Saturday, October 31, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! 1


நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றும், ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீவித்யையை உபதேசித்ததும், சக்தி பீடங்களில் ஒன்றுமானது காஞ்சி என முன்னரே பார்த்தோம். காஞ்சி ஸ்ரீமந்நாராயணனின் இடுப்புப் பகுதியாகத் திகழ்வதாய்ச் சொல்லுவார்கள். அயோத்தி தலையாகவும், காசி மூக்காகவும், மதுரா கழுத்தாகவும், ஹரித்வார் மார்பாகவும், துவாரகை தொப்புளாகவும், அவந்தி காலடியாகவும் சொல்லப் படும். பஞ்சாமிர்த க்ஷேத்திரங்களில் ஒன்றாயும் சொல்லுவார்கள் காஞ்சியை. மற்றவை திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம் என அழைக்கப் படும் மேல்கோட்டை. ஸ்ரீ ராமாநுஜர் திருமஞ்சன கைங்கர்யம் இங்கே செய்து வந்த வேளையிலேயே பரந்தாமன் வைணவத் தலைமையை அவர் ஏற்கும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தான் என்றும் சொல்லுவார்கள். பரந்தாமனுக்கு இணக்கமான ராமாநுஜரைத் தியாகம் செய்ததால் தியாக மண்டபம் எனவும் வரதராஜப் பெருமாள் கோயில் அழைக்கப் படுகிறது.

பரமஞாநிகள் வாழ்ந்த இடமான காஞ்சியில் அருள் பாலிக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாளைக் கிருத யுகத்திலேயே பிரமன் வழிபட்டதாகச் சொல்கின்றனர். திரேதா யுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும் கலியுகத்தில் அநந்த சேஷனும் வழிபட்டனர். சரஸ்வதியின் கோபத்தைப் பரந்தாமன் போக்கிய தலம் இது. நாரதர், ஆதிசேஷம், பிருகு முனிவர், இந்திரன் ஆகியோரும் வழிபட்டிருக்கின்றனர். மஹாபாரதத்தில் குறிப்பிடப் படவில்லை என்றாலும் வில்லி பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையில் காஞ்சிபுரம் வந்து தீர்த்த ஸ்நாநம் செய்து மற்றும் ஏழு நதிகளில் நீராடியதாயும் சொல்லப் பட்டுள்ளது. பொய்கை ஆழ்வார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்தது இங்கேயே. பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீநிமாந்த மஹாதேசிகர், அப்பய்ய தீக்ஷிதர், புரந்தரர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மா ஆகியோரால் வழிபாடுகள் செய்யப் பட்டும் போற்றிப் பாடப்பட்டும் சிறப்புப் பெற்ற தலம்.

காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் பிரசாதமான மிளகுவடையும், அருமையாக இருக்கும் என்பதோடு பல நாட்கள் ஆனாலும் வீணாய்ப் போகாது என்பது இதன் தனிச்சிறப்பு. கோயிலின் குடையின் அழகும், வரதராஜர் பவனி வரும் பல்லக்கின் பல்லக்குத் தூக்கிகள் நடக்கும் நடை அழகும் மிகவும் பிரசித்தி பெற்றவை. வடை பிரசாதம் நேரடியாகக் கோயில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிச் சாப்பிடணும். எங்களுக்கு அன்று பிரசாதமாகக் காஞ்சிபுரம் இட்லி கிடைத்தது. சந்நிதிக்குள் நுழையும் இடத்தில் அன்றைய காலை வழிபாட்டின் நைவேத்யப் பிரசாதத்தை பட்டாசாரியார் விநியோகித்துக் கொண்டிருந்தார். அபூர்வமாய்க் கிடைத்தது. வெளியே ஸ்டால்களில் விற்பது பிரசாதம் அல்ல.

வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் போய் இறங்கியதுமே பலவிதமான துணிக்கடைகள். எல்லாமே கைத்தறிக் கடைகள் ஒவ்வொரு முறை செல்லும்போது பார்ப்பேன். பெரிய காஞ்சியை விட இந்த விஷ்ணு காஞ்சியிலேயே நிறையக் கடைகள் கைத்தறித் துணி விற்பவையாக உள்ளன. கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே தரிசனத்துக்குச் சென்றோம். தல வரலாறை பிரம்மாண்ட புராணத்தில் காணலாம் என்று சொல்கின்றனர். ஹஸ்திகிரி வரலாறு எனவும் சொல்லப் படுகிறது. பிருகு முனிவர் கேட்க நாரதர் சொன்ன அந்தத் தல வரலாறு பின் வருமாறு:

திருமகளுக்கும், கலைமகளுக்கும் யார் பெரியவங்க என்பதில் போட்டி வந்தது. பிரம்மாவிடம் போய்ச் சந்தேகம் கேட்க திருமகளே பெரியவள் என பிரம்மா தீர்ப்புச் சொல்லிவிடுகிறார். சரஸ்வதிக்குக் கோபம் வந்து சிருஷ்டிக்குப் பயன்படுத்தும் சிருஷ்டி தண்டத்தை எடுத்துக் கொண்டு பிரமனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். சிருஷ்டி தண்டம் இல்லாமையால் படைப்புத் தொழிலே நின்று போக மஹாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார் பிரமன். அவரை நூறு அஸ்வமேத யாகம் செய்யச் சொன்ன விஷ்ணு, பின்னர் திவ்யக்ஷேத்திரமான காஞ்சியில் ஒரு முறை செய்தாலே நூறு முறை செய்தாற்போல் ஆகும் எனச் சொல்லி அங்கே போகச் சொல்ல, பிரமனும் காஞ்சிக்கு வருகிறார். காஞ்சியில் யாகத்தைத் துவக்கிய பிரமன் சரஸ்வதியை யாகம் செய்யத் துணைக்கு அழைக்க, சரஸ்வதி வர மறுக்கிறாள். உடனே சாவித்திரியின் உதவியோடு யாகத்தைத் துவக்கினார் பிரமன். கோபம் கொண்ட சரஸ்வதி, அக்னி, அசுரர்கள் மூலம் யாகத்தைத் தடுக்க முயல, விஷ்ணுவின் உதவியால் அவை தடுக்கப் படுகின்றன. ஆனால் சரஸ்வதியோ நதியாக மாறி தனது நீர் உருவெடுத்து வேகமாய் வேகவதியாகப் பெருக்கெடுத்து ஓடி வருகிறாள். அவள் செய்யப் போவதை உணர்ந்த விஷ்ணு அங்கே தம் கால், கைகளைப் பரப்பிப் படுத்துக் கொண்டு அணை போல் குறுக்காகப்ப் படுத்துக் கொண்டு வெள்ளத்தின் வேகத்தைத் தடுத்தார். தன் வழியில் குறுக்கிட்ட விஷ்ணுவைக் கண்டு நாணம் அடைந்த சரஸ்வதி ஒரு மாலை போல் அவரைச் சுற்றிக் கொண்டு போய் பூமியில் அந்தரவாஹினியாக மறைந்தாள். யாகம் இனிதாய் முடிவடைய, யாகத்தில் ஜோதிப் பிழம்பாய், தீபப் பிரகாசராய் விஷ்ணு தோன்றினார். சிருஷ்டி தண்டத்தை பிரமனிடம் ஒப்படைக்க, பிரமன் அவரை அங்கேயே புண்யகோடி விமானரூடராக எழுந்தருளப் பிரார்த்திக்கிறார். பெருமாளும் அவ்வண்ணமே அங்கே எழுந்தருளுகின்றார்.

சிருஷ்டி தண்டத்தை பிரமனுக்கு அளித்த நாள் கிருத யுகம் ஐந்தாவது மன்வந்தரத்தில் யுவ வருஷம், விருஷப மாதம், சுக்லபக்ஷ சதுர்த்தசி அஸ்வ நக்ஷத்திரம் என்ரு சொல்லுவார்கள். மேற்கண்ட கேள்வியை இந்திரனிடமும் கேட்டதாகவும் இந்திரனும் திருமகளையே உயர்த்திப் பேசியதால் சரஸ்வதி அவனை யானையாக மாறும்படி சபித்ததாகவும், இன்னொரு வரலாறு கூறுகிறது. மகாலக்ஷ்மி இந்திரனை பிரஹலாதனிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்று ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெறும்படிச் சொன்னதாகவும், அதன் படி இந்திரன் இங்கே வந்து சாப விமோசனம் பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்திரனுக்கு ஸ்ரீநரசிம்மர் பிரத்யட்சமாகி அவனுடைய கஜரூபத்தை இரண்டாய்ப் பிளந்து சுயரூபத்தை அருளினார். அந்த நரசிம்ம மூர்த்தி, கஜரூபத்தையே மலையாகக்கொண்டு அங்கேயே குகை நரசிம்மராக எழுந்தருளி இருக்கிறார். ஹஸ்தி என்னும் யானை மலையாக மாறியதால் இந்தப்பகுதி ஹஸ்திகிரி எனப் படுகிறது.

நாங்க எடுத்த படம் சரியா வரலை என்பதாலும் அப்லோட் ஆவதில் நேரம் எடுப்பதாலும் போடமுடியவில்லை. வேலூர் ஜலகண்டேஸ்வரர், ரத்தினகிரி படங்கள் முடிந்தால் போடுகிறேன். :( காஞ்சியைக் குறித்த தகவல்கள் இன்னொரு புத்தகம் எழுதலாம் போல் நிறையவே இருக்கின்றன.

Friday, October 30, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பன் 2


இப்போ இருக்கும் மாமரம் பழைய மாமரம் இல்லைனு ஆதாரபூர்வமாய்த் தெரிய வந்தது. ஆனாலும் இதன் பழங்களும் வித்தியாசமான சுவையோடு இருக்கு, பழைய மரத்தின் கிளை அல்லது விதையிலிருந்து வந்ததுனு சொல்றாங்க. இந்த விஷயம் எனக்குப் புதுசு. போகட்டும். மூலவர் தழுவக் குழந்த நாதரையும், மூலஸ்தானத்திலேயே அம்மன் ஈசனை அணைத்த கோலத்திலேயே லிங்கம் காட்சி கொடுப்பதையும் கவனித்துத் தரிசனம் செய்யவேண்டும். அம்பாளே பிரதிஷ்டை செய்த மணல் லிங்கம் என்பதால் இந்த லிங்கத்திற்கு தேவிக லிங்கம் என்று பெயர். அபிஷேஹம் கிடையாது. காமாக்ஷி அம்மன் கோயிலின் ஸ்ரீசக்ரத்தை ஈசனை ஸ்தாபனம் செய்யச் சொன்னாளாம் அம்பிகை. முதன்முதல் இங்கே ஸ்ரீசக்ரம் ஸ்தாபனம் செய்தது ஈசனே என்றும், அம்பாளே இந்தப் பீடத்திற்குக் காமகோடி பீடம் என்ற பெயரில் விளங்கட்டும் என்று சொன்னதாகவும் தெரியவருகிறது. பூஜை முறைகளும் துர்வாச வடிவத்தில் ஈசனையே வகுத்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டாள் என்கின்றனர். ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே காமாக்ஷி கோயிலில் வழிபாடுகள், ஆராதனை எல்லாம் நடக்கும். இந்த ஸ்ரீசக்ரம் கிருத யுகத்தில் துர்வாசரும், த்ரேதாயுகத்தில் பரசுராமரும், த்வாபர யுகத்தில் தெளம்யரும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் பொலிவூட்டி வழிபட்டிருக்கின்றனர்.

பொதுவாக சிவசக்தி பிரிவதில்லை என்பதால் எல்லாச் சிவன் கோயில்களிலும் லிங்கத்தின் பக்கம் அம்மன் இருப்பது ஐதீகம். ஆனால் ஏகாம்பரேஸ்வரரின் லிங்கத்திலேயே அம்மனும் சேர்ந்து காட்சி கொடுக்கிறாள். அதோடு காஞ்சியில் எந்தச் சிவன் கோயிலிலும் அம்பிகை சந்நிதி கிடையாது. சிற்பங்களும், அழகாய் இருந்தாலும் படம் எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளது. வாரம் ஒருநாள் அம்மன் ஈசனைத் தழுவிய கோலம் தெரியும்படியான கவசத்தினால் அலங்கரிக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். உற்சவ அம்மனுக்கு ஏலவார் குழலி என்று பெயர். இந்தக் கோயிலில் தற்சமயம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் முன்னாட்களில் நூற்றுக் கால் மண்டபமாக இருந்து, பின்னர் பிற்காலச் சோழர்களால் ஆயிரக்கால் மண்டபமாய் மாற்றப் பட்டது என்றும் சொல்கின்றனர். தற்சமயம் காணப்படும் தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப் பட்டது என ஒரு கல்வெட்டுக் கூறுவதாயும் தெரியவருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை இங்கே கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.

இங்கே உள்ள கொடிமரத்தின் முன்னே, சிவகங்கை தீர்த்தத்தின் தென்கரையில் உள்ளது கச்சிமயானம் எனச் சொல்லப் படும் சந்நிதி. இங்கேதான் யாகசாலையில் பண்டாசுர வதம் நடந்தது எனச் சொல்லப் படும். சிவகங்கைத் தீர்த்தமே அம்மனும் ஈசனும் வளர்த்த நெய்க்குண்டம் தான் என்று சொல்லுகிறார்கள். இந்தக் கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி யாகசாலை நெருப்பிலிருந்து உண்டானது என்றும் சொல்கின்றனர். இங்கே உள்ள விநாயகர் விகட சக்ர விநாயகர் என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். வெளிப்பிராஹாரம் பெரியதாய் உள்ளது. நாங்க நிறையத் தரம் வந்து சுத்தி இருப்பதாலும், மேலும் பார்க்க, நடக்க நிறைய இடங்கள் இருப்பதாலும் வெளிப்ரஹாரம் சுத்தவில்லை. வெளியே வந்து வண்டி இருக்குமிடம் தேடினோம். நம்ம ஆகிரா இருக்கும் தெருவில் தான் வண்டியை நிறுத்தி இருந்தாங்க. அங்கே போய் உட்கார்ந்து கொண்டு மத்தவங்க வரதுக்குக் காத்திருந்தோம். எல்லாரும் வந்ததும், நாங்க கிளம்பினது திருப்புட்குழி. ஆனால் நாம் காஞ்சிபுரத்தின் வரதராஜரைப் பார்க்கலையே இன்னும். வரதராஜரைப் பார்த்துட்டுத் தான் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கே வந்தோம். ஆனால் வசதிக்காக் ஏகம்பனைப் பத்தி எழுதியாச்சு. அடுத்து கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!

படங்களே கொஞ்சம் தான் எடுக்க முடிஞ்சது. அதுவும் சரியா அப்லோட் ஆகலை, என்னமோ எந்தப் படமும் போடமுடியலை, ஓரளவுக்கு சிவகங்கை தீர்த்தம் படம் வந்திருக்கு, அதைப் போட்டிருக்கேன்.

Thursday, October 29, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பர்! 1


திருக்கச்சி ஏகம்பம் என அழைக்கப் படும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ காஞ்சி நகரைப் பற்றிய இன்னும் சில பெருமைகளைப் பார்ப்போமா?

முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சியும் ஒன்று என ஏற்கெனவே நாம் பார்த்தோம். அதோடு பஞ்ச பூதத் தலங்களில் பூமி அல்லது மண்ணுக்குரிய தலமாகவும் காஞ்சி சொல்லப் படுகிறது. இங்கே மூலஸ்தானத்தில் இருப்பவர் மணலால் பார்வதி பிடித்து வைத்த லிங்கமே எனவும் சொல்லப் படுகிறது. பிரளய காலத்திலும் அழியாத தலமாகச் சொல்லப் படுகிறது. ஆகையால் பிரளய சித்து எனவும் அழைக்கப் படுகிறது. அம்பிகை கம்பை நதியின் வெள்ளப்பருக்கைக் கண்டு அஞ்சி இறைவனைத் தழுவியதால் சிவபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. இங்கே பிரமனும் தவம் செய்திருக்கிறான். அந்தக் கதை வரதராஜர் கோயில் பத்திச் சொல்லும்போது வரும். ஆகக் கூடி பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இங்கே வாசம் செய்ததாலும், இன்னமும் திரிமூர்த்திகளின் அருள் இங்கே நிறைந்து இருப்பதாலும் திரிமூர்த்தித் தலம் அல்லது திரிமூர்த்தி வாசம் எனவும் அழைக்கப் படுகிறது.

கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே பழங்காலச் சோழர்களுக்கு இது தலைநகராய் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. அதன் பின்னரே பல்லவர்களும், அதற்குப் பின்னர் பிற்காலச் சோழர்களும் காஞ்சியைத் தலைநகராய்க்கொண்டு ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய,( நாம் இன்றும் படிக்கும்) பரிமேலழகர், சக்ரவர்த்தியாக வட நாட்டில் ஆட்சி புரிந்த ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் முன்னோடி காஞ்சி பல்கலைக் கழகம் எனவும், ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் இங்கே தான் கல்வியும், ஞானமும் பெற்றுச் சிறப்படைந்த தலம் இது. இத்தனை பெரியோர்களைச் சான்றோர்களாகக் கொண்ட காஞ்சிக்கு, “கல்வியிற்சிறந்த காஞ்சி” என்னும் பெயர் கிடைத்ததில் ஆச்சரியமே இல்லை அல்லவா?

இங்கே உள்ள சிவ காஞ்சியில் நாவுக்கரசர் காலத்துக்கு முன்பிருந்தே ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டிருந்திருக்கிறார். அதற்குச் சான்றாக இந்தக் கோயில் வளாகத்திலேயே சில கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கற்றளிக் கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப் பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பின்னர் கற்றளியாக மாறி இருக்கக் கூடும் எனவும், அதற்கு முன் செங்கல்லால் கட்டப் பட்ட கோயில் ஒன்று இருந்திருக்கிறது என்றும் அந்தக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது. எப்படி ஆனாலும் கிட்டத் தட்ட ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வருமாறு சொல்லப் படுகிறது.

ஈசனின் கண்களை விளையாட்டாகப்பொத்திய அம்பிகை மீண்டும் ஈசனை அடைய வேண்டி பூவுலகுக்கு வர நேர்ந்தது. முதலில் மாங்காடு என்னும் இடத்தில் பஞ்சாக்னி வளர்த்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த அம்மை, பின்னர் ஈசனைப் பூஜிக்க வேண்டி, காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றுக்கு அருகே மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தாள். அங்கேயும் ஈசனின் சோதனை தொடர்ந்தது. அம்பிகை மாமரத்தின் நிழலில் இருந்து ஈசனை வழிபட்டு வந்தாள். அப்போது அங்கேயும் வெப்பம் அதிகரிக்கச் செய்தார் ஈசன். தன் சகோதரனின் உதவியை நாடிய அம்பிகைக்கு ஈசனின் சடாமுடியில் இருந்த சந்திரனின் அமுத கிரணங்களால் குளிர்ச்சி ஊட்டினார் விஷ்ணு. அப்போது கங்கையை ஏவ, கங்கை தன் சகோதரி என்பதால் அவளைச் சமாதானம் செய்து கொண்டாள் அம்பிகை. ஆனால் வேகவதியாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்குமாறு ஈசன் செய்ய தான் மணலால் கட்டிய லிங்கம் அடித்துச் சென்றுவிடுமோ என பயந்த அம்பிகை தன் இரு கைகளாலும் அந்த லிங்கத்தை அணைத்துக் கொண்டார். அம்பிகையின் ஸ்பரிசம் பட்டதுமே உள்ளம் குளிர்ந்த ஈசன், அவளுக்குக் காட்சி கொடுத்தார். அம்பிகை தழுவியதால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரும் பெற்றார் ஈசன்.

இந்தக் கோயிலின் தல விருஷம் மாமரம். நான்கு கிளைகள் கொண்ட இந்த மாமரத்தில் நான்கு பருவங்களில் நான்கு வித சுவையோடு கூடிய வித்தியாசமான மாங்கனிகள் பழுக்கும். நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் எனச் சொல்லப் படுகிறது. இந்த மாமரம் மூவாயிரம் வருஷங்களுக்கும் முற்பட்டது என்று சொல்லுகின்றனர். நான் முதலில் பார்த்தபோது மாமரம் பரந்து விரிந்து இருந்தது. இப்போ அதன் கிளைகள் வெட்டப் பட்டுச் சுற்றிலும் கட்டடங்கள் எழுப்பப் பட்டு., நடுவில் அம்பிகையும், ஈசனும் இருக்குமிடம் ஒரு கோயில் போல் மாற்றப் பட்டு, அதற்குத் தனிச் சீட்டு என வைக்கப் பட்டு! கொடுமைடா சாமி! இத்தனையையும் பார்த்துண்டு இருக்கே, உனக்கே வேண்டி இருக்கோனு தோணுதே!

கோயிலுக்குள் நுழையும் இடம் முன்னாடி கடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இப்போக் கடைகளை அனுமதிச்சிருக்காங்க. :( படம் வெளிப் பிரகாரத்தில் மட்டுமே எடுக்க முடிஞ்சது. உள்ளே காமிராவைக் கொண்டு போக முடியலை!

Tuesday, October 27, 2009

என் பயணங்களில் - காஞ்சி காமாக்ஷி 2

காமாக்ஷி சந்நிதிக்கு நேரே அவளை வணங்கிய கோலத்தில் துண்டீர மகாராஜாவின் சந்நிதி இருக்கிறது. உற்சவ காமாக்ஷி சந்நிதியில் இருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரையிலும் மெளனமாய்ச் செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கே பிரமனால் பூஜிக்கப் பட்ட முழுதும் தங்கத்தால் ஆன சொர்ண காமாக்ஷி இருந்தாள். பிரமன் அம்பிகைக்கும், அப்பனுக்கும் திருமண உற்சவம் காணவேண்டிப் பிரார்த்திக்க, ஏகாம்பரேஸ்வரருக்கு உகந்த ஏகாம்பிகை அம்பிகையின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினாள். பின்னர் அதே போன்ற தங்கத்தாலான மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்ய அவளே பங்காரு காமாக்ஷி எனப்பட்டாள். இந்த பங்காரு காமாக்ஷியை முகமதியர் படை எடுப்பின் போது அவர்களிடமிருந்து காக்க எண்ணி, அப்போது காஞ்சி பீடத்தின் பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பங்காரு காமாக்ஷியைக் கோயில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு உடையார்பாளையம் ஜமீனுக்குக் கொண்டு சென்றார். வழியில் தஞ்சையை ஆண்ட மராட்டி அரசன் பிரதாப சிம்மனது விருப்பத்தின் பேரில் அங்கே தங்க, மன்னனின் வேண்டுகோளின்படி புதிதாய்க் கட்டப் பட்ட ஆலயத்தில் அந்த பங்காரு காமாக்ஷி பிரதிஷ்டை செய்யப் பட்டாள். காஞ்சி அர்ச்சகர்களில் சிலரே இங்கும் குடி வந்து வழிபாட்டைத் தொடர்ந்தனர். சியாமா சாஸ்திரிகள் இந்த மரபில் வந்தவரே.

பாரதம் முழுதும் கால்நடையாகவே பயணம் செய்து இந்துமதத்தின் வழிபாடுகளை ஆறுவகையாகப் பிரித்து அத்வைதத்துக்குப் புத்துயிர் கொடுத்த ஆதிசங்கரர் காஞ்சியில் காமாக்ஷியின் முன்பாக ஸ்ரீசக்ர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது காஞ்சியை ஆண்ட மன்னனிடம் அம்பாளை நடுவில் வைத்து ஸ்ரீசக்ர வடிவில் காஞ்சியைப் புனர் நிர்மாணமும் செய்யச் சொன்னார். ஸ்ரீசங்கரர் அங்கேயே மன்னனின் வேண்டுகோளின்படி சர்வக்ஞபீடமும் ஏறினார். காஞ்சியிலேயே முக்தியும் அடைந்தார். காமாக்ஷி கோயிலில் ஆதிசங்கரருக்குத் தனிச் சந்நிதியும், உற்சவர் சிலையும் உண்டு. காஞ்சிமரமே இந்தக் கோயிலின் தல விருக்ஷம் ஆகும். இந்தக் கோயிலின் ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு திசையில் அமைந்துள்ளது. இங்குள்ள எந்தச் சிவன் கோயிலிலும் அம்பாள் சந்நிதியே கிடையாது. காமாக்ஷி ஒருவளே அனைத்துச் சக்தியையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அனைத்துக் கோயில்களுக்கும் ஒரே சக்தியாக விளங்குகிறாள். கையில் கரும்பு வில்லை வைத்துக் கொண்டு காக்ஷி அளிக்கும் காமாக்ஷி அந்த மன்மதன் திரும்ப உயிர் பெறக் காரணம் ஆனவள்.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் முக்கோண வடிவக் கருவறை ஆகும். பிரகாரம் மூன்றரைச் சுற்றுக் கொண்டது. ஸ்ரீசக்ரத்தின் பிந்துமண்டலத்தில் முக்கோணத்தில் உறைபவள் என்பதைக் குறிக்கும் வண்ணம் கருவறை முக்கோண வடிவிலும், நம் உடலில் சுருண்டிருக்கும் குண்டலினி மூன்றரைச் சுற்று என்பதைச் சுட்டும் வண்ணம் மூன்றரைச் சுற்றுப் பிராகாரமும் அமைந்துள்ளது என்பார்கள். இந்தக் கோயிலில் அம்மன் பிராகாரத்தைச் சுற்றி வலம் வர முடியாது. காமாக்ஷி கோயிலின் ஒரு புறம் வரதராஜப் பெருமாள் கோயிலும் மறுபுறம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் அமைந்திருப்பது அம்பாளின் திருக்கல்யாணத்தை நினைவு படுத்துவதாக அமைகிறது. குமரகோட்டமோ எனில் காமாக்ஷி கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்து சோமாஸ்கந்த மூர்த்தியை நினைவு மூட்டுகிறது. அடுத்து அஞ்சன காமாக்ஷி எனப் பெயர் சூட்டப் பட்ட ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மியும், அவளைக் காணத் திருட்டுத் தனமாக அங்கே வந்த கள்ளனையும் காணலாமா???

ஒருசமயம் வைகுந்தவாசன் ஆன மஹாவிஷ்ணுவோடு உற்சாகமாயும், உல்லாசமாயும் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி, விளையாட்டாகத் தன் நாதனைக் கறுப்பன் என அழைக்க, மஹாவிஷ்ணுவோ, கறுப்பனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? எனக் கேட்டார். பாற்கடல் தேவியின் பொன்வண்ணத்தினால் பொன் மயமாய் ஜொலிக்க அந்த ஜொலிப்பில் மாயக் கண்ணனான மஹாவிஷ்ணுவின் நிறமும் தங்கமாய் ஜொலித்ததாயும், அதில் ஏமாந்துவிட்டதாகவும் சொன்னாள் ஸ்ரீ. மஹாவிஷ்ணுவும், இப்போது கொஞ்சம் நம் திருவிளையாடல்களைக் காட்ட நேரம் வந்துவிட்டது என எண்ணி, இவ்வுலகில் தங்கள் மேனி அழகை மெய்ம்மறந்து ரசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, “லக்ஷ்மி, உனக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ அழகாய் இருப்பதால் தானே இந்த அளவுக்குப் பெருமை? உன் அழகெல்லாம் இழந்து நீ பூவுலகில் திரிவாய்.” என்று சொல்ல, பதறிய லக்ஷ்மி, இதற்கு என்ன விமோசனம் எனக் கேட்க, இப்போது என் அருமை சகோதரி காமாக்ஷியைப் போய்க் கேள், அவள் உனக்கு உதவுவாள் என்று அனுப்பிவிடுகிறார்.

காஞ்சி வந்த லக்ஷ்மி காமாக்ஷியை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தாள். காமாக்ஷி கறுத்த லக்ஷ்மியை “அஞ்சன காமாக்ஷி “ என அன்போடு அழைத்தாள். மேலும் அவளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளிக்கப் படும் குங்குமப் பிரசாதத்தை அவர்கள் அஞ்சனகாமாக்ஷிக்குச் சார்த்தியபின்னரே இட்டுக் கொள்ளுவார்கள். இப்படி பக்தர்கள் இட்ட குங்குமத்தினால் நீ இழந்த உன் பொன் வண்ணமும் பெறுவாய் . உன் திருமேனியைத் தொட்டு வணங்கும் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் நீ வழங்குவாய்!”எனச் சொல்கிறாள். அதன்படி சாப விமோசனம் பெற்றுப் பொன் வண்ணம் அடையும் லக்ஷ்மியைக் காணவேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவுக்கு உண்டாக, அவர் எவரும் அறியாமல் திருட்டுத் தனமாய் அங்கே வர, சகோதரிக்குத் தெரியாதா என்ன?

அண்ணனைக் கண்டு அவள், வாராய் கள்ளா! என அழைக்க, மாதவனும், லக்ஷ்மியும் சேர்ந்தனர். ஆகவே இங்கே அஞ்சனகாமாக்ஷி, செள்ந்தர்ய லக்ஷ்மி ஆகியோரோடு மஹாவிஷ்ணுவையும் காணமுடியும். ஆனால் இவை எல்லாமும் நாம் உள்ளே சென்றால்தான் பார்க்கமுடியும். வெளியே இருந்து பார்க்கமுடியாது. ஒருவேளை மஹாவிஷ்ணுவையாவது பார்த்துவிடலாம். அஞ்சன காமாக்ஷி உள்ளே காமாக்ஷிக்கு வெகு அருகிலேயே இருப்பதால் நம்மால் பார்க்க இயலவில்லை. கோயில் நிர்வாகம் தான் பக்தர்களுக்கு இவற்றைத் தரிசனம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். மஹாவிஷ்ணு இருப்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாய்க் கூறப் படுகிறது. விஷ்ணுவின் திருநாமம் கள்வர் பெருமாள் என்றே சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டிருக்கிறது.

அம்பாள் சந்நிதி நுழையும் இடத்தில் மேலே நெமிலி ஸ்ரீபாலாவின் சித்திரம் இடம்பெற்றுள்ளது. காமாக்ஷி அவதாரம் சிறப்பு வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. சக்தியின் அம்சமான காமாக்ஷி என்ற பெயரின் அர்த்தத்துக்கு பக்தர்கள் விரும்பியதைத் தருவாள் என்ற பொருளில் வரும். காமாக்ஷியின் கண்களின் திரிவேணிசங்கமமும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். கண்மணி கறுப்பு விழிகள் வெண்மை, அதில் ஓடும் செவ்வரிகள் முறையே கங்கை, யமுனை,சோனபத்ரா என்று சிலரும் /சரஸ்வதியைக் குறிக்கும் என்று சொல்கின்றனர். 24 அக்ஷரங்களைக்கொண்ட காயத்ரி பீடத்தின் நடுவே பஞ்ச பிரம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகாமாக்ஷி நம் ஐம்புலன்களையும் வசப்படுத்தி நம்மைத் தன்பால் ஈர்ப்பதற்காகவே அவதரித்திருக்கிறாள். அனைவரும் ஸ்ரீகாமாக்ஷியின் பாதங்களில் பணிவோம். அழகான காஞ்சியில் புகழாக வீற்றிடும் அன்னை காமாக்ஷி உமைக்கு நம் நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.

இதற்கடுத்துக் காலை உணவு அருந்தியபின்னர் முறையே வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் சென்றோம். முதலில் ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்துவிடுவோமா???

Sunday, October 25, 2009

என் பயணங்களில் - காஞ்சிபுரம் காமாக்ஷி! 1

சுருக்கம்னு சொன்னதும் கொத்தனார் பயந்துட்டார். நிஜமாவே சுருக்கிடுவேனோன்னு. நமக்குத் தான் அது வழக்கமே இல்லையே. இந்த ட்ராவல்ஸ்காரர் இருக்காரே, இவர் தான் இதுவரைக்கும் நாங்க போனதிலேயே சிறந்த சுற்றுலா நடத்துநர். ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டார் எல்லாரையும். முக்கியமாச் சாப்பாடு விஷயத்திலே ஏமாத்தலை. மந்திராலயம், நவ பிருந்தாவனம் முதல் முறை போனப்போ ட்ராவல்ஸ்காரர் மூன்று நாட்களும் கிட்டத் தட்ட எங்களை விரதமிருக்கச் சொல்லலை. சாப்பாடே சரியாக் கொடுக்கலை. பலரும் திண்டாடினாங்க. இங்கே அதுமாதிரி நடக்கலை. ட்ராவல்ஸ் விலாசம். கடைசியிலே கொடுக்கிறேன். இப்போ காமாக்ஷி அம்மன் பற்றிய ஒரு குறிப்பு.

சக்தி பீடங்களில் ஆகாயத் தலமாகவும், பஞ்ச பூதத் தலங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாகவும் விளங்குவது காஞ்சிபுரம். “நகரேஷு காஞ்சி” என்று பாரவி /( சிலர் காளிதாஸன் என்று சொல்கிறார்களே?? நான் படிச்சது பாரவினு தான்.) என்னும் மஹாகவியாலும், “கல்வியிற் சிறந்த காஞ்சி” என்று தமிழ்நாட்டுக் கவிஞர்களாலும், (யாருங்க சொன்னது??) புகழப்பட்ட காஞ்சி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலத்திலேயே தோன்றியது. காஞ்சி புராணமே எழுதலாம். சிதம்பர ரகசியத்துக்குப் போட்டியா அமையும். செண்பகவனம் என ஒரு காலத்தில் செண்பகக்காடாக இருந்த இடமான காஞ்சிக்குப் பல பெயர்கள் உண்டு. அதை எழுதினா மத்தது எழுத முடியாது. சுருக்கமா அம்பிகையின் நாபி விழுந்த இடம் காஞ்சி என்று சொல்லுவார்கள். மோக்ஷபுரிகளில் ஒன்றாகவும் காஞ்சி மட்டுமே தென்னிந்தியத் தலங்களில் இடம் பெற்றுள்ளது.

பாலாற்றங்கரையில் அமைந்த காஞ்சி நான்கு கோட்டங்களைக் கொண்டது. புண்ணியகோட்டம் என்னும் விஷ்ணு காஞ்சி, ருத்ர கோட்டம் என்னும் சிவகாஞ்சி, குமரகோட்டம் என்னும் சுப்ரமண்யரின் திருக்கோயில் இருக்குமிடம், காமகோட்டம் என்னும் ஸ்ரீகாமாக்ஷியின் கடைக்கண் பார்வை கிடைக்குமிடம் ஆக நான்கு கோட்டங்கள். மற்ற ஊர்க்கோயில்கள் அனைத்தும் கிழக்கோ, மேற்கோ பார்த்து அல்லது வடக்குப் பார்த்து அமைந்தால் காஞ்சியின் கோயில்கள் அனைத்துமே அன்னையின் கடைக்கண் பார்வைக்காக காமாக்ஷி அம்மன் கோயிலையே பார்த்த வண்ணம் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களின் உற்சவங்களின் போது வீதி உலா வரும் மூர்த்தங்கள் காமாக்ஷி அம்மன் கோயிலைச் சுற்றியே செல்லும் எனக் கேள்விப் படுகிறோம். மேற்குறிப்பிட்ட நான்கு கோட்டங்கள் தவிர, ஜைனகாஞ்சி, புத்த காஞ்சி என்றும் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இதில் புத்த காஞ்சியானது தற்போதைய பெரிய காஞ்சிபுரத்திலே அடங்கிவிட்டது எனவும், ஜைனகாஞ்சி அருகில் உள்ள திருப்பருத்திக்குன்றதைச் சொல்லப் படுகிறது என்றும் சொல்கின்றனர். ஜைனர்களின் கோயில்கள், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்குமிடங்கள் என இன்றும் அங்கே ஜைனர்கள் இருப்பதாயும் சொல்லுகின்றனர்.

காமாக்ஷி அம்மன் பிலத்துவாரத்தில் இருந்து தோன்றியவள் . பண்டாசுரனை அழிக்கத் தோன்றிய அன்னை, பண்டாசுரனை வதைத்ததும், அம்பாளின் கட்டளைப்படி காயத்ரி மண்டபம் அமைக்கப் பட்டு, கன்னியான அம்பிகை அங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டாள். பின்னர் அந்த மண்டபம் மூடப் பட்டு, இரவு முழுதும் அம்பிகையை துதித்தவண்ணம் அனைவரும் வெளியிலேயே நின்றார்கள். அருணோதய காலத்தில் கதவு திறக்கப் பட்டது. உள்ளே பார்த்தால் கன்யா ரூபமாய் உள்ளே சென்ற அம்பிகை, சர்வாலங்கார பூஷிதையாக, நான்கு புஜங்களுடன், பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டனர். இப்படித் தோன்றிய காமாக்ஷியைத் தான் இன்றும் நாம் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஈசனைத் திருமணம் செய்து கொள்ளுவதற்காகத் தன்னைச் சுற்றிப் பஞ்சாக்கினி வளர்த்து தவத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை மணலால் சிவலிங்கம் பிடித்துப் பூஜை செய்ய, இறைவன் அம்பிகையின் பக்தியைச் சோதிக்க எண்ணிக் கம்பாநதியில் வெள்ளப் பெருக்கை உண்டாக்க, சிவலிங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் போல் ஆகிவிட்டது. அம்பிகை மாசி மாதமும், பங்குனி மாதம் கூடும் சமயம் இருக்கும் விரதமான காரடையான் நோன்பு இருந்து, மணல் லிங்கத்தை அணைத்தவண்ணமே வழிபாடுகள் செய்ய, இறைவன் அருள் கிடைத்தது. அடுத்து நாம் பார்க்கப் போகும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில், லிங்கத்தை அணைத்த வண்ணமே அம்பாள் இருக்கும் மூலஸ்தானத்தைத் தான் பார்க்கப் போகிறோம்.

ஆதிசக்தியை ராஜராஜேஸ்வரியாக வழிபட்ட பிரம்மன் பூஜித்த தாமரை மலர் ஒன்று மானுடனாக மாறி விண்ணில் இருந்து பூமிக்கு வர, அவனுக்கு ஆகாச பூபதி என்ற பெயருடன் காஞ்சியை ஆண்டுவரச் செய்தனர். அவன் குழந்தைப்பேறுக்காகத் தவம் இருக்க விநாயகரை அவனுக்கு மகவாகப் பிறக்கும்படி அருளுகின்றாள் அம்பிகை. குழந்தைக்குத் துண்டீரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த வேளையில், அரசன் நடத்திய சுமங்கலி போஜனத்தில் அவன் அறியாமல் காமாக்ஷியும் கலந்து கொள்ள, குழந்தையாய் வந்த விநாயகரை தாயைக் கண்டு தவழ்ந்து அவளிடம் செல்ல, அன்னை மறைந்தாள். அன்னை அருந்திய உணவில், அரசியின் மாலையின் முத்து ஒன்று பருப்போடு கலந்து அன்னையின் வயிற்றில் போக, தான் எடுத்துக் கொண்ட ஒரு தங்க முத்துக்காக, நகரம் பூராவும் தங்கமாய் வருஷிக்கச் செய்தாள் அன்னை. துண்டீரன் ஆண்டதாலேயே இந்தப் பகுதி தொண்டை நாடு என்ற பெயரும் பெற்றது.

படங்கள் கூகிளார் தயவுதான். படம் எடுப்பது கடுமையாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது. சில கோயில்களில் வெளியே உள்ள ராஜகோபுரம் மட்டுமே எடுக்க முடிந்தது.

Sunday, October 18, 2009

என் பயணங்களில் சில இடங்கள்!

சென்ற வாரம் ஞாயிறன்று ஒரு சிறு சுற்றுலா சென்றோம். அநேகமாய் நாங்க போன சுற்றுலாக்களில் எல்லாம் கசப்பான அனுபவங்களே நிறைய. ட்ராவல் டைம்ஸ், இந்திய ரயில்வேயின் சுற்றுலாவில் சென்றது தவிர. அதிலே கூட்டம் நிறைய. ஐந்நூறு பேர்கள் சென்றோம். ஆனாலும் ஒவ்வொரு பெட்டிக்கும் தனியான ஆட்கள் கவனிப்பு இருந்ததால் சமாளித்தார்கள். திறமையான நிர்வாகமும் சேர்ந்து கொண்டு சுற்றுலா பரிமளித்தது. தனியார் நடத்தும் சுற்றுலாவில் பெரும்பாலும் ஏமாற்றங்களே. கைலை யாத்திரையின் போதும் ஒருசில நடந்தாலும், மந்திராலயம், நவபிருந்தாவன் சென்ற சுற்றுலாவில் தான் அதிகமாய் ஏமாந்தோம். அந்தப் பிரயாணத்தில் பங்கு பெற்ற அனைவருக்குமே பிரயாணம் ரசிக்கவில்லை, என்பதோடு, யாருக்கும் சொன்னபடி சாப்பாடும் விநியோகிக்கப் படவில்லை. பலரும் பசியில் கஷ்டப்பட்டனர். அதனாலேயே நாங்க அநேகமாய்த் தனியாகவே போவோம். ஆனால் இப்போ சில நாட்களுக்கு முன்னர் வேலூர் ஸ்ரீபுரம் செல்லவேண்டும் என்ற ஆவலில் என்னோட கணவர் அம்பத்தூரில் இருந்தே கிளம்பும் ஒரு ட்ராவல்ஸிடம் முன் பதிவு செய்துவிட்டார்.

எனக்கு அரை இல்லை இல்லை கால் மனசு தான். உடனேயே தீபாவளி வருகிறது. ஏற்கெனவே வேறுவிதங்களில் அலைச்சல் அதிகம். இப்போ வேறே அலையணுமானு. ஆனாலும் அவருக்கு இது பணமும் மிகவும் குறைவு. நிறைய இடங்கள் கூட்டிச் செல்கிறார்கள் என்றும், அம்பத்தூரில் இருந்தே கிளம்புவதால் நமக்கும் வசதி என்றும் சமாதானம் செய்தார். கிட்டத் தட்ட இதை மறந்தே விட்டேன். திடீர்னு பார்த்தா போகும் நாள் நெருங்கிவிட்டது. அப்போ பார்த்து வலைப்பதிவர் ஒருவர் ஸ்ரீபுரம் போயிட்டு வந்து எழுதி இருந்தார். தற்செயலாக அது கண்ணில் பட, அங்கே போய்ப் படிச்சால் ஸ்ரீபுரம் கோயிலுக்குச் செல்லும் வழிமுறைகளைப் பார்த்தால் பல மைல்கள் நடக்கணும்னு தெரிஞ்சது. நம்மால் முடியுமா? வழக்கமான கேள்வி எழுந்தது எனக்குள்ளே. உடனேயே செய்தியை அஞ்சல் செய்தேன். அவரும் உடனேயே ட்ராவல்ஸ்காரர் கிட்டே கேட்டார். ட்ராவல்ஸ்காரரோ அதெல்லாம் ஒண்ணுமே இல்லை, தாராளமாய் நடக்கலாமென்று பச்சைக் கொடி காட்டிட்டார். இவரும் சரினு கிட்டத் தட்ட என்னை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.

முதல்நாளில் இருந்தே எல்லாவற்றுக்கும் மனசைத் தயார் செய்து கொண்டேன். கிளம்பும் அன்று காலை எழுந்து குளித்துமுடித்துக் காலை உணவுக்குத் தயார் செய்து வைத்துக் கொண்டு கிளம்பினோம். அவங்க எப்போ டிபன் கொடுப்பாங்கனு தெரியாதே? எதுக்கும் இருக்கட்டும்னு சாப்பாடு கையில். ஐந்து மணிக்கு வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கடை வாசலில் காத்திருக்கச் சொன்னாங்க. நடந்தே போய் அங்கே காத்திருந்தோம். சில நிமிஷங்களில் பேருந்தும் இல்லாமல், சிற்றுந்தும் இல்லாமல் ஒரு மகிழுந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டோம். எங்களுக்கு முன்னால் இன்னும் சிலர் ஏறி உட்கார்ந்திருந்தனர். பின்னர் மற்றும் சிலரை அழைக்கப் பேருந்து சென்றது. அம்பத்தூர் முடிஞ்சதும், வழியில் ஆவடியில் சிலர் ஏறிக் கொண்டனர். மொத்தம் பஸ் ஓட்டுநரையும் , ட்ராவல்ஸ் நடத்துநரையும் சேர்த்து இருபது பேர் இருந்தோம். இதற்குள்ளாக மணியும் ஆறு ஆகிவிட்டது. முதலில் காஞ்சி காமாக்ஷி அம்மனைத் தரிசிப்பதாகத் திட்டம். காஞ்சியை நோக்கி வண்டி சென்றது. காமாக்ஷி அம்மனைப் பல முறைகள் தரிசித்திருக்கிறேன். என்றாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி காக்ஷி கிடைக்கும். சென்ற வருடம் ஆகஸ்டில் சென்றபோது தான் அரூபலக்ஷ்மியைத் தரிசனம் செய்ய முடிந்தது. பஸ் போகட்டும். இப்போ காமாக்ஷி பத்தின சில விபரங்கள் பார்ப்போமா? கோயில் வந்து சேர்வதற்குள் சுருக்கமாய்ப் பார்ப்போம்.

Saturday, October 10, 2009

சங்கிலித் தொடரில் ஒரு மொக்கை!

கவிநயா மறுபடியும் ஒரு சங்கிலித் தொடர் கொடுத்திருக்காங்க. இதுக்கு யாரையானும் நானும் அழைக்கணுமாம். யாரை அழைக்கிறது? எல்லாரும் பேசக் கூட நேரமில்லாமல், மத்தவங்க போடற பதிவுகளைப் படிக்கவும் நேரமில்லாமல் இருக்காங்க. இந்த அழகிலே யாரைக் கூப்பிடறது? வழக்கம்போல் இதிலேயும் யாரையும் கூப்பிடலை. எண்ணங்கள் வலைப்பக்கத்திலேயும் போடலை. இங்கே போணியாகுதானு பார்க்கலாம்! :))))))))

முதல்லே காதல்: காதல் என்ற வார்த்தையின் அர்த்தமே மாறி இருக்கும் இந்நாட்களில் காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவதை மட்டுமே குறிக்கிறது. சமீபத்தில் இணையத்தில் தமிழமுதம் குழுமத்தில் இந்த வார்த்தையே இப்போ சமீபத்தில் வந்தது தான் என ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் எழுதி இருந்தார். திருஞானசம்பந்தர், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதை” அவர் தெரிந்து கொள்ளவில்லையா, மறந்துட்டாரானு புரியலை. திருவாசகத்தில் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் மாணிக்க வாசகர், “சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச்சரண் சரணாமெனக் காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!” என்று சொல்லிக் காதலால் ஈசனை ஓதியதைக் குறிப்பிடுகிறார். இம்மாதிரிப் பல உதாரணங்கள் காட்டமுடியும். தேவாரம், திருவாசகத்தில் இருந்து. இதிலேயே கடவுளும் வந்துவிடுகிறார். கடவுளிடம் மாறா பக்தியுடன் இருப்பதையே குறிப்பிடலாம், காதலுக்கும், கடவுளுக்கும். ஆகவே காதல் என்பது அன்பு செலுத்துவதைக்குறிக்கும் என்ற அளவில் புரிந்துகொண்டு எழுதுகிறேன். இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தலாம். மரம், செடி,கொடிகள், பறவைகள், பிராணிகள், மலை, மடு, நதி, கடல் என அனைத்திடமும் காதல் கொள்ளலாம். அதெல்லாம் உங்க இஷ்டம். எல்லாவற்றையும் மாறாக் காதலுடன் நேசிக்கக் கற்றுக் கொண்டோமானால் உலகில் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பதோ, பழி தீர்ப்பதோ, இருக்காது என்றும் தோன்றுகிறது.

கடவுள்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.”

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


அழகு: அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற பாடல் தான் முன்னாடி நினைவில் வருது. அழகு என்பது ஒவ்வொருத்தர் கண்ணோட்டத்திலும் மாறுபடும். நிறமோ, செம்மையான உடல்கட்டோ, முக அழகோ அழகோடு சேர்க்கமுடியாது என்பதையும் அனைவரும் அறிவார்கள். வயதான எம்.எஸ். அம்மாவின் முக காந்தியும், டி.கே.பட்டம்மாள் அம்மாவின் முக காந்தியும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அது அவங்க உள்ளுக்குள்ளே செய்த இசை என்னும் தவத்தால் வந்தது. அதுவும் இறை உணர்வோடு இசை என்னும் தவத்தை விடாமல் செய்தாங்க. ஆகையால் நாமும் அந்த உணர்வை விடாமல் நம் ஒவ்வொரு வேலையிலும் இறை உணர்வை நிரப்பினாலே போதும். வேலை செய்த களைப்பும் இருக்காது. அழகும் கூடும்.

பணம்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பணம் தேவைக்குக் கிடைப்பது கூட இறைவன் அருளாலேயே. அதையும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இப்படி நம் வாழ்க்கையில் காதலோ, அழகோ அல்லது பணமோ எதுவேண்டுமானாலும் அது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். என்றாலும் பணத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் அதிகமாய் எழுத நினைக்கிறேன். கூடியவரையில் பணத்தை நாம் துரத்தாமல் இருக்கப் பழகணும். தேவைக்குக் கிடைச்சால் அதுவே அதிகம் என்ற மனப்பான்மை வளரவேண்டும்.

அப்பா வீட்டில் அப்பா ஒரே சிக்கனம். தேவையானதுக்குக் கூட செலவு செய்யமாட்டார். ஆனால் ஒரு பட்டுப் புடைவை, நகை என்றால் அவர் உடனே வாங்குவார். எனக்கு இது விசித்திரமாய் இருக்கும். பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் சுணக்கம் காட்டி இருக்கார். தீபாவளிக்குப் பட்டுப் பாவாடை, புடைவை என்றால் தயக்கமே இன்றி வாங்குவார். இங்கே திருமணம் ஆகி வந்தாலோ, எல்லாமே நேர்மாறாக இருந்தது. இதிலே சிக்கனம் என்றால் நம்ம ரங்ஸோட சிக்கனம் தான். ஏற்கெனவே நான் இழுத்துப் பிடிக்கிற டைப். ட்ரெயினிங் அப்படி! இவரோ அலுவலகத்தில் மேஜர்களையும், கர்னல்களையும் கணக்குக் கேட்கும் மனுஷர். சபாஷ், சரியான போட்டினு சொல்றாப்போல இரண்டு பேரோட சிக்கன நடவடிக்கைகளாலேயே எல்லாரும் வெறுத்துப் போயிட்டாங்கனா பாருங்களேன்! இதிலே நான் செலவாளினு என்னை அவரும், நீங்க தான் இஷ்டத்துக்கு சாமான்களை வாங்கறீங்கனு நானும் சொல்லுவேன். எங்க வாழ்க்கையில் நாங்க பணத்துக்குத் தவிச்ச நாட்கள் , மாதங்கள், வருடங்கள் என உண்டு. ஆனாலும் சமாளிச்சோம்.

வேலையை விட்டிருக்கவேண்டாமேனு கேட்டவங்க உண்டு. எனக்கு மாநில அரசு வேலை. அவருக்கு அடிக்கடி மாற்றல் ஆகும் மத்திய அரசு வேலை. இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் தான் இது சாத்தியம். வேலை செய்வதன் மூலம் வரும் பணமா? இல்லை குடும்பமா? குழந்தையா? என்ற கேள்வி வந்தபோது நான் பின்னதையே தேர்ந்தெடுத்தேன். என்னோட அம்மா குழந்தையைப் பார்த்துக்கத் தயார்தான். அப்போ பெண் மட்டும் தான். ஆனாலும் எனக்கு விட இஷ்டமில்லை. மூன்று வயசு வரைக்கும் அந்தக் குழந்தைகள் செய்யும் செயல்களைக் கண்டு ரசிக்கணும். சின்ன வயசிலே இருந்து நான் குழந்தைகளோடேயே பழகினவள் வேறே. பெற்ற குழந்தை என்ன செய்யறது, எப்படி விளையாடறதுனு பார்க்கவேண்டாமா? அனுபவிக்க வேண்டாமா? மேலும் குழந்தைகளுக்கு அம்மாவின் அருகாமை பதினைந்து வயது வரையிலும் கட்டாயம் தேவை. ஒருவேளை வேலைக்குப் போயிருந்தால் இன்று பணம் நிறைய இருந்திருக்கும்தான்.

இத்தனை கடமைகளுக்கிடையிலேயும் நாங்க வீடு கட்டியதே ஒரு சாதனைனு சொல்லிக்கலாமோ? அது பத்தி எழுதினா நிறைய வரும். ஆனால் அதுக்கு அப்புறமாய் நிச்சயமாய்க் கஷ்டப் பட்டோம் பணத்துக்கு. அன்றாட நிர்வாகமே சில சமயம் ஸ்தம்பிக்கும்போல் பயமுறுத்தும். புடைவை வியாபாரம், ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது, தையல் சொல்லிக் கொடுப்பது, என் எஸ் சி ஏஜென்சி எடுத்து என வீட்டில் இருந்தே என்ன வகையில் முடியுமோ அப்படி எல்லாம் சம்பாதிக்க நேர்ந்தது. என்ன?? இதுக்கெல்லாம் வேலை நேரம் என்பது இல்லை. மதிய ஓய்வு நேரத்தில் தையல் வகுப்பு, புடைவை வியாபாரமும், காலையில் பத்து மணிக்கு அப்புறம் போஸ்ட் ஆபீஸுக்குப் போய் வாடிக்கையாளர் சேவையும்னு திட்டம் போட்டு வச்சுப்பேன். எங்கே போனாலும் மதியம் பனிரண்டு மணிக்குள் வீட்டுக்கு வந்துடுவேன். மாமியார், மாமனார் சாப்பிட்டாங்களா, தூங்கினாங்களானு தெரியணுமே! சாயந்திரம் டிபன், காப்பி, வேலைசெய்யற பொண்ணு வரலைனா, வேலைனு இருக்குமே.

எல்லாம் முடிஞ்சு, 5-00 மணிக்கு மேல் சாயங்காலமாய் ட்யூஷன், அந்தக் குழந்தைகளோடு என் குழந்தைகளும் படிப்பாங்க. ஒரே வேலையாக ஆயிடும். எப்படி அப்போ அவ்வளவு நேரம் கிடைச்சது? நானும் படிச்சேன் அப்போ. ஏற்கெனவே ஹிந்தியில் பட்டம் வாங்கி இருந்தாலும் சென்னை ஹிந்தி பிரசார சபா பரிக்ஷை எழுதணும்னு அதுவும் படிச்சுட்டு இருந்தேன். பையர் படிப்புக்கு என்ன செய்யப் போறோமோ, பெண் கல்யாணத்துக்கு என்ன செய்யப் போறோமோனு கொஞ்சம் கவலைதான். ஆனாலும் கடவுள் அருளால் பையருக்கு மெரிட்டில் குஜராத்தில் அரசாங்கக் கல்லூரியில் இடம் கிடைச்சு, குஜராத்திலேயே காம்பஸ் செலக்ஷனில் முதலில் வேலையும் கிடைத்தது. அதே கடவுள் அருளால் பெண்ணுக்கும் கடன்வாங்காமல் கையில் இருந்த சேமிப்பிலேயே கல்யாணமும் நடத்த முடிஞ்சது. வீடு கட்ட நாங்க வாங்கிய கடன் எல்லாம் முடிஞ்சு அப்பாடானு இருந்தப்போ வந்தது பாருங்க ஒரு பூதம்! திடீர்னு இரண்டு வருஷம் பயிற்சி முடிஞ்சு எக்சிக்யூடிவ் ஆக ஆகியிருந்த சமயம் பையர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நான் அமெரிக்கா போகப் போறேன்.” சரி, எல் அண்ட் டியில் தான் அனுப்பப் போறாங்களோனு நினைச்சால், இல்லையாமே! படிக்கப் போறாராம். அவரோட கூடப் படிச்சவங்க எல்லாரும், அங்கே ஏற்கெனவே போய் ஆறு மாசம் ஆயாச்சு. நானும் ஜிஆர்ஈ(தங்க மாளிகை இல்லைங்க) டோஃபெல் பரிக்ஷை கொடுக்கப் போறேன்னு சென்னை வந்தார். இதுக்கு மேலேயும் சொல்லணும்னா நேயர் விருப்பம் இருந்தால் சொல்லறேன். இல்லைனா விட்டுடலாம். :)))))))) ரொம்ப போரடிக்கிறேனோனு தோணுது!

Thursday, October 8, 2009

என் மேனி அழகைப் பாதுகாப்பது குப்பைமேனியே!


என் மேனி அழகைப் பாதுகாப்பது னு ஆரம்பிச்சு எல்லா நடிகைகளும் ஒவ்வொரு சோப்பைச் சொல்றாங்க. இதிலே ஒரு சோப்பின் விளம்பரத்தில் பாதி முகத்துக்கு ஒரு சோப்பும், மற்றப் பாதி முகத்துக்கு விளம்பர சோப்பும் பயன்படுத்தச் சொல்றாங்க. விளம்பர சோப் பயன்படுத்தும் பாதிமுகம் ஜொலிக்குமாமே. அப்படிங்கறாங்க. நம்பிடுவோமில்ல! மத்தப் பாதி முகத்தைப் பார்த்து பயந்துக்கவும் பயந்துக்குவாங்களோ? ஹிஹிஹி, ஆனால் இது எதுவுமே இல்லாம நமக்கும் பாதி முகம் ஜொலிச்சுட்டும், பாதி முகம் இருட்டாவும் இருந்ததில்ல!! நல்ல வேளையா யாரும் அப்போப் பார்க்கலை! பயந்து போயிருப்பீங்க! போனவருஷம் நம்ம முகத்தைப் பார்த்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முகத்தின் இரு பக்கங்கள், முக்கியமாய் மூக்கு, கறுப்பு சீச்சீ, கறுப்பு இல்லை, கருநீலம்??? ஆமாம், கருநீலமாய் மாறிட்டதை பார்த்துட்டு, நான் ஏதோ கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி இருக்கேனோனும் நினைச்சுட்டுச் சிலர் கேட்காமலும், சிலர் தைரியமாய்க் கேட்டும் பார்த்தனர். நம்ம ரங்க்ஸோ கழுதைக்கு மூக்கு வெள்ளினு கேள்விப் பட்டிருக்கேன், உனக்கு என்ன நீலம்னு கேட்டுட்டு இருந்தார். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாருக்கும் நம்ம ஒரே பதில், ஆசைப்பட்டுட்டுத் தான் இப்படி மாத்திட்டிருக்கேன்னு. பின்னே என்ன சொல்றது?எனக்கு photo allergy, வெயிலில் இப்படி மாறிடுது. எனக்கு அலர்ஜி இருக்கு. அப்படினு சொன்னா ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்க. இது என்ன புதுசானும் சிலர் கேட்கிறாங்க. நமக்கு எல்லாமே புதுசு புதுசா வரச்சே இது மட்டும் என்ன பழசாவா இருக்கும்??? இப்போவும் காமிராவை எடுத்துட்டுக் கல்யாணங்களிலே, மற்றப் பொதுவிழாக்களிலே வீடியோ வந்துச்சுனா நான் எழுந்து போயிடுவேன். எழுந்துக்க முடியாத இடத்திலே உட்கார்ந்திருந்தா முகத்தை மூடிடுவேன். எரிச்சல் தாங்காது!

என்னோட மருத்துவர் பார்த்துட்டு, இது என்ன முகத்தை இப்படி வச்சிட்டு இருக்கே? வெயிட்டைத் தான் குறைக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறே, போய் முகத்தைச் சரி பண்ணிட்டு வானு தோல் மருத்துவருக்கு எழுதிக் கொடுத்துட்டார். தோல் மருத்துவர் கிட்டேயும் போனேன். அப்போப் பார்த்து கீழே விழுந்து, எழுந்து ஒரே அமர்க்களமா?? கையிலேயும் கட்டு. இருந்தாலும் விடுவோமா?? அங்கேயும் போய் அவங்களைப் பார்த்தேன். நடுத்தர வயசுனு சொல்லலாமா?? தெரியலை. ஆனால் அவங்க என்னோட முகத்தைப் பார்த்துட்டு இது மாதிரி இது வரை யாருக்கும் வந்து பார்க்கலைனு ஒரேயடியா சரண்டர் ஆயிட்டாங்க. அப்புறமா மருந்துகளை பரிசோதனை முறையில் கொடுக்க ஆரம்பிச்சாங்க. என்ன கொடுமைடா சரவணா இது??? முகம் மட்டுமில்லாமல் கழுத்து வரைக்கும் தீயில் வெந்தாப்போல் ஆயிடுச்சே? என்னைப் பார்க்கனு பணம் செலவழிச்சுட்டு வந்த என்னோட பெரிய நாத்தனார், அவங்க மறுமகள், மாமியார் எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, இது நானா? இல்லை வேறே யாராவதானு? போற போக்கிலே என் மாமியார் பேசாம குப்பைமேனியை அரைச்சுத் தடவ மாட்டியோனு சொல்லிட்டுப் போனாங்க.

என்றாலும் நாம அந்த மருத்துவரை விடறதாயில்லை. அவங்களும் விடறதாயில்லை. ஸ்டீராயிட் கொடுத்தால் முகம் பளபளப்பா ஆகுமாமே? நமக்குத் தெரியாது. ஆனால் அவங்க அதையும் ஒரு முயற்சி செய்யலாம்னு சொன்னாங்க. நானும் எத்தனையோ மருந்துகள் (ஒண்ணொண்ணும் குறைந்த பக்ஷ விலையே 500ரூ) முயன்று பார்த்துட்டேன். இப்போ ஸ்டீராய்ட் முயன்று பார்க்கலாம். உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கிறதாலே அதுக்கும் நல்லது என்றார். என்னோட மருத்துவரோ ஆஸ்த்மாவுக்கு நான் எடுத்துட்டு இருந்த ஸ்டீராயிடை எல்லாம் நிறுத்தி இருந்தார். அவரோட ப்ரிஸ்கிரிப்ஷனையும் காட்டினேன். என்றாலும் அவங்களுக்கு ஆசை விடலை. நீங்க போய் ரத்த அழுத்தம் செக் பண்ணிட்டு வாங்க, ரத்த அழுத்தம் சரியா இருந்தால் கொடுக்கிறேன். இல்லாட்டி வேண்டாம்னாங்க. என்ன ஆச்சரியம்? அன்னிக்குப் பார்த்து ரத்த அழுத்தம் சென்னை வெயிலைவிட அதிகமா இருக்க அவங்க இரு கையையும் கூப்பி, “அம்மா, தாயே, நான் ஃபெயிலாயிட்டேன்.” என்று கண்ணில் நீர் வழியத் தான் தோத்துட்டதை ஒத்துண்டாங்க. கொஞ்ச நாட்கள் எதுவுமே முகத்தில் போடாமல் வெறும் காலமைன் லோஷன் மட்டுமே தடவினேன். மாமியார் சொல் தட்டாத மறுமகளாய் அவங்க சொல்லிட்டுப் போன குப்பைமேனி மருத்துவத்தைப் பயன்படுத்த முடிவு செஞ்சேன். பயமுறுத்தறாப்பல இல்லாமல் ஓரளவுக்குப் பரவாயில்லைனு தெரிஞ்சது. மருந்தின் தாக்கம் உடம்பிலிருந்து போயிருக்கும்னு நிச்சயம் ஆனதும், தோட்டத்துக்குப்பைமேனியைப் பறிச்சு, துளசியோட வச்சு(அட, துளசி இலைங்க, நம்ம பதிவர் துளசி இல்லை) அரைச்சு முகத்தில், கையில் னு தடவ ஆரம்பிச்சேன். இப்போ கறுப்புத் திட்டுகள் அவ்வளவாத் தெரியலை. அதோட என் மூட்டு வலிக்கும் இது பயன் தருது. இப்போப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் இதைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சாச்சு. என் மேனி எழிலுக்குக் குப்பைமேனி தான் என்று நானும் உறுதியாச் சொல்லிக்கலாம் இல்லை??? இப்போ நம்ம ரங்ஸ் எங்கே போனாலும் கை நிறையப் பை நிறையக் குப்பைமேனியைக் கொண்டு வந்து நமக்குக் காணிக்கை செலுத்திடறார்.

Thursday, October 1, 2009

பச்சைக்கலரு ஜிங்குச்சா! சிவப்புக் கலரு ஜிங்குச்சா!

இந்தப் பேருந்துப் பயணம் இருக்குப் பாருங்க, அதுவும் தருமமிகு சென்னைப் பேருந்துகளில் பயணம். எனக்கு எப்போவுமே அலர்ஜிதான். ஆனால் நாம என்ன அம்பானி வம்சமா?? (இப்போல்லாம் டாடா, பிர்லா இல்லை போலிருக்கே!) ஏறும்போது இங்கே பேருந்து நிலையம்கறதாலே பரவாயில்லை, ஏறி ஏதோ உட்காரவும் இடம் கிடைச்சுடும். சில சமயம் எனக்கு ஒரு இடமும், அவருக்கு ஒரு இடமும் கிடைக்கும் பாருங்க. அப்போத் தான் கொஞ்சம் பிரச்னையா இருக்கும். எந்த நிறுத்தத்துக்குச் சீட்டு வாங்கி இருக்கார், எங்கே இறங்கப் போறார்னு சில சமயம் புரியாது. அதுவும் நான் கையிலே கைப்பை வைச்சுட்டு வந்தேன்னாலே அவருக்கு அப்படியே என்னனு தெரியாமக் கோபம் வரும். அந்தக் கைப்பையைக்கண்டாலே பிடிக்காது. இதை ஏன் எடுத்துட்டு வரேனு சொல்லுவார். அதனால் சில சமயம் கையை வீசிட்டு வந்துடுவேன். அப்படித் தான் ஒரு சமயம் சொந்தக்காரங்க கல்யாணம் , பல்லாவரத்திலே. நல்லவேளையா கூடுவாஞ்சேரியிலே வைக்கலை.

பேருந்திலேதான் போகணும்னு அவர் அடம் பிடிச்சு, ஏறியாச்சு. அது ஆவடியிலே இருந்து வர பேருந்து வேறே. நான் ஒரு பக்கமா ஏறிட்டேன். அவர் வேறே பக்கமா ஏறி இருக்கார். நானோ கையிலே எதுவுமே வச்சுக்கலை, ஒரு கை துடைக்கும் துண்டைத் தவிர. என்னோட இன்ஹேலர் உள்பட அவர் கையிலே இருக்கும் பையிலே இருந்தது. கூட்டத்திலே எங்கே இருக்கார், ஏறினாரா தெரியலை. நான் ஏறி உட்கார்ந்துக்கவும் இடம் கிடைச்சு உட்கார்ந்துட்டேன். கையிலே பைசா கிடையாதுனா கிடையாது. கண்டக்டர் என்னமோ என்னைப் பார்த்தும் டிக்கெட் கேட்கலை. போயிட்டார். பக்கத்திலே இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்துட்டு என்னை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. நான் பின்னாலே டிக்கெட் எடுக்கிறாங்கனு அவங்க கேட்காமலேயே விளக்கமும் கொடுத்தாச்சு. ஆனால் அவர் எடுத்தாரா இல்லையானு தெரியலை.

எங்கே இறங்கணும்?? கல்யாணச் சத்திரம் மெயின் ரோடிலேயே இருக்குனு சொன்னாங்க. மெயின் ரோடிலே மூணு சத்திரம் இருக்கே. சத்திரம் பேர் கூடப் பார்த்து வச்சுக்கலையே! உத்தேசமா இதுவாய் இருக்குமோ?? இறங்கலாமானு யோசிச்சுட்டு, முன்னால் இருந்தவங்க கிட்டே கொஞ்சம் நகருங்க, நான் இறங்கணும்னு சொல்லிட்டே எழுந்தால் பின்னாலே இருந்து அவர் குரல், இந்த ஸ்டாப் இல்லை, அடுத்ததுனு வருது. அப்பாடா! பெருமூச்சு விட்டேன். இல்லாட்டி ஜீவி சார் எழுதி இருந்த மாதிரிக் கணவனைத் தொலைத்த காரிகையா இல்லாம, அவர் மனைவியைத் தொலைத்த காரிகன்?? நல்லா இல்லையே, கணவன்னே வச்சுக்கலாமே. கணவனாக என்னைத் தேடிட்டு இருந்திருப்பார். ஆனாலும் அவர் கிட்டே எல்லாப்பணமும் இருந்ததே. நான் தான் பைசா இல்லாமல், என்ன பண்ணறதுனு முழிச்சுட்டு இருந்திருப்பேன்.

அப்பாடி, நம்ம கதைக்கு வருவோமே. முருகன் இட்லிக் கடைக்கு முன்னாலே இறக்கி விட்டுட்டாங்க. இதான் பனகல் பார்க், பாண்டி பஜார் எல்லாம்னு சொல்லி. சரி, கொஞ்ச தூரம் தானே நடக்கலாம்னு நடக்க ஆரம்பிச்சா நடக்கவே முடியாமல் நெரிசல் தாங்கலை. மேலே இடிக்கிறாப்போல ஆட்டோ, கார், சைக்கிள், ட்ரக், இன்னும் என்ன என்னமோ வண்டி எல்லாம் போகுது. வேறே வழியே இல்லை. செர்விஸ் லைன் அது. கீழே போகும் வண்டிங்க எல்லாம் போயே ஆகணும். நடைபாதைக்கும், சாலைக்கும் (சாலை???) நடுவே பெரிய பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம் தோண்டி வச்சிருந்தாங்க. எதுக்குனு புரியலை?? யாருக்கும் சொல்லவும் தெரியலை. ஒரு இடத்தில் அவர் பள்ளி நினைப்பில் பச்சைக் குதிரை தாண்டி அந்தப் பக்கம் போயிட, எனக்குத் தாண்ட முடியலை. விழுந்துட்டேன்னா என்ன பண்ணறதுனு பயம்! அப்புறமா ஒரு தூணைப் பிடிச்சுண்டு தாண்டப் போனா அவர் ஒரே அலறல். மின் கம்பம், வயர் எல்லாம் தொங்குது, தொடாதேனு.

பயத்துடன் தாண்டவே இல்லை. அப்பாடியோ, அம்பத்தூரே சொர்க்கம் போலிருக்கேனு நினைச்சேன். எந்த வயர் எங்கே தொங்குதுனு புரியும், எந்தப் பள்ளம் புதுசுனும் புரியுமே! பழைய பள்ளம் ஆழமா, புதுசு ஆழமானும் தெரியும் இல்லையா? மெல்ல மெல்ல ஒரு வழியா பனகல் பார்க் பகுதிக்கு வந்தால், ஒரே பெட்ரோல் நாற்றம். வரிசையாக வண்டிகள், வண்டிகள், வண்டிகள். வாய், மூக்கு எல்லாத்தையும் மூடிட்டு அதுக்கு ஊடாகப் புகுந்து போய் அந்தப் பக்கம் போனோம். ஏண்டா வந்தோம்னு ஆயிடும். மெதுவாய் நடைபாதைக் கடைகளைத் தாண்டிக் கொண்டு, நல்லிக்குப் போனோம். அதுக்குள்ளே மணி 12-15 ஆகி இருந்தது.

நேரே புடைவையில் நான் போகவேண்டிய செக்ஷனுக்குப் போனேன். ஏற்கெனவே ஒப்பன் டெண்டரில் கொடேஷன் கொடுத்துட்டேன். நல்லவேளையாக் கொடுத்த கொடேஷனைவிடக் குறைச்சலாவே புடைவைகள் கிடைத்தன. :P (கொஞ்சம் புத்திசாலித் தனமாய் யோசிச்சுக் கூடுதல் விலையை வச்சுக் கொடேஷன் கொடுத்துட்டேன்.) புடைவைகளைப் பார்த்தோம். வழக்கம்போல் எனக்கு ஒரு கலர் பிடிக்க, அவருக்கு பச்சை தவிர வேறே கலர் பிடிக்கவே இல்லை. பச்சையிலேயே கொஞ்சம் வெளுத்த பச்சையில் ஒரு புடைவையும், செங்கல் பொடிக் கலரில் இன்னொரு புடைவையும் எடுத்தோம். மணி 12-20 ஆகிவிட்டது. மாடியில் தான் பாண்ட் செக்ஷன் என்று சொல்ல மாடிக்கு லிஃப்டுக்கு நின்னால் வரவே இல்லை. படிகள் ஏறினால், போறவங்க, வரவங்க எல்லாம் என்னைப் பார்த்து ஏங்க, இப்படி சிரமப் பட்டு மாடி ஏறணுமா? லிஃப்டில் மெதுவா வரக் கூடாதுனு கேட்க, வெட்கம் அடைந்த நான் கொஞ்சம் சுறுசுறுப்பாயும் வேகமாயும் நடக்க முயலக் கால் ஒத்துழைக்காமல் இழுக்க, ஒருவழியாய் மாடி ஏறி, மறுபடி லிஃப்டில் கீழிறங்கி, ஏறி, அப்பாடி தலை சுத்துதா? எங்களுக்கும் தான். ஒரு வழியா பாண்ட் செக்ஷன் போனால் எடுத்துப் போட ஆளே இல்லை. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு ஆளைக் கூப்பிட்டுக் காட்டச் சொல்லிக் காட்டனில் ஒரு பாண்ட் எடுத்துக் கொண்டு பணம் கட்டிட்டுக் கீழே வந்து அப்பாடா, இந்த வருஷம் தீபாவளி பர்சேஸ் முடிஞ்சதுனு பெருமூச்சு விட்டோம்.

அங்கே இருந்து பாண்டி பஜார் காதிக்குப் போய் வேஷ்டிகள் எடுத்துக் கொண்டு, கீதா கஃபேயில் காஃபி சாப்பிட்டுவிட்டுப் பொடி நடையாய் நாயர் ரோடு வந்து அம்பத்தூர் பேருந்தைப் பிடிச்சு வந்து சேர்ந்தோம். இந்த வருஷம் தீபாவளிக்கு பச்சைக் கலர் ஜிங்குச்சா! சிவப்புக் கலர் ஜிங்குச்சா! ம்ம்ம்ம்ம்., ஒரு காலத்தில் தீபாவளிக்குனு ஒரு நாள் செலவு செய்ஞ்சு போய் எங்க வீட்டு நாய்க்குட்டியிலே இருந்து, எல்லாருக்கும் துணி எடுப்போம். நாங்க எப்போடா திரும்பி வருவோம்னு எல்லாரும் காத்திருப்பாங்க, பார்க்கிறதுக்கு.இப்போ எங்க இரண்டு பேருக்கும் எடுக்கவே இத்தனை கஷ்டமாய் இருக்கு.

பச்சைக்கலரு ஜிங்குச்சா! மஞ்சக் கலரு ஜிங்குச்சா!


வழக்கம் போல் இந்த வருஷமும் தீபாவளிக்குத் துணி எடுக்க தி.நகருக்கே போகணும்னு முடிவு பண்ணியாச்சு. என்னது??? ஏக மனதாவா? அது நம்ம வீட்டிலே கிடையாதுங்க. முடிவெல்லாம் நம்ம ரங்ஸ் எடுப்பார். நாம பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டுவோம். எனக்கு என்னமோ தருமமிகு சென்னைக்குப் போய் ரத்தன் பஜாரில் "ஹாண்ட்லூம் ஹவுஸ்" போய் அங்கே எடுத்துக்கணும்னு ஒரு விபரீத ஆசை வந்தது போன வருஷமே. போன வருஷம் அந்த ஆசை வந்ததுமே கை தூக்க முடியாமல் போய்க் கைக் கட்டுக் கட்டிக்கவே, நம்ம ரங்கனாருக்குக் கேட்கவா வேணும்? இதான் சாக்குனு அம்பத்தூரிலேயே எடுக்கலாம்னு சொல்லிட்டார்.

ஆனால் பாருங்க, அதுவும் போக முடியாம ஏதோ இடைஞ்சல். என்னனு நினைவிலே இல்லை. அதோட அடிக்கடி ஆர்த்தோ தரிசனம், பிசியோதெரபிஸ்ட் பயமுறுத்தல், (அது தனிக்கதை, அப்புறமா வரேன்) அப்படினு வேறே இருந்ததா? இருக்கிற புடவையிலே கட்டாத ஒண்ணைக் கட்டிக்கலாம்னு பேசாம(அவர் கிட்டே பேசிட்டுத் தான்) இருந்துட்டேன். ஆனால் பாருங்க, பாசத்தில் சிவாஜியையும் மிஞ்சும் என்னோட அண்ணனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வர,ஹிஹிஹி, ஒரு ஓசிப் புடைவை கிடைச்சு, போன வருஷ தீபாவளிக்குப் பிறந்தவீட்டுப் புடைவையோட கொண்டாடியாச்சு. இந்த வருஷமும் வாங்கித் தாங்கனு கேட்கமுடியுமா?? ஹிஹிஹி, தப்பாய் நினைப்பாங்க இல்லை???

போகணும்னு முடிவு பண்ணியாச்சோ இல்லையோ, உடனேயே sealed tender வேணும்னு ரங்கு சொல்ல, open tender தான் கொடுப்பேன்னு நான் சொல்ல, எப்படியோ தொலை, சொன்னதே கேட்காத இது ஒரு ஜென்மம்னு அவர் மனசுக்குள்ளே நினைக்க, நான் வழக்கம்போல் எதையும் கண்டுக்காமல் பட்ஜெட் போட ஆரம்பிச்சேன். ஸ்கூல்லே படிக்கிறச்சேயே கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஒத்துக்காது. இப்படி ஒரு கணக்காளரைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா அவங்களைக் கொஞ்சம் காக்காயோ, குருவியோ பிடிச்சிருக்கலாம். நான் போடற கணக்குக்கும், கடைக்குப் போனால் வர பில்லுக்கும், அதுக்கு அப்புறமா நான் வாங்கிக் கட்டிக்கிற கணக்குக்கும் அளவே சொல்ல முடியாது. என்றாலும் நானும் தைரியமாய்க் கணக்குப் போட ஆரம்பிச்சேன். இந்த வருஷம் அதிசயமா ரங்கு பாண்ட் தைச்சுக்கப் போறேன்னு வேறே அறிவிப்பு விட்டிருந்தார். அதுக்கு எப்படியும் ஆயிரம் ரூபாயாவது வேண்டும். என்ன புடைவை? எத்தனை ரூபாய்? எத்தனை புடைவை? மில்லியன் டாலர் கேள்வி? எத்தனை புடைவைனு கூடச் சொல்லிடலாம். மூன்றுனு சொல்லிட்டு இரண்டு எடுக்கலாம். ரெண்டுனு சொல்லிட்டு ஒரே புடைவையோட திருப்தி ஆயிடலாம். ஆனால் எத்தனை ரூபாய் இருக்கே! அதுதான் எகிறும். என்னமோ நான் தான் நெசவு போடும்போது கிட்டே இருந்து நூல் வாங்கிக் கொடுத்து, நெசவாளர் கிட்டே இருந்து புடைவையையும் வாங்கிக்கறேன்னு இவரோட அபிப்பிராயம். பனிரண்டு வயசிலே இருந்து புடைவை கட்டிக்கிறேன்னு சொல்லறே? இது தெரியலையே? அப்படினு ஒரு கிண்டல், நக்கல். எல்லாம் நேரம்.

ஒரு வழியாப் பட்ஜெட் போட்டேன். கூடவே பாதுகாப்புக்காக என்னோட பர்ஸிலே இருந்த பணத்தையும் பர்ஸோட எடுத்து வச்சுண்டேன். அவரையும் எதுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கூடவே வச்சுக்கச் சொன்னேன். அப்புறமாக் கடையிலே போய் ரெண்டு பேரும் ஜல்லிக்கட்டு மாடுங்க மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சீறவேண்டாம் பாருங்க! அதுக்குத் தான். எல்லாம் முடிஞ்சது. அப்புறமா சாப்பிட்டுட்டுப் போகறதா? வந்து சாப்பிடறதானு பிரச்னை. கிளம்பறது தான் பெரிசா இருக்குமே தவிர, கடைக்குள்ளே போனால் மிஞ்சினால் அரை மணி நேரம் தான் செலக்ஷன். கடைக்காரங்க பில் போட்டு பாக்கிங் செய்து தரத் தான் நேரம் ஆகும்.


சாப்பிட்டுட்டே போகலாம்னு ஏகமனதாய் முடிவு பண்ணிச் சாப்பிட்டுட்டு, ரெயிலில் போகணும்னு குழந்தை மாதிரி நான் அழுதுட்டே வர, அவர் என்னை விடாப்பிடியாய்ப் பேருந்திலே கூட்டிப் போனார். நல்லவேளையாய் தி.நகருக்கு மூன்று பேருந்துகள் நின்னுட்டு இருக்கக் கூட்டம் இல்லாததாய்ப் பார்த்து உட்கார்ந்தோம். நல்லி கடைக்குத்தானே போகப் போறோம். கடை வாசலுக்குக் கொஞ்சம் முன்னாலே இறங்கலாம்னு நினைச்சப்போத் தான் தி.நகரில் வழியை எல்லாம் மாத்தி இருக்காங்களேனு நினைப்பு வந்தது. எங்கே இறங்கறதுனு யோசிக்கிறதுக்குள்ளே கண்டக்டர் விவேக்குக்கும் முன்னாடி உஸ்மான் ரோடு ஆரம்பத்திலே இறங்கச் சொல்லிட்டார்.

புடைவை எடுத்தது பத்தித் தனியா வரும் பாருங்க!