Monday, May 4, 2009

கல்கியின் அமரதாரா!


மறுபடியும் அமரதாரா! இந்துமதியின் கதை படிக்கிறேன். நடு நடுவே வேலைகள், உடல்நலம், இணையம், மற்ற சில தடங்கல்கள் இவை எல்லாவற்றையும் மீறி இப்போது முதல் இரண்டு பாகம் முடிச்சிருக்கேன். இனி ரங்கதுரையின் கதை படிக்கணும். முதல் முதல் நான் படிச்சபோது இந்துமதியின் கதையின் ஒரு பகுதி மட்டுமே படிச்சுட்டு, இந்துமதிக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதை பதைப்பு இருந்தது. பல வருஷங்களுக்குப் பின்னரே முழு புத்தகமும் படிச்ச்சேன். இப்போவும் பல வருஷங்கள் சென்ற பிறகே படிக்க முடிந்தது. ஆனாலும் அதே மாதிரியான அனுபவங்கள். படிக்கும்போதே கண்ணில் குளம் கட்டுகின்றது. அதிலும் இந்துமதியின் உணர்வுகளை நினைச்சால் கண்ணீர் அருவியாகவே வருகின்றது. இப்போக் கொஞ்சம் மனம் உறுதி அடைஞ்சிருக்கும், அதனால் எதுவும் தெரியாதுனு நினைச்ச்சேன். இல்லை, முன்னை விட மனம் பலவீனமாய் இருக்கோனு நினைக்கிறேன்.

இந்தக் கதையின் இந்துமதியின் பாத்திரம் எனக்குப் பிடிச்சதுக்குக் காரணம் அவள் உள்ளத்தில் இளம்பிராயத்திலேயே தோன்றிய மாசற்ற அன்பும், அதை அவள் எவ்வாறு போற்றி வந்தாள் என்பதுமே தான். இப்படியும் ஒரு அன்பு இருக்குமா? என்று எண்ணினால் ஆம், இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் அறிவை, புத்தியைக் கொடுத்த இறைவன் ஏன் இந்த இதயத்தையும் கொடுத்து அதற்கு அன்பால் உருகும் தன்மையையும் கொடுத்துச் சோதிக்கின்றான் என்றும் தோன்றுகின்றது. பல வருஷங்கள் முன்னே இந்தக் கதையைப் படிக்கும்போது ரொம்பச் சின்ன வயசு, அதனால் தாங்கலை என்று நினைத்துக் கொண்டேன். இல்லை, இப்போவும் தாங்கத் தான் முடியலை. இன்னும் சொல்லப் போனால் சொப்பனம் கூட வருது, இந்துமதி என்ன ஆனாளோ என்று கவலையாகவும் இருக்கிறது.

ரொம்ப விசித்திரமா இருக்கு இல்லையா? எனக்கும் தான் விசித்திரமா இருக்கு. இவ்வளவு பலவீனமான இதயம் நமக்கு இருக்கானு யோசிச்சால் ஆச்சரியமாத் தான் இருக்கு. இது கதை தான், கடைசியில் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்றும் தெரியும், என்றாலும்...............அறிவுக்கும், இதயத்துக்கும் போராட்டம் நடக்குதுனு நினைக்கிறேன். அறிவு இது கதைனு சொல்லும் அதே வேளையில் இதயம் உருகித் தவிக்கிறது. புத்தகத்தைக் கொடுத்த வல்லி சிம்ஹனுக்கு நன்றி. எத்தனை முறை படிச்சாலும் இதே உணர்வு தான் இருக்கும்னு தெரிஞ்சு போயிருக்கு.

1 comment:

  1. சமீபத்தில் 1954-ல் கல்கி மரணமடைந்த சமயம் அவரால் எழுதப்பட்டு அச்சில் வந்த கடைசி அத்தியாயம், இந்துவின் அன்னை சந்திரமதியின் மரணம்தான்.

    ஓரிரு வாரங்கள் இடைவெளிக்கு பிறகு கல்கியின் மகள் ஆனந்தி இக்கதையை கல்கி வைத்துவிட்டு போயிருந்த குறிப்புகளை வைத்து எழுதி முடித்தார்.

    ஒரே நிகழ்வுகளை இருவரது கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பது என்பதை எனது எட்டு வயதில் நான் முதல் முறையாக அனுபவித்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete