Saturday, August 9, 2008

அரசு போக்கு????? வரத்துக்கழகத்தின் சிறப்பு!!!

இந்த முறை கும்பகோணம் செல்லும்போது முன்பதிவு செய்து கொள்ள முடியவில்லை. கடைசிவரையில் கிளம்புவது நிச்சயம் ஆகாததாலேயே எதுவும் பண்ண முடியவில்லை. என்றாலும் எப்படியும் இந்த வாரம் போயிட்டு வந்துடணும்னு தான் இருந்தோம். வீட்டில் வேலைகள் சரிவர முடியாமல், எந்த நேரம் கொத்தனார் வருவார்னு புரியாமல், வெளியே எங்கேயும் போக முடியாமல், மாறி, மாறி வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியாய் இந்தத் திங்கள் அன்று 4-ம் தேதி,முக்கியவேலையை முடிச்சுக் கொடுத்தார் கொத்தனார். மத்ததை அப்புறமா வச்சுக்கலாம்னு அவசரம், அவசரமா குலதெய்வம் கோயிலுக்குக் கிளம்பினோம். எனக்கு இரவுப் பயணம்தான் சரியா வரும்,அதிலும் ரயில் என்றால் இன்னும் வசதி. ஆனால் என்னோட ம.பா. நேர் மாறாக பகலில் தான் போகணும்னு பிடிவாதம் பிடிப்பார். ரயில் எதுவும் இப்போ இல்லையே?? பேருந்துப் பயணம் தான் ஒரே வழி. வேறே வழியே இல்லை. புதன் இரவே போய் என்ன செய்யறது?? அனாவசியமா லாட்ஜில் போய் உட்காரணும், வாடகை கொடுத்துட்டு, (சிக்கன நடவடிக்கை :P) அதுவும் தவிர, நீ சாப்பிடத் தகராறு பண்ணுவே, வியாழன் அன்று காலையில்னா சாப்பாடு பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு திட்டவட்டமான அறிவிப்பு வரவே, வியாழன் அன்று காலையில் எல்லாம் தயார் செய்துகொண்டு கிளம்பிட்டோம். 8 மணிக்குக் கிளம்பணும்னா டாணென்று 8 மணிக்கே கிளம்பினோம்.

ஆனால் போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு போகவே 9-30 ஆகிவிட்டது. குடும்ப ஆட்டோகாரர் தான் கொண்டுவிட்டுட்டுப் போனார். இல்லைனா இது கூட முடியாது. போனதுமே, ஒரு பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. ஆனால் என் மனசிலே பட்சி கூவுகின்றது இதிலே ஏறாதேனு. நான் சொல்றதுக்குள்ளே, முன்னால் வெகுவேகமாய்ப் போயிட்டு இருந்த ம.பா. அந்தப் பேருந்தில் ஏறியாச்சு. நான் சில, பல கிலோ மீட்டர் பின்னால் வரேன். அதுக்குள்ளே பஸ்ஸில் ஏறி, வெற்றிகரமாய் டபுள் சீட்டாகவும் தேர்ந்தெடுத்து, எல்லாமே டபுள் சீட்தான், அது வேறே விஷயம், சாமான்களை வச்சுட்டு, என்னைப் பார்க்க வந்தார். நல்லவேளையாக இமயமலை உயரத்தில் படிக்கட்டுகள் இல்லை. நம்ம கால் நம்மை எப்போ வாரிவிடும்னு சொல்ல முடியாது. இந்த அழகிலேயே நிஜமாவே இமயமலைக்கும் போயிட்டு வந்தாச்சு! நானே படிக்கட்டுகளில் ஏறி சீட்டில் போய் உட்கார்ந்தாச்சு. உடனே பேருந்தும் கிளம்பிவிட்டது. ஆஹா,னு நினைச்சுட்டு, கையில் கொண்டு போயிருந்து புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன். புத்தகத்தில் மூழ்கியாச்சு. பேருந்துக்குக் குளிர் ஜுரம் கண்டிருந்ததுனு நினைக்கிறேன். ஒரே உதறல். தூக்கித் தூக்கிப் போடுது. என்றாலும் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பேருந்து சென்ற இடமோ அதைக் கவனிக்கும் மருத்துவமனை. ஆம்! அங்கேயே பக்கத்தில் இருந்த வொர்க்ஷாப்புக்குப் போயிடுச்சு அந்தப் பேருந்து. அங்கே இன்னொரு பேருந்தை வரவழைச்சு, எங்களை எல்லாரையும் அதிலே உட்காரச் சொன்னாங்க. அங்கே எல்லாரும் முன்னாலே போயிடக் கடைசியில் இறங்கின எங்களுக்குச் சேர்ந்து உட்கார இடமே இல்லை. அது தான் போச்சுனா எல்லாருமே தனித்தனியாக ஆளுக்கு ஒரு சீட்டில் உட்கார்ந்து இருக்க, ஒவ்வொருத்தரையாக் கேட்டால் யாருமே மாறி உட்கார ஒத்துக்கலை.
விடாமல் போராடி, கண்டக்டரும் வந்து சொன்னதும் முன் சீட் இரண்டும் கிடைச்சது. இரண்டு பேரும் உட்கார்ந்தோம். பேருந்தும் கிளம்பியது. தாம்பரம் போக ஆன இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர்,பெருங்களத்தூரில் வேகம் எடுக்க ஆரம்பிச்சு, வேகமாயே போயிட்டு இருந்தது. திண்டிவனம் நெருங்கவேண்டும், இன்னும் பத்து நிமிஷம். படார்! பட் படார்! எங்கேயோ பட்டாசு வெடிக்கிறாங்களா?? இல்லை வெடியா?? பேருந்தின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் டயர்கள் வேகமும், கனமும் தாங்காமல் கிறீச்சிட, பேருந்து நின்றது. நல்லவேளையா நின்ற இடம், திண்டிவனம் போகும் வழியில் லாரிகள், கண்டெயினர்கள் எல்லாம் நின்று இளைப்பாறக் கட்டி இருக்கும் ரெஸ்ட் ஏரியா. அங்கே தெய்வச் செயலாக இரண்டு ஆட்டோமொபைல் வொர்க்ஷாப் இருக்க, பஞ்சர் ஆன டயரைக் கழட்டி, ஸ்டெப்னியைப் போட்டுக் கொடுத்தார்கள். கண்டக்டரும், டிரைவரும் தங்கள் கையில் இருந்து பணம் போட்டு செட்டில் பண்ணிவிட்டு, ரசீது கேட்க, ரசீது கிடைக்கவில்லை. கண்டக்டர் கொஞ்ச நேரம் போராடிப் பார்த்துவிட்டுப் பின்னர் வேறே வழியில்லாமல் வந்துட்டார். பயணிகளில் அவசரமாய் பண்ருட்டி போகவேண்டிய ஒருத்தர் தவிர, மற்றவங்க பேருந்திலேயே இருந்தோம். எங்களை வேறு பேருந்துக்கு மாறறீங்களானு கண்டக்டர் கேட்டதுக்கும் நாங்க வேண்டாம்னு சொல்லிட்டோம். பின்னர் பேருந்து கிளம்பி திண்டிவனம் போய் அங்கே இருந்தும் கிளம்பி சீரான நிதானமான வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பண்ருட்டி வரவேண்டும். மறுபடியும் உலோகம் உராயும் ஒலி. இம்முறை சற்று வேகமாய்க் கேட்டதோடு அல்லாமல் பேருந்தே ஆடியதோடு இல்லாமல், யாருக்கும் சரியாக உட்கார முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த என்னோட ம.பா. முழிச்சுட்டு என்னனு பார்க்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு பேருந்து, கும்பகோணம் போயிட்டு இருந்தது அதுவும், நாங்க ஏறி இருந்தது தஞ்சாவூர் பேருந்து, அந்தக் கும்பகோணம் பேருந்து எங்களை முந்தறதுக்குப் பார்த்திருக்கு, அந்தக் குறுகிய சாலையிலே. ஏற்கெனவே சாலை அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. என்றாலும் போன முறைக்கு இந்த முறை பரவாயில்லை. ஒட்டு வேலை எல்லாம் செய்து வச்சிருக்காங்க. மழைக்குத் தாங்குமா தெரியலை. அந்தச் சாலையிலே எதிரே வர பேருந்தை இடிக்காமல் போனாலே நல்லா இருக்கும். அந்த இடத்திலே போய் இவர் ஓவர்டேக் பண்ணறார்னா??? நல்லவேளையா, எங்க பேருந்தின் ஓட்டுநர் முன் கூட்டியே கவனிச்சிருக்கார், அதனால் வேகத்தைக் குறைச்சு பேருந்தையும் நிறுத்திட்டார். அந்தப் பேருந்தின் ஓட்டுநரை எதுவும் கேட்கிறதுக்குள், அவங்க அதே உரசலுடன் வேகமாய் முன்னாலே போயிட்டாங்க. உடனேயே எங்க ஓட்டுநர் வேகமாய் ஓட்டி முன்னால் போய் அந்தப் பேருந்தை நிறுத்தினார். எங்க பேருந்தின் நடத்துனரும், அவருக்கு உதவியாய்ப் பயணிகளில் சிலரும் போய் அந்தப் பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் என்ன இது, இப்படியா வருவாங்க? ஜன்னல் பக்கமாய் உட்காருகிறவங்களுக்குக் கை போயிருக்கும் என்று கேட்டால், அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தலையை ஆட்டி விட்டு வேகமாய்ப் போயே போயிட்டார்! போயாச்சு, போயிந்தி!

சமாளித்துக் கொண்டு மறுபடியும் பேருந்து கிளம்பியது. ஆனால் மீண்டும் ஏதோ பிரச்னை. ஒரு லெதர் துண்டத்தை ஓட்டுநர் எடுத்து நடத்துனரிடம் கொடுக்க அவரும் அதை, ஸ்டியரிங் வீலின் கீழே வைக்க முயன்றார். பலமுறை முயன்றும் அவரால் முடியவில்லை. திண்டிவனத்தில் ஏறி இருந்த ஒரு பயணி ஓட்டுநரின் பின்னாலேயே உட்கார்ந்திருந்தார், அவர் ஏதோ சொல்கின்றார், ஆனால் என்னனு புரியலை, ஏதோ பிரச்னைனு மட்டும் புரிஞ்சது. என்னவோ, ஏதோனு நினைச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். பண்ருட்டி நெருங்கும்போது மீண்டும் ஒரு ஆட்டோமொபல் வொர்க்ஷாப் வழியில் வர, பயணி பேருந்தை அந்த இடத்தில் நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி வேகமாய் ஓடிப் போனார். பேருந்து பெரும் குலுக்கலுடன் நின்றது. நடத்துனரும் இறங்கி ஓடினார். இருவருமாய் ஒரு ஸ்பானரைக் கொண்டு வந்து ஸ்டியரிங் வீலைப் பதிய வைத்திருந்த இடத்தில், அந்த லெதர் சக்கையை மீண்டும் வைத்து இறுக்க ஆரம்பிக்க அவர்களோடு சேர்ந்து ஓட்டுநரும் முயல, அப்போத் தான் விஷயமே புரிஞ்சது. ஸ்டியரிங் வீல் கையோடு வந்திருக்கின்றது. சின்ன வயசாய் இருந்தாலும் ஓட்டுநர் சமாளித்துக் கொண்டு பல மைல்கள் வந்துவிட்டிருக்கின்றார். இனி முடியாதுங்கற நிலைமை வந்ததும் பேருந்தையும் கஷ்டப் பட்டு நிறுத்திவிட்டு இப்போ சரி பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுபடியும் பயணிகளில் சிலரும், வொர்க்ஷாப்பின் தொழிலாளியும் வந்து உதவ ஒரு மாதிரி ஸ்டியரிங் பொருத்தப் பட்டு பேருந்து கிளம்பியது. ஆனாலும் கும்பகோணம் வந்து சேரும்வரையில் அப்பாடானு உட்கார முடியவில்லை. சும்மாவே பேருந்துப் பயணத்தில் தூங்கி எல்லாம் போக மாட்டேன். இப்போ இன்னும் விழிப்பாய் இருக்க வேண்டி வந்தது. ஆனாலும் அரசாங்கப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பராமரிக்கும் விதத்தை நினைச்சால், பயணிகளின் நிலையை நினைச்சால் ரொம்பவே கவலையாகத் தான் இருக்கு.

8 comments:

  1. நாராயணா! அதுக்கு இப்படியா ஒரு படத்தை போடுவீங்க!
    இன்னும் உங்க ம.சா மேல ம.பா க்கு மதிப்பு வரலியா?
    :-))

    ReplyDelete
  2. @திவா,
    அதெல்லாம் ஒத்துக்க மாட்டார், கற்பனையோ, காவியமோ னு யோசிப்பார், அதை விடுங்க, படம் நல்லா இல்லை! இந்தப் படத்தைப் பார்த்ததும், நாங்க கைலை யாத்திரை போனப்போ எங்க வண்டி பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து இப்படித் தான் நின்னது, அது நினைவில் வந்தது, ஜன்னல் வழியா வெளியே குதிச்சோம், எல்லாரும், டிரைவர் உள்பட! :)))))))

    ReplyDelete
  3. //கடைசியாய் இந்தத் திங்கள் அன்று 4-ம் தேதி,முக்கியவேலையை முடிச்சுக் கொடுத்தார் கொத்தனார்.//

    ஞாயிற்றுகிழமையே அடையாறிலிருந்து கிளம்பிடாரேமே! திங்கள் கிழமை தான் வந்து சேர்ந்தாரா? :p

    பொதுவா நீங்க ஏஸி வால்வோ பஸ்ல தானே போவீங்க..? இப்ப வர அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் Maintenance பரவயில்லை. அதுக்கு முன் பதிவு செஞ்சு போகனும். :))

    ReplyDelete
  4. //ஞாயிற்றுகிழமையே அடையாறிலிருந்து கிளம்பிடாரேமே! திங்கள் கிழமை தான் வந்து சேர்ந்தாரா? :p//

    ஞாயிற்றுக் கிழமையே வந்துட்டாரா?? எனக்குத் தொலைபேசினது புதன்கிழமைதான். என்ன ஒரு வில்லத் தனம் பாருங்க?? ஊருக்குக் கிளம்பறப்போ தொலைபேசி வரமுடியலைனு ஒரு நொ.சா. :P :P போகட்டும், அவர் தொலைபேசிப் பெயரைச் சொன்னதும், "என்னடா"னு சொல்லி இருப்பேன், ஆனால் மனிதன் உஷார் பார்ட்டி போலிருக்கு, உடனேயே இ.கொ.னு அறிமுகம் செய்துட்டார், சப்புனு போயிடுச்சு! :)))))))))

    அப்புறமா அதான் சொல்லி இருக்கேனே, முன்பதிவு செய்ய முடியலைனு. ஆனால் ஏசி பஸ்ஸெல்லாம் காலங்கார்த்தாலே போயிடுச்சு, அடுத்த பஸ் மத்தியானம் தான்னு சொன்னாங்க, அதுவரை கோயம்பேட்டில் உட்காரணுமே! :P :P

    ReplyDelete
  5. கும்பகோணம் போக ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் தான் லாயக்கு. திருச்சி-தஞ்சை என்று சுற்றினாலும், இரவு ஏறி பெர்த்தில் படுத்தால், காலை ஏழறைக்கு கும்பகோணம். அனால், வெளிநாடு போகிற மாதிரி குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்னாலேயே இருக்கை நிச்சயப்படுத்திக் கொள்ளல் நல்லது. மாயவரம்--கும்பகோணம் ரயில் பாதை சரியாக ஒரு மாமாங்க காலம் ஆகும் போலிருக்கு.


    சென்ற மாதம் கும்பகோணத்திற்கு மலைக்கோட்டையில் போனவன் (நான் பிறந்தது கும்பகோணத்தில் தான். ஒப்பிலியப்பன் பெருமாள் எங்கள் குலதெயவம்) திரும்புகையில் அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்தில் திரும்பினோம். இரவு 10-30க்கு கும்பகோணத்திலிருந்து கிளம்பிய வண்டி, செளகரியமாக காலை 3-30க்கு சென்னை அசோக்பில்லர் அடைந்ததும், இறங்கிக் கொண்டோம்.

    'பிக்விக் பேப்பர்ஸ்' படித்திருக்கிறீர்களா?..பயண அனுபவங்களை எழுதுகிற என்றாலே, எங்கிருந்தோ வந்து நகைச்சுவை உணர்வு உங்களிடம் தொற்றிக் கொள்வதை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது..
    இருந்தாலும் விட்டு விடுகிறதாக இல்லை.. நானும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  6. வாங்க ஜீவி சார், மெயிலில் உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் நிஜமா நீங்கதானான்னு ஆச்சரியமா இருந்தது. ரொம்ப சந்தோஷம், வந்ததுக்கு மட்டுமில்லை, பாராட்டுக்கும், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கறப்போ விஸ்வாமித்திரர் மனோநிலை எப்படி இருந்திருக்கும்னு புரியுது.

    உப்பிலி அப்பன் கோயிலா நீங்க?? அங்கே தான் என் கணவரோட தாத்தா அறங்காவலராக இருந்திருக்கார். மாமனார் காலத்திலே வேண்டாம்னு ஒதுங்கி இருந்துட்டாங்க, ஊரிலே இருக்கும் கோயிலையே பராமரிக்க முடியலைனு. அந்தக் கோயிலுக்குத் தான் எப்படியாவது திருப்பணி நடக்கணும்னு பார்க்கிறோம்! உப்பிலி அப்பர்தான் சொல்லணும் எல்லார்கிட்டேயும்!

    ReplyDelete
  7. நானும் ராக்போர்ட் எக்ஸ்ப்ரஸில் தான் போகணும்னு சொல்றேன், ஆனால் நீங்க சொல்றாப்போல் 20 நாள் முந்தி டிக்கெட் கிடைக்குதா என்ன?? என்ன சார் நீங்க?? 90 நாள் முந்தியே டிக்கெட் முழுசும் காலினு சொல்றாங்க! அதுவும் திடீர் பயணம்னால் முன்பதிவு இல்லாமல் ரெயிலில் எப்படிப் போகிறது?? :)))))))

    ReplyDelete
  8. திரும்பும்போது நாங்களும் தஞ்சாவூரில் இருந்து வந்த ஏசி பஸ்ஸில் செளகரியமாய் வந்துட்டோம், போறப்போ தான் பிரச்னை! இதுக்கு முன்னாலேயும் ஒருமுறை புவனகிரி கிட்டே விபத்து நேர்ந்தது!

    ReplyDelete