Sunday, March 4, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் பகுதி 1

திருவேகம்ப விருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாயடியேனுமறிந்திலேன்
இன்னமெத்தனை யெத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சியேகம்பநாதனே

----பட்டினத்துப் பிள்ளையார்

இப்போது நாம் காணப்போவது பட்டினத்தார் பற்றி. பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் என அனைத்தும் ஒருவரையே குறிக்கிறது என்று சொல்கின்றனர். என்றாலும் ஒரு சிலர் பட்டினத்தார் என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவர் எனவும் அவர் பாடிய பாடல்களுக்கும், பட்டினத்தடிகள் பாடிய பாடலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு எனவும் கூறுகின்றனர். இந்த வேறுபாடு உடைய பாடல்கள் பின்னாட்களில் வேறு யாரேனும் பாடித் தொகுத்திருக்கலாம் என்றும் ஒரு கூற்று உள்ளது. மேலும் இவர் வரலாறும் இரு விதமாய்க் கூறப்படுகிறது. புனைவு என்பாரும் உண்டு. பட்டினத்தார் இயற்றிய பாடல்களிலும் பட்டினத்தடிகள் இயற்றிய பாடல்களிலும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டும் ஆய்வாளர்கள் இருவரும் ஒருவரே அல்ல எனச் சொல்கின்றனர். ஆனாலும் இப்போது நாம் பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மூவரையும் ஒருவர் எனக் கருதிக் கொண்டே இவரைக் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார். திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி மன்னர்களுக்குச் சமானமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார். மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான். ஆகவே திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார். உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். திருவெண்காடருக்கு சிவகலை என்னும் பெண்ணரசி மனைவியாக வாய்த்தாள். அவளுடன் நல்லறம் நடத்தி வந்தார். ஆனால் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தது. ஆகவே அங்கிருந்து திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார்.

அவ்வூரிலே சிவசருமர் என்னும் அந்தணர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். அன்றாட வாழ்க்கைக்கு உரிய பொருள் இல்லா நிலையில் இருந்த அவரிடம் ஈசன் கருணை கொண்டு தாம் ஒரு குழந்தையாக அவர் முன் தோன்றுவதாகவும், “மருதவாணன்” என்ற பெயரைத் தமக்கு இட்டுத் தம்மை காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து திருவிடைமருதூர் வந்திருக்கும் திருவெண்காடர் என்னும் வணிகரிடம் கொடுக்குமாறும், அதற்கு அவர் பொருள் தருவார்; அந்தப்பொருளை வைத்து வறுமையிலிருந்து மீளலாம் என்றும் கூறுகின்றார். அவ்வாறே ஒரு குழந்தையாக சிவசருமர் முன்னே தோன்ற, குழந்தையைக் கண்ட சிவசருமருக்கு அதைப் பிரிய மனம் இல்லை எனினும் வேறு வழியின்றித் திருவெண்காடரிடம் சென்று , ஈசனின் ஆணையைக் கூறிக் குழந்தையைக் கொடுக்கிறார். ஈசனின் ஆணை என்றதும் திருவெண்காடரும் குழந்தையை வாங்கிக் கொண்டு சிவசருமருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். குழந்தைக்கு மருதவாணர் என்ற பெயரையே நிலைத்திருக்குமாறு செய்து குழந்தையோடு காவிரிப் பட்டினம் திரும்புகிறார்.

மேற்சொன்ன வரலாறு வேறுவிதமாகவும் கூறப்படும். செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன். ஆனால் குபேரனாயிற்றே. செல்வத்துக்கு அதிபதி அல்லவா? ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன். திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர். ஒரே சகோதரி இருக்கிறாள். திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார். ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார். அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார். அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார். தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்கள் கடக்கின்றன. குழந்தை பிறக்கவில்லை.

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாததொரு வாழ்க்கையாக இருந்து வந்தது. சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.