Wednesday, January 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள்!

1815-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள் பிறந்த பிள்ளையவர்கள் 61 வயது வரை வாழ்ந்தார். தம் வாழ்நாளில் பாதிக்காலத்துக்கும் மேல் திருவாவடுதுறை ஆதீனத்துடன் உள்ள தொடர்புகளுடனேயே கழித்தார். மூன்று பட்டத்து குருமகாசந்நிதானங்களுடன் நெருங்கிப் பழகிய பிள்ளையவர்களுக்குப் பல சீடப்பிள்ளைகள் உண்டு. அவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவரும் நாம் அனைவரும் அறிந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆவார். தெய்வங்களில் மும்மூர்த்திகள் என பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சொல்வது போல இசைக்கலைக்கு மும்மூர்த்திகளாக கர்நாடக இசைக்கு முத்துசாமி தீக்ஷிதரையும், தியாராஜரையும், சியாமா சாஸ்திரியையும் சொல்லுவதுண்டு. அதுபோல் தமிழிசைக்கு மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் ஆகியோரைச் சொல்வார்கள். அதுபோலத் தமிழ் உலகில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழின் மும்மூர்த்திகளாகச் சொல்லப்படும் மூவரில் பிள்ளையவர்கள், ஆறுமுக நாவலர், வள்ளலார் ஆகியோரை ஆன்றோர் கூறுகின்றனர். தமிழ்ப் பதிப்புலகிலும் அவ்வாறு பெருமை பெற்றிருக்கும் மூவரில் நாவலரோடு சி.வை. தாமோதரம் பிள்ளையும், தமிழ்த்தாத்தாவையும் சொல்வார்கள். இத்தனை பெருமைகளைப் பெற்றிருக்கும் பிள்ளையவர்கள் தங்கள் ஆதீனத்தில் இருப்பதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் ஆதீனகர்த்தர்கள் தங்களுக்குக் கிடைத்தற்கரிய கெளரவமாகக் கருதினார்கள்.

பிள்ளையவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாடம் சொல்லுவார் எனத் தமிழ்த்தாத்தா சொல்கின்றார். கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் உண்ணும்போதும், பயணங்களிலும், உறங்கப் போகையிலும் கூடப் பாடம் சொல்லுவாராம். பாடங்களுக்குக் குறிப்புப் புத்தகங்களோ, ஏடுகளோ இல்லாமல் மனதில் மனப்பாடமாக இருந்தவற்றில் இருந்தே பாடம் சொல்லுவாராம். மாணாக்கர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியன கிடைக்கிறதா என்பதில் மிகவும் அக்கறை காட்டுவாராம். ஒரு சமயம் மாணாக்கர்களுக்குத் தங்கிப் பாடம் சொல்லவென்றே மாயவரத்தில் வீடு ஒன்றை வாங்கி மாணாக்கர்கள் அங்கேயே தங்கி உண்டு, உறங்கிப் பாடம் கேட்குமாறு ஏற்பாடுகள் செய்தார். பாடம் சொல்வதில் இனபேதமோ, மதபேதமோ இல்லாமல் அனைத்து இனத்தவருக்கும், மதத்தவருக்கும் பாடம் சொல்லி இருக்கிறார் பிள்ளையவர்கள். சில மாணாக்கர்களின் திருமணத்தையும் தம் சொந்தப் பொறுப்பில் நடத்திக் கொடுத்திருக்கிறார். சவேரிநாதர் என்ற கிறித்துவரும், நாகூர் குலாம்காதர் நாவலர் என்னும் இஸ்லாமியரும் அதில் குறிப்பிடத் தக்கவர்கள். சவேரிநாதர் பிள்ளையவர்களுக்கு அருகேயே எப்போதும் இருந்து சேவைகள் செய்தும் வந்திருக்கிறார். பிள்ளையவர்களின் மாயவரம் வீடு கிட்டத்தட்ட ஒரு குருகுலமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது. தமக்குக் கிடைக்கும் சொற்பப் பணத்தையும் மாணாக்கர்களின் நலனுக்கெனச் செலவிட்டு விடுவார் பிள்ளையவர்கள். திருவாவடுதுறை ஆதீனம் தவிர, குன்றக்குடி ஆதீனமும், தருமை, திருப்பனந்தாள் ஆதீனங்களும் பிள்ளையவர்களின் வித்தையை மதித்துக் கெளரவித்தார்கள்.

திருவாவடுதுறை ஆதீனத்திலோ ஒரு படி மேலே போய்ப் பிள்ளையவர்களிடம் தங்களுக்குள்ள அன்பையும், மரியாதையையும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டனர். மதிய உணவு அளிக்கும்போது போடும் பந்திக்குப் பந்திக்கட்டு எனப் பெயர். அதில் துறவறத்தார் வரிசையில் எப்போதுமே ஆதீனகர்த்தர்களே முதலிடம் பெறுவார்கள். அதே போல் இல்லறத்தார் வரிசையில் எப்போதுமே பிள்ளையவர்களுக்கே முதலிடம் அளித்து மரியாதை செய்து வந்தார்கள். இம்மாதிரி ஆதீனங்களில் மதிய உணவு உண்ணும்போதே நல்ல சத்தான சிறப்பான உணவு பிள்ளையவர்களுக்குக் கிடைத்து வந்திருக்கிறது. மற்றபடி தம் வீட்டில் அவருக்கு அவ்வளவு சிறப்பாக உண்ணமுடியாமல் உணவில் நெய் கூடச் சேர்த்துக்கொள்ள முடியாமல் நெய்யில்லாமலே உண்டிருக்கிறார் என்பதைப் பிள்ளையவர்களின் சரித்திரத்தை எழுதிய தமிழ்த்தாத்தா மூலம் அறிகிறோம். அந்நிகழ்ச்சி வருமாறு:

ஒருமுறை ஆதீனத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரம் படிக்கப்பட்டது. பிற்பகலில் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சரித்திரம் முடிக்கையில் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல்(பனிரண்டு மணி) ஆயிற்று. அதன் மேல் வீட்டிற்குச் சென்று உணவு உண்ண வேண்டாம் எனப் பிள்ளையவர்களை ஆதீனத்திலே உணவு உண்டுச் செல்லும்படி சொல்லவே பிள்ளையவர்களும் அதற்கு இசைந்து உணவு அங்கேயே உட்கொண்டார். பின்னர் தம்முடைய மாணாக்கர் விடுதியில் உணவை முடித்துக்கொண்டு தம்மைத் தம் வீட்டிற்குக் கொண்டு விட வந்த தம் அருமைச் சீடர் ஆன உ.வே.சாமிநாதையரிடம் பிள்ளையவர்கள், “இன்று மடத்தில் உணவு உட்கொண்டதால் நெய் கிடைத்தது.” எனச் சிறு குழந்தையைப்போன்ற சந்தோஷத்துடன் கூறினாராம். இதைக் கேட்ட ஐயரவர்களின் மனம் வருந்தியது என எழுதியுள்ளார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் இல்லாமல் நெய் இல்லாமலேயே உணவு அருந்தி வந்தாராம் பிள்ளையவர்கள். குறிப்பறிந்து எவரும் கொடுத்தாலொழியத் தாமாக இது வேண்டும்; அது வேண்டும் எனக் கேட்டுப் பெறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. விடாமல் பாடம் சொல்லும் ஆசிரியருக்கு நெய் சேர்த்து உணவு அருந்துவது எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து கொண்டிருந்த ஐயரவர்கள், தம் ஆசிரியரின் வறுமை நினைந்து வருந்தினார்.

பெரிய கவிஞராகவும், பெரிய பெரிய பிரபுக்களால் கொண்டாடப்பட்டவரும், பெரியதொரு ஆதீனத்தின் வித்துவானுமான பிள்ளையவர்களின் நிலை இருந்தால் விருந்து; இல்லையேல் மருந்து என்னும்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இதேபோல் ஒரு நாள் காலை பிள்ளையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணிப் பலகை போட்டு அமர்ந்திருந்தார். அவருக்கு எண்ணெய் தேய்க்கும் ஆள் சமையலறையில் சென்று எண்ணெய் கேட்க எண்ணெயோ இல்லை; ஆகையால் வரவே இல்லை. ஆனால் பிள்ளையவர்களுக்கோ இதில் கவனம் இல்லை; நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் நேரமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். பாடம் சொல்லும் கவனத்தில் தாம் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டி அமர்ந்திருந்ததையே மறந்துவிட்டார். இதைக் கவனித்த ஐயரவர்கள் வேறு வேலையாகப் போவது போல் எழுந்து வெளியே போய்க் காவிரிக்கரையிலுள்ள ஒரு கடையில் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து சமையலறைத் தவசிப்பிள்ளையிடம் கொடுத்துக் காய்ச்சித் தர வேண்ட, அவரும் அவ்விதமே கொடுத்தார். அதன் பின்னர் காய்ச்சிய எண்ணெய் வந்து பிள்ளையவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாமலேயே எண்ணெய்க் குளியலும் நடந்தது.

ஆனால் பிள்ளையவர்களின் இந்த வறுமைக்கு முக்கியக் காரணம் அவரின் வள்ளல் தன்மையே ஆகும். தம்மிடம் வரும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தம் சக்திக்கு மீறிச்செலவு செய்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வந்தார். அதனாலே அவருக்கு வறுமை ஏற்பட்டது என்பது சிலரின் கூற்று. அந்நாட்களில் சைவத் திருமடங்களில் தமிழ் கற்றுக் கொடுத்தாலும் அவற்றில் சங்கப்பாடல்கள் இடம்பெறாது. ஏனெனில் சங்கப் பாடல்களில் காதலும், வீரமுமே முதன்மை பெற்றிருந்தது. பெரும்பாலான புலவர்கள் சங்கப் பாடல்களை அறிந்திருந்ததில்லை. காப்பியங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள், பிரபந்தங்களே கற்பிக்கப்பட்டன. சங்கப் பாடல்களுக்கு அசைவ நூல்கள் என மறைமுகப் பெயரால் அழைத்தனர். ஆகவே பிள்ளையவர்களும் அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் சங்க இலக்கிய ஏடுகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றைக்கூடக் கற்பித்ததில்லை. ஐயரவர்களுக்கும் பிள்ளையவர்கள் சங்கப் பாடல்களைக் கற்பித்ததில்லை. 1871-ஆம் ஆண்டு முதல் பிள்ளையவர்களின் இறுதிக்காலமான 1876-ஆம் ஆண்டு வரை அவரிடம் பாடம் கேட்ட சாமிநாத ஐயரவர்களுக்கு இந்தப் பெயரைச் சூட்டியதும் பிள்ளையவர்களே ஆகும். உ.வே.சாமிநாத ஐயர் என இன்று அறியப் படும் தமிழ்த்தாத்தாவின் உண்மைப் பெயர் வேங்கடராமன் ஆகும். அந்தப் பெயராலே அவர் அறியப் பட்டிருந்தார். ஆனால் ஐயரவர்களின் வீட்டில் சாமா என்னும் பெயரால் அழைப்பதை அறிந்த பிள்ளையவர்கள் கிட்டத்தட்ட தீக்ஷா நாமம் என்று சொல்லும்படி ஐயரவர்களின் பெயரை "சாமிநாதன்" என மாற்றினார்.

Monday, January 23, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள்!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றி. இவரைக்குறித்து அறியாதோர் இருக்க மாட்டார்கள். என்றாலும் ஒரு தெரிந்து கொள்வோம். அந்நாட்களில் திருச்சி என அழைக்கப்படும் தலமான திரிசிரபுரத்தில் அதவத்தூர் என்னும் ஊரில் சைவ வேளாளக்குடும்பத்தில் சிதம்பரம் பிள்ளை என்னும் கணக்காயருக்கும், அன்னத்தாச்சி எனப்படும் அவர் மனைவிக்கும் ஓர் ஆண்மகவு பிறந்தது. 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் தோன்றிய இந்தக் குழந்தைக்கு மீனாக்ஷி சுந்தரம் என்னும் பெயர் வைத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். தக்க பருவம் வந்ததும் திருவாவடுதுறையைச் சார்ந்த வேலாயுத முனிவரிடம் தமிழ் இலக்கியங்களையும், சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமது பதினாறாம் பிராயத்திலேயே காவேரி ஆச்சியாரை மணந்து இல்லறத்தில் புகுந்தார். கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய பிள்ளையவர்கள், பல அறிஞர்களையும் நாடிக் கல்வி கற்றதோடு அல்லாமல், இரவில் பிச்சை எடுக்கும் இராப்பிச்சைக்காரனைக் கூட விடாமல் அவனிடமிருந்தும் பல பாடல்களைக் கற்றார். தண்டி அலங்காரத்தை இவ்வாறே தெருத்தெருவாக அலைந்து திரிந்த ஒரு பரதேசியிடம் கற்றார்.

மேலும் கல்வி கற்கும் ஆர்வத்தோடு திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார் பிள்ளையவர்கள். அப்போது 14-ஆம் பட்டம் குருமகா சந்நிதானமாக வேளூர் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார். அங்கே அம்பலவாண முனிவரிடம் சமய சாத்திர நூல்களைப் பயின்றதோடு தமக்குத் தெரிந்த தமிழை அங்கு இருந்த இளம் மாணாக்கர்களுக்குக் கற்றும் கொடுத்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்தபோது தான் திருவெண்ணீற்றுமை பி்ள்ளைத்தமிழ், சீகாழிக் கோவை, திருத்தில்லை யமக அந்தாதி போன்றவற்றை பிள்ளையவர்கள் இயற்றினார். இதைக் கண்ட ஆதீனத்தவர்கள் பிள்ளையவர்களுக்கு நுட்பமான தமிழ்ப்புலமை இருப்பதைக்கண்டு மகிழ்ந்து, அப்போதைய குரு மஹா சந்நிதானம் ஆன ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பெரும் வித்துவான்கள் நிறைந்த மஹாசபையில் “மஹாவித்துவான்” என்னும் பட்டத்தை அளித்துக்கெளரவித்தனர். சுப்பிரமணிய தேசிகர் காலத்தில் ஆதீனத்தொடர்பு கொண்ட பிள்ளையவர்கள் அவருக்குப் பின்னர் 15-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர் காலத்திலும், அதன் பின்னர் 16-ஆம் பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் காலத்திலும் தொடர்ந்து ஆதீன வித்துவானாகவே திகழ்ந்தார்.

சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிள்ளையவர்கள் பெரிய புராணத்தை நன்கு படித்து அறிந்து பிரசங்கங்கள் செய்வதில் வல்லவராக இருந்தார். இதைப் பார்த்த செட்டி நாட்டுச் செட்டியாரான வன்றொண்டச் செட்டியார் என்னும் ஒருவர் சேக்கிழார் மீது பிள்ளைத் தமிழ் பாடச் சொல்லிப் பிள்ளையவர்களிடம் விண்ணப்பிக்கப் பிள்ளையவர்களும் அவ்வாறே பாடினார். பிள்ளைத்தமிழ் என்பது புலவர்கள் தாம் விரும்பும் இறைவனையோ, அரசனையோ, வள்ளலையோ சிறு குழந்தையாகப் பாவித்துப் பாடுவதாகும். காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும், கடைசி மூன்று மட்டும் கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மாற்றத்தோடு பெண்பால் பிள்ளைத்தமிழாகவும் பாடப்படும். அவ்வாறே சேக்கிழாரைக் குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழோடு சேர்த்துப் பிள்ளையவர்கள் பத்துப் பிள்ளைத்தமிழ் பாடி உள்ளார்கள்.

காப்புப் பாடல்கள் பொதுவாக விநாயகர், அம்பிகை, ஈசன் போன்றோரைக்குறித்தே அமையும். ஆனால் பிள்ளையவர்கள் சேக்கிழார் பிள்ளைத்தமிழின் அமைப்பில் சற்றே மாறுபட்டு காப்புப் பருவத்தில் திருத்தொண்டத் தொகையில் கூறப்பட்டிருக்கும் அடியார்களையே காப்புக் கடவுளராகப் பாடி இருக்கிறார். அதே போல் அம்பலவாணர் பிள்ளைத்தமிழில் காப்புக்கடவுளராக அகச்சந்தானக் குரவர், புறச்சந்தானக் குரவர், இவர்கள் வழிவந்த குருமஹாசந்நிதானங்கள் ஆகியோரைக் குறித்துப் பாடி இருக்கிறார்.

சேக்கிழார் பிள்ளைத்தமிழின் காப்புப் பாடல்:

கார்கொண்ட சோலைசூழ் ஆருரர் ஓர்அரைக்
கால்நம்பி ஆரூரர்முக்
கால்அரைக் கால்ஆக முடிவுசெய் தருள்மாக்
கவித்திசையின் வீற்றிருக்கும்
ஏர்கொண்ட தில்லைமூ ஆயிரர்முன் வழுவரும்
எழுவரும் தழுவரும்எம
திதயம் தழால்கொண் டுறைந்திடச் செய்தவரை
எப்போதும் ஏத்தெடுப்பாம்
பார்கொண்ட தொண்டர்வர லாறுசொல் புராணம்அம்
பலவர்அரு ளால்அமைந்த
படிதெரித் திடஉலகெ லாம்எனும் சுருதிநாப்
பண்ணும்ஈற் றும்பொருத்திப்
பேர்கொண்ட சைவபரி பாடைஅறி வரியசம்
பிரதாயம் முதலியாவும்
பிறங்கத் தெரித்தெம்மை ஆண்டகுன் றத்தூர்ப்
பிரானைப் புரக்கஎன்றே

இது சேக்கிழார் பிள்ளைத் தமிழின் காப்புச் செய்யுளாகும். இதைத் தவிரவும் பிள்ளையவர்கள் திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றம்மை பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டா நாயகி பிள்ளைத்தமிழ், உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ். திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை அம்மைப் பிள்ளைத்தமிழ், திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ், திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் ஆகிய பிள்ளைத் தமிழ்ப்பாடல்களைப்பாடியுள்ளார்.

கீழுள்ள பாடல்கள் அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழின் காப்புப்பருவத்தின் பாடல்களில் முதல் பாடல் திருநந்தி தேவரையும் அடுத்தது சனற்குமாரர் நால்வரையும் குறிப்பிடுகிறது. இது தவிர சந்தானக் குரவர்கள், குருமஹாசந்நிதானங்கள் என அனைவரையும் காப்புப் பாடல்களில் பிள்ளையவர்கள் வாழ்த்திப்பாடி இருக்கின்றார்கள்.

பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் -
பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர்,
தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு -
தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம்,
பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே -
பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத்,
தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் -
செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(1)
சனற்குமாரமுனிவர் - வேறு.
838 எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ
னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர்
தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ்
சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா
மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த
வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற்
றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித்
திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.

Wednesday, January 18, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! கோபாலகிருஷ்ண பாரதியார்--1

அடுத்து நாம் பார்க்கப்போவது கோபாலகிருஷ்ண பாரதியார். இவரையும் இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டோம். இப்போது இவரின் சரித்திரம் குறித்துப் பார்க்கலாம். இவர் சத்குரு எனவும் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் சொல்லப்படும் ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் சமகாலத்தவர் ஆவார். இவரின் ஞானத்தை அவரும், தியாகராஜ ஸ்வாமிகளின் ஞானத்தை இவரும் பாராட்டி இருப்பதாய்க் கேள்விப்படுகிறோம்.

தன் தமிழிசையால் இறை உணர்வை வளர்த்த பல பெரியோர்களில் கோபாலகிருஷ்ண பாரதி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர். இவர் சிவன் மேல் அளவில்லாத பக்தியும், ஈடுபாடும் கொண்டு பரவசம் அடைந்தவர். எண்ணற்ற பாடல்களை சிவன் மேல் எழுதியுள்ளார். கடைசிவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே வாழ்ந்தார். நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் என்னும் ஊரில் அந்தண குலத்தில் ராமசாமி பாரதி என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார். ராமசாமி பாரதி குடும்பம் பாரம்பரியம் மிக்க இசைக்குடும்பம் ஆகும். முதலில் முடிகொண்டான் என்னும் ஊரிலும் பின்னர் ஆனைதாண்டவபுரம் என்னும் ஊரிலும் வசித்த இவர்கள் பின்னால் நரிமணம் வந்து வசித்தார்கள். பலகாலம் ஆனைதாண்டவபுரம் பாரதி எனவும் முடிகொண்டான் பாரதி எனவும் அழைக்கப்பட்டனர்.

பிறப்பு மட்டுமில்லாமல் குடும்பச் சூழ்நிலையும் சேர்ந்து கோபாலகிருஷ்ண பாரதிக்கு இசையில் நாட்டம் மிகவும் அதிகமாகவே இருந்தது. தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர் அக்கால வழக்கப்படி தமிழ் கற்கையிலேயே தமிழ்ப் பாடல்களை இசையோடு பாடிப் பழகும் வழக்கம் கொண்டிருந்தார். நாளாவட்டத்தில் தாமே சுயமாகத் தமிழ்ப்பாடல்களை இயற்றவும் ஆரம்பித்தார். இவர் காலத்தில் அரசாண்ட மராத்தி மன்னரான அமரசிம்ம ராஜாவின் சபையில் இருந்த இந்துஸ்தானி இசை மேதை ராமதாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு அதன் நுணுக்கங்களைக் கர்நாடக இசைக்கு ஏற்ப தமது கீர்த்தனைகளில் புகுத்தினார். ராமதாஸைத் தவிர அந்நாட்களில் பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணையரிடமும், வைணவ இசைக்கலைஞரான அனந்த பாரதியாரிடமும், சிதம்பரம் சிவசங்கர தீக்ஷிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோரிடமும், இசைமேதைகள் ராமசாமி சிவன், மஹாவைத்தியநாத ஐயர் ஆகியோரிடமும் நெருங்கிப் பழகித் தன் இசையறிவை மேம்படுத்திக்கொண்டார். ஒரு சமயம் இவர் தியாகராஜ ஸ்வாமிகளைக்காணச் சென்றபோது அவர் ஶ்ரீராமர் மேல் ஆபோகி ராகத்தில், “ஶ்ரீராமஸீதா” எனத் தொடங்கும் கீர்த்தனையைத் தன் சீடர்களுக்குக்கற்பித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டவுடன், பாரதியார் சிதம்பரம் நடராஜர் மீது ஆபோகி ராகத்தில் கீழ்க்கண்ட கீர்த்தனையை இயற்றிப் பாடினார்.

அந்தப்பாடல் தான் பிரபலமான
சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானம் ஆகுமா - தில்லை

அநுபல்லவி

கிருபா நிதி இவரைப் போலக்
கிடைக்குமோ இத்தரணி தன்னிலே
என்னும் பாடல் ஆகும்.

இதே போல தியாகராஜர் பாடிய பஞ்சரத்னக் கீர்த்தனைகள் போலவே ஈசன் மேல் கோபாலகிருஷ்ண பாரதியாரும் அதே ராகங்களில் பஞ்சரத்னக் கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். அவை வருமாறு:

அரஹரசிவசங்கர என்னும் பாடல் நாட்டை ராகம், ரூபக தாளம்
சரணாகதியென்று என்னும் பாடல் கெளளை ராகம் ஆதி தாளம்
பிறவா வரம்தாரும் என்னும் பாடல் ஆரபி ராகம் ஆதி தாளம்
ஆடிய பாதமே கதி என்னும் பாடல் வராளி ராகம் ஆதி தாளம்
மறவாமல் எப்படியும் என்னும் பாடல் ஶ்ரீராகம் ஆதி தாளம்

இவை அனைத்தும் ஈசனைப் போற்றும் சிவபக்தி நிறைந்த பாடல்களாகும். இவை தவிர கோபால கிருஷ்ண பாரதியார் கல்யாணங்களில் பாடக்கூடிய நலுங்குப் பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், லாலி, கும்மி, கோலாட்டம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். நாயன்மார்களான சிவனடியார்களின் வாழ்க்கையை இசையுடன் கூடிய பாடல்களாகப் பாடி எல்லாருக்கும் பரப்பினார். அவற்றில் இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம் ஆகியவையோடு நந்தனார் சரித்திரமும் இடம் பெற்றது.

அந்நாட்களில் பெரிய பண்ணைகளை வைத்து விவசாயம் பண்ணிக்கொண்டிருக்கும் பண்ணையார்கள் தங்களிடம் வேலை செய்யும் குடியானவர்களை நடத்தும் முறையில் கோபாலகிருஷ்ண பாரதியார் மனம் கசந்து போயிருந்தார். அதைச் சுட்டும் வகையில் நந்தனார் சரித்திரத்தின் கதையைச் சற்று மாற்றியமைத்தார். பிறப்பால் புலையரான நந்தனார் புலைப்பாடியில் வாழ்ந்து வந்ததோடு சிவபெருமான் மேல் மாறாக் காதல் கொண்டு எந்நேரமும் இறைவன் புகழைப் பாடுவதே தம் கடமை என வாழ்ந்து வந்தார். நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார் சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல், வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப் போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

Friday, January 6, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! மறைஞானசம்பந்தர்!

மறைஞானசம்பந்தர்
சைவப் பெரியோர் பலருள் ஞானசம்பந்தர் என்ற பெயருள்ள மூவர்மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் திருஞானசம்பந்தர் என்னும் சமயக்குரவரில் முதல்வரும், மறைஞானசம்பந்தர் என்னும் சந்தானக்குரவரில் மூன்றாமவரும், குருஞானசம்பந்தர் என்னும் குருமுதல்வர் ஆனவரும், தருமபுர ஆதீனத்தின் நிறுவனரும் ஆவார்கள். இவர்களில் மறைஞானசம்பந்தரையே இங்கே பார்க்கப் போகிறோம்.

மெய்கண்டாரின் அவதாரத்தலமாகிய பெண்ணாகடத்தில் பராசர கோத்திரத்தில் சாமவேத மரபில் பிறந்தவர் ஆவார். இவர் அருணந்தி சிவாசாரியாரிடம் உபதேசம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்திற்கு வடகிழக்கிலுள்ள திருக்களாஞ்சேரியில் வாழ்ந்து வந்தார். இவரிடம் சீடராய் இருந்தவர்களுள் முக்கியமானவர் உமாபதி சிவம் எனப்பட்ட சந்தானகுரவரில் நான்காமவர் ஆவார். இன்னொருவர் மச்சுச் செட்டியார் என்னும் அருள் நமச்சிவாயர், மறைஞான சம்பந்தர் நூல் எதுவும் செய்யவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இவர் சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லப்படுகிறது. மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவம் சீடராகச் சேர்ந்ததே ஒரு சுவையான சம்பவம் மூலமே.
அக்காலத்தில் தில்லை மூவாயிரவரில் முக்கியமாய்த் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீக்ஷிதரை மேள, தாளத்தோடு பல்லக்கில் தீவட்டி மரியாதையோடு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்து வந்தது. பகல் நேரமானாலும் இந்த தீவட்டி மரியாதை உண்டு. ஒருநாள் உமாபதி சிவம் அப்படியே கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து தீவட்டி மரியாதை சகிதம், மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தார். அங்கே ஓர் வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் இதைக் கண்டதும், “பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்!” என்று உமாபதி சிவத்தின் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்லிச் சிரித்தார். அதைக் கேட்ட உமாபதி சிவத்திற்கு அதன் தாத்பரியம் புரிய அவர் மனதில் அந்த வித்து விழுந்து ஞானாக்னி பற்றிக்கொண்டது.

பல்லக்கிலிருந்து அப்படியே குதித்து மறைஞான சம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கித் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மறைஞானசம்பந்தர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவம் அவரைப் பின்பற்றினார். சற்றுத் தூரம் சென்ற மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டின் வாசலில் நிற்க அங்கே அவர் கைகளில் கூழை வார்த்தனர். அந்தக் கூழை அப்படியே கைகளில் ஏந்திக் குடித்தார் மறைஞான சம்பந்தர். அப்போது கூழ் அவர் கைகளின் வழியே வழிந்தது. உமாபதி சிவம் சிந்திய கூழை குருப் பிரசாதம் எனக் கூறிவிட்டுக் கைகளில் வாங்கிக் குடித்தார். அன்று முதல் அவரின் அத்யந்த சீடரானார். நாலாவது சந்தானகுரவராகவும் ஆனால். திருக்களாஞ்சேரியில் வசித்த மறைஞான சம்பந்தரைப் பற்றிய மேலதிக தகவல்கள் கிட்டவில்லை. அவர் அங்கேயே இருந்து முக்தியடைந்ததாய்த் தெரிய வருகிறது. சதமணிக்கோவை என்னும் நூல் ஒன்றை மறைஞான சம்பந்தர் செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. திருக்களாஞ்சேரி தற்போது சிங்காரத் தோப்பு என்ற பெயரில் வழங்குகிறது. இங்கே மறைஞானசம்பந்தரின் மடமும் திருக்களாஞ்செடியுடைய மஹாதேவர் கோயிலும் உள்ளது. மடத்திலேயே மறைஞானசம்பந்தரின் சமாதி உள்ளது. மடமும், சமாதியும் திருவாவடுதுறை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ளது.