தங்கத் தகடுகளால் கொடிமரம் வேயப் பட்டது.கோபுரங்களில் தங்கக் கலசங்கள் பதிக்கப்பட்டன. பீடங்களோ வெள்ளியால் ஆனவை. ஆராதனைக்கான உபகரணங்கள், பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப் பட்டன. பஞ்சலோகங்களால் ஆன ஸ்ரீராமனின் உற்சவ விக்ரஹத்திற்கு நவரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் சூட்டப்பட்டன. அனைத்தும் முடிந்து முறைப்படியான யாகங்கள் செய்து கோயிலில் கும்பாபிஷேஹமும் முடிந்தது. இயற்கையான மலை அழகிலே ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமன் இப்போது தன் பக்தன் ஆன கோபன்னா செய்த செயற்கையான அலங்காரங்களையும் ஏற்று அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருந்தான். கோயிலின் நந்தவனத்தில் ஜாதிப்பூக்கள், சண்பகப் பூக்கல், வில்வம், துளசி போன்றவை வளர்க்கப் பட்டு முறையே இறைவனுக்குச் சார்த்தப் பட்டது. பழங்கள் வித விதமாகப் படைக்கப்பட்டன. சந்தனம், ஊதுபத்தி, தசாங்கம் போன்றவற்றின் சுகந்தம் வேறு மனதையும் மூக்கையும் நிறைத்தட்து. கோபன்னா ஆனந்தத்தில்திளைத்தார். கோயிலுக்கு பக்தர்கள் வருகையும் பெருகியது.
இது இவ்வாறிருக்க, ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியும் பத்ராசலம் தாலுகாவின் வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை தானீஷா அறிந்தான். கோபன்னாவின் மாமன்மார்களை அழைத்து, கோபன்னாவை நம்பிக்கையானவன் எனக் கூறி ராஜ சேவகத்துக்கு சிபாரிசு செய்தீர்களே! இப்போது வரிப்பணம் வரவில்லையே எனக் கேட்க, தங்கள் மருமகனால் தங்கள் பெயர் கெடுகிறதே எனக்கவலையுற்ற அவ்விருவரும் ஒரு தூதுவனை பத்ராசலத்துக்கு அனுப்பி வைத்தனர். தூதுவனும் கோபன்னாவைக் கண்டு மன்னன் கொடுத்த ஓலையைக் கொடுத்தான். கோபன்னா அந்த ஓலையைப் படித்துவிட்டு தூதுவனை ஸ்ரீராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் பண்ண வைத்தார். தாம் செய்துள்ள திருப்பணிகளை எல்லாம் காட்டினார். தூதுவன் ஆச்சரியக்கடலில் முழுகினான். அருமையான பணியைச் செய்திருந்தாலும் இதற்குப் பெயரும் புகழும் கிடைத்திருந்தாலும் அனைத்தும் அரசாங்கப் பணத்தில் செலவிடப் பட்டவை. ஆகவே இது திருட்டுக் குற்றமே. அரசனின் கோபத்திற்கும் ஊராரின் பழிக்கும் ஆளாகி இருக்கும் கோபன்னா என்ன பதில் சொல்ல முடியும் எனக் கேட்டான். கோபன்னாவோ தனக்கு எதுவுமே விளங்கவில்லை என்றும், இது அரசனே முன்னின்று செய்திருக்க வேண்டிய ஒன்று என்றும், தான் தனக்கு என ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார். மேலும் தான் ஸ்ரீராமனையே நம்பி இருப்பதால் அவன் தன்னை எந்த அவமானமும் துன்பமும் நேராமல் காப்பான் என நம்புவதாயும், தானீஷா பெருந்தன்மையாகத் தன்னை மன்னிப்பார் எனவும் கூறினார். பின்னர் எதற்கும் இந்த விஷயத்தை முதலில் தம் மாமன்மாரிடமே சொல்லும்படியும் அவர்கள் பின்னர் ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனவும் கூறினார் கோபன்னா.
தூதுவனும் அவ்வாறே வந்து மாமன்மாரிடம் கோபன்னா கூறியவற்றைக் கூறத் திகைத்த மாமன்மார் எப்படியும் இங்கே வந்து தான் ஆகவேண்டும்; அதுவரை பொறுப்போம் என எண்ணினார்கள். தானீஷாவின் சபை கூடி வரவு, செலவுகள் குறித்த விவாதங்கள் நடந்தன. எங்கெங்கே வரவு பாக்கி இருக்கிறது என்பது குறித்தும் பேசப்பட, பத்ராசலம் தாலுகாவில் பாக்கி உள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்த தானீஷா, கோபன்னா இன்னமும் பாக்கி வைத்திருக்கிறாரா? ராஜபக்தி உள்ள மனிதன் ஆயிற்றே என தூதுவர்களை அழைத்து விசாரிக்க பத்ராசலம் சென்று வந்த தூதுவன் தான் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தானிஷாவிடம் தெரிவித்தான். தானிஷாவின் முகம் சுருங்கியது. எவ்வளவு பாக்கி என விசாரிக்க ஆறு லக்ஷம் வராஹன்கள் பாக்கி என அறிந்த தானீஷா கோபம் எல்லை மீற பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் விசாரணைக்கு வரவேண்டும் எனவும் தக்க காவலுடன் கைது செய்து அழைத்து வரவேண்டும் எனவும் கட்டளை இட்டான். ராஜ சேவகர்கள் பத்ராசலம் சென்று அரசனின் கட்டளையைத் தெரிவிக்க கோபன்னாவோ, சேவகர்களுக்கு விருந்து படைக்க ஆயத்தம் செய்தார். வந்த வேலை முடியும் முன்னர் உணவு உண்ண மாட்டோம் என மறுத்தனர் சேவகர்கள். அவர்களிடம் தன்னிடம் செப்புக்காசு கூடக் கிடையாது எனக் கூறிய கோபன்னாவை இந்த விஷயத்தை அரச சமூகத்தில் வந்து தெரிவிக்குமாறு சேவகர்கள் கூறினர். ஏவலாளர் புடை சூழக் கிளம்பிய கோபன்னாவை, இப்போது குற்றவாளியாகச் செல்வதால் இம்மாதிரி வர முடியாது எனவும், தக்க காவலுடன் தாங்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினர் சேவகர்கள் அதற்குள் ஊர்மக்களுக்கு விஷயம் தெரிந்து சத்யாக்ரஹம் செய்ய முன் வந்தனர். மக்களை சமாதானம் செய்த கோபன்னா தன் மனைவியிடமும், மகனிடமும் விஷயத்தைத் தெரிவித்து, ஸ்ரீராமன் இருப்பதாகவும் அவன் தம்மைக் காப்பான் எனவும் கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.