Saturday, February 28, 2009

நாம எப்போ அப்படி மாறப் போறோம்?????

இப்போ முதல்லே இருந்து பார்க்கலாமா?? சென்னையை விட்டுக் கிளம்பி ரயிலில் ஏறியதுமே முதல் அதிர்ச்சி, அந்தப் பெட்டியின் சைட் பெர்த் இரண்டு எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்ததில், நடுவில் இருந்த மூன்றாவது படுக்கும் வசதி கொண்ட பலகையே. இந்தப் பெட்டியில் பக்கவாட்டில் உட்காரும் மூவருக்குமே அவதி தான். இதைக் குறித்துப் பல எதிர்ப்புகள் வந்தும், இன்னும் அதை அகற்றாமல் இருக்கும் ரயில்வே நிர்வாகத்தை என்ன சொல்வதுனு புரியலை. லாலுவை ரயில்வேக்கு அதிக லாபம் சம்பாதித்துக் கொடுப்பதாய் அனைவரும் பாராட்டுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. ஏனெனில் முந்தைய அரசில் ரயில்வே மந்திரியாக இருந்தவர் போட்டு வைத்த ராஜபாட்டையில் சுகமாய்ப் பயணிக்கின்றார் லாலு என்பது ரயில்வே நிர்வாகமே நன்கு அறிந்த ஒன்று. நிர்வாகத் திறமை கொண்டவராய்ப் பேசப் படும் லாலுவால் சொந்த மாநிலத்தை முன்னேற்ற முடியவில்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப் பட்டவர் செய்த இந்த வசதியைக் குறித்து என்னத்தைச் சொல்றது? இந்த யோசனை வந்த லாலுவோ, அல்லது அதை வடிவமைத்த அதிகாரியோ அதில் ஏறிப் படுத்துப் பார்த்திருக்கவேண்டும். நல்லவேளையாகக் கடவுள் கருணையால் நடுவில் இருந்த படுக்கும் வசதிக்கு பரோடா செல்லும் வரையிலும் யாருக்கும் கொடுக்கவில்லை. மேலே ஏறிப் படுத்துக் கொண்ட என் கணவருக்குக் கீழே இறங்க முடியாமல் பட்ட அவஸ்தை! பணத்தைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதை தான்! :(((((( ஏப்ரலில் இருந்து அந்தப் படுக்கும் வசதி நீக்கப் படும் என விஜயவாடாவுக்குப் பின்னர் வந்த பயணச்சீட்டுச் சோதனையாளர் கூறினார்.

சாப்பாடு நல்லவேளையாகக் கையில் எடுத்துக் கொண்டு போயிருந்தோம். வாங்கியவர்கள் சாப்பிட முடியாமல் தவித்ததைக் காண முடிந்தது. அவ்வளவு காரம் எனச் சொன்னார்கள். சின்னக் குழந்தைக்குக் கொடுக்கும் சர்க்கரைத் தண்ணீர் போல காஃபி, டீ போன்றவை. தயிரும், மோரும் கொஞ்சம் பரவாயில்லை, விலை அதிகமானால் கூட. ரயில்வே கொடுக்கும் உணவின் தரத்தை உயர்த்தி இருப்பதாய்ச் சொல்லும் லாலுவோ, அல்லது சக மந்திரிகளோ, அல்லது அதிகாரிகளோ ரயிலில் பயணிக்கப் போவதில்லை. பயணித்தாலும் தனியாக அனைத்தும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வழங்கப் படும். சாமானியர்களின் கஷ்டம் அவர்களுக்குப் புரியப் போவதில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் லாலுவைப் பாராட்டியே ஆகவேண்டும். நாங்கள் சோம்நாத் சென்றிருந்த போது தரிசனம் முடிந்து வெளியே வந்து, அங்கே இருந்த நடமாடும் கழிப்பறை வசதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களிடம் கஷ்டப் பட்டு நாங்கள் ஹிந்தியில் கேட்க, அவங்க குஜராத்தியில் மறுமொழி சொல்ல பேட்டி கண்டு கொண்டிருந்த சமயம் சைரன் ஒலிக்க ஒரு வண்டி வந்தது.

யாருனு பார்த்தால் திருவாளர் லாலுவே தான். ஆஹா, நம்ம சுற்றுப் பயண விபரம் தெரிந்து தான் நம்மைச் சந்திக்க வந்திருக்கார் போலிருக்கு. இல்லைனா ரயிலில் நாம சண்டை போட்டது தெரிஞ்சு சமாதானம் சொல்லத் தேடிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். :P:P:P:P கடைசியில் பார்த்தால், (முதல்லே இருந்தே தான்) லாலு சோம்நாத் கோயில் தரிசனத்துக்கு வந்திருந்தாராம். ஒரு வண்டியில் லாலுவும், மற்றொரு வண்டியில் மாநிலக் காவல் துறையின் பாதுகாப்புக்களும், லாலுவுக்காக ஒரு ஆம்புலன்ஸும் ஆக மொத்தம் மூன்று வண்டிகளையே பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் மயக்கமே வந்துடுச்சு. அட, அதான் போகட்டும், அவரோட கட்சிக் கொடியையாவது பறக்க விடக் கூடாதா? ம்ஹூம், பறக்கவே இல்லைங்க, இது என்ன அநியாயம்னு புரியலை. ஆனால் இந்த அநியாயம் தமிழ்நாடு தாண்டினதும் ஆந்திராவில் இருந்தே ஆரம்பிக்குது.நர்மதை, பரூச்சிற்கு அருகே கடக்குமிடம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இல்லாமல், சுத்தமாயும் இருக்குதுங்க. ஆச்சரியமா இருந்தது. ப்ளாஸ்டிக் குப்பைகளே நீர்நிலைகளில் காண முடியவில்லை. கிருஷ்ணாவில் தான் அப்படினா, நர்மதா, தாபி(தமிழ்நாட்டு உச்சரிப்பு தப்தி)
போன்ற நதிக்கரைகளிலும் அப்படித் தான் இருக்கு. என்ன மக்கள் போங்க! ஒரு துணி துவைக்கிறது, குளிக்கிறது, லாரியைக் கழுவறது, மாட்டு வண்டிகளைக் கழுவறதுனு பார்க்க முடியாமல் நொந்து போயிட்டேன் போங்க!
கிருஷ்ணா நதியைக் கடக்குமிடம், விஜயவாடாவுக்கு அருகே! ஆகாயத் தாமரைக் கொடிகளோ, மற்ற செடி, கொடிகளோ காண முடியவில்லை. நீரும் கொள்ளிடம், காவிரி போலக் கறுப்பாய் இல்லை. நாம் எப்போ அப்படி மாறப் போறோம்????????? அங்கங்கே செக் டாம்கள் எனப்படும் தடுப்பணைகளும், அவை விவசாய நிலங்களுக்குச் செல்லத் தோதான கால்வாய்களையும், குடியிருப்புகளுக்குச் செல்லுமிடங்களில் நீர் இறைக்கும் பம்ப்செட்களும் காணப் படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமானது ஆளில்லா லெவல் க்ராசிங் ஆனாலும் மக்கள் நின்னு ரயில் போகும் வரையில் காத்திருந்து பின்னர் கடக்கின்றனர். பொதுவாக வட இந்திய மக்கள் பேச்சும், பழக்கமும் நம்மைப் போன்ற தென்னிந்தியருக்கு அலட்சியம் கலந்தும், பொறுப்பில்லாமையாகவும் தெரியும்.

ஆனால் அப்படி இல்லைனு பழகினாலோ, அல்லது நெடுநாட்கள் அங்கே தங்கி இருந்து பார்த்தாலோ புரியும். எங்களோட குஜராத்தில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்து தொழில் புரியும் ஒரு தொழிலதிபரும் பயணித்தார். அவர் சொன்னது எல்லாமே ஆச்சரியமாகவே இருந்தது. 24 மணி நேரம் மின் விநியோகம், குடி நீர் விநியோகம். செளராஷ்ட்ரா, கட்ச் பகுதியில் தண்ணீருக்கு மக்கள் கஷ்டப் படாமல் இருக்க ஏராளமான ஏற்பாடுகள். வேலை வாய்ப்பில் இந்தியாவிலேயே முதன்மைத் தகுதி வாய்ந்த மாநிலம். இந்த விஷயம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15-ம் தேதியிட்ட பதிப்பில் தலைப்புச் செய்தியாகவும் வந்துள்ளது. தொழில் தொடங்குவோருக்குத் தடையில்லாத உள்கட்டமைப்பு வசதிகள். மக்களுக்குத் தொந்திரவில்லாமல் இடம் வாங்கிக் கொடுப்பது தொழில் முனைவோருக்கு. அதில் இரு தரப்பினரும் மோத முடியாத அளவுக்குக் கவனமாக இடத்தைத் தேர்ந்தெடுத்தல் என்று சாமானியர்களைக் கவனத்தில் வைத்து முடிவுகள் எடுக்கப் படுகின்றன. அந்த அளவுக்கு மாநில முதலமைச்சர் உழைத்திருக்கின்றார் என்றால் மக்கள் அனைவருமே அவருக்குத் தோள்கொடுக்கின்றார்கள். இது ஒரு குழுவாகச் செயல்படுவதன் வெற்றி என்றே தோன்றுகின்றது. இன்னும் சோம்நாத், துவாரகை, டாக்கூர், பரோடா, போன்ற ஊர்களில் உள்ள சாமானிய மனிதர்களான ஆட்டோ ஓட்டிகளில் இருந்து துணிக்கடைக் காரர்கள், பலவிதமான வியாபாரிகளிடமிருந்து பேசியதில் குஜராத் நிஜமாகவே முன்னேறிக் கொண்டிருக்கின்றது புரிய வந்தது. ஆனால் வேறு சில மாற்றங்களும் உண்டு.

Wednesday, February 25, 2009

தாய் முகம் மாறாத இடமும் இருக்கே!

என்னோட அம்மா நான் நினைவு தெரிஞ்சு பார்க்கும்போதில் இருந்தே ஒன்பது கஜம் புடவை தான். எனக்குக் கல்யாணம் ஆகிப் பதினேழு வருடங்கள் வரையிலும் அம்மா ஒன்பது கஜத்தில் இருந்து மாறியதே இல்லை. அம்மாவுக்குப் பதினாறு அல்லது பதினேழு வயதிலோ என்னமோ, என் அண்ணா பிறந்த பின்னர் கட்ட ஆரம்பித்ததாய்ச் சொல்லுவார். அப்படிப் பட்ட அம்மாவுக்கு முடியாமல் போய் அறுவை சிகிச்சை நடந்து தன்னோட ஐம்பதாவது வயதில் ஒரு மார்பகத்தை எடுத்த பின்னர், ஒன்பது கஜம் கட்ட முடியாமல் ஆறு கஜம் கட்ட ஆரம்பித்தார். நானும் சரி, என்னோட தம்பியும் சரி, அதை ஏற்க முடியாமல் தவித்தோம். அம்மாவிடம் அத்தனை உடல் நலக்கேட்டிலும், "நீ மாறிட்டே அம்மா, உன்னைப் பார்க்கும்போது அம்மா மாதிரியே தெரியலையே? ஒன்பது கஜம் கட்டிக்கோ!" என்றே தொந்திரவு செய்வோம். இத்தனைக்கும் எங்க இரண்டு பேருக்குமே திருமணம் ஆகிக் குழந்தைகள் இருந்தன. எல்லாம் தெரிந்து கொண்டும் அம்மாவை இப்படிச் சொல்லும் நான் என் பிறந்த ஊரான மதுரையின் முகம் மாறியதன் அதிர்ச்சி இன்னும் விலகாமலேயே இருக்கும்போது குஜராத் செல்ல நேர்ந்தது. உள்ளூர பயம், கவலை. ஜாம்நகர் எப்படி இருக்குமோனு தான். அது என்னமோ தெரியலை. மாற்றம் என்பது என்ன என்று அதன் அடிப்படையே யாருக்குமே புரியலைனு என்னோட கருத்து. மாறணும், கட்டாயமாய் மாறணும், மாத்திக்கவும் செய்யணும். ஆனால் அடிப்படை, அஸ்திவாரம் அசையக் கூடாது இல்லையா? அடிப்படையே அழிந்து போகும் வண்ணம் மாறும் மாற்றம் எனக்குப் பிடிப்பதே இல்லை. Heritage என்பதன் உண்மையான அர்த்தம் வெறும் வியாபார நோக்கிலே கருதப் படாமல் உணர்வு பூர்வமாகவும், கலாசார பூர்வமாகவும் மதிக்கப்படவும், காக்கப் படவும் வேண்டும். மதுரை மீனாட்சி கோயில் பொற்றாமரையைச் சுற்றி இருந்த நாயக்கர் காலத்து ஓவியங்களை அழித்து விட்டு இப்போப் புதுசா யாரையோ விட்டு வரைய வச்சிருக்காங்க. நல்லா இருக்கலாம். அது வேறே விஷயம். ஆனால் நாயக்கர் காலத்துச் சரித்திர ஆதாரங்களை அழிப்பது எந்த விதத்தில் சரி? மனமே நொந்து போச்சு அதைப் பார்க்கும்போது. மீனாட்சி கோயிலின் முகமே மாறிட்டாப் போல ஓர் எண்ணம். :((((((((

மதுரையின் மேல் உள்ள அதே அளவு பற்றும், பாசமும் ராஜஸ்தானின் நசீராபாத்துக்கும், குஜராத்தின் ஜாம்நகருக்கும் எங்களுக்கு அனைவருக்குமே உண்டு. ஆகவே கிட்டத் தட்ட பதின்மூன்று வருடங்கள் சென்ற பின்னர் செல்கின்றோமே, இப்போ ரிலையன்ஸ் வந்தாச்சு. ஊர் ஒரேயடியாக மாறிப் போய் பழைய கட்டிடங்கள் இடிக்கப் பட்டு, புதிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகள் என இருக்கும் என எண்ணிக் கொண்டே வந்தோம். முதல் இனிய அதிர்ச்சி, சோம்நாத்தின் அழகிய மாற்றம். தேவையான மாற்றம் என்பதோடு அல்லாமல், வசதியானதும் கூட. அது பற்றி விரிவாய் எழுதுகின்றேன். பின்னர் சோம்நாத்தில் இருந்து துவாரகைப் பயணம் சற்றும் மாறாமல் அதே தனியார் பேருந்துகள் மூலமே இன்னமும் நடக்கின்றது. ஒரே மாற்றம் என்னவென்றால் போகும் வழியில் போர்பந்தரில் குசேலர் வீடு, கோயில், காந்தியின் பிறந்த இல்லம் காட்டிவிட்டுக் கூட்டிச் செல்லுவார்கள். இப்போ சமீபத்திய குண்டு வெடிப்புக்குப் பின்னர் நகருக்குள் இம்மாதிரிப் பேருந்துகள் வர அனுமதி கடுமையாக மறுக்கப் படுகின்றது. ஆகவே பேருந்து நகருக்குள் செல்லாமல் நகரைத் தொட்டுக் கொண்டு செல்கின்றது. அதே பழைய இனிமையான இயற்கை அனுபவங்கள். பாண்டி நாட்டின் பாலைவனங்களே எனக்குப் பிடித்தம்னு பொன்னியின் செல்வனின் நந்தினி சொல்றாப்போல் எனக்கும் பாலைவனமே பிடிக்குமோனு எண்ணம் வந்தது.

துவாரகை வரும் வழியில் உள்ள ஹர்ஷித்தி மாதாவின் கோயிலும் மிகப் பழமையானது. ஸ்ரீகிருஷ்ணர் வணங்கிய அம்மன் அவள். துவாரகை வந்ததும், தங்க இடம் கிடைக்குமோ எனக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த என் கணவருக்கு அபயம் அளித்தனர் நாங்க வந்த பேருந்து அமைப்பாளர்கள். அவங்களுடைய லாட்ஜிலேயே தங்க இடம் கிடைத்தது. வாடகையும் கன்னா, பின்னா என்று இல்லாமல் நிதானமாகவே இருந்தது. தண்ணீர் கஷ்டம் இன்னமும் இருக்கின்றது துவாரகையில். ருக்மிணிக்குக் கிடைத்த சாபத்தின் விளைவு இன்னமும் தீரவில்லையோ என யோசிக்க வைத்தது. ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் கொடுக்கின்றனர். ஆகவே இரவில், பனிரண்டு மணிக்கு மேல் காலை ஐந்து மணி வரையிலும் தண்ணீர் கொடுப்பதில்லை. இதை முழு மாநிலத்திலும் கடுமையாக அனுசரிக்கின்றனர், ஒரு சில இடங்களைத் தவிர. லாட்ஜ் அறையிலும் பனிரண்டு மணிக்கு மேல் தண்ணீர் வரவில்லை. இது தெரியாமல் காலை நாலு மணிக்கு எழுந்து விட்டுச் சிரமப் பட்டோம். பின்னர் வரவேற்பில் கேட்டதும் தண்ணீர் இணைப்புக் கிடைத்தது. ஒரு விதத்தில் பாராட்டுக்குரியது தான். அங்கங்கே செக் டாம்கள் என அழைக்கப் படும் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தாலும் தண்ணீரின் தேவையை நினைவில் வைத்துக் கொள்ள இம்மாதிரியான ஒரு ஏற்பாடும் தேவை தான் என்றே தோன்றியது. குளிக்கக் கொடுத்த தண்ணீரில் குளிக்கும்போது கடலில் குளிக்கவில்லையே என்ற எண்ணமே தோன்றவில்லை. தண்ணீர் அவ்வளவு உப்பு.

Monday, February 23, 2009

ரத்தம் குடிக்கும் தேசீயப் பறவைகள் இல்லாத மாநிலமும் ஒரு மாநிலமா?

நாங்க ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதெல்லாம் செல்லங்களை விட்டுட்டுப் போறோமேனு கவலையா இருக்கும். அவை யுனிவர்சல் தான் சொந்தமா வச்சுண்டு, அவங்களோட பட்ட கஷ்டம், வேதனை நிறையப் பட்டாச்சு, அதெல்லாம் இப்போ வேண்டாம்னு சொந்தமாவே வச்சுக்கலை என்றாலும், மனசு என்னமோ அடிச்சுக்கும். ஆனால் நம்ம ரத்தத்தின் ரத்தம் ஆன தேசீயப் பறவைகள் தான் என்ன பண்ணுமோனும் கவலை இந்தத் தரம். எப்போவும் வீட்டைப் பார்த்துக்கும் கேர்டேக்கரும் இம்முறை இல்லை. அவரோட ரத்தம் கிடைக்காதே அதுக்கு. இதுங்க எல்லாம் நம்ம வீட்டிலே ஒரு சிட்டுக் குருவி சைஸுக்கு இருக்கும்னா பார்த்துக்குங்களேன். எவ்வளவு ரத்தம் குடிக்குதுனு. நம்ம ரத்தத்தை அதுங்க குடிக்கிறதாலே அதுங்க கிட்டே இப்போ ஒரு பாசமே வந்துடுத்து. உடன்பிறவா சகோதர பாசம் ஏற்பட்டு விட்டது. அதிலேயும் நம்ம ம.பா. அவங்களை வீட்டை விட்டு வெளியேற்ற புகை போடவோ, வத்தி ஏத்தி வைக்கவோ, மருந்து அடிக்கவோ ஒத்துக்கவே மாட்டார்னா பாருங்க. சரியான காந்தீயவாதி அவர். புத்தர், ஏசு, காந்திக்கு அடுத்த இடம் தனக்குத் தான்னு நம்பிக்கையோட இருக்கார். அதனாலே அவங்களை, கதவைத் திறந்து, "போங்க எல்லாம்" னு சொல்லி, பேசி, அன்போடத் தான் வழி அனுப்பி வைப்பார்.

அதுங்களும் அவர் கதவைத் திறக்கும்போது போயிடறாப்போல் பாவலா காட்டும். திரும்ப அவர் கதவைச் சாத்திட்டு உள்ளே வரும்போது பார்த்தால், அவரோட தலைக்கு மேலே திருமாலோட சக்கராயுதம் போலச் சுழலும் பாருங்க, எல்லாம் கூட்டமாய். ஒரு நிமிஷம், திருமாலோட சக்கராயுதம் தானோன்னு நமக்கே தோணும். அதுங்க எல்லாம் நாங்க இல்லாம ரத்தம் குடிக்க என்ன கஷ்டப் படும்னு நினைச்சுக் கவலைப் பட்டு உருகி, அழுகையே வந்துடுச்சு எங்களுக்கு. ஆனால் குஜராத்தில் என்ன அநியாயம் பாருங்க, ஒரு கொசு கூட இல்லை. தேசிய உணர்வே இல்லாதவங்க போல அவங்க எல்லாம். நகரத்தைச் சுத்தமா வச்சுக்கறாங்களாமே! ஒரு நகரம் என்றால் குப்பை மலை குவிந்திருப்பது தானே அழகு! துப்புரவுப் பணியாளர்கள் வேலை செய்யற நகரமும் ஒரு நகரமா? அங்கே பாருங்க, தினமும் காலையில் ஏழு மணிக்கே வேலையை ஆரம்பிக்கிறாங்க. அவங்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வேலை செய்யாமல் இருப்பது எப்படினு சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சேன்.

அப்புறம் பாருங்க மின் தடையே கிடையாதாம். தனியார் மின்சாரம் தயாரிச்சுத் தராங்களாம். அது தவிர குஜராத் மாநில அரசின் மின்வாரியமும் மின்சாரம் தருதாம். தனியார் மின்சாரம் கட்டணம் கூடுதலாம் என்றாலும் தடையில்லாமல் மின்சாரம் என்பதால் பரவாயில்லை என்று மக்கள் சொல்கிறாங்களாம். மின்வாரியமும் தடையில்லாத மின்சாரம் தருதாம் ஏழைங்க இருக்கும் ஏரியாவில் எல்லாம். குறைந்த கட்டணமாம் அவங்களுக்கு. பராமரிப்புக்காக மட்டுமே மின்சாரம் தடை செய்வாங்களாம் முன் அறிவிப்போட. இவங்க எல்லாம் நம்ம ஆற்காட்டார் கிட்டே கத்துக்கணும் இல்லை! முன் அறிவிப்போட இரண்டு மனி நேரம்னால், முன் அறிவிப்பு இல்லாமல் 4, 5 மணி நேரம்னு இருக்கவேண்டாம்! என்ன போங்க! ஒண்ணுமே பிடிக்கலை. தொலைக்காட்சியா எப்போப் பார்த்தாலும் தெரியுது. மின் விசிறி எப்போப் பார்த்தாலும் சுத்துது. ரிலயன்ஸ் கொடுக்கும் எரிவாயுன்னால் பைப் மூலம் கொடுக்கிறதாலே அதுவும் தடையே இல்லையாம். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஆறு மாசத்துக்கு எரிவாயுக்கான கட்டணம் 800 ரூபாயைத் தாண்ட மாட்டேங்குதாம். எனக்கா எரிச்சலான எரிச்சல். எரிவாயுக்குத் தொலைபேசிச் சொல்லிட்டு, பத்து நாள், பதினைந்து நாள் ஆனாலும் வராமல் அங்கே போய்த் தொங்க வேண்டாமோ மனுஷங்க?

என்ன மாநிலம் இது? இப்படி எல்லாவிதத்திலேயும் மக்களைக் கொஞ்சம் கூடக் கஷ்டப் படுத்தாமல்? சாலைப் போக்குவரத்திலாவது கஷ்டப் படுத்துதா? நாளைக்குப் பார்க்கலாமே? இன்னிக்குத் தான் வந்தேனா? ரொம்ப அலுப்பா இருக்கு! நாளைக்கு வந்து மிச்சம் சொல்றேன்.

Thursday, February 5, 2009

நட்பின் இழப்பு??????????

உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

வள்ளுவர் வாக்கு. எனக்குச் சில நண்பர்கள் இடுக்கண் களைந்திருக்கிறார்கள். இந்த வலை உலகிற்கு வந்ததில் நான் பெற்ற பெரும் பயன் இது.
"அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான்" என்று முண்டாசுக் கவிஞன் சொன்னது போல எல்லாரும் வந்திருக்கிறார்கள். "புதிய நட்பைப் பெறாத ஒவ்வொரு நாளையும் நான் இழந்ததாகக் கருதுகிறேன்." என்று சாமுவேல் ஜான்ஸன் என்ற அறிஞர் கூறிய மாதிரி ஒவ்வொரு நாளும் புதுப் புது நண்பர்கள். அதற்காக பழைய நண்பர்களை விட முடியுமா? முடியாது. நாம் போனாலும் அவர்கள் பார்க்காத மாதிரி இருந்தால் என்ன செய்வது? புரியவில்லை. பொறுத்துப் பார்ப்பது ஒன்று தான் வழி. நட்பு நீடிக்க வேண்டும் என்பது தான் நாம் விரும்புவது.

"வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ பகையே-துள்ளி வருகுது வேல்" என்று முண்டாசுக் கவிஞன் பாடியது போலப் பகையை வெல்ல அந்த ஆறுமுகன் உதவுவான். என்றாலும் நட்பை இழந்து விட்டோமோ என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கும். மனம் மிகவும் வலிக்கும்.

எனக்கு வலிக்கிறது.

Monday, February 2, 2009

குருவாயூர் எக்ஸ்பிரசில் மியூசிகல் சேர் விளையாடினோம்!


இந்த முறை கும்பகோணம் பயணத்தை மூன்று மாதங்கள் முன்னாலேயே தீர்மானம் செய்தாச்சு. எப்படியும் தை பிறந்தால் ஒரு வெள்ளியன்று குலதெய்வம் கோயிலுக்குப் போவோம். இம்முறையும் அவ்வாறே போகணும்னு முன்கூட்டியே தெரிந்ததால் ம.பா. என்னை ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுனு சொல்ல, நானும் ஆன்லைனில் பண்ணிடலாம்னு உட்கார்ந்தேன். அது என்னமோ தெரியலை, அவர் வந்து பக்கத்திலே உட்கார்ந்தாலே எந்தத் தளமும் திறக்காது. திறந்தாலும் வேலை செய்யாது. அவர் அலுத்துப் போய் உனக்கு கணினியை இயக்கவே தெரியவில்லை, கட்டின ஃபீஸெல்லாம் வேஸ்ட். இதைக் கத்துக்கவா க்ளாசுக்கெல்லாம் போனே?னு சொல்லிட்டுப் போயிடுவார். அப்புறமா அது பாட்டுக்குச் சமத்தா ஒழுங்கா சொன்னபடி கேட்கும். அன்னிக்கும் டிக்கெட் புக் பண்ண உட்கார்ந்ததுமே இந்தியன் ரயில்வே தளம் இயங்கவில்லை. தாற்காலிக எரர் தான் என்றாலும் அவர் என்னைப் பார்த்த பார்வை இருக்கே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் செண்டரலுக்கே போய்ப் பண்ணிடறேன் என்று சொல்லிட்டுக் கிளம்பிட்டார். அப்புறமா ஆவடியிலே ஏதோ வேலை இருந்ததுனு அங்கே போய்ப் பண்ணிட்டு அந்த வேலையையும் முடிச்சுக்கறேன்னு போயிட்டார். அடுத்த நிமிஷமே தளம் வேலை செய்ய ஆரம்பிச்சு, கேட்ட செய்திகளுக்கெல்லாம் சரியான பதிலும் கிடைக்க ஆரம்பிச்சது. அவர் போய் ஆவடியிலே டிக்கெட் புக் பண்ணிட்டார். ஜனவரி 31-ம் தேதி குருவாயூர் எக்ஸ்பிரஸில் போகவும், திரும்பி வர பெர்த் கிடைக்காததால், (மூணு மாசம் முன்னாலேயே) திரும்பி பஸ்ஸில் வந்துக்கலாம்னும் முடிவு பண்ணிட்டு டிக்கெட் வாங்கிண்டு வந்தாச்சு.

31-ம் தேதியும் வந்தது. கிளம்பணும். காலம்பர 7-50க்குக் கிளம்பறது வண்டி எழும்பூரில் இருந்து. நாங்க அம்பத்தூரில் இருந்து காலம்பர 5-30க்காவது கிளம்பணும். நேரே ஆட்டோவிலேயோ, கால் டாக்சியிலேயோ போகலாம் தான். ஆனால் அதுக்கு விற்க சொத்து ஒண்ணும் இல்லை. அதோடு இப்போக் கொஞ்ச நாட்களாய் நடை, படி ஏறுதல், இறங்குதல்னு எல்லாமும் ஆரம்பிச்சிருக்கேனே. அதுக்கு வேலை வேண்டாமா? மின்சார வண்டியிலேயே போகலாம்னு முடிவு எடுத்தாச்சு. எனக்குக் காலம்பர 2 மணிக்கே முழிப்பு வந்துடுச்சு. காலங்கார்த்தாலே போகணும்னா, அதுவும் சாப்பாடு பண்ணி எடுத்துண்டு போகணும்னா முதநாள் ராத்திரி தூக்கமே வரதில்லை. ஒரு வழியா 3-30-க்கு எழுந்து, குளித்து, சமைத்துக் கிளம்பும்போது 5-15 மணி. அம்பத்தூர் ஸ்டேஷன் போக குடும்ப ஆட்டோக்காரர் வந்துட்டார். அவருக்கு செண்டரல் வரைக்கும் ஏன் இப்போல்லாம் போகறதில்லைனு ஆச்சரியம்.

செண்டரல் போய் அங்கிருந்து ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு எழும்பூர் போனால் ரெயில் தயாராய் நின்னுட்டு இருந்தது. B1 எஞ்சின் பக்கம் நின்னுட்டு இருந்தது. அவருக்கு மிடில் பெர்த், எனக்கு அப்பர் பெர்த் கொடுத்திருக்காங்க. அதுவும் அவர் நம்பர் 21 என் நம்பர் 16. சைட் அப்பர். இந்த அழகிலே சைட் மிடில் பெர்த் வேறே உண்டு. பகவானே! இது என்ன ஏசியா? இல்லை கொத்தவால் சாவடியானு நினைச்சேன். 2 ஏசியிலே எல்லா டிக்கெட்டும் புல்லாகி வெயிட்டிங் லிஸ்ட் வந்திருந்தது நாங்க வாங்கறப்போவே. இதிலே எப்படி திருச்சி வரை போகிறதுனு பார்த்தால், குறைந்த பட்சம் நாங்களாவது உட்கார்ந்தோம். பலர் நின்னுட்டே இருந்தாங்க. ஒரே குழப்பம்.

டிடிஆருக்கே என்ன செய்யறதுனு புரியலை. ஆனால் முதல்லே அவர் வந்ததுமே சைட் மிடில் பெர்த் யாருக்கும் இல்லைனு சொல்லி எல்லார் வயித்திலேயும் லிட்டர் கணக்கில் பாலை வார்த்தார். அப்புறம் நாங்க, இன்னும் ஜோடியாய் வந்த 2,3 கணவன் மனைவிகள் அனைவருக்கும் சேர்ந்து உட்காருகிறாப்போல் அட்ஜஸ்ட் செய்து கொடுத்தார். என் கணவருக்குக் கொடுத்த சீட் வேறே ஒரு பெரியவரோடது. அவர் பெருந்தன்மையோடு என் கணவருக்கு அந்த சீட்டைக் கொடுத்துட்டு அவரோட சீட் இருந்த பக்கம் போய் அங்கே இருந்த அப்பர் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் என்னோட கணவர் போய் மேலே படுக்க அவர் கீழே இறங்கி வந்து சீட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டார். அதுக்கு அப்புறம் ஒரு வயதான பெண்மணி வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்தாங்க. இப்படி ஒருத்தர் உட்காருகிறதும், அவங்க எழுந்ததும் மத்தவங்க உட்காருகிறதுமாய் சரியான ம்யூசிகல் சேர் தான் போங்க! அதே போல் எங்கள் பக்கம் ஒரு நிறை கர்பிணிப் பெண். அவளுக்காக மத்தவங்க அட்ஜஸ்ட் செய்து மேல் பெர்த்தில் போய்ப் படுத்தனர். கீழே உட்கார இடம் இல்லாமல் நின்னவங்களுக்காக உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அவங்க நின்னுட்டு, மத்தவங்களைக் கொஞ்ச நேரம் உட்கார வைத்தனர்.

காசையும் கொடுத்துட்டு தேளையும் கொட்டிக் கொண்ட கதைன்னா எப்படினு அன்னிக்குப் புரிஞ்சது. ரயில்வேக்குக் கோடிக்கணக்கில் லாபம் எப்படிக் கிடைக்கிறதுனு இப்போப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். என்னோட ஒரே ஆசை லாலுவை ஒரு நாளாவாது இந்த மாதிரிப் பயணம் பண்ண வைக்கணும்னுதான். அவருக்கென்ன? தனி SALOON கொடுத்துடறாங்க, அதனால் சாமானியர்கள் படும் கஷ்டம் புரியறதில்லை, பொதுமக்களின் குறைகளைக் களைய முடியாமல் ரயில்வே நிர்வாகம் அமைச்சர்களின் உத்தரவுகளால் படும் கஷ்டம் சொல்ல முடியலை. ஒரு வழியா இப்போவாவது சைட் மிடில் பெர்த்களில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம்னு முடிவு எடுத்திருக்கே, அதுக்கே பாராட்டணும். இன்னும் பரோடா போகும்போது என்ன அனுபவம் காத்திருக்கோ தெரியலை.