Thursday, March 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!! 5

மற்றொருநாள் திருஒற்றியூரிலே இரவு அர்த்தஜாம வழிபாடு முடிந்து திரும்பும்வேளையில் வானம் கருத்து பாதை தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருக்கவே அடிகளார் தாமும், தம்முடன் வந்த நண்பர்களும் கோயிலின் மகாமண்டபத்தில் தங்கிச் செல்லலாம் என யோசனை சொல்ல அனைவரும் ஒப்புக் கொண்டனர். மகாமண்டபத்திற்குச் சென்று அங்கே படுத்துக் கொண்டனர் அனைவரும். ஆனால் யாருக்கும் தூக்கமே வரவில்லை. அனைவருக்குமே பசி வயிற்றைக் கிள்ளியது. ராமலிங்க அடிகள் மட்டுமே தூங்க ஆரம்பித்தார். அப்போது நண்பர்கள் அனைவரும் புரண்டு படுக்கும் ஓசை கேட்டுக் கண்விழித்து, என்ன முதலியாரே? உறங்கவில்லையா எனக் கேட்க, அவரோ பசி வயிற்றைக்கிள்ளுவதாய்க் கூறினார். தனக்கும் பசி இருப்பதாய் அடிகள் ஒப்புக் கொள்ள அனைவரும் சேர்ந்து திரு ஒற்றியூர் தியாகராஜப் பெருமானைத் தான் வேண்டிக்கொள்ளவேண்டும் என முடிவு செய்து கொண்டனர். அவ்விதமே அனைவரும் வேண்டிக் கொண்டனர்.



தியாகராஜப் பெருமான் தம் அடியார் பசி பொறுக்காமல் தவிக்க விடுவாரா? கோயிலின் தலைமை குருக்கள் போல் மாறி கையில் பிரசாதத்தட்டோடு சென்றவர் தற்செயலாய்ப் பார்த்தவர் போல் நடித்து அவர்கள் முன்னிலையில் வந்து நின்றார். அவர்கள் அனைவருமே கோயிலின் குருக்கள் என்றே நினைத்தனர். என்ன இன்னுமா வீட்டிற்குப் போகவில்லை என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, தலைமை குருக்களும் இவர்கள் பசியோடிருக்கும் நிலையைப் புரிந்துகொண்டாற்போல் தம்மிடமிருக்கும் பிரசாதங்களைக் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். ஆனாலும் சோமு செட்டியாருக்கோ சந்தேகமாகவே இருந்தது. அவர் முகத்தைப் பார்த்த ராமலிங்க அடிகள் என்னவென்று கேட்க கோயிலின் தலைமை குருக்கள் இரண்டு நாளாக வரவில்லை என்றும், வெளியூர் சென்றிருப்பதாகவும் நாளைக்குக் கூட வருவது சந்தேகம் என்றும் கோயிலின் மற்ற குருக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதாய்ச் சொன்னார். அப்படி எனில் வந்தவர் யார்?? தலைமை குருக்கள் இல்லையா???

அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ராமலிங்கம் அனைத்தையும் கேட்டுவிட்டு மெளனமாகக் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.



அவர் கண்களில் ஐயன் உருவம் நன்கு தெரிந்தது. தலைமை குருக்களாக மாறிய ஐயன் மீண்டும் ஐயனாகவும் மாறவே வந்தது யார் எனப் புரிந்து கொண்ட அடிகள் வந்தது “தியாகராஜனே! ஒற்றியூர் மாமணியே!” என வியந்து போற்றிப் பாடல் ஒன்றை அக்கணமே புனைந்தார்.



நான் பசித்தபோதெல்லாம் தான் பசித்ததாகி

நல் உணவு கொடுத்தென்னைச் செல்வம் உற வளர்த்தே

ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே

ஒள்ளியதென் அமுதெனக்கிங்குவந்தளித்த ஒளியே.”

ராமலிங்க அடிகளின் பக்தியினாலும் அவரின் தவத்தாலும் தங்கள் அனைவருக்கும் கிடைத்த பெறர்கரிய பேறை எண்ணி எண்ணி அனைவரும் வியந்தனர். அடிகளாரின் வீட்டில் இதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர். அடிகளாரின் அண்ணனுக்கும், அண்ணிக்குமே மிகவும் பெருமிதமாகவும் இருந்தன அனைத்தும். அடிகளாரின் பக்தியும் ஆன்மீக ஈடுபாடுகளும், புராணப் பிரசங்கங்களும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. ஆனால் அவர் தாயாருக்கோ தம் இளைய மகன் இத்தனை வயது ஆகியும் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்தவில்லையே என எண்ணி மனம் வருந்தினார். திருமணம் செய்விக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும்படி ராமலிங்க அடிகளின் அண்ணனாகிய சபாபதிப்பிள்ளையை வேண்டினார்.



தன் தம்பி ராமலிங்கத்தின் மனப்போக்கை நன்கறிந்திருந்த சபாபதிப்பிள்ளை அவருக்கு இல்வாழ்க்கையில் நாட்டமில்லை என்பதையும் புரிந்து கொண்டிருந்தார். ஆனாலும் அவர் அன்னைக்கு இது சம்மதமாய் இல்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். அவர் வற்புறுத்தலின் பேரில் அடிகளாரின் நண்பராகிய ஒரு துறவியின் மூலம் அடிகளாரின் சம்மதத்தைப் பெற்று அவருக்குத் திருமணமும் நடத்தினார்கள். கடும் முயற்சிக்கும், கடும் விவாதத்துக்கும் பின்னர் திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்திருந்த அடிகளாரின் மனமோ திருமணத்திலே ஈடுபடவே இல்லை. என்றாலும் தாயின் மன அமைதிக்காகவும் திருஞானசம்பந்தரை மேற்கோள் காட்டியும் ராமலிங்க அடிகளைச் சம்மதம் கூற வைத்த துறவியாராலேயோ, அல்லது அடிகளாரின் அண்ணனாலேயே திருமணம் முடிந்த கையோடு திரு ஒற்றியூருக்குத் தன்னந்தனியாக வந்து வழிபாடு நடத்தி இறைவன் திரு உருவத்தின் முன்பு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்த ராமலிங்கத்தைத் தடுக்க முடியவில்லை. பெருமானிடம் முறையிட்ட வண்ணமே அடிகளார் பாடியதாவது:



முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ

தெரிந்திலேன் மோகமேலின்றித்

தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்

ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்

குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக்

கலப்பிலேன் மற்றிது குறித்தே

பனித்தனன் நினைத்த தோறும் உள் உடைந்தேன்

பகர்வதென் எந்தை நீ அறிவாய்!”


இவ்வாறு பாடி முடித்துவிட்டு வெடவெடத்த நடுக்கும் உடலோடு, ஆறாய்ப் பெருகிய வியர்வை வெள்ளத்தோடு மகாமண்டபத்திற்கு வந்து தியானத்தில் அமர்ந்து சிவசிந்தையோடு தியானத்தில் ஆழ்ந்தார். தம்மை மறந்தார்

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை! 4

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்:

வள்ளலாரை ஒரு சித்தர் என்று சொல்லுவது உண்டு. அதற்கேற்றாற்போலவே அவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகச் சில. ஒரு முறை தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களோடும், மற்றச் சீடர்கள் சிலரோடும் சேர்ந்து திருஒற்றியூர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். எப்போதும் கோயிலுக்குச் செல்லும் வழியாக வள்ளலார் தெற்கு மாடவீதியையும் அதை ஒட்டிய நெல்லிக்காய்ப்பண்டாரம் சந்து என்னும் சந்தின் வழியாகவுமே செல்வது வழக்கம். அன்றைக்கென்று தேரடித் தெருவிற்குள் நுழைந்து செல்ல ஆரம்பித்தார். வள்ளலாரின் இன்னொரு சீடரான சோமு செட்டியார் குழம்பிப் போனார். இது தாசிகள் வீதி என அழைக்கப்படுமே? ஏன் இந்த வீதியில் நுழைகிறார் என்று எண்ணியவண்ணமே, தம் குருநாதரிடம் அந்த சந்தேகத்தையும் கேட்கிறார். வழக்கமான பாதையைவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். வள்ளலாரோ அமைதியாக “ஆம்” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு அமைதியாக, சோமு செட்டியாரோ விடாமல், “ஐயா, தங்களைப் போன்றவர்கள் இந்த வீதியைக் கண்டாலே நாணிக் கூசுவார்களே? அத்தகைய தாங்கள் இன்றைக்கு இந்தத் தேரடி வீதிக்குள் வந்தது ஏனோ? அதுவும் அனைவரையும் அழைத்துச் செல்கிறீர்களே? “ என்று வினவ, வள்ளலார், புன்முறுவலோடு, “என்னைக் காண இந்தத் தெருவில் வெகுநாட்களாய் ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவரைக் காக்க வைக்கக்கூடாது.” என்று சொன்னார்.



“யார் அவர்?” ஆச்சரியத்துடன் வினவிய சோமு செட்டியாருக்கு, “எல்லாரும் பார்க்கத் தான் போகிறீர்கள்” என்ற பதிலைக் கொடுத்துவிட்டு முன்னால் நடந்தார் வள்ளலார். அந்தத் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் நிர்வாணத் துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். சோமு செட்டியார் அவரைச் சுட்டிக்காட்ட, வள்ளலாரும் அதனால் என்ன என்று கேட்டுவிட்டுத் துறவியைக் கூர்ந்து நோக்கினார். செட்டியார் உடல் நடுங்க, பயத்துடன், அவர் தெருவிலே போகிறவர்கள் வருகிறவர்கள் அனைவரையும் அவரவர் குணங்களை மானசீகமாய்க் கண்டறிந்து அதற்கேற்றாற்போல், “இதோ நாய் போகிறது, இதோ நரி போகிறது, இதோ குரங்கு போகிறது, இதோ, குதிரை போகிறது, இதோ கழுதை போகிறது.” என்றெல்லாம் சொல்லி ஏளனம் செய்து சிரிப்பார் என்று சொல்லித் தம்மையும் வள்ளலாரையும் கண்டு அவ்விதம் ஏதேனும் சொல்லிவிடுவாரோ என அஞ்ச ஆரம்பித்தார்.



“இவ்வளவு தானே? இதுக்கா பயப்படுவது? வாருங்கள் போகலாம்.” என்று சொல்லிவிட்டு வள்ளலாரோ மேலே நடக்க ஆரம்பித்தார். அந்த நிர்வாணத் துறவியை அனைவரும் கடந்தனர். அப்போது அதிசயம் நிகழ்ந்தது. அந்தத் துறவி ஸ்ரீராமலிங்க அடிகளைக் கண்டதுமே, பக்திப் பரவசம் மேலோங்கத் திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே இறங்கி, நடுவீதிக்கு வந்து, ஆநந்தக் கூத்தாடிக் கொண்டு, “கண்டேன், கண்டேன், கண்ணுக்கு இனியவரைக் கண்டேன், ஒரு மனிதனைக் கண்டேன், அதிலும் உத்தம மனிதனைக் கண்டேன். அதோ போகிறான், உத்தம மனிதன். இன்றுதான் கண்டேன் இவனை.” என்று உரக்கக் கத்திக் கூச்சலிட்டு ஆடிப் பாடினார். அனைவரும் ஆச்சரியப் பட ராமலிங்க அடிகளோ எப்போதும்போல் சாதாரணமாகவே இருந்தார். சோமு செட்டியாரோ மீண்டும் ஆச்சரியத்துடன் அடிகளைக் கண்டு, இதென்ன ஸ்வாமி என வினவ ராமலிங்க அடிகள் அவரைக் கண்டு பேசிவிட்டு வருவதாய்க் கூறிவிட்டு அவரருகில் சென்றார். அடிகளைக் கண்டதுமே அந்தத் துறவிக்கு வெட்கம் சூழ்ந்தது. மேனி கூசியது. தம் நிர்வாணத்தை மறைக்க ஆரம்பித்தார். ராமலிங்க அடிகளைக் காணக் காண அவருக்கு மேலும் மேலும் வெட்கம் வந்தது. ராமலிங்க அடிகள் அவரை வணங்கினார்.



“ஆஹா, எனக்கு அருள் புரிய வந்த ஞான ஜோதியே! யாம் இனி காட்டுக்குச் செல்கின்றோம். இனி நமக்கு அதுவே வீடு.” என்று சொல்லியவண்ணம் அங்கிருந்து சென்றுவிட்டார். அடிகளும் திரும்பிவந்து தம் சீடர்களோடு சேர்ந்து கொண்டார். அப்போது வேலாயுத முதலியார் ஸ்வாமிகளுக்காகவே அந்தத் துறவி காத்துக்கொண்டிருந்ததாகவும், இன்று அவர் நோக்கம் நிறைவேறியதும் சென்றுவிட்டதாகவும், அதைப் புரிந்து கொண்டே ஸ்ரீ அடிகள் இந்தத் தெருவில் நுழைந்து செல்ல ஆரம்பித்ததையும் புரிந்து கொண்டதாய்ச் சொல்ல சோமு செட்டியாருக்கும் அப்போது தான் விஷயம் விளங்கிற்று. ஒற்றியூர் கோயிலுக்குச் சென்று திரும்ப தினம் தினம் ராமலிங்க அடிகளுக்கு நேரம் ஆகிவிடும். அவர் வரவுக்காக வெகுநேரம் காத்திருந்து, காத்திருந்து பார்த்துவிட்டு அவர் அண்ணியான பார்வதி அம்மை ஒருநாள் தம்மை அறியாமல் தூங்கிவிட்டார். அவர் தூங்கிச் சிறிது நேரம் சென்றே அடிகள் வீட்டுக்குள் வந்தார். அண்ணி தூங்கிவிட்டார் என்பதை அறிந்ததுமே அண்ணியை எழுப்பித் தொந்தரவு கொடுக்கவேண்டாம் என உணவு உண்ணாமலேயே படுத்துவிட்டார். வடிவுடை அம்மை அவர் நினைவில் தோன்ற அம்மையைத் தியானித்துக் கொண்டே உறங்கவும் ஆரம்பித்தார்.

ஆனால் அன்னைக்குத் தாங்கவில்லை. எந்த அன்னை?? சாட்சாத் அந்த வடிவுடையாளுக்குத் தான். தன் கோயிலுக்கு வந்த பிள்ளை, தன் மேல் பாடல்கள் புனைந்த பிள்ளை இப்படி உண்ணாமல் உறங்குவது கண்டு பொறுக்கவில்லை அவளுக்கு. என் மேல் மாணிக்க மாலை பாடிய பிள்ளை இப்படிப் பசியுடனா உறங்குவது?? வடிவுடையாள் உடனே அங்கே அடிகளது அண்ணி பார்வதி அம்மையின் உருவில் தோன்றினாள். வலக்கையில் உணவு வட்டில், இடக்கையில் குடிநீர்ச் செம்பு. அண்ணி எவ்விதம் எழுப்புவாரோ அவ்விதமே, “தம்பி ராமலிங்கம், எழுந்திருங்கள்.”என்று எழுப்பினார்.

உணவுப் பாத்திரத்தை அடிகளிடம் கொடுத்து உணவு அருந்தச் சொன்னார். இவ்வளவு நேரம் சென்றும் தம் அண்ணியார் உணவோடு தம்மை எழுப்புவதைக் கண்டு, அந்த அன்பில் மனம் உருகினார் வள்ளலார். மேலும் இனி அண்ணிக்கு இத்தகைய தொந்தரவைக் கொடுக்காமல் பார்த்துக்கொள்வதாயும் வாக்குக் கொடுத்தார். உணவருந்திய பின்னர் ராமலிங்கத்திற்குத் தம்மையும் அறியாமல் நித்திரை பெரும் மயக்கமாய் வர, புன்னகை பூத்த அன்னை மறைந்தாள். இங்கே அவருடைய அண்ணியார் உண்மையாக உறக்கம் கலைந்து எழுந்தார். ராமலிங்கம் உணவு அருந்த வரவில்லை என்பதும், தாம் அப்படியே அசதியில் உறங்கியதும் நினைவில் வர, எழுந்து வெளியே வந்து பார்த்தார். ராமலிங்கம் திண்ணையில் படுத்திருப்பதைக் கண்டதும், மனம் பதறி, அவரை எழுப்பினார். மீண்டும் தூக்கம் கலைந்த அடிகள், “என்ன அண்ணி?” என வினவ, “உணவு அருந்த வாருங்கள், தம்பி, அசதியில் உறங்கிவிட்டேன் போலிருக்கிறது.” என்று கனிவோடு அழைக்க வியப்பின் உச்சிக்கே போனார் அடிகளார்.



“அண்ணி, இப்போது தானே உணவு கொடுத்தீர்கள்? தாங்கள் அளித்த உணவைத் தானே சாப்பிட்டேன்?” என்று சொல்ல, பார்வதி அம்மை குழம்பினார். குழப்பத்துடனேயே, “இல்லை தம்பி, நான் உறங்கிவிட்டேன். கதவையும் தாழிட்டு இருந்தேனே? இப்போதுதானே உறக்கம் கலைந்து வருகிறேன்?” என்று சொன்னார். மேலும் “நீங்கள் பசியோடு இருப்பீர்களே, உணவு பரிமாறத் தான் அழைத்தேன்.” என்றும் கூறினார். அடிகளார் அப்படியானால் எனக்கு உணவு பரிமாறியாது அண்ணியார் இல்லை எனில் பின்னர்?? தம்மை மறந்த நிலையில் தியானிக்க ஆரம்பித்தார். அப்போது வலக்கையில் உணவுப் பாத்திரத்துடனும், இடக்கையில் நீர்ச்செம்போடு வடிவுடை அம்மன் அவருக்குக் காட்சி கொடுக்க, பின்னர் கண்விழித்த அடிகளார் தம் அண்ணியிடம் வடிவுடையாளே வந்து தமக்கு உணவு கொடுத்திருப்பதைக் கூறினார். அந்தக் காட்சி உடனே ஒரு பாடலாகவும் வந்தது அவருக்கு.



“தெற்றியிலே நான் பசித்துப் படுத்திளைத்த தருணம்

திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத்தெடுத்தே

ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங்கெழுப்பி
உவந்து கொடுத்தருளிய என் உயிரிக்கிதாந்தாயே

Monday, March 28, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை ! 3

சபாபதியால் முதலில் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. தன் தம்பியாவது சொற்பொழிவாற்றுவதாவது? அதுவும் இலக்கியத்தில், பெரிய புராணத்தில்?? என்ன தெரியும் அவனுக்கு?? ஏதோ கட்டுக்கதை என்றே நினைத்தார் அவர். அங்கு கூடி இருந்த மக்கள் பாராட்டினார்கள் என்பதும் அவருக்கு விந்தையாகவே இருந்தது. இல்லை, இல்லை, ஜுரவேகத்தில் நாம் கனவு காண்கின்றோம் என்றே நினைத்தார். ஆனால் இது கனவில்லை, உண்மைதான். அவருடைய மனசாட்சி உறுத்தியது அவருக்கு. பள்ளிக்கே செல்லாத தன் தம்பி இப்படி ஒரு அருமையான பொருள் பொதிந்த ஆன்மீகச் சொற்பொழிவை எப்படிக் கொடுக்கமுடிந்தது?? ம்ம்ம்ம்ம்??? சரி, சரி, அவன் போகட்டும், நாமும் யாருமறியாமல் சென்று கவனிப்போம். சபாபதி ஒரு முடிவுக்கு வந்தார்.



தம்பி அடுத்தநாள் சொற்பொழிவாற்றச் சென்றபோது யாருமறியாவண்ணம் அந்தப் பெரிய கூடத்தின் ஒரு மூலையில் தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்து தம்பியின் சொற்பொழிவைக் கேட்டார். இப்போது அவருக்கு மயக்கமே வந்தது. இப்படி ஒரு மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சை அவரால் கூட இதுவரையிலும் தர முடிந்ததில்லை. மீண்டும் கனவோ? தம்மைத் தாமே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இது உண்மைதான். தாம் காண்பது கனவல்ல. சொற்பொழிவாற்றுவதும் அவருடைய அருமைத் தம்பியே தான். வேறு யாரும் அல்ல. வீட்டிற்குச் சென்ற அவர் தம் மனைவியிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். அவர் மனைவி தாம் இந்த உண்மைகளைத் தவிர இன்னும் பல உண்மைகளை அறிந்திருப்பதாய்க் கூறினார். மனைவி கூறிய செய்திகளில் இருந்து தம் தம்பி ஒரு சாதாரண மனிதன் அல்ல. இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவன், அல்லது இறைவனின்பிரதிநிதியாக இங்கே வந்துள்ளான் என்று புரிந்து கொண்டார். தாம் இத்தனை நாட்கள் தம் தம்பியிடம் நடந்து கொண்ட கடுமையான நடத்தைகளுக்கு மனம் வருந்தினார் சபாபதி.



சொற்பொழிவை முடித்துவிட்டு ராமலிங்கம் வீட்டிற்கு வந்தார். சபாபதி அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு தாம் செய்த அடாத செயல்களுக்காக உளம் வருந்தினார். தம்மை மன்னிக்கும்படி தம்பியிடம் வேண்டினார். ராமலிங்கமோ அவற்றால் தாம் மனம் வருந்தவில்லை என்பதைக் காண்பிக்கும் வண்ணம் சற்றும் கலங்காமல் மெளனமாகத் தம் மனதுக்குள்ளேயே இறைவனை இவ்வளவு நாள் வழிபட்டாற்போல் அன்றும் வழிபட்டு இந்த நேரமும் இனிமையான நேரமாய்க் கடக்கவேண்டிக் கொண்டார். அவருடைய அண்ணனுக்கும் அவருக்கும் நேரவிருந்த ஒரு பெரிய மனஸ்தாபத்தையும், அதன் விளைவான நடத்தைகளையும் இவ்விதம் தடுத்தார் ராமலிங்கம்.



கொஞ்சம் கொஞ்சமாய்ச் செய்தி சுற்றுவட்டாரங்களில் பரவியது. மக்கள் தினமும் ராமலிங்கத்தைக் காண வரத் தொடங்கினார்கள். ஒரு பார்வை பார்த்தாலோ அல்லது அவன் குரலைக் கேட்டாலோ போதும் என எண்ணிய மக்கள் தேனுள்ள பூக்களை மொய்க்கும் வண்டுகளைப் போல் மொய்த்தனர். பல்வேறு இலக்கியகர்த்தாக்களும், மதத்தலைவர்களும் ராமலிங்கத்தின் பேச்சில் மயங்கி அவருக்குச் சீடர்களானார்கள். தொழுவூர் என்னும் ஊரைச் சேர்ந்த வேலாயுத முதலியார் என்பவர் சென்னை ராஜதானிக்கல்லூரியின் தமிழ் இலக்கியப் பேராசிரியராக இருந்துவந்தார். அவர் முதலில் ராமலிங்கத்தைத் தம் குருவாக ஏற்றுக் கொள்ள அவரைத் தொடர்ந்து அனைவரும் அவரைப் பின்பற்றினார்கள். ராமலிங்கம் அப்போது முதல் ராமலிங்க அடிகள் என்றே அழைக்கப் பட்டார்.



ராமலிங்கம் தினமும் திருவொற்றியூர் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். பல பாடல்களைப் புனைந்து தம் சீடர்களுக்கு இவற்றைத் தொகுத்து மக்களுக்கு அளிக்கும்படி செய்தார். இதைத் தவிர தம்மை நாடி வருபவர்களின் ஆன்மீக சந்தேகங்கள், தியான வழிமுறைகள், தியானங்களில் ஏற்படும் சந்தேகங்கள் போன்றவற்றையும் தீர்த்து வைத்தார். சென்னையில் இருந்து அவர் பல இடங்களுக்குப் புனித யாத்திரை சென்று அங்குள்ள தெய்வங்களின் பேரிலெல்லாம் பாடல்கள் புனைந்தார். பாடல்கள் இரண்டு பெரிய தொகுப்பாகத் தொகுக்கப் பட்டு மக்கள் வாயில் மட்டுமல்லாமல் மனதிலும் இடம் பெறத் தொடங்கின. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற ராமலிங்கம் நெய்வேலிக்கு அருகே உள்ள கருங்குழி என்னும் ஊரில் போய்த் தாம் அங்கேயே நிரந்தரமாய்த் தங்க முடிவு செய்தார். ஒன்பது வருடங்கள் அங்கே தங்கினார். திருஅருட்பா என்ற பெயரில் இரண்டு பாகங்களாக அவரது பாடல்கள் தொகுக்கப் பட்டன. பாடல்கள் தவிர, அவற்றில் சில கட்டுரை வடிவிலும், சில சீடர்களுக்கு அடிகளார் எழுதின கடித வடிவிலும் இருந்தன. அவை எல்லாமே திருஅருட்பா என்ற பெயரிலேயே தொகுக்கப் பட்டு அவரது சீடர்களால் படிக்கப் பட்டன. இரண்டாம் பாகத்தில் உள்ள அருள் விளக்க மாலையும், அநுபவ மாலையும் மிகவும் முக்கியமானவையாகச் சொல்லப் படுகின்றன.

Wednesday, March 23, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை 2

சென்னையிலே பெரிய சகோதரர் ஆன சபாபதி அவர்கள் தமிழில் இலக்கியம் படித்து வந்தார். அதோடு இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஆர்வமும் உள்ள பெரிய மனிதர்களின் பழக்கமும் ஏற்பட்டது. கூடவே சிறு வயதுக் குழந்தைகளுக்கு ஆரம்பத் தமிழும் கற்றுக் கொடுத்துவந்தார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் கொஞ்சம் சிரமத்துடனேயே குடும்பம் நடந்தது. என்றாலும் நிம்மதியுடனும், ஆநந்தமாகவுமே வாழ்ந்தனர். ராமலிங்க அடிகளுக்கு அப்போது ஐந்து வயது நிரம்பி இருந்தது. தன்னுடைய சின்னத் தம்பிக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்துடன் சகோதரர் சபாபதி அடிப்படைத் தமிழ் இலக்கணமும், தமிழ் இலக்கியமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ராமலிங்கத்திற்குப் படிப்பில் ஆர்வம் இருப்பதாய்த் தெரியவில்லை. நாளாக ஆகச் சரியாகும் என நினைத்த சகோதரர் தன் முயற்சியை விடவில்லை. ராமலிங்கமோ, தமிழ் கற்றுக் கொள்வதை விட அங்கே இருந்த கந்தகோட்டத்து முருகன் பேரில் தீராக் காதல் கொண்டார். அடிக்கடி அங்கே சென்றுவிடுவார். முருகனிடம் என்ன பிரார்த்திப்பாரோ. பிரார்த்தனைகள், வழிபாட்டுப் பாடல்கள் பாடியவண்ணம் இருப்பார். தமையனாரோ, சொந்தத் தமையனிடம் தம்பி எடுத்துக் கொள்ளும் சலுகை என நினைத்து, மூன்றாவது மனிதர் யாராவது சொல்லிக் கொடுத்தால் சரியாகும் என்று எண்ணினார்.



தான் கற்றுக் கொண்டிருந்த தமிழாசிரியரையே தம்பிக்கும் சொல்லிக் கொடுக்க வைத்தார். அவரும் தன்னால் இயன்ற அளவிற்கு முயன்று ராமலிங்கத்துக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். ஓரளவுக்கு வெற்றி பெற்றார் எனினும் ராமலிங்கம் கந்தகோட்டம் செல்லுவதையோ, வழிபாட்டுப்பாடல்கள் பாடுவதையோ, அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து போவதையோ நிறுத்தவில்லை. பாடும்போது ராமலிங்கத்தின் குரலினிமை அனைவரையும் கவர்ந்தது. இதைக் கேள்விப்பட்ட தமிழாசிரியர் அந்தப் பாடல்களைத் தாமும் கேட்க ஆசைகொண்டு, அவற்றைப் பாடும்படி சொல்லித் தானும் கேட்டு அறிந்தார். பாடல்களைக் கேட்ட தமிழாசிரியர் அவற்றின் நேர்த்தியையும், உள்ளார்ந்த பக்தியையும் கண்டு வியந்து, தமிழிலக்கணத்தில் தேர்ந்தவர்களாலேயே தொடமுடியாத இலக்கண நெறியுடனும், அதையும் தாண்டிய பக்தி உணர்வுடனும் பாடல்கள் இருக்கிறதைக் கண்டு வியந்து, இது கடவுளின் பரிசு, இந்தக் குழந்தையும் இறைவன் அளித்த பரிசு என வியந்து பாராட்டினார்.



இத்தனை அருமையாகப் பாடல்கள் தானே இயற்றிப் பாடும் வல்லமை பெற்றவனுக்குத் தான் தமிழ் சொல்லிக் கொடுப்பதா? நம்மைவிடவும் இவன் தமிழறிந்தவனாய் உள்ளான் எனச் சொல்லி வியந்தார். என்றாலும் ராமலிங்கத்தைப் பள்ளியில் சேர்க்க அனைவரும் முயன்றனர். அந்த முயற்சியும் தோற்றது. சபாபதி அவர்களுக்குத் தம்பியின் நிலைமையையும், அவன் எதிர்காலத்தையும் நினைத்துக் கவலை அதிகம் கொண்டு, மிரட்டலின் மூலமும், பயமுறுத்தியும் தம்பியை வழிக்குக் கொண்டுவர முனைந்தார். தம்பிக்கு உணவும், உடையும் அளிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேற்றுவதாய்ப் பயமுறுத்தினார். ஆனாலும் எந்தப்பலனும் இல்லை. அவரின் அண்ணியார் இந்தச் சிறுவனிடம் மிகவும் பாசம் கொண்டு தன் கணவனுக்கும் தெரியாமல் அவனுக்கு உணவும், உடையும் அளித்துப் பாதுகாத்தார். இதனால் எல்லாம் அயராமல் ராமலிங்கம் தன் தெய்வீகப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அவர் உறுதி மேலும் பலப்பட்டது. உள் மனதில் கடவுளைக் கண்டு மனதிற்குள்ளேயே அவற்றிற்கு வழிபாடுகள் செய்யும் அளவிற்கு முன்னேறினார்.



என்றாலும் அண்ணியார் தன் மைத்துனரிடம் தன் கணவனுக்காக, அவர் ஆசையை நிறைவேற்றும்படி வேண்டினார். இது வரையிலும் ராமலிங்கம் அநுபவித்து வந்த துன்பங்கள் தீர்ந்து போகும் என்றும், சுகமான, சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்றும், குடும்பத்தில் அனைவரும் மகிழ்வார்கள் என்றும் வேண்டினாள். ராமலிங்கமும் அண்ணியாரின் அதீதமான பாசத்தைக் கண்டு, தான் படிக்கச் சம்மதிப்பதாய்ச் சொன்னார். விஷயம் சகோதரர் காதுகளுக்குச் சென்றது. ஒரு நல்ல நாள் பார்த்து மேல்மாடியில் ஒரு தனி அறை ராமலிங்கத்திற்கென ஒதுக்கப் பட்டது. ஆனால் ராமலிங்கம் புத்தகப் படிப்பின் அறிவிற்குப் பதிலாக வழிபாடல்கள் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்தார். இலக்கியப் புத்தகங்கள், இலக்கணப் புத்தகங்களுக்குப் பதிலாய் அறையில் ஒரு கண்ணாடிக்கு எதிரே ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வழிபாடுகளும், தியானமும் செய்ய ஆரம்பித்தார்.



ஆழ்ந்த தியானம் செய்யச் செய்ய ராமலிங்கத்திற்கு யோகசித்திகள் கை கூடி வரலாயின. ஒருநாள் அவர் முருகக் கடவுளைத் தரிசித்தார். ராமலிங்கத்தின் கண்களுக்கு முருகன் புலப்படலானார். நாளாக நாளாக முருகனின் பரிபூரண அருளுக்கும், ஆசிக்கும் பாத்திரமானார். தன் தெய்வீகத் தன்மையால் ராமலிங்க அடிகளாருக்கு, யோக ரகசியத்தை அறியச் செய்தார். உள்ளொளி பெற்ற ராமலிங்க அடிகளார் தானே ஒரு ஜோதிப் பிழம்பாய் ஜொலித்தார். அவர் முகத்தில் தெய்வீகக் களை தோன்றியது. இறை தரிசனம் பெற்ற களிப்பில் பாடல்கள் அலைபோல் பொங்கி வரலாயிற்று. சித்திகள் கைவரப் பெற்றார். அதன் மூலம் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன. ஆனாலும் அவர் அறியவில்லை அதை. அவருடைய அண்ணியாரே பார்த்து வியந்தார் அவரின் அதிசய ஆற்றலைக் கண்டு பேச்சிழந்தார்.



தன்னுடைய அபாரமான தமிழறிவால் ராமலிங்க அடிகளாரின் அண்ணனாகிய சபாபதி அவர்கள் சில பணக்காரர்கள் வீட்டில் இலக்கியச் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவுகளை அவர்களின் வேண்டுகோளின் பெயரால் நிறைவேற்ற ஆரம்பித்தார். இதன் மூலம் அவருக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கவே குடும்பத்தின் வறுமை ஓரளவு போயிற்று. பெரியபுராணத்தைப் பற்றிய சொற்பொழிவு ஒன்று செய்ய ஒரு பெரிய மனிதர் அவரை அழைத்திருந்தார். அது ஒரு தொடர் சொற்பொழிவு. சில நாட்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். சில நாட்கள் வரையிலும் எந்தத் தடையுமின்றி சுமுகமாய்ச் சென்றுகொண்டிருந்தது சபாபதி அவர்களின் சொற்பொழிவுகள். ஒருநாள் அவருக்குக் கடுமையான ஜுரம் வந்து எழுந்திருக்கவே முடியவில்லை. சொற்பொழிவுக்குப் போகமுடியாதே என்ற கவலை சபாபதிக்கு வந்து மனம் கலங்கினார். அந்தப் பணக்காரர் என்ன சொல்லுவாரோ என அஞ்சினார். அப்போது அவர் மனைவி தன் மைத்துனரின் சாமர்த்தியத்தையும், அறிவையும் நேரில் பலமுறை கண்டிருப்பதால், மற்றவருக்கும் இது தெரியவேண்டும் என நினைத்தவராய், தன் கணவரிடம் சென்று ராமலிங்கத்தைச் சொற்பொழிவாற்ற அனுப்பும்படி வேண்டினார்.



ஆனால் சபாபதிக்குத் தன் தம்பியைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் எதுவுமில்லை. அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவர் போகமுடியாது என்றும் சொல்லி மனைவியிடம் கடுமையாகக் கோபித்து மறுத்தார். ஆனால் வேறு ஏற்பாடு செய்யவும் நேரமில்லை. பணக்காரர் வீட்டிலிருந்து ஆள்மேல் ஆள் வந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் தம்பியை அழைத்து விபரத்தைக் கூறினார். புத்தகத்தைப் பார்த்து ஒன்றிரண்டு பத்திகள் அல்லது ஒன்றிரண்டு பாடல்களைப் படித்துவிட்டு வருமாறும், தன் அண்ணனுக்கு உடல்நலம் சீரானதும் மேற்கொண்டு தொடருவார் எனக் கூறும்படியும் பணித்தார். அதன்படியே ராமலிங்கம் பணக்காரர் வீட்டிற்குச் சென்று தமையனாரின் செய்தியைச் சொன்னார். அந்தக் கூடம் அனைத்து ரசிகப் பெருமக்களாலும் நிரம்பி இருந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பணக்காரருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. கூட்டத்தினரை எவ்வாறு திரும்பி அனுப்புவது என்று யோசித்தவர், ராமலிங்கத்தைப் பார்த்து ஏதாவது கொஞ்சம் பேசிச் சமாதானம் செய்யுமாறு வேண்டினார். ராமலிங்கமும் மாபெரும் அறிஞர்களும், வித்வான்களும், பண்டிதர்களும் நிறைந்திருந்த அந்தச் சபையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் அமர்ந்தார். ராமலிங்கத்தின் வயதையும், சின்னஞ்சிறு பையன் அவர் என்பதையும் கவனித்த கூட்டம், விஷயமோ மிகப் பெரியது. யோகத்தையும், ஞானத்தையும் பற்றிப் பேசும் வண்ணம் இந்தக் குழந்தை என்ன அறிந்திருக்கப் போகிறது என நினைத்தனர்



ஆனால் ராமலிங்கம் பேச ஆரம்பித்தாரோ இல்லையோ நல்ல பருவகாலங்களில் இடைவிடாமல் கொட்டும் குற்றால அருவி போல் சொல்மாரி பொழிந்தார். நிறுத்தவே இல்லை. கூட்டத்தினரோ பிரமிப்பும், ஆச்சரியமும் மாறாமல் ஆடாமல், அசையாமல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவர் மனதிலும் ஒரே உணர்ச்சி. இவன் சிறுவனே அல்ல. கடவுளே நமக்குப் பாடம் சொல்ல, உபதேசிக்க அனுப்பிய ஒரு ஞாநி. என்ற எண்ணமே அனைவர் மனதிலும். கூட்டம் ஆரம்பித்துப் பலமணிநேரம் ஆகிவிட்டது. நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய புராணத்தின் "உலகெலாம்" என்ற வரியில் ஆரம்பித்த ராமலிங்கம் அந்தப் பாடலின் இரு வரிகளுக்கே அதுவரையில் அர்த்தம் சொல்லி இருந்தார். ஒவ்வொரு விளக்கமும் அற்புதமாய், அருமையாய் அமையக் கூட்டத்தினரால் அவர்கள் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நேரம் போனதும் அவர்கள் யாருமே அறியவில்லை. கூட்டத்தினர் அனைவரும் ஒருமனதாக இந்தச் சொற்பொழிவுகள் இனிமேல் ராமலிங்கத்தாலேயே நடத்தப் படவேண்டும் எனத் தீர்மானிக்க, அந்தத் தீர்மானம் கூட்டம் நடத்துநர் வாயிலாக சபாபதிக்கும் செய்தி போயிற்று.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை! 1


நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு அதிகம் இருந்தது. ஒருநாள் ராமையா பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சாது அவர் வீட்டுக்கு வந்தார். சின்னம்மை சாதுவைக் கண்டதும், வணங்கி வரவேற்று அவருக்குத் தகுந்த உபசாரங்கள் செய்து அருமையான சாப்பாடும் கொடுத்தார். சாதுவும் அம்மையின் உபசாரங்களால் மனம் மகிழ்ந்து செல்லும்போது விபூதிப் பிரசாதம் கொடுத்தார். அப்போது அம்மையை ஆசீர்வதித்தார். ஆசீர்வதிக்கும்போது, "உனக்கு ஒரு பையன் பிறப்பான், இறவாமை என்பதை மற்றவர்களுக்கு அவன் போதிப்பான். இந்த உலக மக்கள் அவன் சொல்லுவதை நல்லுபதேசமாக ஏற்பார்கள்." என்று சொல்லி மறைந்தார். இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி என அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவெனில் அந்த அம்மையார் சாது தனக்கு ஒரு பிள்ளை பிறப்பான் என்று சொல்லும்போதே ஏதோ ஓர் ஒளிமயமான ஒன்று தன் கர்ப்பத்துக்குள்ளே பிரவேசித்ததாய் உணர்ந்தாள். இம்மாதிரியான கர்ப்பத்தை சம்புபக்ஷ சிருஷ்டி எனச் சொல்லுவதாய் ஆன்றோர் சொல்லுகின்றனர். சாதாரணமாய் கணவன், மனைவி உடல் ரீதியான உறவினால் ஏற்படும் கர்ப்பம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. ஆனால் அவதார புருஷர்களோ அப்படிப்பிறப்பதில்லை. இதற்கு சாட்சியே வள்ளலார். சாதுவின் வார்த்தைகள் காதில் விழுந்த கணமே அவரின் உயிர்த்துளி அம்மையாரின் கர்ப்பத்தில் குடிகொண்டது எனலாம். பிறக்கும்போது ஞாநியாகப்பிறக்கும் அவதாரபுருஷர்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்கவேண்டும் என்ற நியதிக்குட்பட்டே பிறந்தாலும் அவர்களின் அவதார மகிமையை அவர்களால் மறைக்கவே முடியாது.

எட்டுமாதங்களில் ஆண்குழந்தையும் பிறந்தது. சிலர் பூரணமாய்ப் பத்துமாதங்கள் ஆனதுமே பிறப்பு நேர்ந்தது என்றும் சொல்கின்றனர். எப்படி ஆனாலும் பிறந்த குழந்தைக்கு "ராமலிங்கம்" என்ற பெயரைச் சூட்டிப் பெற்றோர் மிக்க அன்புடனும், கவனத்துடனும், பாசத்துடனும் வளர்த்துவந்தனர். குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனபோது முதன்முதல் அருகிலிருந்த சிதம்பரம் கோயிலுக்குக் குழந்தையை எடுத்துவந்தனர் பெற்றோர். கோயிலில் மூலஸ்தானத்தில் தீப ஆராதனை காட்டப் பட்டது. தீப ஆராதனையைப் பார்த்த குழந்தை வாய்விட்டுக் கடகடவெனச் சிரித்தது. அனைவரும் குழந்தை தீபஒளியைப் பார்த்து அதிசயித்துச் சிரித்தது என எண்ணினார்கள். ஆனால் வள்ளலாராக பின்னால் அறியப்போகும் ராமலிங்கமோ, தீப ஜோதியைக் கண்டதுமே தன்னுள்ளே உள்ள உள் ஜோதியையும் அறிந்து கொண்டார் என்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். இந்த உணர்வை வள்ளலார் பின் நாட்களில் தம்மால் இயற்றப் பட்ட பாடல்களில் சொல்லி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

குழந்தையின் ஆரவாரமான சிரிப்பில் மகிழ்ந்த உற்றாரும், உறவினரும், பெற்றோரும் மனமகிழ்வோடு இருந்தார்கள். ஆனால் அந்த மகிழ்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைக்கு எட்டுமாதம் நிறைவதற்குள்ளேயே ராமையா பிள்ளை இறந்துவிட்டார். குழந்தைக்குத் தந்தையின் முகம் நினைவில் வந்து புரிந்துகொள்ளும் முன்னரே இறந்து போனது அனைவருக்கும் மிகவும் துயரத்தைத் தந்தது. தாயார் சின்னம்மை மனம் உடைந்து போனார். என்ன செய்வது எனப் புரியவில்லை. இனி குடும்பம் நடப்பது எவ்வாறு? யோசித்து யோசித்து மனம் கலங்கினார். பின்னர் மருதூரை விட்டு வேறு இடங்களுக்குத் தான் செல்லவேண்டும் என நினைத்து மருதூரிலிருந்து கிளம்பி செங்கல்பட்டில் அவர் தாயாரின் ஊரான சின்னகாவனம் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே இருந்த தன் தாயின் உறவினர்களின் துணையோடு வாழ்க்கையை நடத்த முடிவு செய்தார். ஏற்கெனவே வள்ளலாருக்கு முன்னால் அம்மையாருக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. அவர்களில் மூத்த பிள்ளைக்கு வயதானதும் குடும்பப் பொறுப்பை ஏற்க முன்வந்தார். அவர் குடும்பம் நடத்தச் சென்னை நகரமே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார். அவரோடு மொத்தக் குடும்பமும் சென்னைக்குக் குடியேறியது.

Thursday, March 17, 2011

திருப்புகழைப் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகள்!

ஸ்வாமிகள் பாடும் திருப்புகழ்ப்பாடல்களைக் கேட்கக் கூட்டம் கூடியது. திருப்புகழ் ஸ்வாமிகள் என்ற பெயரிலும் அழைக்க ஆரம்பித்தனர் மக்கள். பழநியில் இருந்து பொதிகைமலை, பாபநாசம், திருக்குற்றாலம் போன்ற இடங்களுக்குத் தல யாத்திரை சென்றார் ஸ்வாமிகள். அங்கே பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பல ஞாநிகளும் சித்தர்களும் அடங்குவார்கள். அவர்களின் ஆசிகளோடு அல்லாமல் சித்துக்களும் கைவரப் பெற்றார் ஸ்ரீஸ்வாமிகள். தன்னை நம்பி வந்து வேண்டுவோர்க்குத் திருநீறு பூசுவார். மூலிகைகள் மூலம் மருந்துகள் கொடுத்துவந்தார். பலருக்கும் நோய்கள் குணமடைய மக்கள் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அவரைத் தேடி வந்தனர். திருச்செந்தூர், மருதமலை, ராமேஸ்வரம், கதிர்காமம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று முருகனைத் தரிசித்துவந்தார். நாளுக்கு நாள் துறவு மேற்கொள்ளும் ஆசை அதிகரித்துவந்தது. ஆனால் வழிதான் தெரியவில்லை. அப்போது ஓர் அன்பர் திருவண்ணாமலைக்குச் சென்றால் வழிபிறக்கும் என்று சொல்ல, உடனே திருவண்ணாமலைக்குப் பயணம் ஆனார் ஸ்ரீஸ்வாமிகள். சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீரமணர் போன்ற மகான்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரவேற்ற திருவண்ணாமலை வள்ளிமலை ஸ்வாமிகளையும் வரவேற்றது.



வள்ளிமலை ஸ்வாமிகள் சென்றதும் வேறு யாரிடமும் அல்லை. பகவான் ஸ்ரீரமணரிடமே சென்றுவிட்டார். அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்துவிட்டு வந்திருப்பதாயும் துறவுக்கான தீக்ஷை வேண்டி வந்திருப்பதாயும் வேண்டுகோள் விடுத்தார். ஸ்ரீரமணர் முன்னிலையில் முருகனின் திருப்புகழ்ப்பாடல்களைப் பாடிவந்தார். நாட்கள் கழிந்தன. ஆனால் துறவு கிடைக்கவில்லை. அங்கிருந்து மீண்டும் திருத்தலயாத்திரை செல்ல எண்ணி ஸ்ரீரமணரிடம் உத்தரவு பெற்று யாத்திரை தொடங்கினார். இம்முறை சென்னைக்கு வந்து கந்தகோட்டத்து முருகனைத் தரிசித்து திருத்தணிக்கும் சென்றார். அங்கே ஒரு அன்பர் மூலம் திருப்புகழின் மற்றொரு பாகமும் கிடைக்கவே மனமகிழ்வோடு மீண்டும் பழநிக்கே சென்றார். பழநியில் இருக்கும்போதே பர்மாவில் இருந்த தன் ஒரே மகனை வரவழைத்துத் தன் மனைவியான நஞ்சம்மாவை அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் வடநாடு சென்று அங்கே இமயாலயத்தில் தவம் செய்யும் யோகிகளைத் தரிசித்தார். அவர்களில் ஒரு யோகி மூலம் தீக்ஷை பெற்று, “சச்சிதாநந்த ஸ்வாமிகள்” என்ற தீக்ஷா நாமத்துடன் துறவு பூண்டார். ஸ்வாமிகள் வடநாட்டுத் தல யாத்திரை மேற்கொண்டபோதே முருகன் அருள் அவருக்குக் கிடைத்திருப்பதை உறுதி செய்யும் வண்ணமாக அவர் பசியுடன் இருக்கும்போது சில குரங்குகள் மூலம் உணவும், இருட்டில் வழிதெரியாமல் தவித்தபோது தீப்பந்தங்கள் துணையாக வந்தும் , முருகன் அருளைப் பூரணமாக அவருக்கு உணர்த்தின.



மீண்டும் ரமணரைத் தரிசிக்க எண்ணித் திருவண்ணாமலை சென்றார். அங்கே ரமணரோ அவரைக் கண்டு ஒருநாள், “போ, போ, இங்கே நிற்காதே, கீழே போ” என்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

குருவின் ஆணைப்படியே வள்ளிமலை வந்தடைந்தார் ஸ்ரீஸ்வாமிகள். வள்ளிமலையில் தவம் செய்யலானார். அதன் பின்னர் அவர் பெயர் திருப்புகழ் ஸ்வாமிகள் என்பதில் இருந்து வள்ளிமலை ஸ்வாமிகள் என ஆனது. . சென்னையிலும் சில காலம் தங்கினார் ஸ்ரீஸ்வாமிகள். அவர் சென்னையில் இருந்த சமயம் அவருடைய சீடர்கள் சிலர் அப்போதைய ஆங்கில அரசில் பணி புரிந்து வந்தனர். அந்தச் சமயம் டிசம்பர் 31-ம் தேதி, மறுநாள் ஜனவரி ஒன்றாம் தேதி. தங்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லவேண்டும் என ஸ்வாமிகளிடம் தெரிவித்துவிட்டு அந்தச் சீடர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றுவிட்டனர். மனம் நொந்துபோனார் வள்ளிமலை ஸ்வாமிகள். அழியாத பெருவாழ்வைத் தரும் ஆறுமுகன் இருக்க ஆங்கிலேயரைத் தேடிப் போகின்றனரே? அதுவும் நம் வழக்கம் இல்லாத ஒரு நாளைக் கொண்டாட என ஸ்வாமிகள் மிகவும் வருந்தினார். அதுவும் முருகப்பெருமான் விரும்பி மணந்த வள்ளியை நேரிலே தரிசிக்கும் பேறு பெற்றவர் எனவும் சொல்வதுண்டு . . ஆனாலும் உலகத்துக்கே அதிகாரியான முருகனை விட்டுவிட்டு, அவன் புகழ் பாடும் திருப்புகழை விட்டுவிட்டு, நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரைப் பார்த்து அவர்கள் காலில் விழுவதா?



வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கர் சொன்னாலும் ஊனும் உருகும், உள்ளம் குழையும், உன்மத்தம் ஆகுமே எனச் சொன்ன வள்ளிமலை ஸ்வாமிகள், திருத்தணியில் திருப்புகழைப் பாடிக் கொண்டே படிகளில் ஏறி மேலே செல்ல ஆரம்பித்தார். இது ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு 1918. திருத்தணியில் 365 படிக்கட்டுகள். ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கும் இந்தப் படிக்கட்டுகளில் திருப்புகழைப் பாடிக் கொண்டே பாராயணம் செய்து கொண்டே ஏறி திருத்தணி முருகனைத் தரிசிப்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகச் செய்தார். இவரால் தொடங்கப் பட்ட இந்தப் படி உற்சவம் பின்னர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீமஹாஸ்வாமிகளால் திருப்புகழ் மணி என்ற பட்டம் சூட்டப் பட்ட டி.எம். கிருஷ்ணஸ்வாமி அவர்களால் தொடரப் பட்டு பிரபலமாக்கப் பட்டு இன்றளவும் நடக்கிறது. பின்னர் இந்தப் படி உற்சவம் கண்ணனுக்கும், கந்தனுக்கும் வித்தியாசம் பார்க்காமல் பழநி, குன்றத்தூர், திருச்சி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், ஸ்வாமிமலை, பெரும்பேறு, மயிலம், போன்ற இடங்களையும் சோளிங்கபுரத்தையும் தழுவிக் கொண்டு நடக்க ஆரம்பித்தது.



பின்னர் மீண்டும் வள்ளிமலை வந்தார் ஸ்வாமிகள். வள்ளிமலையில் இருந்த ஆலயம் மற்றும் மலைப்பகுதிகளைச் சீரமைத்துத் தமக்கு ஆஸ்ரமமும் அமைத்துக் கொண்டார். திருப்புகழின் பெருமையைப் பரப்பினார். நாடி வரும் அன்பர்களுக்குத் திருநீறு அளித்தும், திருப்புகழ் மந்திரம் ஓதியும் நோய் தீர்த்துவந்தார். ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தருவார் ஸ்ரீஸ்வாமிகள். தன்னிடம் வரமுடியாமல் தவிக்கும் அன்பர்களின் இருப்பிடம் சென்று அவர்களின் நோயைத் தீர்த்தும், ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காத்தும் வந்தார்.

வள்ளிமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குப் படிக்கட்டுகள் செல்கின்றன. படிகளில் இடப்புறமாய் விநாயகரும் அருணகிரிநாதரும் அருள் பாலிக்க, படிகள் அழகாய்ச் சரியான அளவுகளில் ஏற வசதியாய் இருக்கும் என்று சொல்கின்றனர். படிகளின் பாதி தூரத்தில் தெரியும் எட்டுக்கால் மண்டபம் படிகள் திருப்பணி செய்தபோது மண்டபத்தைத் திருப்பணி செய்ய யத்தனித்தார்களாம். ஆனால் அங்கிருந்து திடீரெனப் புகை வந்ததாயும், ஒருவேளை சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் இடமாய் இருக்கலாம் என்பதால் அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். மலைக்கோயிலின் சுற்றுச் சுவர் கோட்டை போன்ற அமைப்பில் இருக்கிறது. கொடிமரம் நீண்டு உயர்ந்து காணப்படுகிறது. வேலுக்கும், மயிலுக்கும் தனி சந்நிதியைத் தாண்டி உள்ளே செல்லவேண்டும். குடைவரைக் கோயில். ஒரே பாறையில் குடையப் பட்டுள்ளது, அங்கே வள்ளியை மணந்து கொண்ட இடத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான் விநாயகர் துணையோடு காட்சி அளிக்கின்றார்.



கோயிலினுள் தெரியும் துவாரம் வழியாக வள்ளியை முருகன் திருத்தணி அழைத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர். கோயிலை விட்டு வெளியே வந்தால் இடப்புறம் தனியே தெரியும் பாதையில், பாறைகளையே படிகளாய்ச் செதுக்கி இருக்கும். அந்தக் கரடுமுரடான பாதையில் நடந்தால் சச்சிதாநந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தை அடையலாம். முகப்பில் பொங்கியம்மன் சந்நிதி உள்ளது. ஸ்ரீ ஸ்வாமிகள் 1950-ம் வருஷம் நவம்பர் மாதம் 21-ம் தேதி மஹாசமாதி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது பூதவுடல் சென்னையிலிருந்து வள்ளிமலைக்கு எடுத்துவரப்பட்டு அவர் தவம் செய்த குகையிலேயே சமாதியில் வைக்கப் பட்டது. அந்தக் குகையில் தற்சமயம் ஸ்வாமிகளின் சமாதியின் மேலே வேல் மற்றும் சிலை வடிவிலான தக்ஷிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதன் எதிரே திருப்புகழை நமக்குத் தந்த அருணகிரிநாதரும் காட்சி கொடுக்கிறார். வள்ளி வாழ்ந்த இந்த இடத்தில் ஸ்ரீஸ்வாமிகளுக்கு முருகன் வள்ளியோடு பல முறை காட்சி தந்திருக்கின்றார். அதுபோல் அங்கே செல்லும் அன்பர்களுக்கும் அங்கே சென்றதும் மனதில் அமைதியும் மகிழ்வும் பொங்க முருகனும், வள்ளியும் அருள் செய்வார்கள்.


வெற்றி வடிவேலனுக்கு அரோகரா!

திருப்புகழைப் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகள்!

முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா? திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப் பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த இம்மஹான் தமது ஞானத்திலும் சித்தி அடைந்தார். திருப்புகழைப் பரப்புவதிலும் சித்தி அடைந்தார். இவரின் சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில் தான். சச்சிதாநந்த ஸ்வாமிகளின் தவ வாழ்க்கை சிறப்புப் பெற்றதும் வள்ளிமலையாலே தான். இந்த வள்ளி மலை வேலூரில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது. வேலூரில் இருந்து 23 கிமீட்டர் தூரம் இருக்கலாம். இந்த வள்ளி மலைக்குச் சென்னையிலிருந்து செல்ல காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். சோளிங்கர்-திருத்தணி சாலையில் சென்றால் சுற்றிலும் பச்சைப் பசேல் என வயல்கள் ஒருகாலத்தில் இருந்த இடத்தில் வழியெங்கும் சிறு சிறு குன்றுகள். அத்தகையதொரு குன்றுதான் வள்ளிமலை.



வள்ளி இங்கே தான் தினைப்புனம் காத்து வந்ததாகவும், அப்போது தான் முருகன் கிழவர் உருவில் வந்து வள்ளியிடம் தேனும், தினைமாவும் பெற்றுச் சாப்பிட்டதாகவும், அப்போது தாகம் எடுத்த முருகனுக்கு வள்ளி சுனையிலிருந்து நீர் அருந்தக் கொடுத்தாள். அந்தச் சுனை இங்கே இருப்பதாகவும் சொல்கின்றனர். கடைசியில் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டதும் இங்கே தான் என்றும் அங்கே உள்ள ஒரு சுரங்கப் பாதை வழியே தான் முருகன் வள்ளியைத் திருத்தணி அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். இப்படி வள்ளியையும், முருகப் பெருமானையும் சம்பந்தப் படுத்திப் பல இடங்களை இங்கே காட்டுகின்றனர். அவர்களை நினைவுறுத்தும் சம்பவங்களைத் தாங்கிய இடங்களே இங்கே காணமுடிகின்றன. இப்படி முருகன் புகழைப் பேசும் ஓர் இடத்தைத் தேடி வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார் வள்ளிமலை ஸ்வாமிகள். அவர் யார் என்றும் எங்கிருந்து வந்தார் என்றும் காண்போமா?



கோயம்புத்தூருக்கு அருகே ஒரு கிராமம். பூநாச்சிபுதூர் என அழைக்கப் படும் அந்தக் கிராமத்தில் சிதம்பர ஐயர் என்பவர் வசித்து வந்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்த பண்டிதர் ஆன அவர் முதல் மனைவி இறந்துவிட மகாலக்ஷ்மி என்னும் உறவுப் பெண்ணை இரண்டாம் முறையாக மணம் செய்து கொண்டார். இருவருக்கும் பல வருஷங்கள் குழந்தை பாக்கியமே இல்லை. மகாலக்ஷ்மிக்கு அதீத இறை பக்தி உண்டு. ஒருநாள் பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவதைக் கண்ட மகாலக்ஷ்மி பயந்து போய் அருகில் உள்ள திருச்செங்கோடுக்கு (அதற்கு நாககிரி என்ற பெயரும் உண்டு) வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்வதாக வேண்டிக் கொண்டாள். பாம்பு மறைந்தது. திருச்செங்கோடு அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பட்ட தலமாகும். தனது வேண்டுதலை நிறைவேற்றினாள் மகாலக்ஷ்மி. பனிரண்டு அமாவாசைகள் தொடர்ந்து திருச்செங்கோடு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட அதன் பலனாக ஒரு பெண்குழந்தை பிறக்க நாகம்மாள் என்ற பெயரிட்டார். ஆண்குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆன ஈசன் பெயரையே அர்த்த நாரி என வைத்தார். அர்த்தநாரிக்கு ஐந்து வயதாகும்போது தந்தை சிதம்பர ஐயர் இறந்துவிட்டார். திகைத்த மகாலக்ஷ்மி தன் தமையன் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அர்த்தநாரிக்கு மாமன் வீட்டிலேயே உபநயனமும் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். ஆனால் படிப்பே வரவில்லை. ஆகவே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான் அர்த்த நாரி. பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று அற்புதமாகப் பாடி ஆடி நடித்தான்.



மாமன் தன் மகளையே திருமணமும் செய்து வைத்திருந்தார். பிழைப்புக்காக மைசூர் சென்று அரண்மனையில் வேலை பார்த்தார் அர்த்தநாரி. அரண்மனையில் சமையல் வேலை பார்த்த அர்த்தநாரிக்கு அங்கேயே கூட வேலைசெய்த நஞ்சம்மா இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப் பட்டாள். முதல் மனைவி தன் மாமியாருடன் பூநாச்சிபுதூரில் வசித்துவந்தார். அவரின் குழந்தைகள் ஒவ்வொன்றாக இறக்க அதே ஏக்கத்தில் மகாலக்ஷ்மியும் இறந்தார். இரண்டாம் மனைவியான நஞ்சம்மாவின் குழந்தைகளும் இறக்க கடைசியாகப் பிறந்த நரசிம்மன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் இருந்தான். வாழ்க்கை மீது வெறுப்புக் கொண்ட அர்த்தநாரி தற்கொலை செய்துகொள்ள எண்ணினார். அடிக்கடி ஏற்பட்ட வயிற்று நோவும் அவரை வருத்தி வந்தது. அதுவரையிலும் இறை உணர்வோ, பக்தியோ சிறிதும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வந்த அவருக்கு இப்போது அடிக்கடி இறை உணர்வும், சிந்தனைகளும், உயிர் பற்றிய தத்துவங்களும் வலம் வர ஆரம்பித்தன. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் என அனைவரும் சொன்னதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார் அர்த்தநாரி.



அங்கே வந்ததுமே தன் மனம், உடல் இரண்டுமே புத்துணர்ச்சி அடைந்ததை உணர்ந்தார் அர்த்தநாரி. வயிற்று வலியும் படிப்படியாய்க்குறைந்தது. அர்த்தநாரிக்கு சந்நியாசி ஆகவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஆனால் மனைவி, குழந்தையுடன் குடும்பஸ்தர் ஆன அவருக்கு சந்நியாசம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. வெறுப்படைந்த அர்த்தநாரி சொந்த ஊரான பூநாச்சிபுதூர் சென்று எஞ்சி இருந்த சொத்துக்களை எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் எதுவும் வைத்துக் கொள்ளாமல் பழநிக்குத் திரும்பினார். அன்ன ஆகாரம் எதுவுமில்லாமல் ப்ரசாதமாய்க் கிடைத்த பாலையும், பழத்தையுமே உண்டு வந்தார். எப்போதும் கோயிலில் பூஜை, தியானம் செய்வது என ஆலய மண்டபத்திலேயே தங்கி இருந்தார். மைசூரிலிருந்து வந்ததால் இவரை மைசூர் ஸ்வாமிகள் என அங்கே வரும் மக்கல் அழைக்க ஆரம்பித்தனர்.



ஆலயப் பணிகளில் உதவி வந்தார். மக்களைத் தரிசனத்துக்குச் செல்ல ஒழுங்கு செய்வார். அதிகாலையில் எழுந்து நதியில் குளித்துக் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் செய்வார். கோயிலுக்கு வரும் அன்பர்கள் பாடும் திருப்புகழ் பாடலைக் கேட்டுக் கேட்டு அதில் ஈடுபாடு பிறந்தது. திருப்புகழ்ப் பாடல்களில் தன்னை மறந்தார். அதற்காக மீண்டும் படிக்க ஆரம்பித்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு திருப்புகழை மனப்பாடம் செய்தார். தினமும் தான் கற்ற திருப்புகழை முருகன் சந்நிதியில் பாட ஆரம்பித்தார். நல்ல குரல்வளம் நிரம்பிய அவரால் பாடப் பட்ட திருப்புகழ் பெருமை அடைந்ததா? அல்லது ஸ்வாமிகளுக்குப் பெருமையா? சொல்வது கடினமே.

Tuesday, March 15, 2011

சொல்லடி அபிராமி! அபிராமி பட்டர்!

இங்கே பட்டருக்கு மன்னன் சென்றதுமே தாம் செய்த பெருந்தவறு புரிந்தது. ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர், உடனேயே அன்னையின் அருளால் மனம் தெளிவுற்று, இதுவும் ஒரு நன்மைக்கே எனத் தெளிந்து அன்னையின் அருளைத் துதித்துப் பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் அநுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அருவி போலப் பொழியலாயிற்று. அங்கே கண் விழித்து எழுந்த மன்னருக்கு அபிராமி பட்டர் பெரும் ஞாநி என்பது புலப்பட்டது. உடனேயே பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் அளித்தார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை.



மேற்சொன்ன நிகழ்வைச் சிலர் வேறு விதமாயும் கூறுகின்றனர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாய்க் கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னதாய்ச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்னியை மூட்டி அதற்கு மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, “அம்பிகை எனக்குக் காக்ஷி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாடியதாகவும் கூறுவார்கள். “உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்” என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், “விழிக்கே அருளுண்டு “ என்ற 79-வது பாடலின் போது மயங்கும் மாலைப் பொழுதில் அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் காக்ஷி கொடுத்துத் தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் சொல்லுவார்கள். எங்கனமாயினும் பட்டரின் பக்தியும், பெருமையும் சற்றும் குறைந்தது அல்ல. அதே போல் மன்னன் எவ்வாறோ அன்னையின் அருளைப் பூரணமாய் உணர்ந்திருந்தான் என்பதும் உண்மையே.






அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேராநந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆநந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னை” என்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.



“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே! அபிராமி அந்தாதி பாடல் 79



கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை

ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா

ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”

Monday, March 14, 2011

சொல்லடி அபிராமி! அபிராமி பட்டர்:

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்க ஐயரவர்கள். இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின் பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள். தம் உள்ளத்தே அன்னையின் பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார்.



யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படைப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமலும், சற்றும் லக்ஷியம் செய்யாமலுமே அபிராமியைத் துதிப்பதும், அவள் பால் துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.



அப்படி இருக்கையில் ஒரு நாள் தஞ்சையின் அரசன் ஆன ராஜா சரபோஜி தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடி, திருக்கடவூருக்குத் தரிசனம் செய்ய வந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேராநந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனால் சுற்றி இருப்பவர்களோ தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டனர். மன்னர் வந்திருப்பதும் அறியாமல், மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே என நினைத்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், “இவர் ஒரு பைத்தியம். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுகிறார்.” என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம், “ இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?” என்று கேட்டார்.



அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ, “ ஆஹா, இன்று பெளர்ணமி அல்லவோ?” என்று சொல்லிவிட்டார். சுற்றிலும் இருந்தவர்களில் சிலர் கைகொட்டிச் சிரிக்காத குறையாய் அவரை ஏளனத்துடன் பார்க்க, மன்னர் சுற்றிலும் இருந்தவர்கள் கூறியது உண்மையே என நினைத்த வண்ணம் பட்டரை மதிக்காமல் அலக்ஷியத்துடன் சென்று விட்டார். சென்றாரே தவிர மன்னனுக்கு அவருடைய தோற்றமே கண்ணெதிரே வந்தது. திரும்பத் திரும்ப அன்று பெளர்ணமி என பட்டர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னை அறியாமல் கண்ணயர, கர்ப்பகிருஹத்து அபிராமி அவர் கண்ணெதிரே தோன்றினாள். “இதோ பார், “ என்று சொல்லிக் கொண்டே தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். “ஆஹா, இது பூரண நிலவு அன்றோ! முழுமதி சுடர் விடுகின்றது பாருங்கள்,” என சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தான். கனவா? நனவா??? மன்னர் உடல் எல்லாம் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

முருகன் வந்து அருள் செய்த பாம்பன் ஸ்வாமிகள்!

இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைத் தவிர பாம்பன் ஸ்வாமிகள் எழுதிய மற்றப் பாடல்கள் வருமாறு: பரிபூரணாநந்த போதம், சிவசூரிய பிரகாசம், சுத்தாத்வைத நிர்ணயம், தகராலய ரகசியம், சதாநந்த சாகர, சிவஞான தீபம், காசி யாத்திரை, சேந்தன் செந்தமிழ், அமைதி ஐம்பது, திருப்பா, ஸ்ரீமத் குமாரசுவாமியம், குமாரஸ்தவம், திவோத்ய ஷடக்ஷரோப தேசம் என்னும் சிவஞான தேசிகம் என உள்ளன. ஸ்வாமிகள் செய்த யாத்திரைகளும் கணக்கில் அடங்காதது. ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை, திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம், என்று சென்ற ஸ்வாமிகள் பழநி முருகனின் உத்தரவு கிடைக்காததால் பழநி சென்றதில்லை என்றும் சொல்லுகின்றனர். தருமமிகு சென்னைக்கும் வந்து தன் திருவருளைக் காட்டி இருக்கிறார் பாம்பன் ஸ்வாமிகள். அவ்வாறு ஒருமுறை சென்னை வந்திருந்த ஸ்வாமிகள், சென்னை பாரிமுனையில் தம்புச்செட்டித் தெருவில் நடந்து சென்ரு கொண்டிருந்தார். அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு குதிரை வண்டி ஸ்வாமிகளின் காலில் ஏறியது. எலும்பு முறிந்து மயங்கிச் சரிந்த ஸ்வாமிகள் பக்தர்களால் அரசு பொது மருத்துவமனையில் அநுமதிக்கப் பட்டார். இது நடந்தது 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்று சொல்லுகின்றனர்.



மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட ஸ்வாமிகளைக் காண பக்தர்கள் கூட்டம் திரண்டது. அனைவரும் மனம் பதறினார்கள். ஸ்வாமிகள் விரைவில் நலம்பெறவேண்டி ஸ்வாமிகளின் சீடர்களில் ஒருவரான சின்னசாமி ஜோதிடர் என்பவர் தன் வீட்டிலேயே சண்முக கவசம் பாராயணம் பண்ண ஆரம்பித்தார். தினமும் இது தொடர்ந்தது. அப்போது ஜோசியருக்கு ஒருநாள் பாராயணம் செய்யும்போதே ஸ்வாமிகளின் திருவுருவும், அவரின் முறிந்த காலை இருவேல்கள் தாங்கிப் பிடித்த வண்ணம் காக்ஷி அளிப்பதும் தெரிந்தது. கண்ணால் இந்தக் காக்ஷியைக் கண்ட ஜோசியர் ஆநந்தத்தில் துள்ளிக் குதித்தார். அன்று மட்டுமில்லாமல் தினமும் அவர் பாராயணம் செய்யும்போதெல்லாம் அந்தக் காக்ஷி தோன்றி மறைந்தது. மருத்துவமனையில் ஸ்வாமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உணவில் உப்பு, புளி, காரம் போன்றவை இல்லாமையாலும், உண்ணும் உணவின் அளவும் வெகுவாய்க் குறைவாய் உள்ளதாலும் முறிந்த கால் சேரும் அளவுக்கான வலுவான உடல் நிலை இல்லை, என்று சொல்லி விடவே அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது ஒருநாள் மருத்துவ மனையில் சேர்ந்து பதினோராம் நாளன்று இரவில் பாம்பன் ஸ்வாமிகளுக்கு ஓர் அற்புதக் காக்ஷி கண்களில் தெரிந்தது. இரண்டு மயில்கள் அதி அற்புத நடனத்தை ஆடிக் கொண்டே ஆகாயத்தில் துள்ளி விளையாடின. ஒன்று பெரியதாகவும், மற்றது சின்னதாகவும் இருந்தது. அவற்றின் கால்கள் தரையில் படாமல் ஆகாயத்திலேயே அதி அற்புதமான நாட்டியத்தை ஆடின அவ்விரு மயில்களும். முருகனின் திருவருளை எண்ணி வியந்த ஸ்வாமிகள் இரு கரம் குவித்து வணங்கிய வண்ணமே இருந்தார். அடுத்த சில நாட்களில் முருகன் ஒரு குழந்தை வடிவில் அவருக்குக் காக்ஷி கொடுத்தான்.



படுக்கையில் இருந்த ஸ்வாமிகள் செக்கச் செவேல் எனச் சிவந்த நிறத்துடன் கூடிய ஒரு குழந்தை சிரித்த முகத்தோடு வந்து தன்னைக் கண்டு சிரிப்பதைக் கண்டார். அது முருகன் தான் என்பதும் புரிந்தது அவருக்கு. சில விநாடிகளில் குழந்தை மறைந்தது. ஆனாலும் மயில்களின் ஆட்டத்தின் மூலமும், குழந்தை வடிவில் காக்ஷி கொடுத்ததின் மூலமும், முருகன் தன்னுடன் இருப்பதை உணர்த்துவதாகவே புரிந்து கொண்டார் பாம்பன் ஸ்வாமிகள். சில நாட்களில் கணுக்கால் எலும்பு முறிவும் சேர்ந்து கூடிவரவே மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தம் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தைச் சென்னையிலேயே கழித்தார் ஸ்வாமிகள். அவரே தன் இறுதிக்காலத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று சொல்லலாம். வைகாசி மாசம் தேய்பிறை சஷ்டியில் அவிட்ட நக்ஷத்திரம் கூடிய வியாழக்கிழமையில் காலை ஏழேகால் மணிக்கு அனைவரும் அறியும் வண்ணம் சுவாசத்தை உள்ளுக்கு இழுத்துக் கொண்டார். உள்ளே இழுத்த மூச்சை வெளியே விடவே இல்லை. உள்ளேயே ஒடுங்கிப் போன மூச்சுடனேயே முருகனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார். இந்தச் சமாதி நிலையை குக சாயுஜ்ய நிலை என்று சொல்லுவார்கள் எனக் கேள்விப் படுகின்றோம்.



பக்தர்களால் இரவு பூராவும் திருப்புகழும், முருகன் குறித்த பல்வேறு பாடல்களும் பாடப் பட்டு மறுநாள் திருவான்மியூரில் ஏற்கெனவே ஸ்வாமிகள் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் சமாதிக் கோயில் அமைக்கப் பட்டது. சமாதியான் அதினத்துக்கு மறுநாள் காலை சமாதியுள் அலங்காரத்துடன் ஸ்வாமிகளை அங்கே எழுந்தருளச் செய்தனர் பக்தர்கள். சமாதிக் கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், சமாதிக்குள்ளாக ஸ்வாமிகளின் திருமுகம் வடக்கே பார்த்து இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அங்கே ஒரு கோமுகம் அமைக்கப் பட்டு வில்வமரமும் வைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் அங்கே இருந்தவாறு தியானம் செய்வது சிறப்பாகச் சொல்லப் படுகிறது. சமாதித் திருக்கோயிலின் உள் தோற்றத்தைத் தரிசிக்க முடியாது என்றும் திருக்கோயிலின் திருக்கதவு மூடியே இருக்கும் என்றும் ஸ்வாமிகளின் திருவுருவப் படம் அங்கு வழிபாட்டில் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். படத்துக்கு மட்டுமே பூஜை, வழிபாடுகள் எனவும் சொல்லுகின்றனர். காரணம் தெரியவில்லை. இன்னும் போகவில்லை இந்தக் கோயிலுக்கு. போனால் ஏதேனும் தகவல்கள் கிட்டலாம்.

Saturday, March 12, 2011

முருகன் வந்து அருள் செய்த பாம்பன் ஸ்வாமிகள்!

குழந்தை அழவில்லை எனக் கண்டு உள்ளே வந்த ஸ்வாமிகள், குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது என மனைவியை வினவ, அந்த அம்மையார், கணவர் சொற்படி முருகனையே தான் பிரார்த்தித்துக் கொண்டு இருந்ததாகவும், ஒளி பொருந்திய உடலோடு கூடிய ஒரு துறவி வந்து குழந்தைக்கு உடல் முழுதும் திருநீறு தடவி விட்டதாகவும், அதன் பின்னர் குழந்தை தூங்கி விட்டதாகவும் சொன்னார். ஸ்வாமிகளுக்கு இது முருகன் திருவிளையாடல் எனப் புரிந்தது. அதற்குப் பின்னர் ஒரு நாள் நண்பர் ஒருவர் பாடிய சிற்றின்ப வண்ணப் பாடலின் ராகமும், தாளமும் ஸ்வாமிகளைக் கவரவே, அந்த ராகத்தையும், தாளத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு முருகன் மேல் பாடிய பாடல்களே “பரிபூதன பஞ்சாமிர்த வண்ணம்” என்னும் பாடல் தொகுப்பு ஆகும். முருகப் பெருமானுக்கும் இந்தப் பாடல்கள் மேல் அளவு கடந்த ஆசை உண்டு. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அநுமன் இருப்பான் என எவ்வாறு ஸ்ரீராமர் சொன்னாரோ அப்படியே முருகனும், இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களில் மயங்கி, “இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எழுந்தருளுவேன்.” என்று கூறியதாகக் குறிப்புகள் சொல்லுகின்றன என்பர் முருகனிடம் பற்றுள்ள ஆன்றோர் பலரும். என்றாலும் இது வெளித் தெரியும்படி நடந்த ஒரு நிகழ்வும் உண்டு.



திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும், ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காக்ஷி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காக்ஷி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். ஆனால் அந்த இளைஞன் இருவரும் அறியும் வண்ணம் எதிரே அமராமல், தூணின் மறைவில் அன்றோ நிற்கின்றான். ஏன்? என்ன அதிசயமிது? அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.



மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர, இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?” என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த அந்தணர்கள் இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் படவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவே. என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.

Thursday, March 10, 2011

முருகன் வந்து அருள் செய்த பாம்பன் ஸ்வாமிகள்!

ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்:-

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வந்த நெல்வியாபாரியான சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமல அம்மையாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பாவு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கி.பி.1850—ம் ஆண்டில் விரோதிகிருது வருடத்தில் வெள்ளிக்கிழமை அன்று பிறந்த அந்தக் குழந்தைக்குத் தமிழும், நீச்சல், ஓவியம், தையல் பயிற்சி எனப் பல்வேறுவிதமான கலைகளும் பயிற்றுவிக்கப் பட்டது. தமிழ் சொல்லிக் கொடுத்த முனியாண்டியா பிள்ளையால் இவரின் தமிழறிவு மிகவும் மேம்பட்டு விளங்கியது. சிறு பிராயத்திலேயே இவர் மிகவும் போற்றத் தகுந்த தெய்வீகமும், ஆன்மீகமும் கலந்த வாழ்க்கையை வாழப் போகின்றார் என்பது ஒரு சோதிடர் மூலம் தெரிய வந்தது. பாம்பனில் அப்பாவு தன் தந்தையாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் நண்பர்களான மற்றச் சிறுவர்களோடு அமர்ந்திருந்த வேளையில் அவர்களைக் கடந்து ஒருவர் சென்றார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை செல்லும் பயணிகள் படகு மூலமே பயணப் பட்டு வந்தனர். அந்தப் படகுகள் இந்தத் தென்னந்தோப்புக்கு அருகே இருந்த படகுத் துறையில் இருந்தே சென்று கொண்டிருந்தன. அவ்விதம் இலங்கை சென்று கொண்டிருந்த ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டிச் சென்றவர் என்ன நினைத்தாரோ, திடீரென நின்றார்.



சிறுவர்களை ஒரு நோட்டம் விட்டார். பின்னர் அந்தக் குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஒரு ஜோதிடர் என்பதை அறிந்த சிறுவர்கள் தங்கள் எதிர்காலத்தை அறிய எண்ணி அவரிடம் தங்கள் கையைக் காட்டினார்கள். அனைவருக்கும் பலன் சொன்ன ஜோதிடர், அப்பாவுவின் கையையும் பார்த்தார். ரேகைகளின் அமைப்பைப் பார்த்து வியந்த ஜோதிடர், அவரின் வாயைத் திறந்து நாக்கையும் காட்டுமாறு கேட்டார். அவ்விதம் அவருடைய நாக்கையும் சோதித்து அறிந்த ஜோதிடர், அவரிடம், “தம்பி, உன் திருவாக்கும் சரி, திருக்கரமும் சரி, அதிசயமான ஒன்றாய் உள்ளது. உன் ஜாதகம் சிறப்பாக உள்ளது. உன்னுடைய அசைவுகளுக்காக எதிர்காலமும், மக்களும் காத்திருக்கின்றனர். சிறப்பாக இருப்பாய்.” என்று ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அவர் சொன்னது புரியாமல் மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த அப்பாவு ஒருநாள் தோப்புக்கு வந்தபோது தந்தை தோப்பினுள் இருப்பதை அறிந்து வெளியே நின்றபோது, திடீரென அவர் மனதில் கந்தனைக்குறித்து, கந்த சஷ்டி கவசத்துக்கு ஈடாகும்படியான பாடல்கள் புனையும் ஆவல் தோன்ற, உடனேயே அவர் கருத்தில், “கங்கையைச் சடையிற் பரித்து” என்னும் சொற்கள் தோன்ற, தன் இடுப்பிலிருந்து ஓலையை எடுத்து இதைத் துவக்கமாக வைத்து முதல் பாடலை எழுதினார். அதன் பின்னர் அவர் எழுதிய பாடல்கள் பலவாகும். அவற்றில் குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக இன்றும் உள்ளன.



1878-ம் ஆண்டு வைகாசி மாதம் இவருக்குக் காளிமுத்தம்மை என்னும் பெண்ணுடன் திருமணமும் நடந்தது. திருமணம் ராமநாதபுரத்தில் நடந்தது. பாம்பனில் மனைவியுடன் வாழ்ந்த இவருக்கு இரு ஆண் மக்களும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஒருவயது ஆகும் முன்னேயே முருகன் இவரை ஆட்கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்பதை மறைமுகமாய் உணர்த்தினான் என்பார்கள். இவரை எந்த விதத்திலும் எதற்கும் கட்டாயப் படுத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தும் இவருடைய மனைவி, அழும் பெண்குழந்தையைச் சமாதானம் செய்யத் திருநீறு பூசும்படி இவரிடம் கேட்க, பாம்பன் ஸ்வாமிகளோ தான் யாருக்கும் திருநீறு தருவதில்லை என்றும், அந்த முருகனிடமே கேட்கும்படியும், அவன் தான் தருவான் என்றும் சொல்லிவிட்டார். செய்வதறியாது அந்த அம்மையார் விடாமல் அழும் குழந்தையை எப்படி எப்படியோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகை நிற்கவே இல்லை. அப்போது திடீரெனக் காவி உடை அணிந்த சந்நியாசி ஒருவர் வீட்டினுள் நுழைந்து, அழும் குழந்தையை வாங்கி உடல் முழுதும் திருநீறு பூசிவிட்டுக் குழந்தை இனிமேல் அழாமல் தூங்கும் என்றும் சொன்னார். பின்னர் அவர் வந்த மாதிரியே மறைந்து போகக் குழந்தை அழுகையை நிறுத்தித் தூங்க ஆரம்பிக்கிறது.


பாம்பன் சுவாமிகள் இன்னும் வருவார்.

Wednesday, March 9, 2011

மீனாக்ஷி பெறாத செல்லக்குழந்தை! சிதம்பரம் ஸ்வாமிகள்!

அங்கு அயற்கும், மாற்கும் அரிய பெருமான் இடம்சேர்

அங்கயற்கண் அம்மைக்கு அணியவே- அம் கயத்தின்

மாமுகம்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா

நாம் உகந்து பாடுவோம் நன்கு.”


என்று ஆரம்பிக்கும் காப்புச் செய்யுளைத் தொடர்ந்து, அன்னையை,


“சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே, சேயிழையே!

காராரும் மேனிக் கருங்குயிலே! –ஆராயும்

வேதமுதல் ஆகி நின்ர மெய்ப்பொருளே! மின் ஒளியே

ஆதிபராபரையே!அம்பிகையே! –சோதியே!”


என்றெல்லாம் சொல்லுபவர், பின்னர் தொடரும் பாடல்களில் அன்னையை ஆளும் அரசியாகவும், உலகில் உள்ள குலங்கள் அனைத்திலும் உதிக்கின்றவள் என்ற பொருளிலும், “அம்படைச்சி, ஆண்டிச்சி, இடைச்சி, ஒட்டச்சி, சடைச்சி, செட்டிச்சி, சேணிச்சி, வலைச்சி, வேடிச்சி, என்றெல்லாம் இருபொருள் தோன்றப் பாடி வாழ்த்துகின்றார்.


"அன்ன நடைச்சி, அருமறைச்சி, ஆண்டிச்சி

கன்னல் மொழிச்சி, கருணைச்சி- பன்னுதமிழ்


வாய்ச்சி, சடைச்சி, வடிவுடைய மங்கச்சி,

பேய்ச்சி, இளமுலைச்சி, பேதைச்சி - காய்ச்சியபால்

வெண்ணெய் மொழிச்சி, வெளிச்சி, வெளி இடைச்சி

அண்ணுபுரம் தீயிட்ட அம்படைச்சி"

என்றெல்லாம் சொல்லுகின்றார்.



நம்முடைய கண்களின் வெள்ளை விழியைச் சிவமாகவும், கருவிழியை அம்பிகையாகவும் கொள்வோர் ஆன்மீகத்தில் திளைக்கும் அறிவு சார்ந்த பெருமக்கள் பலரும். அந்த நமது விழிமணியாக விளங்கும், அம்பிகையைப் போற்றி, அவள் நம்மை எமது ஆட்சியைப் புறத்தில் மட்டும் பாராதே, அகத்திலும் உள்முகமாகிப் பார்த்து என் அகமுக ஆட்சியை அறிவாய் என்று சொல்வதாக இந்தப் பாடல் தொகுப்பின் பொதுக்கருத்துச் சொல்லுகின்றது. மேற்கொண்டு விளக்கங்கள் யோகமுறையை நன்கு கற்று அறிந்தவர்களாலேயே சொல்லவும் அறியவும் முடியும் என்பார்கள். ஆடும் தில்லைக் கூத்தனுடன் தானும் சேர்ந்து தாளம் தப்பாமல் ஆடும் அம்பிகை விழிப்பு நிலையில் நம் கண் முன்னேயும், நம் சொப்பனத்தில் ஜோதிவடிவாகவும், தோன்றுகின்றாள் என்பதைப் புரிந்து கொண்டோமானால் நம் சுழுமுனையில் அவள் ஈசனுடன் ஐக்கியமாகி, நமக்கு உறவாகிச் சுகத்தைத் தருகின்றாள் என்பதையும் அறியலாம். இவரின் இந்தப் பாடல்களில் மகிழ்ந்த அன்னையவள் அவருக்குக் காக்ஷி கொடுத்து, வடக்கே யுத்தபுரி என்னும் ஊருக்குச் சென்று தன் மகன் ஆகிய குமாரன் கந்தவேளின் திருமேனியை அங்கே வழிபாட்டுக்கு உரியதாக்கி, ஏற்கெனவே இருந்த பழைய கோவிலைக் கண்டு பிடித்துப் புனர் நிர்மாணம் செய்து வழிபாட்டுக்கு உகந்ததாய் ஆக்குமாறும் சொல்லுகின்றாள்.



அன்னையின் ஆணையைச் சிரமேற்கொண்ட சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டுக்கிளம்பும்போது தான் அன்னையே மயிலாகக் காக்ஷி கொடுத்துத் தன்னை மதுரைக்கு அழைத்தது இந்தக் கோயில் வேலைக்காகவே என்பதைப் புரிந்து கொள்கின்றார். யுத்தபுரி எது என்பதை விசாரித்துக் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள போரூரே அது என்பதையும் அறிந்து கொண்ட ஸ்வாமிகள் அங்கே வந்து சேர்கின்றார். வரும் வழியிலேயே விருத்தாசலத்தில் குருநாதர் ஆன குமாரதேவர் முக்தி அடையப் போவதை அறிந்து அங்கே சென்று அவரை வணங்கிக் குருவருள் பெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர் கிளியனூரில் ஞானம்மை என்னும் பெண்மணிக்கு அருளாசி வழங்கி, பொம்ம பாளையம் என்னும் ஊரில் சிவஞானபாலைய சுவாமிகளோடு ஏழுநாட்கள் இரவு, பகல் பாராமல் விவாதம் மேற்கொண்டு பின்னர் திருப்போரூரை வந்தடைகின்றார். திருப்போரூரில் முதலி கந்தனின் ஆலயம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிள்ளையார் கோயில் ஒன்றையே ஊர்மக்கள் காட்டினர். பிள்ளையார் கோயிலை ஒட்டிப் பெரிய பனங்காடு இருந்தது. தினமும் பிள்ளையாரை வணங்கி நம்பிக்கையுடன் பனங்காட்டில் கந்தனைத் தேடி அலைந்தார்.



நம்பிக்கை வீண்போகாமல் ஒரு நாள் பெண்பனை மரம் ஒன்றின் அருகே சுயம்புவாக இருந்த கந்தனைக் கண்டார். மூர்த்தம் கிடைத்துவிட்டது. அதைத் தமது குடிலுக்குக் கொண்டு வந்து அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்திவர ஆரம்பித்தார். கூடவே பழைய கோயிலையும் தேடும் பணி தொடர்ந்தது. ஒருநாள் சுவாமிகளின் முக்தி அடைந்த குருநாதர் அவர் முன் தோன்ற சுவாமிகளுக்கு ஆச்சரியம். மகிழ்வோடு குருவை வணங்க, கோயிலைக் காட்டவே வந்ததாய்த் தெரிவிக்கின்றார் குருநாதராக வந்த சற்குருநாதன் முருகப் பிரான். சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் அவர் பூசிய திருநீற்றின் மகிமையால் கோயிலின் முழு வடிவும் அவர் கண்களில் தெரிஅவந்தது. மனநிறைவுடன் குருநாதருக்கு நன்றி சொல்லத் திரும்பிய சுவாமிகள் குருநாதனாக வந்த சுவாமிநாதன் திரும்பக் குடிலுக்குச் சென்று மூர்த்தத்துக்குள் மறைவதைக் கண்டார். திகைத்த சுவாமிகளின் ஈசனின் திருவிளையாடலை நினைத்து வியந்த வண்ணம், பல்லவர்கள் காலத்தில் கட்டுவிக்கப் பட்ட கோயிலைக் கண்டெடுத்துப் புனர் நிர்மாணம் செய்யத் துவங்கினார். சுவாமிகள் கையால் திருநீறு கொடுத்தால் தீராத பிணிகளும், குடும்பப் பிரச்னைகளும் தீரவே அனைவரும் சுவாமிகளை வணங்கித் திருநீறு பெற்றுக் கொண்டதோடு குமரன் கோயிலுக்குத் தங்களால் இயன்ற பொருளுதவியும் செய்தனர். குடில் நிறையப் பொன்னும், பொருளும் நிரம்பிக் கிடக்கையில் கள்ளர் கூட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்? சுவாமிகள் குடிலில் இருந்தபோதே கள்ளர் கூட்டம் ஒன்று அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கிக் கொள்ளை அடிக்க எண்ணித் தங்கள் கைகளை ஓங்கினார்கள். அவர்களையே பார்த்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தார் சுவாமிகள். ஆனால் கள்ளர்களோ? ஓங்கிய கைகள் ஓங்கிய வண்ணமே இருக்கக் கண் பார்வையையும் பறி கொடுத்தனர். அப்போதுதான் சுவாமிகளின் அருமையும், மகிமையும் புரிந்து மன்னிப்புக் கேட்டதோடு தாங்கள் திருடிய பொருட்கள் அனைத்தையும் கோயில் திருப்பணிக்குக் கொடுத்தார்கள். திருப்பணி முடிந்து ஆலயம் புதுப்பிக்கப் பட்டு, திருப்போரூர் சந்நிதி முறை என்னும் நூலையும் 726 பாடல்களைக் கொண்ட பாராயண நூலாக இயற்றி வைத்தார் சிதம்பரம் சுவாமிகள். திருப்போரூர் தலத்துக்கு வரும் அன்பர்கள் தலத்தின் மகிமையையும், முருகனின் பேரருளையும் அவன் சந்நிதியிலேயே பாடி இன்பம் அடையும் வண்ணம் இயற்றப் பட்டது அந்த நூல். தவிர, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களையும் அருளினார்.



மீனாக்ஷி தனக்கிட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றியாகிவிட்டது என்ற உணர்வுடன், திருப்போரூரில் இருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு என்னும் ஊரில் மடம் அமைத்து அங்கே மடாலயம், ஒடுக்க்க அறை, பூஜை மடம் போன்றவற்றை அமைத்து அங்கேயே ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து அவரைத் தரிசித்துச் சென்றனர். சிலர் தீக்ஷையும் பெற்றனர். கி.பி. 1659-ம் ஆண்டு வைகாசி மாச விசாக தினத்தில் மடாலயத்தின் ஒடுக்க அறைக்குள் இருந்து முன்பே வடிவமைத்த சுரங்கம் ஒன்றின் வழியே அருகில் உள்ள சமாதிக்குழிக்குள், வழிபாட்டுப் பொருட்களுடன் சென்று வழிபாடு நடத்தி சமாதியின் உள்ளேயே அமர்ந்து பரிபூரணத்துவத்தை அடைந்தார். அந்த நேரம் திருப்போரூர் முருகன் சந்நிதியில் மூலவரின் சந்நிதியை நோக்கிச் சிதம்பரம் சுவாமிகள் கூப்பிய கரங்களுடன் சென்று மூலவர் திருமேனியில் கலந்ததை அன்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களில் பலரும் கண்டனர். இதனாலேயோ என்னமோ கண்ணகப் பட்டில் உள்ள சுவாமிகளின் திருக்கோயில் அதிஷ்டானம் என்று சொல்லப் படுவதில்லை. சுவாமிகள் ஜீவசமாதியாக உறைவதாகவும் குறிப்பிடப் படுவதில்லை. ஸ்ரீ சிதம்பரம் சுவாமிகள் மடாலயத் திருக்கோயில் என்றே சொல்லப் படுகிறது.

Tuesday, March 8, 2011

மீனாக்ஷி பெறாத செல்லக் குழந்தை! சிதம்பரம் ஸ்வாமிகள்.

ஸ்ரீசிதம்பரம் ஸ்வாமிகள்:


இவரைத் திருப் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் என்று சொன்னாலும் இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை. அருணகிரிநாதர், ஷிர்டி பகவான் போன்ற பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய முடியாதவர் இவர். ஆனால் இவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடலாம் தென்மதுரையில் சங்கப் புலவர் மரபில் உதித்தவர் என்றும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர் என்றும் தெரியவருகிறது. அன்னை ஸ்ரீமீனாக்ஷியின் செல்வக் குழந்தையாகவே வளர்ந்துவந்தார் சிதம்பரம் ஸ்வாமிகள். இளம்பிராயத்திலேயே தமிழை நன்கு கற்றுக் கவிபாடும் ஆற்றலோடு, இறைவழிபாடு, யோகம் போன்றவற்றிலும் தனித் திறமை பெற்றிருந்தார். இவரின் உபாசனா மூர்த்தியாக அன்னை மீனாக்ஷியே திகழ்ந்தாள். அனவரதமும் அன்னையையே துதித்து வந்தார்.



இந்நிலையில் சுவாமிகளின் கவித்திறனைக் கண்டு வியந்த ஊரார் அவருக்குக் கவிராயர் என்ற பட்டமும் அளித்துக்கெளரவித்தார்கள். சுவாமிகளின் பெருமையை அறிந்த கொங்கு நாட்டில் இருந்த அவிநாசி ரெட்டியார் என்பார் குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திப்பல வழிபாடுகள் செய்தவண்ணமிருந்தார். அவர் வீட்டுக்கு ஒருமுறை வருகை தந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குமாரதேவர் என்னும் யோகி ரெட்டியாருக்கு திருநீறு அளித்துக் குழந்தைச் செல்வத்துக்குப்பிரார்த்தித்தார். குழந்தையும் பிறந்து வளர்ந்து வந்துகொண்டிருந்தது. குழந்தைக்குத் தக்க ஆசானைத் தேடிக் கொண்டிருந்தார் ரெட்டியார். அப்போது சிதம்பரக் கவிராயரைக் குறித்து அறிய நேரிட அவரைத் தம் இல்லத்துக்கே அழைத்துத் தாம் பெற்ற குழந்தைக்குக் கல்வி போதிக்கும்படி வேண்ட. சுவாமிகளும் ரெட்டியாரின் இல்லத்திலேயே தங்கிக் குழந்தைக்குப்பாடம் கற்பித்துவந்தார். எப்போது வரும் வழக்கம்போல் அப்போதும் வர நேர்ந்த குமாரதேவர் சிதம்பரம் சுவாமிகளையும் அவர் பாடம் நடத்தும் நேர்த்தியையும் கண்டு ஆனந்தம் கொண்டார். சிதம்பரம் ஸ்வாமிகளுக்கும் குமாரதேவரைக் கண்டதும் காரணம் புரியாத பரவசம் ஏற்பட்டது.



சிதம்பர சுவாமிகளின் மனப்பக்குவத்தை அறிய விரும்பிய குமாரதேவர் அவரைச் சோதிக்கும் வண்ணம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தக்க பதில்கள் சொல்லிச் சிதம்பரம் சுவாமிகள் அவர் உள்ளத்தைக் குளிர்வித்தார். சுவாமிகளிடம் கொஞ்சநஞ்சம் இருந்த செருக்கும் அகன்று மனம் விசாலமடைய குமாரதேவரால் அவர் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. குமாரதேவர் அவரைத் தம் குருநாதர் சாந்தலிங்க சுவாமிகளிடம் அழைத்துச் சென்றார். அவருடைய முக தீக்ஷண்யத்தைக் கண்டும், தமிழ்ப் புலமையைக் கண்டும் வியந்த சாந்தலிங்கர், தாம் இயற்றிய, “வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், கொலை மறுத்தல், அவிரோதவுந்தியார், மற்றும் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்கம் ஆகிய நூல்களைச் சிதம்பர சுவாமிகளிடம் தந்து உரை எழுதப் பணித்தார். ஞான நூல்கள் ஆன அவற்றிற்கு உரை எழுதிய சிதம்பரம் சுவாமிகளைப் பார்த்து சாந்தலிங்க சுவாமிகள் பெரு மகிழ்வு அடைந்தார். தம் முதன்மை சீடர் ஆன குமாரதேவரைப் பார்த்து, “இவன் உன் புத்திரன், இவனுக்கு தீக்ஷை கொடுத்து அருள் செய்வாயாக!” என்று சொல்கின்றார். குமாரதேவரும் வீர சைவ முறைப்படி சிதம்பர சுவாமிகளுக்கு 21 தீக்ஷைகள் செய்வித்து நிஷ்டை, சமாதி முதலானவை கைகூடும் வண்ணமான பெரும்பேற்றையும் அருளிச் செய்கின்றார். குமாரதேவர் கற்பித்தவண்ணம் பல மணி நேரம் தியானத்தில் மூழ்கி எழுந்த சிதம்பரம் சுவாமிகளின் தியானத்தில் ஒரு சமயம் ஒரு அழகான மயில் ஒன்று தோகை விரித்த வண்ணம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டார். தியானத்திலிருந்து எழுந்த சிதம்பரம் சுவாமிகள் உடனேயே தம் குருநாதராகிய குமாரதேவரிடம் இதற்கான காரணத்தைக் கேட்க, அவரோ சிதம்பரம் சுவாமிகளை மதுரை திரும்பச் சொல்லுகின்றார்.



அங்கே அங்கயற்கண்ணியைத் தியானித்த வண்ணம் இருந்தால் இந்த மயில் தரிசனத்தின் காரணமும் புலப்படும் என்றும் சொல்லி அனுப்பினார். அவ்வண்ணமே மதுரை வந்தடைந்த சுவாமிகள் தினந்தோறும் அன்னை மீனாக்ஷியை மனம் உருகி வழிபட்டு, விரதங்கள் பல மேற்கொண்டு 45 நாட்கள் கடுந்தவமும் புரிந்தார். ஒன்பது கோணமிட்டு, அன்னையவளின் பீஜ எழுத்துக்களை அதில் ஊன்ற வைத்து, சிந்தையில் பதித்துச் சிந்தித்தவண்ணம் இருப்பார். மூர்த்தம் என அழைக்கப் படும் விக்ரஹத்தில் மூர்த்திகரிக்கும் அன்னையான அந்த முழுமுதல்வி அன்னை மீனாக்ஷி அவரின் நனவிலும், கனவிலும் அவர் முன் நடமாட ஆரம்பித்தாள். அவரின் நெஞ்சினுள் அன்னை புகுந்து அவரின் வாக்காய் மலர்ந்தாள். அப்போது மலர்ந்த பூக்களே, “மீனாக்ஷி கலிவெண்பா” என்ற பெயரில் இன்றளவும் வழங்கப் படுகிறது. அம்பிகையின் அதிரகஸ்ய சேவை நுட்பங்களை அந்தக் கலிவெண்பாவில் ஆனந்த தாண்டவம் ஆடும் வண்ணம் அமைத்துப் பாடினார் சிதம்பரம் சுவாமிகள்.



சிதம்பரம் சுவாமிகள் தொடருவார்.

Monday, March 7, 2011

திருவானைக்கா தந்த தமிழ்ப் புலவர்!

காளமேகப் புலவர்:



திருவானைக்கா தந்த தமிழ்ப்புலவர். தாயுமானவருக்கும் முந்தைய காலத்தவர். இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் வரதன். ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிசாரகராய் இருந்தார். திருவானைக்கா கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். தினமும் ஆலயத் திருப்பணிகளை இருவரும் செய்து வந்தனர். ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டின்போது வரதன் மனைவி மோகனாங்கி நாட்டியம் ஆடும் முறை வந்தது. தான் நாட்டியம் ஆடிவிட்டுத் திரும்ப நேரம் ஆகும் என்பதால் கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொல்லி இருந்தாள் மோகனாங்கி. தன் வேலைகள் முடித்து மண்டபத்திற்கு வந்து காத்திருந்த வரதன் அசதி மிகுதியால் தூங்கிவிட்டார்.



வந்து பார்த்த மோகனாங்கிக் கணவனை அழைத்துப் பார்த்தும் வராத காரணத்தால் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என நம்பிக் கொண்டு வீடு சென்றாள். ஆனால் நடந்தது என்ன?? அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம் செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே அப்போது வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த வரதனுக்குத் தூக்கிவாரிப் போட்டு விழிப்பு வந்தது. என்ன சத்தம்?? கால்களில் சிலம்பும், பாடகங்களும் அணிந்து ஒரு பெண் நடக்கும் ஒலி கேட்டது. வரதன் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு அழகான சின்னஞ்சிறு பெண் தன் கால்களின் அணிகள் கணீர் கணீரென ஒலி எழுப்ப வந்தாள். பண்டிதரை எழுப்பினாள். பண்டிதர் அருகில் சென்று, தன் வாயில் இருந்த தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே அவர் வாயைத் திறக்கச் சொன்னாள்.



அம்பிகையை எதிர்பார்த்திருந்த பண்டிதர் ஒரு சிறு பெண் வந்து தன் எச்சில் தாம்பூலத்தைத் தன் வாயில் துப்ப வாயைத் திறக்கச் சொல்கின்றாளே என எண்ணிக் கோபத்துடன் அவளைத் திட்டி அனுப்பினார். திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வரதனைக் கண்டாள். ஒன்றும் புரியாமல் வாய் திறந்த வரதனின் வாயில் அம்பாளின் தாம்பூலம் உமிழப் பட்டது. அன்று முதல் சாதாரண வரதன் கவி காளமேகம் ஆனார். அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராய் விளங்கிய காளமேகக் கவி, அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதியாகவே பாவித்து சரஸ்வதி மாலை என்னும் நூலைப் பாடி இருக்கிறார். திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், தனிப்பாடல்கள், யமகண்டம் என்ற பாடல் தொகுப்புகள் காளமேகத்தால் பாடப் பட்டவை. சிலேடை எனப்படும் இரு பொருள் கொண்ட கவிகளும், நகைச்சுவைக் கவிகளும் மிகுதியாகப் பாடியுள்ளார். பிறரை எள்ளி நகையாடும் வண்ணமும் பாடியதால் வசைக்கவி என்ற பெயரும் இவருக்கு உண்டு.



“பெருமாளும் நல்ல பெருமாள், அவர் தம்

திருநாளும் நல்ல திருநாள்-பெருமாள்

இருந்த இடத்தில் இராமையினால் ஐயோ

பருந்தெடுத்துப் போகுதே பார்.”



“காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது

நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்

வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்

மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”



என்ற இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. கவிதையை எண்ணிய மாத்திரத்தில் மழைபோல் பொழிந்ததால் “கவிக்கு ஒரு காளமேகம்” எனச் சிறப்பித்துக் கூறப் பட்டார்.

Sunday, March 6, 2011

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்!

அருணகிரிநாதர்

திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.



என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.



திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.



பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??



கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.



அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.



மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.



சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.



தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காக்ஷி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காக்ஷி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

Saturday, March 5, 2011

முருகனோடு சண்டை போட்ட பொய்யாமொழிப்புலவர்

பொய்யாமொழிப் புலவர்:

இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சரியாய்த் தெரியவில்லை. ஆனால் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில் கரைகண்டவர். மாகாளியின் அருளால் இவர் சொன்ன வாக்கும் பலிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் வரையில் இவருக்கே தன்னுடைய இந்தச் சிறப்புத் தெரியாமல் இருந்தது. ஒருநாள் குருநாதரின் தினைப்புலத்தைக் காவல் காக்கச் சென்றார். அந்த ஊரில் ஓர் முரட்டு வீரன் இருந்தான். அவன் பெயர் காளிங்கராயன். அவன் குதிரையும் அவனைப் போலவே முரடாக வளர்க்கப் பட்டிருந்தது. பொய்யாமொழிப் புலவரின் இயற்பெயர் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது. இவர் தினைப்புலம் காவல் காக்கும் நேரம் காளிங்கராயனின் குதிரை அங்கே வந்து மேய்ந்து பயிரை இஷ்டத்துக்கு அழித்துவிட்டது. புலவர் குதிரையை விரட்டினாலும் அது போகாமல் புலவர் மீது ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தது. செய்வதறியாது திகைத்த புலவர் எச்சரிக்கை உணர்வோடு ஒதுங்கிக் கொண்டு மாகாளியையும், தம் குருவையும் மனதில் நினைத்துக் கொண்டு,

“வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே

காய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் –சாய்த்துக்

கதிரை மாளத்தின்னும் காளிங்கன் ஏறும்

குதிரை மாளக் கொண்டு போ!” என்று பாடிவிட்டார். உடனேயே குதிரை துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. கனைத்த வண்ணம் கீழே விழுந்து இறந்துவிட்டது.



திகைத்தார் புலவர். தன்னுடைய பாடலுக்கு இப்படி ஒரு சக்தியா? வியப்பாய் இருந்தாலும் பயமாகவும் இருந்தது அவருக்கு. ஐயோ! என் செய்வேன், காளிங்கராயனுக்கு இது தெரிந்தால் நம்மைச் சும்மாவிடமாட்டானே? எனத் தம்மைத் தாமே நொந்து கொண்டு குருநாதரிடம் போய்ச் சொன்னார். குருநாதரும் பதறி அடித்துக் கொண்டு வேதனையோடு இறந்த குதிரையின் அருகே தம் சீடரோடு வந்து சேர்ந்தார். புலவரை ஒரு பார்வை பார்த்தார். உடனேயே குருவின் உள்ளத்தை உணர்ந்தவராய்ப் புலவர், “குதிரை மாளக் கொண்டு போ!” என்னும் அடியை மாற்றிக் “குதிரை மீளக் கொண்டு வா!” என்று பாடினார். என்ன ஆச்சரியம்?? அதிசயம்?? குதிரை உயிர்பெற்று எழுந்து துள்ளிக் கொண்டு ஓடியது வேகமாய். உடலை உதறிக் கொண்டு சென்ற குதிரையைப் பார்த்த குருநாதர் மனம் மகிழ்ந்து தன் பயத்தையும் உதறிவிட்டுச் சீடனைப் பார்த்து, “அப்பா, உன் வாக்குப் பலிக்கிறதே! இன்று முதல் நீ பொய்யாமொழிப் புலவன் என்னும் பெயர் பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர் பொய்யாமொழிப் புலவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் பாண்டியநாட்டிற்குச் சென்றார். அங்கே பாடல்கள் பாடி, சிலை உருவில் இருந்த சங்கப் புலவர்கள், கரக்கம்பம், சிரக் கம்பம் செய்யும்படிச் செய்து, பொற்றாமரைக் குளத்தில் ஆழத்தில் மூழ்கிக் கிடந்த சங்கப் பலகையை மேலே வந்து மிதக்க வைத்தார். இயல்பாகவே சிவபக்திச் செல்வரான இந்தப் பொய்யாமொழி, இன்னும் ஆலவாயனிடம் தீராத பக்தி பூண்டு, சிவனைத் தவிர, வேறொரு தெய்வமே இல்லை என்றும், வேறு எந்தக் கடவுளையும் பாடவும் மாட்டேன் என்றும் சொல்லி வந்தார்.



ஒரு நாள் பொய்யாமொழிப் புலவரின் முன் முருகன் தோன்றினான். “ புலவரே, உம் தமிழால் எம்மைப் பாடுவீராக! “ என்று கேட்க, புலவரோ, “கோழியைப் பாடிய இந்த என் வாயால் அதன் குஞ்சைப் பாடுவேனோ? அப்பனைப் பாடிய வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” என்று சொல்லி மறுத்துவிட்டார். அவ்வளவில் மறைந்தான் முருகன். நாட்கள் சென்றன. வைகைக் கரையில் இருந்த தஞ்சாக்கூர் என்னும் ஊரில் தஞ்சை வாணன் என்பவர் வசித்து வந்தார். அவரைக்காணவேண்டிச் சென்றார் பொய்யாமொழிப் புலவர். வழியில் பாலை நிலக் காடுகள் இருந்தன. அந்தக் காட்டைக் கடந்தே செல்லவேண்டும். புலவர் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேடன் அவரை வழிமறித்தான். இடக்கையில் வில், வலக்கையில் அம்பு, தோளில் அம்புறாத்தூணி எனக் காட்சி அளித்தான் வேடன். இளைஞன். வசீகரமான முகம். முகத்தின் காந்தி பிரமிக்க வைத்தது. அவன் நிறமோ, செக்கச் சிவந்த சூரியனை ஒத்திருந்தது. இளம் சூரியனோ எனக் காட்சி அளித்த அந்த வேடன் தன் கண்களை உருட்டி விழித்துப் பயம் காட்டியதைக் கண்டார் புலவர். தம்மிடம் பொருள் ஏதும் இல்லை எனத் தெளிந்தார். வேடனும் புரிந்து கொண்டான் அவரிடம் பொருளில்லை என்பதையும் அவர் ஒரு புலவர் என்றும் அறிந்து கொண்டான்.



“ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! புலவனா நீ? உன்னிடம் பொருள் இல்லையா? சரி, போகிறது, என் மேல் ஒரு பாடல் பாடு!” என்றான் வேடன். புலவர் சற்றுத் தயங்கினாலும், இவனிடமிருந்து தப்பவேண்டி, “சரியப்பா, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் முட்டை!” என்று பதில் வந்தது.

“பொன் போலும் கள்ளிப் பொறி பறக்கும் கானலிலே

என் பேதை செல்லற்கியைந்தனளே- மின் போலும்

மானவேல் முட்டைக்கு மாறாய் தெவ்வர் போம்

கானவேல் முட்டைக்குங்காடு!”

என்று பாடினார் புலவர். பாட்டின் பொருளாவது: முட்டை என்னும் பெயருள்ள இந்த வேடன் மின்னல் போல் மின்னும் கூர்மையான வேலை வைத்திருக்கிறான். இந்த அடர்த்தியான கருவேலங்காட்டுக்குள்ளே செல்லுபவர்கள் முட்டையின் எதிரிகளாய்த் தான் இருக்க முடியும். சூரிய வெப்பத்தினால் இந்தக் காட்டுக் கள்ளிச் செடிகள் எல்லாம் தீப்பிடித்து எரியும். அத்தகைய இந்தக் காட்டுக்குள் பேதையும், இளம்பெண்ணுமாகிய என் மகள் தன் தலைவனோடு செல்ல இசைந்தாளே!” என்பது இதன் பொருள்.



பாடலைக் கேட்ட வேடன் பெரிதாகச் சிரித்தான். “புலவா, உன் பாட்டில் உண்மை ஏதுமே இல்லை, ஆனால் நீ பொய்யாமொழி என அறிமுகம் செய்து கொண்டாயே? தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்காமல் கள்ளிச் செடிகள் காய்ந்துபோய்த் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கும்போது அங்கே கருவேலமுட்கள் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்கும்? என்ன புலவன் நீ? இதோ, நான் பாடுகிறேன், பார்!” என்று சொல்லிவிட்டு வேடன் பாடலை மாற்றிப் பாட(பாடல் கிடைக்கவில்லை, கிடைத்தவர்கள் இடலாம்) பாடலையும் பொருளையும் கேட்ட புலவர் திகைத்துப் போனார். வேடன் அவர் திகைப்பை லட்சியம் செய்யாமல், மேலும், “முட்டை பெரிதா, குஞ்சு பெரிதா?” என்று புலவரிடம் கேட்க, “குஞ்சு தான் பெரியது!” என்றார் புலவரும். அப்படியானால் முட்டையைப் பாடிய வாயால் அதைவிடப் பெரிய குஞ்சையும் பாடு!” என்று சொல்லி வேடன் மறைந்தான். புலவருக்குள் ஏதோ மாற்றம். வந்தவன் சாமானியன் அல்ல. வேடனும் அல்ல. சற்றே யோசித்தார் புலவர்.

தம் கனவில் வந்து தன்னைப் பாடச் சொன்ன முருகனும், தாம் அதற்கு மறுத்ததும், கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் எனச் சொன்னதும் நினைவில் வந்தது. அதனால் தான் முருகனே வேடனாய் வந்து முட்டையைப் பற்றித் தம்மைப் பாட வைத்துத் தம் அறியாமையைப் போக்கித் திகைப்பை உண்டுபண்ணி உள்ளான் எனப் புரிந்து கொண்டார் புலவர். வந்தது வேறு யாரும் அல்ல, முருகனே எனவும் அறிந்து கொண்டார். புலவரின் ஆணவம் அகன்றது. அன்றிலிருந்து வித்தியாசம் பார்க்காமல் தெய்வங்களைக் குறித்துப் பாடி வந்தார் பொய்யாமொழிப் புலவர். இவரின் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது. இந்தப் புலவரைப் பற்றிய திரைப்படம், “சிவகவி” என்னும் பெயரில் திரு எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்து பல நாட்கள் ஓடியதாய்த் தெரிய வருகிறது.

Tuesday, March 1, 2011

நந்தன் புகழ் பாடிய கோபாலகிருஷ்ண பாரதி!

கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ப் பண்டிதர் மகாவித்வான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் நந்தன்
சரித்திரம் எழுதப் பட்டிருந்த வேளை. சேக்கிழாரால் எழுதப் பட்டிருந்த பெரிய
புராணத்தில் வரும் "திருநாளைப் போவார்" என்னும் சரித்திரம் தான் பாரதியார்
அவர்களால் நந்தன் சரித்திரமாய் எழுதப் பட்டது. அந்நாளில் பிரபலமாகக் கவி பாடும்
திறன் பெற்றிருந்த கோபாலகிருஷ்ண பாரதி அவர்கள் சேக்கிழாரின் திருநாளைப் போவார்
சரித்திரத்தில் உள்ள உண்மைக்கு மாற்றாகத் தாம் எழுதிய நந்தன் சரித்திரத்தில்
பண்ணை மிராசுதார் நந்தனைத் தில்லைக்குப் போகாமல் தடுத்ததாய் எழுதி இருந்தார்.
உண்மையில் நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார்
சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல்,
வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப்
போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான்
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் தஞ்சை ஜில்லாவின் சில
மிராசுதார்கள் தங்கள் வயல்களில் "பண்ணையம்" (விவசாயம்) செய்யும் உழவர்களை
ரொம்பவே துன்புறுத்தி வந்ததைக் கண்டு மனம் வெதும்பிக் கொண்டிருந்தார். அந்த ஏழை
மக்களும் பெரும்பாலும் துன்பத்தைச் சகித்துக் கொண்டே இருந்ததையும் கண்டார்.
ஏற்கெனவே நந்தனார் என்னும் கீழ்க்குலம் என்று சொல்லப் படும் குலத்தைச் சேர்ந்த
ஒரு நாயன்மாரின் வாழ்க்கைச் சரிதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட அவரின் இரக்க
உள்ளமானது, இந்த வாழ்க்கைச் சரிதத்தைக் கவிதையாக எழுத வைத்தது. அந்தக்
கவிதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் சிருஷ்டித்தார் ஒரு வேதியரை. அந்த வேதியரை
மிக்கக் கொடூர மனம் படைத்தவராய்ச் சித்தரித்தார். உண்மையில் சொந்தமாய் விவசாயம்
பண்ணிக் கொண்டு ஊர், ஊராகச் சிவன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நந்தனாரை
ஒரு வேதியரின் கூலி ஆளாக மாற்றி, அந்த வேதியரின் கொடுமையால் அவரின் பக்தி
நிரம்பப் பெறாமல் அவர் இறைத் தொண்டு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டதாய் எழுதி
விட்டார். ஆயிற்று. கவிதையும் எழுதி முடித்தாயிற்று.

நந்தன் சரித்திரக் கீர்த்தனை தயார் நிலையில். அதைப் பாடப் பெரிய
கதாகாலட்சேபக் காரர்கள், அந்தக் கால கட்டத்தில் தேச அபிமானிகள் பலரும்
இம்மாதிரியான ஆன்மீகப் பாடல்களோடு தேசபக்தியையும் இணைத்துப் பாடத் தயாராய்
இருந்தவர்கள் என அனைவரும் தயார் நிலையில். ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கோ இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு சிறப்புப் பாயிரம் தயார் செய்து கொண்டே
வெளியில் விட ஆசை. அதற்குத் தகுதியான ஆள் யாரென யோசித்தபோது அவர் நினைவில்
வந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே. அவரிடம் சென்று
சிறப்புப் பாயிரம் வாங்கிச் சேர்த்து விடலாம் என்று நேரிலேயே அவரிடம் சென்றார்
பாரதியார். சிறப்புப் பாயிரமும் கேட்டார். ஆனால் பிள்ளை அவர்கள் சொன்ன பதில்:
இல்லை என்பதே!

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பற்றோடு, சிவபக்தியும்
நிரம்பப் பெற்றவர். பெரிய புராணத்தை உள்ளும், புறமும் நன்கு கற்றுத்
தெளிந்தவர். தம் தமிழ்ப் புலமையாலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்வானாக
இருந்து, பல தம்பிரான்களுக்கும், தமிழ் கற்பித்து, சைவ மடங்களின் ஆதீனத்
தலைவர்களாக ஆக வழி காட்டியவர். இவருக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன்
சரித்திரம்" பற்றிய தகவல்கள் கிடைத்தன. என்னதான் தமிழ் அபிமானியாக இருந்தாலும்,
கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" நன்கு இசைக் காப்பியம் ஆக எழுதப்
பட்டிருந்தாலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு இந்த விஷயத்தில் முழுச்
சம்மதம் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நிலச் சுவான் தாரர்கள், தங்கள் குடி,
மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் தான். இல்லை எனச் சொல்ல முடியாது.
எளிய மக்களிடம் நமக்கும் அனுதாபம் உண்டு தான், ஆனால் கற்பனை என்ற பெயரில்
காலம், காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காப்பியத்தில் -அதுவும் சைவத்
திருமுறைகளிலேயே முதன்மைத் தகுதியில் வைத்துப் பாராட்டப் படும் பெரிய
புராணத்தை- மாற்றி அமைத்துக் கவிதை பாடுவது என்பதை ஏற்கவே முடியாது என்பதே
அப்பெரியவரின் தீர்மானமான கருத்து. தம் கருத்தை தம்முடைய உளம் நெருங்கிய
மாணாக்கராக இருந்த மகா வித்வான் உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சொல்லி வருத்தப்
பட்டார்.

ஆனால் பாரதியாருக்கோ சிறப்புப் பாயிரம் வாங்க வேண்டும், அதுவும், பிள்ளை
அவர்களிடம் இருந்து என்ற எண்ணத்தில் மாற்றமே இல்லை. தினம் தினம் பிள்ளை
அவர்களிடம் வந்து கேட்டபோதிலும் பிள்ளை அவர்களோ, தமக்கு சங்கீதத்தில் நாட்டம்
இல்லை என்பதால் சங்கீதமும், தமிழும் அறிந்த வேறு யாரிடமாவது சென்று பாயிரம்
வாங்கச் சொல்லித் திருப்பி அனுப்புவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பாயிரமே
தேவை இல்லை என்று சொல்லியும் திருப்பி அனுப்பினார். ஆனால் பாரதியார் விடவில்லை.
ஒருநாள் மதியம் பிள்ளை அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு, சிரமப் பரிகாரம்
செய்து கொண்டிருக்கும் வேளையில் வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செய்தி அவர் காதை எட்டியது. வரும்போது வரட்டும்
என்று வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார், கோபால கிருஷ்ண பாரதியார்.
உட்கார்ந்தவரால் சும்மா இருக்க முடியவில்லை.

தன்னை அறியாமல் "நந்தன் சரித்திரம்" கீர்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்கினார்.
ஏற்கெனவேயே அரைத் தூக்கமாய் இருந்த பிள்ளை அவர்களின் காதில் பக்தியோடு சேர்ந்த
இனிய இசை காதில் விழுந்ததும் எழுந்து உட்கார்ந்து விட்டார். கவிதைத் தொகுப்பில்
உள்ள இலக்கணப் பிழைகளை ஏற்கெனவேயே கவனித்திருந்த பிள்ளை அவர்களுக்கு, இப்போது இசையுடன் கேட்ட அந்தப் பாடல்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றிய நினைப்பே இல்லை. பாரதியார் மெதுவாக ஒவ்வொரு பாடலாய்ப் பாடிக் கொண்டே வந்து, "வருகலாமோ" என ஆரம்பித்தார். இந்த வருகலாமோ என்பதே ஓர் இலக்கணப் பிழை என்பதாக பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார். "வரலாமோ" என்று சொல்லுவதற்குப் பதிலாக இது என்ன "வருகலாமோ" என்று கேட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலின் உருக்கமும், இறைவனைக் கண்ணாரக் காண நந்தன் துடித்த துடிப்பும், தன்னோட ஈனமான பிறவியை நினைத்து ஏங்கிய ஏக்கமும், நடராஜரைத் தன் மனக்கண்ணால் கண்டு, நேரில் காண எப்போது வருவோம் என்று உருகி, உருகிப் பாடிய பாட்டையும் கேட்ட பிள்ளை அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் மழை பொழிந்தது.

பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். "தங்கள் இசைக்காப்பியத்தைக் கேட்டேன்.
தாங்கள் இவ்வளவு சிவபக்தி உள்ளவர் என இப்போதே அறிந்தேன். சிவபக்திச் செம்மல் ஆன
நீங்கள், மற்றவரையும் அவ்வாறே சிவபக்தியில் நெக்குருகப் பண்ணுவதையும் உளமார
அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ஆகவே உங்கள் இசைக் காப்பியத்துக்குச்
சிறப்புப் பாயிரம் தருகிறேன்," என்று சொல்லி அனுப்பி அதே போல் சிறப்புப்
பாயிரமும் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் பாரதியார் நந்தன் கதையில்
ஒரு வேதியரை நுழைத்துக் கதையை மாற்றி எழுதி நந்தன் சரித்திரத்தை இன்னும் உருக
வைத்திருப்பதைக் குறித்து, ஒருவிதமான பாராட்டுச் சொல்லோ, அவர் அம்மாதிரி
எழுதிப் பெரிய புராணத்தை மாற்றி இருப்பது குறித்து, அவதூறுச் சொல்லோ இல்லாமலேயே
அந்தச் சிறப்புப் பாயிரம் அமைந்தது.

மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.

ஆதாரம்: உ.வே.சா. நினைவு மஞ்சரி,
தெய்வத்தின் குரல்.