Tuesday, December 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


தனது பக்தனுக்காகத் தாமே வந்து கடன் அடைத்துச் சென்றது சாக்ஷாத் அந்த ஸ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை புரிந்து கொண்ட தானீஷா, தான் மஹாபாபியாக இருந்து இறைவனே நேரில் வந்ததைத் தெரிந்து கொள்ளவில்லையே என நினைத்து நினைத்து ஏங்கினான்.  அங்கே சிறையில் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோபன்னா எழுந்து பார்த்தபோது விஷக்கிண்ணம் கவிழ்ந்து கிடப்பதையும் தானீஷா கையொப்பம் இட்டுக் கடன் தீர்ந்துவிட்டதாக அறிவித்த ரசீதையும் பார்த்தார்.  திகைத்தார்.  ஏதோ அதிசயம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். ராமன் திருவடியை அடைய முடியாமல் வந்து தடுத்துவிட்டானே என ஏங்கினார். ராமனைத் தாம் நிந்தித்ததால் இவ்வாறு செய்துவிட்டான் போலும் என எண்ணினார்.  அதனால் தான் விஷத்தைக் கொட்டி விட்டான் போலும் என எண்ணினார். அப்போது சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன.  தானீஷா பரிவாரங்களோடு அங்கே வந்து கொண்டிருந்தான்.  மறு விநாடிக் கதவு திறந்து தானீஷா எதிரே நின்றான்.  கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கோபன்னாவின் கர்ருணையால் அன்ன்று தாம் இறைவனையே கண்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  கோபன்னாவுக்கோ, ஸ்ரீராமனே நேரில் வந்தானா, தானீஷாவுக்குக் காட்சி கொடுத்தானா என எண்ணித் தமக்கு அந்தக் காட்சி கிட்டவில்லையே என ஏங்கினார்.  தானீஷாவோ அவர்கள் வந்ததையும், தம்முடன் பேசியதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  பிரசாதத்துக்கு ஆசைப் பட்டு கோபன்னாவிடம் பணி புரிவதாய்க் கூறினார்களே என  அதிசயித்தான்.  கோபன்னாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தானீஷாவைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, “நீர் செய்த பாக்கியம் தான் என்னே!  இறைவனைக் காணும் பேறு கிடைத்தது.  பனிரண்டு வருடமாய்க் கதறிக் கதறி அழைத்து இந்த நடுநிசியில் மூட்டை தூக்கி வந்து என் கடனை அடைத்துச் சென்றுவிட்டானா?  எனக்குக் காட்சி கிடைக்கவில்லையே! ஏ, ராமா, எனக்குக் காட்சி கொடுக்க மாட்டாயா?” எனக் கதறினார்.  தானீஷா, அவரிடம், நீர் சாதாரண கோபன்னா இல்லை;  ராமதாஸர்! ராமன் திருவடிக்கே தொண்டு பூண்ட பெரியவர். உம் அருமை தெரியாமல் நான் உம்மைத் துன்புறுத்தி மஹா பாவத்தைச் செய்து விட்டேன்.”  என்றான்.  எல்லையற்ற மன நிறைவோடு மீண்டும் பத்ராசலம் வந்தார் ராமதாஸரான கோபன்னா.  தானீஷா ராமனுடைய சேவைக்காக ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினான்.  நெடுநாட்கள் அதன் பின்னர் ராமனின் புகழைப் பாடி வந்தார் ராமதாஸர்.  ஒருநாள் பொன்மயமானதொரு தேர் விண்ணிலிருந்து இறங்கியது.  ராமதாஸர் வீட்டு வாசலில் நின்றது.  தன் மனைவியையும் அழைத்தார் ராமதாஸர்.  கைவேலையை முடித்துவிட்டு வருவதாய் அந்த அம்மாள் சொல்ல, “நீ கொடுத்து வைக்கவில்லை!” எனச் சொல்லிக் கொண்டே தேரின் மீது ராமதாஸர் ஏறிக் கொண்டு ராம நாம உபதேசத்தைக் கூறிக் கொண்டே தேரோடு விண்ணில் எழும்பிச் சென்றார். அவர் மனைவி உள்ளிருந்து வந்து பார்க்க, “நீ உன் மகனுக்குப் பணிசெய்யும் பொருட்டே உன்னைத் தங்க வைத்தோம்!” என அசரீரி வாக்குக் கேட்க அந்த அம்மாளும் தன் விதியை நினைந்தபடி தங்கிவிட்டார்.  பத்ராசல ராமதாஸர் ராமன் மேல் எண்ணற்ற பாடல்களைப் புனைந்து பாடினார்.  பாரதத் திருநாட்டில் ஹைதராபாத்திலே செல்வம் கொழித்திருப்பதன் காரணமும் பத்ராசல ராமதாஸருக்கு ராமன் அளித்த செல்வம் என்றே கூறப்படுகிறது.

பத்ராசலம் ராமதாஸர் கதை நிறைந்தது.

Sunday, December 9, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


விஷம் குடிப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை ஸ்ரீராமனையும், அவன் பிரிய மனைவியான சீதம்மாவையும் நினைத்த கோபன்னா, சீதம்மா நீயாவது உன் கணவனிடம் போய்ச் சொல்ல மாட்டாயா?  இன்னும் எத்தனை காலம் எனக்கு இந்த தண்டனை? என மனமுருகிப் பிரார்த்தித்தார்.  தியானத்திலும் ஆழ்ந்து போனார்.  அங்கே சீதம்மா மாயம்மாவுக்கு மனதில் ஒரே வேதனை.  இந்த கோபன்னா இத்தனை தூரம் மனமுருகிப் பிரார்த்தனைகள் பல செய்தும் நம் கணவர் வேடிக்கை பார்க்கிறாரே இது என்ன நியாயம் என மனதிலேயே கேட்டுக் கொண்ட கேள்வியை இன்று நேரிலும் கேட்டுவிட்டாள்.  “சுவாமி, கோபன்னா எத்தனை நல்லவன்?  நம் கோயிலுக்காக அன்றோ அவன் உழைத்தான்!  ஒரு காசு கூட சொந்தமாக எடுத்துக் கொள்ளவில்லையே.  அதோடு நம்மிடம் எவ்வளவு பக்தியுடனும் பிரேமையுடனும் இருக்கிறான்.  அவனை இப்படிப் பரிதவிக்க விட்டு விட்டுத் தாங்கள் இங்கே ஆனந்தமாய்க் காலம் கழிக்கலாமா?” என வினவ, ஸ்ரீராமனின் முகத்தில் இளநகை பூத்தது.  “சீதே, போன பிறவியிலும் பரம பக்தன் ஆன இவன், ஒரு கிளியைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்து வந்தான்.  பனிரண்டு ஆண்டுகள் அவ்விதம் வளர்த்து வந்ததால் அதே பனிரண்டு ஆண்டுகள் இவனும் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.  இன்றோடு அந்தச் சிறை வாசம் முடிவடைகிறது.  நானும், லக்ஷ்மணனுமாய் நாளை தானீஷாவைப் போய்ப் பார்த்து இவன் கடன்களை அடைக்கப் போகிறோம். “ என்றான் ஸ்ரீராமன்..

“வெகு அழகு ஸ்வாமி, ஆயுளையே உங்கள் சேவையில் கழித்து வரும் கோபன்னாவை விட்டுவிட்டு, தானீஷாவுக்குப் போய் தரிசனம் கொடுக்கப்போகிறீர்களே!” என்றால் சீதை ஏமாற்றமுடன். 
“சீதே, தானீஷா கோபன்னாவைச் சிறையில் அடைத்த குற்றம் ஒன்று மட்டுமே செய்தான்.  ஒரு நல்ல அரசனாகக் குடிமக்களை நன்கு பேணி வருகிறான்.  நீதிமானாகவும், நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும் உள்ளான்.  மேலும் அவன் போன பிறவியில் காசியில் அந்தணனாகப் பிறந்து ஈஸ்வரனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேஹம் செய்யப் பிரார்த்தித்துக் கொண்டவன்.  இதன் மூலம் பெரிய பதம் கிடைக்கும் என எண்ணினான்.  ஆனால் 999 –வது குடம் வந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை, என ஆயிரமாவது குடத்தை அந்த ஈசன் தலையிலேயே போட்டு உடைத்துவிட்டான்.  அந்த வினைப்பயன் தான் அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.  மேலும் அவனுக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் என ஈசனே வாக்குக் கொடுத்துள்ளார்.  ஈசன் வாக்குப் பொய்யாகலாமா?”  என்றான் ஸ்ரீராமன்.

மறுநாள் நடு நிசி. தானீஷாவின் அந்தப்புரத்திலே அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.  ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தான்.  அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்தப்புர பாராக் காவலையும் தாண்டிக் கொண்டு இரு சிப்பாய்கள் கையிலே ஒரு பெரிய பணப்பையோடு இடையிலே கால் சராய் தரித்து, வாளை இடுப்பிலே ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்கள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அரசகுமாரர்களோ என்னும்படி இருந்தது.  இருவரும் பாராக் காவற்காரர்களிடம் வந்தபோது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  சிரித்துக்கொண்ட இருவரும் அந்தப்புரக் கதவில் கை வைக்கக் கதவு தானாகத் திறந்தது.  கனவு கண்டதில் விழித்த தானீஷா அந்தப்புரக் கதவு திறப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் பார்க்க எதிரே இரு சுந்தரபுருஷர்கள் நின்றனர்.  அறையே கோடி சூரியப் பிரகாசமாக ஜொலித்தது.  அந்த வெளிச்சத்தையும் இரு இளைஞர்களின் அழகையும், அவர்களின் தேஜஸையும் கண்ட தானீஷா இருவரையும் பார்த்து யார் எனக் கேட்க, அவர்கள், “நாங்கள் கோபன்னாவின் வேலையாட்கள்.  என் பெயர் ராம்ஜி. இவன் பெயர் லக்ஷ்மண்ஜி. பத்ராசலத்திலிருந்து வருகிறோம்.”  என்றனர்.

“வேலையாட்களா?  எத்தனை வருடங்களாகச் செய்கிறீர்கள்? என்ன சம்பளம் உங்களுக்கு?” தானீஷா கேட்டான்.

“ஐயா, நாங்கள் பல தலைமுறைகளாகச் செய்து வருகிறோம்.  சம்பளமெல்லாம் கிடையாது.  அந்த ராமர் கோயில் பிரசாதத்துக்காகச் செய்கிறோம்.”
“ஆச்சரியமாய் உள்ளதே.  இப்போது என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“ஐயா, கோபன்னா உங்களிடம் கடன் பட்டிருக்கிறாராமே.  அதை அடைக்கச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்.  பணத்தைக் கொண்டு வந்துவிட்டோம்.  இதோ உமக்குச் சேர வேண்டிய ஆறு லக்ஷம் பொன்கள். “ கையிலிருந்த பணப்பையைப் பிரித்து அவிழ்த்துக் கொட்ட, கலகலவென சப்தித்துக்கொண்டு தங்க நாணயஙக்ள் உருண்டோடின.  “இவற்றைச் சரி பார்த்துக் கொண்டு, கடன் தீர்ந்ததற்கான ரசீதைக் கொடுங்கள் ஐயா, “ என அவர்கள் அவசரப் படுத்த இந்த நட்ட நடுநிசியில் இந்த இருவரும் எங்கிருந்தோ வந்து கோபன்னாவின் கடனைத் தீர்ப்பதை எண்ணி எண்ணிப் பார்த்த தானீஷாவுக்கு வியப்புத் தாங்கவில்லை.  அது சரி இவர்களை உபசரிக்கக் கூட இல்லையே.  எப்படி உபசரிப்பது?  தானீஷா குழப்பத்துடன் அவர்களிடம் இந்த நடுநிசியில் உங்களை எப்படி உபசரிப்பது எனத் தெரியவில்லை, என்று சொல்ல, இருவரும் வேலைக்காரர்களான தங்களுக்கு எந்த விதமான உபசாரமும் வேண்டாம் எனவும், ரசீதைக் கொடுக்கும்படியும் திரும்பக் கேட்டனர்.  தானீஷா ரசீதைக் கொடுக்க இருவரும் இருண்ட சிறையிலிருந்து கோபன்னாவைப் பார்க்கப் போனார்கள்.  கோபன்னாவைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு மனம் உருக, அண்ணனிடம், “நீ செய்தது அநியாயம், நமக்கு வானளாவக் கோயில் எடுத்தவன் சிறையில் வாடுகிறான்.  அவன் நிலைமையைப் பாருங்கள்.  எலும்பும் தோலுமான உடலுடனும், குழி விழுந்த கண்களோடும், சடாமுடியோடும், தாடியோடும் பிச்சைக்காரனைப் போல் நிர்க்கதியாய்ப் படுத்திருக்கிறான்.  நீங்கள் இன்னும் முன்னமே உங்கள் கருணையைக் காட்டி இருக்கலாகாதா?” என்று சொல்ல, ஸ்ரீராமனோ, “அப்பனே, இது பூர்வ ஜன்ம வினை. இதை இவன் அனுபவித்தே தீர வேண்டும்.  ஊழ்வினையைத் தடுக்க என்னாலும் இயலாது.  சரி, நீ இப்போது  உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்த்து வா!” எனச் சொல்ல லக்ஷ்மண்ஜியும் ஆதிசேஷனாக மாறி உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்க்கிறான்.  ரசீதை கோபன்னாவின் பக்கத்திலே வைக்கிறார்கள்.  பின்னர் இருவரும் மறைந்தனர்.

அரசன் தங்க நாணயங்களைப் பார்த்துப் பார்த்து அதிசயித்தான்.  அவற்றின் முத்திரையைச் சோதிக்க ஸ்ரீராம் என அவற்றில் எழுதி இருந்தது.  இயன்றவரை பல நாணயங்களைச் சோதித்தும் அனைத்திலும் ராமன் பெயரே இருக்கவும்.  தானீஷாவுக்கு உண்மை புரிந்தது.  கோபன்னாவுக்காக வந்தது சாக்ஷாத் ஶ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை உணர்ந்தான்.  கோபன்னா எத்தனை பெரிய மஹான் என்பதும் புரிந்தது அவனுக்கு.  

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


ஹைதராபாத் நகரில் அவரைக் காவலில் வைத்தனர் சேவகர்கள்.  கோபன்னாவின் மாமன்மாருக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  இருண்ட சிறைச்சாலையில் மாமன்மார் வந்து பார்த்து கோபன்னாவைக் கோபம் பொங்கத் திட்டித் தீர்த்தனர்.  தானீஷாவின் முன்னிலையில் கோபன்னா விசாரணைக்கு வந்தார்.  மன்னனிடம் தாம் மன்னனைக் கேளாமல் செய்தது தவறே என ஒப்புக் கொண்ட கோபன்னா, இந்தத் திருப்பணியை மன்னனே முன்னின்று நடத்தி இருக்க வேண்டும் என்றும் இதனால் விளைந்த, விளையப் போகிற நற்பலன்கள் அனைத்தும் அரசுக்கே ஏற்படும் என்றும் கூறிய கோபன்னா ஸ்ரீராமனின் மகத்துவத்தையும் பக்தியின் பெருமையையும் அதன் விளைவாய் ஏற்படும் ஞானத் தத்துவங்களையும் மன்னனிடம் எடுத்து உரைத்தார்.  ஆனால் மன்னன் மனம் மாறவில்லை.  கோபன்னாவின் அறிவாற்றலும், ஞானத்தையும் கண்டு உள்ளூர வியந்தாலும் பண விஷயத்தில் இம்மியும் விட்டுக் கொடுக்க மன்னன் தயாராக இல்லை.  மேலும் கோபன்னா ஒருவரை விட்டு விட்டால் பின்னர் இம்மாதிரியே எல்லாரும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  எல்லாரும் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திருப்பணி என்பார்கள்.  ஆகவே இந்த கோபன்னாவிடம் நயந்தும், பயந்தும் பேசியே பணத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.  கோபன்னாவ்விடமிருந்து ஆறு லக்ஷம் வராஹன்கள் வரும் வரையிலும் சிறையில் அடைக்குமாறு கூறி மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டான் தானீஷா.  மக்கள் செய்தியறிந்து வீதிக்கு வீதி இது குறித்தே விவாதித்து வந்தனர்.

கோபன்னா சிறையில் இருந்தார்.  கரடுமுரடான தரை.  கிழிந்ததொரு பாய்.  போர்த்திக்கொள்ள மிக மோசமானதொரு கம்பளி.  அந்த அறையில் படுக்கவே முடியவில்லை. ஆனால் அங்கே படுக்கையிலே காட்டிலே ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமன் கட்டாந்தரையிலே புற்படுக்கையிலே படுத்தது அவர் மனதில் வந்தது.  ஆஹா, அந்த ஸ்ரீராமன் காட்டில் புழுதியிலே கட்டாந்தரையிலே புற்களால் ஆன படுக்கையில் அல்லவா படுத்திருந்தான்.  அதுவும் ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா!  ப்தினான்கு ஆண்டுகள். ஸ்ரீராமா நீ எப்படித்தான் தூங்கினாய் அப்பா. என மனம் உருகினார்.  உணவும் சரியாக அமையவில்லை கோபன்னாவுக்கு.  உப்பும் அரிசியும் சரிசமமாகக் கலக்கப்பட்ட அன்னத்தைக் காவலன் கொடுக்க அதுவும் ஸ்ரீராமன் அருளால் கிடைத்த பிரசாதமே என மனம் உருகி வாங்கி உண்டார் கோபன்னா.  தன் மனதுக்குள்ளாக ஸ்ரீராமனுக்கு மானஸ பூஜை செய்து கொண்டே இருந்தார்.  அவர் உடல் தான் சிறையில் இருந்ததே தவிர உள்ளம் முழுதும் ஸ்ரீராமனிடம் மூழ்கி இருந்தது.  ஆகவே சிறைச்சாலையின் துன்பங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை.  சிறையிலும் ஆனந்தமாக அவர் இருப்பதைக் கேள்விப் பட்ட தானீஷா, ஆஹா, இது சரியில்லை;  இவனை முச்சந்தியிலே நிறுத்துக் கசையடி கொடுங்கள்.  பணத்திற்கு அப்போதானும் வழி சொல்லுவான் எனக் கூறினார்.

தண்டனைச் செய்தி ஹைதராபாத் நகரம் முழுதும் பரவியது. மக்கள் துடிதுடித்தனர்.  ஆஹா, கோபன்னா எத்தகைய ராமபக்தர்!  அவருக்கா இத்தகைய தண்டனை! பணத்தை அவரா எடுத்துக் கொண்டார்.  தம் மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்தாரா!  இல்லையே.  அல்லது தமக்கென நிலம், நீச்சு என வாங்கிச் சேர்த்தாரா.  அதுவும் இல்லையே.  பத்ராசலம் கோயிலுக்கன்றோ செலவழித்தார்.  கோபன்னா திருப்பணிக்கு முன்னர் பத்ராசலம் எப்படி இருந்தது!  இப்போதோ, பூலோக வைகுண்டம் போல் அல்லவா ஒளிர்கிறது.  கோயில் மட்டுமா அழகாக அமைந்துள்ளது!  வழிபாடுகளில் என்ன விமரிசை, என்ன பக்தி.  இப்படி எல்லாம் நடக்க ஏற்பாடு செய்த ஒரு பரமபக்தரை இப்படியா தண்டிப்பது.  இது தகாது.  அநியாயம்.  என ஓலமிட்டனர் மக்கள்.  “ஏ ராமா, இது என்ன நீயும் தானீஷாவுடன் சேர்ந்து வேடிக்கையா பார்க்கிறாய்.  அல்லது இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றோ! என ஸ்ரீராமனையே பலரும் கேட்டனர்.  கோபன்னாவும் வீரர்கள் காவலுடன் முச்சந்தியை நோக்கி அழைத்து வரப் பட்டார்.  ஊரார் சிலர் வேடிக்கை பார்க்க, பெரும்பான்மை மக்கள் கதறி அழ கோபன்னாவுக்கு தண்டனை நிறைவேறத் தொடங்கியது.  ஸ்ரீராமன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார் கோபன்னா.  அடியோ மேன்மேலும் விழுந்தது.  முதுகிலே ரத்தம் பீறிட பத்துப் பிரம்புகளுக்கும் மேல் முறிந்து விழ, ராமசந்திரனுக்கு மங்களம் என்ற வார்த்தையையே கோபன்னா திரும்பத் திரும்பக் கூற அவரை அடிப்பதிலும் பயனில்லை என உணர்ந்த சேவகர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  அடிக்குப் பயந்து பணத்துக்கு ஏற்பாட்டு செய்வார் என தானீஷா எதிர்பார்த்ததும் நடக்காமல் போகவே தலையில் பாறாங்கல்லைச் சுமந்து கொண்டு நகர் முழுவதும் வலம் வரச் சொல்லி தண்டனை கொடுத்தான் தானீஷா.

அந்த தண்டனையையும் ஸ்ரீராமன் பெயரைச் சொல்லிக் கொண்டே நிறைவேற்றினார் கோபன்னா.  பின்னர் கைகால்களைக் கட்டி மணலில் உருட்டினர்.  அப்போதும் மனம் தளராமல் ஸ்ரீராமன் பெயரைச் சொன்ன வண்ணம் நிறைவேற்றினார்.  இப்படியே வருடங்கள் உருண்டன.  கோபன்னாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  தண்டனைகளும் நிற்கவில்லை.  கோபன்னாவின் மன உறுதியும் தளரலாயிற்று.  இந்த ஸ்ரீராமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறானே.  அவனும் ஒரு மனிதனாகத் தானே இருந்தான்.  மனிதன் படும் துயரம் எத்தகையது எனப் புரிந்து கொள்வான் என நினைத்தேனே.  நான் அவனை இறைவன் என நினைத்தது தவறு.  எல்லாப் பொருட்களையும் எனக்கா செலவு செய்து கொண்டேன்.  ஏ, ராமா, உனக்கல்லவோ செலவு செய்தேன்.  உன் கோயில் பிராகாரங்களுக்கே லக்ஷம் பொன் செலவிட்டேனே.  உனக்குத் தான் ஆடை, ஆபரணங்கள், நகைகள் போன்றவை வாங்கினேன்.  அத்தனையையும் நீ தானே அனுபவிக்கிறாய்.  எவ்வளவு வாங்கினேன்.  உன் மாமனாரான ஜனகனா கொடுத்தான்.  அத்தனையும் தானீஷாவுக்குச் சேர வேண்டிய வரிப்பணம்.  உனக்காகத் தானே செலவழித்தேன்.  அப்போது நீ பேசாமல் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு இருந்துவிட்டு இப்போதும் வேடிக்கையா பார்க்கிறாய்!  என் துன்பம் உனக்குப் புரியவில்லையா!  இந்த கோபன்னாவுக்கு இன்னும் எத்தனை அடிகளும், தண்டனைகளும் இருக்கிறதோ அத்தனையும் தாங்கட்டும் என நினைக்கிறாயா?

இவ்வாறே அவர் ஸ்ரீராமனைப் போற்றியும் நிந்தித்தும் பல பாடல்களைப் புனைந்து பாடினார்.  அப்போது ஒரு நாள் திடீரென அவருக்கு சீதையின் தோற்றம் கண்களில் தெரிந்தது.  “அம்மா, தாயே, உன்னை மறந்துவிட்டேனே.  என் துன்பத்தை நீயாவது உன் கணவனுக்கு எடுத்துச் சொல்லமாட்டாயா. என் கடவுள் என உன் கணவன் ஸ்ரீராமனை நான் எண்ணியது அத்தனையும் வீண்.  அவனுக்கும் உனக்கும் தானே நான் செலவு செய்தேன்.  அவனாவது ஒரு வார்த்தை தானீஷாவிடம் போய்ச் சொல்லக் கூடாதா!  அவன் சொல்லவில்லை;  சொல்லவும் மாட்டான்.  தாயே, நீ தான் எனக்காக எடுத்துச் சொல்லக் கூடாதா?  நானும் எத்தனை வருடங்கள் இன்னமும் பொறுப்பது!  உன் கணவனுக்குக் கல் நெஞ்சம் அம்மா.  அவன் இரக்கமே காட்ட மாட்டான்.  கடினமான மனம் இருந்ததால் தானே, உன்னை, “தீக்குளித்துவிட்டு வா!” என்று சொன்னான். அதோடு விட்டானா!  நிறை கர்ப்பிணியான உன்னைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னானே.  அப்போதே அவன் குணம் எல்லாருக்கும் புரிந்துவிட்டது.  நான் தான் புரிந்து கொள்ளவில்லை.  அவன் கருணையே இல்லாதவன் அம்மா;  இவனைப் போய்க் கருணாசாகரன் எனச் சொல்வது தப்பு. வேண்டாம் தாயே, வேண்டாம்.  நீயும் அருள் புரிய வேண்டாம்.  உன் கணவனும் உதவி செய்ய வேண்டாம். நான் விஷம் குடித்து உயிரை விட்டு விட்டு நேரிலேயே வந்து உன் கணவனைக் கேட்கிறேன்.  ஆம் அது தான் சரி. இவ்வாறெல்லாம் எண்ணிய கோபன்னா எங்கிருந்தோ விஷம் எடுத்து வர ஏற்பாடு செய்து அதை நீரிலே கரைத்துவிட்டுக் குடிக்க ஆயத்தமானார்.  சீதம்மா, நீயாவது உன் கணவனிடம் சொல்ல மாட்டாயா எனக் கேட்டுக் கொண்டே விஷத்தைக் குடிக்க ஆயத்தம் ஆனார்.