Monday, February 22, 2016

சுசீந்திரத்தில் தரிசனம்!

கன்யாகுமரியில் பகவதி அம்மன் தரிசனம் எளிதாகவே இருந்தது. ஏனெனில் அங்கே நுழைவுச் சீட்டு அனுமதி என்பதே இல்லை. கோயிலில் நுழையும்போதே கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டிருக்கின்றனர். ஆகவே நிம்மதியாகப் போய் நன்றாக பகவதியைத் தரிசனம் செய்யலாம். மக்களை அவரவர் பொறுப்பில் விட்டால் கொஞ்சம் கூடச் சுணக்கம் இல்லாமல் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி எனலாம். தரிசனம் முடிந்து முக்கடல் கூடும் சங்கமம் சென்று பார்த்தோம்.  அங்கேயும் முன்னர் இருந்தாற்போல் பார்க்க வசதியாக எல்லாம் இல்லை. கூட்டம் வேறு. :( பின்னர் எங்கள் வண்டி ஓட்டுநர் வரச் சொன்ன இடத்துக்குக் கிளம்பினோம். கிளம்பும்போது ஓர் கடையில் முந்திரிப்பருப்பு நன்றாக முழுதாக இருக்கவே வீட்டு உபயோகத்துக்குக் கால் கிலோ வாங்கிக் கொண்டோம். பின்னர் வண்டியில் ஏறிக் கொண்டு சுசீந்திரம் போகச் சொன்னோம்.

இதற்கு முன்னர் வந்தப்போவும் சுசீந்திரம் போனோம். என்றாலும் இப்போதும் போக விரும்பினோம். இந்தக் கோயிலும் சிறப்பு அனுமதி இல்லாக் கோயில். அநேகமாய்த் தென் தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் சிறப்பு அனுமதி இல்லாமல் பார்க்க முடிகிறது.  படங்கள் கிடைக்கவில்லை! :(  மடிக்கணினியை மீண்டும் நிறுவுகையில் எங்கேயோ போய் மாட்டிக் கொண்டிருக்கிறது போல! :) சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்திருப்பதாகச் சொல்லப்படும் கோயில்களில் ஒன்று.

இந்த சுசீந்திரம் புராண காலத்தில் ஞானாலயம் என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். இங்கே அத்திரி முனிவரும் அவர் மனைவி அநசுயாவும் தவம் செய்து வந்தனர். அநசுயா மிகப் பெயர் பெற்ற தபஸ்வினி என்பதோடு கற்புக்கரசியும் கூட. மும்மூர்த்திகளுக்கும் அவர்கள் மனைவியர் ஆன முப்பெரும் தேவியருக்கும் அவள் கற்பைச் சோதிக்கும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு சமயம் இமயமலையில் தவம் செய்ய வேண்டி அத்திரி முனிவர் மனைவியான அநசுயாவைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து மும்மூர்த்திகளும் துறவி வேடங்களில் வந்து அநசுயாவிடம் பிக்ஷை கேட்டனர். அநசுயாவும் ஆசிரமத்துக்குள் அழைத்து அவர்களுக்கு அதிதி உபசாரங்கள் செய்யத் தொடங்கினாள்.

உணவு படைக்கும் நேரம் மூவரும் முழு உடை அணிந்த ஒருவர் அளிக்கும் உணவை நாங்கள் ஏற்பதில்லை என்றும் ஆடை அணியாமல் உணவு படைத்தால் மட்டுமே ஏற்போம் என்றும் கூறினார்கள். முதலில் செய்வதறியாமல் திகைத்தாலும் அநசுயா சமாளித்துக் கொண்டு தன் தவ பலனாலும், கற்பின் பலனாலும் மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்தப் பச்சிளங்குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொஞ்சிப் பாலூட்டித் தாலாட்டித் தொட்டிலில் இட்டுச் சீராட்டினாள். தங்கள் கணவன்மார் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டதை அறிந்த முப்பெரும் தேவியரும் திகைத்துப் போயினர். அநசுயாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி அவளைச் சோதிக்கவே இம்மாதிரி நடந்து கொள்ள நேர்ந்தது என்பதைத் தெரிவிக்க அநசுயாவும் அவர்களை மீண்டும் பழைய உருவுக்கு மாற்றினாள். மூவரும் தங்கள் தங்கள் அம்சத்தில் அநசுயாவுக்கு ஒரு குழந்தை பிறப்பான் என்று அருளிச் செய்தனர். ஒரு சிலர் மூவரின் ஒன்று சேர்ந்த அம்சமாக தத்தாத்ரேயரை அநசுயாவுக்கு அளித்ததாகவும் சொல்கின்றனர்.

அத்திரி முனிவரும் திரும்பி வந்ததும், அநசுயா நடந்ததைச் சொல்ல அத்திரி முனிவர் மும்மூர்த்திகளையும் மனமார வேண்டி நின்றார். அவருடன் அநசுயாவும் பிரார்த்தனைகள் செய்ய மூவரும் அங்கே இருந்த கொன்றை மரத்தினடியில் காட்சி கொடுத்தனர்.  இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக இங்கே கோயில் கட்டப்பட்டது என்றும் மூவரும் சேர்ந்த ஒருவராக தாணுமாலயன் என்னும் பெயரில் ஈசன் காட்சி கொடுப்பதாகவும் ஐதீகம். சிவன்(தாணு) , மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா) என்று மூவரும் இங்கே ஓருருக் கொண்டு காட்சி அளிக்கின்றனர்.

Image result for தாணுமாலயன் திருக்கோவில்

நன்றி விக்கிபீடியா!


தொடரும்!