Saturday, December 24, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்---- அருள்நந்தி சிவம்

சந்தானக் குரவர் நால்வரில் அடுத்து அருள் நந்தி சிவம் என்பார் வருகிறார். இவர் மெய்கண்டாரின் சீடர் ஆவார். ஆனால் இவர்தான் மெய்கண்டாரின் பிறப்புக்கு முன்னர் அவர் பெற்றோருக்குக் கயிறு சாற்றிப் பார்த்தவர். இவர் கயிறு சாற்றிச் சொல்லியதன் பின்னரே மெய்கண்டார் பிறந்தார். ஆகவே இவர் மெய்கண்டாரை விட வயதில் மிகவும் மூத்தவர். எனினும் அவருக்குச் சீடர் ஆனார். இவரின் உண்மையான பெயர் எதுவென்று தெரியவில்லை. திருவெண்ணெய்நல்லூருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள திருத்துறையூர் என்னும் ஊரில் பிறந்தவர் எனத் தெரியவருகிறது. சிவாசாரியார் மரபினரான இவருக்கு ஆகமங்களில் மிகுந்த தேர்ச்சி உண்டு. அனைத்து ஆகமங்களிலும் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்ததால் சகலாகம பண்டிதர் என அழைக்கப்பட்டார். இவரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறும் அளவுக்குச் சகல சாத்திரங்களையும் நன்கறிந்தவர். தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு வண்டியில் சாத்திரங்களைக் குறித்த ஏட்டுச் சுவடிகளை எடுத்துச் செல்வார்.

எல்லா ஏட்டுச்சுவடிகளையும் தம் கூடவே எடுத்துச் செல்லும் இவருக்குதாம் சொல்லி அதன் மூலம் பிறந்த சின்னஞ்சிறு குழந்தை இன்று மெய்கண்டார் என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலேயே குருவாகிப் பல சீடர்களோடு திகழ்வதைக் கேள்விப் பட்டார். திருவெண்ணெய் நல்லூர் சென்று அச்சுதகளப்பாளரையும் அவர் பெற்றெடுத்த குழந்தை மெய்கண்டாரையும் நேரில் கண்டு அவர்களின் அறிவையும், ஞானத்தையும் கண்டு ஆனந்திக்கவேண்டுமென்று எண்ணினார். திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்ற இவர் மெய்கண்டார் மாணவர் குழாத்துக்கு நடுவே ஆணவமலம் பற்றி உரை நிகழ்த்தக் கண்டார். உள்ளேயே செல்லாமல் வாயிலில் நின்றவாறு அதைக்கண்ட சகலாகம பண்டிதருக்குத் திடீரென ஆணவம் தலைக்கேறியது. நாம் சொல்லிப் பிறந்த இந்தக் குழந்தை, சின்னஞ்சிறு சிறுவன் இவனுக்கு அதற்குள் இத்தனை ஞானம், விவேகம் எல்லாம் வந்துவிட்டதா? ஆணவமலம் பற்றிப் பேசும் அளவுக்குத் தேர்ந்துவிட்டானா? ஆஹா, என்ன ஆணவம் இவனுக்கிருந்தால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு பாடம் நிகழ்த்துவான்! இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம், சகலாகம பண்டிதர் தாம் நின்ற இடத்தில் நின்றவாறே மெய்கண்டாரைப் பார்த்து, “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” என ஓங்கிய குரலில் கேட்டார்.

உரை நிகழ்த்திக்கொண்டிருந்த மெய்கண்டார் திரும்பினார். சகலாகம பண்டிதர் நின்றிருந்த கோலத்தைக் கண்டார். உடனேயே அவருக்கு விஷயம் விளங்கி விட்டது. வாயால் விடை கூறாமல் தம் கைகளைச் சுட்டி சகலாகம பண்டிதரையே காட்டினார். ஆணவமலத்தின் சொரூபம் சகலாகம பண்டிதரே என்பது புரியும்படிக்குத் தம் சுட்டு விரலால் பண்டிதரின் தலை முதல் கால்வரையும் விரலை ஆட்டிச் சுட்டிக் காட்டினார். சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிற்று. அவருக்குப் பரிபக்குவம் உண்டாகும் காலம் வந்துவிட்டது. உடனே மெய்கண்டாரின் வயதை நினையாமல் அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். மெய்கண்டாரும் அவரைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு அருள்நந்தி என்ற தீட்சாநாமத்தை அளித்தார். அன்றுமுதல் சகலாகம பண்டிதர் அருள் நந்தி ஆனார். ஏற்கெனவே இருந்த 48 மாணவர்களோடு அருள்நந்தி சிவத்தைச் சேர்த்து 49 ஆனது சீடர் குழாம். அருள்நந்தி நாளாவட்டத்தில் அருணந்தி என அழைக்கப்பட்டதோடு மெய்கண்டாரின் பிரதான சீடராகவும் ஆனார். மெய்கண்டாரை அடுத்து சந்தானகுரவரில் இரண்டாமவரும் ஆனார்.

வயதில் மூத்தவரானாலும் அருணந்தி சிவம் மெய்கண்டாருக்குப் பின்னர் ஆசாரியார் ஆனார். சைவ சித்தாந்தத்தை விளக்கிப் பாடம் சொல்லி வந்தார். மெய்கண்டாருடைய முதல் நூலான சிவஞான போதத்துக்குப் பாடம் சொல்லும் வழிநூலாக, “சிவஞான சித்தியார்”என்னும் நூலை எழுதினார். இது சாத்திர நூலாக மட்டுமின்றி, தோத்திர நூலாகவும், இலக்கிய நூலாகவும் இன்றளவும் விளங்கி வருகிறது.

காப்பு

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்,
உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்,
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே. 1

சிவஞான சித்தியாரின் காப்புச் செய்யுள் மேலே கொடுத்திருப்பது. இந்த சித்தியார் பரபக்க,, சுபக்கம் என்னும் இரு பாகங்களாகச் செய்யப்பட்டுள்ளது. இதிலே மேலே கொடுத்திருக்கும் செய்யுள் பரபக்கத்தில் காணப்படுவது. முதலில் வருவதும் பரபக்கமே. அதன் பின்னரே சுபக்கம். பரபக்கம் என்பது பிறர் பக்கத்தை அதாவது மற்ற சமயவாதிகளின் பக்கத்தை மறுத்து உரைப்பது. இது 301 பாடல்கள் கொண்ட தொகுதி. அடுத்து வரும் சுபக்கம் 328 பாடல்கள் கொண்டது. இந்த சுபக்கம் தம் பக்கமான சைவ சித்தாந்ததை விரித்துரைக்கிறது. இதிலே பாயிரம் மட்டும் 11 பாடல்கள் கொண்டதாய் விளங்குகிறது. இதிலே மெய்கண்டாருக்கு குரு துதியாக அருணந்தி சிவம் எழுதி இருக்கும் பாடல் குருவின் மேல் அவர் கொண்டிருக்கும் மதிப்பையும், மரியாதையும் எடுத்துக் கூறுவதோடு உள்ளத்தையும் தொடுகிறது.
மெய்கண்டதேவ நாயனார்

“பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்,
கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்,
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்,
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம். “
மேலும் இந்த நூலின் சிறப்பைப் பழைய செய்யுள் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழின் ஆறு சிறந்த நூல்கள் எனக் குறிப்பிடப் பட்டிருக்கும் அந்தச் செய்யுளில் சிவஞான சித்தியாரும் இடம் பெற்றிருக்கிறது.
வள்ளுவர் சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை—ஒன்றிய சீர்த்
தொண்டர்புராணம் தொகு சித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாம் தரம்.

திருவள்ளுவரின் திருக்குறள், மாணிக்கவாசகரின் திருவாசகம், தொல்காப்பியம், பரிமேலழகரின் திருக்குறள் உரை, திருத்தொண்டர் புராணம் என அழைக்கப்படும் பெரிய புராணம், சிவஞான சித்தியார் ஆகிய ஆறும் அவை. சித்தியார் தவிர இருபா இருபஃது என்னும் இன்னொரு நூலையும் எழுதிய அருணந்தி சிவம் மறைஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் திருத்துறையூரில் முக்தி அடைந்தார். இருபா இருபஃது நூலிலும் தம் ஆசிரியரை வாழ்த்திப் போற்றிப் பாடியுள்ளார் என்பதைக் கீழே உள்ள பாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

இவருடைய சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப் படுகிறது.

Friday, December 16, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! ஆறுமுக நாவலர் 2

தமிழ்நாட்டில் இருந்தது போல் ஆதீனங்கள், மடங்கள் ஆகிய எதுவும் இலங்கையில் இல்லை. மதமாற்றம் என்பது ஆளவந்தவர்களால் தீவிரமாக்கப்பட்டதொரு சூழ்நிலையில் நாவலர் தன்னந்தனியராக இருந்து அவரே ஓர் அமைப்பாக இயங்கினார். சைவசமய நூல்களைச் சரியானபடி போர்க்கலன்களாக இயங்கும்படி படைத்தார். அப்படி அவர் படைத்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை சைவ சமய தூஷணப் பரிகாரம், 1854-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் சுப்பிரபோதம் 1853 இலும் வெளிவந்து அனைவரின் பேராதரவைப் பெற்றது என்று சொல்வதை விட மாற்றுச் சமயத்தினரும் வியந்து பாராட்டத்தக்க அளவுக்குச் செல்வாக்கைப் பெற்றது என்பதே உண்மையாகும். கிறிஸ்தவப் பாதிரிமார்களே இவருடைய கிறிஸ்தவமதக் கண்டனங்களை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால் இவரின் எழுத்தாற்றலைக் குறித்து என்ன சொல்ல முடியும்!

அதன் பின்னர் சைவ சமய வழிபாட்டு முறைகளை விளக்கும் நூல்களைச் சிறிது சிறிதாக வெளியிட்டார். நித்ய கர்ம அனுட்டான விதி, ஆலய தரிசன விதி போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. யாழ்ப்பாணத்து நல்லூரின் சைவ சமயம் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் கிறிஸ்துவப் பாதிரிமார்களோ சுப்பிரமணியர் வழிபாட்டையும் நல்லூரில் இருந்த கந்தசாமிக் கோயிலையும் குறித்து இழிவாகப் பேசி வந்தனர். இதை முறியடிக்க நாவலர் சுப்பிரமணிய போதம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். கந்தபுராணத்துக்கு இவர் எழுதிய உரையும் வெளிவந்தது. இவருடைய கந்தபுராணச் சொற்பொழிவுகளும் பெரும் ஆதரவைப் பெற்றன. உயிர்ப்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடுகளை முற்றிலும் எதிர்த்தார். ஆகமவழியான கோயில்களில் முறைப்படி ஆகமம் கற்றவர்களே வழிபாடுகள் செய்யத் தக்கவர்கள் எனக் கூறினார். தேவதாசிகள் முறை, வாணவேடிக்கைகள், கோயில்களில் ஊழியர்கள் செய்யும் அட்டூழியம் போன்றவற்றையும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.

இவர் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். சென்னையைத் தம் சென்மபூமியிற் சிறந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் சைவத் தொண்டுகள் செய்யவெனச் சென்ற நாவலர் அங்கே ஓர் பாடசாலையையும் ஆரம்பித்தார். 1864-ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாசாலை என்னும் பெயரில் தொடங்கினார். சென்னை தங்கசாலையில் வித்தியாநுபாலன யந்திரசாலையும் நிறுவிப் புத்தகங்களை அச்சிட்டார். தமிழ்ப்பணி வேறு, சைவ சமயப்பணி வேறு என வலியுறுத்தி வந்தார். சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படிப்பறிவில்லா ஜனங்களே சைவ சமயத்தைத் தமிழ்ச்சமயம் எனவும், சைவக்கோயிலைத் தமிழ்க்கோயில் எனவும் கூறுவதாகவும் தமிழ் என்பது சமயம் அல்ல எனவும் அது ஒரு மொழி எனவும் தெளிவுபடக் கூறினார். சிதம்பரத்தில் இவர் தங்கி இருந்த சமயம் வள்ளலார் வடலூரில் பிரபலம் அடைந்திருந்தார். சிதம்பரம் கோயிலில் வள்ளலாரால் பாடப்பட்ட திருஅருட்பா நாவலருக்கு உகந்ததாக இல்லை. அதைத் தீவிரமாக எதிர்த்தார்.

1868-ஆம் ஆண்டு சென்னையிலும், சிதம்பரத்திலும் மாறி மாறி அருட்பா மறுப்பு குறித்துச் சொற்பொழிவுகள் இயற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் போலி அருட்பா மறுப்பு என்னும் நூலும் வெளிவந்தது. நாவலரின் சமய வாழ்க்கையில் இது சற்றுக் கசப்பான நிகழ்வாகும். வள்ளலாரையும், சிதம்பரம் கோயிலின் தீக்ஷிதர் ஒருவரையும் எதிர்த்துக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நாவலரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதம்பரம் சபா நடேச தீக்ஷிதருக்கு 50ரூ அபராதமும் கட்டத்தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனையும் கொடுத்தார். வள்ளலாரின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமின்மையாலும், வள்ளலார் தாம் நாவலரை எதுவும் சொல்லவில்லை என்றதாலும் தள்ளுபடி செய்யப்பட்டது. என்றாலும் இவ்வழக்கின் மூலச்சான்றுகள் சரிவரக் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளை ஒட்டிப் பலரும் எழுதி இருப்பவையே கிடைக்கின்றன.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி ஒரு பிற்போக்குவதி எனப்பட்டார். வர்ணாசிரமத்தை ஆதரித்தும், தீண்டாமைக் கருத்துக்களை ஆதரித்தும் தம் சைவ வினா-விடை புத்தகத்தில் எழுதி உள்ளார். இவ்வளவு அருந்தொண்டாற்றிய நாவலரின் கடைசிப் பிரசங்கம் 1879-ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருநக்ஷத்திரமான ஆடி சுவாதி தினத்தன்று நடந்தது. வண்ணார்பண்ணையில் நடந்த அந்தப் பிரசங்கத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் குன்றினார் நாவலர். 1879-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் மிகவும் உடல்நலம் குன்றி குளிக்கக் கூட முடியாமல் இருந்தார் நாவலர். வேறொருவரைக் கொண்டு அன்றாட வழிபாடுகளைச் செய்ய வைத்தார். கார்த்திகை 21-ஆம் நாள் வெள்ளியன்று இரவு அடியார்களை தேவாரம், திருவாசகம், போன்றவற்றை ஓதச் சொல்லிக் கேட்டவண்ணம் கங்காதீர்த்தம் அருந்தி, விபூதியைத் தரித்துக்கொண்டு, உருத்திராக்ஷ மாலையையும் அணிந்து கொண்டு பஞ்சாக்ஷரத்தை நினைத்தவண்ணம் தலைமேல் கைகளைக்கூப்பிய வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

ஆறுமுக நாவலருக்கெனத் தனி இணைய தளம் உள்ளது. அவரின் சிலையும், மண்டபமும் யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.

Sunday, December 11, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! ஆறுமுக நாவலர் 1

நாவலர் என அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1822-ஆம் ஆண்டு சைவ வேளாளக் குடும்பத்தில் கந்தர் என்னும் பரம்பரைச் சிவபக்திச் செல்வருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்த இவர் வடமொழியும், தமிழும் படித்தார். இரண்டிலும் நல்ல புலமை பெற்று விளங்கினார். நல்லூரில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் கற்று அதிலும் புலமை பெற்றார். படிப்பு முடிந்ததும் ஜஃப்னாவில் உள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். கூடவே பள்ளியின் நிறுவனரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கிங் ஜேம்ஸ் பைபிளையும் மற்றக் கிறிஸ்துவ இலக்கியங்களையும் மொழி பெயர்க்கும் வேலையைச் செய்து வந்தார். 1841-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரையிலும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டார். அதிலும் அப்போது கிறிஸ்துவ மிஷனரிகளின் பிரசாரங்களால் மக்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது. மொழிபெயர்ப்புக்காக பெர்சிவல் பாதிரியுடன் சென்னைக்கு வந்து பைபிளை அச்சிட்டுக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார்.

வேதம், ஆகமம், புராணங்கள் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற நாவலர் சைவர்களுக்குத் தங்கள் சமயம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் இருப்பதையும், சரியானதொரு வழிகாட்டி அமையவில்லை என்பதையும் கண்டார். அதோடு வாத, விவாதங்களிலே பங்கு பெற்றுத் தம் சமயத்தைக் குறித்து ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்கும் இயலாமல் இருப்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே சைவ சமயத்திற்குத் தொண்டாற்றுவதையே தம் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொள்ள நினைத்து வெஸ்லி மிஷன் பள்ளியின் நிறுவனர் அதிகச் சம்பளத்தோடு தந்த வேலையையும் மறுத்துப் பள்ளி ஆசிரியர் வேலையையே உதறி எறிந்தார். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நிச்சயித்துக்கொண்டு தம் குடும்பத்தையும் துறந்து சொத்து சுகங்களையும் துறந்தார். தம் நான்கு சகோதரர்களிடமும் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அன்றிலிருந்து இறுதி வரையிலும் அவருடைய கொள்கைகளில் உறுதியும், உண்மைத்தன்மையும் இருப்பதாய்க் கருதும் நபர்களிடமிருந்து மட்டுமே தேவையான உதவிகளைப் பெற்றார். கோயில்களுக்குச் சென்று தேவார, திருவாசகங்களைப் பாடி மக்கள் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டினார். இவருடைய முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில் நடந்தது. 1847-ஆம் ஆண்டு நடந்த இதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் இவ்வாறு சைவ சமயத்தைக் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் பேசிச் சொற்பொழிவாற்றி வந்தார். யாழ்ப்பாணத்து சைவ மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். பைபிளின் மொழிபெயர்ப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததால் அதிலுள்ள கேள்விகளுக்கும் சரியான மறுமொழியை இவரால் தர முடிந்தது. சொல்லப் போனால் பைபிளின் மூலம் நடந்து வந்த பிரச்சாரத்திற்கு ஒரு மாற்றாகவே இவருடைய பிரசாரம் அமைந்தது.

1848-ஆம் ஆண்டு பெர்சிவல் எனப்படும் வெஸ்லி பள்ளித் தலைமை ஆசிரியரைப் பிரிந்து தம்முடைய சொந்தப் பள்ளியை நிர்மாணித்தார். வண்ணார்பண்ணையில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிக்கு சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவரை மத்திய கல்லூரியில் 3 பவுன் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியராக இருந்ததையும் தூக்கி எறிந்து முழுநேர சமயப்பணியைத் துவக்கினார். பள்ளிப்பிள்ளைகளுக்குத் தேவையான பாடநூல்கள் அச்சிட யந்திரம்தேவையாக இருந்தது. ஆகவே 1949-ஆம் வருடம் மீண்டும் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார். வந்த சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமயச் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார். அங்கேதான் அவருக்கு நாவலர் பட்டமும் வழங்கப்பட்டது. சிலகாலம் இந்தியாவில் சென்னையில் தங்கி சூடாமணி நிகண்டுரையும், செளந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதிப்பித்தார். பின்னர் யாழ்ப்பாணம் திரும்பினார். தமது இல்லத்திலேயே வித்தியா அனுபாலன யந்திரசாலை என்னும் பெயரில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். மாணாக்கர்கள் பயன்பெறும் விதத்தில் பாலபாடம், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, போன்றவைகளும், சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படையுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார்.

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.”

மேலும் தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

Wednesday, December 7, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மெய்கண்டார் 2

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது. அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார். ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார். உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார்.

சிவஞான உபதேசமும் செய்வித்தார். பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும். அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷாதிருநாமமாக மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார். அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார். சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார். இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற ஒருநாள் அவரைக்காணச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர். அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்; சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய்நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.