Sunday, December 27, 2009

வெங்கையா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு!

ரொம்ப நாளாச்சா அரசியலில் சுறுசுறுப்பாவும் ஊக்கத்தோடும் ஈடுபட்டு?? தொண்டர்கள் எல்லாம் ரொம்பவே விரக்தியிலே மூழ்கிப் போயிட்டாங்க. தொண்டர்களை உற்சாகப் படுத்தறதுக்காகக் கொஞ்சம் அரசியல் நடவடிக்கையிலே மூழ்கலாமானு நினைச்சேன். என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ கிடைச்சது பாருங்க எதிர்பாராமல் ஒரு சான்ஸ்! வெங்கை(கா)(ஹிஹிஹி)யா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. எதுக்குனு நினைக்கறீங்க??? எல்லாம் தெலங்கானா, ஆந்திரா விஷயமாத் தான். அதோட நம்ம கட்சியோட கூட்டணி வச்சுக்கவும் ஆசைப்படறதாக் கேள்வி. இரண்டு பேரும் ஒரு பொது இடத்திலே சந்தித்துக் கொண்டோம். பேச்சு வார்த்தையே இல்லாமக் கொள்கை முடிவுகளை வைத்தே கூட்டணி முடிவு செய்யப் பட்டது. விபரங்கள் மதியமா. நேத்திக்கு அலைச்சலில் உடம்பு முடியலை. அதோட இன்னிக்கு ஏகாதசி வேறே சேர்ந்துடுச்சு.

எல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க

Friday, December 25, 2009

என் பயணங்களில் ரத்தினகிரி முருகனக் காண்போமா??

குன்றின் உச்சிதோறும் குமரன் இருப்பதற்கு யோக முறையில் கூறும் காரணம் அறிந்திருக்கலாம். நம் உடலின் உச்சியில் உச்சந்தலையில் இருக்கும் சஹஸ்ராரத்தை நினைவு படுத்தும் விதமாகவே குன்றுதோறும் குமரன் குடி கொண்டிருக்கிறான். குமரனின் ஆறுமுகங்களுமே ஆறு சக்கரங்களாகும். இதுக்கு மேலே விளக்குவது சரியில்லை. ஒவ்வொரு சக்கரமும் நம் உடலில் உள்ளன. கடைசியில் கிடைக்கும் சச்சிதாநந்தப் பேரொளியே சிவசக்தி ஐக்கிய சொரூபமான குமரன். அதை நினைவூட்டும் விதமாய் ஏற்பட்ட கோயில்களில் இந்த ரத்தினகிரியும் ஒன்று. படம் கிட்டே எடுக்க அநுமதி இல்லை வழக்கம்போல். கீழே இருந்தே எடுத்தோம். ஜூம் பண்ணி எடுத்த படங்கள் சரியாய் இல்லை. அதனால் இருப்பதற்குள் சுமாரான படங்களே போட்டிருக்கேன். இனி கீழே ரத்தினகிரி வரலாறு.
அடுத்தும் கடைசியாவும் நாங்க போனது ரத்தினகிரி பாலமுருகனைத் தரிசிக்க. இங்கே தான் மின்வாரிய ஊழியர் ஒருவர் முருகனால் ஆட்கொள்ளப் பட்டதாயும், அதன் பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு இங்கேயே வசித்து வருவதாயும் எங்கள் சுற்றுலா நடத்துநர் கூறினார். மேலும் மாலை ஏழு மணி அளவில் நாங்கள் தரிசனத்துக்குச் செல்வதால் பாலமுருகனடிமை(அந்தத் துறவிக்கு இப்போது இதான் பெயர் என்று சொன்னார்கள்) அவர்களே முருகனுக்கு வழிபாடு நடத்துவார் என்றும் விருப்பம் இருந்தால் யாரையேனும் அழைத்தும் பேசுவார் என்றும் சொன்னார். நாங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றோம். சின்னஞ்சிறு மலைதான் என்றாலும் ஏற்கெனவே நடந்து நடந்து அலுத்துக்களைத்துப் போயிருந்ததால் ஏறமுடியாது என்று நடத்துநர் கூறி இருந்தார். மேலும் கீழே இருந்து மேலே மலைக்குச் செல்ல ஆட்டோக்களுக்குச் சொல்லி இருப்பதாகவும் ஒரு ஆட்டோவில் நாலு பேர் அமரலாம் என்றும் சொல்லி இருந்தார். ஆட்டோ கட்டணமும் சொல்லிவிட்டார். ஆகவே நாங்க போய் எங்க பேருந்தை விட்டு இறங்கினதுமே ஆட்டோக்கள் வரிசையா வந்து நின்றது. அனைவரும் ஏறிக் கொண்டோம். ஆட்டோ மேலே சென்று அங்கே உள்ள வாயிலுக்கு அருகே நின்றது. அடிவாரத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. அதைத் தரிசித்துக் கொண்டே சென்றோம்.

படிகள் என்றால் கிட்டத்தட்ட ஆயிரம் அல்லது ஆயிரத்தைந்நூறு இருக்கலாமோ என்னமோ தெரியலை. என்றாலும் மேலே வந்தும் பத்து, இருபது படிகள் ஏறியே செல்லவேண்டி இருந்தது. இந்தக் கோயிலில் முருகன் குழந்தை முருகனாக பால முருகனாக இருக்கிறான். இங்கே சூர சம்ஹாரம் இல்லை என்று சொன்னார்கள். இந்தக் கோயில் பற்றி அருணகிரியார் பாடிய திருப்புகழ்ப் பாடல் கீழே/

பத்தியால் யான்உனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே!


ரத்தினகிரித் திருப்புகழ்னு கேட்டதுக்குக் கூகிளார் இதான் கொடுத்தார். கோயில் அருணகிரி நாதருக்கும் முன்னாலே இருந்ததாகவும், அருணகிரியார் இந்த முருகன் மேல் திருப்புகழ் பாடிப் பல வருஷங்கள் சென்றும், இங்கே வழிபாடுகள் சரிவர நடக்காமல் இருந்ததாகவும் சொல்கின்றார்கள். சிறிய குன்றாய் இருந்தாலும் கோயிலுக்குச் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாம். ஒருவேளை அர்ச்சகர் வந்து வழிபட்டுச் செல்வார் என்றும், நாற்பது வருடங்கள் முன் வரையிலும் இந்நிலைமையே என்றும் சொன்னார்கள். அறுபதுகளின் கடைசியில் ஒருநாள் பக்தர் ஒருவர் தற்செயலாக மலை ஏறி மேலே சென்று முருகனை தரிசித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அர்ச்சகரிடம் கற்பூர தீப ஆராதனை காட்டித் தரிசனம் செய்து வைக்கச் சொல்லி இருக்கிறார். அர்ச்சகரோ கற்பூரம் இல்லை என்றும், ஊதுபத்தி போன்ற எந்தவித வாசனைப் பொருட்களும் இந்த முருகனுக்குக் காணிக்கை செலுத்துபவர் இல்லை என்றும் சொல்லி விட்டாராம். அடக் கடவுளே, உனக்கே இந்நிலைமையா என எண்ணிய அந்த பக்தர் இப்படிப்பட்ட நிலைமையில் உனக்கு எதுக்குக்கோயில் என நினைத்தாராம்.

அப்போது அங்கேயே திடீரென அவர் மயக்கம் போட்டு விழப் பயந்து போன அர்ச்சகர், அங்கே உதவிக்கு ஆட்கள் இல்லாமையால் மலை அடிவாரம் சென்று ஆட்களை அழைத்து மேலே ஏறி வந்திருக்கிறார். வந்து பார்த்தால் சற்று முன்பு மயக்கமாய்க் கிடந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, தான் அணிந்து வந்த உடைகளைக் களைந்துவிட்டுக் கொண்டு வந்த ஒரு துண்டை மட்டும் உடுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைக் கண்ட அர்ச்சகர் நடந்தது பற்றி விசாரிக்க அவரோ பேசாமலேயே இருந்தார். பின்னர் அங்கிருந்த மணலில், “முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். இனி இந்த முருகன் கோயிலின் திருப்பணி ஒன்றே என் வாழ்நாளில் லட்சியம். மலையை விட்டுக் கீழே இறங்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே உட்கார்ந்துவிட்டார். அவருடைய இடைவிடா முயற்சியால் பின்னர் அங்கு முருகனுக்குக் கோயில் எழுப்பப் பட்டு கும்பாபிஷேஹம் நடந்திருக்கிறது.

அதன் பின்னர் கோயிலைப் பலவிதங்களிலும் மேம்படுத்தி இருக்கிறார். இப்போது பாதைகள் நன்கு செப்பனிடப் பட்டு நல்ல சாலை மேலே வரையிலும் செல்கிறது. இங்குள்ள முருகனுக்கு ஆறு வகை மலர்கள், ஆறு நேரம் அர்ச்சனைகள், வழிபாடுகள் முதலியன ஆறு அர்ச்சகர்களால் செய்யப்படுவதாயும் இது இந்தக் கோயிலின் சிறப்பு என்றும் சொல்கிறார்கள். ஐப்பசி மாதப் பெளர்ணமியில் சிவன் கோயில்களில் நடக்கும் அன்னாபிஷேஹம் போல் இங்கே முருகனுக்கு அன்னாபிஷேஹம் நடக்குமாம். சிவாம்சம் பொருந்தியவர் என்பதால் அன்னாபிஷேஹம் நடத்துவதாய்ச் சொன்னார்கள். கோயிலின் ராஜ கோபுரம் எல்லாமும் பாலமுருகனடிமை அவர்கள் நிர்வாகம் ஏற்றுக் கொண்டபின்னரே கட்டப் பட்டிருக்கிறது. உற்சவரை ஷண்முகர் என்று அழைக்கின்றனர். இவர் கல்லினால் ஆன தேரில் காட்சி கொடுக்கிறார். இங்கும் மொட்டை போடுதல், காவடி எடுத்தல் போன்றவை சிறப்பாய் நடக்கின்றன. இங்கே உள்ள வாராஹியும் தோஷங்களைப் போக்குபவள் என்று சொல்கிறார்கள். சிறிய அதே சமயம் அழகான பார்க்க வேண்டிய கோயில்.

இத்துடன் எங்கள் பயணம் இனிதே முடிந்தது. இரவுச் சாப்பாடு நாங்க கையிலே கொண்டு போயிருந்தோம். அம்பத்தூர் போக இரவு பதினோரு மணி ஆகும் என்றதால் ரத்தினகிரியில் இருந்து கிளம்பும்போதே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். மிக மிக செளகரியமான பயணமாகவும், இனிமையான பயணமாகவும், சற்றும் மனவேறுபாடுகள் இல்லாத பயணமாகவும் அமைந்ததுக்கு சுற்றுலா நடத்துநருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம்.
ட்ராவல்ஸ் விலாசம் K.M.S. Tourist,
250/2, M.T.H.Road, Venkatapuram, Ambattur.
Chennai – 53. 94441 09566/ 93818 16226

Tuesday, December 15, 2009

என் பயணங்களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்!


பழங்காலத்தில் இங்கே சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி மஹரிஷி சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டிருக்கிறார். பிற்காலத்தில் லிங்கம் மறைந்து வேல மரங்களால் ஆன காடு உருவாகி இருந்தது. இந்தப் பகுதியை ஆண்ட பொம்மி என்பவருக்கு வேலங்காட்டில் ஈசன் இருப்பதைக் கனவில் வந்து சொல்ல, காட்டை அழித்து லிங்கத்தைக் கண்டுபிடித்தான். சுற்றிலும் நீரால் சூழப் பட்டிருந்த அந்த இடத்தில் பெரிய கோட்டை ஒன்றையும் கட்டிக் கோயிலையும் அமைத்து லிங்கத்தைப் பிரதிஷ்டையும் செய்தான். ஆரம்பத்தில் பக்தர்களின் பிணியைப் போக்கும் இவருக்கு ஜுரகண்டேஸ்வரர் என்ற பெயரே இருந்து வந்துள்ளது. பின்னர் அதுதான் ஜலகண்டேஸ்வரர் என மாறிவிட்டதாய்ச் சொல்கின்றனர். சிலர் இப்போதும் இரு பெயர்களாலும் அழைக்கின்றனர். கோட்டையின் உள்ளே அமைந்த இந்தக் கோயிலின் அமைப்பும், கோட்டையின் அமைப்பும் வியக்கும்படியாக உள்ளது. வேலூர் என்றாலே கோட்டையை நினைவுறுத்தும் வண்ணம் அமைந்த இந்தக் கோட்டையின் ஜலகண்டேஸ்வரருக்குப் பல வருஷங்கள் வழிபாடுகள் இல்லாமல், அரசன் இல்லாக் கோட்டை, ஈசன் இல்லாக்கோயில், நீர் இல்லா ஆறு” என்னும் வழக்குச் சொற்களுக்குப் பாத்திரமாக இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டிலே விஜயநகர அரசர்களின் பிரதிநிதியான சின்ன பொம்மியால் கட்டப் பட்டது. மிக அழகான சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோட்டைக் கோயில், பின்னால் சந்தா சாகிபின் மைத்துனன் ஆன மொர்தாஸா அலி என்பவனால் கைப்பற்றப் பட்டது. சந்தாசாகிபின் வாரிசும் ஆற்காட்டின் உரிமையும் தனக்குத் தான் என்று சொன்ன மொர்தாஸா அலியிடமிருந்து பின்னர் ஆதில்ஷா என்னும் பீஜப்பூர் சுல்தானிடம் போய்ச் சேர்ந்தது. பின்னர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தின் போது மராட்டியரிடம் சில வருடங்கள் இருந்து, பின்னர் தெளத்கான் என்னும் டில்லி சுல்தானிடம் போய்ப் பின்னர் ஆங்கிலேயர் திப்பு சுல்தானின் மரணத்திற்குப்பின்னர் இந்தக் கோட்டைக் கோயிலை 1760-ம் ஆண்டு எடுத்துக் கொண்டார்கள். பல நூற்றாண்டுகள் இந்தக் கோயிலில் மூர்த்தப் பிரதிஷ்டை இல்லாமலும் வழிபாடுகள் நடைபெறாமலுமே இருந்து வந்தது.

மிக மிக சமீபத்தில் தான் இந்தக் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டு திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேஹமும் முடிந்தது. இந்தக் கோட்டையைச்சுற்றிலும் இருபத்து ஐந்து அடி ஆழத்தில் உள்ள அகழி நீர் நிறைந்து காணப்படுகிறது. அகழியின் மேலே இருந்து கீழே இறங்கச் சிலபடிகளைக் கடந்தே கோயிலுக்குள் நுழையவேண்டும். கோயிலின் கல்யாணமண்டபம் வித்தியாசமான சிற்பங்களோடு கலையம்சமும், தெய்வீகமும் பொருந்திக் காட்சி அளிக்கிறது. இதிலுள்ள கிளிகளின் சிற்பங்கள், வெண்ணைத் தாழிக் கிருஷ்ணர், சரபர் போன்றவர்களின் சிற்பங்களின் அழகை இன்று முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். படம் எடுத்தால் துரத்துகிறார்கள். மாலைவேளையில் சென்றதால் கூட்டம் வேறே. இந்தக் கல்யாண மண்டபத்துத் தூண்களிலே எண்கள் பொறித்துள்ளதைக் காணும்போது வியப்பாய் இருந்தது. நம்ம சுற்றுலா நடத்துநர் இந்த மண்டபத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல ஆங்கிலேயத் தளபதி ஒருவர் மிகவும் முயன்றாராம். தூண்கள் வரிசை மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே எண்களையும் பொறித்து வைத்தாராம். கப்பல் ஒன்றையும் வரவழைத்திருக்கிறார் மண்டபத்தை எடுத்துச் செல்ல. ஆனால் அந்தக் கப்பல் ஐரோப்பாவில் இருந்து வரும் வழியிலேயே முழுகி விட்டதாம். அதன் பின்னரே அவர் திட்டத்தைக் கைவிட்டார். நமக்குத் தெரியறதில்லை நம்ம ஊர்ச் சிற்பங்களின் அருமை, பெருமை எல்லாம். எங்கிருந்தோ வரும் ஆங்கிலேயர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் தெரியுது.

மூலஸ்தானத்தின் ருத்ராக்ஷப் பந்தல் மிக அழகாய்க் காட்சி அளிக்கிறது. அந்த ருத்ராக்ஷப் பந்தலின் கீழேயே ஜலகண்டேஸ்வரர் அருள் பாலிக்கிறார். உற்சவர் காலசம்ஹாரமூர்த்தி. திருக்கடையூரில் இருப்பவரே இங்கே உற்சவராகக் காணப்படுகிறார். இந்தக் கோயிலிலும் சஷ்டி அப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம், ஆயுஷ்ஹோமம், திருமணங்கள் போன்றவையும் நடந்து வருவதாயும், ஜலகண்டேஸ்வரருக்கு ருத்ராபிஷேஹம் செய்து வைப்பதாய் பக்தர்கள் நேர்ந்து கொள்வதாயும் தெரிய வருகிறது. பெண்கள் திருமாங்கல்யக் காணிக்கைகளும் செலுத்துவதுண்டு எனத் தகவல் பலகை தெரிவிக்கிறது. பிராகாராத்தில் உள்ள கிணற்று நீர் கங்கையின் நீராகவே கருதப் படுகிறது. அருகேயே கங்காபாலாறு ஈஸ்வரர் என்னும் பெயரில் ஒரு லிங்கமும் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. கிணற்றுக்குள் இந்த லிங்கம் இருந்ததாகவும், வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் கூறுகின்றனர். லிங்கத்தின் பின்னாலேயே பைரவரும் காணப்படுகிறார். கங்கையான கிணறு, லிங்கம், பைரவர் மூவரும் ஒரே இடத்தில் காட்சி கொடுப்பதால் வேலூர் காசி என்றும் இந்த ஊரைச் சொல்லுகின்றனர்.

Saturday, December 12, 2009

தங்கக் கோயில் பார்க்க வாங்க!

பறவைப்பார்வையில் தங்கக் கோயில் அமைப்பு.


தங்கக் கோயிலை எழுப்பியதற்கு ஸ்ரீநாராயணி அம்மா சொல்லும் காரணம் என்னவெனில் பொதுவாக மக்களை ஆன்மீகம், பக்தி மார்க்கத்தில் திருப்ப இம்மாதிரியான பிரம்மாண்டமான தங்கக் கோயில் என்றால் உடனே வருவார்கள் என்பதாலும், அப்படி வரும் மக்கள் உள்ளே குடி கொண்டிருக்கும் அம்பிகையைத் தரிசிப்பதுடன், அங்கே எழுதப் பட்டிருக்கும் தத்துவார்த்தமான கருத்துக்களையும் படித்து மனதில் ஏற்றிக் கொள்வார்கள் என்பதாலேயே எழுப்பப் பட்டதாய்ச் சொல்லுகிறார். பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில் தங்கத்தால் கட்டப்பட்டது என்பார்கள். மற்றபடி சிதம்பரம், மதுரை, திருப்பதி , பழநி போன்ற கோயிலின் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தகடுகள் வேய்ந்தவை. இதில் சிதம்பரம் மட்டும் கூரையே தங்கத்தால் ஆனது. ஆனால் இந்தக் கோயிலோ ஐந்தாயிரம் சதுர அடியில் முழுதும் தங்கத்தால் இழைக்கப் பட்டுள்ளது. 1,500 கிலோவுக்கு மேல் தங்கமும், 350 கோடி ரூபாய் செலவிலும் கட்டப் பட்டுள்ள இந்தக் கோயிலின் உள்ளே நுழைவோமா??

உள்ளே நுழையும்போதே இலவச தரிசனம் என்றால் வலப்பக்கம் உள்ள நட்சத்திரப் பாதையில் செல்லவேண்டும் என்றார்கள். நடக்க முடியாதவர்களுக்கு என சக்கர நாற்காலி இருப்பதாகவும் தேவையா என்றும் கேட்டனர். என் கணவர் வழக்கம்போல் என்னைப் பார்க்க, நான் அவருக்கு முன்னால் நடையைக் கட்டினேன். சரியாக மதியம் 3-15 ஆகி இருந்தது. நடக்க ஆரம்பித்தோம். பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம், கைப்பைகள் கூடத் தடை செய்யப் பட்டுள்ளது. ஆகையால் எல்லாவற்றையும் பத்திரமாய் வண்டியிலேயே வைத்துவிட்டுச் சென்றோம். தின்பண்டங்கள் வெளியே வாங்கிச் செல்லுபவை உள்ளே அநுமதி கிடையாது. உள்ளே நுழைந்து சிறிது தூரம் நடந்ததும் நாலு, ஐந்து கொட்டகை போட்ட அமருமிடங்கள் திருப்பதியில் ஏற்படுத்தி இருப்பது போன்ற கூண்டு போன்ற அமைப்புகள் வருகின்றன. அவற்றில் முதலாவதில் ஏற்கெனவே மக்கள் நிரம்பி இருந்தனர். காலியாய் இருக்கும் இடங்களில் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பெரிய கூடாரம் நிரம்பியது. திறக்க அரைமணி ஆகும் என்று சிலரும், ஒரு மணி நேரம் ஆகலாம் என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்க அறிவிப்புப் பலகை குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிடும் என்றும், கூட்டத்தைப் பொறுத்து பத்து நிமிஷங்களில் கூடத் திறக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப் பட்டு எங்கும், எதிலும் ஸ்ரீநாராயணி அம்மா தெரிந்தார். அங்கே ஒவ்வொரு கூடார அறைக்கும் வெளியே காபி, டீ விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தால் அநுமதிக்கப் பட்டவர்களே அங்கு விற்க முடியும். கோயில் நிர்வாகமே வெளியே காண்டீன் ஒன்றையும் நடத்துவதாயும் சொன்னார்கள். காபி வாங்கிக் கொண்டோம். நன்றாகவே இருந்தது, சுவையும், விலையும். அரை மணி நேரம் சென்றதும் கதவு திறக்கப் பட்டது. நாங்கள் செல்ல முடியுமா என யோசிப்பதற்குள் அங்கே உள்ளே நுழைந்த பணியாளர் அனைவரையும் அநுமதித்தார். கிட்டத் தட்ட ஐநூறு பேர் இருந்தோம் அந்த அறையில். அனைவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். நீண்ட தாழ்வாரங்கள். இருபக்கமும் கிரானைட் பதிக்கப் பட்ட அமரும் மேடைகள் நீளமாய்க் கூடவே வந்தன. கால் வலித்தால் அவற்றில் அமர்ந்து செல்லலாம். * குறியிள்ள பாதை அதே போல் வளைந்து சென்றது.

ஒவ்வொரு திருப்பத்திலும் கோயில் பணியாளர்கள் க்ளூகோஸ் பிஸ்கட், மாரி பிஸ்கட், பால் போன்றவை விற்றனர். தாழ்வாரங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டால் காபி, டீ அநுமதி இல்லை. அங்கேயே ஒவ்வொரு திருப்பங்களிலும் கழிப்பறைகளும் இருந்தன என்பதற்கான அடையாளக்குறிகளையும் காண முடிந்தது. பெரிய பெரிய புல் தரைகள். அவற்றில் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, மாரியம்மன் போன்ற கடவுளர் சிலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய கரும்பலகைகளில் புராணங்கள், இதிஹாசங்கள், ஸ்ரீநாராயணி அம்மாவின் பேச்சுக்களில் இருந்து எடுக்கப் பட்ட பொன்மொழிகள் எழுதப் பட்டிருந்தன. ஸ்வாமியைக் கிட்ட இருந்து தரிசிக்கவேண்டுமானால் ஐநூறு ரூபாய் கொடுத்துச் சீட்டு வாங்க வேண்டும். கொஞ்சம் தள்ளி இருந்து பார்க்க இருநூறு ரூபாய்க் கட்டணம். நாங்கள் இலவச தரிசனம் என்பதால் தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளி இருந்தே பார்க்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.

செல்லும்போதே ஒவ்வொரு கோணத்திலும் கோயில் கோபுரத்தின் தரிசனம் கிடைக்கிறது. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படியான அமைப்பில் கட்டப் பட்டிருப்பதும், கட்டட அமைப்பும், நிர்வாகத்தின் நேர்த்தியும் பிரமிக்க வைத்தது. செல்லும் வழியெல்லாம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. மாலை நேரமாகையால் வெயில் அதிகம் இல்லை. ஐயாயிரத்துக்கும் குறையாத மரங்கள் பராமரிப்பில் இருக்குமென நினைக்கிறேன். காடு வளம் பாதுகாக்கப் படுவது மகிழ்ச்சியைத் தந்தாலும் இவ்வளவு பெரிய இடமா? இவ்வளவு செலவில் கோயிலா என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் வேண்டாத பேச்சுக்கள் பேசுவதும் தடை செய்யப் பட்டுள்ளது. ஆங்காங்கே நவீன விளக்குகள் பல இருந்தாலும் பழமையைப் போற்றும் விதமாகவா அல்லது அலங்காரத்துக்கா தெரியலை, மாட விளக்குகளும், கல்லினால் ஆனவை பொருத்தப் பட்டுள்ளன.

கோயில் சுற்றிலும் செயற்கையாக உருவாக்கப் பட்ட தாமரை மலர்கள் நிறைந்த அழகான பொய்கையால் சூழப் பட்டுள்ளது. மாலைக்கதிரவனின் கதிர்கள் கோயில் கோபுரத்தில் விழுந்து அவற்றின் பிரகாசம் ஏற்கெனவே கண்ணைக் கூச வைத்துக் கொண்டிருந்தது. அந்த நிழல் அப்படியே பொய்கையிலும் தெரிந்து இரண்டும் ஒன்றோ என்னும் மாயாஜாலத் தோற்றமும் ஏற்பட்டு மனதை மயங்க அடிக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு அலங்காரத்தில் இன்னும் பிரகாசமாய் இருக்கும் என்றும் தெரிய வந்தது. கூட்டம் அதிகம் இருக்கும் என்றனர். நடக்க முடியாது என்றும் சொன்னார்கள். கூட்டம் அதிகம் இல்லை. ஆயிரம் பேர் இருந்தால் அதிகம். அரைமணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் நடந்து கொண்டே இருந்தோம். ஆனால் நடப்பது கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. அதுவும் சிறு குழந்தைகள் தூக்கிக்கவும், முடியாது, நடக்கவும் முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகள் ரொம்பச் சிரமப் பட்டு அழுதனர். மற்றச் சின்னஞ்சிறு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடக்கும் பெண்களும், ஆண்களும் சிரமப்படவே செய்தனர். ஆனாலும் சிரமத்தையும் பொறுத்துக் கொண்டே அனைவரும் வந்தனர். ஆங்காங்கே தங்கி வந்தவர் பலர். நாங்கள் தங்கிட்டு எழுந்தால் மறுபடி நடக்கக் கஷ்டமாயிடும்னு நடந்துட்டே இருந்தோம். கிட்டத் தட்ட நாலு மணி ஆகும்போது சந்நிதிக்குக் கிட்டே வந்தோம்.

உள்ளே நுழையும்போதே நீர் வீழ்ச்சி போல் ஏற்படுத்தப் பட்ட அமைப்புகள், எதிரே ஒரு மண்டபம் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் முழுதும் தங்கச்சுவராலேயே கட்டப் பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த கோயிலும், எதிரே நாராயணி அம்மனின் சந்நிதியும். அலங்கார வளைவுகள், மண்டபங்கள் முகப்புகள் எல்லாவற்றிற்கும் தங்கப் பெயிண்ட். மனிதனின் பதினெட்டுக் குணங்களைச் சுட்டும் வகையில் பதினெட்டு வாயில்கள் என்கிறார்கள். மூலஸ்தானத்தில் தங்கத் தாமரையில், வைரம், வைடூரியம், முத்து, பவளம் ஆகியவற்றால் ஆன நகைகள் அணிந்தவண்ணம், தங்கக் கவசத்துடனும், தங்கக் கிரீடத்துடனும் ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள். மகாமண்டபம் தங்கத்தால் ஜொலிக்கிறது. அங்கே நின்றுகொண்டு தான் இலவச தரிசனம் செய்ய முடியும். தரிசனம் செய்து கொண்டோம். சீட்டு வாங்கியவங்களுக்கு மட்டுமே குங்குமப் பிரசாதம் என்பது சற்றல்ல ரொம்பவே நெருடல். ஆனால் வெளியே சென்றதும் கோயில் மடப்பள்ளியில் செய்யப் பட்ட பிரசாதம் வழங்குவார்கள் என்றும் இது அனைவருக்கும் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். தினமும் சாம்பார் சாதமே கொடுப்பதாகவும் சொன்னார்கள். கோயிலைச் சுற்றி உள்ள பொய்கையின் அகலம் பத்து அடி, ஆழமும் பத்து அடிக்கு இருக்கலாம். அங்கே காசுகள் போடவேண்டாம் என்ற அறிவிப்புப் பலகை உள்ளது. நம் மக்கள் கையில் கிடைக்கும் காசுகளைத் தூக்கி வீசிக் கொண்டிருந்தனர். நாங்க தான் கைப்பையே கொண்டு போகலையே. ஜாலியாக் கை வீசி நடந்தோம், அவரோட சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அநுமதிப்பலகையில் எழுதப் பட்டிருப்பதை மீறிக் காசு எதையும் போடவில்லை. திரும்ப வெளியே செல்ல நடக்க ஆரம்பித்தோம்.

செல்லும் வழியில் கோயில் நிர்வாகம் நடத்தும் கடைகள் வருகின்றன. நம்ம மாநகரக் காவல் தடுப்பு ஆங்காங்கே ஏற்படுத்தி இருப்பது போல் கடைகள் இருக்குமிடங்களில் இவங்களும் தடுப்புகள் ஏற்படுத்திக் கடைக்கு உள்ளே நுழைந்தே வெளியே வரும்படிக்குச் செய்திருக்கின்றனர். அவங்க தட்டியிலே நுழைந்தால் நாம கோலத்திலே நுழைய மாட்டோமா? கடைக்குள்ளே நுழைந்துட்டு வெறும் கையை வீசிக் கொண்டு வந்துட்டோம். ஆங்காங்கே நன்கொடைகள் வசூலிக்கும் கவுண்டர்கள். எதுவும் கொடுக்கணும்னு தோணலை. வந்துட்டோம். ஐந்து முப்பதுக்கு வெளியே வந்தோம், சாம்பார் சாதம் வாங்க ஒரே அடிதடி. அடச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் வந்து இன்னொரு காபி வாங்கிச் சாப்பிட்டுட்டு மத்தவங்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். பக்தி???? ம்ஹும்! பிக்னிக் போய் வந்த உணர்வு! இது எங்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

ஆனால் தனி மனிதன் ஒருவரால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயில் மனித சக்தியின் அசாதாரண ஆற்றலையும் வேலை வாங்கும் திறமையையும் எண்ணி வியக்க வைக்கிறது. முயன்றால் முடியாதது இல்லை என்பதும், வானம் கூட எல்லை இல்லை, அதையும் தாண்டி பயணிக்க முடியும் என்பதும் விளங்குகிறது. பொது நிர்வாகங்களில் இத்தகையதொரு ஆற்றல், திறமை, சுத்தம், கட்டுப்பாடு ஆகியவை பரிமளிக்க முடிந்தால் என்ற எண்ணமும், ஆசையும் ஏற்பட்டதையும் தவிர்க்கமுடியவில்லை. அப்படி ஒருநாள் வந்தால் அதுவே இந்நாட்டின் பொன்னாள். உண்மையான சுதந்திரம் கிட்டியது என்னலாம்.

Friday, December 11, 2009

எங்கெங்கு காணினும் தங்கமடா! ஸ்ரீபுரம்!


நந்தகோபால் என்பவருக்கும், ஜோதி அம்மா என்பவருக்கும் ஜனவரி, 1976ம் ஆண்டு பிறந்த குழந்தையே இப்போது சக்தி அம்மா என அனைவராலும் அழைக்கப் படும் நாராயணி அம்மா என்பவர். பிறந்ததில் இருந்தே குழந்தை தனித்தன்மை வாய்ந்ததாய் இருந்ததாகச் சொல்கின்றனர். சங்கு சக்ரம் மார்பில் இருபக்கமும் இருக்கிறது என்றும் சொல்கின்றனர். நெற்றியிலும் திருமண்காப்பு இருந்ததாம். குழந்தையும் பிறந்ததில் இருந்தே ஆன்மீகத்திலும், பக்தியிலும் ஈடுபாடு கொண்டிருந்தது. பஜனைகள், வழிபாடுகளே அதன் நித்திய விளையாட்டுகள். பள்ளிக்கு அனுப்பினார்கள். ஆனாலும் பெரும்பாலான நேரத்தைக் கோயிலிலேயே செலவு செய்தது இந்தக் குழந்தை. 1992-ம் வருடம் மே மாதம் எட்டாம் தேதி, இவர் தம்மை ஸ்ரீநாராயணி அம்மன் என அறிவித்துக் கொண்டார். தாம் உலகில் திரு அவதாரம் செய்ததின் காரணமும் நாராயணி அம்மனாகத் தாம் உலக மக்களுக்குத் தொண்டு செய்யப் போவதையும் அறிவித்தார். அவரைக் கேள்வி கேட்ட ஒரு பெண்மணிக்கு இவர் தம்முடைய சுயரூபத்தை நாராயணி அம்மன் உருவில் காட்டியதாகச் சொல்லப் படுகிறது. பெரியதொரு சிங்கத்தின் மேல் ஆரோஹணித்த அம்மனைப் பார்த்து அந்தப் பெண்மணி வியந்ததாகவும் சொல்லப்படுகிறது. தர்மம் அழிந்து அதர்மம் அதிகமாகிக் கொண்டு செல்வதால் தாம் அவதாரம் எடுக்க உரிய நேரம் வந்துவிட்டதாகவும், அதனாலேயே தாம் இவ்வுலகில் பிறந்ததாகவும், தாம் நாராயணியாகவே பிறந்திருப்பதாகவும், தம்முடைய பெயர் இனிமேல் சக்தி அம்மா என்றும் அறிவித்தார்.

மனித வாழ்வை மேம்படுத்தவும், வாழ்க்கை நெறிமுறைகளைச் செம்மைப் படுத்தி மனிதரை ஒழுங்கான சீரான நெறியில் வாழ வைப்பதும், உண்மையை வெல்ல வைப்பதும், மக்களை மேன்மேலும் அன்புடனும், சகிப்புத் தன்மை நிறைந்தவர்களாய் மாற்றுவதுமே தம் முக்கியவேலை என்றும், அறிவித்தார். இவர் ஏற்படுத்தி இருக்கும் நாராயணி பீடம் இருக்கும் இடம் திருமலைக்கொடி அல்லது மலைக்கொடி என அழைக்கப் படும் ஒரு கிராமத்தின் அருகில் உள்ளது. வேலூருக்கு அருகே இருக்கும் கைலாசகிரி என்னும் மலை அடிவாரத்தில் உள்ள இந்த ஊர் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து கண்ணுக்கு அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்து உள்ளது. இந்த ஊர் இருக்கும் அமைப்பு மிகவும் வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. திருப்பதி, திருவண்ணாமலை, திருமலைக்கொடி ஆகிய மூன்று ஊர்களுக்கும் நேராக ஒரு கோடு போட்டால் மூன்று நகரங்களும் ஒரு முக்கோணத்தை உருவாக்குவது புரியும். இந்தத் திருமலைக்கொடியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல சித்தர்களும், ரிஷி, முனிவர்களும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்கின்றனர்.

இந்த ஊரில் ஏற்கெனவே ஒரு நாராயணி அம்மன் கோயில் இருந்து வந்துள்ளது. அந்தக் கோயிலில் அர்ச்சகராய் இருந்து வந்த ஸ்ரீநாராயணி அம்மா ஸ்ரீநாராயணியின் பெருமையை அனைவரும் அறியும் வண்ணம் கோயிலைப் பெரிது படுத்தி பொன்னால் இழைக்க விரும்பினார். ஆனால் பழைய கோயிலைப் புதுப்பித்தாலும் அவர் நினைத்த மாதிரிக் கட்ட முடியவில்லை. ஆகவே கோயிலுக்கு எதிரேயே அவருக்குக் கிடைத்த நூறு ஏக்கர் நிலத்தில் ஒரு அற்புதமான கோயிலை உருவாக்கினார். நூறு ஏக்கரில் கோயில் நட்டநடுவே மிக மிக அழகான ஒரு பொய்கைக்கு நடுவே உருவாக்கப் பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழி நட்சத்திர வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சுற்றிலும் இயற்கையான சூழலில் அந்த நட்சத்திரப் பாதையில் பல மணி நேரம் நடந்து சென்றே பிரதானக் கோயிலை அடையவேண்டும். செல்லும் வழியெல்லாம் அழகான பூங்காக்களும், அதில் புராணங்கள், இதிகாசங்களில் இருந்தும், ஸ்ரீநாராயணி அம்மா சொன்ன பொன்மொழிகளும் பலகைகளில் எழுதப் பட்டுள்ளன.

புனிதமான ஸ்ரீசக்ரத்தை நினைவு கூரும் வகையில் ஏற்படுத்தப் பட்ட இந்த நட்சத்திரப்பாதையில் செல்லுபவர்களுக்கு தெய்வீக சக்தியானது பூமியிலிருந்து ஈர்த்து அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும் என்ற எண்ணமே இத்தகையதொரு பாதையை உருவாக்கக் காரணம் என்று ஸ்ரீநாராயணி அம்மா கூறுகிறார். செல்லும் வழியெங்கும் ராமாயணம், மஹாபாரதம், வேதங்கள் போன்றவற்றிலிருந்து பொறுக்கி எடுத்த வசனங்களைப் படிப்பவர்களுக்கு அவர்கள் உலகில் தோன்றியதன் உண்மையான காரணத்தைப் புரிய வைத்து இயற்கையோடு ஒன்றிய தெய்வீக வாழ்வு வாழத் தூண்டும் என்கிறார்.

கோயில் முழுதும் கட்டுவதற்கும், கட்டுமான வேலைகளுக்கும் ஆலோசனைகள் சொன்னது முழுக்க முழுக்க ஸ்ரீநாராயணி அம்மாவே என்று சொல்கின்றனர். அவருக்குக் கிடைத்திருக்கும் தெய்வீக சக்தியானது இப்படி ஒரு அருளை அவருக்கு வாரி வழங்கியதாகவும், அதன் மூலம் தெய்வீகக் காட்சிகளைக் கண்டு உணர்ந்து அவர் சொன்னபடியே கோயில் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். கோயில் கட்ட ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஊர் மக்கள் கூட இப்படி ஒரு கோயில் கட்டப் படுகிறது என்பதை அறியமாட்டார்கள். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களும் தாங்கள் அறிந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை என்று சொல்கின்றனர். முக்கியக் கோயில் முழுக்க முழுக்கத் தங்கத்தாலேயே எழுப்பப் பட்டது. ஒன்பதில் இருந்து பதினைந்து வரையில் ஆனதங்கத் தகடுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் ஏற்படுத்தப் பட்டத் தங்க மடிப்புகளால் ஆன தங்கத் தகடுகள் ஆகும், அவையே இந்தக் கோயிலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றிலேயே சிற்பங்கள், அலங்கரிக்கப் பட்ட தூண்கள் என உள்ளன. எங்கெங்கு காணினும் தங்கமடா!

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தங்குமிடம், வண்டிகள் நிறுத்துமிடம், நடக்கமுடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சக்கர நாற்காலிகள், குடிநீர், பால், பிஸ்கட் விற்கும் கடைகள், சுத்தமாகப் பராமரிக்கப் படும் கழிப்பறைகள், நட்சத்திரப் பாதையில் நடந்து செல்லும்போது ஆங்காங்கே அமர்ந்து செல்ல வசதிகள். காபி, டீ கடைகள், பொதுமக்கள் தொடர்பு ஆகியன உள்ளன. இது 2007-ம்வருஷம் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி பொதுமக்கள் தரிசனத்துக்காகத் திறக்கப் பட்டது. அப்போதிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருகின்றனர். இந்தக் கோயில் இங்கே வந்ததும் வேலூருக்குச் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் பலவிதமான முன்னேற்றங்கள் வேலூருக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இனி கோயிலைச் சுற்றி என் பார்வை நாளை பார்ப்போமா?

Sunday, December 6, 2009

என் பயணங்களில் - திருப்புட்குழியும் தன்வந்திரி பீடமும்!

ராவணன் சீதையை அபகரித்துச் செல்லும் வழியில் ஜடாயு ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்கப் போராடியது நினைவிருக்கலாம். அப்போது ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி அதைக் கீழே வீழ்த்திவிட்டுச் சென்றுவிடுகிறான். சிறகுகளை இழந்த ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டு மரணத் தருவாயில் இருக்கும்போது ஸ்ரீராமர் சீதையைத் தேடிக் கொண்டு அவ்வழியே வந்தார். அவரிடம் ராவணனைப் பற்றிய விஷயத்தைச் சொன்ன ஜடாயு, தான் இறக்கப் போவதாயும் தனக்கு ஈமக்கிரியைகளை ஸ்ரீராமரே செய்யவேண்டும் எனவும் சொல்லிவிட்டு உயிரை விட்டது. உயிரை விடும் முன்னர் பகவத் தரிசனம் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்தித்த ஜடாயுவுக்கு முன்னால் மஹாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்த் தோற்றம் தந்தார்.

ஜடாயுவைத் தன் வலப்பக்கம் வைத்தித் தீ மூட்டி ஈமக்கிரியைகளைச் செய்தார் பகவான். இதனால் ஏற்பட்ட வெப்பத்தை ஸ்ரீதேவியால் தாங்க முடியாமல் அவள் இடப்புறம் சென்றுவிட, பூமாதேவி பொறுமையின் சிகரமாய் இடப்புறம் இருந்து வலப்புறம் மாறிக் கொள்கின்றாள். இந்தக் கோயிலில் தாயார் சந்நிதியும் பெருமாள் சந்நிதிக்கு வலப்புறமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆண்டால் இடப்பக்கமாய்க் காட்சி தருகிறாள். ஜடாயுவின் வேண்டுகோளின்படி ஸ்ரீராமர் தன் அம்பினால் தீர்த்தம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தத் தீர்த்தத்திலேயே ஈமக்கிரியைகள் செய்தார். தீர்த்தம் ஜடாயுவின் பெயராலேயே வழங்கப் படுகிறது. மரியாதைக்குரிய பறவையான ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்த தலம் என்பதால் திருப்புட்குழி என்னும் பெயரால் இந்தத் தலம் வழங்கப் படுகிறது. மூலவரின் மேல் உள்ள விமானம் விஜய வீரகோட்டி விமானம் என்று வழங்கப் படுகிறது.

தாயாருக்கு வறுத்த பயிறை முளைக்க வைக்கும் அற்புத சக்தி உண்டு எனச் சொல்லுகின்றனர். மரகதவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் விளங்கும் தாயாருக்கு வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பெண்கள், ஜடாயு தீர்த்ததில் நீராடி, இங்குள்ள மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை வாங்கித் தங்கள் மடியில் கட்டிக் கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்த உடனே அந்தப் பயிறு முளைத்திருக்கவேண்டும். அப்போது கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம், நம்பிக்கை. ஸ்ரீராமாநுஜரின் குருவான யாதவப்ரகாசர் இங்கு தான் வசித்தார் எனச் சொல்கின்றனர். இத்தலத்தில் இருக்கும் கல் குதிரை வாகனம் மிகவும் அதிசயமான ஒன்று. இதன் உறுப்புகள் உண்மையான உயிருள்ள குதிரைகளுக்கு அசைவது போலவே அசையும் என்கின்றனர். நாங்கள் போகும்போது மூடி இருந்தது. இதைச் செய்து கொடுத்த சிற்பி இது போல் இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்துவிட்டு உயிரை விட்டு விட்டாராம். இவரது உறுதியைப் பாராட்டும் விதமாய் பெருமாள் வருடா வருடம் நடக்கும் திருவிழாவின் எட்டாம் நாளன்று சிற்பியின் பெயரைக் கொண்ட வீதிக்கு எழுந்தருளுவதாய்ச் சொல்கின்றனர்.

அடுத்து நாங்கள் சென்றது வாலாஜாபேட்டையில் மேல்புதுப்பேட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ முரளீதரஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி ஆரோக்யபீடத்திற்கு. இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் கட்டிடவேலைகள் நடந்தாலும் சந்நிதி இருப்பதால் போய்த் தரிசித்தோம். எல்லாச் சந்நிதிகளிலும் ஒருவரோ, இருவரோ அர்ச்சகர்கள் இருந்தனர். போகும் வழியில் நல்ல வெயில். ஓரமாய்ச் செல்லவேண்டி இருந்தது. உள்ளே போனால் ஒரு பெரிய கூடத்தில் தன்வந்திரி ஹோமம் தினசரி இருபத்து நாலுமணிநேரமும் நடக்கிறது எனச் சொன்னார்கள். அங்கே சென்றோம். பெரிய ஹோமகுண்டத்தில் மருந்து மூலிகைகள் மணக்க ஹோமம் நடந்து கொண்டிருந்தது. இஷ்டப் பட்டால் அங்கேயே விற்கும் மூலிகைகளை வாங்கி நாமும் நம் கையாலேயே ஹோமத்தில் இடலாம். மூலிகைகள் விலை யானைவிலைமட்டுமே. அதிகம் இல்லை. ஆகையால் நாங்க வாங்கலை.

இந்த ஆஸ்ரமம் அல்லது கோயில் அல்லது ஆரோக்ய பீடம் தன்வந்திரிக்காக தனி மனிதர் ஒருவரால் ஏற்படுத்தப் பட்டது. ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிகள் கோயில் ஒன்றின் குருக்கள்/அர்ச்சகராக இருந்துவந்தபோது அவரின் தாய் கடுமையான புற்று நோயால் அவதிப்பட, தந்தைக்கோ நீரிழிவு நோய். தாயை இழந்த ஸ்வாமிகள் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கியும், அவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக்காக்கவும் ஏற்படுத்தியதே இந்த ஆரோக்யபீடம் என்கின்றனர். தன்வந்திரி ஹோமம் நடக்கும் இடமெல்லாம் தன்வந்திரியின் சிலை எடுத்துச் செல்லப் படுகிறது என்கின்றனர். தன்வந்திரிக்கெனத் தனி சந்நிதியும் உள்ளது. மற்ற தெய்வங்கள் பரிவார தேவதைகளாய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. மூன்று அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப் பட்டுவருவதாய்ச் சொல்கின்றனர். இதற்கடுத்து வேலூர் சென்று சாப்பாட்டுக்கு வண்டி நிறுத்தப்பட்டது. வேலூரில் சாப்பாட்டுக்குப் பின்னர் நாங்கள் சென்றது ஸ்ரீபுரம் என அழைக்கப் படும் பொற்கோயில்.