Sunday, August 25, 2013

அப்பா 3!

கணவன் வந்துவிட்டதை அறிந்து மாமியார், மாமனாருக்குக் காஃபி கொண்டு கொடுத்த கலா கணவனுக்கும், தனக்கும் காஃபி கலந்து கொண்டாள்.  தங்கள் அறைக்குச் செல்லக் கிளம்பினாள்.  இத்தனை நேரம் உள்ளே உட்கார்ந்திருந்த அவள் மாமியாரும், மாமனாரும், எப்படியோ ஊகித்தாற்போல் இப்போது ஹாலில் வந்து உட்கார்ந்திருந்தனர்.  அவள் செல்வதைப் பார்த்த மாமனார் கண்களால் ஜாடை காட்ட  அவள் மாமியாரோ, " ஆச்சு, இப்போ மந்திரம் ஓதியாகும். அவன் என்னிக்கோ வந்துண்டிருந்தான்.  இப்போத் தான் நிரந்தரமா இங்கே இருக்கப் போறான்.  அவனே பார்த்துக்கட்டும், இங்கே நடக்கிற அநியாயத்தை!  இவள் அடிக்கிற கொட்டத்தை நேர்லே பார்த்தாத் தான் புரியும் அவனுக்கும்." என்று சத்தமாகச் சொன்னாள்.  காதில் விழாதது போல் சென்றுவிட்டாள் கலா.

உள்ளே ராகவன் ஏதோ அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.  கதவு திறந்த சப்தம் கேட்டுத் தன் தாய் தான் வராளோ என நிமிர்ந்தவன், கலாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.  "வந்துட்டியா? எப்போ வந்தே?  வரச்சே கீழே விசாரிச்சேன்.  ஏதோ புது கேஸ் வந்திருக்குனு சொன்னாங்க.  யார் அது?  ஆணா, பெண்ணா? பிரசவ கேஸா?  இல்லை ஆர்டினரியா?" என்று கேள்விகளை அடுக்கினான்.

"முதல்லே காஃபியைப் பிடிங்க!" என்று அவன் கையில் காஃபியைக் கொடுத்த கலா, உரிமையோடு அவன் அருகில் உட்கார்ந்தாள்.  சற்று நேரம் பேசாமல் காஃபியை அருந்தியதும், அவள்,"இன்னிக்கு வந்த கேஸ் ஆண் தான்.  யார்னு தெரிஞ்சா ஆச்சரியப் படுவீங்க!" என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள். அவள் முகத்தைப் பார்த்து எதுவும் புரியாத ராகவன், "ம்ம்ம்ம்ம்ம், சாயந்திரமா வரேன்." என்றான்.  "குழந்தைங்க வந்துட்டாங்களா?" என்றும் விசாரித்தான்.  "வர நேரம் தான்!  இப்போ வந்துடுவாங்க. அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் பண்ணணும்." என்றவாறு எழுந்தாள் கலா. "ம்ம்ம்ம், அங்கே ஆஸ்பத்திரியிலும் நோயாளிகளோடு மன்னாடிட்டு, இங்கேயும் வந்து வேலை செய்யறியே!  உன் உடம்பையும் கவனிச்சுக்க வேண்டாமா?  உனக்கு ஏதானும் ஒண்ணுனா எனக்குத் தாங்க முடியாது.  ஒரு ஆளைப் போட்டுக்கறது தானே! நீ இல்லைனால் நாங்கல்லாம் என்ன செய்வோம்!" என்றான்.

அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்த கலா, "என் சிநேகிதியிடம் சொல்லி இருக்கேன். அனுப்பறதாச் சொல்லி இருக்கா!" என்றவள் கொஞ்சம் தயங்கினாள். "என்ன யோசனை?  அந்த ஆளை முடிச்சுடு! யோசிக்காதே!" என்றான் ராகவன்.  "இல்லை" என்று மீண்டும் கலா தயங்க, "அப்பா, அம்மாவுக்காக யோசிக்கிறாயா?" என்றான் ராகவன்.  நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கலா.  அந்த ஒரு பார்வையிலேயே அனைத்தும் புரிந்தது அவனுக்கு.  "யோசிக்காதே!  அந்த ஆள் வரட்டும். அவங்களையே நியமிச்சுடு.  நான் இனி இங்கே தான் இருக்கப்போறேன்.  அடுத்து மாற்றல் வந்தாலும் வேறே துறைக்கு மாறிடலாம்னு ஒரு எண்ணம். பார்ப்போம்.இல்லைனா, வேலையை விட்டுட்டு, உன்னோட ஆஸ்பத்திரி மேனேஜ்மென்டைப் பார்த்துண்டு உட்காரலாமானு இருக்கேன்." என்றான்.

"அப்பா, சாமி, அந்த வேலை மட்டும் வேண்டாம்.  அப்புறமா நான் இந்த வீட்டிலேயே இருக்க முடியாது!" என்றாள் கலா.  அதற்குள்ளாகக் குழந்தைகளின் கூக்குரல் கேட்க, அவங்க வந்துவிட்டது தெரிஞ்சு கலா மீதம் பேச்சு வார்த்தையை இரவில் வைச்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினாள்.  ராகவனுக்கும் கலாவுக்கும் ஒரு பெண், ஒரு ஆண் .  பெண் பெரியவள், பையன் சின்னவன்.  பெண் ஐந்தாம் வகுப்பிலும், பையன் முதல் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.  அன்று பள்ளியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருந்தது.  அதில் பங்கேற்கச் சென்ற கலாவின் பெண் அதில் பரிசு வாங்கி இருந்தாள்.  அந்த உற்சாகம் தான் இருவருக்கும்.  சந்தோஷத்தோடு பாட்டியிடம் அதைக் காட்டினாள் ஷோபா.  முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்ட பாட்டி, "என் மேலே பட்டுடாதே.  உன் அம்மாதான் ஆஸ்பத்திரித் தீட்டை எல்லாம் கொண்டு வரான்னா, நீயும் என் மேலே இடிச்சு, என்னை ராத்திரிச் சாப்பிட விடாமப்பண்ணிடாதே!" என்றாள்.

குழந்தை முகம் சுருங்கியது.
*********************************************************************************
சந்திரா வாயே திறக்கவில்லை.  அத்தனை குழம்பையும் கொட்டினான்.  நினைவாகத் தனக்குத் தேவையானதை எடுத்து வைத்துக்கொள்ள மறக்கவில்லை.  குழந்தைகள் வாய் திறவாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவன் கத்திக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.  அந்த வீட்டில் அவன் தான் தலைவன்.  குடும்பத் தலைவன்.  அவர்கள் அனைவருக்கும் அவன் தான் சோ'று போட்டுக் காப்பாற்றி வருகிறான். ஆகவே அவனுக்குத் தான் முதலிடம்.  அவனுக்குத் தெரியாமல் யாரும் எதுவும் பண்ண முடியாது.  அவனுக்குத் துரோகம் செய்வதாம் அது. வயிறு நிறையச் சாப்பிடவும் கூடாது. அவனாகப் பார்த்து இதைச் சாப்பிடுங்கனு சொன்னால் சாப்பிடணும்.  இல்லைனால் பார்த்துக் கொண்டே பேசாமல் இருக்கணும்.  சந்திராவும் குழந்தைகளும் அப்படியே பழகி விட்டனர். பண்டிகை, விசேஷ நாட்களில் குழந்தைகள் பாவம் என்று அக்கம்பக்கத்திலிருந்து ஏதேனும் தின்பண்டமோ, வேறு ஏதேனுமோ கொண்டு வந்து கொடுத்தால் அப்படியே திருப்பி விடுவான். ஒரு தரம் அவங்க வீட்டில் பண்டிகை இல்லை.  ஆடிப்பெருக்குச் செய்த கலந்த சாதங்களை ஒரு டிபன் காரியரில் போட்டுக் கூடவே ஒரு பாத்திரத்தில் அப்பளம், கறிவடாமும் எடுத்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமி வந்து கொடுத்துப் போனார்.  சந்திராவும் சகஜமாக வாங்கிக் கொண்டு விட்டாள்.

அவன் வந்ததும் சாப்பிட அமர்ந்தான்.  வீட்டுச் சாப்போடு இருந்த அந்தப் புதிய உணவு வகைகளைப் பார்த்தவன், "ஏது இது?" என்று உறுமினான்.  சந்திரா, பக்கத்துப் போர்ஷன் மாமி குழந்தைகளுக்குனு கொடுத்ததாகச் சொல்லவே, அந்த உணவு அப்படியே பாத்திரத்தோடு வீசி எறியப் பட்டது.  தன் போர்ஷனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாமிக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது.  அவனை வந்து ஏன் இப்படிப் பண்ணறீங்கனு கேட்டதுக்குக் கன்னாபின்னாவென்று பேசிவிட்டான்.  அதிலிருந்து அந்த மாமி சந்திராவிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை. இதெல்லாம் சந்திராவுக்குப் பழக்கம் ஆகிவிட்டது.  ஆனால் குழந்தைகள் என்ன செய்யும்?

அவன் சாப்பிட்டு விட்டு எழுந்ததும், குழந்தைகளைச் சாப்பிட அழைத்தாள் சந்திரா. ஒருத்தருக்கும் சாப்பிடணும்னு தோணலை.  ஆனால் சாப்பிடலைனு சொன்னாலும் அதுக்கும் திட்டுவான். வாயே திறக்காமல் மூவரும் வந்து அமர்ந்தனர். குழந்தைகளுக்கு மாவடுவைப் போட்டுவிட்டு சாதத்தைப் போட்டு ரசத்தை ஊற்றினாள்.  எங்கே!  குழம்பை எல்லாம் தான் கொட்டியாச்சே! காய் பண்ணினதில் அவள் எடுத்து வைக்கும் முன்னரே அவன் வந்துவிட்டான்.  ஆகவே அவன் சாப்பிட்டது போக மிச்சத்தை ராத்திரிக்கு வைத்துக் கொண்டு  அவன் சிநேகிதமாய் இருக்கும் எதிர் வீட்டிற்கு அவனே நேரில் கொண்டு கொடுத்தான்.  அந்த வீட்டம்மா, "உங்க குழந்தைங்களுக்கு வேண்டாமா?" னு கேட்டதுக்கு,
"ஒண்ணும் கேட்காதீங்கம்மா!" என்று ஜெயராமன் அழ ஆரம்பித்தான்.  அந்த அம்மா திகைத்துப் போனாள்.

Wednesday, August 21, 2013

அப்பா 2!

அந்த வீட்டில் இது எழுதப்படாத விதி.  முதலில் ஜெயராமன் தான் சாப்பிட வேண்டும்.  அதன் பின்னர் அவன் இரவுக்குத் தனக்குத் தேவையானவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வான்.  சாதம் மட்டும் இரவு சூடாக வடிக்க வேண்டும்.  ஆகவே மிகுந்தவைகளையே ஜெயராமனின் மனைவி, குழந்தைகள் சாப்பிடலாம். அதோடு வீட்டில் ஊறுகாய் போட்டிருந்தாலோ அல்லது மாவடு போட்டிருந்தாலோ குழம்பு ஜெயராமனுக்கு மட்டும் தான் வைக்க வேண்டும்.  மற்றவர் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டோ, மாவடு ஜலத்தை ஊற்றிக் கொண்டோ சாப்பிடலாம்.  இல்லை எனில் வெறும் ரசம் சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இந்த வீடு ஜெயராமன் சம்பாத்தியத்தில் நடக்கிறது.  அவன் தான் குடும்பத் தலைவன்.  அவனுக்குத் தான் முன்னுரிமை.  மீறி நடந்தால் மனைவி, குழந்தைகள் எனப் பார்க்காமல் வெளியேற்றிவிடுவான்.  இதுவரை சந்திரா அப்படி எத்தனையோ முறை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் பிறந்த வீட்டில் சென்று நிற்கையில் அவள் மனமும், உடலும் கூசும். ஒரு முறை அவள் பெரிய பிள்ளையையும் ஜெயராமன் இப்படி அடித்து விரட்ட அவன் பெரியப்பா வீட்டில் போய்த் தங்கினான்.  அது முதல் ஜெயராமன் அடித்துத் துரத்துவதும், அவர்கள் பெரியப்பா வீட்டில் போய்த் தங்குவதும் வழக்கமாகப் போய்விட்டது.  எதற்கு என்றெல்லாம் இல்லை;  சின்னக் காரணம் கிடைத்தால் போதும்.  இது வரையிலும் சசியைத் தான் துரத்தவில்லை.  பெண் என்ற ஒரே காரணம்.  இதோ இப்போது சாப்பிட அமர்ந்திருக்கிறான். வெண்கலப்பானையில் கரண்டியைப் போட்டு சாதம் எடுக்கையில் அந்தப் பாழாய்ப் போன குழம்புக் கிண்ணம் சத்தப் படுத்திக் காட்டிக் கொடுத்துவிட்டதே! என்ன நடக்கப் போகிறதோ! மெதுவாக அங்கிருந்து வெளியே செல்ல யத்தனித்த சந்திராவின் மேல் சூடாக எதுவோ வந்து விழக் கண்களும், மூக்கும் எரிச்சலாக எரிந்தன.  என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள்ளாக அங்கிருந்த ஒரு கம்பை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்த ஜெயராமன் அவள் தலைப்பின்னலைப் பிடித்துக் கொண்டு கம்பால் அடித்து நொறுக்கினான்.

"அப்படி என்ன, வாய்க்கு ருசியாகச் சாப்பிடணும்!  அதுவும் பொம்பளைக்கு!  ஏண்டி, நீ என்ன வெட்டி முறிக்கிறே இந்தக் குடும்பத்துக்கு!  வடிச்சுக் கொட்டின நேரம் போக மீதம் இருக்கும் நேரம் வெட்டியாத் தானே பொழுதைக் கழிக்கிறே!  அதுக்கு உனக்கு வெறும் சோறு போதாது? வித, விதமாக் குழம்பு, ரசம்னு சாப்பிடக் கேட்குதோ! இது எத்தனை நாளா நடக்கிறது!  எவ்வளவு புளி செலவு பண்ணி இருக்கே?  குழம்புப் பொடி உன் அப்பன் வீட்டுக் காசிலேயே பண்ணினது? சாம்பாரில் போட்டிருக்கும் காய்கள் எங்கிருந்து வந்தது?  என் காசிலே சாப்பிட்டுக் கொண்டு எனக்கா துரோகம் பண்ணறே?  இன்னிக்கு உன்னை ரெண்டிலே ஒண்ணு பார்த்துட்டுத் தாண்டி மறு வேலை!" அடிகள் அதிகமாக விழுந்தன.  எதற்கும் வாயே திறக்கவில்லை சந்திரா. வாயைத் திறந்தால் அடி தான் இன்னும் மோசமாகும்.  சொல்வது எதுவும் அவன் காதில் ஏறப் போவதில்லை.
*********************************************************************************

வந்திருந்த வெளி நோயாளிகளைக் கவனித்து முடித்த கலாவுக்கு அலுப்பாக இருந்தது.  அங்கிருந்த ஒரு அனுபவம் மிக்க நர்சிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவசர கேஸ் என்றால் மட்டுமே தன்னை அழைக்கும்படி சொல்லிவிட்டு அங்கேயே மாடிப் பக்கமாக இருந்த தன்னுடைய வீட்டிற்குச் செல்லப் படியேறினாள்.  மாடி வராந்தாவில் இருந்த கணவனுடைய செருப்புக்கள் அவன் வீட்டிற்கு வந்துவிட்டதை உறுதி செய்தன.  அவள் கணவன் மத்திய அரசு அதிகாரி. ஊருக்கு ஊர் மாறும் வேலை.  ஆகையால் அவள் மட்டும் மாமியார், மாமனார் குழந்தைகளுடன் இங்கே சொந்த வீடு கட்டிக் கொண்டு கீழே மருத்துவமனையும், மேலே வீடுமாக இருந்து வந்தனர்.  அவள் கணவன் அவ்வப்போது விடுமுறையில் வந்து செல்லுவான்.  இப்போது சில மாதங்களாகச் சென்னையிலேயே ஒரு அலுவலகத்திற்கு மாற்றம்.  அங்கேயே நிரந்தரமாகத் தங்கும்படியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இதே அலுவலகம் இல்லை எனினும் வேறு துறையில் இதே பதவிக்கான அலுவலகங்களில் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஊர், ஊராக மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுச் சுற்றியதில் அவனுக்கும் மனம் மிகுந்த அலுப்புடனும், வருத்தத்துடனும் இருக்கிறது.  அதிலும் கலா அவன் காதலித்து மணந்த மனைவி.


இருவரும் ஒரே குலம் தான்.  ஜாதகப் பொருத்தங்களும் பார்த்தார்கள் தான் என்றாலும் கலாவின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை.  ராகவனுக்கோக் கலாவை மிகவும் பிடித்து விட்டது.  ஆகவே தன் பெற்றோர், கலாவின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறிக் கலாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று செய்து கொண்டான்.  இப்போதும் ராகவனுடைய அப்பா, அம்மாவிற்குக் கலாவிடம் நிஷ்டூரம் தான் காட்டத் தெரியும். சேர்ந்து இருக்கிறார்களே தவிரத் தன் பெற்றோர் பற்றி ராகவன் நன்கறிவான்.  ஆனாலும் மருத்துவம் படித்த கலா அதைத் திறமையாகச் சமாளித்து வந்தாள். கூடியவரை என்றோ வரும் ராகவன் காதுகளுக்கு எந்த விஷயமும் போகாமல் பாதுகாத்து வந்தாள்.  இதை எல்லாம் எண்ணிப்பெருமூச்சு விட்டவாறு உள்ளே சென்ற கலாவுக்குத் தன்னைக் கண்டதுமே உள்ளே சென்று கதவைச் சாரத்திக் கொண்ட மாமியாரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

மங்களம்மாள் ஹாலில் தான் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.  கலா உள்ளே நுழைவதைக் கண்டதுமே உள்ளே சென்று இழுத்துப் போர்த்துக் கொண்டாள்.  பத்மநாப ஐயர் மனைவியைப் பார்த்து, "என்ன மஹாராணி வந்துட்டாளா?" என்று நக்கலாகக் கேட்க, பதில் பேசாமல் தலையை அசைத்தாள் மங்களம்.  "நீ பேசாமல் படு, சொல்கிறேன்.  அவளுக்கென்ன, கேஸ், கேஸ் அப்படினு நாக்கூசாமல் சொல்லிக் கொண்டு அங்கே வெறுமனே உட்கார்ந்துட்டுப் பொழுதைக் கழிக்கிறா.  பார்த்துக்கறதெல்லாம் நர்சுங்க.  இங்கே வந்ததும் வேலை செய்ய முடியாதாமா அவளுக்கு?  அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் அவளே செய்ஞ்சுக்கட்டும்.  நீ ஏன் போறே?"  என்றார்.

"இல்லை, ராகவன் வந்திருக்கான்.  அவன் ஏதேனும் நினைச்சுக்கப் போறானே!" என்றாள் மங்களம் மெல்ல.   "அவன் என்ன நினைச்சுக்கறது!  உனக்கு உடம்பு சரியில்லை;  வயசாச்சு; செய்ய முடியலைனா ராகவன் கோவிச்சுக்கப் போறானா என்ன! பேசாமல் படு! காஃபி வருதானு பார்ப்போம். நமக்கில்லைனாலும் ராகவனுக்காக அவள் பண்ணித் தானே ஆகணும்.  இல்லைன்னாலும் அவளுக்குப் போட்டுக்கணுமே!  என்ன தான் செய்யறானு பார்த்துடுவோம்!"

கதவு தட்டப்பட்டுப் பின் திறக்கப் பட்டது. கலா ஒரு தட்டில் இரண்டு காபி தம்ளர்களோடு வந்து அவற்றையும் இன்னொரு தட்டில் தின்பதற்கு ஏதுவாக முறுக்கு, தட்டை வகைகளும் வைத்து விட்டு நகர்ந்தாள்.

"ஏண்டிம்மா, ஒவ்வொண்ணாக் கொண்டு வரக் கூடாதோ! இப்படி ஹோட்டலில் கொடுக்கிறாப்போல எல்லாத்தையும் மொத்தமாக் கொண்டு வைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம்!  இல்லை என்ன அர்த்தம்ங்கறேன்!" மங்களம் நிஷ்டூரமாகக் கேட்க, பத்மநாபன், "அவள் கடமை முடிஞ்சது! ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்துச் செய்ய நாம் என்ன அவள் அப்பா, அம்மாவா? மாமியார், மாமனார் தானே!  அதான் ராகவன் வந்திருக்கானே!  இனி இங்கே தானே இருக்கப் போறான்!  எல்லாத்தையும் பார்த்துப் புரிஞ்சுக்கட்டுமே!" என்றார்.

கலா பதிலே பேசாமல் நகர்ந்தாள்.  குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.  அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் தயார் செய்யணும்.  அவளுக்கு வேலை இருந்தது.  இரவுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துட்டு., ஆறுமணிக்கப்புறமா கீழே போய் நோயாளிகளைப் பார்த்துட்டு வரணும்.  ராகவன் இங்கேயே வந்துட்டானானால் ஒரு சமையல்காரியைப் போட்டுடலாம்னு சொல்லி இருக்கான்.  அதைக் குறித்தும் முடிவு செய்யணும்.  வருகிற சமையல்காரங்க எல்லாம் மங்களத்தம்மாளின் மிரட்டல்களிலும், அதிகாரத்திலும் நிற்காமல், சொல்லிக் கொள்ளாமல் போயிடறாங்க.  இனி வருகிறவளாவது சரியாய் அமையணும்.

கலாவுக்கு ஆயிரம் கவலை இருந்தன. 

அப்பா! 1

மயக்கமாய்க் கிடந்தவரைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.கலா. ஒரு நிமிடம் அவளுக்குத் தான் ஒரு மருத்துவர் என்ற எண்ணமே வரவில்லை.  அவரை சோதித்துக் கொண்டிருந்த நர்ஸ் நிமிர்ந்து அவளைப்பார்த்து, பிபி ஏறி இருக்கு டாக்டர்!  ஷுகர் ரான்டம் செக் பண்ணினதிலேயே நிறைய இருக்கு. மாதிரி ரத்தம் சோதனைக்குக் கொடுத்திருக்கேன்.  அந்த ரிப்போர்ட் சாயந்திரம் தான் கிடைக்கும்."

சட்டெனச் சுதாரித்துக் கொண்டாள் கலா.  "இவரை அழைத்து வந்தது யார்?" எனக் கேட்டாள்.  நர்ஸ் வெளியே சென்று அழைக்க உள்ளே வந்தார் ஒருவர்.  அவரைப் பார்த்த கலா, "இவர் உங்களுக்கு என்ன உறவு?" எனக் கேட்டாள்.

இதற்குள்ளாக முழுமையாகச் சுயநிலைக்கு வந்துவிட்டாள் கலா.  ஆகவே அவள் குரல் பிசிறின்றித் தெளிவாக இருந்தது.  வந்தவர் அவளைப் பார்த்து, " பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர்.  இன்று காலையிலிருந்தே ஆள் வெளியே வரவே இல்லை.  அதான் உள்ளே சென்று பார்த்தப்போ மயங்கிக் கிடந்தது தெரிந்தது.  இங்கே கூட்டி வந்தேன்."  என்றார்.

"அப்படியா?  இந்தப் பகுதியைச் சேர்ந்தவரா?  எத்தனை நாட்களாகத் தெரியும் உங்களுக்கு?" என்று கேட்ட வண்ணமே தன் சோதனையைத் தொடர்ந்தாள் கலா.

"ஆறேழு மாதங்கள் முன்னால் வந்தார். இங்கே பக்கத்து வீட்டில் ஒரு போர்ஷனை எடுத்துக் கொண்டு குடி வந்தார்.  இவருக்கு வங்கிக்குப் போக வர, மற்றும் சில தேவையான சாமான்களை வாங்கித் தர என அழைப்பார்.  வயசானவர் ஆச்சே, துணைக்கும் யாரும் இல்லையே என உதவிகள் செய்வேன். அப்படித்தான் பழக்கம்." என்றார் வந்தவர்.

"சரி, இவருக்குச் சர்க்கரை நோயும் இருக்கு.  ரத்த அழுத்தமும் இருக்கு.  அதனால் மயங்கி இருக்கார். சாப்பாடும் சரியாகச் சாப்பிடலை போல.  நான் இங்கே இவரை அட்மிட் செய்து கொள்ளவா?" என்றாள் கலா.

தயங்கினார் வந்தவர்.  "என்ன செலவாகுமோ?  அவர் ஒத்துக்கணும்.  அவரைப் பார்த்தால் அவ்வளவு பணம் இருக்குமானு தெரியலையே!"  என்று வாய்விட்டுத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் கூறிக் கொண்டார். சிரித்தாள் கலா.  பின்னர்," இவர் வீட்டுச் சாவி உங்களிடம் தானே இருக்கு? அங்கே கொஞ்சம் தேடிப் பார்த்து இவர் உறவினர்களில் எவரேனும் ஒருத்தர் தொலைபேசி எண்ணோ, விலாசமோ கிடைக்கிறதா பாருங்கள்.  இவர் எனக்குத் தெரிந்தவரின் அப்பா போல் இருக்கிறது.  பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் நிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை.  ஆனாலும் நான் அட்மிட் செய்து கொள்கிறேன்.  நீங்கள் இவருடைய அறையில் தேடிப் பாருங்க. பணத்தைக்குறித்து இப்போதைக்குக் கவலை வேண்டாம்." என்றாள் கலா.  அவள் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.

வந்தவர் கிளம்பிச் செல்ல மணியை அடித்து ஆட்களை வரவழைத்த கலா, நர்ஸிடம்  "இந்தப் பெரியவரை ஒன்பதாம் எண் படுக்கையில் விடுங்க.  நர்ஸ், கேஸ் ஷீட் தயார் செய்து விடு. நான் இந்த பிரிஸ்க்ரிப்ஷனில் எழுதி இருக்காப்போல் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து விடு.  திட ஆகாரம் இப்போதைக்கு வேண்டாம்.  க்ளூகோஸ் ஏறட்டும்." என மடமடவென உத்தரவுகளைப் பிறப்பித்தாள் கலா.  அவள் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் மனதுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
*********************************************************************************
குழம்பைக் கீழே இறக்கினாள் சந்திரா.  ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  சட்டென ஒரு கிண்ணத்தை எடுத்துக் குழம்பால் நிரப்பினாள்.  அதை எங்கே வைப்பது?  சற்றே தடுமாறியவள் ஒரு தட்டைப் போட்டு மூடிவிட்டு அதைச் சாதம் வைத்திருக்கும் வெண்கலப் பானையிலேயே உள்ளே அழுத்தினாள்.  மேலே கொஞ்சம் சாதத்தைப் போட்டு மூடிவிட்டாள்.  தட்டுப்போட்டிருந்ததால் குழம்பு உள்ளே சிந்தாது.  சிந்தினாலும் அடி சாதத்தில் தான் இருக்கும்.  அதை அவள் எடுத்துக் கொள்வாள்.  குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்று பார்த்தாள்.  அவ்வளவு நேரம் அவளையே கவனித்துக்கொண்டிருந்த சசி சட்டெனப் புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள். அவளின் இரு சகோதரர்களும் குளிக்கச் சென்றிருந்தனர்.  அவர்கள் இருவரும் ஒரே பள்ளி.  சசி மட்டும் பெண்கள் பள்ளியில் படித்து வந்தாள்.  அதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கோ!  சந்திராவின் மனம் கலங்கியது.

வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.  அவன் வந்துவிட்டான்.  ஜெயராமன் தான்.  அவள் கணவன்.  இப்படி மரியாதை இல்லாமல் நினைக்கிறோமோ என சந்திராவுக்குள் குற்ற உணர்ச்சி தோன்றினாலும் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை.  வந்தவுடன் என்ன செய்தே? என்ன பண்ணினே?  எதை எடுத்தே?  எங்கே வைச்சே என ஆயிரம் கேள்விகள் கேட்பான். நம் வீடுதானே என்ற சுதந்திரம் கிடையாது.  ஒரு கடுகு தாளிப்பது என்றால் கூடக் கணக்கு ஒப்பிக்க வேண்டும். அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை நிரப்புவது அவன் தான்.  நிரப்பிய சாமான்கள் எத்தனை நாட்கள் வருகின்றன என்ற கணக்கும் வைத்திருப்பான். இதோ, இப்போ உள்ளே வந்தான் எனில் இதைக் கண்டு பிடித்தால்!! ஒரு பிரளயமே நடக்கும்.  அப்படி ஒண்ணும் கெட்ட பழக்கம் உள்ளவன் அல்ல.  எந்தவிதக் கெட்ட பழக்கங்களும் இல்லை.  வெற்றிலை, பாக்குக் கூடப் போடமாட்டான். ஆனால் அது எல்லாத்துக்கும் சேர்த்து வைத்துப்பெண் என்றாலே மட்டமாக நினைப்பவன்.  ஆண்களுக்குத் தொண்டு செய்வதற்கே பெண் பிறவி என நினைப்பவன்.

கல்யாணம் ஆகிச் சில மாதங்களுக்கே அவள் வாழ்க்கை இன்பமயமாக இருந்தது.  பின்னர் திடீரென மாறிவிட்டான். தினம் தினம் அடி, உதை தான்.  அவள் சாப்பிடுவதைக் கணக்குப் பண்ணுவான். பிறந்த வீட்டுக்குப் போ என விரட்டி விடுவான்.  மூன்று குழந்தைகள் எப்படிப் பிறந்தது நமக்கு எனப் பல சமயம் எண்ணிக் கொள்வாள் சந்திரா.  முதல் குழந்தை மட்டுமே விரும்பிப் பெற்றது.  இரண்டாவதான சசி பிறந்தப்போவே அவன் கொடுமை அதிகம் ஆகிவிட்டது.  பிள்ளைத் தாய்ச்சி என்று கூடப் பார்க்காமல் அடித்து இந்தக் குழந்தை என்னுடையதல்ல என்றெல்லாம் சொல்லி அவளை அவமானப் படுத்தினான்.  எப்படியோ பெண்ணைப் பெற்றுவிட்டோமே என்று  அவள் கவலைப்பட்டாலும் சசி அப்படியே நிறத்திலும், குணத்திலும் தந்தையைக் கொண்டிருந்தாள்.  குணம் நல்லபடியாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள் சந்திரா.  பெண்ணைப் பார்த்ததும் சில வருடங்களுக்கு அவள் மேல் அன்பு காட்டிய ஜெயராமனோ மூன்றாவதாகப் பிறந்த பிள்ளைக்குப் பின்னர் முற்றிலும் மாறிவிட்டான்.

பெண்ணாய்ப் பிறந்தது அவர்கள் குற்றமா?  ஆனாலும் ஜெயராமனுக்குத் தான் குடும்பத் தலைவன்.  தான் சம்பாதித்து இவர்களுக்குச் சோறு போடுகிறோம் என்ற எண்ணம் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.  அதைச் சொல்லிலும், செயலிலும் காட்டினான்.  ஒருநாள் சசி ரொம்பப் பசியா இருக்குனு சீக்கிரம் சாப்பிட உட்கார, ஜெயராமன் பேசிய பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாது.  அன்றிலிருந்து பசி பொறுக்கப் பழகிவிட்டாள் சசி.  என்றாலும் வளரும் குழந்தை அல்லவா?  பள்ளி வேறு தூரத்தில் இருக்கிறது.  அதற்குப் பேருந்தில் தான் செல்லணும்.  அதற்கான காசை அவனிடமிருந்து வாங்குவதற்குள் போதும், போதும்னு ஆகிடும். இன்னும் எத்தனை நாட்கள் இந்தக் கொடுமையோ என ஏங்கினாள் சந்திரா.

ஜெயராமன் வரும்போதே கத்திக் கொண்டு வந்தான். யார் மேல் கோபமோ, தெரியவில்லை.  உள்ளே வந்ததுமே சந்திராவிடம், "அங்கே என்னம்மா செய்துண்டிருக்கே?  சமைச்சு முடிச்சாச்சுன்னா இந்தப் பக்கம் வா னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்! உப்புப் பார்க்கிறேன், புளி பார்க்கிறேன், ருசி பார்க்கிறேன்னு நீ சாப்பிட்ட மிச்சத்தைச் சாப்பிடணும்னு எனக்குத் தலையெழுத்து இல்லை. " என்றான்.  சந்திரா நகர்ந்துவிட்டாள்.  உப்பில்லாமல் சமையல் இருந்தால் அதற்கும் அவளுக்கு அடி விழும்.  முன்னால் பார்த்தால் அதுவும் தப்பு.  என்றாவது மறக்காதா!  மனிதர்கள் தானே எல்லாருமே!  அதற்குள்ளாக ஜெயராமன் தட்டைப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்துவிட்டான்.  சந்திராவுக்குத் திக் திக் என்று இருந்தது.  கறியைத் தட்டில் போட்டுக் கொண்டவன் சாதம் எடுக்கக் கரண்டியை வெண்கலப் பானையில் விட்டான். "டங்"கென்று கரண்டி எதிலோ மோதியது.