Thursday, March 26, 2009

தேடலும், பயணமும்!

இலக்கியம் படைக்க வா எனத் தோழி ஒருத்தியின் அழைப்பு. கற்பனையே வரண்டு விட்டதோ என்று தோன்றும்போது எங்கே இருந்து இலக்கியம் படைப்பது? நிஜம் அப்படி முகத்தில் ஓங்கி அறைகின்றதே! அதிலும் சில நேரங்களில் முரண்பாடுகள்??? கடல் அலைபோல் திரும்பத் திரும்ப வந்து மோதும் நினைவலைகள். ஏன் இப்படி? என் இப்படி? எனப் பரிதவிக்கும் மனம். தூக்கமில்லா இரவுகள்! மனதில் பாரமாய் அழுத்தும் எண்ண ஓட்டங்கள்.அத்தனையையும் எழுத முடியுமா? மனித வாழ்வில் தினம் நாம் காணும் மனிதர்களின் குணநலன்கள். வானவில்லைப் போல் ஜொலிக்கும் நபர்கள், இருண்ட வானம்போல் தெரியும் எதிர்காலம்! அதில் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று! வாழ்க்கையின் நிஜங்களை எதிர்கொண்டு செல்லுவதை எழுதினாலே இலக்கியமாகிவிடும். இன்றைய யதார்த்தம் தானே நாளைய இலக்கியமாய் மாறுகின்றது? அந்த யதார்த்தத்தையே எழுத முடியலை. நான் என்னத்தை இலக்கியம் படைக்கிறது? எதுனு இலக்கு புரியாமல் ஓடுபவர்களைப் பார்த்து அலுத்துப் போய் விட்டது மனமும், உடலும். எனக்கான தேடல் இல்லை இப்போது. இதுதான் என்ற முடிவுக்கு வந்தாச்சு. அந்தப் பாதையிலேயே தொடர்ந்து செல்லவேண்டும். அதுக்கு இறைவன் அருள் புரியவேண்டும். முரண்பாடுகளையும், இடர்களையும் தாங்கும் வல்லமையைக் கொடுக்கவேண்டும். இத்தனையிலும் அலுக்காத ஒன்று என் ஜன்னலுக்கு வெளியே கேட்கும் பறவைகளின் வித, விதமான ஆனந்தக் கூக்குரல் தான்.

காலை எழுந்திருக்கும்போதே குயில் கூவித் துயில் எழுப்பினால் அதுக்கு அப்புறமாய் ஒவ்வொன்றாய்க் குரல் கொடுக்கும். சுமார் ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை வித, விதமான ஆனந்தக் கூச்சல்கள். அணிலின் வெடுக் வெடுக் எனக் கூப்பாடு. தவிட்டுக் குருவியின் கீச் கீச் சத்தம். காக்கைகள் விரட்டும் குயில் குஞ்சின் அபய ஓலம். மைனாக்களின் சண்டைகள், புறாக்களின் ஹூங்காரம், கிளிகளின் கொஞ்சல்கள், எங்கிருந்தோ கேட்கும் ஆண்குயிலின் இனிய கீதம், அதுக்குத் துணை போகும் எதிர்ப்பாட்டு. இத்தனையும் இல்லாமல் அமைதியாக இருந்தால் மனசு கேட்காமல் என்னனு பார்க்கத் தோணும். அதே ஒரு பூனையோ அல்லது பாம்போ மரத்தில் ஏறிவிட்டால் அவை எல்லாம் போடும் அபயக் கூச்சல் இருக்கே! அப்பப்பா! இத்தனை கஷ்டத்திற்கு நடுவிலும் அவை கவலையே இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனவே! எல்லா செளகரியமும் இருந்தும் நாம கஷ்டம், கஷ்டம் னு சொல்லிக்கிறோமே! இறைவனுக்கு நன்றி.

வல்லமை தாராயோ பராசக்தி !!!!!

Wednesday, March 18, 2009

பாகற்காய் பிட்லையும், மோடியும்!

மூஞ்சியைச் சுளிச்சுக்கிறவங்களுக்கு. எனக்கும் சின்ன வயசிலே பாகற்காய் சாப்பிடப் பிடிக்காது. எங்க அப்பாவுக்கு உயிரே அதிலே தான் இருந்தது. அதனால் வீட்டில் அடிக்கடி பாகற்காய் இடம் பெறும். அப்பாவோட சாப்பிட உட்கார்ந்தா பாகற்காய் சாப்பிடணும் என்பதற்காகவே நழுவிடுவேன். ஆனால் இதெல்லாம் என்னோட சித்தப்பா கிட்டே பலிக்கலை. இது வேறே சித்தப்பா. இவரும் அம்மாவோட தங்கை கணவர் தான். மதுரைக்கருகே இருக்கும் சின்னமனூர் என்னும் ஊரில் பிரசித்தி பெற்ற மருத்துவராய் இருந்தார். இன்னிக்கு நான் உட்கார்ந்து எழுதற அளவுக்கு நடமாடுவது இவரோட வைத்தியத்தில்னு சொல்லலாம். கல்யாணத்துக்கு முன்னாடி அங்கே போகும்போதெல்லாம் பாகற்காய் கறி, கூட்டு, பிட்லை பண்ணும்போதெல்லாம் சாப்பிடமாட்டேன்னு நழுவ முடியாது இவர் கிட்டே. தட்டு நிறையப் போடச் சொல்லிட்டு சாப்பிடற வரைக்கும் கிட்டேயே இருப்பார். இல்லைனா ஊசி போடுவேன்னு பயமுறுத்துவார். ஊசின்னா கொஞ்சம் பயம் தான் இப்போவும். ஆனாலும் இந்த மருத்துவர்கள் விடாமல் என்னைக் குத்தறது வேறே விஷயம். அதைத் தனியா வச்சுக்குவோம்.

பரோடா போயிருந்தப்போ மாமியார் எனக்குப் பாகற்காய் பிடிக்கும்னு வாங்கி வச்சிருந்தாங்க. நாங்க ஒருநாள் அங்கே உள்ள கடைத்தெருவிலே வேலை இருந்ததுனு போனோம். அப்போ இன்னிக்கு பாகற்காய் பிட்லை செய்து வைக்கிறேன்னு சொல்லி இருந்தாங்களா? நானும் ரொம்ப ஆவலோட என் கண் முன்னே பிட்லை வெள்ளமாய் ஓட, அதிலே குளிக்கறாப்போல் கனவெல்லாம் கண்டு கொண்டு கடைத் தெருவுக்குப் போயிட்டு பிட்லை சாப்பிடற ஆசையோட வீட்டுக்கு வந்தோம். அன்னிக்கு என்னோட விரதநாள் என்பதாலே காலையிலே இருந்து எதுவும் சாப்பிடலை. நல்ல பசி வேறே. வீட்டுக்கு வந்தால் என்ன ஒரு அநியாயம்?? இந்த மோடி மின்சாரத்தைத் தடை செய்திருந்தார். நாங்க கிளம்பினதும் போன மின்சாரம் 12 மணி ஆகியும் வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு மாமியார் வேறே வழியே இல்லாமல் பாகற்காயைப் பிட்லை பண்ணாமல் சும்ம்ம்மா சாம்பாராய்ப் பண்ணிட்டாங்க. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. சாப்பாட்டைத் தியாகம் பண்ணிடுவேனோனு ம.பா. நினைக்க, நான் தட்டை எடுத்துப் போட்டுட்டு, சாம்பாரில் உள்ள பாகற்காயை மட்டும் போடச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டு மனமார, நெஞ்சார மோடியைத் திட்டினேன். சாப்பிட்டு முடிஞ்சது. மின்சாரமும் வந்தது.

சென்னை வந்து ஆசை தீர பாகற்காய் பிட்லை செஞ்சு சாப்பிட்டதும் தான் மனசே சமாதானம் ஆச்சு போங்க. பிட்லை செய்யும் விதம் தனியாக் கொடுக்கிறேன். 2,3 விதங்களில் செய்யலாம். அங்கே போய்ப் பார்த்துக்குங்க. இங்கே இல்லை.

டிஸ்கி: அந்த வலைப்பக்கத்துக்கு இது ஒரு சின்ன விளம்பரம் தான்! :))))))))))))
இங்கே

Sunday, March 15, 2009

ஓட்டு சேகரிப்பு மும்முரமாய் நடக்குதே!

இன்னிக்குக் காலையிலே நுங்கம்பாக்கம்/சேத்துப்பட்டு ஏரியாவில் இருக்கும் சங்கராலயம், சங்கர மடத்துக்குப் போகக் கிளம்பினோம். அதிசயமா வண்டி நான் ஏறி உட்கார்ந்ததும் நிக்கலை. உடனேயே கிளம்பிடுச்சு. (ஆனால் பாருங்க, உட்கார இடம் தான் ம.பா. விடவே இல்லை. எப்போவும் இரண்டு பேருக்கும் இந்த விஷயத்தில் ஒத்தே போகாது. ஆனால் வெளியே காட்டிக்க முடியுமா? நாங்க தான் மனமொத்த தம்பதிகளாச்சே! வண்டி சீட்டிலே நடுவிலே உள்ள கம்பியைக் கூடப் பிடிக்க முடியலை, தொங்க வேண்டியதாயிருக்கு! சொன்னால் நின்னுட்டே வண்டியை ஓட்டிக்கிறேன்னு சொல்லுவார்! அதான் வாயே திறக்கலை!) வண்டி கிளம்பினதே நல்ல சகுனம் தான்னு நினைச்சேன். அதுவும் வரப் போகும் தேர்தலுக்குக் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்காகப் போறப்போ, வண்டி தடங்கல் இல்லாமல் கிளம்பித்துன்னா நல்லது தானே. அம்பிக்கு வேறே தெரியக் கூடாதே! நான் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு சேகரிப்பது. ஹிஹிஹி, அந்த வண்டியிலே சேத்துப் பட்டு வரைக்கும் எல்லாம் போகலை, அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டு வரைதான். அதுக்கே தான் இப்படி! :))))))

இப்போதான் மெளலி கொஞ்சம் கொஞ்சமாய் தாய்க் கழகம் பக்கமாய் வந்திருக்கார். அதிலும் அன்னிக்குச் சாட்டிங்கிலே "மொக்கை உங்கள் பிறப்புரிமை!" னு உணர்ச்சி வசப்பட்டுப் பேசி மூடி இருந்த என் கண்களைத் திறந்துவிட்டார். (ஒண்ணும் இல்லை, கொஞ்சம் கண்ணுக்கு ஓய்வு கொடுக்கிறதுக்காக அப்போ அப்போ கண்ணை மூடிப்பேன், மெளலிக்கு இது தெரியவேண்டாம்.)மொக்கை தான் உங்களுக்கு எழுத வரும்னு சொல்றார்னு ம.சா. அடிச்சுக்குது. அது மண்டையிலே ஓங்கி ஒரு தட்டுத் தட்டி அடக்கி வச்சிருக்கேன். மொக்கைக்குப் புது வீடு கட்டி, இடம் மாத்திட்டேனேனு கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. வழக்கமான ரூட்டிலே இருந்து மாறிடுச்சா, ரொம்ப தூரமா இருக்கு, எங்கே இருக்குனு புரியலைனு சொல்றார். இந்தத் தலைமைக் கழகத்தை இங்கே மாத்தினதிலே இருந்து கொஞ்சம் தொண்டர்கள், குண்டர்கள் வரவு குறைஞ்சு போச்சு. நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டேன். மொக்கை இடம் மாற்றம்னு அறிவிச்சு ஒரு பதிவு போடணுமோ என்னமோ! :P எனக்கும் இங்கே அதிகமாய் வரமுடியலையா? வேறே வேலைகள் இருக்கே? செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை இங்கே கூட்டிட்டு, நானே தனியாப் பேசிட்டு முடிவு எடுக்க வேண்டி இருக்கு. புலி அப்போ அப்போ கொஞ்சம் எட்டிப் பார்க்குது. எப்போவாவது திவா வந்து எட்டிப் பார்த்துட்டு அப்புறம் காணாமல் போயிடறார். தொண்டர்கள் எல்லாம் இப்படி வராமல் வச்சால் என்ன ஆகிறது. இதுவே உபிச இருந்தால் இப்படி நடக்க விடுவாங்களா?? என்ன பண்ணினால் இங்கே தொண்டர் படையை இழுக்கிறதுனு யோசிச்சு, யோசிச்சு மண்டை காய ஆரம்பிச்சுப் போய், ஒரு வழியா கபீரன்பனோட ஆசையையும் கெடுக்க வேண்டாம், நமக்கும் வசதினு, ஒரு கல்லில் இரண்டு, மூன்று மாங்காய் அடிச்சுடலாம்னு அடிச்சேன். அதான் நேத்திக்கு நாள் நல்லா இருந்ததுனு தேன்சிட்டுலே இணைச்சுட்டேன்.

இனிமேலே இலவச விளம்பரம் கொடுக்க வேண்டாமே, தானே தெரிஞ்சுடும் எல்லாருக்கும். ஓட்டு சேகரிக்கப் போன இடத்திலே நல்லபடியா வேலை முடிஞ்சது. கைலைப் பயணத்திலே (கைலையா, கயிலையானு கவிநயா கேட்டிருக்காங்க, எது தப்பு? எது சரி? யாரானும் சொல்லுங்களேன்) காபி கிடைக்கலைனு எழுதினது மடத்துக்காரங்களுக்கு தெரிஞ்சு போச்சு போலிருக்கு, இங்கே காஃபி கொடுத்தாங்க, (அம்பி, நோட் தி பாயிண்ட்!) அப்புறம் கூட்டமோ, கூட்டம். எல்லாரும் என்னைப் பார்க்கத் தான் வந்திருக்காங்கனு தெரிஞ்சுட்டு இருப்பீங்க இல்லையா? அதான் வெற்றிகரமாய்க் கூட்டம் முடிஞ்சதுனு வச்சுக்குவோமே! தேர்தல் வரைக்கும் இப்படித் தான் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஓட்டு சேகரிக்கணுமே. யார் கவலைப் படறாங்க? எல்லாம் நான் தான் கவலைப் பட வேண்டி இருக்கு! நேரம்!

Friday, March 13, 2009

பிட்டுப் பிட்டு வைக்கிறேன்!

எங்க மாமியாருக்கு கிராமத்திலே இருந்தவரைக்கும் வீட்டு வேலைகளிலேயே பொழுது போயிடும். இங்கே சென்னை வந்ததும் என்னதான் வீட்டு வேலை இருந்தாலும் கிராமம் மாதிரி இல்லையே. புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சாங்கனா சும்மாவா?? எல்லாம் ஒரு முடிவோடத் தான். தினசரி பேப்பர், துக்ளக், ஜூனியர் விகடன், ரிப்போர்டர் என்று அரசியல் செய்திகள் வரது தான் படிப்பாங்க. சரிதான், நம்மளோட போட்டி போடுவாங்க போலிருக்கேனு நினைச்சேன். பின்னே? ஒரு வீட்டிலே ஒரு தலைவி தானே இருக்க முடியும்? மெதுவா அவங்க பரோடா போனப்புறமா அங்கே படிக்கப் புத்தகமெல்லாம் கிடையாதே! என்ன பண்ணி இருக்கப் போறாங்களோனு நினைச்சோம்.

அங்கே போகும்போது நானும் இந்த முறை புத்தகங்கள் கொண்டு போக முடியலை. ஏற்கெனவே எடை அதிகம், அட, எனக்கில்லைங்க, நாங்க கொண்டு போன சாமான்களோட எடையைச் சொல்றேன். மூ.தூ. மு. அண்ணாவாய் எப்போவும் போல் அவரே தூக்க வேண்டாம்னு இந்த முறை புத்தகங்களைத் தியாகம் செய்துட்டு, ஒரே ஒரு புத்தகத்துடன் போனேன். அங்கே தொலைக்காட்சியும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியும் தான் ஒரே பொழுது போக்கு. ஒரு நாள் மத்தியானம், மாமியாரும் உட்கார்ந்திருக்கும்போது என் டி டிவி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்க மாமியாரும் புரியுதோ, இல்லையோ ஆங்கிலச் செய்திகள், ஹிந்திச் செய்திகள், தமிழ், மலையாளம், தெலுங்கு னு எல்லாமே பார்ப்பாங்க. அப்போ மன்மோஹன்சிங்கை சிபு சோரன் சந்திக்க வந்த பழைய ஃபைல் ஒளிபரப்பு ஒண்ணு எதுக்கோ வந்தது. உடனேயே என் மாமியாரின் கமெண்ட்:"சிபுசோரன் தேர்தலிலே தோத்துப் போயாச்சு போலிருக்கே?? மன்மோஹன் சிங்கிட்டே அது பத்திச் சொல்லத் தான் வந்திருக்காரா?" ஆடிப் போயிட்டேன் நான்.

அடுத்து வந்தது தமிழ்நாட்டு முதலமைச்சர்:" இவருக்கு ஆப்பரேஷனாமே, முதுகுத் தண்டில்? முடிஞ்சாச்சா?? தயாநிதி மாறனோட ஒத்துப் போயிட்டாங்களாமே?" அடுத்த ஷாக் எனக்கு.அடுத்தாப்போல் ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்க. நிஜமாவே ஆடிப் போயிட்டேங்க!
திருமங்கலம் தேர்தலைப் பத்தி தேர்தல் கமிஷனர்கள் எல்லாம் ரொம்பவே வருத்தப் பட்டாங்களாமே? காஷ்மீர் தேர்தல் கூட நல்லா நடந்ததாமே?' னு சரமாரியாக் கேட்கிறாங்க. மும்பை நிகழ்ச்சியின் போது நான் அங்கேதானே இருந்தேன். அப்படினு வேறே கூட ஒரு கொசுறு நியூஸ்!

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?? நம்ம பதவிக்கே வேட்டு வைச்சுடுவாங்க போல னு பயம் வந்துடுச்சு எனக்கு. வெளியே காட்டிக்காமலேயே அசடு வழிந்தேன்! வேறே வழி?

Thursday, March 12, 2009

என்னைக் காண ராகுல் காந்தி வந்தாரே!

பரோடா திரும்பினால் ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, வீடு போய்ச் சேரும் வரையில் ஒரே போலீஸ், மத்திய காவல் துறை எனப் பாதுகாப்புச் செய்துட்டு இருந்தாங்க. சரிதான், நாம வந்திருக்கிறது தெரிஞ்சு போய் இத்தனை காவலும், பாதுகாப்பும் போட்டிருக்காங்கனு நினைச்சேன். ராகுல் காந்தி வராராம், அதுக்காக இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள்னு சொன்னாங்க. சரிதான், சோம்நாத்தில் பார்த்த லாலு சொல்லி ராகுல் இங்கே வந்திருக்கார், வரப் போகிற பொதுத் தேர்தலில் கூட்டணி பற்றிப் பேசி முடிவு பண்ணனு நினைச்சுக்கிட்டேன். :D ஆஹா, நமக்கு எவ்வளவு முக்கியத்துவம்னு பூரிச்சுப் போயிட்டேன்.

ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் ஐந்து கி.மீ. இருக்கிறது. இந்த ஐந்து கி.மீட்டருக்கு ஆட்டோவில் 20ரூதான் வாங்கறாங்க. எப்போவானும் அதிசயமா 25ரூ. கேட்கிறாங்க. ஏனென்றால் விமான நிலையத்துக்கு எதிரே இருக்கும் விமான நிலையக் குடியிருப்பு உள்ளே கொஞ்சம் தள்ளி இருக்கு. ஆகையால் சிலர் 5 ரூ அதிகம் கேட்கிறாங்க. இங்கே சென்னையிலே, அம்பத்தூரிலே எங்க வீட்டில் இருந்து அம்பத்தூர் ஓ.டி. என்னும் பேருந்து நிலையம் ஒன்றரை கி.மீதான் இருக்கும். சாதாரணமாய் நடக்கும் தூரம் தான். ஆனாலும் ஊர்களுக்குப் போயிட்டுக் கையில் மூட்டை, முடிச்சோடு வந்துட்டால், ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஆட்டோக்காரங்க கேட்கிறாங்க. ரொம்பப் பேரம் பேசினால் 40-45 ரூதான். அதுக்குக் குறைச்சு வரவே மாட்டாங்க. உள்ளே வரும் பேருந்தும் ஒரு மணிக்கு ஒண்ணுதான். வர நேரமும் சரியாச் சொல்ல முடியாது. எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? வேறே வழியில்லாமல் கொடுப்போம். அதோடு வரும்போது என்னமோ நாங்க தான் முனிசிபாலிட்டியையே நிர்வாகம் செய்யறதா நினைச்சு ஆட்டோக்காரர் எங்களைத் திட்டுவார், சாலை எல்லாம் குண்டும்,குழியுமா இருக்குனு. நம்ம மாநிலத்திலே இதெல்லாம் எப்போ மாறும்னு தோணுது.

சொல்லப் போனால் குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வரவே என்னைத் தவிர யாரும் இஷ்டப் படலை. நான் தான் இங்கே என்னமோ வசதிகள் அதிகம்னு சொல்லிட்டு இருப்பேன். வெயிலின் அருமை நிழலில் தானே தெரியுது. பரோடாவில் முக்கியமாய்ச் சொல்லவேண்டிய ஒன்று சாலை அமைப்புகள். சாலைகள் மிக அகலமாயும், போக்குவரத்துக்கு வசதியாயும் இருக்கிறது. சாலையில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தவெனத் தனியாய் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். நடைபாதைக் கடைகள் இல்லை. ஆகவே நடைபாதை நடக்க மட்டுமே மிக வசதியாய் இருக்கின்றது. நடைபாதைக்கு மறுபுறமாய் வாகனங்கள் நிறுத்தும் இடம். அது தாண்டி ஒரு சின்ன நடை, அது தாண்டி வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள். அனைத்திலும் வாகனங்கள் நிறுத்த வசதியாக ஏற்பாடுகள். தெருக்களில் பசுமாடுகள், கன்றுகள் தன்னிச்சையாய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்றாலும் சாணத்தைப் பார்க்க முடியலை. மாடுகள் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு அது பாட்டுக்குப் போகும் போது, பின்னே வரும் கன்றுகளுக்காகச் சற்றே நின்று ஓரக் கண்ணால் கன்று வருகின்றதா எனப் பார்த்துவிட்டு வரலைனாலோ, கன்று வேறே ஏதானும் விஷமத்திலோ, மேய்ச்சலிலோ ஈடுபட்டிருந்தால், "அம்மா" எனக் குரல் கொடுப்பதும், திரும்பக் கன்றும் குரல் கொடுத்துவிட்டு உடன் செல்வதும் பார்க்கவே அழகான கவிதையாய் இருக்கு. விழுதுகளோடு கூடிய பெரிய, பெரிய ஆலமரங்கள், அரசமரங்கள், அவற்றின் கீழ் அங்கங்கே சில குறிப்பிட்ட இடங்களில் அமர ஆசனங்கள், பேருந்துக்காகக் காத்திருப்போருக்கு அழகான நிரந்தர ஷெட்கள் என திட்டமிட்டுச் செய்யப் பட்டிருக்கின்றது.

ஒரே ஒரு குறை எங்கேயும் போஸ்டரோ, பானரோ, தெருக்களில் குழி தோண்டிக் கம்பங்கள் நட்டிருப்பதோ பார்க்கவே முடியலை. அதான் ஊரா இதுனு வருத்தமாப் போச்சு!

Tuesday, March 10, 2009

பரோடா திரும்பும்போது

துவாரகை பற்றிய பதிவுகளை ஒரு இடத்திலும், சோம்நாத் பற்றிய பதிவுகளை இங்கேயும் போடணும்னு தான் எண்ணம். ஆனால் அங்கே கண்ணனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க. அதனால் துவாரகையை அவசரம் அவசரமா முடிக்கணும் போலிருக்கு. சோம்நாத் பற்றிக் கொஞ்சம் விரிவாயே எழுதலாம்னு எண்ணம். என்னிடம் இருக்கும் தகவல்கள் தவிரவும், பல்வேறு புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் சேகரித்துக் கொண்டு எழுதணும். துவாரகையில் தரிசனம் நல்லபடியா முடிஞ்சு, பேட் துவாரகா போயிட்டு வந்து, பின்னர் அன்று மாலையே ஜாம்நகர் கிளம்பினோம். நண்பர்கள் யாருக்கும் நாங்கள் வந்திருக்கிறது தெரியாது. ஜாம்நகரில் சொன்னால் அப்புறம் 2,3 நாட்கள் ஆகும். ஆகவே யாரிடமும் சொல்லலை. வழக்கம்போல் ஜாம்நகருக்கும் ட்ராவல்ஸ் நடத்தும் தனியார் பேருந்து தான். முன்னாலே ஒரு அரசுப் பேருந்து போய்க் கொண்டிருந்தது. இப்போ போகலைனு சொல்றாங்க. ஆனாலும் இந்தத் தனியார் பேருந்து கொஞ்சம் வசதி கம்மிதான். முன்னாலே டிக்கெட் எடுத்தால் தான் அவங்க பேருந்து கிளம்பும்போது சொல்லி உட்கார இடம் கிடைக்கும். எங்களுக்கு அது தெரியாமல் பேருந்து வரட்டும்னு காத்திருந்தோம். அப்புறமா விஷயம் புரிஞ்சு டிக்கெட் வாங்கினோம்.

வரும் வழியிலேயே எஸ்ஸார், ரிலயன்ஸ் இவர்களின் தொழில் கூடங்களைக் காண முடிந்தது. நகருக்கு வெளியே அமைத்திருக்கின்றனர். தொழிலாளர்கள் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு என அனைத்தும் திட்டமிடப் பட்டு அமைக்கப் பட்டு அனைத்து வசதிகளும் செய்யப் பட்டு இருக்கின்றது. ஒரே ஒளி வெள்ளம் தான். அவ்வளவு ஜகஜ்ஜோதியாய் அங்கே பார்த்துட்டு, இங்கே தமிழ்நாட்டுக்கு இருட்டில் வரணுமேனு கொஞ்சம் எரிச்சலாய்க் கூட வந்தது. தண்ணீருக்குப் பதினைந்து வருஷம் முன்னாலேயே வசதிகள் செய்திருப்பாங்க. தெருக்குழாய்களில், ஆழ்துளைக் கிணறுகளில் என்று தண்ணீர் விநியோகம் செய்யப் படும். இப்போக் கேட்கணுமா? என்றாலும் நம்ம ஊர் மாதிரிக் குழாயடிச் சண்டை எல்லாம் பார்க்க முடியாது. கொஞ்சம் அமைதியான பகுதி இந்த செளராஷ்டிரா பகுதியே. ஜாம் நகர் நெருங்க, நெருங்க இனம் புரியாத பரபரப்பு. ஊர் எப்படி இருக்கும்? இத்தனை வருஷங்களில் மாறிப் போயிருக்குமோ? பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்திருக்கும். மரங்கள், செடி, கொடிகள், பூங்காக்கள் எல்லாம் இருக்குமோ இல்லையோ?

பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் வெளியேவே இறக்கி விட்டாங்க. அங்கிருந்து ஒர் ஆட்டோ வைத்துக் கொண்டே ரயில் நிலையம் செல்லவேண்டும். எங்களுக்கு பரோடோ செல்ல செளராஷ்டிரா மெயிலில் போர்பந்தர்- மும்பை செல்லும் வண்டியில் முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. ஆட்டோவெல்லாம் நாம புதுசுனு கூடக் கேட்கும் வழக்கமெல்லாம் அங்கே கிடையாது. ஏற்கெனவே எவ்வளவு கேட்பாங்கனு உள்ளூர்க்காரங்க கிட்டே கேட்டு வச்சுக்குவோம். அவங்க சொல்றதும், இவங்க கேட்கிறதும் அநேகமாய் ஒரே மாதிரியாவே இருக்கும். சில சமயம் அதிர்ச்சி தரும்படி குறைச்ச கட்டணத்துக்கும் வருவாங்க. மீட்டர்னு சொல்லிட்டால், மீட்டர் தான். மீட்டர் கட்டணத்துக்கு மேல் ஒரு பைசா கூட வாங்கறதில்லை. மீட்டரில் 25ரூ காட்டி, நாம் கொடுக்கும்போது முப்பது ரூபாய்கள் கொடுத்தோமானால் மிச்சம் ஐந்து ரூபாய் திரும்ப வந்துடும். அதுக்கு நான் காரண்டி, ப்ரீத்தி மிக்ஸி விளம்பரத்திலே சொல்றாப் போல. கிட்ட இருக்கும் இடத்துக்குப் பத்து ரூபாய் தான் வாங்கறாங்க. வர மாட்டேன்னு சொல்றதும் இல்லை. இது தமிழ்நாட்டை விட்டால் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், டெல்லி, உத்தராஞ்சல் போன்ற பல மாநிலங்களிலும் காண முடியும். சென்னையில் தான் ஆட்டோக்காரங்களின் அதிகப் படியான ஆசை. ஏன் என்று புரியலை.

மேலும் அங்கே எல்லாம் tariff rate sheet, auto driver license renewal date, auto driver id card with photo, last change of tyre என்று எல்லாமே டிரைவர் சீட்டுக்கு முன்னால் ஒட்டப் பட்டு நாம் பார்க்கும்படி இருக்கும். ஆகவே மீட்டரின் தொகையோடு டாரிஃப் ரேட்டையும் நாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். இது அங்கே எல்லாம் ஒரு கட்டாயமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. ஒரு ஆட்டோ பிடிச்சு ரயில் நிலையம் போனோம். வழியெங்கும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது ஜாம்நகர். ஆட்டோ டிரைவரிடம் கேட்டோம். நர்மதா தண்ணீர் ராஜ்கோட் வரை வந்திருப்பதாயும், மேலிடத்தின் தொந்திரவு காரணமாய் ஜாம்நகர், துவாரகை போன்ற இடங்களுக்கு இன்னும் வரலை என்றும், என்றாலும் அதையும் தீர்த்து வைத்துத் தண்ணீரை இங்கேயும் கொண்டு வர முழு முயற்சி எடுக்கப் படுவதாயும் சொன்னார். எங்கேயும் கட்சிக் கொடிகளோ, முதல்மந்திரிக்கு பானரோ, கட் அவுட்டோ காண முடியவில்லை. எப்போவுமே நகரம் சுத்தமாய் இருக்கும். அதே போல் இப்போதும் சுத்தமாய் இருந்தது.

ஜாம்நகரில் முக்கியமாய்ச் சொல்லப் படுவது அதன் சுடுகாடு. பிறந்த பச்சைக் குழந்தைகளைக் கூட எடுத்துக் கொண்டு பிக்னிக் வருவது போல் மக்கள் வருவார்கள் அங்கே. அவ்வளவு நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டு செல்லும் வழி, திரும்பி வரும் வழி எங்கும் ராமாயண, மஹாபாரதக் காட்சிகள், கருட புராணக் காட்சிகள் எனச் சிற்பங்கள், ஓவியங்கள் வரையப் பட்டு பூங்காக்கள் நிர்மாணிக்கப் பட்டு எரியூட்டும் இடம் வரையில் அழகான பாதைகள் போடப் பட்டு, எரியூட்டும் இடமும் பார்த்தால் மனதுக்கு அச்சம் தோன்றாத வகையில் இருக்கும். நகராட்சி நிர்வகிக்கும் இதற்குக் கட்டணமும் அதிகம் வாங்குவதில்லை. மேலும் இறந்தவர்களை எடுத்துச் செல்லும்போது, "சத்ய ஹை, ராம், ராம்" என்ற பேச்சைத் தவிர வேறு பேச்சும் இருக்காது. அப்போது முதல் அமைச்சரே வந்தாலும் அவர் வாகனம் இந்த ஊர்வலத்தைத் தாண்டி முன்னால் செல்லாது. நின்று இறந்தவர்களை எடுத்துச் செல்லும் ஊர்வலம் சென்ற பின்னரே வண்டிகள் மெதுவாய் அதன் பின்னர் செல்லும். முன்னால் கடந்து எந்த வாகனமும் செல்லாது. எதிர்ப்புறம் வரும் வாகனங்கள் அந்த, அந்த இடத்திலேயே நின்று விடும். ஊர்வலம் கடந்த பின்னரே அவர்கள் இந்தப் பக்கம் வருவார்கள். இதை ஒரு கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர். அநேகமாய் வட மாநிலங்கள் எல்லாவற்றிலும் இம்மாதிரியான ஒரு பழக்கத்தைக் காண முடியும்.

Sunday, March 8, 2009

துவாரகையை நோக்கிப் பயணம்

இந்தக் கோயில் கோய்லா மலையின் அடிவாரத்திலும், மலையின் மேலும் உள்ளது. மலையின் மேல் உள்ளது மிகப் பழமையான கோயில். அம்பிகா மாதா, கல்கி மாதா எனவும் அழைக்கப் படுகின்றாள். ஆனால் உள்ளூர் மக்கள் ஹர்சித்தி மாதா எனவே அழைக்கின்றனர். அம்மனிடம் நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்தையும் தருவாள் என்ற அர்த்தத்திலும், சகல சித்திகளையும் அருளுவாள் என்ற ஞான நோக்கிலும் இந்தப்பெயர் ஏற்பட்டது. மலைமேல் உள்ளது பழங்காலக் கோயில். சாளுக்கியப்பாணியில் கட்டப் பட்டதாய்ச் சொல்கின்றனர். கீழே உள்ள கோயில் சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கின்றது. கோயிலின் வடக்கே உள்ள நெருப்புக் குண்டத்தில் தான் மினால்பூர் அரசன் ப்ரபாத்சென்னை, அன்னை தினமும் வாட்டித் தின்றாள் எனச் சொல்லப் படுகின்றது.

ஆஹா, இது என்ன கதை? அம்மனாவது? நர மாமிசம் சாப்பிடறதாவது? அந்த அரசன் என்ன ரொட்டியா? வாட்டிச் சாப்பிட? என்று கேட்கிறவர்களுக்கு ஒரு கர்ணபரம்பரைக் கதை தயாராய் உள்ளது. 2,000 வருடங்கள் முன்னால் எனச் சொல்கின்றனர். அதாவது விக்கிரமாதித்தன் ஆட்சியின் போது நடந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. விக்கிரமாதித்தனும் வரப் போறானே இந்தக் கதையில்! அதான். சாவ்டா என்னும் அரச குலத்தினர் ஆட்சி செய்த நாட்டின் தலை நகர் மினால்பூர், அரசன் ப்ரபாத்சென் சாவ்டா ஆவான். இவன் பேரரசனும் ஒரு சகாப்தமே ஆரம்பிக்கக் காரணமாயும் இருந்த விக்கிரமாதித்தனுக்குச் சகோதர முறை எனச் சொல்கின்றனர்.

ப்ரபாத்சென்னுக்கு ஏழு மனைவிகள் இருந்தனராம். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி சமயம் ஏழு மனைவியரும் கோயல் மலையின் மேல் உள்ள ஜகதம்பா மாதாவை வணங்கி வழிபாடுகள் செய்துவிட்டு வருவார்கள். மன்னனும் கோயிலுக்கு நிறைய நிவந்தங்கள் அளித்ததோடு அல்லாமல், நவராத்திரியின் போது கர்பா விழாவுக்கும் ஏற்பாடுகள் செய்தான். இந்த கர்பா ராஸ் ஆட்டத்தில் மன்னனின் ஏழு மனைவியரும் ஆடிக் கொண்டிருந்தனர் ஒரு நவராத்திரி சமயத்தில். அப்போது மலையின் மேல் குடி கொண்டிருந்த அம்மனுக்கும் இந்த ராஸ் ஆட்டத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்ற அங்கே தோன்றினாள் ஒரு மிக அழகிய இளம்பெண். வைர, வைடூரியங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு வந்து தானும் ஆட ஆரம்பித்தாள் அன்னை.

உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கு யாரோ ஒரு அழகிய பெண் புதிதாக வந்து ஆட்டத்தில் சேர்ந்து கொண்டது புரிய வர உற்றுக் கவனித்தான். மங்கையின் அழகையும், ஆட்டத்தையும் கண்ட மன்னன் மனது மங்கையின் பால் சென்றது. ஒரு மனைவிக்கு ஏழு மனைவியர் இருந்தும் மன்னன் புதியதாய் வந்த இளம்பெண்ணிடமே நாட்டம் கொண்டான். ஆசை மூண்டது மனதில். கர்பா ராஸ் முடிந்து அழகி மலை ஏறத் துவங்கினாள். மன்னன் ரகசியமாய்த் தொடரத் தொடங்கினான். லோகமாதாவை ஏமாற்ற முடியுமா? அன்னைக்குத் தெரிந்து போக அவனுக்குச் சாபம் கொடுத்தாள்:"ஒவ்வொரு இரவும் மலை ஏறி நீ இங்கே வந்து எனக்கு உயிரோடு உணவாகவேண்டும். மறுநாள் காலை உன்னை நான் உயிர்ப்பிப்பேன். மீண்டும் இரவில் உன்னை நெருப்பில் இட்டு வாட்டித் தின்பேன்." என்று சாபம் கொடுக்க, அன்னையின் ஆணையை மீற முடியாத மன்னன் ஒவ்வொரு நாளும் அங்கே வர, அன்னையால் ஒவ்வொரு நாளும் இறந்து, இறந்து உயிர் பிழைக்க, அவன் உடல் நிலை மிக மிக மோசம் ஆனது.

அப்போது அவனுடைய தாய்வழிச் சகோதரன் ஆன வீர விக்கிரமாதித்தன் துவாரகையைக் கண்டு வழிபாடுகள் நடத்த வந்தவன், மன்னன் அரண்மனையில் சில நாட்கள் தங்க இரவு நாடகத்தை ஒளிந்திருந்து பார்த்துக் கண்டு பிடித்து விடுகின்றான். காளியின் பக்தன் ஆன விக்கிரமாதித்தன் காளியின் மனதை வெல்லத் தன்னால் முடியும் என நம்பிக்கையுடன் அன்றிரவு, ப்ரபாத்சென்னைப் போகவேண்டாம் எனச் சொல்லிவிட்டு, அவனிடத்தில் தானே செல்கின்றான். வந்தவன் ப்ரபாத்சென் இல்லை தன் பக்தனும், தன் மேல் அளவிடமுடியாத பக்தி கொண்டவனும் ஆன விக்கிரமாதித்தன் எனப் புரிந்து கொண்ட அன்னை அவனுக்கு வரமளிக்க விரும்பினாள். முதல் வரமாய்த் தன்னுடைய சகோதரனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டான் விக்கிரமாதித்தன். இரண்டாவது வரமாய் அன்னையைத் தன்னுடன் உஜ்ஜயினி வந்து அங்கே குடி கொள்ளக் கேட்கின்றான். சம்மதிக்கும் அன்னையைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றான் விக்கிரமாதித்தன். ஆனால் செல்லும் போது அன்னை இட்ட கட்டளையை மறந்து உஜ்ஜயின் வரும் முன்னரே ஷிப்ரா நதிக்கரையில் விக்கிரமாதித்தன் திரும்பிப் பார்க்க அன்னை அங்கே நின்று விடுகின்றாள். அன்றிலிருந்து அன்னை அங்கேயே நின்றுவிட்டதாகச் சொல்கின்றனர். என்றாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் இரவில் அன்னை ஷிப்ரா நதிக்கரையில் உஜ்ஜயினி நகரின் வெளியே சென்று இருப்பதாயும், காலை திரும்பி கோய்லா மலைக்கு வந்து இங்கே இருப்பதாயும் சொல்கின்றனர்.

ஆகவே இந்தக் கோயிலில் இரவு ஆவதற்குள்ளே தரிசனம் செய்யவேண்டும்.. நாங்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். பேருந்தும் கிளம்பி துவாரகையை நோக்கிச் சென்றது.


கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்துவாரகை பற்றிய பதிவுகளைப் பார்க்கவும்.

Friday, March 6, 2009

மோடி செய்த அநியாயம்!

சோம்நாத் கோயில் பதினைந்து வருடங்கள் முன்னால் கடற்கரையில் இருந்து பல படிகள் மேலே ஏறிச் சென்று அடைய வேண்டிய ஒன்றாக இருந்தது. சுற்றிக் கட்டிடங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது. கடலைப் பார்த்தபடியும், அதற்கு எதிர்ப்பக்கமாயும் படிகள் இருந்தன. இப்போது அந்தப் படிகள் எல்லாம் மூடப் பட்டு கோயிலின் சுற்றுச் சுவர்கள் எல்லாம் உயர்த்தப் பட்டு அங்கங்கே தங்கி இளைப்பாற மண்டபங்கள், சிமெண்ட் பெஞ்சுகள் போடப் பட்டு கோயில் வளாகம் மிக அழகுடனும், கலைக் கண்ணோட்டத்துடனும் அமைக்கப் பட்டுள்ளது. தண்ணீர் குடிக்கத் தனி இடம், நடமாடும் கழிப்பறை வசதி, நாம் கொண்டு செல்லும் பொருட்களை வாங்கிக் கொண்டு லாக்கரில் வைத்துவிட்டு ரசீது தருவதற்கெனத் தனி கவுண்டர் எனப் பலவகை வசதிகளையும் உள்ளடக்கிக்கொண்டு உள்ளது. லாக்கரை நிர்வகிப்பது காவல்துறையினரே. காவல்துறையினர் மிகக் கவனத்துடனேயே பணி புரிகின்றனர். மிகக்கடுமையான சோதனைக்குப் பின்னரே உள்ளே நுழைய முடியும். உள்ளே நுழையும் முன்னர் நம்மிடம் உள்ள கைப்பை உட்பட, பணம் இருந்தாலும் பூட்டும் வசதியுடன் கூடிய லாக்கரில் வைத்துச் சாவியை நம்மிடம் கொடுக்கின்றனர். மொபைல் தொலைபேசி, தோல் பொருட்கள், காமிரா போன்றவற்றைக் கொடுத்துவிட்டே உள்ளே செல்லவேண்டும். உள்ளே உண்டியலில் பணம் போடவேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் முன்னாலேயே எடுத்து வைத்துக் கொள்ளுவது நல்லது.

கோயில் வளாகத்தில் எந்நேரமும் ருத்ரம் ஜபிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. பனிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் முக்கியமானவர் ஆன சோமநாதரின் ஜோதிமயமான பார்வை அங்கிருக்கும் மூலஸ்தானத்தில் இருந்து சற்றும் தடையில்லாமல் நேரே தென் துருவம் வரையிலும் போய் அடைவதாய்ச் சொல்லுகின்றனர். அதைக் குறிப்பிடும் தூண் ஒன்றும் அங்கே நிர்மாணிக்கப் பட்டுள்ளது. சோமநாதர் கோயிலின் வரலாறு விரிவாய் வரும். சாப்பாடு சாப்பிட முன்னால் அரசின் சுற்றுலாத் துறை ஓட்டல் ஒன்றிருக்கின்றது. அதிலும் சாப்பிடலாம். கோயிலிலும் அன்னதானம் உண்டு. ஆனால் மதியம் ஒருமணிக்கு மேல் ஆகும். அதைத் தவிரவும் கோயிலைச் சார்ந்த ட்ரஸ்டின் மூலம் குறைந்த விலையிலும் சாப்பாடு போடப் படுகின்றது. அது கோயில் வளாகத்துக்கு வெளியே உள்ள வீதியில் உள்ளது. குஜராத்தில் எங்கே போனாலும் மரக்கறி உணவு தான். ஆகவே தைரியமாய்ச் சாப்பிடலாம் என்றாலும் வெளியே சாப்பிடமுடியாத சிலநாட்களில் கோயிலில் உள்ள அர்ச்சகர்களைக் கேட்டால் அவர்கள் சரியாகச் சொல்லுவார்கள். சிலர் அவர்கள் வீடுகளிலேயே சாப்பாடும் போடுகின்றனர். நம்மால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாம்.


நாங்க சோம்நாத்தில் இருந்தப்போ லாலு வந்தார் என்னைப் பார்க்கனு சொன்னேனா? அதுக்கப்புறமா அங்கே இருந்து பேருந்தில், பேருந்தா அது? தனியார் பேருந்து, பதினைந்து வருஷம் முன்னாடியும் சோம்நாத்-துவாரகா, துவாரகா-சோம்நாத், வழித்தடத்தில் தனியார் பேருந்து தான் போயிட்டு இருந்தது. அப்போ பேருந்தெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்து போறாப்போல் இருந்தது. இப்போ சின்ன வானைப் பேருந்துனு சொல்லி, அதுக்கு டிக்கெட் 135ரூ?? சந்தேகமா இருக்கு, இருங்க, ஒரு தரம் கேட்டுட்டுச் சொல்றேன். வாங்கினாங்க. காலம்பர துவாரகாவில் ஏழு, எட்டு மணி அளவில் கிளம்பற பேருந்து, இங்கே சோம்நாத்துக்கு மதியம் ஒண்ணரை மணிக்கு வருது. அதே பேருந்து 2 மணிக்குக் கிளம்பி சாயந்திரமாய் துவாரகா போய்ச் சேரும்.

பதினைந்து வருஷத்துக்கு முன்னாலே எப்படி இருந்ததோ அப்படியே இப்போவும் கொஞ்சமும் மாறாமல் இருக்கு இதெல்லாம். இங்கே இன்னமும் அரசுப் பேருந்துகள் வர ஆரம்பிக்கலை. போகிறது இந்தச் சில தனியார் பேருந்துகளே. வழித்தடம் வழக்கம்போல் போக்குவரத்து இல்லாமல் அப்போ இருந்தாப் போலவே இப்போவும் இருக்கு. சொல்லப் போனால் நேரம் ஆக, ஆகக் கூட்டமே இல்லாத சாலையில் பயணிக்க ரொம்ப ஆனந்தமாய் இருந்தது. சாலைகள் அற்புதமாய்ப் போடப் பட்டுள்ளன. தங்க நாற்கரம் என முந்தைய அரசு ஆரம்பிச்சு வச்சதிலே இருந்து இப்போதைய அரசின் தொடர்ச்சி வரையிலும் குஜராத்தில் முழுமையாகப் பயன் படுத்தப் பட்டிருக்கின்றது. பேருந்து மட்டும் உட்காரக் கொஞ்சம் வசதியோடு இருந்திருக்கலாம். கால் நீட்ட முடியாமல், காலை துவாரகையில் இருந்து வந்தவங்க போட்டிருந்த குப்பைகள் சுத்தம் செய்யாமல், (சொன்னதுக்குக் கூட அந்தப் பேருந்து க்ளீனர் கண்டுக்கலைங்கறது வேறே விஷயம்)கையைத் தூக்க முடியாமல், அன்னிக்கு ராத்திரி துவாரகையில் தண்ணீரை எடுத்துக் குடிக்க முடியாமல் கை வலி கண்டது தான் மிச்சம்.

பேருந்து துவாரகை வரும் வழியில் போர்பந்தருக்குள் நுழையாமல் நகருக்கு வெளியேவே வந்து ஹர்சித்தி மாதா கோயிலில் நின்றது. போர்பந்தரின் சுதாமாவின் இருப்பிடமும் கோயிலும், காந்தி பிறந்த வீடும் முன்னால் கூட்டிச் சென்று கொண்டிருந்தனர். இப்போது அதற்குத் தடை விதித்திருக்கின்றனர். மற்றொரு விஷயம் இந்தப் பேருந்துகள் எல்லாம் உணவுக்காக நிற்கும் இடம். பேருந்து கிளம்பி ஒன்றரை மணி நேரத்தில் நின்றது தேநீருக்காக. ஆனால் அங்கே கழிப்பறை வசதிகளே இல்லை. மோட்டல் என்று பேர்தான். தேநீர் மட்டும் குடிக்கலாம், உங்களுக்குப் பிடிச்சதுனால், பரவாயில்லைனால். நாங்க இறங்கவே இல்லை. ஆனால் அரசுப் பேருந்துகள் நிற்கவேண்டிய குறிப்பிட்ட ஊரில் பேருந்து நிலையத்திலேயே நிற்கின்றன. அது தான் வசதியாவும் இருக்கு, தேநீர் குடிக்கிறதுனாலும் சரி, உட்கார்ந்து செல்லவும். இந்த வழித்தடத்திலேயும் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி கொடுக்கவேண்டும். இதை ஏன் இன்னும் மோடி விட்டு வச்சிருக்கார்னு புரியலை. வரும் வழியில் உள்ள கோய்லா மலையின் மேல் இருக்கும் ஹர்சித்தி மாதா விக்கிரமாதித்தனின் மருமகன் வழிபட்ட அம்மன் எனச் சொல்கின்றனர். சில, பல படிகள் ஏறிச் சென்று போய்ப் பார்க்கவேண்டும். முக்கியச் சாலையில் இருந்து பிரியும் சாலையில் வந்து கோயில் வாயிலிலேயே பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன. அரை மணி நேரம் தருகின்றனர் மேலே போய்த் தரிசித்துவிட்டு வருவதற்கு.

ஹர்சித்தி மாதாவின் கதை அடுத்து வரும்.

Wednesday, March 4, 2009

இது என்ன அநியாயம் பாருங்க???

இந்த கணினியைத் தான் சொல்றேன். இத்தனை நாட்களாய்த் தொந்திரவு தாங்கலை. ஒண்ணும் போஸ்டே போட முடியலை. திவா ஒரு லிங்க் கொடுத்து அங்கே இருந்து போடுங்கனு சொன்னார். அதிலேயும் போட முடியலை. ஒரே ப்ளாங்க் பக்கமாவே வந்துட்டு இருந்தது. எப்போவோ அனுமதி கிடைக்கும் நேரத்தில் ஒரு சிலரின் பதிவுகளில் கமெண்டினேன். அதுவும் பிடிக்கவில்லை இந்த ப்ளாகருக்கு. சிலரின் பதிவுகளைப் படிக்கிறதோடு நிறுத்திட்டிருக்கேன். ஆனால் பின்னூட்டங்களை நோட்பேடில் எழுதி, காபி, பேஸ்ட் செய்தால் ஒண்ணும் பண்ணலை. அந்த மாதிரி நேத்திலே இருந்து சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டு வருகின்றேன். ஒரு தொழில் நுட்ப நிபுணரைக் கூப்பிட்டு இருக்கேன் வந்து பார்த்து என்னனு கேட்க. அவங்களுக்குச் சின்னக் குழந்தை இருக்கு. அழுகிறது. அது தூங்கும் நேரம் பார்த்து வரணும். பார்க்கலாம் இன்னிக்காவது முடியுதான்னு.

அதுக்குள்ளே நெருப்பு நரியிலே இருந்து முயலலாம் எனப் பார்த்தால் நேத்திப் பூரா அனுமதியே கிட்டலை. வேறே லிங்க் திறக்கும்போது நெருப்பு நரி தான் வருது. ஆனால் நான் ஜிமெயில் லாகின் பண்ணினால், வேறே இன்னொருத்தர் இதே device லே இருந்து லாகின் பண்ணி இருக்காங்க, உன்னை உள்ளே விடமுடியாதுனு சொல்லிட்டு இருந்தது. ஆனால் நான் எக்ஸ்ப்ளோரரில் சைன் அவுட் பண்ணிட்டுத் தான் வெளியே வருவேன். என்னமோ போங்க, தொழில் நுட்ப நிபுணியைக் கேட்டால், " அட, இது என்ன புதுசா இருக்கு? உங்க கணினியோட அதட்டல், மிரட்டல் எல்லாம்? நாங்க ஒரே சமயம் 2,3 ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து வச்சுப்போமே!"னு சொல்றாங்க. அட, அதானா எல்லாரும் டாமேஜருக்குத் தெரியாம சாட்டறதும், ப்ளாகறதும் இப்படித் தானானு புரிஞ்சுதே தவிர, என்னோட கணினி என்னை அனுமதிக்கவே மாட்டேங்குது.

ஒருவேளை எனக்கும் டாமேஜர், இல்லைனா வேறே யாராவது அனுமதிக்கலைனு இருந்தால், திருட்டுத் தனமாய்ப் பார்க்க மட்டுமே அனுமதிக்குமோ? அதுவும் புரியலை, போங்க. ஆனால் இன்னிக்குக் காலம்பர இருந்து எக்ஸ்ப்ளோரர் கிட்டேவே வராதேனு சொல்லிட்டது. நொந்து நூலாய்ப் போய் நெருப்பு நரியை முயன்று பார்க்கலாம்னா, என்ன ஆச்சரியம் போங்க! நெருப்பு நரி, இன்னிக்கு ஒண்ணுமே சொல்லலை. வேகமாயும் இருக்கு. தரவிறக்கம் செய்யறதிலே இருந்து எல்லாமே இதன் மூலமே இன்னிக்கு நடந்தது. எத்தனை நேரமோ தெரியலை. சீக்கிரமாய் தொழில் நுட்ப நிபுணர் வந்து என்னைக் காப்பாத்தணும், இந்தக் கொடுமையிலே இருந்துனு வேண்டிக்கிறேன்.