Friday, May 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞான சம்பந்தர்!

கொட்டும் மழையிலும் கைவிளக்கோடு ஞானசம்பந்தர் நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி வட்டமாக மழைத்துளி விழாமல் இறையருள் காத்து நின்றது. மழை நீர் கூட அவர் இருந்த பக்கம் வராமல் அஞ்சியதைப் போல் ஒதுங்கியே ஓடிற்று.  விடிய விடிய நின்று கொண்டிருந்தார் ஞானசம்பந்தர்.  மெல்ல மெல்லப் பொழுதும் விடிந்தது.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  ஆகையால் அவருக்கு மனைவி  இருந்தார்.  அவர் காலையில் எழுந்து வாசலைத் திறந்து விளக்கு ஏற்றிக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறந்தார்.  திறந்தவர் அதிர்ந்து போனார்.  ஞானசம்பந்தர் கைவிளக்கோடு நின்று கொண்டிருப்பதையும், கை விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்ததையும், மழை லேசாகத் தூறலாகப் போட்டுக் கொண்டிருந்ததையும், இரவில் நல்ல மழை பெய்திருப்பதற்கான அடையாளங்களையும் கண்டார்.   ஞானசம்பந்தரைப் பார்த்தார்.  அவர் நனையவில்லை என்பதையும் அந்த மழையிலும் விளக்கும் அணையவில்லை என்பதையும் கண்டார்.  வியந்தார். உடனே ஓடிச் சென்று தன் கணவரிடம் விஷயத்தைக் கூறினார்.  அப்போது தான் கமலை ஞானப் பிரகாசருக்கு முதல் நாள் இரவில் ஞானசம்பந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு வழி காட்டி வந்திருக்கும் விபரம் புரிந்தது.  வெளியே ஓடோடி வந்தார்.

பதறிப் போனார். விடிய விடிய இரவு முழுதும் இப்படி நிற்க வேண்டுமெனில் எவ்வளவு ஆழமான குரு பக்தி இருக்க வேண்டும். இதை நினைத்து இப்படியும் ஒரு சீடனா தமக்கு என எண்ணி ஒரு பக்கம் ஆனந்தம் அடைந்தார்.  கண்களில் கண்ணீர் பெருகியது.  இப்படியும் ஒரு சீடனா எனக்கு என அவரை ஆரத் தழுவிக் கண்ணீர் சொரிந்தார்.  “அன்பரே, நீர் சீடராயிருக்கும் நிலையைக் கடந்து விட்டீர்.  உம்மைப் போன்ற சீடன் எனக்குக் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேனோ! நீர் இனி ஆசாரியராக இருக்கும் தகுதியைப் பெற்று விட்டீர்கள்.  நீர் சாதாரணமான ஞானசம்பந்தனும் இல்லை.  குரு ஞானசம்பந்தர்.  தகுந்த இடத்தில் சென்று இரும்.  உம்மைத் தேடி வரும் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு சிவஞானப் பொருளை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவீராக.  சைவ சமயப் பரிபாலனமும் உம்மால் நடைபெறட்டும்.” என ஆசிர்வாதம் அளித்து அவரைத் தனியாகப் போய் ஆசாரியராக இருக்கும்படி கட்டளையும் இட்டார்.

ஆனால் குருஞானசம்பந்தருக்கோ தன் குருவை விட்டுப் பிரிய மனமில்லை.  மனம் வருந்தி குருவானவர் எப்படி இவ்வாறு சொல்லலாயிற்று என்பதை ஒரு பாடல் மூலம் உணர்த்தினார்.  “கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்
சினக்கும் கமலையுள் ஞானப் பிரகாச சிதம்பர, இன்று
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே.”
இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த கமலை ஞானப் பிரகாசர், குரு ஞானசம்பந்தரைத் தேற்றினார். அண்மையில் காவிரிக்கரையில் தெற்குப்பக்கம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று அங்கே மடம் அமைக்கக் கூறினார்.  வில்வாரண்யம் யமன் வழிபட்டுப் பேறு பெற்றதால் தருமபுரம் என்ற பெயரிலும் அழைக்கப் படும் எனவும் கூறி அங்கே சென்றிருந்து மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்க்குமாறு கட்டளையிட்டார்.  தன்னை வாரந்தோறும் வந்து தரிசிக்கலாம் எனவும் கூறி ஆறுதல் சொன்னார்.

அதன்படி குருஞானசம்பந்தர் திருவாரூரினின்று கிளம்பி மயிலாடுதுறை வந்து தருமபுரத்தை அடைந்தார்.  தருமபுரீசுவரரையும், அபயாம்பிகையையும் வணங்கித் தாம் தங்க ஒரு மடமும், அதில் தாம் அன்றாடம் வணங்கும் சொக்கலிங்கத்திற்கு ஒரு கோயிலும் அமைத்தார்.  அதுகாறும் தருமபுரீஸ்வரர் கோயிலை நிர்வகித்த நிர்வாகிகளான முனிவர்கள் இவரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்துவிட்டு ஓய்வும், தவம் செய்யவும் வேண்டித் தென்னாடு சென்றனர். குருஞானசம்பந்தர் நிலையாகத் தருமபுரத்திலேயே தங்கினார்.  வாரந்தோறும் ஆரூர் சென்று குருவையும், ஆரூர்த் தியாகேசனையும் வணங்கி வந்தார்.  குருஞானசம்பந்தரின் ஞானமும், அறிவும் நாலாதிசையிலும் பரவலாயிற்று.  சீடர் பலர் வந்து அவரிடம் சரணடைந்தனர்.  தருமை ஆதீனம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

சிதம்பர வழிபாட்டிற்காக ஒரு முறை சிதம்பரம் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.  அப்போது இரவு, பகலாக நிட்டையில் இருந்த இவருக்கு சிவகாமி அம்மை அர்த்த ஜாமப் பள்ளியறைப் பிரசாதங்களைக் கொடுத்து அருளினார்.  இவர் காலத்தில் வில்வாரண்யத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாக வரலாறு சொல்கிறது.  இதை தருமை ஆதீனத்தின் முத்திரைச் சின்னத்தில் ஓவியமாகக் காண முடிகிறது.  குரு ஞானசம்பந்தர் அருளிய  நூல்களாவன:

1.சொக்கநாதக் கலித்துறை
2. சொக்கநாத வெண்பா
2. சிவபோத சாரம்
4. பண்டாரக் கலித்துறை என்னும் ஞானப் பிரகாச மாலை
5. நவரத்ன மாலை
6. சோடசகலாப் பிராசாத சட்கம்
7. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
8. முத்தி நிச்சயம்.

இவற்றை ‘குரு ஞானசம்பந்தர் அட்டகம்” என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  இதைத் தவிர ஞானாவரண விளக்கம், சிவபூசா பத்ததி போன்ற நூல்களையும் இவர் இயற்றி இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து, மதுரையில் சொக்கநாதரின் திருவருளைப் பெற்று, திருவாரூரில் குரு கமலை ஞானப் பிரகாசரின் மூலம் குருவருள் பெற்று, மயிலாடுதுறைக்கருகே தருமபுரத்தில் தாமே குருவாய் அமர்ந்த குருஞானசம்பந்தர் விரைவில் தமது முத்திப்பேற்றுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார்.  தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கவும் ஆதீனத்தில் ஆட்சி புரியும், தம் மாணாக்கர்களில் சிறந்தவரான ஆனந்த பரவசர் என்பாருக்கு ஞான உபதேசம் செய்து ஆசாரியத் தலைமையை நல்கித் தாம் புதிதாய்க் கட்டிய ஞானபுரீசுவரர் கோயிலில் சிவலிங்கப் பெருமான் திருவடி நிழலில் நிட்டையில் ஆழ்ந்து முத்தி அடைந்தார்.

தேவாரம் தளத்தின் உதவியோடு எழுதப் பட்டது.

Tuesday, May 22, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!

ஆனால் இறைவன் தன் அடியார்களை ஒரு போதும் கைவிட மாட்டான் அல்லவோ!  கமலை ஞானப் பிரகாசருக்கும், அன்றிரவு, ஈசன் கனவில் வந்து, “ஞானப் பிரகாசா, நம் அன்பன் ஞானசம்பந்தன் நின்னை நாடி வருகின்றான்.  அவனுக்கு ஞானம் வழங்குவாயாக!” என்று கூறி மறைந்தார்.  ஆக குருவும் சீடனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  திருவாரூர் தியாகேசர் கோயிலின் உட்கோயிலான சித்தீசுவரத்தில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்து கொண்டு ஞானசம்பந்தரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  மதுரையிலிருந்து கிளம்பிய ஞானசம்பந்தர் திருவாரூரை அடைந்தார்.  முதலில் பெருமானை வழிபட வேண்டும் என எண்ணி அங்கு பெருமானை வழிபட்டு வலம் வரும் நேரத்தில் சித்தீசுவரத்தில் தமக்காக குருவானவர் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் காத்திருப்பதைக் கண்டு, குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

பின்னால் ஒரு ஆதீனத்தையே ஸ்தாபித்து குருமுதல்வராகப் போகும் தம் சீடனின் வரவுக்குக் காத்திருந்த குருவும் அவரை அங்கே வடக்கு நோக்கி அமரச் செய்தார்.  தாம் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவுக்கு முன்னிலையில் ஞானசம்பந்தருக்கு நயன, வாசக, ஸ்பரிச, அத்தமத்தகசையோக, திருவடி முதலான தீக்ஷைகளை வழங்கி ஞானோபதேசம் செய்து ஆட்கொண்டார்.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  குருஞான சம்பந்தரோ இளம் துறவி.  இருவருமாகத் திருவாரூரில் தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தனர்.  குருவின் அருகேயே இருந்து சேவைகள் செய்தும், பாடங்கள் கேட்டும், கற்றும் பல விதங்களில் தம் ஞானத்தை மேம்படுத்திக் கொண்டார் குரு ஞானசம்பந்தர்.  தினம் தினம் தியாகேசனின் அர்த்தஜாம வழிபாட்டை இருவருமாகச் சீடர்கள் புடை சூழச் சென்று கண்டு விட்டு வருவது வழக்கம். அவ்வாறே ஒரு நாள் அனைவரும் சென்று விட்டு கமலை ஞானப் பிரகாசரின் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

அன்றைய தினம் கைவிளக்கு எடுத்துக் கொண்டு கூட வரும் பணியாள் வரவில்லை.  அவனுக்குப் பதிலாக சீடர் ஞானசம்பந்தர் கைவிளக்கை எடுத்துக் கொண்டு குருவுக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு வந்தார்.  சிவதரிசனம் கண்ட பேரானந்த நிலையில் இருந்த ஞானப் பிரகாசர் தம் இல்லத்திலிருந்து கோயிலுக்குச் செல்கையிலோ, அல்லது திரும்பி இல்லம் செல்கையிலோ கை விளக்கு ஏந்தும் பணியாள் வரவில்லை;  அதற்குப் பதிலாக சீடன் குருஞானசம்பந்தர் கை விளக்கு ஏந்தி வருகிறார் என்பதை அறிந்தார் இல்லை.  ஆகவே கோயிலில் இருந்து இல்லத்திற்குத் திரும்பியதும், பணியாளை, “நில்” என்று சொல்லி அங்கேயே நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் வழக்கப்படி அன்றும், கை விளக்கு ஏந்தி வந்த ஞானசம்பந்தரை, “நில்” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.  பணியாள் தினமும் அதன் பின்னர் தன் வேலை முடிந்தது என விளக்கை சமாதானம் செய்துவிட்டு வீடு சென்றுவிடுவான்.  ஆனால் ஞானசம்பந்தரோ, “நில்” என குரு கூறியதைக் கட்டளையாகக் கொண்டு விடிய, விடிய அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

விளக்கில் இருந்த எண்ணெயெல்லாம் தீர்ந்து போயும் எண்ணெய் இல்லாமலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதோடு சோதனையாக அன்றிரவு பெருமழையும் பெய்தது.  கன மழை பெய்தும் ஞானசம்பந்தர் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே கை விளக்கோடு நின்று கொண்டிருந்தார்.  ஆஹா, என்ன ஆச்சரியம்!  ஞானசம்பந்தரின் மேல் மழைத்துளியும் படவில்லை.  அவர் உடல் மழையில் நனையவில்லை. விளக்கும் அணையவில்லை.  அவரைச் சுற்றி ஒரு வட்டம் போட்டாற்போல் அந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை.  அந்த இடத்து பூமியும் காய்ந்தே காணப்பட்டது.

Monday, May 21, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞானசம்பந்தர்!


சைவ உலகில் இருந்த ஞானசம்பந்தர்களில், திருஞானசம்பந்தரை நன்கறிவோம். அடுத்து சந்தான குரவர்களில் ஒருவரான மறைஞான சம்பந்தரைப் பார்த்தோம். இப்போது நாம் பார்க்கப் போவது குருஞான சம்பந்தர் ஆவார். இவர் தருமை ஆதீன குரு முதல்வரும் கூட. இப்போது இவரைக் குறித்து அறிவோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்த காலம் அது. அங்கு கார்காத்த வெள்ளாளர் குலத்தில் சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும், மீனாக்ஷி அம்மையாருக்கும் ஒரு சோமவார நன்னாளில் அவர்களின் தவப் பயனாய் ஆண் மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் குழந்தை அந்த ஞானசம்பந்தனைப் போல் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி ஞானசம்பந்தன் என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை சீரும் சிறப்புமாக வளர்ந்தது. இயல்பாகவே மொழியில் பற்று மிகுந்திருந்ததால் வடமொழியும், தமிழும் நன்கு கற்றுத் தேர்ந்தார் ஞானசம்பந்தர்.



 இவருக்குப் பதினாறு வயது ஆகும் சமயம் பெற்றோர்கள் இவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாக்ஷியையும், சொக்கேசரையும் வழிபட வந்தனர். சில நாட்கள் மதுரையிலேயே தங்கி இருந்து ஆலயம் சென்று அம்மையையும், அப்பனையும் வழிபட்டு வந்தனர். பின்னர் பெற்றோர் ஊருக்குத் திரும்ப எண்ணினார்கள். மகனையும் உடன் அழைக்க, மகனோ மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல மறுத்துவிட்டார். மதுரையை மிகவும் பிடித்து விட்டதாயும், ஆலவாய் அண்ணலையும், அங்கயற்கண்ணி அம்மையையும் விட்டுப் பிரிய மனம் இல்லை எனவும் கூறிவிட்டுத் தந்தையோடும், தாயோடும் சொந்த ஊர் செல்ல மறுத்தார். திரும்பத் திரும்பப் பிடிவாதமாய் இவர் இப்படிச் சொல்லவும் பெற்றோர் சில காலம் விட்டுப் பிடிக்கலாம் என எண்ணிப் பையனை அங்கேயே விட்டு விட்டுச் சொந்த ஊர் திரும்பினார்கள்.



ஞானசம்பந்தர் தன் இருப்பைப் பொற்றாமரைக் குளத்துக்கு மாற்றிக் கொண்டார். தினந்தோறும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கேசரையும், மீனாக்ஷி அம்மையையும் வழிபட்டுவிட்டு. பொற்றாமரைக் குளக்கரையில் மற்றச் சிவனடியார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பரவசநிலையில் ஆழ்ந்திருக்க எண்ணினார். அதற்கு முதலில் சிவ வழிபாடு செய்ய வேண்டுமே. என் செய்வது? தம் விருப்பத்தைச் சொக்கேசனிடம் விண்ணப்பித்துக் கொண்டார். சில நாட்கள் சென்றன. தினம் தினம் சொக்கேசனிடம் சிவ வழிபாடு செய்ய ஒரு வழிகாட்டுமாறு விண்ணப்பிப்பதே அவரின் லட்சியமாயிற்று. ஒரு நாள் இரவு தூங்குகையில் கனவில் சொக்கேசன் தோன்றி, “ஞானசம்பந்தா, பொற்றாமரைக் குளத்தின் ஈசான்ய மூலையில் நீருக்கடியிலே ஒரு பெட்டகத்துள்ளே இலிங்க வடிவில் நாம் குடி இருக்கிறோம். நீ அதனை எடுத்து உனக்கேற்ற வழியில் வழிபடுவாயாக!” என்றார். உடனே கண் விழித்த ஞானசம்பந்தர் விடியும் வரை காத்திருந்து, விடியற்காலையில் பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று ஈசான்ய மூலையில் இறங்கி நீருக்குள்ளாக மூழ்கிப் பெட்டகத்தைத் தேடினார். சிறிது நேரத் தேடலிலேயே பெட்டகம் அவர் கைகளில் கிடைக்க, சொக்கேசன் சந்நிதிக்கு ஓடோடிச் சென்ற ஞான சம்பந்தர், மகிழ்வோடு அவரை வணங்கித் துதித்து, பெட்டகத்தினுள் இருந்த இலிங்க வடிவை, சொக்கலிங்கம் என்ற பெயரோடு தினந்தோறும் வழிபட்டு வரலானார்.

" கண்ணுக்கினிய பொருளாகி யேஎன் கரத்தில் வந்தாய்
 விண்ணும் பரவிடும் அற்புத மே என்ன விஞ்சையிதான்
 மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே
 நண்ணும்படி செய் மதுரா புரிச் சொக்க நாயகனே!’

 என்ற பாடல் குருஞானசம்பந்தரால் பாடப் பட்ட சொக்கநாதக் கலித்துறையின் பதினோரு பாடல்களில் முதற்பாடலாகும்.


 இந்த இலிங்க வடிவே இன்னுமும் தருமை ஆதீனத்தில் ஆன்ம பூஜா மூர்த்தியாய் எல்லா குருமகா சந்நிதானங்களாலும் வழிபடப் பெற்று வருகிறார். நம் ஞானசம்பந்தருக்கோ மூர்த்தி கிடைத்துவிட்டது எனச் சும்மா இருக்க இயலவில்லை. தமக்கு ஞானமும் கிட்ட வேண்டும் என எண்ணினார். ஞானம் பெறுவது என்பது ஒன்றும் சுலபமான ஒன்றில்லை. தக்க குருவின் மூலம் உபதேசங்கள் பெற வேண்டும். அதற்கான குரு யார்? எவர்? எங்கிருக்கிறார்? அனைத்திற்கும் வழிகாட்டிய சொக்கேசனே இதற்கும் வழிகாட்ட வேண்டும். மீண்டும் சொக்கனின் இறைஞ்சினார் ஞானசம்பந்தர். சொக்கேசனும் மனம் இரங்கி இவரது கனவில் தோன்றி. “ திருவாரூரில் ஞானப் பிரகாசன் என்றொரு பக்தன் இருக்கிறான். அவனுக்கு நாம் உபதேசித்தருளிய ஞானம் பரம்பரையாக வந்தது. நீ திருவாரூர் செல். ஞானப் பிரகாசனிடம் உபதேசம் பெறுவாய்! ஞான மார்க்கத்தை உனக்கு அவன் காட்டுவான்! “ என்று கூறினார். இவ்வாறு கனவு கண்ட ஞானசம்பந்தர் ஈசனின் அருள் தனக்குக் கிட்டியதை உணர்ந்து மகிழ்ந்து அங்கே சொக்கேசனிடம் விடை பெற்றுக் கொண்டு தியாகேசனைத் தரிசிக்கவும், ஞானோபதேசம் பெறவும் வேண்டி திருவாரூருக்குப் புறப்பட்டார். குரு ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் ஒரு பக்கம்.