Tuesday, June 30, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!!!!

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் கணவன். சிறு வயதில் இருந்தே குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் அவனுக்கு. தனக்குக் குறைந்த பட்சமாய் ஆறு குழந்தைகளாவது வேண்டும் என நினைப்பான். அதே போல் அவன் எண்ணத்துக்கு ஒத்த மனைவியும் கிடைத்தாள். வேலையும் அவன் குழந்தைகளைச் சந்தோஷப் படுத்தும் கார்ட்டூன் சித்திரங்களை உருவாக்கும் பணியாகவே தேர்ந்தெடுத்திருந்தான். மனைவியின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது அதற்கு. திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகளில் இருவருக்கும் ஒரு சின்னக் கருத்து வேறுபாடு கூட இருந்ததில்லை. அவள் மனதை அவனும், அவன் மனதை அவளும் படித்தாற்போல், சொல்லி வைத்தாற்போல் எல்லாம் நடக்கும். மணி, மணியாய் நாலு குழந்தைகள். ம்ம்ம்ம்ம்ம் அதிலே மூன்று போய்விட்டது. மூன்றும் ஆண் குழந்தைகள். ஒருவேளை, ஒரு வேளை, அந்தப் பிசாசுப் பெண்ணிற்கு ஆண் வர்க்கம் என்றால் பிடிக்காதோ???

தலையில் வைத்த கையை எடுக்கவில்லை அவன். நேற்றுத் தான் வரைந்த சித்திரங்களைப் பார்க்கலாம் என்று அவற்றின் திரையை விலக்கினால்!! ஆஹா!! என்ன இது?? தன்னை அறியாமல் தன் இறந்த குழந்தைகளையே வரைந்திருந்தான் அவன். கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாய்ப் பெருகி ஓட ஆரம்பித்தது. ஸ்டுடியோவின் கதவை யாரோ திறக்கும் சத்தம். ஆம், வீட்டிலேயே அருகேயே ஸ்டுடியோ வைத்திருந்தான் அவன். வீட்டை ஒட்டியே அலுவலகமும் அமைந்திருந்தது வசதியாகவே இருந்தது. யார் வருகின்றார்கள் எனத் திரும்பிப் பார்த்தான். அவன் மனைவியே தான். கையில் அந்தக் குழந்தையும். யாரோ பெற்ற குழந்தை! அதன் முகத்தைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருந்தது.

தாயைக்கட்டி அணைத்துக் கொண்டிருந்தது. அவன் மனைவி கையில் காலை ஆகாரத்துடன் காஃபியும் இருந்தது. மெல்ல வந்து அவனருகில் அமர்ந்தாள் அவள். அவன் பார்த்துக் கொண்டிருந்த சித்திரங்களை அவளும் பார்த்தாள். கண்களில் கண்ணீர் பெருகியது. என்ன இருந்தாலும் பெற்ற தாயல்லவா?? கணவனைப் பார்த்தாள். அவள் நினைத்தது, என்னமோ தவறு செய்துவிட்டார், இந்தக் குழந்தையை வளர்ப்பதால். இன்று பூராவும் இவரோடு கழித்து விட்டால்?? கொஞ்சம் சமாதானம் அடைவார். அப்போது மெல்ல இந்தக் கண்ணான கண்மணியைப் பற்றி எடுத்துக் கூறிச் சொன்னால் சமாதானம் அடைவார். கணவனிடம் சமாதானமாகவே பேசத் தொடங்கினாள். இந்தக் குழந்தை வந்ததில் இருந்து இல்லாத அன்பை மனைவியிடம் கண்டான் கணவன். திடீர்னு என்ன என்று தோன்றியது. அடுத்த கணம் தன் மேலேயே கோபம் வந்தது. எவ்வளவு அந்நியோனியமாய் வாழ்க்கையைக் கழித்தோம்??இப்போ என் அன்பு மனைவியை நான் சந்தேகப் படும்படியான சூழ்நிலையா??? பெருமூச்சு விட்டான்.

கணவன் தோள்களில் தன் கைகளை வைத்தாள் மனைவி. அவளை, அவனும், அவனை அவளும் நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தார்கள் அவன் மனதில் திடீரென ஓர் எண்ணம். என்ன இருந்தாலும் நமக்கென ஓர் ஆண்குழந்தை கூட இல்லையே?? இன்றிரவு, இன்றிரவு மட்டும் இவள் சம்மதித்தால், ஆஹா, ஓர் ஆண்குழந்தைக்கு முயலலாமே?? நாம் பெற்றெடுத்திருக்கும் ஒரே பெண்குழந்தை தனியாகப் போகக் கூடாது என்றால் சம்மதிப்பாளோ?? மெல்லப் பேச்சைத் தொடங்கினான். கணவனின் எண்ணம் புரிந்தது அவளுக்கு. கணவனின் ஆசையை மறுக்கும் எண்ணம் அவளிடமும் இல்லை என்றாலும் அடுத்து ஓர் குழந்தைக்காக என்பதை நினைத்தால், கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. ஏற்கெனவே மூன்று குழந்தைகளைப் பறி கொடுத்தாச்சு. இன்னும் இருப்பது ஒரு பெண் குழந்தைதான். இந்தக் குழந்தைதான் அவளுக்குத் துணையாக இருப்பாளே??

என்றாலும் உடனேயே கணவனிடம் சொல்லிவிடக் கூடாது. சற்றே பொறுத்து அவன் மனம், உடல் அமைதி அடைந்திருக்கும்போது சொல்லவேண்டும். அவ்வளவில் அவள் கணவனுக்குச் சம்மதம் என்பதை மட்டும் அவனுக்குப் புரியும் வகையில் தெரிவித்துவிட்டுக் குழந்தையுடன் சென்றாள். கணவனுக்கோ தலை கால் புரியவில்லை. இன்றிரவு அவள் நம்மிடம் மயக்கத்தில் இருக்கும்போது அந்தக் குழந்தையைப் பற்றி அவள் மனதில் பதியும் வண்ணம் நன்கு எடுத்துச் சொல்லி அதை அவளிடமிருந்து பிரிக்க வேண்டும். சாத்தான் குழந்தை! எங்கிருந்து வந்தது??? அன்று பூராவும் இந்தக் கனவுடனேயே அவன் பொழுது போயிற்று. கேட்டிருந்த இரு தியேட்டர்காரர்களுக்குத் தேவையான கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தான். மதிய உணவும் முடிந்தது. மாலை அவன் காலாற நடந்துவிட்டு வரலாம் என்று சென்றான். மனைவி வராதது இப்போது அவனைப் பாதிக்கவில்லை. இரவு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான். திரும்பி வந்தவன் இரவு உணவுக்காகக் காத்திருக்கும்போது மனைவி வந்தாள் முகத்தில் அப்பிய ஏராளமான கவலையுடன். அவனை அழைத்தாள்.

அந்தப் புதிய குழந்தையின் பெயரைச் சொல்லி அதை வந்து பார்க்கும்படிக் கூப்பிட்டாள். என்ன இது? சாதாரணமாக நம்மை அழைக்க மாட்டாளே?? கணவன் அவளோடு சென்றான். குழந்தையின் தொட்டிலைப் பார்த்தான். குழந்தை சுருண்டு படுத்திருந்தது. இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது?? அவனுக்கு ஏதோ சந்தேகம். குழந்தையின் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னாள் மனைவி. அரை மனதோடேயே தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் அனலாய்த் தகித்தது. மருத்துவரை வரவழைக்கட்டுமா எனக் கேட்டான் மனைவியிடம். அவள் ஆமோதிக்க மருத்துவர் வந்து குழந்தையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டுக் குழந்தைக்குப் பொன்னுக்கு வீங்கி(mumps) என்றும், சரியாகிவிடும் இரண்டு, மூன்று நாட்களில் என்றும் சொன்னார். கூடவே இதே ஆண் குழந்தை என்றால் அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்றும் சொல்லிவிட்டு அவளையும், அவனையும் பார்த்து விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டே மேலும் சொன்னார். உன் கணவனை நெருங்க விடாதே. இது ஒட்டுவாரொட்டி போல. இந்தப் பொன்னுக்கு வீங்கி உன் கணவனுக்கு வந்தால், அப்புறமாய் அவனுக்குச் சந்ததிகளை உண்டாக்கும் ஆற்றலே போய்விடும் என்று சொன்னார். மனைவி வெட்கத்துடன் மையமாய்ச் சிரிக்கக் கணவனுக்குச் சுருக்கென்றது.

அன்றிரவு அவன் வழக்கம்போல், அதாவது இந்தக் குழந்தை வந்து சேர்ந்ததும் நடப்பது போன்ற வழக்கத்துடன் தனியாகவே படுத்துக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவன் மனைவி இந்தக் குழந்தையை அவனுக்குப் பிடிக்காது என்பதால் அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. இப்போது எல்லாம் கூடி வரும் சமயம் இந்தச் சனியன் உடம்பை வரவழைத்துக் கொண்டுவிட்டதே! இதான் சாக்குனு அவள் இங்கே எட்டிக் கூடப் பார்க்கலையே?? என்ன செய்வது? திடீரென ஓர் யோசனை, கணவனுக்குள்ளாக. ஆஹா, அந்த மருத்துவர் சொன்னது!! அந்தக் குழந்தை பக்கம் போகக் கூடாது என்று சொன்னாரே??? நல்லவேளை! சனியன் வராது இங்கே! படுக்கை அறைக் கதவைச் சும்மாச் சாத்திவிட்டு நிம்மதியாகத் தூங்கினான் அவன். காலை எழுந்திருக்கும்போதே சின்னக் கால்களும், கைகளும் அவனைச் சுற்றி அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனாகத் தன்னோட பெண்தான் என நினைத்த வண்ணம் அந்தக் கால்களையும், கைகளையும் சிறு உடலையும் சேர்த்துத் தூக்கி நெஞ்சோடு அணைத்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தான். அவன் கையில் இருந்ததைப் பார்த்த அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது, அந்தக் குழந்தை, யாரோ பெற்றெடுத்துப்போட்டுவிட்டுப் போன அந்தப் பெண் குழந்தை! தூங்கிக் கொண்டிருக்கோ? அவன் நினப்புப் புரிந்தாற்போல சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தது அது. பார்த்த பார்வை! ஏளனமாய்க் கண்களாலேயே சிரிக்கிறதோ அது???? பதினையாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டினாற்போல் துடித்தான் அவன்.

பிகாபூ!! ஐ ஸீ யூ!!!

குழந்தை முகத்தைப் பார்த்தால் சற்றுமுன்னர் தன்னை வெறுப்போடு பார்த்தது இந்தக் குழந்தைதானா என்னும்படி இருந்தது. தாய் முகத்தைப் பார்த்துச் சிரித்ததோடு அல்லாமல், தன்னைத் தூக்க வேண்டும் என்றும் செல்லமாய் அழைப்பு விடுத்தது. அவன் மனைவியும் அந்தக் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். இந்தக் குழந்தையின் பெற்ற தாய் பெற்றுப் போட்டுவிட்டுப் போனதில் இருந்து இவளே தன் பாலையே கொடுத்து வளர்த்து வருகின்றாள். தன் சிறிய மகன் பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதிலும் இருவருக்கும் சற்றும் வேறுபாடில்லாமல் தன் பாலையே கொடுத்து வளர்த்தாள். இப்போ அவள் மகனும் இல்லை, பால் குடிக்க. இந்தக் குழந்தைக்கே தன் பாலைக் கொடுக்கின்றாள். குழந்தையும் நன்கு ஆரோக்கியமாய் நன்றாகவே இருக்கிறது. நம் குழந்தையும் தாயிடம் பால் குடிப்பதைப் பொறுக்காமலேயே கொன்றுவிட்டதோ?? கணவன் மனதில் ஓர் எண்ணம் ஓட, அவன் எண்ணம் புரிந்தது போல் அந்தக் குழந்தை அவனைத் திரும்பிப் பார்த்தது. கண்களா அது?? இரு பளிங்குக் கற்களா?? உணர்ச்சிகள் மாறி மாறிக் கொட்டுவதால் கண்கள் என்றே சொல்லலாம். எப்படிப் பட்ட உணர்ச்சிகள்??? அவனிடம் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றதே அந்தக் கண்கள். சொல்லாமல் ஏதோ செய்தியைச் சொல்லுகின்றதே? ம்ம்ம்ம்??? என்ன செய்தி??

கணவனுக்குள் திடீரென ஓர் எண்ணம். தன் மூத்த மகனையும், ஒரே மகளையும் தான் இன்னும் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளவேண்டும் என. இந்த எண்ணம் தோன்றியதும் அவர்களை அவன் திரும்பிப் பார்க்க, அந்தக் குழந்தையும் அவன் எண்ணம் புரிந்தது போல் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அவனையும் பார்த்தது. சிரித்தது. அந்தச் சிரிப்பு, அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள். உடல் சில்லிட்டது கணவனுக்கு. மனைவியின் பெயரைச் சொல்லிக் கத்தினான். உடனேயே அந்தக் குழந்தையை பாதிரியாரிடமாவது ஒப்படைக்குமாறு கெஞ்சினான். இது நாம் பெற்ற இரு குழந்தைகளின் எதிர்காலம். அதை நினைத்தாவது இந்த உதவியைச் செய் என வேண்டினான். அவன் மனைவி அவனை இப்போது சற்றே வெறுப்போடு பார்த்தாள். ஒரு பச்சைக் குழந்தையின் மேல் அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றானே?? பிறந்த உடனேயே தாயை இழந்தது இது. தகப்பன் யாரெனத் தெரியவில்லை. பால் வடியும் இதன் முகத்தைப் பார்த்தாவது தன் கணவன் மனம் மாற மாட்டானா?? இல்லை, இல்லை அவர் நல்லவர் தான். அடுத்தடுத்து இரு குழந்தைகள் இறக்கவும் ஊரிலும் எல்லாரும் இந்த வீட்டைச் சாத்தான் சுத்துகிறது என்று பேசவும் சற்றே மனம் தடுமாறி விட்டார்.

சில மாதங்கள் கழிந்தன. எத்தனை நாட்கள் ஆனாலும் தன்னிரு குழந்தைகளை இருவராலும் மறக்கமுடியவில்லை. ஒருநாள் பெரிய மகன் குளிக்கக் குளியலறைக்குச் சென்றான். வெகுநேரம் ஆகியும், அவன் திரும்பி வரவே இல்லை. கணவன் மனதில் பயம் பிடித்துக் கொள்ளக் குளியலறைக்குச் சென்றான். அங்கே குளியல் தொட்டியில் அவன் மகன் பிணமாய்க் கிடந்தான். அவன் பக்கத்தில் அந்தக் குழந்தையின் உடலில் இருக்கும் நாடா. அந்தக் குழந்தை இங்கே வந்ததா?? சட்டெனத் திரும்பிப் பார்த்த கணவன் கண்களில் சற்றுத் தூரத்தில் இருந்த வாயிலுக்குத் தவழ்ந்து சென்று கொண்டிருக்கும் குழந்தை கண்களில் பட, வேகமாய் ஓடி அந்தக் குழந்தையை இன்னிக்கு இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று ஓட, அவன் மனைவி அந்தக் குழந்தையைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டு வர, அவன் மரமாய் நின்றான். குளியல் தொட்டிக்கருகில் வந்து பார்த்த மனைவி அலறினாள். அவள் அலறல் நிற்கவில்லை. அவள் மனதில் கணவனே தன் மகனைக் கொன்றிருப்பானோ என சந்தேகம்!

Friday, June 26, 2009

பிகாபூ!!!!! ஐ ஸீ யூ!!!!

நான்காவது குழந்தை, பிறந்து நான்கு மாதம் கூட முடியாத நிலையில் இறந்தது. அதுவும் எப்படி?? தொட்டிலில் இருந்து கீழே விழுந்து. குழந்தை எப்படி விழுந்திருக்கும்? விழுவதற்கு வாய்ப்பே இல்லை. மனைவிக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. குழந்தை குப்புறப் படுக்க முயன்றிருக்கிறான். அப்போ கீழே விழுந்து தலையில் அடி பட்டு........ ம்ம்ம்ம்ம் என்ன செய்ய முடியும்? மனதைத் தேற்றிக் கொண்டாள். ஆனால் கணவன் மனதிலே நிம்மதி இல்லை. சஞ்சலம் அதிகம் ஆனது. மற்ற மூன்று குழந்தைகளை எப்பாடு பட்டேனும் காப்பாற்ற வேண்டும். என்ன செய்யலாம்??? மனைவியிடம் மீண்டும் பேசிப் பார்த்தான்.

யாரோ பெற்ற குழந்தையை அநாதை ஆசிரமத்தில் சேர்க்கவேண்டும். ஓர் முடிவுக்கு வந்த கணவன், செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தான். இம்மாதிரி ஒரு குழந்தை வந்திருக்கு என்றும் அதை வளர்க்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும். உள்ளூர் அநாதை ஆசிரமத்திலும் சென்று அந்தக் குழந்தையைச் சேர்த்துக் கொள்வார்களா எனப் பேசிப் பார்த்தான். மனைவிக்கு விஷயம் தெரிந்து, இருவருக்கும் ஒரே சண்டை. அவர்கள் திருமணாம் ஆகி பத்து வருஷங்களுக்கு மேல் ஆகியும் இருவருக்கும் இன்று வரை எந்த விஷயத்திலும் கருத்து வேற்றுமை வரவில்லை. இன்று, இப்போது, முதல்முதலாய்!! கணவன் மனம் நொந்தது. இரவு படுக்கை அறையில் தங்கள் இருவருடன் தங்கள் நாலாவது மகனும் இருக்கும்போது, இந்தக் குழந்தை இருப்பதைப் பெரிய விஷயமாய்க் கணவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது?? அன்பு மகன் இறந்துவிட்டான். இந்தக் குழந்தையாலேயே என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கையில் அந்தக் குழந்தையைத் தங்களுடன் படுக்க வைப்பதா? கணவன் ஒரு முடிவுக்கு வந்தான். தன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு லிவிங் ரூம் எனப்படும் இடத்திற்கு வந்து அங்கே உள்ள சோபாவில் படுத்தான். மனைவிக்கு அதிர்ச்சி. என்றாலும் இது எத்தனை நாட்கள் பார்க்கலாம்! என்று எண்ணிக் கொண்டாள்.

தன்னுடைய பாலையே அந்தக் குழந்தைக்குக் கொடுத்து வளர்த்து வந்தாள். குழந்தையும் திருப்தியாய்க் குடித்து நன்கு வளர்ந்து வந்தது. எட்டு வயது ஆகும் இரண்டாம் மகன் அன்று காலையில் இருந்தே லேசாகக் காய்ச்சல் வந்து கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தான். பள்ளிக்கு அனுப்பவில்லை அவனை. மருத்துவரிடம் காட்டி மருந்துகள் வாங்கிக் கொடுக்கப் பட்டு அம்மாவுடனேயே படுக்க வைக்கப் பட்டான். மறுநாள் காலையில் அவன் உயிருடன் இல்லை. காய்ச்சல் என்னமோ அப்படி ஒண்ணும் வீரியம் வாய்ந்தது இல்லை. சாதாரண ஜலதோஷக் காய்ச்சல் தான். பையன் இயல்பாகவே பலவீனம் ஆனவன் என்பதால் படுத்துவிட்டான் என்றும் நாளை சரியாகிவிடுவான் என்றும் மருத்துவர் கூறி இருந்தார். ஆனால்????? பையனுக்குக் கொடுக்கப் பட்ட மருந்துகள் பற்றிக் கணவனுக்குச் சந்தேகம். என்ன இருந்தாலும் சின்னக் குழந்தையால் இன்னொரு குழந்தையை எட்டு வயசுப் பையனை விஷம் வைத்துக் கொல்ல முடியுமா? சந்தேகத்துடனேயே அந்தக் குழந்தையைக் கணவன் பார்க்க அதன் கண்களின் வீரியம் அவனைத் தாக்கியது. அந்தக் கண்கள் சொல்லுவதைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தன்னை அறியாமல் ஏற்பட்டது. ஒரு கணம், ஒரே ஒரு கணம். சுதாரித்துக் கொண்ட கணவன் அந்த அறையை விட்டு ஓட்டமெடுத்தான். இந்தக் குழந்தைதான் அந்தப் பையனை வேறே ஏதோ மருந்துகளைச் சாப்பிட வைத்துச் சாக வைத்திருக்க வேண்டும். அவன் எண்ணம் உறுதிப் பட்டது. அடுத்தடுத்து இரு மகன்களைப் பறி கொடுத்தாச்சு.


சர்ச்சில் இருந்து பாதிரியார் வந்தார். வீட்டை ஏதோ சாத்தான் சுற்றுகிறதா அல்லது விஷ ஆவிகள், சுற்றுகின்றனவா என ஆராய்ந்தார். புனித நீர் தெளிக்கப் பட்டது வீடு பூராவும். கணவன் பாதிரியாரிடம் சொன்னான் அந்தக் குழந்தையைப் பற்றியும், அதன் பார்வையைப் பற்றியும். எப்படிப் பட்ட பார்வை? கண்களால் பேசுகின்றதே! அதுவும் அதன் இஷ்டப் படி எல்லாவற்றையும் செய்யச் சொல்லிக் கட்டளை போடுகின்றதே. வாய் திறந்து பேசாமல் அது சொல்லுவது நமக்குப் புரிகின்றதே? கணவன் அத்தனையையும் பாதிரியாரிடம் சொல்லிக் குழந்தையைப் பார்க்கச் சொல்லுகின்றான். என்ன ஆச்சரியம்? குழந்தை, அசந்து தூங்குகின்றது. எழுப்பப் போனான் கணவன். அங்கே வந்தாள் மனைவி. கணவனைப் பிடித்துத் தள்ளினாள். தூங்கும் குழந்தையை எழுப்ப வேண்டாம் எனவும், கணவனுக்கு இந்தக் குழந்தையிடம் இனம் புரியாத பொறாமை எனவும், அதனால் இவ்வாறெல்லாம் சொல்லுவதாயும், தனக்குக் கொஞ்சம் கூட இந்தக் குழந்தையிடம் சந்தேகம் இல்லை என்றும் சொல்லிக் கொண்டே குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்ளுகின்றாள். குழந்தை கண் திறந்து பாதிரியாரைப் பார்த்துக் கள்ளமில்லாச் சிரிப்பைச் சிரிக்கின்றது.

கணவன் அசந்து போனான். குழந்தையைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகின்றான். அது அவன் பக்கம் திரும்பிப் பார்க்கிறது. ஒரு கணம் ஒரே கணம் அவனுக்கும், அந்தக் குழந்தைக்கும் மட்டுமே புரியும்படியான ஒரு பார்வை, அடுத்த கணம் அந்தக் குழந்தை கள்ளமில்லாப் பார்வையை அவன் பக்கமும் காட்டியது. கணவன் திகைத்துப் போனான்.

Tuesday, June 23, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!! தொடர்ச்சி!

கணவன் எவ்வளவு தடுத்தும் கேளாமல் மனைவி அந்தக் குழந்தையின் அழுகை பொறுக்க முடியாமல் கையில் எடுக்கிறாள். அந்தக் குழந்தையை மனைவி எடுக்கும்போதே அந்தக் குழந்தை தன்னைக் கோபத்தோடும், கரை காணா வெறுப்போடும் பார்ப்பதாய் ஓர் உணர்வு கணவனுக்குள் ஏற்படுகின்றது. அந்தப் பார்வை அவன் எலும்பினுள் ஊடுருவி அவனை உள்ளூர நடுங்கச் செய்கின்றது. எனினும் சற்று முன்னே பிறந்த குழந்தை தன்னை இவ்வாறு பார்த்தது என்பது நம் பிரமை எனத் தேறுகின்றான். மனைவி யாரோ பெற்றெடுத்த அந்தக் குழந்தைக்கும் அமுதூட்டுகின்றாள் சற்றேனும் கிலேசம் இல்லாமல். தான் பெற்றெடுத்த நாலாவது குழந்தை(பையர்)க்கு அருகேயே தொட்டிலில் இடுகின்றாள் அந்தக் குழந்தையையும்.

சிறிது நேரம் கழித்துக் குழந்தைகள் படுத்திருக்கும் தொட்டிலைக் கவனிக்கும் கணவனுக்கு அதிர்ச்சி மேலிடுகிறது. அவன் பெற்ற குழந்தை சுருட்டிக் கொண்டு தொட்டிலின் ஓர் மூலையில் ஒடுங்கிப் படுத்திருக்கிறது. நாலு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் அந்தக் குழந்தை எவ்வாறு அப்படிப் போய்ப் படுத்தது??? கணவனுக்கு அவனையும் அறியாமல் குயிலின் நினைவு வந்தது. தன்னோட முட்டையைக் காக்கைகளின் முட்டைகளோடு இடுவதற்குள்ளாகக் குயில் காக்கையின் முட்டையைக் கீழே தள்ளுமாம். முட்டாள் காக்கை எண்ணிக்கை எங்கே தெரியும்? குயில் முட்டையைத் தன் முட்டை என நினைத்து அடை காக்கும். அந்த நினைப்பே மேலோங்கியது கணவனுக்கு. தொட்டிலின் அருகே வந்தான். மீண்டும் அந்தக் குழந்தையின் பார்வை! சில்லிட்டது கணவனுக்கு. எனினும் சமாளித்துக் கொண்டு, தன் குழந்தையை நன்றாய்ப் படுக்க வைத்தான். மீண்டும் ஓர் முறை அந்தப்புதிய யாரோ பெற்றெடுத்துப் போட்டுவிட்டு ஓடிச் சென்றவளின் குழந்தையைப் பார்த்தான். அது தன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பது போலவும், இன்னும் ஏதோ நடக்கப் போகிறது எனவும் தோன்றியது கணவனுக்கு.

முதல்முறையாக இந்தப் பத்து வருஷ இல்வாழ்க்கையில் மனைவியிடம் கோபம் வந்தது அவனுக்கு. நேரே சமையலறையில் வேலையாக இருக்கும் அவளிடம் சென்று அந்தப் புதிய குழந்தையை அநாதை ஆசிரமத்தில் விடுவது பற்றிப் பேச, மனைவிக்குக் கோபம் வருகிறது. பதிலே சொல்லவில்லை. உன்னால் அந்தக் குழந்தைக்காகச் செலவு செய்ய முடியாவிட்டால் நானும் சம்பாதித்துச் செலவு செய்கின்றேன். கொடுக்கப் போவது என்னிடம் இருக்கும் பால் தானே? அதைக் கொடுக்க என்னிடம் மனசும் இருக்கு. உடலில் ஆரோக்கியமும் இருக்கு. என்று வாதிடுகின்றாள். கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான் கணவன். இந்தக் குழந்தை நம் குழந்தைகளை எல்லாம் நம்மை விட்டுப் பிரித்துவிடும் என்று சொல்லிப் பார்க்கிறான். ஒரு சின்னக் குழந்தை உன்னை இவ்வாறு பேசச் சொல்லுகின்றதா? உன்னுடைய வேலைதான் பத்திரிகை அலுவலகம் என நினைத்தால் வாழ்க்கையிலும் நீ கற்பனை வளத்தைக் காட்டுகின்றாயே என கணவனைக் கேலி செய்கின்றாள் மனைவி.

அடுத்த நாள், நாலாவது குழந்தை தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகின்றது.

பிகாபூ!!! ஐ ஸீ யூ!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று,"
என்று அனைவரும் அறிவோம். குழந்தைக் கோபமே வேடிக்கையாய்த் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் விட வேடிக்கையானது அதுக்கு நாம் மருந்து கொடுத்தால் கோவிச்சுக்கிறது தான். உடம்பு சரியில்லாமல் இருந்தால் தான் மருந்து கொடுக்கிறோம். ஆனால் அதுவோ அப்போ நம்மளைக் கோவிச்சுக்கிறது. "போ"னு தள்ளிவிடுகிறது. சின்னப் பிஞ்சு விரலைச் சுட்டி மிரட்டுகிறது. அடுத்த நிமிஷமே கூப்பிட்டால் ஓடியே வருகிறது.மருந்து கொடுத்ததே மறந்து போயிடறது. எல்லாருமே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்??? அதிலும், இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுனா உடனேயே ஓடி வருகிறது. "பி கா பூ" என்று அதற்குத் தெரிந்த முறையில் நாம முகத்தை மூடிக் கொண்டு குரல் கொடுத்தால் போதும், "ஐ சீ யூ" என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்துடுகிறது.

தினமும் ஸ்வாமிக்குக் கோலம் போடும்போது மெனக்கெட்டு வந்து அழிச்சுட்டு, உம்மாச்சி கோலம் அழிக்கக் கூடாதுனு சொன்னால், "உம்மாச்சி??" என்று கேட்டுட்டு, "ஐ ஸோ சாரி, உம்மாச்சி, ஐ டிட்ன் மீன் து! ஐ தாமஸ்" என்று சொல்லுகிறது. ஐ தாமஸ்= என்றால் ஐ ப்ராமிஸ்னு எடுத்துக்கணும். சொல்லிட்டு உடனேயே வேகம் வேகமாய் கோலமும் அழிக்கப் பட்டு க்ளீன் பாருனு நமக்குச் செய்தியும் கொடுத்துடும். கோபம் என்பதெல்லாம் நிமிஷத்தில் மறைந்து போகிறது. இப்போ இதைச் சொல்ல வந்ததே வேறே ஒரு விஷயத்துக்காக. சில குழந்தைகளின் கோபம் சிலருக்கு ஆச்சரியம் ஊட்டுவதாய்ச் சொல்லிக் கேட்டிருக்கேன். அதிலும் கோபப் பார்வை ரொம்ப ஆச்சரியமும், உடலில் ஒரு நடுக்கமும் ஏற்பட்டதாய்ச் சொல்லியும் கேட்டிருக்கேன், படிச்சிருக்கேன். படித்த ஒரு நாவல் சுருக்கம் கீழே. வருஷங்கள் பல ஆகியும் இந்தக் கதையின் தாக்கம் என்னிடம் இருந்து இன்னும் போகலைனே சொல்லணும். ஆங்கிலக் கதை என்பதோடு கதைக்களமும் இங்கிலாந்து தான்.

பல வருஷங்கள் முன்னே, பையர் சிநேகிதர் ஒருத்தர் கொடுத்த ஆங்கிலக் கதைப் புத்தகம் அது. கணவன், மனைவி, மகிழ்வான இல்வாழ்க்கை. இங்கிலாந்தின் கிராமப் புறத்தில் சொந்த வீடு, நாலு குழந்தைகள். நாலாவது குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன சமயம், ஒருநாள் நல்ல மழை பெய்யும் நேரம் ஒரு கர்ப்பிணிப் பெண் அங்கே மழைக்கு ஒதுங்குகின்றாள். கணவனுக்கு அவளைப் பார்க்கும்போது ஏனோ மனம் அவள் தங்கஇடம் கொடுக்கவேண்டாம் எனச் சொல்லுகின்றது. மனைவியோ நிறை கர்ப்பிணி, உதவவேண்டும் என மனிதாபிமானத்தோடு உதவுகின்றாள். இரவு அனைவரும் படுக்கச் செல்லுகின்றனர்.

மறுநாள் காலை அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் காணவில்லை. மனைவியோ என்ன ஆச்சோ, ஏது ஆச்சோனு தவிக்கிறாள். கணவனுக்கு ஒரு பக்கம் நிம்மதினு தோணினாலும் இனம் புரியாத தவிப்பும் கூட. அப்போது அங்கே குழந்தை அழும் சப்தம் கேட்க, தங்கள் நாலாவது குழந்தை என நினைச்சு இருவரும் போய்ப் பார்க்க அது தூங்கிக் கொண்டிருக்கிறது. பின்னே அழுதது யார்? சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் கர்ப்பிணிப் பெண் தங்கி இருந்த அறையைப் போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் துணிக்குவியலில் ஓர் பெண்குழந்தை அழுது கொண்டு கிடந்தது. இயற்கையான தாய்மை உணர்வு உந்தித் தள்ள மனைவி அந்தக் குழந்தையை எடுத்து அணைக்கக் குனிந்தாள். அதன் கண்களைப் பார்த்த கணவனுக்கோ ஏதோ தயக்கம். இந்தக் குழந்தை நம் குடும்பத்தை உருக்குலைக்கப் போகின்றது என்ற உணர்வு அவனிடம். மனைவியைத் தடுக்கிறான்.

Sunday, June 14, 2009

ஆடுகின்றானடி தில்லையிலே!


சென்ற வாரம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது. அரசு எடுத்துக் கொண்டதாய்ச் சொல்லப் பட்டதற்குப் பின்னர் அங்கே போகவே முடியாமல் அடுத்தடுத்து வேறே ஏதோ பிரச்னைகள், வேலைகள். கட்டாயமாய்ப் போனவாரம் போக நேர்ந்தது. சென்னையில் இருந்து காரிலேயே போய்விட்டோம். அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே போட்டிருக்கும் புதிய பாலத்தின் உதவியால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் வீட்டை விட்டுப் பத்தரை மணிக்குக் கிளம்பி மதியம் இரண்டரை மணிக்கெல்லாம் சிதம்பரம் போயாச்சு. வழக்கம் போல் தீக்ஷிதர் வீட்டில் போய் இறங்கி, அங்கிருந்து கோயிலுக்குச் சென்றோம்.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு அன்றைக்கு சாயங்கால சாயரக்ஷை வழிபாடும், அபிஷேகமும் எங்கள் கட்டளை. காலையில் இரண்டாம் காலமும், சாயரக்ஷையும் பைரவர் அபிஷேகம் நடக்கும். நாங்க மாலை அபிஷேஹத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். கோயிலில் வழக்கம்போல் பார்ப்பதற்குத் தெரிந்தாலும் உள்ளே நுழையும் போது தீக்ஷிதர்களால் நிர்வகிக்கப் பட்டு வந்த ப்ரசாத ஸ்டாலைக் காணோம். உண்டியலை எங்கே வச்சிருக்காங்கனு தேடினேன். பார்க்க முடியலை. கூட்டம் மட்டுமில்லாமல் கூட வந்த என்னோட பெண்ணுக்கு அதிகம் அலைய முடியாததால் சுத்திப் பார்க்க முடியலை. நாங்க இரண்டு பேர் மட்டும் போனால் சிவகாமசுந்தரி, பாண்டிய நாயகர் என அனைவரையும் பார்த்துக் குசலம் விசாரிப்போம். அன்னிக்கு அது முடியலை. கனகசபைக்கு ஏறிப் போய் நடராஜரையும், ரகசியத்தையும் தரிசனம் செய்து கொண்டோம்.

கனகசபைக்கு வெளியே உள்ள பிரஹாரத்தைச் சுற்றி வரும்போது ஓர் இடத்தில் நடராஜருக்கு வலப்பக்கமாய் உள்ள படிக்கட்டிற்கு எதிரே ஆறுமுகசாமி உட்கார்ந்து கொண்டு சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். சாயரக்ஷை வழிபாட்டின் போது தேவாரம் பாட வந்திருப்பதாய்த் தெரிய வந்தது. எங்கள் கட்டளை அபிஷேகம் முடிந்து சாயரக்ஷை வழிபாடு தொடங்கியதும் கனகசபைக்குச் சிலருடன் வந்து கையில் வைத்திருந்த புத்தகம்/பேப்பர்??? சரியாத் தெரியலை, அதைப் பார்த்து தேவாரத்தைப் படித்தார். யாரோடதுனு புரியலை. அவர் படிச்சுட்டுக் கீழே இறங்கித் தன்னுடைய இடத்திற்குப் போய்விட்டார். அதுக்கு அப்புறமாய் தீக்ஷிதர்கள் வழிபாடு தொடங்கி தீப ஆராதனை செய்தனர். கடைசி ஆராதனை செய்யும் முன்னர் மணி அடித்துக் கொண்டிருந்த, தருமபுரம் ஆதினத்தால் நிரந்தரமாய் நியமிக்கப் பட்டிருக்கும் ஓதுவார் ஒருவரும், ஓதுவார் பெண்மணி ஒருவரும் மாணிக்கவாசகரின் திருச்சாழலில் இருந்து சில பதிகங்கள் பாட, பின்னர் கற்பூர ஆரத்தி காட்டப் பட்டது.

கூட்டத்தில் அனைவரும் தங்கள் இஷ்டத்துக்குக் கையில் ஜால்ரா, சிறு மேளம், போன்றவற்றை வழக்கம்போல் எடுத்து வந்து அந்த மணியின் ஓசைக்கு ஏற்ப சிலர் ஆடிக் கொண்டும், சிலர் தேவார, திருவாசகங்களைப் பாடிக் கொண்டும் நடராஜர் தரிசனத்தை அனுபவித்தது கண்கொள்ளாக் காக்ஷியாக இருந்தது. இந்தக் கோயிலில் தமிழ் முழங்கவில்லை, தமிழில் பாடத் தடை என்று சொல்லுவது அனைத்தும் உண்மை அல்ல என்பதும் மீண்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிய வந்தது. :((((((((((

ஆடுகின்றானடி தில்லையிலே
அதைக் காண வந்தேன் அவன் எல்லையிலே
திங்களுமாட, கங்கையுமாட,

அவன் பாட்டுக்கு ஆடிக் கொண்டு இருக்கின்றான். அவன் தான் இதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். வேறே என்ன சொல்ல முடியும்???

Saturday, June 6, 2009

காயத்ரி மந்திரத்தை!

தாத்தா மூணு வேளையும் காயத்ரி மந்திரம் சொல்லுவார். காலை எழுந்ததும் தன்னுடைய நியமங்களை முடித்துக் கொண்டு காயத்ரி 108 சொல்லிட்டுத் தான் காஃபியே. மதியமும் சாப்பாட்டுக்கு முன்னால். சாயந்திரம் தினமும் 1008 சொல்லிடுவார் உடல்நிலையைப் பொறுத்து. இதில் யாருக்காவது உடம்பு சரியில்லைனாலோ, அல்லது வீட்டிலே வேறே ஏதாவது கஷ்டம்னாலோ, மனவேதனைகள் இருந்தாலோ காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பார். இதுக்கு நேரமோ, காலமோ இருக்காது. உடம்பு சரியில்லாதவங்க பக்கத்திலே உட்கார்ந்து சொல்லிட்டு விபூதி நெற்றியில் இட்டுவிடுவார். ஆச்சரியப் படும் விதமாய் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாய்த் தேற ஆரம்பிக்கும். இப்போவும் பேரனைக் காணோம் என்றதும் ரயில் நிலையத்திலேயே உட்கார்ந்து காயத்ரியை ஆரம்பித்தார். 1008 சொல்லி முடிக்கும் முன்னால் குழந்தை வந்துடுவான் என்று சொல்லிட்டு, அங்கேயே ரயில் நடைமேடை பெஞ்சில் உட்கார்ந்தார்.

ஆரம்பிச்சுட்டார். இரண்டு பக்கமும் சென்றவர்கள் யாரும் இன்னும் திரும்பலை. அரை மணி ஆச்சு. சென்னைப் பக்கம் சென்றவர் திரும்பிவிட்டார். பேசின் பிரிட்ஜ் வரைக்கும் சென்று பார்த்து விசாரித்ததாகவும், செண்ட்ரலில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் திரும்பிவிட்டதாயும் சொன்னார். அப்பாவும் திரும்பிவிட்டார். பள்ளி இருக்கும் பக்கம் செல்லவேண்டிய ரயில் அப்போது இல்லை. ஆனால் அங்கே இருந்து ஒரு ரயில் 5-00 மணிக்கு மேல் கிளம்பி வரும். ஒருவேளை பையன் பள்ளியிலேயே இருந்து யாராவது பார்த்திருந்தாலோ, அல்லது அவனே எங்காவது விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு(அப்படி எல்லாம் சொல்லாமல் போகும் பையன் இல்லை, என்றாலும்) வந்தாலோ அந்த ரயிலைப் பிடித்துவரலாம்.

எல்லாருக்கும் நின்று பார்க்கணும்னு ஆசை. ஆனால் அதிலே வர வாய்ப்பே இல்லைனு சொந்தங்களில் சிலருக்குக் கருத்து. வீட்டிற்குப் போயிட்டுக் காவல்துறையிடம் சொல்லலாமா, அல்லது பள்ளிக்கே திரும்பிப் போய் பிரின்ஸிபாலை வீட்டில் பார்த்துச் சொல்லலாமா என யோசித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். பள்ளியிலிருந்து சென்னை செல்லும் ரயிலும் வந்தது. நடைமேடையில் நின்றது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொள்ளாத குறையாக அனைவரும் பார்த்தனர். ஆனால் யாருமே கண்ணில் படலையே?? என்ன இது?? அம்மாவுக்கு மயக்கம் வராத குறைதான். கால்கள் தள்ளாடின. அப்போது, தாத்தாவின் குரல், "ஏ, மொட்டைப்பையா!"(தாத்தா, பேரனை அப்படித் தான் கூப்பிடுவார், ரொம்பச் செல்லமாக) என்று கேட்டது. பையரின் குரலும், "ஹை, தாத்தா, என்ன இன்னிக்கு ஸ்டேஷனுக்கே வந்துட்டீங்க?" என்று கேட்கவே அனைவரும் திரும்பிப் பார்க்க, தாத்தா எஞ்சின் பக்கம் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார். அங்கே இருந்து பையர் மட்டும் இறங்கி இருந்தார்.

மற்றப் பேர் அனைவரின் கண்களிலும் படாமல் தாத்தாவுக்கு மட்டும் படும்படியாகப் பையர் இறங்கியது ஆச்சரியம் தான். தாத்தாவின் காயத்ரி மந்திரத்தின் மஹிமையா? ஆமாம் என்றே தோன்றியது. அம்மாவுக்கும், அப்பாவுக்குமே அப்படித் தான் தோன்றியது. காயத்ரி மந்திரம் ஆயிரத்தெட்டு தாத்தா முடிக்கும் முன்னரே பையர் வந்துவிட்டார். கடைசியில் விஷயம் என்னன்னா, பள்ளியில் வகுப்பறையைச் சுத்தம் செய்ய வாரம் ஒரு குழு நியமிக்கப் படும். அந்த வாரம் பையரின் குழு வகுப்பறைச் சுத்தம் செய்யணும். அப்போக் கொஞ்சம் நேரம் ஆகி இருக்கு. ஆகையால் இரண்டு வண்டிகளைப் பையர் விட்டுவிட்டார். மூன்றாவது வண்டியில் தான் வர முடிஞ்சிருக்கு. ஆனால் இந்த விஷயத்தை அக்காவிடம் பையர் சொல்லலை, இரண்டுபேரும் காலம்பர போட்டுக் கொண்ட சண்டையில். அக்காவும் பையரின் வகுப்பில் போய்ப் பார்க்கலை. ஆகவே விஷயமே தெரியாமல், பையரைக் காணோமே என்று ஒரு கலக்கம் அனைவருக்கும் ஏற்பட்டாலும், மலை போல் வந்தது, பனி போல் நீங்கியது காயத்ரியின் மஹிமைதான் என்ற நிச்சயம் மட்டும் ஏற்பட்டது.

Tuesday, June 2, 2009

காயத்ரி மந்திரத்தை!

உண்மையில் எண்ணங்கள் பதிவில் எழுதி இருக்கணும், இதை எப்போவோ. ஆனால் எழுத முடியலை. இப்போ தி.வா. காயத்ரி மஹா யக்ஞம் பற்றி எழுதி இருக்கவும் நினைவில் வந்தது.
**************************************************************************************

அக்காவும், தம்பியும் எப்போவுமே ஏழாம்பொருத்தம் தான். அக்காவுக்குப் பதினோரு வயசு. தம்பிக்கு ஏழு வயசு. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும்னே அப்பாவும், அம்மாவும் நினைச்சு இருவரையும் ஒரே பள்ளியில் சேர்த்திருந்தார்கள். பள்ளி நேரம் காலை சீக்கிரமாய் ஆரம்பிக்கும். வீட்டில் இருந்து பதினைந்து கிமீ தள்ளி அப்பாவின் அலுவலகத்துக்கு எதிரே பள்ளி. மின்சார ரயிலில் தான் செல்லவேண்டும். காலை 6-45-க்கு மின் வண்டியை விட்டால் பின்னர் காலை 7-25-க்குத் தான் இந்தப் பள்ளி வரை செல்லும் அடுத்த மின் வண்டி. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் காத்து இருக்கணும். பள்ளிக்கு நேரம் கழித்துச் செல்ல முடியாது. வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. பெற்றோர் தகுந்த காரணம் காட்டி மறுநாள் பள்ளிக்குக் கடிதம் கொடுக்கணும். இந்த மாதிரி மூன்று நாள் பள்ளிக்குத் தாமதம் ஆனால் உடனேயே பள்ளியை விட்டு ஏன் விலக்கக் கூடாதுனு கேட்டுக் கடிதமும், உடனடியாக மறுசேர்க்கைக்கான படிவமும் வரும். ஆகவே தாமதம் ஆகாமல் அனுப்பணும்.

காலை நேரம் எப்போவும் வேலை அதிகம் தான் அம்மாவுக்கு. நேரம் கழிச்சு எழுந்திருக்கும் சித்தப்பா, தாத்தாவுக்குக் காஃபி. அப்பாவுக்குக் காலை டிபன், காரியரில் சாப்பாடு. இவங்க இருவருக்கும், காலை டிபன், பள்ளியில் இடைவேளையில் சாப்பிட உணவுனு தயார் செய்யணும். இதில் ஒருத்தருக்குப் பிடிச்சது இன்னொருத்தருக்குப் பிடிக்காது. இரண்டு பேருக்கும் பிடிச்சது சப்பாத்தி மட்டுமே. அன்னிக்கும் சப்பாத்திதான் சாப்பிட, கையில் எடுத்துச் செல்ல இரண்டுக்குமே. சாப்பிடும்போதே இரண்டு பேருக்கும் சண்டை வந்தாச்சு. யார் பக்கமும் அம்மா பேச முடியாது. அப்பாவோ கண்டிக்கும் டைப் இல்லை. இது எல்லாம் ஒரு விஷயமே இல்லைனு போயிடுவார். ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுட்டு இரண்டு பேரும் பள்ளிக்குக் கிளம்பிப் போனாங்க.

சண்டை ரயில்வே ஸ்டேஷன் போனதும் உச்சத்துக்குப் போயிருக்கு. அம்மாவுக்கோ அப்பாவுக்கோ அது தெரியாது. அவங்க சொல்லி இருப்பது இரண்டு பேரும் கூடியவரையிலும் சேர்ந்தே வரணும்னு. ஆனால் அவங்க அன்னிக்கு வேறே வேறே பெட்டியிலே ஏறிப் போயிருக்காங்க. மத்தியானம் சாப்பிடும்போதும் அக்காவும், தம்பியும் சேர்ந்து சாப்பிடலை. அக்கா தனியாத் தன் சிநேகிதர்களோடும், தம்பி தனியாவும் சாப்பிட்டிருக்காங்க. மாலை பள்ளிவிட்டதும், அக்கா பள்ளிக்கு எதிரே இருக்கும் ரயில் நிலையத்துக்கு வந்தாள். அங்கே தம்பி இருக்கானானு பார்த்தாள். தம்பி இல்லை. ரயில் அங்கே இருந்தே கிளம்பும் என்பதால் தயாராய் நின்னுட்டு இருந்த ரயிலில் சில மாணாக்கர்கள் ஏறி இருந்தனர். தம்பி அதில் இருப்பான் என நினைத்துக் கொண்டு அக்கா ஏறி விட்டாள். ரயிலும் சரியான நேரத்துக்குக் கிளம்பியது. ராணுவப் பகுதிக்குச் செல்லுவதால் ரயில் நேரம் தப்பாமல் வந்து, நேரம் தப்பாமல் கிளம்பியும் விடும்.

வீடு இருக்கும் ரயில் நிலையப் பகுதிக்கு வந்ததும் அக்கா இறங்கினாள். மனதில் கொஞ்சம் நெருடல். தம்பி என்ன இருந்தாலும் சின்னப் பையன். நாலுவயசு சின்னவன். மூணாம் வகுப்புத் தான் படிக்கிறான். விட்டுட்டு வந்துட்டோமே? சரி, போனால் போகிறது. இப்போ இறங்கவும் கூடவே கூட்டிண்டு போயிடலாம். அக்கா ரயில் நடை மேடையில் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் இவர்கள் இருவரையும் சேர்த்து இன்னும் மூன்றே பேர்தான் அதில் மூன்று பேர் முந்தைய நிலையத்தில் இறங்கி இருக்க, இவங்க இரண்டு பேர் மட்டுமே இந்த நிலையத்தில் இறங்குவது வழக்கம். அங்கே அந்தப் பள்ளி மாணாக்கர்களில் அவள் மட்டுமே இருந்தாள். தம்பியைக் காணோம். ரயில் ஊதியது. கிளம்பியும் விட்டது. அக்காவுக்கு என்ன செய்யறதுனு புரியலை. ஒருவேளை முன் வண்டியில் வந்துட்டு வீட்டுக்குப் போயிட்டானோ? தம்பிக்கு அடிக்கடி உடம்புக்கு வரும். அப்படி ஏதாவது வந்து, பள்ளியில் இருந்து முன்னாலே அனுமதி பெற்றுப் போயிருப்பானோ? சரி, வீட்டுக்குப் போகலாம்.

வீட்டுக்குச் சென்றாள். உள்ளே நுழையும்போதே தெரிந்துவிட்டது தம்பி வரலைனு. அவன் வீட்டில் இருந்தால் இத்தனை நாழி ஒரே சத்தமாய் இருக்குமே. அம்மா உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். தாத்தா வாசலில் உட்கார்ந்திருந்தார். "என்னடி, தம்பி எங்கே? பின்னால் வரானா?" என்று வேறே கேட்டுவிட்டார். பாட்டி கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டிலேயே இல்லை, வெளியே போயிருந்தார் போல. அப்பா இன்னும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. அக்கா ஒரே கத்தாய்க் கத்தினாள். "அம்மா, பையா வந்துட்டானா? தம்பியை வீட்டில் அழைக்கும் பெயர் பையா என்று. உள்ளே வேலையாயிருந்த அம்மா வெளியே வந்தாள்." என்னைக் கேட்டால்? உன்னோடத் தானே வரணும்?" அம்மா கேட்டாள். அக்கா அழ ஆரம்பித்தாள்.

"அம்மா, அம்மா, பையா ரயிலில் தூங்கிப் போயிட்டான் போலிருக்கு. கீழே இறங்கலைனு நினைக்கிறேன்."

"உன்னோடத் தானே உட்கார்ந்துப்பான், நீ எழுப்பலையா?"

அக்கா தயக்கத்துடனேயே, "இல்லை, காலம்பர வீட்டிலே பார்த்தது தான் அவனை. மத்தியானம் என்னோட சாப்பிடக் கூட வரலை. தனியாச் சாப்பிட்டான் போல." அம்மாவுக்குக் கோபம் வந்தது. ஆனால் இப்போ கோபிச்சுண்டா வேலை ஆகாது.

"அப்போ அவன் தூங்கிட்டான்னு சொன்னியே?"

"வேறே பெட்டியிலே ஏறி இருக்கான். அங்கே இருந்து இறங்கலை." அக்கா நிச்சயமாய்ச் சொன்னாள்.

தாத்தா பதறினார். "இப்போ என்ன செய்யறது?" அம்மா யோசித்தாள். உள்ளே போய் அடுப்பை அணைத்தாள். ரயில் நிலையம் நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். கூடவே பெண்ணும். எதிரே பால்காரி பார்த்துட்டு என்னம்மானு கேட்க விஷயத்தைச் சொல்லிக் கொண்டே அம்மா வேகமாய் நடந்தாள். அதுக்குள்ளே வீட்டிலே வேலை செய்யும் பெண் மூலம் கோயிலுக்குப் போயிட்டு இருந்த பாட்டிக்கும்,பக்கத்துத் தெருவில் இருக்கும் அம்மாவின் அப்பா வீட்டிற்கும் தகவல் போய் அங்கே இருந்தும் தாத்தா, பாட்டி, மாமிகள் வந்துவிட்டனர். இரண்டு தெரு தள்ளி இருக்கும் அத்தையையும் தாத்தா போய்க் கூட்டி வந்துட்டார். எல்லாருமாய் வேலை செய்யும் பெண்ணையும், வீட்டில் குடி இருந்தவங்களையும் காவல் வைச்சுட்டு ரயில் நிலையம் வந்துட்டாங்க. அம்மா அதுக்குள்ளே ஸ்டேஷன் மாஸ்டரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லவும், அந்த ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஒரே வண்டி அது மட்டும் தான் என்பதாலும் குறிப்பிட்ட பள்ளி மாணவன் என்பதாலும் கண்டு பிடிக்கலாம், கவலைப்பட வேண்டாம் என்று சொன்ன ஸ்டேஷன் மாஸ்டர் தொலைபேசி மூலம் அடுத்த ரயில் நிலையங்களுக்குத் தகவல் கொடுக்க ஆரம்பித்தார்.

அதுக்குள்ளே அடுத்த ரயிலும் வந்துவிட்டது. அதில் இருந்து அப்பா இறங்கினார். வீட்டு உறுப்பினர்கள் மொத்தமும் ரயில் நிலையத்தில் பார்த்த அவருக்கு அதிர்ச்சி. என்ன விஷயம்னு கேட்கவே அவருக்கும் தகவல் சொல்லப் பட்டது. இதுக்குள்ளே குடித்தனம் இருந்தவர் வெளியே போயிருந்தவர் வீட்டுக்கு வந்ததும் தகவல் தெரிந்து ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். சென்னை செல்லும் வழியில் தான் போய்ப் பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டு அவர் சென்னை செல்லும் ரயிலில் ஏற, அப்பாவோ வந்த வழியிலேயே போய்ப் பார்க்கலாம்னு திரும்பி வரும் ரயிலில் ஏறினார்.