Wednesday, December 31, 2008

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பரப்பட்டும். நிம்மதியான,பாதுகாப்பான வாழ்க்கை அமையவும் வாழ்த்துகள். அனைத்துத் தரப்பினரும் எல்லா நலன்களும் பெற்று வாழவும் வாழ்த்துகள். மழை பொழியவும், மண் வளம் பெறவும், அதன் மூலம் காடுகள் வளம் பெறவும், இயற்கையை ரசிக்கவும், இயற்கையோடு இசைந்து வாழவும், மற்றவர்கள் துயரம் தீர்க்கவும் பழகுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நாடு நலம் பெறப் பாடுபடுவோம்!

Thursday, December 25, 2008

இப்போத் தான் சொல்ல முடிந்தது!

ஹிஹிஹி, இங்கேயும் பஜனை பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்று சிஷ்ய(கோ)கேடிங்க பல்லைக் கடிக்கிறது தெரியுது, இல்லை, இல்லை, பஜனை எல்லாம் பண்ணலை. ஏப்ரல் மாசம் பண்டரிபுரம் போயிட்டு வந்துட்டு அது பத்தி எழுத நினைச்சேன், எழுதவே முடியலை. பண்டரிநாதர் படத்தைப் போட்டு வச்சுட்டுப் பதிவே எழுதமுடியலையே அதான், ஏதாவது எழுதலாம்னு.

பண்டரிநாதர் கதை எல்லாம் இங்கே சொல்லப் போறதில்லை. அது தனியா வச்சுக்கலாம்.இந்திய ரயில்வேயின் சுற்றுலாத் திட்டத்தில் செல்லும் ரயில் பயணத்தின் மூலம் நாங்க மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, த்ரயம்பகேஸ்வர் கோயில், ஷிர்டி, சனி ஷிங்கனாபூர் மற்றும் பண்டரிபுர் போனோம். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயிலில் மொத்தம் ஏழு பெட்டிகள் இருக்கின்றன. இங்கே சென்னையில் போட் க்ளப் சாலையில் அமைந்திருக்கும் ட்ராவல் டைம்ஸ் காரர்களால் ஒப்பந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பயண ஏற்பாடுகள் அமைகின்றன. ரயில்வே அமைச்சகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து இதில் செயல்படுகின்றது. மிக மிக அருமையான ஏற்பாடுகள். கட்டணமும் ஏற்கும் அளவுக்கே, அதிகமான கட்டண வசூல் என்று குறை சொல்ல முடியாது. பயணிகளுக்கென ஆறு பெட்டிகளும், பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் குழுவினருக்கென ஒரு பெட்டியும், சமையல் செய்ய, சமையல் சாமான்கள், சமையல்காரர்கள், மற்றும் உதவும் ஆட்கள் இவர்களுக்கென ஒரு பெட்டியும் ஒதுக்கப் படுகின்றது. ஒரே குறை இதிலே குளிர்சாதன வசதி கொண்ட தூங்கும் வசதிப் பெட்டி இல்லாமைதான். அனைவராலும் அந்தக் கட்டணம் ஏற்கமுடியாது என்பதால் தூங்கும் வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டிகளே அனைத்திலும். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உட்பட மொத்தம் 500 பேருக்குக் குறையாமல் பயணிக்கின்றனர்.இதிலே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அவர்கள் கொடுக்கும் உணவு சாத்வீக உணவு. என்றாலும், வெங்காயம், பூண்டு தவிர்க்கலாம் இது புனித யாத்திரைகள் என்பதால். அதையும் நாங்கள் ஒரு ஆலோசனையாகக் கொடுத்திருக்கின்றோம். பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவுகளை எங்களைப் போல் பலரும் தவிர்த்தனர். காலை ஒருவேளை காஃபிக்கு டோக்கன் கொடுத்துவிடுகின்றனர். அதைக் கொடுத்துவிட்டுக் காலை காஃபி பெற்றுக் கொள்ளலாம். பின்னர் தேவைப் பட்டால் காஃபி, டீ நம் சொந்த செலவில். காலை ஆகாரமும் எளிமையாக கேழ்வரகு சேர்த்தோ, கோதுமை சேர்த்தோ உப்புமா அல்லது இட்டிலி, பொங்கல் என்று எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலேயே தருகின்றனர். மதியமும் சாப்பாடு எளிமையாக இருக்கின்றது. பின்னர் இரவு சாப்பாடும் அதேபோல். ஒரு பெட்டிக்கு இரு பாதுகாவலர் அமைப்பாளர்களே ஏற்பாடு செய்கின்றனர். ரயிலில் இருந்து இறங்கி நாம் பார்க்கப் போகவேண்டிய இடத்தின் தூரத்திற்குத் தகுந்தாற்போல் பெரிய வோல்வோ பேருந்துகள் ஏற்பாடு செய்யப் பட்டு ஒவ்வொரு பெட்டியின் எண்ணும் அந்த அந்தப் பேருந்துக்குக் கொடுத்துவிடுகின்றனர்.

நம் பெட்டியின் எண் உள்ள பேருந்தில் ஏறிக் கொள்ளவேண்டும். ஆகவே அடிச்சுப் பிடிச்சு ஏறிக்கணும்னு எல்லாம் கிடையாது. மேலும் தங்கப்போவது ஒரு இரவோ அல்லது ஒரு பகலோ தான் என்பதால் பெட்டி, படுக்கையை எல்லாம் ரயிலிலேயே வைத்துவிட்டுப் போகலாம். பாதுகாவலர்கள் ரயிலிலேயே இருப்பார்கள் என்பதால் பயமும் இல்லை. நாம் தங்குமிடத்துக்குப் போகும் முன்னரே அங்கே சமைப்பவர்கள், உதவியாளர்கள் போய்விடுகின்றனர். ஆகவே நாம் தரிசனம் எல்லாம் முடித்துக் கொண்டு வரும்போது உணவும் தயாராகக் காத்திருக்கும். ரயிலில் போகவேண்டிய இடங்களுக்கு ரயிலிலேயே அழைத்துச் சென்று விடுகின்றனர். இதற்கென ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதி கொடுத்திருக்கின்றது. மற்றப் பயணிகள் யாரும் இந்த ரயிலில் ஏறவோ, இறங்கவோ முடியாத அளவுக்குக் கடுமையான கண்காணிப்பு. தண்ணீர் பிடிக்கவும், மற்றத் தேவைகளுக்காகவுமே பெரிய ரயில் நிலையங்களில் நின்றாலும், சில சமயம் சிக்னல் கிடைக்காமலும் நிற்கவேண்டி வருகின்றது. ஆனால் பயணம் செல்லும் நேரங்களில் வேகமாய்ப் போய் விடுகின்றனர்.

தங்குமிடங்கள் தான் கல்யாண மண்டபம், ஏதேனும் சத்திரம் என்று ஏற்பாடு செய்கின்றனர். இது சிலரின் செளகரியத்தை உத்தேசித்து என்றாலும், சிலருக்கு அசெளகரியமாகவும் இருக்கின்றது. அத்தனை பேரும் குளித்துக் காலைக்கடன்கள் முடித்துத் தயாராகத் தேவையான வசதிகள் இருப்பதில்லை. எங்களில் சிலர் தனியாகப் பக்கத்திலேயே இருக்கும் லாட்ஜுகளில் அறைகள் எடுத்துக் கொண்டு தங்கினோம். அமைப்பாளர்கள் மூலமும் அறைகள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றாலும் நாமாய்ப் போனால் 500ரூ 600 ரூ இருக்கும் அறைகள் அவங்க மூலமாய்ப் போகும்போது 1,200ரூ ஆக இருக்கின்றது. ஆகவே நாங்க மொழிப் பிரச்னை இல்லாத காரணத்தால் நாங்களாகவே அறை எடுத்துக் கொண்டோம். மத்தவங்க தங்குமிடத்துக்கு அருகேயே! "பாரத தரிசனம்" என்ற பெயரில் செல்லும் இந்த ரயிலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பார்க்கும்படி வசதி செய்து கொடுக்கின்றனர். இனி நாங்கள் போன விபரம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். கும்பகோணம் போனதே இன்னும் முடிக்கலைனு பல்லைக் கடிக்கிறது காதிலே விழுதே, அதுவும் வரும்.

Friday, December 19, 2008

நீங்க க.கை.நா.??? இதைப் படிங்க முதல்லே!

அப்படி ஒண்ணும் பெரிசா தொழில் நுட்பம் தெரியாது தான். ஆனால் அதுக்காக ஒரேயடியா மட்டம்னும் இல்லை. என்றாலும் சில விஷயங்கள் புரியலை பதிவுகள் எழுத ஆரம்பிச்சப்போ. இந்த அம்பி பிடிவாதமா எனக்கு எதுவுமே சொல்லித் தரலை.(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனால் அதுக்காக மத்தவங்க சும்மா இல்லை. முக்கியமா சூடான் புலியும், உ.பி.ச.வும் நிறையவே உதவி செய்தாங்க. அதிலேயும் புலி நிறையவே உறுமிட்டுப் போயிருக்கு. ஆனால் இந்த டாடா இண்டிகாம் காரங்க உதவினாப் போல இருக்குமா என்றால் இல்லைனு தான் சொல்லணும்.

எந்த வேளையில் இந்த சேவையை எடுத்துக் கொண்டேனோ தெரியலை, முதலில் எல்லாம் ஒழுங்காவே போயிண்டிருந்தது. பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் நானும் ஒரு தலைவியாக ஆகி, பிரசித்தி பெற்ற எழுத்தாளியாக மாறி இலக்கியம் படைக்க ஆரம்பிச்சதும் எங்கே இருந்தோ சதிவேலைகள் துவங்கிட்டன. முதல்லே 06-ம் வருஷம் எக்ஸ்பி ரீ இன்ஸ்டால் பண்ணதில் ஆரம்பிச்சது பிரச்னை. அப்புறமா ஒரு மாசம் இணையம் இல்லாமல், போதும், போதும்னு ஆயிடுச்சு. வாடிக்கையாளர் சேவை மையம் இருப்பது ஹைதராபாதில், சேவை கொடுப்பது சென்னையில். எங்க ஏரியாவுக்கான செர்வர் இருப்பது பக்கத்துத் தெருவில், அதுவும் நாங்க ரொம்பவே அடிக்கடி புகார் செய்யறோம்னு மாத்தினாங்க. அந்த வீட்டுக்காரர் டாடா செர்வரிலேயே அவங்க வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு நினைவா செர்வரையும் ஆஃப் செய்து வச்சுடுவார். இது தெரியாம நாங்க இங்கே லபோ திபோ னு அலறுவோம். வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொலைபேசினால் எல்லா நேரமும் எடுப்பாங்கனு சொல்லவும் முடியாது.

முதல்லே அவங்க கொடுத்த நம்பரைப் போட்டு அழைக்கணும். வரவேற்பு கொடுத்ததுக்குப் பின்னர் நமக்கு ஒன்று, இரண்டு கத்துக் கொடுப்பாங்க. அதைக் கத்துக்கிட்டதும் தான் நமக்கு தொழில் நுட்ப சேவையின் நம்பரே வரும். உடனே எடுத்துப் பேசினால் உங்க அதிர்ஷ்டம். லோகல் செர்வர் வீக்குன்னா அவங்க எடுக்கவே மாட்டாங்க. "All the Executives are busy. Please stay on the line or try later"அப்படினு recorded message வந்தாலே சரி ஏதோ முக்கியமான பிரச்னை, இப்போ எடுக்க மாட்டாங்கனு புரிஞ்சுடும். அப்பாடா, எப்படிப் பாருங்க, ஒரே வரியிலே புரிய வைக்கிறாங்க. இதிலே சொல்லிக் கொடுக்கும் அவங்க திறமைசாலியா, கத்துக்கும் நாம திறமைசாலியானு சந்தேகமே வரும். அப்படி ஒண்ணும் இல்லைனா தொலைபேசியை எடுத்துச் சமயங்களில் குயில் கூவும், இல்லைனா மயில் அகவும். ஹிஹி, புரியலையா?? குயில் போலக் கொஞ்சிக்கொஞ்சி யாராவது ஒரு பெண்ணோ, மயில் போல அகவிக் கொண்டு யாராவது ஒரு ஆணோ பேசுவார்கள். நமக்கு இணைப்பு வரலைனதும் அவங்க படற வருத்தத்தைப் பார்த்து நமக்குக் கண்ணீரே வந்துடும். ஆஹா, இவ்வளவு வருத்தப் படறாங்களே, உடனே நம்ம சேவையைக் கவனிப்பாங்கனு நீங்க நினைச்சால். அது உங்க மடத் தனம்.

உங்களோட அடையாளச் சொல் கேட்டுக் கொண்டு, எங்கே இருந்து பேசறீங்க, உங்க மாற்று அடையாள மெயில் ஐடி என்ன, தொலைபேசி எண் இதுதானா என்று எல்லா உறுதிகளும் செய்து கொண்டு (இது ஒவ்வொரு முறையும் கேட்கப் படும். இப்போ எனக்கு என்னோட பேரே மறந்துடுச்சு, இந்த யூசர் ஐடிதான் நினைவிலே இருக்கு) அப்புறமாச் சொல்லுவாங்க, "மேடம், உங்க மோடத்திலே/ரவுட்டரிலே எல்லா லைட்டும் எரியுதா?? எரியுது அல்லது இல்லை, அல்லது விட்டு விட்டு எரியுது, அல்லது கண் சிமிட்டிட்டே இருக்குனு நீங்க சொன்னதும்

சேவை மையம்:"ரீ ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்"

நாம்: பண்ணிட்டேனே, பலமுறை.

சேவை: அப்படியா, சாரி மேடம், இப்போ நீங்க என்ன செய்யறீங்க ஸ்டார்டிலே போய் ரன் என்று ஒரு ஆப்ஷன் இருக்குமே அதை க்ளிக் பண்ணி கமாண்டிலே போய்"..........

நான்: ping தானே போடச் சொல்றீங்க? போட்டுப் பார்த்துட்டேனே, பைட்ஸே போகவும் இல்லை, வரவும் இல்லை.

சேவை: அடடா, மேடம், இப்போ என்ன செய்யறது?? ம்ம்ம்ம்? இந்த alternative gateway னு ஒண்ணு இருக்கு, அதிலே.....

நான்: properties போய் அதையும் போட்டுப் பார்த்தாச்சே, லோகல் ஏரியா கனெக்ஷனையும் ஒரு தரம் ஆப் பண்ணிட்டுத் திரும்ப ஸ்டார்ட் பண்ணி எல்லாம் பண்ணிட்டேனே??

சேவை: அப்போ ஒண்ணு செய்யுங்க, அந்த கேபிள் வயர் தொங்குதே உங்க கணினிக்கு மேலே தொங்குதா, வெளியே இருக்கா அதிலே, ஒரு வெள்ளைக் கலர் பாக்ஸ் இருக்கும்.

நான்: ஜங்ஷன் பாக்ஸ்தானே? அதை ஆஃப் செய்து லூப்பிலே போட்டு, பின்னாடி லைனுக்கு மாத்தி, கேபிளை எல்லாம் மீண்டும் பிட் பண்ணி எல்லாம் செய்து பார்த்துட்டேன்.

சேவை: சரி மேடம், (வேறு வழியில்லை, பல்லைக் கடிப்பாங்கனு நினைக்கிறேன்.) கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? உங்க புகாரைப் பதிவு செய்து கொண்டு, உங்களுக்கு நம்பர் தரேன்.

நான்: வேறே வழி?? கொடுங்க, காத்திருக்கேன்
.

ஒரு சகிக்க முடியாத, காதால் கேட்க முடியாத கொடுமையான சங்கீதம் ஒலிபரப்பப் படும். சில, பல நிமிடங்களுக்குப் பின்னர், குயில் மீண்டும் கூவும். "மேடம், இதுதான் உங்கள் புகார் எண். இந்த நிமிடத்தில் இருந்து 24 மணி நேரம் கணக்கு. அதுக்குள்ளே உங்க புகார் சரி செய்யப் படும். அப்படி இல்லைனா நீங்க மீண்டும் எங்களை எப்போ வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். எங்களோட எண் .............. Good Day Madam. We are here to serve you. தொலைபேசி வைக்கப் படும். இப்படியாகத் தானே, நான் ஒரு தொழில் நுட்ப நிபுணியாகிவிட்டேன், இப்போ டாடா இண்டிகாம் தயவாலே. செர்வர் சரியில்லைனா யுபிஎஸ்ஸுக்கு பாட்டரி மாத்தினீங்களானு அவங்களையே இப்போக் கேட்டுட்டு இருக்கேன்.

24 மணி நேரத்துக்குள்ளே சரி செய்யலைனா என்ன நடக்கும்கிறதை இன்னொரு பதிவாத் தான் எழுதணும். இன்னிக்குத் தான் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது வருது இணையம். வேறே வேலை இருக்கு, அதை எல்லாம் முடிக்கணும், வர்ட்டாஆஆஆஆஆஆ??????

Wednesday, December 17, 2008

இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே??

இங்கே கூடத் தேடிப் பிடிச்சுட்டு வந்து பின்னூட்டம் போட்டிருக்கும் துளசிக்கும், அம்பிக்கும் நன்னியோ நன்னி! எனக்குத் தான் கொஞ்ச நாட்களாய் யாரோட பதிவுக்கும் போக முடியாமல் இருக்கு. கொஞ்ச நாட்களில் சரியாகும்னு நம்பறேன். எல்லாருமே நிறைய எழுதி இருக்காங்க, அதனால் படிக்கவும் நிறைய இருக்கு. நேரம் தான் கிடைக்கலை. போகட்டும். இப்போ கும்பகோணம் பயணம் தொடர்ச்சி.

அடுத்த வண்டி வந்ததும் ஏறிக் கொண்டு போகிறதுக்குள்ளே இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வந்துடுச்சு. ஒரு வழியா செண்டரலில் இருந்து ஆட்டோ பிடிச்சுட்டு எழும்பூர் போய்ச் சேர்ந்தால் வாசலில் அனுமார் வால் போல வரிசை நிக்குது, செக்யூரிடி செக்கப்புக்கு. ஏர்போர்டில் எல்லாம் பார்க்கிறது இவ்வளவு இருக்காது. இங்கே பல வண்டிகளின் பிரயாணிகளும் சேர்ந்து ஒரே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாய் வரிசை. அதிலே போய் நின்னால் நல்லவேளையா பைரவர் வரலை எங்களுக்கு. ஸ்கானிங் மட்டும் பண்ணிட்டு அனுப்பிட்டாங்க. வண்டி சரியான நேரத்துக்கு வந்துட்டு, கும்பகோணம் போய்ச் சேரும்போது வழக்கம்போல் தாமதமான நேரத்துக்குப் போனது. அங்கே இருந்து சத்திரம் போய், குளிச்சு, காலை ஆகாரம் சாப்பிட்டு, கல்யாண விசேஷங்கள் ஆரம்பிக்க நேரம் இருந்ததால் மறுநாளே திரும்பவேண்டிய நிர்பந்தம் காரணமாய் நாங்க திரும்பறதுக்கு வண்டி இருந்தால் முன்பதிவு செய்துடலாம்னு போனோம். ஏற்கெனவே பெண்ணோட அப்பா கும்பகோணத்துக்கு வரணும்னால் திருச்சி வந்து தான் வரணும்னு சொல்லி இருந்தார். அதையே என்னுடைய தம்பியும், தான் காரில் வந்தப்போ சுத்தி வந்ததாய்ச் சொல்லவே, அஸ்தியில் ஜுரம் கண்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டுப் பேருந்து நிலையம் போனோம்.

அங்கே இரண்டு முன்பதிவு கவுண்டர்கள். எதிலே பண்ணறதுனு தெரியாமல் குழம்பிப் போய் ஏசி பேருந்து எனக் கேட்க பக்கத்திலே போங்கனு சொல்ல, அங்கே போனால் ஏசி பேருந்து 4 மணிக்குத் தான் என்று சொல்ல, அதுக்கு முன்னாலே பார்த்தால் 1-40 மணிக்குக் கிளம்பும் பேருந்து தான் சரியா இருக்கும்னு தோணவே, அதிலே செய்து கொண்டோம். பஸ் சூப்பர் டீலக்ஸ் பஸ் என்பதால் கட்டணமும் அதிகமாய் வாங்கினாங்க. சரினு வாங்கிட்டோம். அப்புறம் திரும்ப சத்திரம் வந்து விசேஷங்களில் கலந்து கொண்டு மதியம் சாப்பாடு ஆனதும், நாங்கள் ஏற்கெனவேயே பெரியகடைத் தெருவில் முன்பதிவு செய்து வைத்திருந்த வழக்கமான லாட்ஜுக்குப் போய் விட்டோம். அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் பக்கத்தில் இருக்கும் கோவிந்தபுரமும், திருவிசை நல்லூரும் பார்த்துட்டு வந்துடலாம்னு கிளம்பினோம். இரண்டும் கும்பகோணத்தில் இருந்து ரொம்பக் கிட்ட இருந்தது. ஆறு மணிக்குள்ளே வந்துடலாம். ஆகவே ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு கிளம்பினோம். கோவிந்தபுரம் போகும் வழியில் தான் தட்சிண பண்டரிபுரம் என்னும் கோயில் புதியதாய்க் கட்டப் பட்டு வருகின்றது.

ஜெயா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிறு அன்றும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் என்பவரின் பஜனைகளைக் காண்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். கீத கோவிந்தம் பாடல்களையும் பண்டரிநாதனின் புகழையும் பரப்பி வரும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் அவர்கள் திரு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு யாத்திரையும் சென்று வருகின்றார். இந்த வருடமும் செல்கின்றனர். இவர் ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களின் சீடர். அவரைப் போலவே நல்ல வளமான குரலும் இருக்கின்றது. ஞாயிறு அன்று காலை 6-30 மணி அளவில் பக்த விஜயம் என்னும் பண்டரிநாதரின் பக்தர்களின் கதைகள் பற்றியும் சிறு சொற்பொழிவு செய்து வருகின்றார். பண்டரி நாதன் பற்றியும், பண்டரிபுரம் பற்றியும் ஏற்கெனவே எழுதணும்னு பலமுறைகள் நினைச்சும் எழுத முடியலை. இனி பண்டரிநாதன் பற்றி, நாளை.

Tuesday, December 9, 2008

யாருக்கும் தெரியாதது!

நாங்க ஒவ்வொரு முறை கும்பகோணம் போறப்போவும் அநேகமாய்ப் பேருந்திலேயே போவோம். எனக்கு ரெயில் பிடிக்கும் என்பதாலேயே ம.பா.வுக்குப் பிடிக்காது. ஆனால் இப்போ எல்லாம் இந்த ரெயில் மார்க்கம் அடைபட்டதில் இருந்து வேறே வழி இல்லாமல் போச்சு. இல்லைனா, ஒரு வண்டியை ஏற்பாடு செய்துட்டுப் போவோம். அதுக்கு முடியாதப்போப் பேருந்து தான். அதிலேயும் இப்போப் பேருந்து கொஞ்சம் வசதிகளோடு இருக்கிறாப்போல் ஒரு எண்ணம் மனசில் அதனாலேயும். எந்தவித வசதிகளும் இல்லைங்கறது போய் அனுபவிச்சால் தான் புரியும். இந்த டிசம்பர் ஆறாம் தேதி கும்பகோணம் போகப் போறோம்னு ஆகஸ்டிலேயே தெரியும். அண்ணா பையர் கல்யாணம் கும்பகோணத்தில். பெரியம்மா பையர் தான் என்றாலும் உறவுமுறை இன்னும் நெருக்கமாய்க் கடைப்பிடித்து வருகிறதாலே கிட்டத் தட்ட 50 பேருக்கு மேலே போக ஏற்பாடு செய்யப் பட்டு மொத்த ஓட்டும் (என்னோட ம.பா. தவிர, அவர் வழி எப்பவும் தனி வழி!) ரெயிலுக்கே விழுந்ததால் ரெயிலில் ஒரு இரண்டு போகியை எங்க குடும்பத்துக்கு ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தென்னக ரயில்வேக்கு.

ஆக மொத்தம் டிசம்பரில் கும்பகோணம் பயணம் உறுதி செய்யப் பட்டது. ஆனால் நானோ அக்டோபரிலேயே விழுந்து, எழுந்து, வீட்டை விட்டு நகராமல், (எல்லாம் ம.பா.வோட பயம் தான் காரணம், நடக்கும்போதே விழுந்து வைப்பேனோனு பயம் அவருக்கு) படிதாண்டாப் பத்தினியாக இருந்து வந்ததால் எல்லாருக்கும் கொஞ்சம் சந்தேகம். ஆனால் நான் லேசில் விடுவேனா? அதிலும் ரெயில் பயணத்தை, எல்லாரோடயும் சேர்ந்து போய் எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன? ஆகவே கிளம்பிட்டோம் ஆறாம் தேதி கும்பகோணத்திற்கு. அன்னைக்குனு பார்த்து ஒரு வேளை மட்டுமே பிடிவாதமாய் வரும் வீட்டு வேலைகளில் உதவும் அம்மாவும் சொல்லாமல், கொள்ளாமல் விடுமுறை எடுக்க, ஏற்கெனவே நெஞ்சாக்கூட்டுக்குள்ளே இருந்து பட்சி கூவின கூவலில், நான் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து, வீடு எல்லாம் சுத்தம் செய்து, ஆயுசிலேயே முதல்முறையாக பாக்கிங்கையும் முன்னாலேயே செய்துவிட்டுத் தயார் ஆக, ஆச்சரியப் பட்டுப் போன ம.பா. உடம்பு ஒண்ணும் இல்லையேனு அக்கறையோடு விசாரித்தார்.

ராத்திரி 10-30-க்குத் தான் ரெயில். ஆனால் ரெயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாலும், ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகச் சோதனை போடுவதாலும் சீக்கிரமே வரும்படிக்கு அண்ணா தொலைபேசியில் ஒலிபரப்புச் செய்திருந்தார். ஆகவே 6---30 மணிக்கெல்லாம் வேலை செய்யும் அம்மாவின் சதித்திட்டத்தையும் முறியடித்துவிட்டு வெற்றிகரமாய்க் கிளம்பினோம். ஆட்டோ கொண்டு வரவும் ஆள் அனுப்பியாச்சு. என்னோட ம.பா.வுக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் போகணும் என்று ஆசை வர, எனக்கு அதுக்கு நேர்மாறாக செண்ட்ரல் வரை ரயில், அங்கிருந்து எழும்பூருக்கு ஆட்டோ என்று ஆசைவர, அந்த விவாதம் முற்றுப்பெறாமல் இருக்கும்போதே ஆட்டோ வந்துவிட்டது. எல்லாக் கதவையும் பூட்டியாச்சு. பெட்டிகளையும் ஆட்டோவில் ஏற்றியாச்சு. திடீரென வாசல் வராந்தாவில் இருந்து அலை ஓசை போன்ற சத்தம். பெரியதாய்க் கேட்டது. என்னனு புரியலை. ஒரே குழப்பம். ஒவ்வொரு இடமாய், ஒவ்வொரு மின்சாரம் விநியோகம் இருக்கும் இடங்களாய்ப் பார்த்தோம். எதுவும் இல்லை. சமையல் அறையை அப்போதுதான் எரிவாயு அடுப்பை மூடிவிட்டுப் பூட்டி இருந்தோம். ஆகையால் அங்கே இல்லை. மீண்டும், சோதனை, சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி என்றாக, நான் இன்வெர்டரை செக் பண்ணுங்கனு சொல்ல, அவர் அரை மனதோடு பூட்டிய கதவை எல்லாம் திறந்து இன்வெர்டர் இருக்கும் வாசல் அறையிலும் போய்ப் பார்க்க அங்கேயும் எதுவும் இல்லை.

அலை ஓசை நிற்கவே இல்லை. அப்போ வாசலில் இருந்த சோபா நாற்காலியில் இருந்து தான் அந்த சத்தம் வருதுனு என் மண்டையில் பல்பு பிரகாசமாய் எரிய அங்கே போய்ப் பார்த்தால் வீட்டைப் பாதுகாக்கும் நபரின் பை வைத்திருந்தது. அதிலிருந்து தான் சத்தம் விடாமல் வருது. உடனடியாக அட, ட்ரான்சிஸ்டர் ரேடியோ, வச்சிருப்பாரே, அதுதான் சத்தம் போடுது எனப் புரிய அவரிடம் கேட்டால் அசடு வழிந்து கொண்டு அட, ஆமாம் என்றார். அதுக்கப்புறம் நிம்மதியாய் மறுபடியும் கதவை எல்லாம் பூட்டிக் கொண்டு, சாவியையும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, இதுதான் சமயம் என்று நான் அம்பத்தூர் ஸ்டேஷனுக்குப் போங்கனு சொல்லி விட்டு உட்கார ஆட்டோவும் நகர்ந்தது.

ஆட்டோ டிரைவர் என்னைத் திட்ட ஆரம்பித்தார். நான் அம்பத்தூர் ஸ்டேஷன் போக இவர் ஏன் திட்டணும்னு பார்த்தால் ரோடு சரியாய் இல்லையாம். ஆகையால் ஆட்டோ விலையில் பாதியோ, அல்லது ஒருவாரத்துக்கான பெட்ரோல் பணமோ கொடுத்தால் தான் மேற்கொண்டு நகருவாராம். இல்லைனா இறங்குங்க என்று கறாராய்ச் சொல்ல, இந்த இடத்துக்கு ஆட்டோ வரதே பெரிய விஷயம், இந்த மழை நாளில், இவரைப் போய் விரோதித்துக் கொள்ள முடியுமா? சரினு ஒத்துக் கொண்டு போனோம். போகிற வழி எல்லாம் எங்களுக்கு முதலில் சாலையைப் போடும் வழியைப் பாருங்க என்று வித விதமாய் ஆலோசனை. விட்டால் அப்போவே உடனேயே கையில் பாண்டும், கொல்லுருவும் கொடுத்து ஜல்லிக்கும் ஆர்டர் கொடுக்கச் சொல்லிடுவார் போல் இருந்தது. ஆனால் கல்யாணத்துக்கு வரதாய் ஒத்துக் கொண்டு இருக்கோமே? ஆகவே அவரை மெதுவாய் சமாதானம் செய்து சரி, இனிமேல் ஒழுங்காய் இருக்கோம், அம்பத்தூரில் எங்கே சாலை போயிருந்தாலும் நாங்களே உடனே போய் சாலையை மராமத்துப் பண்ணறோம் என்றெல்லாம் ஒத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். போய் இறங்கி சாமானை எடுத்துக் கொண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு வரதுக்குள்ளே, ஏதோ அவசர காரியம் இருக்கிறாப்போல் அடுத்தடுத்து இரண்டு ரெயில்கள் போய்விட்டன.

செல்லில் அண்ணாவிடமிருந்து, அழைப்பு. என்னம்மா, மணி ஏழுக்கு மேலே ஆயிடுச்சு? நீ எப்போவும் முதல்லே வருவியே? இன்னிக்கு என்ன ஆச்சுனு கேட்டார். செல்லை மறக்காமல் எடுத்து வச்சுண்டதே பெரிய விஷயம். அவருக்கு பதில் சொல்லாமல் அசடு வழிந்துட்டு, வந்துட்டே இருக்கோம்னு சொல்லிட்டு அடுத்த வண்டிக்குக் காத்திருந்தோம்.