Friday, September 26, 2008

சித்திரம் பேசுதடி! மினி தாஜ்மஹால்!

அடுத்து நாம் காணப் போவது பீபி கா மக்பரா என்ற பெயரில் அழைக்கப்படும் மினி தாஜ்மஹால். ஒளரங்கசீபின் மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தாஜ்மஹாலில் கட்டடக் கலை அமைப்பை அப்படியே பிரதி எடுத்துக் கட்டப் பட்டுள்ளது. இதைக் கட்டியது ஒளரங்கசீப் என்று சிலரும், ஒளரங்கசீபின் மகன் தன் தாயின் நினைவில் கட்டியது என உள்ளூர் மக்களும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் கட்டப் பட்டது ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் என்பது சந்தேகம் இல்லை. 1679-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் ஒளரங்கசீபின் மனைவி ரபியா-உத்-துரானி என்பவரின் நினைவுச்சின்னம். இது தாஜ்மஹாலின் ஒரு மோசமான நினைவுச்சின்னம் என்று பொதுவாகச் சொல்லப் படுகின்றது. வெளிப்பாகத்தின் அமைப்பு தாஜ்மஹாலை ஒத்திருந்தாலும், அதைப் போல் வெள்ளை மார்பிளால் இது முழுதும் கட்டப்படவில்லை. மேலே உள்ள குவிந்த கூரை போன்ற அமைப்பு மார்பிளில் உள்ளது. ஆனால் அதன் சுவர்கள் (ப்ளாஸ்டர்) சுண்ணாம்புப் பூச்சு வேலைகளாலேயே செய்யப்பட்டுள்ளது. உள்ளே எண்கோணவடிவில் உள்ள மார்பிள் சாளரம் காணப்படுகின்றது.

இது எந்தவிதத்திலும் தாஜ்மஹாலோடு ஒப்புநோக்கும் வகையில் இல்லை என்றே சொல்லவேண்டும். என்னோட கருத்து தாஜ்மஹாலை விடவும், ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் பில்வாடா சமணக் கோயிலின் வேலைப்பாடுகள் காணக் கிடைக்காத ஒன்று என்று சொல்லலாம். இங்கேயும் உள்ளே நுழையும் இடத்தில் இருபக்கமும் செயற்கைத் தடாகமும், பாதைகளும் காணக் கிடைக்கின்றன. தாஜ்மஹாலைப் பிரதி எடுத்திருக்கும் ஒரு கட்டிடம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அதற்கு ஈடு என்று சொல்ல முடியாது.

அடுத்து நாம் காணப் போவது தண்ணீரில் ஓடும் மாவு அரைக்கும் மில். ஒளரங்கசீப் காலத்திலேயே இதுவும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. பாபா ஷா முஸாபர் என்ற ஒரு முஸ்லீம் பெரியவரின் நினைவாக எழுப்பப்பட்ட புனிதக் கோயிலின் உள்ளே அமைக்கப் பட்டுள்ளது இது. ஒளரங்கசீபின் குரு இவர்தான் எனவும் சொல்லப் படுகின்றது. இந்தக் கோயிலின் நீர்நிலையில் இருந்து வடிகுழாய் மூலம் நீர் எடுத்துச் செல்லப்பட்டு அதன் மூலம் இந்த இயந்திரம் இயக்கப்பட்டிருக்கின்றது. ஏழை மக்களுக்காகவும், படை வீரர்களுக்காகவும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது இது.

Friday, September 19, 2008

சித்திரம் பேசுதடி!!! தேவகிரிக் கோட்டை!

பலமான சுற்றுச் சுவர்களுடன் கூடிய இந்தக் கோட்டை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு அரசர்களால் பல்வேறு விதமான ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரணத்தால் அந்த அரசர்களின் திறமைகளுக்கும், வலுவான அரசாட்சிக்கும் ஏற்ற வகையில் பலப் படுத்தப் பட்டிருக்கின்றது. வியக்க வைக்கும் கட்டிடக் கலையைக் கொண்டிருக்கும் இந்தக் கோட்டை பல பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. மொத்தக் கோட்டையிலும் தண்ணீர் நிரப்பும் தொட்டிகள், மேலே ஏறிச் செல்லப் படிகள் என்று காணப் படுகின்றன. மேலே ஏறிச் செல்லும் வழியில் படை வீரர்கள் நின்று கொள்ள இடமும், ஓய்வெடுக்கும் இடங்களும், மறைந்து கொள்ளும் இடங்களும் காணப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் நல்ல வெயில் காலம். சுட்டெரிக்கும் மே மாத வெயில். இந்த வெயிலில் தான் மேலே ஏறிச் செல்லவேண்டும். குன்று செங்குத்தாய் இருப்பதால் கொஞ்சம் கஷ்டம் தான் மேலே ஏறிச் செல்ல, அங்கங்கே சில படிகள், சில இடங்களில் சாய்வான நடைபாதைகள் மேலே செல்லவும் கீழே இறங்கவும் காண முடிகின்றது. பிரதான நுழைவாயிலில் இருந்து அடுத்த நுழைவாயில் அமைத்திருக்கும் கோணத்தால் உள்ளே நுழையும் எதிரிக்கு இன்னொரு வாயில் உள்ளே அமைந்திருப்பதைக் காண முடியாது. ஆனால் உள்ளே இருப்பவர் நுழைபவரைக் காண முடியும், தாக்கி அழிக்கவும் முடியும்.

யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டப் பட்டிருந்த கோயில் பின்னாட்களில் பல்வேறு கைகளிலும் மாறியதால் இன்று அங்கே பாரதமாதா கோயில் என்று மாற்றம் செய்யப் பட்டு, பாரதமாதா தரிசனம் கொடுக்கின்றாள். இதைத் தவிர, “ஆம்காஸ் மண்டபம்” மன்னர் பொது மக்களைத் தரிசிக்கும் இடம், ரங் மஹால், சினிமஹால், போன்றவை தவிர ஒரு இருட்டான பாதையும் காணப் படுகின்றது. இது தான் இந்தக் கோட்டையின் அதிசயமே. சுற்றிச் சுற்றி வந்து உள்ளே செல்லும் பல்வேறு முக்கிய வாயில்களைக் கடந்துக் கொஞ்சம் மேலே ஏறினால், ஒரு பரந்த வெளி வருகின்றது. அதன் இருபக்கமும் வீரர்கள் நிற்கும் இடம். அதைக் கடந்தால் திறந்த ஒரு முற்றம். மேலே பார்த்தால் சுற்றுச் சுவர்கள் தெரியும். திறந்த முற்றத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நுழைவாயிலுக்குள் நுழைந்தால் ஒரு பெரிய அறை போன்ற ஒரு இடம் வருகின்றது. அங்கே நுழையும் முன்னரே கையில் வைத்திருக்கும் அனைத்து வெளிச்சம் தரும் வஸ்துக்களையும் அணைக்கச் சொல்லி விடுகின்றனர். ஒரு தீவட்டியும், அதை ஏற்ற ஒரு நெருப்புப் பெட்டியும் வழிகாட்டி, (அரசால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டிகள் மட்டுமே) எடுத்து வருகின்றார். ஒரு குழு நுழைந்து உள்ளே சென்று பார்த்துவிட்டு, வேறு வாயில் வழியாக வெளியேறியதுமே மற்றொரு குழுவுக்கு அனுமதி.

உள்ளே சென்றால் கண்ணை மயக்கும் இருட்டு. எதிரே என்ன இருக்கின்றது? சுவரா? வெட்டவெளியா, மனிதரா?? என்ன என்றே புரியாதவண்ணம் மனதைக் குழப்பும் இருட்டு. நம் மனதையும் கண நேரம் அந்த இருட்டு மனதைக் குழப்புகின்றது. அதற்குள் வழிகாட்டி கையில் வைத்திருக்கும் தீவட்டியை ஏற்றி விடுகின்றார். கொஞ்சம் நிம்மதி. மற்றொரு பக்கமாய்த் தப்பித்துச் சென்று விடலாம் என்று இந்த இருட்டில் இருந்து தப்பிக்கும் ஒற்றர்களோ, வேற்று நாட்டு வீரர்களோ தப்பிக்க முடியாதபடிக்கு அங்கே சிறு இடத்திற்குச் செல்கின்றது. மேலே உயர்ந்த நீண்ட சுவர்கள். அதன் மேலே இருந்து எண்ணெய்க் கொப்பரை மூலமோ, அல்லது வேறு வகையிலோ நெருப்புக்களோ, கொதிக்கும் எண்ணெயோ ஊற்றப் பட்டால் வந்தவர் தப்பிக்கவே முடியாது. அப்படி ஒரு வகையில் கட்டப் பட்டிருக்கின்றது, நம் கட்டிடக் கலையில் சிறப்புக்கு ஒரு மாட்சிமை கொடுக்கின்றது. இதன் பின்னர் யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் ஜைனக் கோயிலாக இருந்த பாரதமாதா கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டுத் திரும்பும்போது “ஹாதி ஹவுஸ்” என்னும் இடத்தில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் இடத்தைப் பார்க்கலாம். சுற்றிலும் படிக்கட்டுகள் கீழே இறங்க அமைத்துள்ளது, அது அளவில் மிக மிகப் பெரியதாய் இருக்கின்றபடியால் இந்தப் பெயரில் அழைக்கப் படுகின்றது.
இவற்றைத் தவிர யாதவர்களால் கட்டி முடிக்கப் படாத சில குகைகளும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மலைக்கு மேலேயும் கட்டிடம் தெரிகின்றது. அரண்மனை தவிர, அங்கே தான் ஏகநாதரின் குருவான சாது ஜனார்தனரின் சமாதி இருப்பதாயும் சொல்லுகின்றார்கள். அங்கே மேலே ஏறும் பாதை பாதியிலேயே தடைபட்டு இருப்பதோடு அல்லாமல் ரொம்பவே செங்குத்தாயும் இருப்பதால் போக அனுமதி இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இன்னமும் இந்தக் கோட்டையில் தன் ஆராய்ச்சியையும், அகழாய்வையும் செய்து வருகின்றதாயும் சொல்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே இந்தக் கோட்டை இன்று உள்ளது. அடுத்து நாம் பார்க்கப் போவது மினி தாஜ்மஹால். ஒளரங்கசீபின் பிள்ளை தன் தாய்க்காகக் கட்டியது. கிட்டத் தட்ட தாஜ்மஹாலின் மாதிரி என்றே சொல்லலாம்.

Wednesday, September 17, 2008

சித்திரம் பேசுதடி!! தேவகிரிக் கோட்டை!

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே

இதை எழுதியே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. பல்வேறு வேலைகளுக்கு இடையே இதன் குறிப்புக்களையும் எங்கேயோ வச்சுட்டேன். ஒருவழியா இணையம் இல்லையா ஒரு வாரமா, இப்போத் தான் தேடி எடுக்க நேரமே கிடைச்சதுனு சொல்லலாம். எல்லோரா குகைகளுக்குச் செல்லும் முன்பே நாங்கள் முதன் முதல் சென்றது தவுலதாபாத் கோட்டை. தற்சமயம் தவுலதாபாத் என அழைக்கப் பட்டாலும் இதன் உண்மையான பெயர் தேவகிரிக் கோட்டை ஆகும். யாதவ வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் இந்தப் பெயரே நீடித்து இருந்திருக்கின்றது, முகமதியர் வரும் வரைக்கும். அதுவும் முகமது- பின் – துக்ளக்கை யாருக்கும் மறக்கவே முடியாது. துக்ளக் புத்தகத்தால் மட்டுமல்ல, நாடகம் கூட வந்தது, நினைவிருக்கலாம். அந்த துக்ளக் மன்னனால் டெல்லி தலைநகருக்குரிய பெருமையில் இருந்து நீக்கப் பட்டு, மொத்த இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, இந்தியாவின் மத்தியில் உள்ள இந்தத் தட்சிண பூமியின் தேவகிரிக் கோட்டைதான் சரியாக இருக்கும் எனத் தீர்மானித்து அங்கே சிலகாலம் தலைநகரம் மாற்றப் பட்டது. இதைப் பற்றி அறியும் முன்னர் தேவகிரிக் கோட்டையின் வரலாறு பற்றிச் சிறிது தெரிந்து கொள்ளுவோமா??

12-ம் நூற்றாண்டு வரையில் இந்து அரச குடும்பங்களாலேயே ஆளப்பட்டு வந்தது இந்தக் கோட்டை. தேவகிரி, தேவர்களின் மலை என்ற பெயரால் அழைக்கப் பட்டு வந்தது. இது அநேகமாய் எவராலும் வெல்ல முடியாதபடிக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது. பில்லமராஜா என்ற யாதவ அரசனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இந்தக் கோட்டை. மலையின் கற்களாலேயே வெட்டி எடுக்கப் பட்டுக் கட்டப் பட்ட கோட்டைகளின் முன்மாதிரியாகவும் சொல்லப் படுகின்றது. என்றாலும் வலுவான அரசன் இல்லாததால் 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களின் வசம் சென்றது. சுல்தான்களின் வசம் சென்ற 30 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த முகமது பின் துக்ளக் என்ற அரசன், இந்தக் கோட்டைக்கு தவுலதாபாத், (செல்வங்களின் இருப்பிடம்) என்ற பெயர் மாற்றம் செய்து, தலைநகர் இனிமேல் இந்தக் கோட்டையில் இருந்து செயல்படும் என அறிவித்தான். ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம், மன்னன் செய்த ஒரு தவறினால் அது சரிவர நடக்கவில்லை. டெல்லியின் மொத்தக் குடி மக்களையும் மன்னன் மாற்ற முற்பட, வயதானவர்கள், நோயுற்றவர்கள், ஏழைகள், குழந்தைகள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் இது மிகுந்த சிரமத்தையும், பொருட்செலவையும் கொடுத்தது. இதில் மிகுந்த நோயுற்றவர்களும் தப்பவில்லை. பலரும் டெல்லியில் இருந்து தேவகிரி செல்லும் வழியிலே இறந்தனர். பின்னர் தாமதமாய் மனம் வருந்திய மன்னன், மீண்டும் அதே தவறைச் செய்தான். இம்முறை டெல்லியில் இருந்து கிளம்பிய அத்தனை மக்களையும் மீண்டும் டெல்லிக்கே போகச் சொல்ல, இப்போதும் அதே போல் மக்களுக்குத் தீங்கே விளைந்தது. எனினும் அனைத்துக்கும் தப்பி வந்த ஒரு சிலரால் தேவகிரிக் கோட்டை ஏற்றமே பெற்றது. கோட்டையின் வளர்ச்சி அபரிமிதமாய் இருந்தது. மிகப் பெரிய நகரமாய் தலைநகரம் ஆன டெல்லிக்கே சவால் விடும் வகையில் அதன் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் இருந்தது.

பின்னர் இந்தக் கோட்டை பாமனி சுல்தான்களின் கையில் வந்து சேர்ந்தது. அவர்கள் டெல்லியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுயாட்சி புரிந்து வந்தனர். 16-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தட்சிண பீடபூமியின் சுல்தான்கள் ஆட்சி முடிந்து இந்தக் கோட்டை டெல்லியின் முகலாயர் வசம் போய்ச் சேர்ந்து அதன் கடைசிச்சக்கரவர்த்தி ஆன ஒளரங்க சீப் காலம் வரையிலும் அவனிடமே இருந்து வந்தது. சிவாஜியின் காலத்திற்குப் பின்னர் சிலகாலம் மராத்தியர்கள் வசம் இருந்து வந்தாலும் பின்னர் இந்தக் கோட்டை ஹைதரபாத் நிஜாம் வசம் போய்ச் சேர்ந்தது. 1949-ம் ஆண்டு வரையிலும் நிஜாம் மன்னர்களிடமே இருந்து வந்த இந்தக் கோட்டை நிஜாம்களின் சரணாகதிக்குப் பின்னர் இந்திய யூனியனிடம் வந்து சேர்ந்தது. இப்போது கோட்டையின் அமைப்பைப் பார்க்கலாமா???