாமிகளுக்குத் தெரிவிப்பது. சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் தன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமயபேதங்களும் சாத்திரப் பேதங்களூம் ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்கப் பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக்கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுளர் தேவர் அடியார் யோகிஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்ஹ்ட்திகளும் எல்லாத்தேவர்களும் எல்லாக்கடவுளரும் எல்லாத்தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக்குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப்பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப்பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னையடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.” இது தான் அந்தக் கடிதத்தில் கண்ட வாசகம் என சரணாலயர் முடித்தார். அதன் மேல் வேலாயுத முதலியார் விடைபெற்றுக்கொண்டு தருமச்சாலை வழிபாடுகளில் கலந்து கொள்ளச் சென்றார்.



வருடம் 1872. வருடத் துவக்கம் அப்போதே ஆரம்பமாகி இருந்தது. ஓர் நாள்………



வடலூரும், பார்வதிபுரமும் கோலாகலமாகக் காட்சி அளித்தது. புதிதாய் வள்ளலார் ஏற்படுத்திய கட்டிடத்தின் முன்னே வெட்டவெளியில் ஊர்மக்களும், சன்மார்க்கிகளும் அமைதியாகவும் ஆர்வமாகவும் காத்திருக்க வள்ளலார் தம் உரையைத் தொடங்கினார். சன்மார்க்க சங்கம் காண விரும்பியபோதே அதை ஒட்டிய ஒளித்திருக்கோயில் ஒன்றையும் காணவிரும்பி அருட்பெரும்சோதியான ஆண்டவரிடம் விண்ணப்பித்துக் காத்திருந்தாய்க் கூறினார். ஆகவே உத்தரஞானசித்திபுரம் அல்லது உத்தரஞான சிதம்பரம் என்று திருவருளால் ஆக்கப்பட்ட சிறப்புப் பெயர்களை உடைய பார்வதிபுரம் என்றும், வடலூர் எனவும் சொல்லப்படும் குறிப்புப் பெயர்களும் உடைய இந்தப் பதியில் தருமச் சாலைக்கு வடமேற்கே திருவருளின் சம்மதத்தைப் பெற்று, வள்ளலார் வரைந்து கொடுத்த வரைபடத்தின்படி சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று கூடி அருட்பெரும்சோதியான ஆண்டவரைத் தரிசிக்க வேண்டி இத்திருக்கோயிலைக் கட்டுவித்ததாய்க் கூறினார். இந்தத் திருக்கோயிலுக்கு சத்தியஞானசபை எனப் பெயரிட்டிருப்பதாயும், அந்தப்பெயராலேயே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு இந்த சுத்த ஞானசபையைத் தம் திருவருள் கூட்டிய சம்மதத்தோடு ஏற்படுத்திக்கொண்டிருப்பதாயும், இக்காலம் தொட்டு அளவு குறிக்கப்படாத நீண்ட நெடுங்காலம் இறைவன் தாமே அங்கே அமர்ந்து விளையாடச் சம்மதித்திருப்பதாயும், இந்தத் திருக்குறிப்பை ஆண்டவர் வெளிப்படுத்தி அங்கே அருட்பெரும்சோதியாய் வீற்றிருப்பதாயும் மிகுந்த பரவசத்துடன் கூறினார். வருகிற தைப்பூசத்திருநாள் அன்று அனைவருக்கும் இந்த ஜோதி தரிசனம் கிடைக்கும் எனவும் கூறிய வள்ளலார் மனம் உருகப் பாடல் ஒன்றைப் பாடினார்.



அருட்சோதித்தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவாறெனக்கருளும் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.”



வள்ளலார் சித்திவளாகத்திருமாளிகைக்குச் செல்ல மக்கள் சத்திய ஞானசபையின் அமைப்பைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். அகத்தே காண்பதற்குரிய அனுபவமான உள்ளார்ந்த ஜோதி தரிசனத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதற்காக வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞானசபை ஓர் இயற்கை விளக்கம். திரைகள் எல்லாம் தத்துவப்படலங்கள் எனப்படும் மாயாத்திரைகள். நம்மிடமுள்ள அஞ்ஞானமே இங்கே திரைகளாய்க் குறிக்கப்படுகின்றன. அஞ்ஞானமென்னும் திரைகள் நீங்கினால் நம்முள்ளே ஆன்மஒளியாக அருட்பெரும் சோதியைக்காணமுடியும். அகத்தே தாம் பெற்ற அருட்பெரும்சோதி அனுபவத்தையே புறத்தே ஞானசபையாக அமைத்து மக்களுக்குக் காட்டினார் வள்ளலார். இந்த சத்திய ஞானசபையில் கட்டிடக்கலை நுணுக்கச் சிறப்பு மட்டுமல்லாமல் தத்துவச் சிறப்பும் ஒருங்கே கொண்டமைந்தது.



தாமரை மலர் போல் அமைக்கப்பெற்றிருக்கும் சபையின் தோற்றம் எண்கோணவடிவில் உள்ளது. உலகின் எட்டுத்திசைகளையும் இது சுட்டிக்காட்டும். இது அவற்றுக்கெல்லாம் பொதுவானதும் கூட. செங்காவி நிறத்தில் கட்டியுள்ள இந்தக் கோயிலின் கட்டிட அமைப்பு வியக்கத்தக்கதாய்க் காணமுடியும். சபையைச் சுற்றி வெளிப்புறம் இரும்புச் சங்கிலித் தொடர் வளைந்து வளைந்து தொங்கிக் காணமுடியும். அது அன்பு என்னும் சங்கிலியில் நாம் அகப்படுவதைக் குறிக்கும். நாம் அன்பு என்னும் சங்கிலியில் அகப்படுவதோடு அல்லாமல் அருட்பெரும்சோதியையும் அந்த அன்புச் சங்கிலியில் பிணைக்கிறோம். அன்புக்கு அகப்படுபவன் ஆண்டவன். இதைச் சுவாமிகளின் அருட்பா ஒன்றின் மூலம் காணமுடியும்.



அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட்படுபரம்பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள்ளமைந்தபேர் ஒளியே

அன்புருவாம்பர சிவமே.



இரும்புச் சங்கிலித்தொடரை அடுத்து இடையிடையே அறிவு வடிவைச் சுட்டிக்காட்டும் வேற்படையின் குறியுள்ள இரும்புக்கம்பிகளுடன் கூடிய ஐம்பத்திரண்டு கட்டைகள் காணப்படும். அவை ஓம் என்ற பிரணவ மூல மந்திரத்துடன் கூடிய “அகாராதி க்ஷகாராந்த”மாக உள்ள அனைத்து மாத்ருகா மந்திரங்களையும் குறிக்கும். இது உபாசனையும் வழிபாட்டு முறையும் கை கூடி வந்தவர்களுக்கே புரியும் ஒன்று. தெற்கு நோக்கி அமைந்துள்ள ஞானசபையில் முகப்பில் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இவைகளின் தத்துவமானது கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகியவற்றைக்குறிப்பதுவே. சாளரங்கள் இரண்டும் பாசஞானம், பசுஞானம் ஆகியவற்றைச் சொல்வது. இவற்றைக்கடந்து உள்ளே நுழைந்ததும் காணப்படும் மண்டபத்தின் இருபக்கமும், கிழக்கில் ஓர் வாயிலும், மேற்கில் ஓர் வாயிலும் காணமுடியும். இவை பரஞானம், அபரஞானம் ஆகியவற்றைக்குறிக்கும். மண்டபத்திலுள்ள நான்கு சாளரங்களும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை கூடுதல் ஆகிய நான்கின் வழியாகவே உண்மைப் பரம்பொருளை உணரவேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

அதைக் கேட்ட சிவாசாரியார் விபரமாய்க்கூறும்படி கேட்க, செட்டியாரும் கூறலானார். வள்ளல் பெருமானின் தேகம் சுத்த தேகம் எனவும், உலோகத்துண்டு ஒன்றையோ அல்லது வெள்ளி நாணயம் ஒன்றையோ அவர் கையில் வைத்து மூடித் திறந்தால் அவை உருகி ஓடிவிடும் எனவும் அந்த அளவுக்கு அகச்சூடு உள்ளவர் வள்ளலார் எனவும் கூறிய செட்டியார், மேலே கூறினார். அப்படி இருந்தும் அவ்வளவு சூடும்போதாது எனக் கருதிய சமயங்களிலே சுவாமிகள் புறத்தே இப்படி தீச்சட்டிகளை வைத்த வண்ணம் புறச்சூட்டால் தமது அகச்சூட்டை பிரமதண்டிகா யோகம் செய்வதன் மூலம் அதிகப்படுத்திக்கொள்வதாய்த் தாம் நினைப்பதாய்க் கூறினார். சிவாசாரியாரும் அதை ஆமோதித்தார். மேலும் செட்டியாரிடம் தமக்கு நெருப்புத்துண்டுகள் உடலில் பட்டதுமே தீப்புண்கள் ஏற்பட்டன எனவும், சுவாமிகளுக்கோ எதுவும் நடக்கவில்லை என்பதையும் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டார்.



அதை ஆமோதித்த செட்டியாரும் இதிலிருந்து என்ன தெரிகிறதெனில் சுவாமிகளின் திருமேனியே கனல்மேனியாகும் எனவும், அந்தக் கனல் சாதாரணக் கனல் அல்லவென்றும், ஞானக்கனல் எனவும், கூறினார். மேலும் அத்தகையதொரு ஞானக் கனலை இந்தச் சாதாரண தீக்கனலால் என்ன செய்ய முடியும்? எதுவும் முடியாது. அதனாலேயே சுவாமிகளைத் தீ எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. காற்று, புவி, ககனம், புனல், அனல் என எதனாலும் அழியாத திருமேனி சுவாமிகளின் திருமேனி என பரவசம் மீதூறக் கூறினார். சிவாசாரியாரும் கண்ணீர் பொங்க அதை ஆமோதித்தார். செட்டியார் மேலும் இறைவன் ஒருநாள் மாலை ஒரே நாழிகையிலே யோகநிலையை சுவாமிகளுக்கு உணர்த்தி மறுநாளே யோகப்பயனையும் அளித்ததாகவும் கூறிவிட்டு, இதைச் சுவாமிகள் தம் பாடல் ஒன்றின் மூலம் தெரியப் படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டார். “ஒரு நாழிகையில் யோகநிலையை யுணர்த்தி, மாலையே, யோகப்பயனை முழுதும் அளித்தாய்! எனத் திருவருட்பாவில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.



நம்மைப் போன்ற சாமானியர்களின் சிற்றறிவிற்கு எட்டமுடியாத இந்த விஷயங்களை நம் காலத்தில் நாம் பார்த்து மகிழக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனப் பேசிக்கொண்டனர் இருவரும். அதன் மேல் சிவாசாரியார் ஜோதிவழிபாட்டுக்கு தருமச்சாலைக்குப் போவதாய்க் கூறிக்கொண்டு கிளம்பினார். சிலநாட்களின் தருமச்சாலையை ஒட்டி சமரச வேதபாடசாலை ஒன்றையும் சுவாமிகள் ஏற்படுத்தி சன்மார்க்கப் பாடங்களைக் கற்பித்து அதன்படி நடக்கும் இளைஞர்களுக்கு பயிற்சிக்காலத்திலும் அதன் பின்னரும் தக்க பொருளுதவி செய்யப் போவதாயும் அறிவித்தார். இளைஞர்கள் பதினைந்து வயதுக்குள் இருக்கவேண்டும் எனவும், நல்லொழுக்கம், கடவுள் பக்தி, ஜீவகாருண்யம், பொதுத் தொண்டு செய்வதில் விருப்பம் உள்ளவர்களாய் இருத்தல், உண்மையே உரைத்தல், ஐம்புலன்களையும் அடக்கி ஆள்தலில் விருப்பம் உள்ளவர்கள், இன்சொல்லே பேசுதல், அனைவருக்கும் உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுதல் போன்ற நற்பண்பு நிறைந்தவர்களாய் இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்தார்.



அனைவருமே இந்தத் திட்டத்தை வரவேற்றதோடு மாணாக்கர்களுக்குப்பொருளுதவி செய்வது எல்லாருமே செய்வதுதான். ஆனால் அவர்தம் குடும்பத்திற்கும் சேர்த்து உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வள்ளலாரைத் தவிர வேறு யாருக்கும் தோன்றாது என வியந்து பாராட்டினர். இப்படிப் பயின்ற மாணவர்களை நாடெங்கும் அனுப்பி சன்மார்க்கத்தைப் பரப்புவதே சுவாமிகளின் குறிக்கோள் எனவும் புரிந்து கொண்டனர். தருமச்சாலையில் ஒருநாள் வேலூரில் இருந்து ஆனந்தநாத சண்முகசரணாலய சுவாமிகள் வந்திருந்தார். அவர் வள்ளலாரோடு நெருங்கிய தொடர்புடையவர். அது குறித்த சிந்தனைகளில் மூழ்கி இருந்தவரை சித்திவளாக மாளிகையில் இருந்து வேலாயுத முதலியார் காண வந்தார். அவரைக் கண்டு வணங்கிய வேலாயுத முதலியாரை வரவேற்ற சரணாலய சுவாமிகள் வள்ளல் பெருமானைத் தரிசித்து பலநாட்களாகிவிட்டதாயும், தருமச்சாலைக்கு முன்போல் ஏன் வருவதில்லை எனவும் விசாரித்தார்.



அதற்கு வேலாயுத முதலியார் பெருமான் சன்மார்க்க சங்கம்தோற்றுவிக்க விரும்பிய காலத்திலேயே அதைச் சார்ந்த ஒளித்திருக்கோயில் கட்ட வேண்டும் என விரும்பியதாகவும், அதற்கென இப்போது கோயில் அமைப்புப் படம் ஒன்றைத் தம் கரத்தால் வரைந்து வைத்திருப்பதாயும், அது புதிய கட்டிட அமைப்பாகவும், வெகு அருமையாகவும், அற்புதமாகவும் இருக்கிறதாயும் கூறினார். கலா வல்லவராகிய சுவாமிகள் கட்டிடக் கலையிலும் வல்லவராக இருக்கிறதைக் கண்டு இருவரும் வியந்து பேசிக்கொண்டனர். பின்னர் வேலாயுத முதலியார் சரணாலய சுவாமிகளிடம் அவர் வந்த விஷயம் குறித்து விசாரித்தார். தமக்கும் சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்ததாய்க் கூறினார் சுவாமிகள். அது குறித்துத் தமக்கு எதுவும் அதிகம் தெரியாது எனவும், தெரியாத விஷயங்களைச் சொல்லும்படியும் வேலாயுத முதலியார் கேட்டுக்கொண்டார். அனைத்துமே முதலியார் அறியாத விஷயங்களே எனக் கூறின சரணாலய சுவாமிகள் மேலே பேசினார்.



வள்ளல்பெருமானிடம் சரணாலய சுவாமிகள் ஒருமுறை தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி வள்ளல் பெருமானின் செய்யுட்களிலும் சில கருத்து விளங்காது மயக்குகின்ற சொற்றொடர்களைக் காண்பதாகவும், வழுக்களையும் காண்பதாகவும் முறையிட்டதாகக் கூறினார். அதற்கு வள்ளலார் ஒரு சில இடங்களில் நால்வர் பெருமக்கள் வழுவியிருப்பதாகவும் இவ்வழுக்கள் விசாரத்தாலும், சிவாநுபவ மேலீட்டாலும் தற்செயலாக ஏற்பட்டவை என்றும் கூறினார். பின்னர் திருவருட்பாவில் உள்ள மயக்குகின்ற சொற்றொடர்களைக் குறித்து விளக்கம் தந்தார் சுவாமிகள். சுவாமிகள் சரணாலய சுவாமிகளிடம் தாம் எழுதிய திருவருட்பாவில் அளவிறந்த குற்றங்கள் இருப்பதாயும், விசாரவசத்தால் தவறுகள் ஏற்பட்டதாயும், இறைவன் தமது பெருங்கருணையால் அனைத்தையும் மன்னித்ததாயும், மற்றவர்களும் அவ்வாறே மன்னித்தல் வேண்டும் எனவும், தாம் புழுவினும் சிறியேன் எனவும் இது குறித்து மிகவும் நாணுவதாயும் மிகத் தாழ்மையுடன் கூறினார்.



இதைக் கேட்டுக்கொண்டே வந்த வேலாயுத முதலியார் தாம் முன்னர் ஒருமுறை பெருமானைச் சோதித்தது குறித்து நினைந்து நாணம் மிகக் கொண்டார். பின்னர் மேலே சரணாலய சுவாமிகள் பேசியதைக் கேட்கத் தொடங்கினார். அகர உயிர்க்கு நாற்பத்தைந்து வினாக்களைக் கூறிய சுவாமிகள் ஓரு எழுத்திற்கே பற்பல இலக்கண நியாய விசார வினாக்கள் உள்ளது எனில் தம் போன்றோர் எவ்விதம் அவ்வினாக்களுக்கு விடை தோற்றுவிக்க முடியும்?? கற்றோம் என்ற செருக்கை முழுதும் விடுத்து விசார வசத்தவராகிச் சிவன் திருவருளையே சிந்தித்து இருக்க வேண்டும் என்று என்னையோரு பொருளாகக் கருதிக் கூறியருளினார் சுவாமிகள். இதைக் கேட்ட சரணாலய சுவாமிகள் கற்றலில் செருக்கடைதல் பொருந்தாது என்னும் பேருண்மையைத் தாம் சுவாமிகளின் பேச்சால் உணர்ந்து கொண்டதாயும் தெரிவித்தார். அப்போது வேலாயுத முதலியார் இந்தப் பேருண்மையை சுவாமிகள் மட்டும் உணரவில்லை எனவும் அதை முதலில் தாம் உணர்ந்து கொண்டதாகவும் அதன் பின்னர் கணக்கில் அவதானி தேவிபட்டினம் முத்துசாமிப் பிள்ளை எனவும் அதன் பின்னர் புதுச்சேரி தந்தி அலுவலக மேலாளர் பிநாகபாணி முதலியார் எனவும் தெரிவித்தார். ஆகவே நாம் அனைவருமே பெருமானின் அருளால் வித்வத் கர்வம் அடங்கியவர்களே என்று கூறினார்.



வேலாயுத முதலியார் வள்ளலார் இளமையில் முப்பதாண்டுகள் சென்னையில் வித்துவானாக விளங்கி வந்தது அப்படியே தொடர்ந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து இரண்டு தமிழறிஞர்கள் தமக்குள் பேசிக்கொண்டதைக் கூற ஆரம்பித்தார். மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஒரு சமயம் ஆறுமுக நாவலரிடம் பேசிக்கொண்டிருந்த போது வள்ளலார் மட்டும் துறவறம் ஏற்காமல் தொடர்ந்து நாவலர் வித்துவான் போன்ற பெயர்களை ஏற்றிருந்தால் தாமும் சரி, ஆறுமுக நாவலரும் சரி முறையே இலக்கிய வித்துவான் எனவும் இலக்கண வித்துவான் எனவும் பெயர் கிடைத்திருக்காது என்று கூறினாராம். அம்மாதிரி இல்லாமல் வள்ளலார் துறவறம் ஏற்றதாலேயே அவர்களால் இலக்கண, இலக்கிய வித்துவான்களாகப் பரிமளிக்க முடிந்தது என்றாராம். அதன் மேல் சரணாலயர் மேலும் பேசத் தொடங்கினார்.

அருட்பெருசோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலார் தன் தொண்டை விரிவு செய்து கொண்டே இருந்தார். தருமச்சாலையில் சாப்பாடு போடுவதோடு மக்களுக்கு மருத்துவமும் செய்து வந்தார். பசிப்பிணி போக்குவதோடு உடற்பிணிக்கும் மருத்துவம் தேவை எனக் கருதிய வள்ளலார் அவர்கள் சுமார் நானூற்று எண்பது மூலிகைகளுக்கும் மேல் குண அட்டவணையை எழுதி வைத்தார். சித்த வைத்தியத்தில் நிபுணரான அடிகளார், பல மருந்துகளைச் செய்து வைத்துக்கொண்டு அவற்றை மக்களுக்குத் தேவையான சமயம் கொடுத்து வந்தார். அது மட்டுமல்லாமல் சிரஞ்சீவி மூலிகைகள் பற்றியும் மருத்துவக்குறிப்புக்களும் எழுதி வைத்தார். இவை இத்தனையும் போதாது என நினைத்தோ என்னவோ, தொழுவூர் வேலாயுத முதலியாரை ஆசிரியராக நியமித்து தருமச்சாலையில் திருக்குறள் வகுப்பையும் நடத்தினார். அங்கே படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் எனப் பாகுபாடின்றி எல்லோருக்கும் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப் பட்டது.



ஆனால் வேலாயுத முதலியார் போன்ற பெரும்புலமை படைத்தவர்கள் பாடம் நடத்தியதால் ஒரு சிலரால் பாடத்தைப் புரிந்து கொள்ளவும் முடியாமல் போயிற்று. ஆகவே வள்ளலார் வேலாயுத முதலியாரை அழைத்து சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகப்பாடம் எடுக்கும்படி அறிவுறுத்தினார். நாட்கள் சென்றன. நாட்கள் ஓட ஓட, தருமச்சாலைக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. வள்ளலாரால் தனிமையில் ஏகாந்தத்தில் தியானத்தில் அமரமுடியவில்லை. யோக சாதனைகள் செய்யத் தடைகள் ஏற்பட்டன. ஆகையால் வடலூருக்குத் தெற்கே மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்குச் சென்று வசிக்க ஏர்பாடுகள் செய்து கொண்டார். அந்த ஊர் மக்களும் கிராமத்து மணியக்காரரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வள்ளலார் தங்குவதற்கு வேண்டிய தேவையான வசதிகளைச் செய்து தந்தனர். வள்ளலார் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்த திருமாளிகை ஒரு காலத்தில் வைணவ ஆசாரியர்கள் எழுந்தருளித் தங்கி மக்களுக்கு வைணவ தீக்ஷை, உபதேசம் போன்றவை செய்து வைத்துக்கொண்டிருந்த இடமாக இருந்து வந்தது. காலப்போக்கில் வைணவ ஆசாரியர்கள் வரவு குறைய மாளிகை காலியாக இருக்கவே அங்கே தங்கித் தம் யோக சாதனைகளைச் செய்ய வள்ளலார் ஒப்புக்கொண்டார். அந்த மாளிகையை, “சித்திவளாகத் திருமாளிகை” என அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



எல்லாருக்கும் இந்தப்பெயரின் காரணம் விளங்கவில்லை. எனினும் வேலாயுதமுதலியாரே தைரியமாய்க் காரணத்தைக் கேட்டார். சித்தி வளாகம் சகல சித்திகளையும், அதாவது வீடுபேற்றைத் தரும் என்பதால் அந்தப்பெயர் வைத்ததாய் வள்ளலார் கூற அனைவரும் மகிழ்ந்தனர். வள்ளலாரும் சித்திவளாகத் திருமாளிகையில் வாசம் செய்து தம் யோகசாதனைகளைத் தொடர்ந்தார். ஆனால் மக்களுக்கு அவர் தரிசனம் கொடுக்கவில்லை. பலநாட்கள் பொறுத்த மக்கள் ஒருநாள் வேலாயுதமுதலியாரிடம் சென்று, சித்திவளாக மாளிகைக்கு வந்தது முதல் அடிகளைப் பார்க்க முடிவதில்லை எனப் புகார் தெரிவித்தனர். எங்கு சென்றார்? என்ன செய்கிறார் என்பதே விளங்கவில்லை என்றும் கவலையுடன் கூறினர். அதற்கு வேலாயுத முதலியார் பெருமான் எங்கும் செல்லவில்லை என்றும் அவர்களோடே இருப்பதாகவும், ஆனால் புறக்கண்களுக்குத் தெரியமாட்டார் எனவும் உருவத்தை மறைத்துக்கொண்டு அருவமாக உலவி வருகிறார் என்றும் தெரிவித்தனர். அனைவருக்கும் ஆச்சரியம் மேலிட்டது.



வேலாயுத முதலியாரோ இத்தகைய அற்புத சாதனைகளைப் பயில வேண்டியே வள்ளலார் தனித்துப் பயிற்சி செய்யவேண்டி இந்த மாளிகைக்கு வந்ததாகவும், இப்போதும் அது போலவே தம் திருமேனியை மறைத்துக்கொண்டு அருவநிலையில் விளங்குவதாகவும் தெரிவித்தார். இதைக் கண்டு சிலர் அஞ்சலாம் என்பதால் அடிகளே, ஓர் அறிவிப்பையும் வெளியிட்டிருப்பதாய்க் கூறிவிட்டு அந்த அறிவிப்பைப் படித்தார்.



“திருச்சிற்றம்பலம். அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது. ஒருவனைப்பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச காலத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுவேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நானாகவே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். தருமச்சாலையை நன்கு நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.”



இதைப் படித்த வேலாயுத முதலியார் இதற்கு முன்னரும் சுவாமிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், பலநாட்கள் சென்றபின்னரே வெளிப்பட்டதாகவும் கூறிவிட்டு சுவாமிகள் இவ்வாறு மறைவதும் வெளிப்படுவதும் இனிப் பலமுறை நிகழ்த்தலாம் எனத் தாம் நினைப்பதாகவும் இது குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். வடலூரில் தருமச்சாலையை நிர்வகித்து வரும் புதுச்சேரி சதாசிவம் செட்டியாரைக் காண ஒரு நாள் ஆடூர் சபாபதி சிவாசாரியார் வந்தார். சிவாசாரியாரின் முகம், கைகள், கால்கள் போன்றவற்றில் தீக்காயம் பட்டது போல் காணப்படவே சதாசிவம் செட்டியார் பதறிப் போனார். என்ன ஆயிற்று என அவரை விசாரித்தார். சபாபதி சிவாசாரியாரும் தன் மனம் சரியில்லை எனவும், மனதைக் கொஞ்சமாவது ஆற்றிக்கொள்ள வேண்டியே இங்கே வந்ததாகவும் கூறினார். மீண்டும் சதாசிவம் செட்டியார் தீக்காயங்களின் உண்மையான காரணத்தைக் கூறும்படி வற்புறுத்த, இது குறித்து எவரும் அறியாமலேயே பேச வேண்டும் என்று சபாபதி சிவாசாரியார் கூறிவிட்டு அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டார்.



வேறு எவரிடமும் இது குறித்துப் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு சபாபதி சிவாசாரியார் வேலாயுத முதலியாரிடம் பிரமதண்டிகா யோகம் குறித்து அவர் அறிந்திருக்கிறாரா என விசாரிக்க, செட்டியாரும் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தீச்சட்டிகளுக்கு நடுவே அமர்ந்து செய்யும் மிகக் கடினமான யோகமாயிற்றே அது எனத் தன் வியப்பையும் தெரிவித்தார். அப்போது சிவாசாரியார் சித்திவளாகத்தின் உள்ளே உள்ள திருவறையில் வள்ளலார் தமக்கு இருபக்கமும் இரும்புச் சட்டியை வைத்துக்கொண்டு சீமைக்கரியை எரியவிட்டுக்கொண்டு, கதவைத் தாழிட்டுக் கொண்டு பிரமதண்டிகா யோகம் செய்வதாய்த் தாம் அறிந்து கொண்டதாய்க் கூறினார். செட்டியார் வியப்புடன் கேட்டுக்கொண்டிருக்க, மேலும் சிவாசாரியார் கூறியதாவது: தாம் இரண்டு நாட்கள் முன்னர் சித்திவளாகம் சென்றிருந்ததாயும், சுவாமிகள் அறையில் இருந்ததாய்த் தெரிவித்தார்கள் என்றும் அதன் மேல் தாம் அவசரத்துடன் அறைக்குள் நுழைந்ததாயும் கூறினார்.



அங்கே சுவாமிகள் பிரமதண்டிகா யோகத்தில் இருந்திருக்கிறார். இது விஷயம் அங்கே உள்ள எவரும் அறியவும் இல்லை. மேலும் கதவும் சரியாகச் சார்த்தப்படாமல் கொஞ்சம் திறந்திருக்கவே அவசரத்துடன் உள்ளே நுழைந்த தமக்குப் போன வேகத்தில் தம் கால்கள் பட்டு நெருப்புத்துண்டங்கள் சிதறி மேலே விழுந்ததாயும், சுவாமிகள் மேலும் விழுந்ததாகவும் கூறிவிட்டு நிறுத்தினார். மேலும் சிவாசாரியார் கூறியதாவது: “இதை நீர் எவருக்கும் கூறக்கூடாது. நெருப்புத் துண்டங்கள் விழுந்ததில் எனக்கு மட்டுமே தீக்காயங்கள் ஏற்பட்டன. சுவாமிகளுக்கு எதுவும் நடக்கவில்லை. என் உடலே எரிச்சல் தாங்க முடியாமல் தீக்காயங்கள் ஏற்பட்டன. நான் உடனே பயந்து போய் வெளியே வந்து கதவைச் சார்த்திவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். எவருக்கும் இது குறித்துச் சொல்ல வேண்டாம்.” என்றும் கேட்டுக்கொண்டார். செட்டியாரும் எவரிடமும் தான் தெரிவிப்பதில்லை என உறுதியளித்துவிட்டு வேலாயுத முதலியார் இம்மாதிரியானப் பல விஷயங்களை சுவாமிகள் பற்றித் தம்மிடம் சொல்லி இருப்பதாய்க் கூறினார்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இலங்கை யாழ்ப்பாணத்திலே நல்லூர் என்னும் கிராமத்திலே, கார்காத்த வேளாளர் மரபில் பிறந்தவர் ஆறுமுக நாவலர் என அழைக்கப்பட்ட சிவத் தொண்டர். தம் பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாகப்பிறந்த இவர் இருபது வயதிற்குள்ளாகத் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றித் தமிழ்நாட்டிலும் சைவசமயப் பிரசாரங்களை மேற்கொண்டு சைவ சமயத்திற்காக அருந்தொண்டாற்றியும் வந்தார். தம் வாழ்நாட்களை அதற்கெனவே செலவிட்ட இவர், தில்லைச் சிதம்பரமே சைவர்களின் முக்கியமான கோயில் என்பதால் அங்கேயும் ஓர் பாடசாலையை நிறுவினார். சைவ சமயத்தை அன்றி வேறு சமயத்தைக் கண்ணெடுத்தும் பாராதவரான இவர் பல தமிழ் நூல்களை அச்சிற்பதிப்பித்த்தார் எனச் சொல்லப் படுகிறது. பழைமையான பல பாடல்களின் உரைகளைத் திருத்திப் புதுப்பித்து வெளியிட்டதோடல்லாமல், சிலவற்றிற்குப்புதிதாகவும் உரைகள் எழுதினார். இவர் வள்ளலாரின் சமகாலத்தவர். சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் வள்ளலாரின் திருஅருட்பாக்கள் பாடப்படுவதையும், அவற்றையும் திருமுறைகள் எனச் சொல்லப்படுவதையும் இவர் விரும்பினாரில்லை.



திருமுறைகள் என்றால் அவை பன்னிரு திருமுறைகள் மட்டுமே. வள்ளலாரின் பாடல்கள் திருமுறை என்ற பெயரால் அழைக்கப்படக்கூடாது. மேலும் அவற்றை அருட்பா எனவும் அழைத்தல் தகாது. அவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்பதே அவர் கட்சி.



மேலும் வள்ளலாரின் சர்வசமயசமரச சன்மார்க்கத்தினால் மக்கள் வேற்றுமதங்களுக்கு ஆதரவுகளை நல்கி மதம் மாற்றப்பட்டுவிடுவார்கள் என்றும், வேற்று மதத்தினருக்கு இது ஆதரவு அளிக்கும் விதமாய் உள்ளதென்றும் முழுமையாக நம்பினார். ஆகவே பலவழிகளிலும் வள்ளலாரை எதிர்த்து வந்த இவருக்கும், வள்ளலாருக்கும் வழக்கு ஏற்பட்டது. இந்த வழக்கு நாளடைவில் முற்றிப் போய் நீதிமன்றப்படிகளையும் அடைந்தது. வழக்கு தினம். வாதியான ஆறுமுக நாவலர் பிரதிவாதியான ராமலிங்க அடிகளையும், அவர் வகுத்துள்ள சன்மார்க்கக் கொள்கைகளையும் எதிர்த்து வழக்காடுகிறார் என்று தெரிந்து கொண்ட பொதுமக்கள் கூட்டம் நீதி மன்றத்தில் அலை மோதியது. வாதியான ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்துவிட்டார். நீதிபதியும் தம் ஆசனத்தில் வந்து அமர்ந்து விட்டார். வள்ளலார் சற்றே தாமதமாக வந்தார். அவரைக்கண்டதும் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்கத் தம்மையும் அறியாமல் நீதிபதியும், ஏன்? ஆறுமுக நாவலரும் கூடவே எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். நீதிபதி ஆறுமுக நாவலர் எழுந்து மரியாதை செய்வதையும் கவனித்துக்கொண்டார்.



வழக்குத் தொடங்கியது. தம் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார் நாவலர். தாம் சிவத்தொண்டு செய்யும் சிவனடியார் எனவும், சைவ சமயத்தைப் பரப்பி வரும் தமக்கு வள்ளலாரின் இத்தகைய செயல்கள் மனதைப் புண்படுத்தி வருவதாயும், கூறினார் நாவலர். வள்ளலாரின் பாடல்களுக்கு அருட்பாக்கள் என்ற பெயரைச் சூட்டுவது தவறு என்றும் அவற்றிற்கு ராமலிங்கம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்ற பெயரே பொருத்தம் எனவும் கூறினார். வள்ளலார் கடைப்பிடிக்கும் மதமான சன்மார்க்கக் கொள்கைகளால் புறச் சமயத்தார் அதிகப் பலன் பெறுவார் என்றே தாம் எண்ணுவதாயும், இதனால் மதக் கலவரங்கள், மதமாற்றங்கள் நடைபெறும் என அஞ்சுவதாயும் கூறினார். இதன் பேரில் வள்ளலாரை நீதிபதி விசாரிக்கத் தொடங்கினார். வள்ளலார் எழுந்து நின்று தாம் பாடி வரும் பாடல்கள் அனைத்தும் இறைவன் அருளால் தம்முள்ளே இருந்து ஊறி வெளியே வரும் அருட்பாக்களே எனக் கூறிவிட்டுக் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்.



“நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்

வரவெதிர்கொண்டவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே

தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர்தான் அடைதல் குறித்தே.”

தம் இனிய குரலால் மேற்கண்ட பாடலைப்பாடிய வள்ளலார், தாம் செய்த குற்றம் தான் என்னவென வினவினார். மக்களின் நல்வாழ்க்கைக்காகத் தாம் பாடிய இந்த அருட்பாக்கள் மக்கள் நல்வழியே செல்லவும் ஜீவகாருண்யத்தோடும், ஒழுக்கத்தோடும் சாதிசமயபேதமற்ற சன்மார்க்கவழியைப் பின்பற்றவுமே பயன்படும் எனவும், இது மக்களை நல்வழியில் தானே செலுத்துகிறது? என் கடன் மக்களுக்குப் பணி செய்து கிடப்பதுவே என்றும் இறைவன் ஆணையால் தாம் செய்யும் இந்தப் பணிக்குத் தமக்குக் கிடைத்த பரிசு இதுவோ என வேதனையுடன் கூறி மனம் மிகவும் வருந்தினார். மேலும்

வாதுபேசிய மனிதர்காள் ஒரு

வார்த்தை கேண்மின்கள், வந்துநும்

போதுபோவதன் முன்னரே அருட்

பொதுவிலே நடம் போற்றுவீர்

தீது பேசினீர் என்றிடாதுமைத்

திருவுளங்கொளும் காண்மினோ

சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்

சுற்றம் என்பது பற்றியே!” என்று அறை கூவல் விடுத்தார்.



நீதிபதி சந்தோஷத்தை அடக்கமுடியாமல் தவித்த வண்ணம் ஆறுமுக நாவலரைப் பார்த்தார். வள்ளலார் மேலும், தாம் மக்களின் மூடப்பழக்கவழக்கங்களையே அகற்றப் பாடுபடுவதாயும். ஒழுக்கத்தோடும் ஜீவகாருண்யத்தோடும் வாழ்ந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்றே மக்களிடம் கூறி வருவதாயும், பொய் வேடம் போட்டுப் புனைந்து பாடிப் பிழைக்கவில்லை எனவும் கூறினார். மற்ற மதவாதிகளுக்கு எதிராகப் போரிடும்படி மக்களைத் தாம் ஒருபோதும் வற்புறுத்தியதில்லை என்றும் மெய்யுணர்வோடு ஆண்டவனை அடையவே தாம் பாடிவருவதாயும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி ஆறுமுக நாவலரிடம் இதற்கு அவர் பதில் என்ன என்று கேட்க, நாவலர் பதிலொன்றும் கூறமுடியாமல் தவித்தார்.



நீதிபதி மேலும் நாவலரிடம், கடவுளுக்குப் பரத்துவம் சொல்லும் அனைவரும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றே கூறிவருவதை அவர் ஒப்புக்கொள்கிறாரா எனக் கேட்டார். நாவலரும் தமது சமய ஞானிகள் பலகாலமாக வற்புறுத்தி வரும் பேருண்மை இதுவே எனக் கூறி ஒத்துக்கொண்டார். அப்போது நீதிபதி அப்படிப் பார்த்தால் சைவக் குரவர்களான நால்வரைப் போலவே இறையருள் பெற்றே வள்ளல் பெருமானும் பாடல்களைப் பாடி வருவதாகவும் இல்லை எனில் இத்தகைய அற்புதமான பாடல்களை அவரால் பாட இயலாது என்றும் தாம் கருதுவதாய்க் கூறினார். மேலும் நீதிமன்றத்தினுள் வள்ளலார் நுழைகையில் நாவலரும் எழுந்திருந்து மரியாதை செய்தது ஏன் எனக் கேட்க நாவலருக்குப் பேச்சு எழவில்லை. பின்னர் வள்ளலாரைக் கண்டதுமே தம்மை மீறிய உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்கு மரியாதை கொடுத்ததாய் ஒப்புக்கொண்டார். உடனே நீதிபதி நாவலர் கூறியது போல் வள்ளலாரின் பாடல்கள் மருட்பாக்கள் என்றால் வழக்குத் தொடுத்த வாதியான நாவலரே எழுந்திருந்து பிரதிவாதிக்கு மரியாதை செய்திருக்க மாட்டார்; ஆகவே இவை அருட்பாக்கள் தாம் என்றே தாம் தீர்ப்பளிப்பதாய்க் கூறினார். அத்தோடு வழக்கும் முடிந்தது.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இதன் நடுவே வேட்டவலம் என்னும் ஊரில் ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அருணாசல, வசந்த, கிருஷ்ண, வாணாதராய அப்பாச்சாமி பண்டாரியார். அவர் மாளிகைக்கு அடிகளார் விஜயம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்தன. அழகான சிங்காதனம் அலங்கரித்து வள்ளலாரை வரவேற்கத் தயாரானார் ஜமீந்தார். வள்ளலாரும் வேலாயுத முதலியாருடன் வந்து சேர்ந்தார். அடிகளாரை வணங்கி வரவேற்ற ஜமீந்தாரிடம் தம்முடன் வந்த வேலாயுதம் முதலியாரை அறிமுகம் செய்து வைத்தார் அடிகளார். பின்னர் அடிகளார் ஜமீந்தாரிடம், “ஜமீந்தாரே, நீர் இந்தக் கூடத்தில் இரண்டு ஆசனங்கள் போட்டிருக்கிறீர். இதில் தாங்கள் விரும்பிய ஆசனத்தில் நான் அமர்ந்து கொள்கிறேன். மற்றதில் தாங்கள் அமரலாம். “என்று கூறிக்கொண்டே ஜமீந்தார் நினைத்த ஆசனத்தில் வள்ளார் அமர்ந்தார். ஜமீந்தாருக்குத் திகைப்பும், பயமும் ஏற்பட்டது. அப்படியே பெருமானின் திருவடிகளில் விழுந்துவிட்டார்.



வள்ளலார் பதறிக்கொண்டே அவரை எழுப்பினார். எழுந்த ஜமீந்தார் கண்கள் கலங்கி நீரைப் பொழிந்தன. வள்ளலாரிடம் தம்மை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். சுவாமிகளின் பெருமையை முற்றிலும் அறியாத தாம் அவரைப் பரிசோதனை செய்ய இருந்ததையும், அதற்காகவே இங்கே இரு ஆசனங்கள் போட்டதாயும் கூறினார். மேலும் தாம் நினைத்த ஆசனத்தில் வள்ளலார் அமர்ந்தால் அவரே தம்மை ஆட்கொள்ள வந்த ஈசன், தேவன் என அவரை ஏற்றுக்கொள்ள இருந்ததாயும் கூறினார். இது அனைத்தையும் கண்ட வேலாயுத முதலியார், ஜமீந்தாரிடம் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டே பெருமான் வந்து தம்மைப் பரிபூரணமாக ஜமீந்தார் உணரும்படி காட்டிக்கொண்டு விட்டார் என்று பெருமிதம் கொண்டு அதை ஜமீந்தாரிடம் கூறவும் செய்தார். ஜமீந்தாரும் தாம் தம் தவறை உணர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தம் ஞானகுரு இனி வள்ளலார் பெருமான் தான் என்றும், இவரின் பணிகளைச் செய்வதையேத் தம் வாழ்நாளின் லக்ஷியமாய்க் கொள்ளப் போவதாயும் சங்கல்பம் எடுக்கப் போவதாயும் கூறினார். அதைக் கேட்டுக்கொண்ட வேலாயுத முதலியாரும் , வள்ளலாரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கே ஜமீனைக் காண வந்ததில் இருந்து ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று ஜமீந்தாரிடம் கூறினார்கள். ஜமீந்தாரும் என்ன சந்தேகம் எனக் கேட்க வேலாயுத முதலியார் ஜமீன் ஆட்கள் ஆடுகள், கோழிகளை நிறையக் கொண்டு போவதைப் பார்த்து எதற்கு எனத் தாங்கள் இருவரும் சந்தேகம் கொண்டதாய்த் தெரிவித்தார்.



அதற்கு ஜமீந்தார் தம்முடைய இரு மனைவியராலும் தமக்குப் பெரும் தொல்லையே, எந்தவிதமான சுகமும் இல்லை எனக்கூறி வருந்த, மேலே கூறும்படி வேலாயுத முதலியார் தூண்ட, ஜமீந்தார் தம் மூத்த மனைவியை பிரம்ம ராக்ஷஸ் பிடித்துக்கொண்டு ஆட்டுவதாயும், இளைய மனைவியை மஹோதரம் பீடித்திருப்பதாயும் கூறி வருந்தியதோடு அல்லாமல் கண்களும் கலங்கினார். அனைத்தையும் மெளனமாய் வள்ளலார் கேட்டுக்கொண்டிருந்தார். ஜமீந்தார் மேற்கொண்டு தம் இரு மனைவியரில் மூத்தவளை இரும்புச் சங்கிலியில் கட்டி வைத்திருப்பதாயும், இளையவள் மற்றோர் அறையில் படுத்த படுக்கையாய் இருப்பதாயும் கூறினார். வேலாயுதமுதலியார் இந்தக் கொடுமையைக் கேட்டதும் மனம் பரிதவித்துப் போனார். மேலே பேசிய ஜமீந்தார் இருவரின் உடல்நலமும் சரியாக வேண்டிக் காளிகோயிலுக்குப் பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்று காளிகோயில் பூசாரி கூறினதாகவும் தெரிவித்தார்.



அவ்வளவு நேரமும் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்த வள்ளல் பெருமானுக்கு இப்போது கோபம் மிகுந்தது. “அப்படி என்றால்?’ என்று கோபமாய்க் கேட்டுவிட்டு ஜமீந்தாரையும் கோபமாய்ப் பார்த்தார். ஜமீந்தாருக்கு விஷயம் சரியாய்ப் புரியாமல் வள்ளலாரிடம், “ காளிக்குப் பலி கொடுக்கவேண்டியே ஆடுகளும், கோழிகளும் செல்வதாகவும், அவற்றைத் தான் ஜமீன் ஆட்கள் கொண்டு போவதாயும் கூறினார். வள்ளலார் மனம் பதறியது. உடல் துடித்தது. மனம் வேதனையில் ஆழ்ந்தது. வேதனை பொறுக்க முடியாமல் கதற ஆரம்பித்தார். “பண்டாரியாரே, மாபெரும் தவறு செய்கிறீர். மன்னிக்க முடியாத தவறு!” என்று கடுமையாகக் கூறினார். ஜமீந்தாருக்கு ஒரு பக்கம் காளி கோயில் வழிபாடு நின்றுவிடுமோ என அச்சம்; அதே சமயம் வள்ளலாரின் வார்த்தைகளை மீற முடியாதே என்ற கவலையும் மீதூற அவரும் அழுதுவிடுவார் போல் இருந்தது. வள்ளலாரிடம் தாம் செய்ய வேண்டியது என்ன என்று கேட்க, பெருமானின் பொறுமை எல்லை கடந்தது.



இந்தப் பலி கொடுக்கும் கொடிய வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அறியாமையாலும், மூட நம்பிக்கையாலும் மக்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமை உலகை விட்டே செல்ல வேண்டும் என்றும் சங்கல்பங்கள் செய்து ஜமீந்தாரிடம் ஆணையிட்டார். ஜமீந்தாருக்கோ தம் இரு மனைவியரின் உடல்நிலை குறித்துக் கவலை. பரிதாபமாய்ப் பெருமானைப் பார்த்தவண்ணம், “பெருமானே, தாங்கள் சொல்வது சரியே. ஆனாலும் என்னைத் தவறாக நினைக்காதீர். என்னிரு மனைவிகளையும் நான் எவ்வாறு காப்பாற்றுவேன்? எனக்கு வேறு வழி தெரியவில்லையே! தாங்களே இதற்கொரு வழிகாட்டியருள வேண்டும் சுவாமிகளே!” என்று ஜமீந்தார் வேண்டினார். வள்ளலார் தாம் பின்னர் அவர் மனைவிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதாயும் தற்சமயம் இந்தப் பலியென்னும் பெயரில் நடைபெறப்போகும் உயிர்வதையை நிறுத்தும்படியும் ஆணையிட்டார். சுவாமிகளின் பேச்சில் நம்பிக்கை வரப்பெற்ற ஜமீந்தார் பணிவோடு தாம் அங்கே சென்றதுமே இவை ஆரம்பம் ஆகும் என்பதால் தாம் கோயிலுக்குச் செல்லாமல் நின்றுவிடுவதாய்க் கூற, அப்படியும் பெருமான் மனதில் நிம்மதி வரவில்லை. என்றாலும் ஜமீந்தார் மேலும் மேலும் உறுதியுடன் கூறிச் சத்தியம் செய்யப் பெருமான் அமைதியடைந்து அவர் மனைவியரில் முதல் மனைவியை முதலில் அழைத்துவரச் சொன்னார்.



அவளை அழைத்து வந்தால் ஏதேனும் தொந்திரவு கொடுப்பாளே என ஜமீந்தார் பயப்பட, வள்ளலார் அச்சமில்லாமல் அழைத்து வரச் சொன்னார். வேலாயுத முதலியாரும் வள்ளல் பெருமான் சொன்னபடி செய்யுமாறு அறிவுரை கூற ஜமீந்தாரும் முதல் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார். அவள் கைகளில் இருந்த விலங்குகளை அகற்றும்படி வள்ளலார் கட்டளையிட அங்கனமே விலங்குகள் அகற்றப்பட்டன. சுவாமிகள் தம் கண்கள் மட்டுமின்றி உடல் முழுதும் கருணை பொங்கி வழிய அவளைப் பார்த்து, “தாயே சுகமா?” என்று ஒரே வார்த்தைதான் பேசினார். அவ்வளவுதான் அவள் ,”சுவாமி, சுவாமி, என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நான் இந்த க்ஷணம் ஓடிவிடுகிறேன்.” என்று துடிதுடித்துக்கொண்டு கூற, அவள் குரலோ ஆணைப் போன்ற கட்டைக்குரலாக இருந்தது. வள்ளல் பெருமான், “ஓடிப் போ, ஓடிப் போ, ஓடிப்போ!” என்று கூற, “போனேன், போனேன், போனேன்!” என்று கர்ணகடூரமான ஓலக்குரலில் கூறிக்கொண்டே அந்த ஓலம் வெகு தூரத்தில் போய்க் கரைந்தே போனது. வள்ளலார் பெரும் கருணை உள்ளத்தோடு அந்த அம்மையாருக்குத் திருநீறு அளித்து அதை நெற்றியில் இட்டுக்கொள்ளும்படி கூறி இனி எந்தத் துன்பமும் அவருக்கு வராது என உறுதியும் கூறினார். அந்த அம்மையாரும் இப்போது சாந்தமாய்க் காணப்பட்டார்.


மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த ஜமீந்தார் தம் இரண்டாவது மனைவியை அழைத்து வரச் செய்ய அதற்குள் அவள் தானாகவே அங்கே வந்து பெருமான் திருமுன்னர் நின்று வணங்க அவளிடமும் திருநீறு அளித்த பெருமான் அவளை திருநீற்றை இட்டுக்கொள்ளச் செய்து, உடல்நலம் எப்படி இருக்கிறது என விசார்ரிக்க, அவளோ பெருமானின் திவ்யக் கருணையால் தன் உடல் நலமாகவே உள்ளது என்றும் மஹோதரம் முற்றிலும் குணமாகிவிட்டது சென்றும் கூறி பெருமானை வணங்கிச் சென்றாள். பின்னர் பெருமான் பண்டாரியாரிடம் உயிர்ப்பலியைத் தடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கூறி, கடவுளின் பெயரால் நடைபெறும் இத்தகைய அக்கிரமங்களைத் தடுக்க வேண்டும் என்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னையும், பிதாவுமான ஈசன் தன் குழந்தைகளைத் தனக்கே பலி கொடுக்கச் சொல்லுவானா? என்றும் கேட்டார்.

மேலும் பூசாரிகள் பணத்தாசை பிடித்துப் பித்தலாட்டங்களில் இறங்குவதையும் சுட்டிக்காட்டி, ஆண்டவன் பெயரால் நடைபெறும் இத்தகைய அநியாயங்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்றும் கூறினார். ஜமீந்தாரும் வள்ளலாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தார். அதன் மேல் அங்கிருந்து கிளம்பிய வள்ளலார் வடலூர் தருமச் சாலைக்கு வந்து சேர்ந்தார். அவர் பேரில் வழக்கு ஒன்று தொடுக்கப் பட்டிருந்தது. அதற்காகக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்திற்குப் பெருமான் வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

செயலற்றுப் போன கள்வர்கள் தங்கள் செயலுக்கு வருந்தி அடிகளாரிடம் மன்னிப்புக் கேட்டுத் தங்களை விடுவிக்கும்படி இறைஞ்ச, பெருமானும் மனமிரங்கி அவர்களை விடுவித்தார். வண்டியோடு அடிகளைச் சுற்றி வந்து நிலத்தில் விழுந்து வணங்கிய இருவரும் இனி திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு உழைத்துப் பிழைப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் ஓடிய சேவகனும் நடந்ததை எல்லாம் பார்த்துவிட்டு அடிகளின் பெருமையை அறிந்து கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.”



வேலாயுத முதலியார் தொடர்ந்து சென்னையில் இருக்கையிலும் இது போன்றதொரு சம்பவம் நடந்ததாய்க் கூறவே ஆறுமுக முதலியார் அது என்ன எனக் கேட்க, வேலாயுத முதலியார், “அப்போதெல்லாம் அடிகளின் காதில் கடுக்கன் போட்டிருந்தார். ஒரு நாள் தூங்குகையில் அடிகளின் ஒரு காதில் இருந்த கடுக்கனைக் கழற்றினான் கள்வன். அடிகளோ தூங்கவில்லை; ஆனாலும் கள்வனுக்கு வசதியாகத் திரும்பிப் படுத்து மறு காதையும் காட்டவே அவன் இரண்டு கடுக்கன்களையும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதன் பின்னர் சுவாமிகள் கடுக்கனே அணியவில்லை என்று கூறினார். இருவரும் அடிகளின் வாழ்க்கையில் நடந்த இந்தத் திருவிளையாடல்களைக் குறித்து ஒருவருக்கொருவர் பேசிப் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது இருவரும் பேசுவதைக் கேட்ட வண்ணம் அடிகளாரே அங்கு வந்தார். அடிகளார் தம்மிடம் இருந்து திருடிச் சென்றதைத் தாம் பெரிய விஷயமாக நினைக்கவில்லை எனவும், தம்மை ஆண்டவன் அருள் காக்கும் எனவும் கூறினார். ஆனால் மிகவும் கடினமாக உழைத்துச் செல்வம் சேர்க்கும் மக்களிடமிருந்து இந்தக் கள்வர்கள் திருடிச் செல்வதைத் தான் தம்மால் தாங்க முடியவில்லை என்றும் கூறி வருந்தினார். அதை நினைத்தால் தம் உள்ளமும், உடலும் நடுக்குறுகிறது எனவும் கூறினார். அதைக் குறித்து ஒரு பாடலும் பாடினார்.

“இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த

இருப்பெல்லாம் கள்லர்கள் கூடிக்

கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்றெனது

காதிலே விழுந்தபோதெல்லாம்

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி

வெதுப்பல்போல் வெம்பினேன் எந்தாய்

உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்

டுளம் நடுக்குற்றான் பலகால்.”



சிலநாட்களில் சிதம்பர தரிசனத்திற்காகத் தில்லை சென்றார் அடிகளார். அங்கே நடராஜ மூர்த்தியின் சந்நிதியில் நின்று மெய்ம்மறந்து மனமுருகினார். ஈசனின் பேரருளை நினைத்து நினைத்து வியந்தார். தம்மை ஆட்கொண்ட விதத்தில் மனம் உருகினார். தம்மை இந்தச் சன்மார்க்க வழியில் செல்லுமாறு பணித்த இறைவனின் திருவிளையாடலை நினைத்து நினைத்து மனம் விம்மிப் பெருமிதமுற்றார். பல சமயங்கள், பல மதங்கள் என்று போராடி, வாதாடிக் களைப்புற்றுப் போர் செய்து ஏதும் அறியாமல் இறந்து வீணாகும் மக்களைத் தடுத்தாட்கொண்டு உண்மையை அறியச் செய்யவேண்டி தமக்கிட்ட பணியை நினைத்து ஆனந்தம் கொண்டார். தம்மைத் தன் பிள்ளை போல் கருதி இறைவன் இட்ட கட்டளையைத் தாம் சிரமேல் தாங்கி நடத்திச் செல்வதாகவும் உறுதி கொண்டார். சன்மார்க்க நெறியை, உண்மைப் பொருளை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய இறைவனின் அருளை வேண்டினார். இந்த நடராஜ மூர்த்தியின் கருணை இல்லாம் தாம் இவ்வாறு அரிய செயல்கள் செய்திருக்க முடியாது என்றுணர்ந்து உள்ளம் உருகி நடராஜ மூர்த்தியைப் போற்றிப் பாடினார்.

“உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன் ஆணை இதுநீ

என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்

என்ன செய்வேன் எங்குறுவேன் எவருக்குரைப்பேன் எந்தாய்

அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்

அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாதென்றே

இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்

இது தருணம் அருட்சோதி எனக்கு விரைந்தருளே”

என்று பாடினார். அருகே இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த சிவாசாரியார் ஒருவர், ஆஹா அற்புதமான மனதை மயக்கும் இனிய குரல். தாங்கள் தான் வள்ளல் பெருமான் எனத் தெரிகிறது. தங்கள் அருட்பாக்களைப் படித்திருக்கிறேன். நான்கு திருமுறைதான் தெரியும். இன்றுதான் இந்தத் தில்லை அம்பலத்திலே தங்கள் திருவாயால் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.” என மகிழ்ந்தார். அடிகளாரும் அவரை மரியாதை நிமித்தம் வணங்கினார். அந்த சிவாசாரியார் தமக்கு அருகிலுள்ள துக்குடி ஆடூர் என்னும் கிராமம் என்றும் தம் பெயர் சபாபதி சிவாசாரியார் எனவும் கூறி அறிமுகம் செய்து கொண்டார். தாமே அவரைச் சந்திக்க எண்ணம் கொண்டிருந்ததாய் அடிகளார் தெரிவிக்கவே சிவாசாரியாரும் தம்மைச் சந்திக்க விரும்பிதன் காரணத்தைக் கேட்டார்.


அப்போது அடிகளார் அவர் வேத ஆகமக் கடல் என்பதைத் தாம் அறிந்திருப்பதாய் சிவாசாரியாரின் பெருமையைப் போற்றிவிட்டுத் தம் தருமச் சாலைக்கு அருகே வடற்பெருவெளியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ஒன்றைத் தாம் ஏற்படுத்த வேண்டி ஆண்டவர் திருவருள் எனவும் அதற்கு ஆண்டவன் கட்டளை கிடைத்திருப்பதாயும் கூறினார். சிதம்பரம் எவ்வாறு பூர்வ ஞான சிதம்பரமாக இருக்குமோ அவ்வாறே தம் சத்திய ஞான சபை இருக்கப் போகும் வடலூர் உத்தர ஞான சிதம்பரமாக விளங்கும் எனவும் கூறினார். சத்திய தருமச்சாலை எவ்வாறு மக்களின் பசியைத் தீர்க்கிறதோ அவ்வாறே சத்திய ஞானசபை அருட்பெரும்சோதி, தனிப்பெரும் கருணையான ஈசனின் ஞான அருளைப் பெற்று அடியார்களை உய்விப்பதாகும். ஆகவே அந்தச் சத்திய ஞானசபையைத் தாம் ஏற்படுத்தப் போகும் காலம் சபாபதி சிவாசாரியாரின் சேவை தமக்குப் பயன்படும் எனவும் கூறினார். தாம் போய் சரியான தேதியைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவதாகவும் சிவாசாரியார் அவர்கள் வந்து பணி ஏற்றுத் தம்மைப் பெருமைப் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளல் பெருமானின் புகழ் மேன்மேலும் பரவியது. அவரின் சொற்பொழிவுகளையும், அருட்பிரசங்கங்களையும் கேட்ட மக்கள் தாமாகவே வலிய வந்து கொல்லாமை விரதம் பூண்டனர். பலரும் வள்ளல் பெருமானிடம் வந்து அவரை நமஸ்கரித்து அவருடைய பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து தாங்கள் கொல்லாமை விரதம் பூண்டிருப்பதைச் சொல்லி மகிழ்ந்தார்கள். வள்ளலாரும் கருணையுடன் அவர்களை ஆசீர்வதித்தார். ஒரு சிலர் சத்தியமும் செய்தனர். இன்னும் சிலர் தாங்கள் கொல்லாமை விரதம் பூண்டதில் இருந்து தங்கள் வயல்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதாயும் கூறினார்கள். விளைச்சலில் கால் பங்கு தானியத்தை மிகவும் மனம் உவப்போடு தருமச் சாலையின் அன்னதானத்திற்கு தானமாகவும் வழங்கினார்கள். ஒரு நாள் இவற்றைப் பற்றி எல்லாம் வள்ளலார் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கையில் அங்கிருந்த அமாவாசை என்னும் பணியாள், சற்றே ஒதுங்கி நிற்க வள்ளலார் அவரை அழைத்து என்ன விஷயம் என விசாரித்தார்.



அமாவாசை எல்லாரும் பேசிக்கொண்டிருந்ததைத் தானும் கேட்டதாகவும், அனைவரையும் போல் தனக்கும் அதிர்ஷ்டம் அடித்திருப்பதாயும் கூறினார். அங்கிருந்த வேலாயுத முதலியாரும் இதைக் கேட்டு உற்சாகத்துடன் மேற்கொண்டு கேட்கத் தயாரானார். அப்போது அமாவாசை அடிகளோடு புலவர் வேலாயுத முதலியாரும் சேர்ந்தே தனக்கு அறிவுரை கூறியதாக நினைவூட்டவே, முதலியார் தாம் அந்த விஷயம் என்னவென்பதை அடியோடு மறந்துவிட்டதாகவும், மீண்டும் கூறும்படியும் கேட்டார். அமாவாசை அதற்கு ஆறுமாசம் முன்னால் சுவாமிகள் அமாவாசையிடம் மாடுகளைச் செத்தபின்னர் சாப்பிடும் வழக்கத்தை விடும்படி கூறியதை நினைவூட்டினார். அப்படியே தான் செய்து வந்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் சுவாமிகள் அழைத்து மாமிசம் மாட்டினுடையது மட்டுமல்லாமல், மீன், ஆட்டு மாமிசம் என எவ்வகையில் ஆனாலும் உண்ணக்கூடாது எனவும் அறிவுறுத்தியதாய்ச் சொன்னார். அப்போது அமாவாசை தாங்கள் இருக்கும் சேரியில் பங்காய்க் கிடைக்கும் மாமிசத்தை விட்டுவிட்டால் தான் செலவுக்குத் திண்டாடும்படி நேர்ந்துவிடுமே எனக் கவலைப்பட்டதாயும், சுவாமிகளோ, கொல்லாமை விரதம் கடைப்பிடிப்பதை வலியுறுத்தியதையும், புலவரும் அப்போது அங்கே இருந்தவர் சுவாமிகள் சொன்னபடியே செய்யுமாறு அமாவாசையைக் கட்டாயப் படுத்தினதையும் நினைவூட்டினார். வேலாயுத முதலியாருக்கு இப்போது நினைவில் வந்தது.



அமாவாசை மேலே தொடர்ந்து அதன் பின்னர் சுவாமிகள் அரை ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து தன்னிடம் கொடுத்துப் பெட்டியில் வைத்துக்கொள்ளச் சொன்னதாகவும், அன்றிலிருந்து தினம் அரை ரூபாய் கிடைக்கும் என உறுதியாகச் சொன்னதையும் நினைவூட்டினார். அதேபோல் அமாவாசை கொல்லாமை விரதம் கடைப்பிடித்து அடிகளாரின் அறிவுரைகளின்படியே இருந்துவர அன்றிலிருந்து தினமும் எப்படியாவது அரை ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிட்டுவதாயும் கூறி அடிகளின் காலில் விழுந்தார். மேலும் அன்று வரை தான் மட்டுமே கொல்லாமை விரதம் கடைப்பிடித்ததாகவும், இனி தன் குடும்பத்தினரையும் இருக்கச் சொல்லிச் செய்யப் போவதாகவும், இனி அவர் குடும்பத்தினர் அனைவரும் மாமிசமே உண்ணாமல் இருப்பார்கள் எனவும் உறுதி அளித்தார். அமாவாசையை ஆசீர்வதித்து அனுப்பினார் அடிகளார்.



ஒருநாள் காலைவேளையில் தியானம் முடித்து, பூஜை முடித்து, அன்னதானமும் முடித்து வேலாயுத முதலியாருடன் தருமச்சாலையில் வந்து அமர்ந்த அடிகளின் முன்னால் ஆறுமுக முதலியார் ஓட்டமாய் ஓடி வந்து முதல்நாள் இரவு அடிகள் போர்த்தி இருந்த போர்வையைக் கள்வன் களவாடிக்கொண்டு போய்விட்டான் என்ற செய்தி தெரிந்து தாம் ஓடோடி வந்ததாய்க் கூறினார். மிகுந்த பதட்டத்துடன் இருந்தார் ஆறுமுக முதலியார். சுவாமிகள் அவரைச் சாந்தப் படுத்த ஆறுமுக முதலியார் நடந்தது என்ன எனக் கேட்டார். சுவாமிகள் முதல் நாள் கூடலூர் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து குள்ளஞ்சாவடி வந்தபோது அங்குள்ள சத்திரத்துத் திண்ணையில் தங்கியதாகவும் கூறினார். சத்திரக் காவல்காரன் சுவாமிகளைக் கண்டு இன்னார் எனத் தெரிந்து கொண்டு போர்வை ஒன்றைப் போர்த்திக்கொள்ளக் கொடுத்ததாயும் கூறினார். மேலும் அந்தக் காவல்காரர் முஸ்லீம் அன்பர் எனவும், அடிகளுக்குத் துணை யாரும் இல்லை எனத் தெரிந்து கொண்டு அடிகளோடு தங்கியதாகவும் கூறினார். இருவரும் திண்ணையிலேயே படுத்திருக்கையில் கள்வன் ஒருவன் வந்து அடிகளின் போர்வையை இழுக்க, உடனே விழித்துக்கொண்ட அடிகள் , தாம் விழித்தது கள்வனுக்குத் தெரிந்தால் போர்வை அவனுக்குக் கிடைக்காது என எண்ணிப் புரண்டு படுத்ததாகவும் கள்வன் போர்வையை எடுத்துக்கொண்டு விட்டான் எனவும் கூறினார். காவலர் விழித்து எழுந்தவர் கள்வனை அதட்ட, அடிகள் போனால் போகட்டும் எனக் காவலரைச் சமாதானம் செய்துவிட்டுப் போர்வையைக் கள்வனிடம் கொடுத்து, “இனி திருட்டுத் தொழில் வேண்டாம்.” என்று அறிவுரை கூறியதாகவும் சொன்னார். பின்னர் காலை எழுந்து தருமச்சாலைக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். ஆறுமுக முதலியாரிடம் இதற்காகப் பதட்டம் அடைய வேண்டாம் எனவும் அன்புடன் கூறினார். அப்போது வேலாயுத முதலியார், இம்மாதிரி நடப்பது இது முதல் முறை அல்ல;ஏற்கெனவே இருமுறை நடந்துள்ளது என்று கூற ஆறுமுக முதலியார் ஆச்சரியமடைந்தார்.

ஆனால் வள்ளலார் இவை எல்லாம் வேண்டாம் எனத் தடுக்க, வேலாயுத முதலியாரோ தான் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்ட, அவர் இஷ்டம் போல் செய்யச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார் அடிகளார். வேலாயுத முதலியார் தொடர்ந்தார்:



ஒரு சமயம் மஞ்சக்குப்பம் கோர்ட்டில் வேலை பார்க்கும் சிரஸ்தேதார் ராமச்சந்திர முதலியார் வடலூருக்கு வந்து அடிகளைத் தம்மூருக்கு வந்து தங்கும்படி அழைத்ததாகவும், அதன் பேரில் அடிகளும் அவருடன் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறினார். இருவரும் வண்டியில் சென்றிருக்கிறார்கள். இதே குள்ளஞ்சாவடி அருகில் இரவு கள்வர் இருவர் வண்டியை மறித்திருக்கின்றனர். வண்டியில் சிரஸ்தேதார் சேவகன் இருந்தும், அவனும், வண்டியை ஓட்டி வந்த வண்டிக்காரனும் பயந்து போய் அருகே இருந்த முந்திரிக்காட்டுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டார்கள். கள்வர்கள் வண்டியின் பின்புறம் வந்து வண்டியுள்ளே அமர்ந்திருப்பவர்களைக் கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்த, முதலில் சிரஸ்தேதார் கீழே இறங்கினார். அவர் கை விரலில் வைர மோதிரம் இருந்தது. கள்வர்கள் அதைக் கழட்டச் சொல்லி அதட்டினார்கள். அப்போது பெருமான் அவர்களைப் பார்த்து, “என்ன அவசரமோ?” என்று கேட்க, அவர்கள் பெருமானை அடிப்பதற்காகத் தடியை உயர்த்தினார்கள். உயர்த்தின கைகள் அப்படியே செயலற்று நிற்கக் கண்ணும் தெரியவில்லை அவர்களுக்கு.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

உலவச் செல்கையில் கூட்டத்திலிருந்து பிரிந்து தூரம் செல்வதும், கிட்டே இருப்பது போல் தோற்றமளிப்பதுவும், தகுதியற்றவர்கள் உபதேசம் கேட்க நினைத்தால் விலகிச் செல்வதுமாக சுவாமிகளின் எண்ணற்ற திருவிளையாடல்களை மக்கள் பேசி மகிழ்ந்தனர். ஒரு சமயம் சமைத்த உணவு இரவு நேரம் குறைவாக இருக்கையில் திடீரெனப் பலர் பசியோடு வர, சுவாமிகள் அந்த உணவைத் தாமே தம் திருக்கரங்களால் அனைவருக்கும் பரிமாற அமுதசுரபி போல் உணவு வந்து கொண்டே இருந்ததோடு அனைவரும் உண்டு முடித்தும் மீதம் இருந்தது. அரிசி தீர்ந்து போய் விட்டதே என தருமச் சாலைக்காப்பாளர் கவலைப்பட்டால், சுவாமிகள் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு மறுநாளே அரிசியும், உணவுப்பொருட்களும் வரும் எனச் சொல்வாராம். அதே போல் மறுநாள் ஏதேனும் ஓர் அடியார் அரிசியும், உணவுப் பொருட்களும் அனுப்பி வைப்பார்கள். தருமச் சாலையில் இருந்தவர்களை சாலையின் ஒரு பகுதியிலேயே திரையிட்டுவிட்டுப் பின்னர் அதை விலக்கிக் காட்டி சிதம்பர தரிசனத்தைக் கண் குளிர தரிசனம் செய்ய வைத்தார். இவ்விதம் பல்வேறு சித்து விளையாட்டுக்களை அநாயாசமாய் சுவாமிகள் செய்து வந்தார்.



ஒரு சமயம் முன்பகலில் தருமச்சாலையின் முன் வராந்தாவில் அமர்ந்திருந்த வள்ளலார் எவரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். அங்கே இருந்த வேலாயுத முதலியாருக்கும், அவரது மகனுக்கும் ஏதோ அதிசயம் அல்லது புதுமை நடக்கப் போகிறது என்ற உணர்வு தோன்றியது. பெருமானும் உடனே முதலியாரிடம், “புலவரே, சற்று நேரம் வேடிக்கை பாரும்; ஒரு மேதாவி வருகிறார்.” என்று கூறவே முதலியார் அவர் யாரென விசாரித்தார். அதற்கு வள்ளலார் அவர் பெயர் பிநாகபாணி முதலியார் என்றும் புதுச்சேரி தபால், தந்தி அலுவலக மேலாளர் எனவும் கூறினார். பன்மொழி விற்பன்னரான அவர் வள்ளலாரின் மொழியறிவைப் பரிசோதிக்க வேண்டி இங்கே வருவதாகவும் கூறினார். முதலியாருக்கு வருத்தமும், கோபமும் மேலிட்டது. நம் சுவாமியை ஒருவர் சோதிப்பதா என்ற எண்ணமும் ஏற்பட்டது. என்றாலும் பொறுத்துக்கொண்டு, அவர் சுவாமிகளுக்குப்புத்தி சொல்ல வரவில்லை என்றும், சுவாமிகளிடம் அறிவுரைகள் கேட்டுப்புத்தி சரியாக்கிக் கொண்டு போகவே வருவதாயும் கூறிவிட்டு அமைதியாக வருபவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.



பிநாகபாணி முதலியாரும் வந்து வள்ளலாரை வணங்கி நின்றார். அவரை அமரச் செய்த வள்ளலார் தாமும் பதில் வணக்கம் செய்தார். பின்னர் பிநாகபாணி முதலியார் வந்த நோக்கத்தை வினவ அவரும், தம்முடைய மொழி ஆராய்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை சுவாமிகளைக் கேட்டுத்தெரிந்து கொள்ள வந்திருப்பதாய்க்கூறினார். வெளிப்படையாய் இப்படிப்பணிவைக் காட்டினாலும் உள்ளுக்குள் சுவாமிகளை நோக்கி நகைக்கிறார் என்பது வேலாயுத முதலியாருக்கும் புரிந்தது. சுவாமிகளோ அமைதியே காத்தார். பிநாகபாணி முதலியாரிடம்வேலாயுத முதலியாரைக் காட்டி, இவர் உபயகலாநிதி தொழுவூர் வேலாயுத முதலியார். ஆறு மொழிகளில் நல்ல புலமைகொண்டவர் என அறிமுகம் செய்து வைத்தார். பிநாகபாணி முதலியாரும் வேலாயுத முதலியாருக்கு வணக்கம் செய்ய அவரும் பதில் வணக்கம் செய்தார். பின்னர் புலவரின் மகனைக் காட்டி வள்ளலார் இவன் புலவர் மகன் நாகேஸ்வரன், ஐந்து வயதுச் சிறுவனானாலும் ஆறு மொழிகளில் வல்லவன் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். நாகேஸ்வரனும் பிநாகபாணி முதலியாரை வணங்க, அவரும் இந்தச் சிறுபிள்ளையும் ஒரு புலவரா என எண்ணிக் கொஞ்சம் கலங்கினார். ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் குழந்தையை ஆசீர்வதித்தார்.



வள்ளலார் பிநாகபாணி முதலியாரிடம் அவரின் சந்தேகங்களை அந்தச் சிறுவனிடம் கேட்குமாறும் அவனால் தீர்த்து வைக்க இயலும், என்றும் எந்த மொழியிலும் கேட்கலாம் எனவும் கூற பிநாகபாணி முதலியார் நடுங்கிப்போனார். அச்சம் மேலேற, அவர் உடல் வெட வெடத்து நடுங்க, வள்ளலார் காலில் விழுந்து வணங்கினார். தன்னுடைய அகம்பாவத்தை ஒப்புக்கொண்டு வள்ளலாரின் மொழி ஞானத்தைத் தாம் பரிசோதிக்க வந்ததையும் ஒப்புக்கொண்டு அது எவ்வளவு பெரிய தவறு எனத் தாம் உணர்ந்துவிட்டதாயும், பால் மணம் மாறாப்பாலகனை வைத்துத் தம் அகந்தையை அகற்றியதற்கு வள்ளலாருக்கு நன்றி கூறியதோடு அல்லாமல் தம் அக்ஞானம் அகன்றதாயும் கூறி மேலும் மேலும் வணங்கினார். வள்ளலார் அமைதியுடன் அவரிடம், “பிநாகபாணி முதலியாரே! கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு என்பதைப்புரிந்து கொண்டிருந்தால், உணர்ந்து கொண்டிருந்தால் இந்த அகந்தையும் கர்வமும் உம்மை ஆட்டிப் படைத்திருக்காது. போனது போகட்டும். உண்மையை உணர்ந்துவிட்டீர். “ என்று அவரைத் தேற்றி அன்றைய பூஜையைப் பார்த்துவிட்டு உணவும் உண்டு ஓய்வெடுத்துக்கொண்டு மாலை ஊர் திரும்புமாறு அன்புக்கட்டளையும் இட்டார்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

சில தினங்கள் சென்றன. ஒரு முற்பகலில் கணக்கிலவதானி முத்துசாமிப் பிள்ளையவர்கள் வடலூருக்கு வண்டியில் வந்து இறங்கினார். தருமச்சாலை வீதி முகப்பில் இறங்கிய அவர் அப்படியே வீதியில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார். தருமச்சாலை இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார். கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகப் பெருக தருமச் சாலை நோக்கி நடந்தவண்ணமே, “சமரச சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பவும், போதிக்கவும் வந்த வள்ளல் பெருமான் நடக்கும் இந்தத் திருவீதியிலே நானும் நடக்க என்ன தவம் செய்தேன்! என் உடல் இந்தப்புண்ணியமான வீதியிலே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து எழவும் நான் செய்த புண்ணியம் தான் என்ன! என் அகந்தை அழிந்தது; கர்வம் ஒழிந்தது. மனமாயை அகன்றது; மமதை அடியோடு அற்றுப் போனது. என் மனமாகிய குகையில் இருந்த அந்தகாரம் அகன்று அருட்பேரொளி வீச ஆரம்பித்து விட்டது. ஐயனே! என் தெய்வமே! வள்ளல் பெருமானே! தங்கள் திருவருளைப் பெற வேண்டியே நான் வந்திருக்கிறேன். “ என்று கூறிக்கொண்டே தருமச் சாலையை அடைந்தார்.



அங்கே வள்ளலார் வேலாயுத முதலியாருடனும், ஆறுமுக முதலியாருடனும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவதானியார் அங்கே போய்ச் சேர பேச்சை நிறுத்தி விட்டு வள்ளலார் அவதானியாரைப் பார்த்தார். அவதானியார் தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வள்ளலாரை வணங்கினார். வள்ளலாரும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அவரை அமரச் செய்தார். அவரோ பக்திப் பரவசம் மீதூற ,” என் ஐயனே, என் தெய்வமே! ஞான தீபமே! அருட்பெரும் சோதியே! தனிப்பெரும் கருணையே! வள்ளலே! என் அகந்தை மீதூறி நான் இறுமாப்புடன் உமக்கு எழுதிய வெண்பாவிற்கு நான் கருதிய உரை மட்டுமின்றி, வேறொரு விசேஷ உரையையும் எழுதித் தாங்கள் அந்தப் பூட்டை அவிழ்த்ததைக் கண்டேன். ஐயா, தாங்கள் எழுதிய விசேஷ உரையின் பொருள் நான் முற்றிலும் அறியாதது; எனக்கு விளங்காததும் கூட. ஐயா, என் அகந்தையால் நான் செய்த இந்தத் தவறைப் பொறுத்தருள வேண்டும். தங்களை வித்துவான் என்றே நினைத்திருக்க, தாங்களோ அற்புதங்களை நிகழ்த்தும் பரிபூரணமான ஞானி என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். ஐயா, நான் திருந்திவிட்டேன். மதுரை மாநகர் விட்டு வடலூர் வந்தது தங்கள் திருவடியில் என் முடிபட வணங்கி, தங்களிடம் மன்னிப்புக் கேட்டு என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதற்காகவே!” ஓவென்று கதறி அழுத அவதானியார், திரும்பத் திரும்ப, “என் ஞானகுருவே!” “என் ஞானகுருவே!” என்றே புலம்பிய வண்ணம் இருந்தார்.



வள்ளலாரும் அன்பு பொங்க, “ஐயா, எழுந்திரும்; வீண் ஆணவம் கூடாது என்பதை உணர்ந்துவிட்டீர்கள் அல்லவா? அது போதும்!” என்று சொல்லிக்கொண்டே அவரை எழுப்பினார். இரு முதலியார்களும் அவதானியாரைக் கண்டு முதலில் அவர் செய்கையால் கோபமுற்றாலும், அவர் இப்போது மன்னிப்புக் கேட்கவே வந்திருப்பது உணர்ந்து அவர் பால் கனிவும், இரக்கமும் கொண்டார்கள். அவரை வணங்கி இருவரும், பெருமான் முன் நாம் என்றென்றும் சிறியவர்களே எனக் கூற அவதானியாரும் முழு மனதோடு அதை ஒத்துக்கொண்டார். பின்னர் இன்னமும் மனம் வருந்திக் கொண்டிருந்த அவதானியாரை வள்ளல் பெருமான் தேற்றி அவரையும் அழைத்துக்கொண்டு அவதானியாரின் அஞ்ஞான நோய் தீர்ந்ததால் உணவுக்கூடம் சென்று வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ளலாம் என அழைத்துச் சென்றார். இதைப் போன்ற சித்துக்களும், அற்புதங்களையும் செய்து வந்த வள்ளலாரைப் பற்றி ஊர் மக்கள் மிகவும் பெருமையுடன் பேசிக்கொண்டனர்.



தருமச்சாலை நிர்வாகத்தை அப்பாசாமிச் செட்டியார் என்பவர் பார்க்க, மற்றப் பொறுப்புக்களுக்கென்று நமச்சிவாயப் பிள்ளை என்பவரும், சண்முகம் பிள்ளை என்பவரும் இருந்தனர். அவர்கள் இருவரில் சண்முகம் பிள்ளை வள்ளலார் சுவாமிகள் உச்சிப் போதில் வெயிலில் அமர்ந்து நிஷ்டையில் இருக்கையில் வள்ளலாரின் தலைக்கும் உச்சி சூரியனுக்கும் இடையே தீப்பிழம்பு ஒன்று தோன்றி அக்னி ஸ்தம்பமாக நிற்பதைக் கண்டு பிரமித்து சாலையின் அனைத்து ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் அதைக் கூறி வியந்தார். இதே போல் இன்னொரு நாள் அதே சண்முகம் பிள்ளை உச்சிப்போதில் வள்ளலார் வெளியே சென்றவர் வரவில்லையே எனக் கவலைப்பட்டுப் பார்க்கையில் சுவாமிகளின் அங்கங்கள் தனித்தனியே துண்டு துண்டாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் மயங்கி விழுந்து விட்டார். அப்போது சுவாமிகளின் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து அவரெதிரே வந்து, இனி இம்மாதிரி வராதீர் என்று சொல்லி அவரைத் தேற்றி தருமச் சாலைக்கு அழைத்துச் சென்றார். இதைக் கேட்ட மக்களில் சிலர் ஆச்சரியம் அடைந்தனர்; சிலருக்குப் பயமாகவும் இருந்தது.



ஆனாலும் முழுக்க முழுக்க இப்படி சித்து வேலைகள் மட்டுமின்றி நோயையும் குணப்படுத்தி வந்தார் வள்ளலார். கூடலூரில் இருந்து வரும் அடியாரான தேவநாதம் பிள்ளை என்பவரின் மகன் ஐயாசாமிப் பிள்ளைக்குத் தொடையில் கட்டி வந்தபோது சுவாமிகள் மந்திரித்த திருநீறோடு தோத்திரம் செய்ய ஒரு மருத்துவப் பாடலும் எழுதி அனுப்பி வைக்க, பாடலில் கூறிய மருத்துவத்தையும் செய்து கொண்டு, திருநீற்றையும் பூசிக்கொண்ட ஐயாசாமிப் பிள்ளைக்குக் கட்டி ஆறிக்குணம் பெற்றார். இதே ஐயாசாமிப் பிள்ளை கடும்நோயால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குப் போக, தேவநாதம் பிள்ளை மகனின் நிலை கண்டு பதறிப்போய் சுவாமிகளை வேண்டிக்கொண்டார். அப்போது வடலூரில் தருமச் சாலையில் அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் வள்ளலார் பெருமான். ஆனால் கூடலூரில் தேவநாதம் பிள்ளையின் வீட்டுக்கதவு தட்டப் பட அவர் கதவைத் திறந்தால் வள்ளலார் எதிரே நின்றார். ஆச்சரியத்தோடு அவரை உள்ளே அழைத்துச் சென்றார் தேவநாதம் பிள்ளை. உள்ளே சென்ற வள்ளலார் ஐயாசாமி பிள்ளைக்குத் திருநீறு இட்டுச் சற்று நேரம் அங்கிருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார். அதிசயிக்கத் தக்க வகையில் ஐயாசாமிப் பிள்ளை அன்றிரவே குணமடைந்தார். மறுநாள் பிள்ளையை அழைத்துக்கொண்டு தேவநாதம் பிள்ளை சாலைக்கு வர, அங்கே அருள் உபதேசம் செய்து கொண்டிருந்த பெருமான் தேவநாதம் பிள்ளையைக் கண்டதும் உடனே எழுந்து வந்து, தனியே அழைத்துச் சென்று, நேற்றுத் தாம் கூடலூர் வந்ததை இங்கே தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.



சந்தேகம் கொண்ட தேவநாதம் பிள்ளை தருமச்சாலையில் இருந்தவர்களை விசாரித்த போது நேர்று முழுதும் சுவாமிகள் சாலையிலேயே இருந்ததாகவும், வெளியே எங்குமே செல்லவில்லை எனவும் தெரிவித்தனர். அப்போது தவிர்க்க இயலாமல் கூடலூருக்கு சுவாமிகள் வந்ததையும், தம் மகனைக் குணப்படுத்தியதையும் தேவநாதம் பிள்ளை தெரிவிக்க வேண்டியதாயிற்று. அதைக்கேட்ட அனைவரும் ஒரே நேரத்தில் தருமச் சாலையிலும், கூடலூரிலும் பெருமான் காட்சி அளித்த விபரம் கேட்டு ஆனந்தமும், ஆச்சரியமும் கொண்டனர். இதே போல் திருவதிகையிலும் ஒரு விழாவில் வழிபடச் சென்ற சுவாமிகள் மக்கள் கூட்டம் நெருக்க சுவாமிகள் மக்களின் விருப்பத்திற்கிணங்க, கூட்டத்தில் பல இடங்களிலும் ஒரே நேரம் தோன்றிக் காட்சி கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.