Monday, June 30, 2008

மன ஆறுதலுக்கு ஒரு மொக்கை!!!!!

என்னமோ தெரியலை, இந்த ப்ளாகர் இன்னும் என் கிட்டே ஓர வஞ்சனையோடத் தான் இருக்கு. :P அதிலேயே மீண்டும் ஒரு பதிவு திறக்கலாம்னு போனேன். எல்லாம் இந்த சிஷ்யகேடிங்கள் எல்லாம் மொக்கை போட அலையுதே, அதுக்காகத் தான். அவங்க விருப்பத்தையும் நிறைவேற்றினாப்போல இருக்கும், நாமளும், அங்கே, இங்கேனு அலையாமல் ஒரே இடத்திலே மொக்கையும் போட்டுக்கலாம், பக்கத்திலேயே வேணும்கிற ஆன்மீகமோ, தத்துவமோ, எதுவேணாலும் எழுதிக்கலாம்னு பார்த்தேன். ஆனால், இந்த ப்ளாகர் கடைசி வரை ஒத்துக்கவே இல்லை. குமரனுக்கோ, அல்லது 13-ம் ஆழ்வாருக்கோ மட்டும்தான் இஷ்டத்துக்கு ஏத்திக்கிற உரிமை இருக்குனு சொல்லிடுச்சு! என்னடானு யோசிச்சேன், புது வீடு என்னமோ இருக்கு, ஆனால் பூமிதானமா வாங்கினது. வேறொருத்தர் பரிசாக் கொடுத்தது. அங்கே போய் மொக்கை போடக் கஷ்டமா இருக்கே?? என்னத்தைச் சொல்றது? மொக்கை எழுதச் சொல்லி நாளுக்கு நாள் சிஷ்யகேடிங்க விண்ணப்ப மனு அதிகம் ஆயிட்டே இருக்கே???

எப்படியாவது அவங்க ஆவலை நிறைவேத்தணும்னு ஆரம்பிச்சது தான் இது. அதே சமயம் நடு நடுவிலே கொஞ்சம் விஷயமும் தானம் செய்யணுமே??? ஊரெல்லாம் சுத்திட்டு அதைப் பத்தி எழுதாமல் இருக்கிறதும் சரியாப் படலை. சிலருக்கு போரடிச்சாலும், ஊர் சுத்தும்போது நடக்கும் விஷயங்களின் சுவைக்கு ஈடு, இணை இல்லை அல்லவா? அதான் தனிக் கடை போட்டுடலாம்னு போட்டாச்சு. ஆனால் யாரையும் கூப்பிடலை, பின்னூட்டத்தை வச்சு திவா வந்துட்டுப் போயிருக்கார். அம்பி கண்டு பிடிச்சாச்சு, கேஆரெஸ்ஸும் கண்டு பிடிச்சாச்சு, ஆனால் நான் கூப்பிடணும்னு பார்க்கிறாங்க போலிருக்கு! மெதுவா வரட்டும், யாரும் பின்னூட்டம் கொடுக்கலைனால், ஒருத்தரும் படிக்கலைனு அர்த்தம் இல்லை, அது தெரியும், அதனால் மெதுவா, வந்து பின்னூட்டம் கொடுக்கட்டும்னு இருக்கேன்.

எல்லாம் இப்போ சங்கிலித் தொடர், வளையல் தொடர், நெக்லஸ் தொடரில் பிசியா இருக்காங்க. எல்லாம் முடிஞ்சு வந்து பார்க்கட்டும். பல இடங்களுக்கும் இந்த ஆறு மாசமாப் போயிட்டு வந்தாச்சு, ஆனால் அது பத்தி ஒண்ணும் எழுத முடியலை. நேரம் எப்படிக் கிடைக்குமோ தெரியலை. இப்போ ப்ளாகர் மட்டுமில்லாமல், மீண்டும் இணைய வேதாளமும் முருங்கை மரத்தில், மழைக்காலம் வந்தால் எனக்கு இழுக்குமோ இல்லையோ என் இணையம் இழுக்கும். எப்போ வருமோ தெரியாது. ஆகவே மன ஆறுதலுக்கு ஒரு மொக்கை! அப்பாடா, தலைப்புக்கும், இதுக்கும் ஒருமாதிரி சம்மந்தம் கொண்டு வந்துட்டேன்!!! வர்ட்டாஆஆஆஆ???? நாளைக்கு வரமுடியுமோ, இல்லையோ தெரியலை! :(((( அதுவரை எஞ்சாய்!!!!!!!!!

Thursday, June 26, 2008

சித்திரம் பேசுதடி!!-எல்லோரா குகைகள் தொடர் 5


ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது, அஜந்தா பற்றி எழுதி. வேலை அதிகம், மேலும் முன்கூட்டி எழுதி வச்சுக்கவும் முடிவதில்லை. அப்போ, அப்போ நேரம் கிடைக்கும்போது எழுதுவதால் இது தள்ளிப் போட்டாச்சு. தாமதத்திற்கு மன்னிக்கவும். இனி அடுத்த குகைக்குப் போவோமா???
************************************************************************************************************

. புத்த மதக் குகைகள் மொத்தம் 12 என்று சொல்லப் படுகின்றது. பனிரண்டும் இருந்தாலும் வழிகாட்டிகள் காட்டுவது முக்கியமான மூன்று அல்லது நான்கு குகைகள் மட்டுமே. மற்றவை சிதிலமடைந்து வருகிறபடியால் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகத்தரத்துக்கு மேற்பட்ட ஒப்பற்ற அமைப்புகளுடன் கூடிய இந்தக் குகைக்கோயில்கள் பாதுகாக்கப் பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். நம்முடைய நாகரீகமும், கலாசாரமும், ஆடை, அலங்காரமும், கட்டிடக் கலைத் திறமையும் இந்தக் குகைக்கோயில்களின் மூலம் நன்கு வெளிப்படுகின்றது. வெறும் உளியும், சுத்தியும் வைத்துக் கொண்டே, இவ்வளவு திறமையாக யோசித்து அமைத்திருப்பது இந்தியர்களின் கட்டிடக் கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.

எட்டாவது குகையின் புனிதக் கோயில் பின்பக்கத்துச் சுவற்றில் இருந்து சற்றே தனித்துக் காணப்படும் ஒரே மடாலயம் ஆக உள்ளது.வட்டவடிவமான பாதையுடன் கூடிய இந்தக் குகையின் மூன்று தங்கும் அறைகளும், மற்றவை முடிக்கப்படாமலும் காண்கின்றோம். அடுத்துள்ள ஒன்பதாவது குகைக்கு மேல்தளம் இருக்கின்றது. என்ன ஆச்சரியம்?? அந்தத் தளத்தில் பால்கனியும் இருக்கு!!!! மேலும் தேவதையான தாரா, பக்தர்களைப் பாம்பு, கத்தி, யானை, நெருப்பு, மற்றும் கடல்புயலினால் ஏற்பட்ட கப்பல் சேதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் காட்சியை முன்பக்கத்தில் காணலாம். பத்தாவது குகை விஸ்வகர்மா என்ற தேவலோகச் சிற்பியின் பெயரால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இந்த குகை புத்த சைத்தியங்கள் அந்தக் காலங்களில் எவ்வாறு அமைக்கப் பட்டிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. விஸ்வகர்மாவை தேவதைகளின், அல்லது கடவுளரின் சிற்பி என்றே சொல்கின்றனர், என்பதில் இருந்து கலாசாரம் அன்றே எவ்வாறு இருந்திருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. மிகப் பெரிய கூடத்தின் மூன்று பக்கங்களும், மிருகங்களின் சிற்பங்களால் ஏற்படுத்தப்பட்ட அஸ்திவாரத்தின் மேலேயே எழும்பி உள்ளது. மிருகவேட்டை ஆடுவோரின் தோற்றங்கள் உள்ள ஓவியம் மேலே காணப்படுகின்றது. ஒரு பெரிய ஸ்தூபம் பக்கத்துச் சுவரின் நடுவே காணப்படுகின்றது. அழகிய புத்தரின் சிற்பமும் அதில் உள்ளது.
வெராந்தா என்று சொல்லப் படும் இடத்தில் இருந்து படிகள் மேலே செல்கின்றன. மேலேயும் அழகான ஒரு சைத்தியம் காண்கின்றோம். போதி சத்துவர்களும், தெய்வ உருவங்களும் பெண் உதவியாளர்களும் காண்கின்றோம். தாமரைப் பூக்களும், பெண்கள் அணிந்திருக்கும் உடை அமைப்பும், தலை அலங்கார அமைப்பும், போட்டிருக்கும் நகைகளில் இருந்தும் அன்றைய கலாசாரம் புரியவருகின்றது. அதே சமயம் ஆப்பிரிக்க இனத்தவர்கள் போன்ற சிலரும் ஓவியங்களில் காணக் கிடைக்கின்றனர். 11-ம் குகை இரண்டு தளங்கள் உள்ளது. கீழ்த்தளம் முழுக்க இடிந்துவிட்டதாயும், தற்சமயம் காணக்கிடைக்கும் தாழ்தளம் புத்தரின் போதிக்கும் சிற்பத்துடனும், இரண்டு அறைகளுடனும், , நடுத்தளம் முடிவடையாத நிலையிலும் உள்ளது. இதனுள் செல்ல அனுமதி இல்லை, எனினும் இது பின்னாட்களில் இந்துக்களால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஏனெனில் இங்கே துர்கை, விநாயகர் காணப்படுகின்றனர். பனிரண்டாம் குகை மூன்று தளங்கள் உள்ளது.

கீழ்த் தளம் இருபக்கமும் அறைகளுடன், ஒரு மடாலயமாகக் காணப்படுகின்றது. அடுத்து வரும் நடுத்தளமும் கீழ்த்தளம் போன்றே இருக்கின்றது. மேல் தளத்தில் ஏழு வகையான புத்தர் சிலைகள் சுற்றிலும், தெய்வ உருவங்களுடன் காண்கின்றோம். மேலும் உள்ளே சென்றால் பனிரண்டு தேவதைகள், ஈரிதழ்த் தாமரையில் அமர்ந்த கோலத்தின் காணலாம். பதின்மூன்றாம் குகை சாமான்கள் மட்டும் வைக்கும் இடமாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு. இனி நாம் காணப்போவது இந்துமதக் குகைகள்.

Friday, June 13, 2008

சித்திரம் பேசுதடி!! எல்லோரா குகைகள்- தொடர் 4

புத்தர் தன் கைவிரல்களை இவ்வாறு வைத்திருப்பது தான் அவர் போதனை செய்யும் வடிவமாய்க் கருதப் படுகின்றது. இப்போ மெதுவா அடுத்த குகைக்கு வந்துட்டோமே??? அட, இது என்ன இங்கே ஒரு பெரிய வராந்தா மாதிரி இருக்கோ? அதோ, அது தான் குபேரன் சிற்பம் என வழிகாட்டி சொல்லுகின்றாரே??? செல்வத்துக்கு அதிபதியான குபேரனை, "பஞ்சிகா" என்ற பெயரால் அழைத்துள்ளனர். அருகே அவர் மனைவி, "ஹரிதி" என்று அழைக்கப் படுகின்றாள். உள்ளே நுழையும்போது வாயிற்காவலர்கள் போன்ற உருவச் சிலைகளின் அமைப்புடன் விளங்குகின்றது. சுவர்களின் ஒவ்வொரு பக்கமும் புத்தர்களே ஆக்கிரமித்திருப்பதையும் காண முடிகின்றது. விண்ணில் இருந்து தேவர்களும், தேவதைகளும் வந்து புத்தரை ஆசீர்வதிப்பதும், போதிசத்துவர் என்று அழைக்கப் படும் புத்தரின் உருவமும், இன்னும் புத்தர் ஆகக் காத்திருக்கும் துறவிகளும் காணக் கிடைக்கின்றனர்.
புத்தரின் மகா பெரிய உருவம் உட்கார்ந்த நிலையில் காண்கின்றோம். அதை அடுத்து நாம் செல்லும் குகையில் முற்றுப் பெறாத புத்தரின் உருவம் உள்ள சிலையுடன் கூடிய குகையைக் காண்கின்றோம். அதை அடுத்த நான்காவது குகை, இரண்டு தளம் கொண்ட அமைப்புடன் விளங்குகின்றது. ஏற்கெனவேயே முதல் தளத்துக்கே பல படிகள் மேலே ஏறி வந்திருக்கின்றோம். வந்து பார்த்தால் இந்தக் குகை சற்று, இல்லை, இல்லை, நன்றாகவே சிதிலமடைந்த நிலையில் உள்ளது எனப் புரிகின்றது. கடவுளே??? எதை நாம் உருவாக்க முடியும் இது போல்?? என்றாவது நினைத்துப் பார்த்தோமா??? குறைந்த பட்சம் காப்பாற்றிப் பாதுகாத்து வைக்கவாவது தெரியுதா நமக்கு??? எத்தனை அரிய பொக்கிஷங்கள்??? வருத்தம் மேலிடுகின்றது. பார்க்கும்போதே. கீழத்தளத்தில் ஒரு பெரிய விசாலமான கூடமும், உட்கார்ந்த நிலையில் உள்ள பெரிய புத்தர் சிலையும், சிலையின் இரு மருங்கிலும், புத்தருக்கு உதவி செய்யும் துறவிகளும் காணப் படுகின்றனர். மேல் தளத்தில் அதே போல் இருந்தாலும் சற்றே சிறியதான சிற்பங்கள் காணப் படுகின்றன.
ஐந்தாவது குகையில், இன்னும் மேலே ஏற வேண்டி உள்ளது. ஒரு கல்லால் ஆன தளத்தை குடைந்து உருவாக்கப் பட்ட படிகளில் மேலே ஏறிச் செல்கின்றோம். அப்பா, எவ்வளவு பெரிய குகைக் கோயில்??? வியப்பை அடக்கவே முடியவில்லை, அதுக்குள் நமக்குக் களைத்து விடுகின்றது. ஆனால் இம்மாதிரித் தினமும் மேலே ஏறி வந்து வெறும் உளியையும், சுத்தியலையும் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த குகைக் கோயில்களையும் சிற்பங்களையும் செதுக்கி இருக்கின்றார்களே, எத்தகைய உழைப்பு இது???? நாம் இருந்து அனுபவிக்கப் போகின்றோமா என்று அவர்கள் சிறிதாவது நினைத்திருந்தால் இம்மாதிரியான அற்புதங்கள் தோன்றி இருக்காது.

மூன்று பாகமாய்ப் பிரிக்கப் பட்ட இந்தக் குகையின் நடுவே இரு பக்கமும் சிறிய சிறிய அறைகள் இருக்கின்றன. மேலே "காலம்" என அழைக்கப் படும் உத்திரங்கள் எல்லாம் நன்கு அலங்கரிக்கப் பட்டு விளங்குகின்றது. வித, விதமான அழகுணர்ச்சியோடு கூடிய குறிப்புகளால் வரையப் பட்ட வித விதமான இலைத் தொகுதிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தரையில் இருந்து சிறு சிறு கல்லால் ஆன பெஞ்சுகள் எழுப்பப்பட்டுள்ளது. நடுவில் புத்தரை வணங்குமிடம் உள்ளது. உள்ளே பெரிய புத்தரின் திருவுருவச் சிலை உள்ளது. அடுத்து வரும் ஆறாவது குகை செவ்வக வடிவில் உள்ளது. இதிலும் பானைகள், இலைகள், பூக்களால் ஏற்படுத்தப்பட்ட வடிவங்கள் காணக் கிடைக்கின்றது. எத்தனை நுண்ணிய வேலைப்பாடுகள் என மனம் வியப்பதோடு அல்லாமல், இத்தகைய நாகரீக வளர்ச்சி எப்போவோ நம் நாடு அடைந்துவிட்டதை எண்ணும்போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தாலும், இப்போதைய நிலைமையை நினைத்து வருத்தமாயும் இருந்தது.

இந்தக் குகையின் சுவர்களில் போதி சத்துவர் தவிர, மற்றக் கடவுளர்களும் இடம் பெறுகின்றனர். கல்விக்கு அதிபதியாகச் சொல்லப் படும் "மஹா மயூரி" என்னும் தேவதையும், "தாரா" என்னும் தேவதையும் காணப்படுகின்றனர். இன்னொரு பக்கம் மஹா மயூரி தன் மயில் வாகனத்தில் காணப்படுகின்றாள். அருகிலேயே "அவலோகேதேஷ்வர்" கையில் வைத்திருக்கும் தாமரைப் புஷ்பத்துடன் காணப் படுகின்றார். புத்தருக்கான ஒரு சிறிய வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றது. இங்கே பெரிய புத்தரை, பல சிறிய புத்தர்கள் சூழ்ந்துள்ளனர். அடுத்துள்ள ஏழாம் குகை சாதாரணமாய்க் காணப் படுகின்றது. ஆகவே இதில் எல்லாம் அதிகம் காட்டுவதில்லை. இனி அடுத்த குகைக்குப் போவோம்.

Tuesday, June 10, 2008

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள்

குகைகளின் அமைப்பை மேற்கண்ட படத்தில் பார்க்கலாம், இங்கே படங்கள் எடுக்கவேண்டுமானால் டிஜிட்டல் காமிராவில் தான் எடுக்க முடியும் அல்லது குறிப்பிட்ட வீடியோ காமிரா மட்டுமே. இவை இரண்டையும் தவிர, மற்ற ஃப்ளாஷ் அமைப்புக் கொண்ட கற்கால(எங்க கிட்டே அதான் இருக்கு, அப்போ கற்காலம் தானே) காமிராக்கள் அனுமதி இல்லை. மொபைலில் இருந்து கிளம்பும் ஃப்ளாஷ் கூட அனுமதிக்கப் படவில்லை. தெரியாத்தனமாய் ஒருத்தர் மொபைலில் இருந்து ஃப்ளாஷ் கிளம்ப அவர் அங்கே இருந்த ஊழியரால் வலுக்கட்டாயமாய் வெளியேற்றப் பட்டு பின்னர் மொபைலைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். மஹாராஷ்டிராவின் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இவை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. மேலும் வழிகாட்டியும் அங்கீகரிக்கப் பட்டவராய் இருந்தால் தான் நல்லது. இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் மூலமோ, அல்லது மஹாராஷ்டிர அரசின் சுற்றுலாத் துறையின் மூலமோ ஏற்பாடுகள் செய்து கொண்டு போவதே மிகச் சிறந்தது. இந்தியருக்குக்குறைந்த அளவுப் பணமே செலவு ஆகின்றது. எல்லோரா குகைகள், தெளலதா பாத், த்ருஷ்ணேஸ்வரர் ஜ்யோதிர் லிங்கம், பீபி கா மக்பரா, தண்ணீரில் ஓடும் மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவைகளை ஒரே நாளில் சென்று பார்க்க ஒரு நபருக்கு 200ரூ வசூலிக்கப் படுகின்றது, இது பேருந்துக்கான செலவு. அங்கே போனால் நுழைவுக்கட்டணம் 20 ரூயில் இருந்து 25 ரூக்குள் தான் இருக்கும். வழக்கம் போல் குழந்தைகளுக்கு அரைக்கட்டணம், வெளிநாட்டுக்காரர்களிடம் அதிகமாகவே வசூலிக்கின்றனர். அஜந்தா குகைகள் ஒளரங்காபாத்தில் இருந்து 120 கி.மீ தள்ளி இருப்பதால், அதற்குச் சென்றுவரபேருந்துக் கட்டணம் நபர் ஒருவருக்கு 300 ரூ. வழிகாட்டிகள் தனியாக டிப்ஸ் கொடுன்னு என்றெல்லாம் கேட்பதில்லை. இனி குகையின் அமைப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். குகையின் மேல் கஷ்டப் பட்டு ஏறி விட்டோம் நேற்றே. எதிரே தெரிந்தது பெரிய புத்தர் சிலை.
இந்த புத்தர் சிலையின் அமைப்பு புத்தர் தன் கொள்கைகளைச் சீடர்களுக்கு போதிக்கும் நிலையில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். தென்பகுதியில் இருக்கும் இந்த முதல் குகையில் புத்தரின் பெரிய உருவச் சிலை இருந்தாலும், இது புத்த சைத்தியமாய்த் தெரியவில்லை. இருபக்கங்களிலும் இருக்கும் அறைகளைப் பார்த்தால் பிட்சுக்களின் தங்குமிடங்களாய் இருந்திருக்கும் வாய்ப்பு உண்டெனத் தெரிகின்றது. நம் வழிகாட்டியும் அதே சொல்கின்றார். புத்தருக்குப் பின்னால் இது என்ன ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இடைவெளி??? இந்த இடைவெளியின் பின்னால் மறைந்து கொள்ளவும் முடியும், அங்கே இருக்கும் மற்றொரு வழியாக வேறு வழியில் செல்லவும் முடியும்! அப்பாடி??? அப்போ அந்தக் காலத்தில் புத்த பிட்சுக்கள் ராஜவம்சத்தினரைப் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டே? அப்போ இப்படித் தான் ஒளிந்து கொண்டிருப்பார்களோ????? அல்லது ஏதேனும் சதித்திட்டம் நிறைவேற்றப் போயிருப்பார்களோ?? ஆவல் அதிகரிக்கின்றது போய்ப் பார்க்க. ஆனால் வழிகாட்டியின் கண்டிப்பான கட்டளையால் புத்தர் சிலையின் பின்னால் சென்று பிரதட்சிணமாய் வர மட்டுமே முடிகின்றது நம்மால்.

புத்தரின் உருவங்களை பெரியதாக அமைத்ததின் காரணம் புரியவில்லை என்றாலும் அதன் அருகே நிற்கும்போது, நாம் எத்தனை சிறியவர் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதலில் இருக்கும் இந்தச் சில குகைகள் "தேராவாரா" குகைகள், அல்லது "தேதாவதா" குகைகள் என்றும் அழைக்கப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. தேரா என்றால் புத்தமதப் பிரசாரகர்கள் அல்லது ஆசிரியர்கள் எனவும் தெரிய வருகின்றது. பக்கத்துக்கு நான்காக இருபக்கமும் சேர்த்து, எட்டுத் தங்குமிடங்கள் அங்கே இருக்கின்றன. சிலது பூட்டி வைத்துள்ளது. திறந்தவற்றில் எட்டிப் பார்த்தால் இரு பக்கமும் இரு கல் திண்ணைகள், (நம்ம ஊர் மாப்பிள்ளைத் திண்ணை போல் அமைப்பில்) இருப்பதைக் காணலாம், ஒரு அறையில் இரு பிட்சுக்கள் வீதம் தங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு அறைக்கும் வெளியே தரையில் பெரிய, சிறிய அளவிலான குழிகள். சிலவற்றில் விளக்கு ஏற்றப் படும், சிலவற்றில் ஓவியத்திற்கான வண்ணங்கள் கரைக்கப் படும். எதிரே மாலைச் சூரியன் மயங்க, இங்கேயோ வண்ணங்கள் மயங்க, மெலிதான வெளிச்சத்தில் ஓவியங்கள் மட்டும் பிரகாசிக்க, அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகின்றது அல்லவா??? ஓவியங்களையும் சிற்பங்களையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. வெளியே வந்தால் பாறைகள், இந்தப் பாறைகளில் என்ன அழகு இருந்தது??? அதை எப்படி யோசித்தனர்?? எப்படி உயிரோட்டத்துடன் கூடிய சிற்பங்களை அமைத்தார்கள்??? யோசிக்க வேண்டிய விஷயம் இது! அடடா??? முதல் குகையிலேயே இத்தனை நேரம் ஆக்கினால் மிச்சம்??? இதோ அடுத்ததுக்குப் போவோமா??? சீக்கிரமாய் எல்லாம் வர முடியாது. ஏற வேண்டும், ஏறுவோம் வாருங்கள்!

டிஸ்கி: இந்த சஹ்யாத்திரி மலைத் தொடர்கள் "எரிமலைப் பாறைகள்" நிறைந்தவை என்பதை மறந்துவிட்டோம், நாங்கள் செல்லும்போது. வன வளம் கோடைநாட்களில் இருக்காது என்பதும் மறந்துவிட்டோம், மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் போல் இதுவும் வன வளம் நிரம்பியது என நினைத்து ஏப்ரல், மேயில் சென்றால் வறண்ட பாறைகளையும், காயந்த மரங்களையுமே பார்க்க முடியும். ஆனால் இதுவும் ஓர் அழகுதான். எப்படி முதியோருக்குப் பல் போய், இருந்தாலும் சிரிக்கும்போது அழகு தெரியுமோ, அதுபோல் காய்ந்த இந்த மொட்டைப் பாறைகளும் அழகாகவே தெரிந்தது. எனினும் மழைக்குப் பின்னர் ஒரு முறையாவது போகவேண்டும்,மேகங்கள் தவழ்வதையும், மேலிருந்து அருவிகள் கொட்டுவதையும், செடிகளின் பச்சையையும், கீழே ஓடும் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதையும் பார்த்துக் கொண்டே, மலைப்பாதையின் விளிம்பில் முன்னங்கால்களை மட்டும் வைத்து ஏறிக் கொண்டே ஒவ்வொரு குகையாகப் பார்க்க வேண்டும். போவதாய் இருந்தால் மழை முடிந்து ஆகஸ்டிலோ, செப்டம்பரிலோ போவதே சிறப்பு.

Monday, June 9, 2008

சித்திரம் பேசுதடி - எல்லோரா தொடர் 2


முதலில் நாம் காணப் போவது எல்லோரா குகைக் கோயில்கள் ஆகும். எல்லோரா சஹ்யாத்திரி மலைத் தொடரில் அமைந்துள்ள குகைக் கோயில்கள் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சஹ்யாத்திரி மலைத் தொடரில் தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்தக் குகைக் கோயில்கள், புத்தமதக் குகைகள், இந்து மதக் குகைகள், ஜெயினர்களின் குகைகள் என மூவகைக் குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 40க்கு மேல் என்று சொல்லப் பட்டாலும், சில குகைக் கோயில்கள் மட்டுமே பார்க்கும்படியான நிலைமையில் உள்ளன என்பது மிகவும் வருந்தத் தக்க செய்தி ஆகும். மலைக்குன்றுகளில் குடையப் பட்ட இந்தக் கோயில்கள், தெற்கு வடக்காக வளைந்து செல்கின்றது. முகப்பு மேற்குப் பக்கத்தில் வருகின்றது. குறைந்த பட்ச அளவிலான வெளிச்சத்துக்காகவும், சிற்பங்கள் காற்றினால் வீணாவதைத் தடுக்கவும் இம்மாதிரித் தேர்ந்தெடுத்ததாயும் சொல்லப் படுகின்றது.

வடக்கு, தெற்காக வளைந்து செல்லும் அரை வட்டத்தின், தென்கோடியில் புத்த மதக் கோட்பாடுகளைக் குறிக்கும் குகைகள் அமைந்துள்ளன. மொத்தம் ஒன்றரை மைலுக்கு நீளம் உள்ள இந்த அரைவட்டப் பாதையின் நடுவில் இந்துமதக் கோட்பாடுகளைக் குறிக்கும் குகைகளும், அதன் பின்னர் வட பாகத்தில், இன்னும் சற்று தூரம் சென்றால் சமணர்களின் குகைகளும் வருகின்றன. சற்றுத் தூரத்தில் இன்னும் மேடான இடத்தில் அமைந்திருக்கும் சமணக் குகைகளுக்கு வண்டியிலேயே செல்ல வேண்டி உள்ளது. மொத்தம் உள்ள 47 குகைகளில், பார்க்கும்படியான குகைகள் பத்துக்குள் தான் என்றாலும் அவற்றையும் பார்க்க ஒரு நாளின் சில மணித் துளிகள் நிச்சயம் போதாதுதான். ஆனால் அங்கே தங்கி இருந்து பார்க்க முடியாது. அருகில் உள்ள நகரம் ஆன ஒளரங்காபாத்தில் இருந்து தினம் வரவேண்டும். 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, ஒளரங்காபாத்தில் இருந்து எல்லோரா குகைக் கோயில்கள். 12 புத்த மதக் குகைகள் தான் முதன் முதல் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயில்களில், "சைத்தியம்" என்று அழைக்கப் படும் வழிபாட்டு தலம், விஹாரம் என்று அழைக்கப் படும், பிட்சுக்களின் தங்குமிடங்கள் அடங்கும்.

இந்து மதக் குகைக் கோயில்களில் பதினேழு இருக்கின்றன. அவற்றில் தசாவதாரத்தைச் சிறப்பிக்கும் குகையும், கைலாசநாதர் கோயிலும் சிறப்பான ஒன்று. அதிலும் கைலாசநாதர் கோயில் உள்ள குகை ஒரே கல்லால் செதுக்கப் பட்ட உலகின் ஒரே பெரிய குகைக் கோயில் என்ற மாபெரும் சிறப்பைப் பெற்றது. இந்தக் கைலாசமலைக் கோயிலை மையமாக வைத்தே, தென் பக்கம் 16 குகைக் கோயில்களும், வடப்பக்கம் அதேபோல் 16 குகைக் கோயில்களும் அமைந்துள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது. அஜந்தாவின் ஓவியங்கள் காலப் போக்கில் மறைந்து, பின்னர் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது போல் இல்லாமல், எல்லோரா குகைக் கோயில்கள் தொடர்ந்து மனிதர்களால் பார்வை இடப் பட்டு வந்திருக்கின்றது. "வெருல்" என்று முன்னாட்களில் அழைக்கப் பட்ட இந்த எல்லோரா குகை இருக்கும் ஊர் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இன்றளவும் ஈர்த்து வருகின்றது.


இதோ இப்போது மேலே ஏறவேண்டும், ஏறும்போது சற்று நிதானமாகவே ஏறவேண்டி உள்ளது. படிகள் எல்லாம் உளியால் எப்போதோ செதுக்கப் பட்டவை. அதுவும் மலைப் பாறைகளின் போக்குக்கு ஏற்ப ஒரு இடத்தில் உயரமாயும், ஒரு இடத்தில் உயரம் குறைந்தும், ஒரு இடத்தில் அகலமாயும், ஒரு இடத்தில் அகலமே இல்லாமல் சும்மா கால் விரல்களை மட்டுமே ஊன்றி ஏறும்படிக்கும் உள்ளது அல்லவா? பார்த்து கவனமாய் ஏறவேண்டும். கடைசிப் படி மேலே ஏறும்போது உயரம் அதிகம். ஆனால் நாம் கால் வைத்திருக்கும் படியோ அகலமே இல்லை. எப்படி ஏறுவது? அம்மா, ஒரு வழியாய் ஏறியாச்சு, பின்னால் தள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் ஒரு 200 அடிக்கு மேல் கீழே விழுந்துடுவோம். ஏறி வந்தாச்சா??? எதிரே???? ஆஹா, எவ்வளவு பெரிய புத்தர்?????

சித்திரம் பேசுதடி - எல்லோரா தொடர் 1

"சித்திரம் பேசுதடி,எந்தன் சிந்தை மயங்குதடி" என்று சித்திரங்களைக் கண்டு மயங்காதவர்கள் யார்? சிற்பங்களைக் கண்டு ரசிக்காதவர்கள் யார்? அதிலும் பழைய தொன்மையான சிற்பங்களும், சித்திரங்களும் இன்றும் மக்களைப் பலவிதங்களிலும் வசீகரிக்கின்றது. முன்னே எல்லாம் யாராவது அழகாக இருக்கின்றார்கள் என்று சொல்வது என்றால், "அஜந்தாச் சித்திரம்" போல அழகு என்று சொல்லுவதாய்க் கேள்விப்பட்டிருக்கின்றோம். அத்தனை அழகா என வியந்திருக்கின்றோம். திரு கல்கி அவர்களின் எழுத்தில் "சிவகாமியின் சபதம்" நாவலில், அஜந்தா ரகசியத்தை அறிய ஆயனச் சிற்பி துடித்த துடிப்பைப் பார்த்துப் படித்து ரசித்திருக்கின்றோம், நம்மில் அனைவரும். அந்த அஜந்தாவை நாம் பார்த்து ரசிக்க நினைத்திருப்போம், ஆனால் அனைவருக்கும் கை கூடாது. அப்படி என்ன அழகு அந்தச் சித்திரங்களில்? என்ன விதமான வண்ணக்கலவையினால் இவ்விதம் நூற்றாண்டுகள் கடந்து இவை நிலைத்து நிற்கின்றன. (பல சித்திரங்கள் அழிந்து விட்டன என்பதே உண்மை, பராமரிப்பு போதாது என்பதும் ஒரு வருத்தமான விஷயம்) இத்தனை அபூர்வமான ஒரு விஷயத்தை ஏன் இன்றளவும், உலக அதிசயங்களில் ஒன்றாய்ச் சேர்க்கவில்லை என்பது, அங்கே போய்ப் பார்த்ததும் எங்களுக்குள் எழுந்த ஒரு தவிர்க்க முடியாத கேள்வி. அவை அமைக்கப் பட்டிருக்கும் மலைத் தொடர்களின் அமைப்பும், அதில் எப்படி இத்தனை ஓவியங்களை குகைகளைச் செதுக்கி வரைந்தார்கள் என்பதும், நேரில் பார்த்தால் மட்டுமே அதிசயம் என்பது புரியும், அவ்வளவு கடினமான மலைப்பாதையில், கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் முயன்று, ஒவ்வொரு குகையாகச் செதுக்கி, அவற்றில் ஓவியங்களையும் வரைந்து, பின்னர் ஒரு கால கட்டத்தில் அவை முழுதும் மறைந்து இருக்க, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தற்செயலாக வேட்டை ஆட வந்த ஒருவரால் கண்டுபிடிக்கப் பட்டு உலகுக்கு இவை பற்றித் தெரிய வந்தது. அப்போதும் போகக் கொஞ்சம் கடினமான மலைப்பாதைகளின் வழியாகவே போய் வந்திருக்கின்றனர். இப்போதும் போகக் கொ ஞ்சம் கடினம் தான் என்றாலும் சறுக்குப் பாதையில் ஏறுவதால் சிரமம் தெரிவதில்லை. எனினும் மேலே போய் ஒவ்வொரு குகையாக ஏறி, இறங்கும்போது, இவற்றைப் பார்க்கவே நம்மால் முடியவில்லையே, முன்னோர்கள் தினமும் இவற்றில் ஏறி, இறங்கி, இங்கேயே, படுத்து, தூங்கி, சாப்பிட்டு, குளித்து, வாழ்நாளைக் கழித்து, ஆஹா, நாம் என்ன செய்திருக்கின்றோம்? அவர்களின் இந்த அற்புத வேலைகளைக் குறைந்த பட்சம் அழியாமலாவது காப்பாற்றி இருக்கின்றோமா? இல்லையே? சித்திரங்களில் பென்சிலாலும், கத்தியாலும் கீறுவதும், சித்திரம் வரைந்த ஓவியனின் பெயர் கூட அங்கே காண முடியாது, ஆனால் நம் பெயரைப் பொறிப்பதும், இந்தக் கொடுமையைக் குற்றாலம் சித்திரசபையின் நடராஜர் கூட ஆடக் கூட முடியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். இப்போவும் அப்படியே இருக்கின்றது என்று சமீபத்தில் வந்த "குமுதம் பக்தி" இதழின் தலையங்கமும் குறிப்பிடுகின்றது. ஆடிய பாதத்தை நிறுத்திவிட்டு நடராஜர் எங்கேயாவது ஓடினால் தான் உண்டு. அப்போவும் துரத்திப் போய் அழிப்போமே??அப்படித் தான் இருக்கின்றன அஜந்தாவின் சித்திர, விசித்திரமும், எல்லோராவின் சிற்ப அதிசயங்களும், உலகிலேயே ஒரே கல்லில் கட்டப் பட்ட குடைவரைக் கோயில் எல்லோராவில் தானாம்.. சொல்கின்றனர், ஆனால், நாம் அதை எவ்வாறேனும், காப்பாற்ற உறுதி எடுக்க வேண்டும், இல்லையா? அழிய ஆரம்பித்திருக்கின்றன இவை எல்லாம், இனியாவது நாம் விழித்துக் கொள்ளவேண்டும், அஜந்தாவின் ஓவியங்கள் பற்றியும், எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் பற்றியும் சிறிது பார்ப்போமா? முதலில் அதன் சரித்திர காலம் பற்றிய சிறு குறிப்பு நாளை கொடுத்துவிட்டுப் பின்னர் தேவகிரிக்கோட்டை என்று அழைக்கப் பட்ட, இப்போதைய தெளலதாபாத் கோட்டை பற்றியும், அட, இது என்ன?? தாஜ்மஹால் இங்கே? இங்கே இருக்கின்றதே அதன் அப்பட்டமான காப்பி, சிறிய வடிவில்??ஆச்சரியமாய் இருக்கின்றதா? ஆச்சரியமே இல்லை. ஒளரங்கசீபின் மகன் ஒருவன், தன் தாயின் நினைவுக்காகக் கட்டியது, "பீபி கா மக்பரா" என்னும் மினி தாஜ்மகால். வங்காளத்தின் பொறி இயல் நிபுணர் ஒருவர் பல மாதங்கள் தாஜ்மகாலைப் பார்த்து ஆராய்ந்து அதன் வடிவத்தையும், அதன் கட்டிட அமைப்பையும் மட்டுமின்றி, அதன் முகப்பு, பக்கத்து இரு சிவப்பு மண்டபங்கள் என அப்படியே ஒரு தாஜ்மகாலின் மாதிரி வடிவை இங்கேயும் கொடுத்திருக்கின்றார். இவை பற்றிய குறிப்புகள் நாளை!