Sunday, May 10, 2009

எலிகளுக்கும் ஓசிப் பயணவசதி கொடுத்த லாலு!

விட்டல என்றால் என்ன அர்த்தம்னு நாகை சிவா கேட்டிருந்தார். செங்கல் என அர்த்தம். புண்டலீகன் ஒரு அரைச் செங்கல்லைத் தூக்கிப் போட்டு வந்திருப்பது யாராயிருந்தாலும் அதிலே நிற்கட்டும் எனச் சொல்ல, அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் தன் பெற்றோருக்குக் கடமைகளை முடித்துவிட்டு வரும்வரையிலும் காத்திருந்தான் பாண்டுரங்கன். செங்கல்லில் காத்திருந்ததால், மராட்டி மொழியில்(?) விட்டல் என்றால் செங்கல்னு அர்த்தம் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தப் பெயரே இன்று உலகளவும் ஓர் பெயராகிவிட்டது. பண்டரிபுரத்தில் நாங்கள் தங்கியது கஜானன் சத்திரம் என்னும் ஓர் சத்திரம். தனி அறைகள் கிடைக்கின்றன். 120 ரூக்குக் கட்டில், தனியாகக் கழிவறை, குளியலறை கூடிய அறைகளும், 60 ரூக்குப் பொதுக்குளியலறை, பொதுக்கழிப்பறை கொண்ட அறைகளும் கிடைக்கின்றன. நம் செளகரியம் போல் எடுத்துக் கொள்ளலாம். அறைகள் குப்பையாய்த் தான் கிடக்கின்றன. சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பாண்டுரங்கன் தரிசனம் நன்றாய், அருமையாய்க் கிடைக்கின்றது. காணக் காண ஆனந்தம் தான். இது அப்போப்போ தொடரும். நினைப்பு வரச்சே எல்லாம். இப்போ மறுபடியும் குஜராத் பயணத்துக்குப் போறோம். ஓகே????????
************************************************************************************

பரோடாவில் இருந்து துவாரகா- சோமநாத் செல்ல அஹமதாபாத்தில் இருந்து விராவல் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். பரோடாவில் இருந்து பேருந்துகள், தனியான வாடகைக் கார்கள் கிடைக்கின்றன. அரசாங்கப் பேருந்தில் என்ன கட்டணமோ அதேதான் தனிப்பட்ட வண்டிகளிலும் வசூலிக்கின்றனர். அதேபோல் பேருந்து நிலையத்திற்கு நாங்க தங்கி இருந்த குடியிருப்பில் இருந்து ஆட்டோவில் போனோம். ஆட்டோக்காரர் 25ரூ கேட்டார். அதுவே எங்களுக்கு அதிர்ச்சி என்றால், 25ரூ சில்லறை இல்லை என 30 ரூ மூன்று பத்து ரூபாய் நோட்டுகளாய்க் கொடுத்தால் என்ன ஆச்சரியம்? மிச்சம் ஐந்து ரூபாய் சரியாக வந்து சேர்ந்தது. என்னதான் குஜராத்தில் ஐந்து வருஷங்களுக்கு மேல் குடித்தனம் பண்ணி இருந்தாலும் பதினைந்து வருஷம் கழிச்சு வந்தப்போ கூட இப்படி மாறாம இருக்காங்களேனு மயக்கம் வராத குறைதான்.

பரோடாவில் இருந்து அஹமதாபாத் செல்ல தேசீய நெடுஞ்சாலையில் பயணித்தோம். சாலை விரிவாக்கம் செய்யப் பட்டிருந்தது. அக்கம்பக்கம் இருக்கும் வயல்கள், குடியிருப்புகள் போன்றவற்றிற்குப் பெருமளவில் பாதிப்பு இல்லாமல், மக்கள் விரும்பிக் கொடுத்த நிலங்களை வாங்கி அரசு முழுமூச்சில் செயல்பட்டு சாலையை வெளிநாடுகளில் இருப்பதுபோல் அமைத்திருந்தனர். ஒரே நேர்கோடாகப் பயணிக்கிறாற்போல் இருந்தது. இருபக்கமும் வயல்கள், பண்ணை வீடுகள் என பச்சையும், அழகும் கைகோர்த்துக் கொண்டு கூடவே வந்தது. நல்ல உழைப்பு. தங்க நாற்கரம் சாலைத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே என தைரியமாய்ச் சொல்லலாம்.

அஹமதாபாத் நகருக்குச் சற்று வெளியேவே இறக்கிவிட்டு அங்கிருந்து புராதன நகரத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு ஆட்டோ பிடித்துச் சென்றோம். எந்த நடைமேடை எனத் தேடிக் கண்டுபிடித்து உட்கார்ந்தோம். நடைமேடையில் ஜம்மு-தாவியில் இருந்து வந்த வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இது போனப்புறம் நம்ம வண்டி வரும்னு ம.பா. சொல்லவே கொஞ்சமும் யோசிக்காமல் அங்கேயே இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். அருகில் ராஜஸ்தான் செல்லும் ராஜஸ்தானி ஒருவர் தன் ரயிலுக்குக் காத்திருந்தார். அவரோடு பேசியதில் நேரம் போனதே தெரியலை. நடைமேடையில் இருந்த ரயில் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. அப்போத் தான் அவர் நீங்க எங்கே போறீங்கனு கேட்க, சோம்நாத் போறோம். இந்த ரயிலுக்கு அப்புறம் அது வரும்போல. இதுவே இன்னும் கிளம்பலையேனு நாங்க சொல்ல, அவர் என்ன? சோம்நாத்தா? இந்த வண்டி அங்கே தானே போகுது? ஜம்மு-தாவியில் இருந்து சோம்நாத் செல்லும் வண்டி இது. நீங்க போகவேண்டியது இதில் தானேனு சொல்ல இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

என்ன அசட்டுத் தனம்? இந்த ரயில் எங்கே போகிறதுனு கேட்கவே இல்லையே? ஆனால் உள்ளூர் குஜராத்தியர் பெருமளவில் ஏறுவது மட்டும் தெரிந்தது. ஜம்மு-தாவியெல்லாம் போகமாட்டாங்களேனு மட்டும் ஏதோ நெருடல். ஆனால் பார்க்கத் தோணலை. வண்டியோ கிளம்பப் போறது. அவசரமா டிக்கெட்டை எடுத்துப் பார்த்தால் நல்லவேளையா, எந்தப் பெட்டியில் ஏறணுமோ அதுக்கு எதிரே உட்கார்ந்திருந்தோம். போய் முன்பதிவு செய்தவங்க லிஸ்டில் பேரைச் சரிபார்க்கப் போனால் பெயர் இருக்கானே தெரியலை. அவசரம் அவசரமா வந்தது வரட்டும்னு வண்டியில் ஏறும்போது தனியாக எங்க இரண்டு பேர் பெயர் மட்டுமே ஒரு இடத்தில் இருப்பது தெரியவர, கொஞ்சம் தைரியத்துடன் வண்டியில் ஏறினோம்.

எங்க இடம் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு வந்தாச்சு. அங்கே இருந்த எட்டுப் பேர் படுக்கும் படுக்கும் வசதி கொண்ட பெட்டியில் நாங்க இரண்டு பேர் மட்டுமே. பக்கத்து இரு பெட்டிகளும் காலி. அதற்கு அப்பால் சிலர் அமர்ந்திருந்தனர். கொஞ்சம் பயமாவே இருந்தது. துணைக்கு யாருமே இல்லையே? யோசனையுடன் அமர்ந்திருக்க இரு எலிகள் துள்ளிக் குதித்தன. கூடவே டிக்கெட் பரிசோதகரும் வந்தார். எலிகள் அவரோடு வந்ததா? ஏற்கெனவே இருந்ததா? டிக்கெட் பரிசோதகரோட எலிகள் விளையாட ஆரம்பித்தன. அவர் என்னடானா கண்டுக்கவே இல்லை.

Monday, May 4, 2009

கல்கியின் அமரதாரா!


மறுபடியும் அமரதாரா! இந்துமதியின் கதை படிக்கிறேன். நடு நடுவே வேலைகள், உடல்நலம், இணையம், மற்ற சில தடங்கல்கள் இவை எல்லாவற்றையும் மீறி இப்போது முதல் இரண்டு பாகம் முடிச்சிருக்கேன். இனி ரங்கதுரையின் கதை படிக்கணும். முதல் முதல் நான் படிச்சபோது இந்துமதியின் கதையின் ஒரு பகுதி மட்டுமே படிச்சுட்டு, இந்துமதிக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதை பதைப்பு இருந்தது. பல வருஷங்களுக்குப் பின்னரே முழு புத்தகமும் படிச்ச்சேன். இப்போவும் பல வருஷங்கள் சென்ற பிறகே படிக்க முடிந்தது. ஆனாலும் அதே மாதிரியான அனுபவங்கள். படிக்கும்போதே கண்ணில் குளம் கட்டுகின்றது. அதிலும் இந்துமதியின் உணர்வுகளை நினைச்சால் கண்ணீர் அருவியாகவே வருகின்றது. இப்போக் கொஞ்சம் மனம் உறுதி அடைஞ்சிருக்கும், அதனால் எதுவும் தெரியாதுனு நினைச்ச்சேன். இல்லை, முன்னை விட மனம் பலவீனமாய் இருக்கோனு நினைக்கிறேன்.

இந்தக் கதையின் இந்துமதியின் பாத்திரம் எனக்குப் பிடிச்சதுக்குக் காரணம் அவள் உள்ளத்தில் இளம்பிராயத்திலேயே தோன்றிய மாசற்ற அன்பும், அதை அவள் எவ்வாறு போற்றி வந்தாள் என்பதுமே தான். இப்படியும் ஒரு அன்பு இருக்குமா? என்று எண்ணினால் ஆம், இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் அறிவை, புத்தியைக் கொடுத்த இறைவன் ஏன் இந்த இதயத்தையும் கொடுத்து அதற்கு அன்பால் உருகும் தன்மையையும் கொடுத்துச் சோதிக்கின்றான் என்றும் தோன்றுகின்றது. பல வருஷங்கள் முன்னே இந்தக் கதையைப் படிக்கும்போது ரொம்பச் சின்ன வயசு, அதனால் தாங்கலை என்று நினைத்துக் கொண்டேன். இல்லை, இப்போவும் தாங்கத் தான் முடியலை. இன்னும் சொல்லப் போனால் சொப்பனம் கூட வருது, இந்துமதி என்ன ஆனாளோ என்று கவலையாகவும் இருக்கிறது.

ரொம்ப விசித்திரமா இருக்கு இல்லையா? எனக்கும் தான் விசித்திரமா இருக்கு. இவ்வளவு பலவீனமான இதயம் நமக்கு இருக்கானு யோசிச்சால் ஆச்சரியமாத் தான் இருக்கு. இது கதை தான், கடைசியில் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்றும் தெரியும், என்றாலும்...............அறிவுக்கும், இதயத்துக்கும் போராட்டம் நடக்குதுனு நினைக்கிறேன். அறிவு இது கதைனு சொல்லும் அதே வேளையில் இதயம் உருகித் தவிக்கிறது. புத்தகத்தைக் கொடுத்த வல்லி சிம்ஹனுக்கு நன்றி. எத்தனை முறை படிச்சாலும் இதே உணர்வு தான் இருக்கும்னு தெரிஞ்சு போயிருக்கு.