Monday, August 23, 2010

மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்!

நடந்தது நடந்துவிட்டது. தேவி முதலிலேயே கூறினாள். இப்போது இந்தப் பிறவியில் என் எண்ணம் ஈடேறாது என. ஆனால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க எனக்குப் பொறுமையில்லை. இந்த சாம்ராஜ்யத்திற்குக் குறைந்த பக்ஷமாக முந்நூறு ஆண்டுகள் கிடைக்கும் என தேவியின் ஆசிகள். நீங்கள் இந்த நகரத்திற்கு "விஜயநகரம்" என்று பெயர் வையுங்கள். மேன்மேலும் வெற்றிகள் குவியட்டும். ஹிந்துக்களுக்கும், மற்ற மதத்தவர்களுக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் சமமாக எண்ணி நல்லாட்சி புரிந்து வாருங்கள்.

அந்நிய மதத்தினரால் இடிக்கப் பட்ட கோயில்களைப் புனர் உத்தாரணம் செய்து கொடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் அனைத்துக் கோயில்களையும் செப்பனிடுங்கள். பொதுமக்களையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துங்கள். நான் இந்த சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கவேண்டியே தாது வருஷத்தின் இந்த குருவாரத்தையும், வைசாக மாதத்தையும் , சப்தமி திதியையும் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் ஒரு சின்னத் தவறினால், ஒரு சங்கோசையினால் அது மாறிவிட்டது. எனினும் முந்நூறு ஆண்டுகளுக்கு இந்த ராஜ்யம் நிலைபெற்றிருக்கும். " என்று ஆசி வழங்கினார்.

ஹரிஹரனும், புக்கனும் தங்கள் குருவின் பெயரான வித்யாரண்யர் என்ற பெயரின் முதல் மூன்றெழுத்தான வித்யாவில் இருந்து வித்யாநகரம் என்ற பெயரிட ஆசை கொண்டனர். ஆனாலும் குருவின் கட்டளையை மறுக்கத் துணிவில்லாமல் தங்கள் சாம்ராஜ்யத்தையே அவர் காலடியில் சமர்ப்பித்து அவர் கட்டளைப்படியே விஜயநகரம் என்ற பெயரிட்டனர்.

இதுதான் ஆரம்பம், பின்னர் ஹரிஹரனோ, புக்கனோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சநாதன தர்மம் இன்று வரையிலும் கொஞ்சமாவது நிலைத்திருப்பதற்குக் காரணமே வித்யாரண்யர் தான் என்று அறுதிபடச் சொல்லமுடியும். ஆரம்பத்தில் ஒரு ஏழை பிராமணனுக்குப் பிள்ளையாகப் பிறந்து பின்னர் தனது ஆன்மீகத் தேடலின் விளைவாக அப்போது சிருங்கேரியின் குருமஹா சந்நிதானமாக இருந்த வித்யாசங்கர தீர்த்தரிடம் சந்நியாச தீக்ஷைபெற்றுக் காசிக்குச் சென்றார் வித்யாரண்யர். கடும் தவத்தின் விளைவாக அவருக்கு வேத வியாசரே தரிசனம் கொடுத்து பதரிகாசிரமத்துக்கு வரச் சொன்னதாகவும் அங்கேதான் ஸ்ரீவித்யா மந்திரம் அவருக்கு உபதேசிக்கப் பட்டதாயும் சிருங்கேரி மடம் மற்றும் சில தளங்களின் தகவல்கள் சொல்கின்றன. வித்யாரண்யரின் பூர்வாசிரமத் தம்பியாக இருந்தவர் பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்ற பெயரில் வித்யாசங்கரருக்கு அடுத்த பட்டத்துக்கு நியமிக்கப் பட்டதாயும், அவரும் சமாதி அடைந்த பின்னர் வித்யாரண்யர் சிருங்கேரி பீடத்தின் 12-வது தலைமை மஹா சந்நிதானமாக நியமிக்கப் பட்டதாயும் அறிகிறோம். 1331-ம் ஆண்டு சிருங்கேரி பீடத்தில் பட்டம் எறிய வித்யாரண்யர் 1386 வரையிலும் அந்தப் பீடத்தின் குருவாகவும், விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமை ஆலோசகராகவும் இருந்து சநாதன தர்மத்தையும் கட்டிக் காத்ததோடு அத்வைதத்தைப் பரப்பவும், வேதங்கள், உபநிஷதங்கள் பற்றியும் பல நூல்கள் எழுதியும் சேவை செய்து வந்திருக்கிறார்.


இவர் சிருங்கேரி பீடத்தில் ஏறிய காலம் பற்றியும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப் படுகிறது. சிருங்கேரி மடத்தின் அதிகார பூர்வத் தளத்தில் இவர் பீடம் ஏறிய ஆண்டு 1381 என்றும் 1386 வரை ஐந்தாண்டுகளே பீடத்தில் இருந்ததாயும் குறிப்பிட்டிருந்தாலும், பல தளங்களிலும் இவர் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்ததையும், பல வருடங்கள் சிருங்கேரி பீடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இவரின் குரு வித்யாசங்கரர் யோக முறையில் சமாதி அடைய பாதாளத்தில் தவம் இருந்ததாயும் அப்போது பீடத்தில் இருந்த இவரின் பூர்வாசிரமத் தம்பியான பாரதிகிருஷ்ண தீர்த்தரால் அந்த இடத்தின் மேலே வித்யாசங்கரருக்கு ஒரு கோயில் கட்டப் பட்டதாயும் தெரிய வருகிறது. பாரதி கிருஷ்ண தீர்த்தரும் சீக்கிரமே சமாதி அடைய இவர் பட்டம் ஏறியதாயும் சொல்லப் படுகிறது. இன்னும் சில தகவல்கள், விஜயநகரத்திலேயே வித்யாரண்யர் தமக்கென ஒரு மடம் அமைத்துக்கொண்டதாய்க் கூறுகிறது.

Sunday, August 15, 2010

மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! விஜயநகரம்!

தன்னெதிரே வந்து நின்றவனைப்பார்த்த வித்யாரண்யர் தாம் அவனுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப் போவதாய்ச் சொல்கிறார். மிரண்ட அவனைச் சமாதானம் செய்து போர்ப்பயிற்சி அளிக்கிறார். இன்னும் சில புத்தகங்களில் சந்திர வம்சத்தவர் ஆன திம்ம தேவர் நாடிழந்து மாதவாசாரியாரைத் தஞ்சம் அடைந்ததாயும் கூறுகின்றனர். திம்ம தேவருக்குப் பிறந்தவர்களே ஹரிஹரனும், புக்கனும் என்றும் கூறுவார்கள். ஆனாலும் ஒரு சில ஆதாரங்களின்படி ஹரிஹரனும், புக்கனும் திம்மதேவரின் மகன்களே ஆனாலும் அவர்கள் முகமதியர்களால் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப் பட்டதும், பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே முகமதியர் அதிகாரத்திற்கேற்ப மாற்றி அமைக்க அனுப்பப் பட்டதும், அப்போது மாதவரைச் சந்தித்ததும் சொல்கின்றன. ஆகவே நாம் இங்கே புக்கணனையே தயார் செய்தார் என எடுத்துக் கொள்வோம். இப்படித் தயார் செய்யப் பட்ட புக்கணன் தான் பின்னர் சாம்ராஜ்யத்தையும் ஆண்டான்.

தனக்கு உணவளித்த திம்மதேவனின் வம்சம் என்றும் தழைத்துச் சிறப்போடு விளங்கும் எனவும் வித்யாரண்யர் ஆசீர்வதிக்கிறார். தெய்வீக அம்சங்களோடு விளங்கும் எனவும் சொல்கிறார். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, பட்டத்து யானையின் கழுத்தில் மாலையைக் கொடுத்து அனுப்புகின்றனர் மந்திரி பிரதானிகள். மாலையை எடுத்துக்கொண்டு யானை நேரே காட்டுக்குள் வந்து தவம் செய்து கொண்டிருந்த மாதவாசாரியாரின் கழுத்தில் போட அவர் திகைக்கிறார். ஏற்கெனவே மஹாலக்ஷ்மியின் கடாட்சம் வேண்டுமென்பதற்காக அவர் துறவறம் மேற்கொண்டார். அரண்மனையும் சிம்மாதனமும் எப்படிச் சரிவரும்?

யோசித்த அவர் புக்கணனையும், ஹரிஹரனையும் அழைத்து அவர்களை ஆசீர்வதித்துப் பட்டம் கட்டினார். வராஹச் சின்னம் பதித்த தேவியின் மோதிரத்தை அவர்களுக்கு அளித்து அவர்கள் எடுக்கும் எந்தப் புதிய காரியமும் வெற்றியடையும் எனவும், அவர்களால் ஸ்தாபிக்கப் படும் சாம்ராஜ்யம் மிகவும் பிரபலமாகவும், புகழோடும் விளங்கும் எனவும் ஆசீர்வதிக்கிறார். சாம்ராஜ்யத் தலைநகராக ஒரு இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார். முறைப்படி இருவரின் ஜாதகத்தையும் பார்த்து ஒரு நல்ல நாளையும் தேர்ந்தெடுக்கிறார். அந்த நாளில் புதிய தலைநகருக்கான அஸ்திவாரம் கட்ட வேண்டும் என்பது வித்யாரண்யரின் ஆணை.

குருவின் ஆணையை மறுக்காமல் ஹரிஹரனும், புக்கனும் தலைநகருக்கான கட்டுமானங்களை ஆரம்பிக்க அஸ்திவாரம் எடுக்க ஆயத்தம் செய்கின்றனர். வித்யாரண்யர் அஸ்திவாரம் தோண்டிவிட்டு, கட்டட வேலை ஆரம்பிக்கும் முன்னர் தாம் தேவியை வழிபட்டுவிட்டு வருவதாகவும், தேவியின் ஆக்ஞையைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். தேவியின் வழிபாடு முடிந்ததுமே கட்டட வேலை ஆரம்பிக்கவேண்டும் எனவும், தாம் வழிபாடு செய்யுமிடத்தில் இருந்து இங்கே வந்து சொல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால் தாம் வழிபாடு முடிந்து தேவியின் ஆக்ஞை கிடைத்ததும், சங்கை எடுத்து ஊதுவதாகவும், சங்கோசை கேட்டதும் கட்டட வேலையை ஆரம்பிக்கலாம் எனவும் கூறுகிறார்.

அப்படியே செய்ய ஆரம்பிக்கின்றனர் இருவரும். அஸ்திவாரம் தோண்டிக் கட்டட வேலை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து, இங்கேயும் தேவி வழிபாடும் நடந்து முடிகிறது. இனி குருநாதரின் ஆக்ஞை வரவேண்டியது தான் பாக்கி. சங்கோசை கேட்கவேண்டுமே! இதோ சங்கோசை!

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மகிழ்வோடு இருவரும் கட்டட வேலையை ஆரம்பிக்கின்றனர். ஒரு நாழிகை ஆனதும் மீண்டும் சங்கோசை.
பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்தச் சங்கோசை சற்றே வித்தியாசமாய் ஏதோ செய்தியைத் தெரிவிக்கிறதே? பதறிப் போனார்கள் இருவரும். உடனே குதிரைகளில் ஏறி குருநாதர் வழிபாடு செய்யும் இடம் செல்ல, அங்கே இவர்களைக் கண்ட குரு திகைக்கிறார். கட்டட வேலையை ஆரம்பிக்காமல் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, கட்டடவேலையை ஆரம்பித்துவிட்டோமே? திரும்பவும் இரண்டாம் முறையாகவும் சங்கோசை கேட்கிறதே எனப் பார்க்க வந்தோம் என இருவரும் சொல்கின்றனர்.

என்ன இது? இரண்டாம் முறையா? நான் ஒரு முறைதான் சங்கை ஊதினேன் என குரு சொல்ல, ஆஹா, குருநாதர் எவ்வாறு பொய் சொல்லுவார்? எங்கோ தவறு நடந்துள்ளது? இருவரும் விசாரிக்க ஆணையிட, நகர் நிர்மாணத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இடையன் அவைகளை ஒன்று சேர்க்க சங்கை எடுத்து ஊதியதாக ஒத்துக்கொண்டதைக் கேட்டனர். குருவிடம் வந்து நடந்ததைச் சொல்ல மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த குரு, பின்னர் மீண்டு வந்து. இந்த சாம்ராஜ்யம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கவேண்டும் என தேவியைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்னுடைய கடும் தவத்தால் அடுத்த பிறவியில் நடக்கவேண்டிய ஒன்றுக்கு தேவி இப்போதே சம்மதம் சொன்னாள். ஆனால் அது ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும் தேவி குறிப்பிட்டிருந்தாள். ஆனால் அந்த நேரத்திற்கு முன்னரே நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள். தேவி சொல்கிறாள், விதி வலியது, மாதவா, விதியை எவராலும் வெல்ல முடியாது. இந்த சாம்ராஜ்யத்திற்கு முந்நூறு ஆண்டுகளே உயிர் இருக்கும். பின்னர் அழிந்து போய்விடும். அதுவும் ஆரம்பித்த நேரம் சரியில்லாமையால், பல இடிபாடுகளுக்கும் உள்ளாகும். அந்நிய சக்திகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும் என்று சொல்லிவிட்டாள் என்றார் வித்யாரண்யர்.