Saturday, August 29, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை - ஜேஷ்ட ராஜன்!


இதனிடையில் பசி, பசி என்று பறந்த அந்தணர் மிதிலாபுரியை விட்டுத் தள்ளி ஒரு குடிசையில் வசித்து வந்த திரிசிரன் என்பவனின் குடிசை வாயிலுக்கு வந்திருந்தார். திரிசிரனின் மனைவி விரோசனை. இருவரும் விநாயகரின் பக்தர்கள். அன்றைய வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றைக்குக் கிடைத்த ஒரே ஒரு அருகம்புல் இட்ட நீரை விநாயகருக்கு நிவேதனம் செய்து, அந்த ஒற்றை அருகம்புல்லைக் கணவனுக்கு உணவாய் அளித்துவிட்டுத் தான் அந்த நீரை அருந்தலாம் என விரோசனை எண்ணி இருந்தாள். அப்போது தான் அந்தணர் அங்கே போய்ச் சேர்ந்தார். சோர்வோடு இருந்த அந்தணரைப் பார்த்த திரிசிரனும், அவன் மனைவியும் அந்தணரை வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டனர். அந்தணரும், தனது தாளாத பசியைச் சொல்லி, தான் ஜனகனின் அரண்மனைக்குச் சென்றதாகவும், அங்கே அளித்த உணவு போதவில்லை. ஏதோ போட்டான் அரை மனதாக என்றும் சொன்னார். திடுக்கிட்டனர் திரிசிரனும், விரோசனையும். அத்தனை பெரிய மஹாராஜா உணவளித்தே பசி ஆறாதவர் இங்கே வந்து சாப்பிட்டா பசி ஆறப் போகின்றார்? கவலையுடனே அவரைப் பார்த்து, உள்ள நிலைமையைத் தெளிவாய் எடுத்து உரைத்தார்கள். முதல்நாள் வரையிலும் யாசகம் எடுத்து உணவு உண்டு வந்ததையும், அன்றைக்கு யாசகத்திலும் எதுவும் கிட்டாமல், விநாயகருக்கு வழிபாடு செய்து, அருகை நிவேதனம் செய்து, அதுவும் ஒரே ஒரு அருகம்புல்! அந்த அருகைக் கணவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுத் தான் நீர் அருந்த இருந்ததையும் விரோசனை கண்ணீர் பொங்கக் கவலையுடனே தெரிவித்தாள்.

அந்தணரோ குதித்தார்! “ஆஹா, அருகும், அந்த அருகு இருந்த நீருமா?? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்னுடைய குஷ்ட நோய்க்கான மருந்தல்லவோ அருகு? அதைத் தீர்க்க இந்த அருகு ஊறிய நீரைவிடச் சிறந்த மருந்து உண்டோ? மேலும் ஜனகன் உள்ளன்போடு எனக்கு உணவு படைக்கவில்லை. அவனிடம் உள்ள செல்வத்தைக் காட்டவும், அவனுடைய செல்வாக்கைக் காட்டவுமே உணவு படைத்தான். உள்ளன்போடு ஒரு கைப்பிடி உணவு கொடுத்தால் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடுமே. அதுவும் தும்பிக்கையானுக்கு நீங்கள் இருவரும் நம்பிக்கையோடு படைத்தது வீண் போகுமா??” அந்தணர் அந்த அருகைக் கிட்டத் தட்டப் பறித்து வாயில் போட்டுக் கொண்டு நீரையும் அருந்தினார். என்ன ஆச்சரியம்? அங்கே காட்சி கொடுப்பது யார்? தலை ஆட்டிக் கொண்டு, மத்தள வயிறுடன் உத்தமி புதல்வன் அன்றோ வந்துவிட்டான்? இது என்ன விந்தை? இது மட்டுமா? மேலும், மேலும் விந்தைகள் நடந்தன. திரிசிரனின் மண்குடிசை இருந்த இடத்தில் இப்போது மாளிகை ஒன்று முளைத்தது. களஞ்சியம் நிரம்பி வழிந்தது. தங்கமும், முத்தும், பவளமும், வைரமும் மாளிகையில் காணக் கிடைத்தன. திரிசிரன் தம்பதிகளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பலவாறு விநாயகரைப் போற்றித் துதித்தனர். அத்தோடு நில்லாமல் திரிசிரனுக்கு வந்த பாக்கியம் ஜனகனுக்கும் தெரியவேண்டாமா?

மிதிலாபுரியே செல்வத்தில் மிதந்தது. அந்தணரால் உண்ணப் பட்ட உணவுப் பொருட்களைப் போல் பலமடங்கு உணவுப் பொருட்கள், மேன்மேலும் செல்வங்கள், நிறைந்தன. திடீரென வந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் விவரம் விசாரித்து அறிந்து கொண்டு திரிசிரனைக் காண வந்தான். அங்கே இருந்த விநாயக மூர்த்ததை வணங்கித் தன் மமதையை அடக்கித் தனக்குப் பாடம் புகட்டியதற்கு நன்றி சொன்னான். விநாயகரும் அவன் முன்னால் தோன்றி, அவனுடைய அறியாமை நீக்கி நல்ல குருவை நாடி ஞானத்தைத் தரக் கூடிய அறிவைப் பெற அருள் புரிந்தார். அதன் பின்னரே ஜனகரும் யாக்ஞவல்கிய மஹரிஷியை நாடி உபதேசம் பெற்று ராஜரிஷியாக மாறினார்.. அருகம்புல் தோல் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. முக்கியமாய் குஷ்டநோய்க்கு அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறியுள்ளதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

Friday, August 28, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! - தரணிதரன்!


சனிக்கிழமைக்குத் தான் விநாயகர் விஸர்ஜனம். அதுவரைக்கும் வருவார். இன்னிக்கு நாம பார்க்கப் போற கதை ஜனகமஹாரிஷியுடையது. ஜனகர் ஒரு பெரிய இல்லறத் துறவிங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். யாக்ஞவல்கியரின் சீடர். மனதிலே எதுவுமே பாதிக்காவண்ணம் பிரம்மஞானம் பெற்றவர். அப்படிப் பட்டவரா அவர் எப்படி ஆனார்? அதுக்கான முன்னுரையே இது. இப்போ நாம் பார்க்கப் போற விஷயம்.

மிதிலையை ஆண்டு வந்த ஜனகராஜாவின் அரண்மனை தர்பார். அனைத்து மந்திரி பிரதானிகள் புடைசூழ மன்னன் கொலுவீற்றிருந்தான். அப்போது அந்த அவைக்குள்ளே நாரதர் நுழைந்தார். எந்த இடத்துக்கும், எந்த நேரத்திலும் பிரவேசிக்கக் கூடிய உரிமையைப் பெற்ற அவர் காரணம் ஏதும் இல்லாமலா வந்திருப்பார்? இல்லை, காரணம் இருந்தது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்த நாரதரை அனைவரும் வணங்க, மன்னன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து நாரதரை வரவேற்கவில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே அவரை வரவேற்றான். எனினும் மன்னனை மனமார ஆசீர்வதித்தார் ஜனகர். “மன்னா, நீ விரும்பிய அனைத்துச் செல்வங்களும் , மற்ற வளங்களும் உனக்குக் கிடைக்க இறைவன் அருள் புரிவான்.” என்றார். ஜனகருக்குக் கொஞ்சம் அலக்ஷியம். ஏளனமாய்ச் சிரித்தார். “நாரதரே, இதை வேறே யாரானும் சொல்லி இருந்தால் இன்னும் சிரித்திருப்பேன். அனைத்தும் அறிந்த நீர் சொல்லலாமா? நான் என்ன கல்லாதவனா? அனைத்தும் அறியாதவனா? கொடுப்பவன் யார்? எடுப்பவன் யார்? கொடுப்பவனும் நானே! எடுப்பவனும் நானே! எல்லாம் வல்லவ அந்த இறைவனும் நானே! ஜனகன் என்ற மன்னனும் நானே! அவற்றை வேண்டாமெனில் நானே வெறுத்து ஒதுக்கவும் செய்வேன்! அனைத்தும் நான்! நானே பிரம்மம்! பிரம்மமே நான்!” என்றான் மன்னன்.

நாரதருக்கு தீர்க்கதரிசனம் தெரியும் என்றாலும் மன்னனின் இந்த அகம்பாவமான பேச்சு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. வாய் திறவாமல் வெளியே வந்தார். நேரே கெளண்டிய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார். கெளண்டின்ய ரிஷி தான் அருகம்புல்லின் மகிமையை உலகுக்குத் தன் மனைவி மூலம் காட்டியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் ஆசிரமத்தில் இருந்த விநாயகர் கோயிலில், ரிஷி வழிபட்ட விநாயகர் முன்னே நின்று, “விநாயகா, இது என்ன? ஜனகனுக்கு புத்தி பேதலித்துவிட்டதா? உண்மையான பிரம்மம் என்னும் தத்துவம் அறியாமல் பேசுகின்றானே! கர்வம் வந்துவிட்டதே! நாடாளும் மன்னனுக்கு இறை உணர்வில் இத்தனை கர்வம் வந்தால் குடி மக்கள் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்? மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் அன்றோ? இந்த ஜனகனுக்கு நல்லறிவு புகட்டவேண்டிய காலமும் வந்துவிட்டது. நீயே அருள் புரிவாய், வேழமுகத்தோனே!” என்று வேண்டிக் கொண்டார்.

ஜனகரின் அரண்மனை வாயில். அந்தணர் ஒருவர் தள்ளாத வயது, உடலெல்லாம் குஷ்ட நோயால் பீடிக்கப் பட்டு, நடக்கக் கூட முடியாத நிலை. அரண்மனை வாயிலில் வந்து நின்றுகொண்டு “பசி, பசி” என புலம்பிக் கொண்டு இருந்தார். காவலர்கள் செய்வதறியாமல் மன்னனுக்குத் தகவல் தர, மன்னன் அவரைத் தன்னிடம் அழைத்துவரச் செய்தான். அந்தணர் உள்ளே வந்ததும், “என்ன வேண்டும்?” என மன்னன் கேட்க, “பசிக்கு உணவு!” என்றார் அந்தணர். மன்னனுக்கு ஒரு வழியில் நிம்மதி! அப்பாடா, நம்மால் முடிந்ததைக் கேட்டாரே!” பூ, இவ்வளவு தானா? யாரங்கே, இந்த அந்தணனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடுங்கள்!”

“உத்தரவு மன்னா!” அந்தணர் சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். உணவும் பரிமாறப் பட்டது. அந்தணரும் இலையில் கை வைத்தாரோ இல்லையோ உணவு மொத்தமும் காணோம், காணவே காணோம்! சுற்றி இருந்தவர்கள் ஏதும் புரியாமல் மீண்டும் பரிமாற, மீண்டும் அந்தணர் கைவைக்க, மீண்டும் அதே கதை! சமைத்த அனைத்து உணவுகளும் வர, மிச்சம், மீதி வைக்காமல் அனைத்தும் பரிமாறப் பட அனைத்தும் இப்படியே காணாமல் போயின. ஆனால் அந்தணரின் பசி மட்டும் தீரவில்லை. பரிமாறியவர்கள் களைத்துச் சோர்ந்து போய், “ திரும்பச் சமைத்துத் தான் போடவேண்டும். பொறுங்கள்.” என்று கூற, அந்தணருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “பசி என வந்தவனுக்கு முதலில் பசியைத் தீருங்கள். அப்புறம் சமைக்கலாம்.” என்று சொல்ல, பணியாளர்கள் செய்வது அறியாமல் தானியங்களைப் பச்சையாக அப்படியே எடுத்துக் கொடுக்க அதுவும் போதவில்லை என அந்தணர் சொல்ல, நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் சேமிப்பில் இருந்தவை எல்லாம் கொடுத்தும் அந்தணருக்குப் போதவில்லை.

இனி தானியம் விளைந்து வந்து சேமித்தால்தான் அரண்மனைக் களஞ்சியத்தில் தானியம். அரசனுக்குத் தகவல் போனது. தலைநகரில் இருந்த குடிமக்கள் அனைவரிடம் இருந்தும், உணவுப் பொருட்கள், உணவு வகைகள், தானிய வகைகள், பழ வகைகள், காய்கள் வரவழைக்கப் பட்டன. எங்கிருந்து எத்தனை வந்ததலும் அந்தணர் கை வக்கும்போதே மாயமாய் மறைந்து கொண்டிருந்தது. அனனவரும் நடுங்கினார்கள். மன்னனுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது! யாரிவன்? ஏதோ பூதமாய் இருப்பானோ? பிசாசோ? பிரம்ம ராக்ஷசோ? இவனை எப்படியாவது நல்லவார்த்தை சொல்லி வெளியே அனுப்பவேண்டும் என நினைத்த வண்ணம் அரசன் முதலில் அந்த அந்தணனை நாட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் எனக் கட்டளை இட்டான். அந்தணன் அரசனைப் பார்த்து, “பசி என வந்தவனுக்கு உணவு கொடுக்காமல் நாட்டை விட்டுத் துரத்துகின்றாயே? நீ ஒரு பெரிய மஹாராஜா! அதுவும் அன்றொருநாள் நாரதர் வந்தபோது சபையில் “நானொரு பிரம்மம். என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கொடுப்பதும், நான், எடுப்பதும் நான்! என்னால் முடியாதது எதுவும் இல்லை.” என்றெல்லாம் பேசினாயே? இந்த ஏழைப் பிராமணனின் பசியைப் போக்க முடியாத நீயும் ஓர் அரசனா? “ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. தன் அகங்காரத்தை நினைத்து மனம் நொந்தான். தவறை உணர்ந்து அதற்குப் பிராயச் சித்தமும் செய்ய விரும்பினான்.

Wednesday, August 26, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை - கணேசன்!


“மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன்நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.”

நிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும். காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான். ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும், மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும், ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம்.

“பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.”

பந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன் அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப் பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும் கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம்.

“இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்றுதினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரஞ்செயினும்
சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுகம் பெறும் எண்
தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்”

இந்த காரியசித்திமாலையின் எட்டுப் பாடல்களும் கணபதி தோத்திராட்டகம் என வழங்கப் படுகிறது. இந்தத் தோத்திரத்தை மூன்று நாட்கள் மூன்று பொழுதுகளிலும் சொல்லுபவர்களுக்கு அனைத்துக் கருமங்களில் இருந்தும் சித்தி கிடைத்து முக்தி பெறுவார்கள். எட்டு நாட்கள் தொடர்ந்து உச்சரிப்போரும் சதுர்த்தி தினங்களில் எட்டு முறைகள் உச்சரிப்போரும் அட்டமாசித்திகளையும் அடைவார்கள்.

திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ் ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.

ஒவ்வொரு நாளும் பத்துமுறைகள் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் அரசாங்க சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் கைகூடும். அவ்வாறு இருபத்தொரு முறைகள் ஓதினால் மக்கட்பேறு, கல்வி, செல்வம் முதலிய எல்லா நலங்களையும் அடைவார்கள்.” என்று விநாயகர் காசிபர் முதலானோர்க்கு அருளிச் செய்ததாக விநாயக புராணம் கூறுகின்றது.

எது எப்படி இருந்தாலும் நம்பிக்கையுடன் விநாயகர் கோலம் போட்டு, இந்தக் காரிய சித்திமாலை படிச்சுட்டு, விநாயகரை வேண்டிக் கொண்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறுகின்றன என்பதற்கு நான் காரண்டி!

Tuesday, August 25, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! - பாலசந்திரன்!


“மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

“செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும் அப்பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.”

நாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம்.

“வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேதமுடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

வேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

காசியபரின் காரியசித்தி மாலை நாளை நிறைவு பெறும்.

Sunday, August 23, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை -விக்னராஜன்!

சரி, சரி,வடமொழியிலே உள்ளதை மொழிபெயர்க்கும்போது தப்பு வருதே பிள்ளையாரே? இங்கே என்னன்னா கண்ணிலே வி.எ. கொட்டிண்டு இல்லை எல்லாரும் பார்க்கிறாங்க. நாம நம்ம தாய்மொழிக்குப் போயிடுவோமா?? அட??? அதுக்கும் சிவசிவா வந்துடுவாரே? என்ன பண்ணறது? பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா! இன்னிக்குத் தான் உனக்கு
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்துனக்கு நான் படைத்தேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா”

அந்த ஞாபகம் இருக்கட்டும். கூடவே கொழுக்கட்டையும் கொடுத்திருக்கேன். சங்கத் தமிழ் மூன்றும் எல்லாம் வேண்டாம். இப்போ எழுதப் போற விஷயத்திற்குத் துணையா இருந்தாப் போதும்பா!

இப்போ இயன்றவரை எளிய தமிழில் விநாயகரைத் துதித்துக் காசிபர் எழுதினதாய்ச் சொல்லப் படும் காரியசித்தி மாலை பத்திச் சொல்லப் போறேன். முதல்லே ஒரு முன்னுரை. இந்தக் காரிய சித்தி மாலையை நான் பல வருஷமாப் படிக்கிறேன். முதல்லே ஆரம்பிச்சது என்னமோ காரியம் ஒண்ணு நடக்கணும்னு தான். காரியம் சித்தி ஆனாலும் நம்ம பிள்ளையாரோடதாச்சேனு தினம் முடியாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். நிச்சயமாய் மனசுக்கு ஆறுதலும் ஏற்படுது, கவலைகள், பிரச்னைகள் இருந்தால் மனம் லேசாக ஆகும். கவனிக்கவும், பிரச்னைகள் தீரும்னு சொல்லலை. நமக்கு வந்ததை நாம தான் தீர்த்துக்கணும். பிரச்னைகளைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை ஏற்பட்டு விடும். அதற்கு உத்திரவாதம் உண்டு.

“பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”


நாம் அனைவருமே பந்த பாசங்களால் கட்டுண்டவர்களே. இது நம்முடையது என்ற எண்ணம் இல்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அந்தப் பந்த, பாசங்களை அகற்றும் குணமுள்ளவன் வேழமுகத்தான் ஒருவனே! மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? விநாயகனே ஓங்கார வடிவானவன். அத்தகைய ஓங்கார சொரூபியான விநாயகனிடமிருந்தே அனைத்துக் கலைகளும், வேதங்களும், ஆகமங்களும் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. இத்தனை பெருமை வாய்ந்த இறைவனாகிய கணபதியை நாம் உள்ளத்தில் அன்பு மீதூற வணங்கித் துதிப்போம்.

உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.”

இந்த உலகில் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் மூலாதாரமாகிய கணபதியே! இறைவன் படைத்த இவ்வுலகில் நிறைந்திருக்கும் காம, குரோத, மத, மாற்சரியங்கள் எவையும் அவனிடம் ஒட்டுவதில்லை. அவன் எந்தவிதமான விருப்போ, வெறுப்போ இல்லாதவனாக இருக்கின்றான். பரிபூரணப் பேரொளியாய் நிறைந்துள்ளான். இந்த உலகில் உள்ள நாம் செய்யும் செயல்களின் வினப்பயனை நமக்குத் தருபவன் அவனே. தீவினைகளைக் களைகின்ற திறன் படைத்தவனும் அவனே. அத்தகைய உலகுக்கே ஆதிகாரணம் ஆன முழு முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழச் சரணம் எனத் துதிப்போம்.

“இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”

நெருப்பில் இட்ட பஞ்சு எப்படி உடனே இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அவ்வாறே கணபதியைத் துதித்தால் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. கணபதியைத் துதித்து அவனைத் தொடர்ந்து நாம் சென்றோமானால் அந்த உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் வாழும் பதிக்கு எடுத்துச் சென்று நமக்கு நற்கதியை ஊட்டுவார். நாம் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேற்ற மற்ற எந்தக் கடவுளரையும் விட விக்னராஜன் ஆகிய கணபதியே துணை புரிவான். அவனாலேயே நம் காரியங்கள் அனைத்தும் முடித்து வைக்கப் படும். இனிதாகவும், எளிதாகவும், சிரமம் இன்றியும் நம் காரியங்களை முடித்து வைக்கும் ஏகதந்தன் ஆகிய கணபதியின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.

Saturday, August 22, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! -லம்போதரன்!


7. லம்போதரன்: லம்போதர லக்குமிகரன். இத்தனை பெரிய வயிறு இருக்கே?? உலகையே உள்ளடக்கி இருப்பதால் வயிறு பெரிசா இருக்கு. அண்ட பகிரண்டத்தையும் தன்னுள்ளே அடக்கி இருக்கும் பெரிய வயிற்றைக் கொண்டவன்.

8. கஜானனன்: கஜமுஹாசுரனை அடக்கியதால் ஏற்பட்ட பெயர். ஆணவத்தின் வடிவன் அவன். ஆனை முகம் கொண்ட அவனை அடக்கியதால் யானைமுகனும் இந்தப் பெயர் பெற்றான்.

9. ஹேரம்பன்:தன் பக்தர்கள் வேண்டிப் பிரார்த்தனை செய்து அபிஷேஹ ஆராதனைகள் செய்யணும்னு எல்லாம் காத்திருக்காமல், ஒரு அருகம்புல்லைச் சாத்தினாலே உள்ளம் குளிர்ந்து போய் கஷ்டப் படுபவர்களை ரக்ஷிக்கின்றான் விநாயகன். அதனால் ஹேரம்பன் என்னும் பெயர்.

10. வக்ரதுண்டன்: பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளைத் தடுப்பவன். தீமைகளைத் தடுக்கும் தன் மகனுக்கு அருமை அன்னை வைத்த பெயர் இது.

11. ஜேஷ்டராஜன்: மூத்தவன். அனைவருக்கும் மூத்தவன் என்பது இங்கே பொருந்துமோ? ஏனெனில் ஸ்கந்தபூர்வஜன் என்ற பெயரும் விநாயகனுக்கு உண்டு. முழுமுதல் பொருளாக இருப்பதால் ஜேஷ்டராஜன் என்ற பெயர் வந்திருக்கலாம்.

12. நிஜஸ்திதி: ஸ்திதி நிலைத்து இருப்பது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வது மண்ணும், நீரும் கொடுக்கும் வளங்களாலேயே. அந்த மண்ணிலும் நீரிலும் நிலைத்து இருப்பவன், மூலாதாரப் பொருளாக இருப்பவன் விநாயகனே. அதனாலேயே பிள்ளையார் பிடிக்கிறதுனால் களிமண்ணை நீரில் குழைத்துப் பிடிக்கிறோம். இப்படி உண்மையாக நிலைத்து அனைத்து உயிர்களிலும் இருப்பதால் அவன் நிஜஸ்திதியாகக்கூறப்படுவான்.

13. ஆஷாபூரன்: புருகண்டி முனிவர் விநாயகரைக் குறித்துத் தவம் இயற்றி, இயற்றிக் கடைசியில் விநாயகர் போல் அவருக்கும் தும்பிக்கை ஏற்பட்டது. விநாயகரின் உதவியால் தன்னுடைய ஆசைகள் நிறைவேறியதால் இப்பெயரை அவரே விநாயகருக்குச் சூட்டினார்.

14. வரதன்: அனைவருக்கும் வேண்டியவரங்களைக் கொடுப்பவன்.

15. விகடராஜன்: இந்த மாயாலோகம் என்று சொல்லப் படும் பிரபஞ்சத்தில் உண்மையாகப் பரம்பொருளாய்த் தோன்றுபவன்.

16. தரணிதரன்: இந்த பூமியை அவனே ஆள்கின்றான். ஆகையால் அதையே ஆபரணமாகவும் அணிகின்றான். எப்போதும் காத்து ரக்ஷிப்பவன் அவனே.

17. சித்தி, புத்தி பதி: மனிதருக்குத் தேவையானது சித்தியும், புத்தியும். சித்தி என்னப்படும் கிரியாசக்தியும், புத்தி எனப்படும் இச்சாசக்தியும் நன்கு வேலை செய்தாலே ஞானசக்தியை அடைய முடியும், அத்தகையதொரு சக்திகளை தன்னுள்ளே கொண்டவன் விநாயகன் ஞானசக்தியாகவே தென்படுகின்றான். ஞானத்தை அவனே அளிக்கின்றான். சித்தி, புத்திக்கு அவனே தலைவன்.

18. பிரம்மணஸ்பதி: பிரம்மா வைத்த பெயர் இது. பிரம்மம் என்றால் சப்தம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. வேத நாதமாக, ஓங்கார சொரூபமாக, வேத நாதத்திற்கும் ஆதாரமாய்க் காட்சி கொடுக்கும் விநாயகனை பிரம்மணஸ்தபதி என அழைத்தார் பிரம்மா.

19. மாங்கல்யேசர்: விநாயகர் அனைத்தையும் காத்து ரக்ஷிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

20. சர்வபூஜ்யர்: எந்தத் தெய்வ வழிபாடென்றாலும் விநாயக வழிபாடு இல்லாமல் ஆரம்பிக்க முடியாது. முன்னதாக அவரை வணங்க வேண்டும். அனைவராலும் வழிபடப் படுபவர் விநாயகர். அதனாலே சர்வ பூஜ்யராக இருக்கின்றார்.

21. விக்னராஜன்: அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவர். திரிபுர சம்ஹாரத்திற்குச் சென்ற ஈசனின் தேர் அச்சு முறியவும், விநாயக வழிபாடு செய்யாததால் அவ்வாறு இடையூறு ஏற்பட்டதாகவும் , விநாயக வழிபாட்டுக்குப் பின்னர் தடை இல்லாமல் சம்ஹாரம் முடிந்ததாகவும், புராணங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மேலும் தேவி மஹாத்மியத்தில் அசுரன் செய்த விநாயகனின் சக்கர வழிபாடு தேவியின் வதத்தைத் தடுத்ததாகவும் சொல்லுவார்கள். அதை முறித்த பின்னரே தேவியினால் வழிபட முடிந்தது என்றும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து விக்னங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டவனே விநாயகன்.

விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், புருவங்கள் காற்றையும் புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கின்றன.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு!

Friday, August 21, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணராஜன்!

விநாயகருக்கும் 21-க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா). விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு. அவை கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ரதுண்டன், ஜேஷ்ட ராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்தி,புத்திபதி, பிரம்மணஸ்பதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் ஆகியன ஆகும்.

இவற்றின் விளக்கங்கள் வருமாறு:

1. கணேசன்: பிரும்மமே விநாயகர். பிரும்ம சொரூபமே விநாயகர். விநாயகர் என்றாலே தனக்கு மேலே தலைவன் இல்லாதவன் என அர்த்தம். ஆகவே பிரம்மத்திற்கும் மேலே தலைவனாய் இருப்பதால் கணேசன்.
2. ஏகதந்தன்: ஆரம்பத்தில் விநாயகருக்கு இரண்டு தந்தங்கள் இருந்ததாயும், ஒரு தந்தம் அசுரனைக் கொல்ல ஆயுதமாய்ப் பயன்பட்டதாய்ச் சொல்லுவார்கள். மற்றொரு செய்தி வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விக்னராஜனை விட்டே எழுதச் சொன்னதாகவும், அப்போது தன் தந்தத்தை ஒடித்தே எழுதுகோலாக்கி விநாயகன் எழுதியதாகவும் சொல்லுவோம். எப்படிப் பார்த்தாலும் ஒரு தந்தம் தான் விநாயகருக்கு. பெண் யானைக்கும் தந்தம் உண்டென்றாலும் ஆண் யானை அளவுக்கு வெளியே தெரியும் நீண்ட தந்தம் அதுக்குக்கிடையாது. ஆணாகிப் பெண்ணாகி ஒன்றானவன் என்பதை நிரூபிக்கும் வண்ணமும் விநாயகனுக்கு ஒரே தந்தம் என்ற அர்த்தம் வரும். ஆகக் கூடி மேற் கூறிய காரணங்களில் எதைச் சொன்னாலும் ஏகதந்தன் என்பது நன்கு பொருந்தும் அல்லவா???
3. சிந்தாமணி: கபில முனிவருக்குக் கிடைத்த சிந்தாமணியால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் அதை விநாயகரிடமே கொடுத்துவிட்டார் அல்லவா? அந்தச் சிந்தாமணியை அணிந்ததாலும் சிந்தாமணி என்ற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.
4. விநாயகன்: தன்னிகரற்ற தலைவன். தனக்குத் தானே நிகரானவன்.
5. டுண்டிராஜன்: காஞ்சி மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து டுண்டி என்ற பெயரோடு வளர்ந்து வந்ததும், அதனால் தமிழ்நாட்டின் அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என அழைக்கப் பட்டது என்றும் காஞ்சிபுராணம் கூறும். காஞ்சி அரசனுக்கு அம்பாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டியதால் டுண்டிராஜன் என்ற பெயர்.
6. மயூரேசன்: மயில்வாகனர். ஆதியில் விநாயகருக்கே மயில் வாகனம் இருந்ததாகவும், பின்னரே அந்த வாகனத்தை முருகனுக்கு விநாயகர் கொடுத்துவிட்டதாயும் சொல்லுவார்கள். மயூரேசன் என்ற பெயரில் ஒரு விநாயகர் கோயில் மஹாராஷ்டிராவில் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒரு கோயிலில் குடி கொண்டுள்ளார். தன்னை வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்யும் விநாயகர் அதே சமயம் தன் பக்தர்களை மாயை நெருங்காதபடியும் காக்கின்றார்.

Thursday, August 20, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி!


கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால்
க= அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக்குறிக்கும்
ண= மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்
பதி=சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.

ஈசன்:கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றது. கணேசனே ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.

பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவைகிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு.

மூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றது. மயில்னதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார்? இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம்.

மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்கு பிள்ளையார் உதவுகின்றார்.

வேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும் கணபதி எனவும் விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர்.

மோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள பூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது.

தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே? வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர்.

ஆனந்த புவனம்: கைலையின் ஒருபகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது.

எட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவை யாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர்= தேக பிரும்மம், மகோதரர்= ஞான பிரும்மம், கஜானனர்=சாங்கிய பிரும்மம், லம்போதரர்=சக்தி பிரும்மம், விகடர்=ஆதி சக்தி, விக்னராஜர்=விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர்=சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு.

Tuesday, August 18, 2009

அண்ணனும், தம்பியும் படுத்தற பாடு தாங்கலை!

இந்தக் கூத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அண்ணனும், தம்பியும் துரத்தோ துரத்துனு துரத்தறாங்க தெரியுமா??? போன வருஷத்தில் ஒருநாள் கோடை காலம் என்பதால் கணினியில் உட்காரும்போது மின் விளக்கைப் போட்டுக்கலை. சூடு தாங்காது என்பதால் விளக்கில்லாமல் உட்கார்ந்திருந்தேன் கணினியிலே. அப்போ ரொம்ப ஆழ்ந்து கவனிச்சு ஏதோ எழுதிட்டோ, படிச்சுட்டோ இருக்கையிலே காலில் சுரீர்னு ஒரு கடி. வீல் என்று ஒரு அலறல். ஹிஹிஹி, கத்தியது நான் தான். கூடவே கீச் கீச் கீச் என்றும் சப்தம். என்னனு பார்த்தால் ஒரு மூஞ்சுறு ஒண்ணு ஓடிட்டு இருந்தது. மும்முரமாய்த் தொலைக்காட்சியில் கதாநாயக, நாயகியரோடு சேர்ந்து அழுது, சிரிச்சுட்டு இருந்த என்னோட ம.பா.வுக்கு நிஜமாவே த்ரில்லிங்காய் இருந்திருக்கு. வந்து என்னனு கேட்டார். மூஞ்சுறு தான் கடிச்சது என்று நான் சொல்ல, அதுக்குக் கடிக்கவெல்லாம் தெரியாது, நாக்காலே நக்கிக் கொடுத்திருக்கும் செல்லமாய் அதுஅப்பாவி, நீ தான் அதைக் காலால் மிதிச்சிருக்கே, அது பயந்து போயிருக்கும் னு என்னோட ம.பா. சொல்ல(அநுகூல சத்ரும்பாங்களே, இதானா அது?) இரண்டு பேருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பிக்கிறதைப் பார்த்துட்டு அந்த மூஞ்சுறு எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டது. அது என்னைக் கடிச்சுட்டதுங்கறதுக்காக அதோட குழந்தைங்களை எல்லாம் நான் காப்பாத்திக் கொடுக்கலையா? அந்த நன்றியே இல்லையே இந்த மூஞ்சுறுக்கு? விடலை என்னை. பழிவாங்கியே தீருவேன்னு பழி வாங்கிடுச்சு மெகாசீரியல் வில்லி மாதிரி.

போன மாசம் பாருங்க, சாப்பிட்டுட்டுக் கொல்லையிலே பாத்திரங்கள் கழுவும் இடத்தில் பாத்திரங்களைப் போடப் போயிட்டிருந்தேன். என்னோட ம.பா.வுக்கு ஒரு குணம் என்னன்னா, நான் போவேன்னு தெரிஞ்சும், அவர் விளக்கை அணைச்சுட்டு வந்துடுவார். திருப்பிப் போட்டுக்கோயேன்னு அவர் சொல்லுவார். வேலை முடிஞ்சதும் நானே அணைச்சுட்டு வருவேனே என்பது என்னோட பதில். இது வருஷக் கணக்கா சுப்ரீம் கோர்ட் அப்பீலுக்குப் போயும் இன்னும் தீர்ப்பு வராத ஒரு கேஸ். அன்னிக்கும் வழக்கம்போல் அவர் அணைச்சு வச்சிருக்கார். அந்த நினைப்பே இல்லாமல் நான் ஜாலியாகப் பாட்டுப் பாடிக் கொண்டு, கவனிக்கவும், பாட்டுப் பாடிக் கொண்டு போய்ப் பாத்திரங்களைப் போட்டேன். பாத்திரங்களை நான் போட்டேனா, பாத்திரங்கள் அதுவா விழுந்ததா என்பது இன்னி வரைக்கும் தெரியலை. ஆனால் என்னோட காலை எதுவோ கப் னு கெட்டியாப் பிடிச்சுண்டது மட்டும் தெரிஞ்சது.

வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!! பாத்திரம் எது மேலே விழுந்ததுனு தெரியாது. நான் கீழே விழுந்தேன், கூடவே குய்யோ, முறையோனு நான் கத்த, கூடவே கீச் மூச், கீச் மூச், கீச் மூச் என்று கோபமாய்ப் பதில்கள் வர, பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னோட ம.பா. எனக்குத் தான் ஏதோ ஆயிடுத்துனு பதறி அடிச்சுட்டு ஓடி வர, வரும்போதே விளக்கையும் போட என் காலைக் கவ்விக் கொண்டிருந்த மூஞ்சுறார் விளக்கைக் கண்டதும் ஓடினார். இப்போவும் மூஞ்சுறார் தான் கடிச்சார்னு நான் சத்தியம் பண்ண, அதுக்குப் பல்லே கிடையாதுனு, கடிக்கவெல்லாம் தெரியாதுனு ம.பா. சொல்ல எங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் சண்டை ஆரம்பம் ஆனது. கடிச்சது தம்பியாக இருக்கப் போறதுனு அவருக்குக் கவலை. தம்பி இங்கே வரவே இல்லை, அண்ணன் தான் வாகனத்தை அனுப்பிப் பயமுறுத்தி இருக்கார்னு நான் திட்டவட்டமாய்த் தெரிவித்தேன். இந்த அமர்க்களத்திலே அவர் சாப்பாட்டையே மறந்து போக நினைவு படுத்திச் சாப்பிடச் சொன்ன நான் கால் வலி இருக்குனு சொல்லிட்டே காலைக் கவனித்தால், மயக்கமே வரும்போல் ஆயிடுச்சு. ரத்தம் வந்துடுச்சு காலில் இருந்து. சும்மாவே எறும்புக்கடிக்கும், அரிப்புக்கும், கொசுக்கடிக்கும் சொறிஞ்சாலே ரத்தம் வரும் எனக்கு இந்த ரத்தத்தைப் பார்த்ததும் கேட்கணுமா???

வீராவேசமாய் வந்து சாப்பிட்டுட்டு இருந்தவர் கிட்டே காட்டினேன். ஏதோ கீறி இருக்கும்னு அப்போவும் என்னை விட்டுட்டு மூஞ்சுறுக்கே சப்போர்ட் பண்ணறார். டாக்டர் கிட்டேபோகணும்னு நான் சொல்ல, இதுக்கெல்லாம் டாக்டர் வேண்டாம், ஊசி போடுவார், மூஞ்சுறு கடியை விட எனக்கு ஊசி அலர்ஜினு அவருக்கு நல்லாவே தெரியும். சுண்ணாம்பைப் போடு காயத்திலே, எதுவானாலும் சரியாகும்னு சொன்னார். அதுக்குள்ளே ஒரு ஏழு, எட்டு மிளகை எடுத்துக் கடிச்சுத் தின்னேன். துளசியை ராத்திரி பறிக்க முடியாது. அதனால் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது. உயிர் எவ்வளவு அரிதுனு புரியுது இல்லை??? அவர் சாப்பிட்டுட்டு இருந்தார். அதனால் அதுக்குள்ளே நான் இணையத்திலே யாரையானும் கேட்கிறேன் என்று கணினிக்கு வர, சுண்ணாம்பைப் போட்டுக்கோ, விஷமாய் இருந்தாலும் ஒண்ணும் பண்ணாது. நான் சாப்பிட்டு வரேன், டாக்டர் கிட்டே போகலாம் என்று அவர் சொல்ல இணையத்தில் திரு நடராஜன் அவர்களுக்கும், திரு தி.வா அவர்களுக்கும் மெயில் கொடுத்தேன்.

திருநடராஜன் பிராணிகளோடும், பறவைகளோடுமே வாழ்க்கை நடத்தி வருகிறார். மேனகா காந்திக்குப் பதிலா நடராஜன் இந்தப் பிராணிகள் நலவாரியத் தலைவராய் இருக்கலாம் அந்த அளவுக்கு இதுங்களை உன்னிப்பாய்க் கவனிச்சிருக்கார். தி.வா மருத்துவர், மருத்துவரீதியாகச் சொல்லுவாரே. அதனால் அவரையும் கேட்டேன். ஆனால் அவர் ரொம்ப பிசி போல. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துக் கடைசியில் திருநடராஜன் இது விஷம் தான் என்றும் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கோனும் பதில் கொடுத்தார். தி.வா. பிசியாய் இருந்தார் போல. பதில் வரலை, நானும் உடனே மருத்துவர் கிட்டேப் போயிட்டேன். எப்போவும் போல நாங்க வண்டியிலே ஏறும் வரைக்கும் சும்மா இருந்த வண்டி ஏறிக் கிளம்பும்போது நிற்க, அப்போப் பார்த்து அதிசயமா மழை கொட்ட ஆரம்பிச்சது. லேசாத் தானே பெய்யுது, போயிடலாம்னு நினைச்சா தாரையாக் கொட்டுது மழை. ஒதுங்க இடம் இல்லை. எல்லா வீடுகளும் மூடிக் கிடக்கு. இரவு நேரம் சும்மாவே எங்க ஏரியாவிலே நடமாட்டம் இருக்காது. ஒன்பது மணிக்கு மேலே ஆயிடுச்சு. எல்லா வீடுகளும் மூடிக் கிடக்க ஒதுங்க இடமில்லாமல் மழையில் சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டே போனோம். எல்லாம் கிடக்க மழையில் நனைஞ்சு உனக்கு ஆஸ்த்மா அதிகமாகப் போகுதேனு அவருக்குக் கவலை.

அங்கே போய் டாக்டர் கிட்டே மூஞ்சுறு கடிச்சதுனு சொன்னால் அவருக்குச் சிரிப்பு வராத குறைதான். தேள்கடி, பாம்பு கடி, நாய்க்கடினா ஒத்துப்பார் போல. எனக்குக் குதிரை கடிச்சதைப் பத்தி சுஜாதா கல்கி தீபாவளி மலர்??? எழுதி இருந்தது தான் நினைவில் வந்தது. எவ்வளவு உண்மை? அனுபவிச்சுத் தான் மனுஷன் எழுதி இருக்கார்! அப்புறம் கடிச்ச இடத்தைக் காட்டி ரத்தம் வந்ததையும் உறுதி செய்ததும் விஷம் இல்லை, ஆனாலும் இன்பெக்ஷன் ஆகாமல் இருக்க ஊசி குத்தறேன்னு சொல்லிட்டு ஊசி குத்திட்டார். அது என்னமோ தெரியலை, என்னைப் பார்த்தாலே இந்த மருத்துவர்களுக்கு ஊசி குத்த ஆசை வந்துடும்போல. அப்புறமாய் வலி இல்லாமல் இருக்க மாத்திரைகளும் கொடுத்தார். மொத்த ஆஸ்பத்திரியும் என்னை விசித்திரமாய்ப் பார்க்க, இது பழகிப் போன நானும் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். ஒரு இரண்டு நாளிலே எல்லாம் சரியாப் போச்சு. என்றாலும் அண்ணன் தம்பியை அனுப்பியும் துரத்தறாரே?
அருமை நண்பரோட பிறந்த நாள் வருது. வழக்கம்போல் இந்த வருஷமும் தூம், தாம்னு கொண்டாட வேண்டியது தான். அதுக்கு முன்னாலே இப்போக் கொஞ்ச நாட்களா நண்பருக்கும் எனக்கும் நடக்கும் பனிப்போர் பத்திச் சொல்லியே ஆகணும். தன்னோட வாகனத்தை அனுப்பி என்னைக் கடிக்க வச்சார்னா, தம்பியோட சொரூபத்தின் மூலமும் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார். தம்பியார் ஏற்கெனவே பலமுறை வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். போன மாசம் வந்ததைத் தான் இங்கே எழுதினேன். அப்படியும் அவர் ஒருநாள் காலையில் வாசல் தெளிக்கும்போது தண்ணீர்க் குழாய்க்குள் இருந்து கொண்டு எட்டிப் பார்த்துட்டு இருந்தார். இப்போவும் வழக்கம்போல் போகும்போது கவனிக்காத நான், திரும்பிவரும்போதே அவர் எட்டிப் பார்ப்பதைக் கவனித்தேன். நல்லவேளையாய் அவரும் என்னைக் கண்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு மறையவும், நானும் ஓடி வந்துட்டேன். ஆனால் இந்த விளையாட்டு எத்தனை நாளைக்கு என்றும் தோன்றுகிறது. நண்பர் கிட்டே அதான் சொல்லி வச்சுட்டேன், பார்த்துக்குங்கனு. இனி அவர் பாடு, தம்பி பாடு. தம்பியை அடக்கி வைக்கவேண்டியது அண்ணன் பொறுப்பு. நமக்கு அண்ணனே கதி!

அப்பாவையே போருக்குப் புறப்படாமல் தன்னைக் கும்பிட்டுட்டுத் தான் போகணும்னு நிற்கவச்சவர், தம்பி கல்யாணத்துக்கு உதவினவர், மாமாவின் சக்கரத்தை முழுங்கியவர் நம்மைக் கவனிக்காமலா இருப்பார்? எல்லாம் அவர் செயல். இதுக்காக எல்லாம் கோவிச்சுண்டு நண்பரோட பிறந்த நாளைக் கொண்டாடாமல் விடமுடியுமா?? நண்பர்களுக்குள் ஆயிரம் இருக்கும், கோபம், தாபம் எல்லாம். அப்புறம் தானே சரியாப்போயிடும் இல்லையா? அது போல் இப்போ பிள்ளையாரோட நானும் “டூ” விட்டிருக்கேன், அவரும் “டூ” விட்டிருக்கார்போல. பிறந்தநாளைக்குள்ளே எல்லாம் சரியாயிடும் பாருங்க! இப்போக் கொஞ்ச நாட்களாய் அண்ணன், தம்பி இரண்டு பேரும் கண்ணில் படறதில்லை. கொஞ்சம் சமாதானம் ஆயிருக்கும்னு நினைக்கிறேன். பிள்ளையார், பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.

Monday, August 17, 2009

இந்த மாதிரி பிரச்னையைப் பார்த்திருக்கீங்களா! 2

ப்ளம்பிங் வேலை தெரிஞ்சு வச்சுக்கணும்னு கோமாவும், வல்லியும் சொல்லி இருக்காங்க. என்னோட ம.பா.வுக்கு நல்லாவே தெரியும். வீட்டுக்குள்ளே குழாய்களை மாத்தறது எல்லாம் அவர் தான். இது மேலே தொட்டியிலே. தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியே வந்து வீட்டுக்கு விநியோகம் செய்யும் இடத்தில் வேலை செய்யணும். அதுக்கு ஒண்ணு அவர் மாடிக் கைப்பிடிச் சுவரிலே உட்கார்ந்து குனிஞ்சு ஆக்ஸா ப்ளேட் வச்சுக் குழாயை அறுக்கணும், இல்லைனா சன்ஷேடிலோ, ஏணி வச்சோ நின்னுட்டு அறுக்கணும். அவரோட கழுத்துப் பிரச்னைக்கு ஏணி வச்சு ஏறித் தொட்டிக்குள்ளே இறங்கி அடைச்சு வச்சிருந்த கம்பைத் துணியோட (தி.வா. கவனிக்க) எடுத்ததே பெரியவிஷயம். :)))))))))))) அதுக்கு அப்புறம் தான் கீழ்க்கண்ட முன் பதிவில் கடைசியில் படிச்ச பிரச்னை ஆரம்பிச்சது.


அன்னிக்குப் பொழுது ஒருவழியாக் கழிஞ்சு மறுநாள் பொழுது விடிஞ்சது. கிணற்றில் கயிற்றையும் ,வாளியையும் போடச் சொல்லி எதுக்கும் இருக்கட்டும்னு தயார் செய்து வைச்சேன். இந்த அமர்க்களத்திலே வாராது வந்த மாமணியாய் வேலை செய்யும் பெண்ணும் வந்து சேரக் கிணற்றில் இறைச்சுத் தான் வேலை செய்யணும்னு சொல்ல, அந்தப் பெண்ணும் சரினு வாய் திறக்காமல், (திறந்தால் மூன்றுநாள் வரலையேனு கிழிச்சிட மாட்டோமா, அதான்) வேலையைச் செய்துட்டுப் போனாள். ப்ளம்பரைக் காலை ஏழு மணியிலிருந்து கூப்பிட்டால் எழுந்திருக்கவே இல்லைனு மூன்று அழைப்புகளும் பல்தேய்ப்பதாய் மூன்று அழைப்புகளும், குளிப்பதாய் நாலு, ஐந்து அழைப்புகளும் போனப்புறம் ஒன்பது மணிக்கு வேறு வழியில்லாமல் மாட்டிக் கொண்டார். அரை மணி நேரத்தில் வருவதாய்ச் சொல்லிட்டு வழக்கம்போல் தாமதமாய் வந்து சேர்ந்தார். மேலே போய்ப் பார்த்தவருக்குத் தொட்டியின் வால்வ் மூடி இருப்பது கண்ணில் பட அதைத் திறந்துவிட்டுட்டார். நாங்க கீழே அடைப்பை நீக்கவேண்டும் என்று எல்லாக் குழாய்களையும் திறந்து வச்சிருந்தோமோ ஒரே தண்ணீர் வெள்ளம்.

அதுக்கப்புறமும் எங்க கிட்டே சொல்லவும் சொல்லாமல் எதுவும் கேட்காமல் அவர்பாட்டுக்குக்குழாயை அறுக்கவேண்டி வாங்கி வந்த ப்ளேடால் குழாயையும் அறுத்துத் தள்ளிப் பார்த்துவிட்டார். அடைப்பு எதுவும் இல்லைனு தீர்மானம் ஆச்சு. அதுக்கப்புறமாய் மெதுவாய்க் கீழே வந்து, மேலே வால்வைத் திறக்காமல் வச்சிருந்தீங்களா, இல்லை காலையிலே மூடினீங்களானு கேட்க, என்னோட ம.பா. அசடு வழிந்தார். நேத்துத் தொட்டியைச் சுத்தம் செய்துவிட்டுத் தண்ணீர் நிரப்பும்போது வால்வை மூடி வச்சேன். அப்புறம் திறக்க மறந்திருக்கேன்னு அவர் வழிய, அது தெரிஞ்சும் எதுக்குக் குழாயைக் கட் பண்ணினாருனு நான் கேட்க இப்போ ப்ளம்பரும் வழியறதில் சேர, தண்ணீரோடு சேர்ந்து எல்லாமே வழிந்தது. தண்ணீர் பிரச்னைனா என்னனு அனுபவிச்சும் பார்த்தாச்சு. அப்பாடா! கொஞ்சம் உட்காரலாமா??? இல்லையே? அடுத்து மின்சாரம் இருக்கே? சம்சாரம் மட்டுமா மின்சாரம்??? நம்ம ஆற்காட்டார் மின்சார மந்திரியானதிலே இருந்து மின்சாரம் கடவுளைப் போல கண்ணுக்குத் தெரியறதில்லை. வரதும் போறதும் புரியலை.

அப்பாடானு உட்காரவா முடியுது? சனிக்கிழமையன்னிக்குக் காலம்பரத்திலேருந்து மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டு வந்துட்டு இருந்தது. இன்வெர்டர் எடுக்கவே இல்லை. குறைந்த மின் அழுத்தம். ஆகவே ம.பா.வுக்குக் கை துறுதுறு. உடனேயே இன்வெர்டரை அணைத்தார். அப்படியும் சரியாகவில்லை. என்ன பண்ணறதுனு யோசிச்சுட்டு மெயினை அணைத்தார். குறைந்த அழுத்த மின்சாரமும் இல்லாமல் போக இன்வெர்டரை இப்போப் போடலாம்னு போட்டார். ஆனால் அதுக்கு ஒரே ரோசம்! ஏற்கெனவே பலமணிநேரம் வேலை செய்திருந்த களைப்பும் சேர்ந்து கொள்ள, சார்ஜ் ஆகவே இல்லைனு கத்த ஆரம்பிச்சது. அது வாயை அடைக்கிறதுக்குள்ளே போறும், போறும்னு ஆக ஒருவழியாய் அது வாயை அடைச்சாச்சு. மறுபடியும் மெயினைப் போட்டுவிட்டுப் பார்த்தால் சுத்தம்! எந்த விளக்கும் குறைந்த அழுத்தத்தில் கூட எரியலை! மின்சாரம் வரலையோனு நினைச்சா பக்கத்து ஃப்ளாட்டில் வழக்கம்போல் அவங்க வைக்கிற பக்திப்பாடல்கள் தெருவையே ஓட வச்சுட்டு இருக்கு. அதனால் மின்சாரம் இருக்கு. வந்திருக்கு. ஆனால் நமக்கு இல்லை.

அக்கம்பக்கம் பார்க்கலாம்னு பார்த்தால் பக்கத்திலே ஃப்ளாட்டிலே நல்லா எரியுது. ஆனால் அவங்களுக்கு மூன்று ஃபேஸ் மின் விநியோகம். நம்ம ஃபேஸ் வேறே. எப்போவுமே நம்ம வழீஈஈஈஈஈ தனீஈஈஈ வழியாச்சே! :P அப்போ நம்ம ஃபேஸிலே போயிருக்கோ? பல விதங்களிலும் சோதனை செய்தும் அங்கெல்லாம் சம்சாரத்தோட மின்சாரம் இருக்கு, நம்ம வீட்டிலே மட்டும் நோ மின்சாரம்! சரி பக்கத்து வீடு, நம்ம வீடு மாதிரி தானே. அங்கேயும், இங்கேயும் ஒரே ஃபேஸ்தானே! உடனே பக்கத்தில் கேட்டால் மின்சாரம் வந்து அரை மணி ஆச்சு. போயிட்டுப் போயிட்டு வந்தது. இப்போக் கொஞ்ச நேரமா சரியா இருக்குனு பதில் வந்தது. இன்னும் யாரைக் கேட்கணும்? உடனேயே தொலைபேசி மூலம் மின் வாரியத்தைத் தொடர்பு கொண்டால் அவங்க குறைந்த மின் அழுத்தம் இருந்தது உண்மைதான் என்றும் “ட்ரிப்பிங்” இருந்ததாகவும் அதைச் சரி செய்துவிட்டோம் என்றும் இப்போ மின்சாரம் வந்திருக்கணுமே, எதுக்கும் பக்கத்தில் இன்னொரு தரம் சோதனை செய்யுங்கனு பதில் வந்தது. மறுபடியும் எல்லாச் சோதனைகளையும் செய்துட்டு நம்ம வீடுதான் அபூர்வ ராகம் பாடுதுனு புரியவர மறுபடியும் தொலைபேசித் தெரிவித்தோம். அப்புறமா வந்து பார்த்த மின்வாரிய ஊழியர் மீட்டரிலிருந்து செல்லும் வயர் அறுந்து போயிருப்பதாய்க் கூறிவிட்டு அதைச் சரி செய்தார். அப்பாடானு நிஜமாவே இருக்கு இப்போ!

இந்த மாதிரிப் பிரச்னை பார்த்திருக்கீங்களா?

கொஞ்ச நாட்களாகவே வீட்டிலே ஏகப்பட்ட பிரச்னைங்க. அதுவும் ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு. கொஞ்ச நாட்கள் முந்தி தென்னை மட்டை விழுந்து தண்ணீர்க் குழாய் உடைஞ்சு போனதிலே ப்ளம்பர் வந்து சரி பண்ணறேன் பேர்வழினு, எம் சீல் வைச்சுக் குழாயை ஒட்ட வைச்சார். அப்போ தண்ணீர் வராமல் இருக்க தொட்டியிலிருந்து நீர் வெளிச்செல்லும் குழாயை மூடிட்டு வேலை செய்திருக்கார். அப்புறமா வால்வைத் திறக்கச் சொன்ன அவர் அந்தக் குழாயை மூடின விஷயத்தை எங்க கிட்டேயும் சொல்லலை. அவரும் அதை அப்புறமா வந்து எடுக்கவும் இல்லை. ப்ளம்பர் அந்தப் பக்கம் போனாரோ இல்லையோ இந்தப் பக்கம் எனக்குத் தண்ணீர் குறைந்த அழுத்தத்தில் வருதுனு தெரிய, என்னோட ம.பா.வோ உனக்கு எப்போவும் எதிலும் குற்றம் தான் கண்டுபிடிக்கத் தெரியும். இப்போத் தானே வால்வைத் திறந்திருக்கேன். மெதுவாய்த் தான் வரும்னு சொல்லிட்டார். அது ஆச்சு, மூணு நாள், நாலு நாள், ஐந்து நாள்னு மெதுவாக் கொஞ்சம் வந்துட்டு இருந்த தண்ணீர் சுத்தமா ஒரு நாள் நின்னே போச்சு. போயே போச்சு, போயிந்தி, இட்ஸ் கான்!

நம்மவருக்கு இப்போத் தான் பிரச்னைனே புரிஞ்சது. மேலே போய்த் தொட்டியைப் பார்த்தால் தண்ணீர், தண்ணீர், தண்ணீர்தான். நிறையவே இருக்கு. ஆனால் ஒரு சொட்டுக் கூடக் கீழே வரவில்லை. தொட்டியிலிருந்து நீரைச் சுத்தம் செய்ய இணைக்கப் பட்ட குழாயைத் திறந்தாலோ தண்ணீர் கொட்டுது. ஆனால் வீட்டுக்கு வரலை. மாடியிலே இருந்து எத்தனை பக்கெட் தண்ணியைக் கீழே எடுத்துவரமுடியும்? ப்ளம்பரைக் கூப்பிட்டோம் மறுபடியும். அவரும் வந்து பார்த்தார். ஆமாங்க பார்த்தார்னா பார்த்தார் தான். தொட்டியைக் கவனிக்கலை. தண்ணீர் வெளியே வரும் இடத்தில் அடைப்பு இருக்கு, ஏதோ மண், கல், குப்பைகள் அடைச்சிருக்கும்னு சொல்லிட்டுத் தொட்டியைக் காலி பண்ணி வைங்க. சாயந்திரம் வரேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். சாயந்திரம் வழக்கம்போல் நம்ம வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் வராமல் போக, சீக்கிரமாவே மாடிக்குப் போயாச்சு இரண்டு பேரும். அந்த அம்மா வந்தால் கொஞ்சம் நேரம் ஆகுமே அவங்க வேலையை முடிக்க. இப்போவோ அந்தக் கவலை இல்லை. நான் தானே செஞ்சுக்கணும். எப்போ வேணாலும் செஞ்சுக்கலாமே? நல்ல ஐடியாதான்னு மெச்சிக் கொண்டு 4 மணிசுமாருக்கு மேலே ஏறினோம். தொட்டிக் குழாயைத் திறந்து மொட்டை மாடி பூராவும் அலம்பிவிட்டும் தொட்டியில் பாதிக்கு மேல் தண்ணீர் இருந்தது. ஏணி போட்டு ஏறிக் கொண்டு தொட்டியிலிருந்து மொண்டு மொண்டு அவர் தண்ணீரைக் கொட்ட, குழாய் வழியாக நான் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்ட. அப்பு மட்டும் இருந்தது! ஹையா, ப்ளேயிங் வித் கமகம், பேபி வாண்ட் டு ப்ளேனு அதுவும் ஓடி வந்திருக்கும்.

அதை நினைச்சுட்டே ஒருவழியா ஒரு மணி நேரத்துக்குள்ளே தொட்டியைக் காலி செய்தோம். காலி செய்யும்போதே வெளியே போகும் குழாய் அடைச்சிருப்பது அவர்கண்களில் பட்டுவிட, இதான் காரணம் என்று கண்டு பிடித்துவிட்டார். தண்ணீர் காலியானதும் தொட்டிக்குள்ளே இறங்கி அந்தக் கம்பை மெதுவாக வெளியே எடுத்தார். ஒரு வாரத்திற்குள்ளாக மக்கிப் போயிருந்த அது பாதிக்கு மேல் உள்ளேயே இருந்துகொண்டு வம்பு பண்ண, கீழே இருந்து இரும்புக் கம்பியை எடுத்துவந்து எல்லாத்தையும் எடுத்துட்டுத் தொட்டியைச் சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் போட்டு மீண்டும் தண்ணீர் நிரப்பினோம். அதுக்குள்ளே மணி ஆறு ஆகிவிடவே கீழே விளக்கு ஏத்தணும், வேலை இருக்குனு நான் கீழே குளிக்க வந்துட்டேன். குழாயைத் திறந்தால் தண்ணீரே வரவில்லை. உடனேயே கிணற்றடிக்குப் போய் மாடியிலிருந்த ம.பா.விடம் செய்தியைக் கொடுக்க அவர் “உனக்கு ஏக அவசரம்!’ என்றார் ஒரே வரியில். சரினு நானும் நேரடியாய்த் தண்ணீர் வரும் குழாயிலிருந்து பிடிச்சுக் குளிச்சு முடிச்சேன். அவரும் மாடியிலிருந்து வந்து குழாயைத் திறந்தால் தண்ணீர் நூல் போல் வழிந்தது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?? அதான் எடுத்துட்டோமே அடைப்பை அப்புறமும் ஏன் தண்ணீர் வரலை? புரியவே இல்லை அவருக்கு. ப்ளம்பருக்குத் தொலைபேசினதில் அவர் எங்கேயோ வேலையில் மாட்டிக் கொண்டிருப்பதால் காலையில் எழுந்ததும் வரேன்னு சொல்லிட்டார்.. அவசரம் அவசரமாய் நூல் போல் வர தண்ணீரைப் பிடிச்சு வச்சுண்டோம்.

காலம்பர எழுந்ததும் பல்தேய்க்க, கை, கால் கழுவத் தண்ணீர் இருக்கு. குளிக்க?? ப்ளம்பர் எப்போ வருவாரோ? தண்ணீருக்கு என்ன செய்யறது?? 150 அடியில் போரில் தண்ணீர் கொட்டுது. மோட்டாரைப் போட்ட உடனேயே தொட்டி நிரம்பறது. அக்கம்பக்கம், இன்னும் சொல்லப் போனால் எங்க தெருவிலேயே இருக்கும் எங்க அக்கா(பெரியப்பா பெண்) வீட்டிலேயும், அடுத்த தெருவில் இருக்கும் அண்ணா வீட்டிலேயும் இரண்டடிக்குத் தான் தண்ணீரே இருக்கு. தண்ணீர் ஊற ஊற இறைச்சுக்கிறாங்க. மோட்டார் போடவே முடியலை. நமக்குத் தண்ணீர் கஷ்டமே கிடையாதுனு சொல்லிட்டு இருந்தோமே?? அது என்ன எப்படினு காட்டவா இது? பகவானே!