Saturday, August 29, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை - ஜேஷ்ட ராஜன்!


இதனிடையில் பசி, பசி என்று பறந்த அந்தணர் மிதிலாபுரியை விட்டுத் தள்ளி ஒரு குடிசையில் வசித்து வந்த திரிசிரன் என்பவனின் குடிசை வாயிலுக்கு வந்திருந்தார். திரிசிரனின் மனைவி விரோசனை. இருவரும் விநாயகரின் பக்தர்கள். அன்றைய வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றைக்குக் கிடைத்த ஒரே ஒரு அருகம்புல் இட்ட நீரை விநாயகருக்கு நிவேதனம் செய்து, அந்த ஒற்றை அருகம்புல்லைக் கணவனுக்கு உணவாய் அளித்துவிட்டுத் தான் அந்த நீரை அருந்தலாம் என விரோசனை எண்ணி இருந்தாள். அப்போது தான் அந்தணர் அங்கே போய்ச் சேர்ந்தார். சோர்வோடு இருந்த அந்தணரைப் பார்த்த திரிசிரனும், அவன் மனைவியும் அந்தணரை வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டனர். அந்தணரும், தனது தாளாத பசியைச் சொல்லி, தான் ஜனகனின் அரண்மனைக்குச் சென்றதாகவும், அங்கே அளித்த உணவு போதவில்லை. ஏதோ போட்டான் அரை மனதாக என்றும் சொன்னார். திடுக்கிட்டனர் திரிசிரனும், விரோசனையும். அத்தனை பெரிய மஹாராஜா உணவளித்தே பசி ஆறாதவர் இங்கே வந்து சாப்பிட்டா பசி ஆறப் போகின்றார்? கவலையுடனே அவரைப் பார்த்து, உள்ள நிலைமையைத் தெளிவாய் எடுத்து உரைத்தார்கள். முதல்நாள் வரையிலும் யாசகம் எடுத்து உணவு உண்டு வந்ததையும், அன்றைக்கு யாசகத்திலும் எதுவும் கிட்டாமல், விநாயகருக்கு வழிபாடு செய்து, அருகை நிவேதனம் செய்து, அதுவும் ஒரே ஒரு அருகம்புல்! அந்த அருகைக் கணவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுத் தான் நீர் அருந்த இருந்ததையும் விரோசனை கண்ணீர் பொங்கக் கவலையுடனே தெரிவித்தாள்.

அந்தணரோ குதித்தார்! “ஆஹா, அருகும், அந்த அருகு இருந்த நீருமா?? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்னுடைய குஷ்ட நோய்க்கான மருந்தல்லவோ அருகு? அதைத் தீர்க்க இந்த அருகு ஊறிய நீரைவிடச் சிறந்த மருந்து உண்டோ? மேலும் ஜனகன் உள்ளன்போடு எனக்கு உணவு படைக்கவில்லை. அவனிடம் உள்ள செல்வத்தைக் காட்டவும், அவனுடைய செல்வாக்கைக் காட்டவுமே உணவு படைத்தான். உள்ளன்போடு ஒரு கைப்பிடி உணவு கொடுத்தால் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடுமே. அதுவும் தும்பிக்கையானுக்கு நீங்கள் இருவரும் நம்பிக்கையோடு படைத்தது வீண் போகுமா??” அந்தணர் அந்த அருகைக் கிட்டத் தட்டப் பறித்து வாயில் போட்டுக் கொண்டு நீரையும் அருந்தினார். என்ன ஆச்சரியம்? அங்கே காட்சி கொடுப்பது யார்? தலை ஆட்டிக் கொண்டு, மத்தள வயிறுடன் உத்தமி புதல்வன் அன்றோ வந்துவிட்டான்? இது என்ன விந்தை? இது மட்டுமா? மேலும், மேலும் விந்தைகள் நடந்தன. திரிசிரனின் மண்குடிசை இருந்த இடத்தில் இப்போது மாளிகை ஒன்று முளைத்தது. களஞ்சியம் நிரம்பி வழிந்தது. தங்கமும், முத்தும், பவளமும், வைரமும் மாளிகையில் காணக் கிடைத்தன. திரிசிரன் தம்பதிகளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பலவாறு விநாயகரைப் போற்றித் துதித்தனர். அத்தோடு நில்லாமல் திரிசிரனுக்கு வந்த பாக்கியம் ஜனகனுக்கும் தெரியவேண்டாமா?

மிதிலாபுரியே செல்வத்தில் மிதந்தது. அந்தணரால் உண்ணப் பட்ட உணவுப் பொருட்களைப் போல் பலமடங்கு உணவுப் பொருட்கள், மேன்மேலும் செல்வங்கள், நிறைந்தன. திடீரென வந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் விவரம் விசாரித்து அறிந்து கொண்டு திரிசிரனைக் காண வந்தான். அங்கே இருந்த விநாயக மூர்த்ததை வணங்கித் தன் மமதையை அடக்கித் தனக்குப் பாடம் புகட்டியதற்கு நன்றி சொன்னான். விநாயகரும் அவன் முன்னால் தோன்றி, அவனுடைய அறியாமை நீக்கி நல்ல குருவை நாடி ஞானத்தைத் தரக் கூடிய அறிவைப் பெற அருள் புரிந்தார். அதன் பின்னரே ஜனகரும் யாக்ஞவல்கிய மஹரிஷியை நாடி உபதேசம் பெற்று ராஜரிஷியாக மாறினார்.. அருகம்புல் தோல் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. முக்கியமாய் குஷ்டநோய்க்கு அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறியுள்ளதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

5 comments:

 1. Nalla Story. Now your reply to my last comment makes perfect sense to me . So the whole drama is in context of the events before Janakar's Selfrealisation!!. Of course !! How else would a teacher teach his desciple? Thank You.Navarathrikkum inthamathari sathsang irunndha nanna irukkum :)

  ReplyDelete
 2. Idhu innoru version of the story which might interest children. Here is the link. I liked the cute Ganesh animation:))
  http://broadband.glamsham.com/lord-ganesha-teaches-lesson-to-a-kuber/mythology-story-for-childrens-video_6f980900f.html

  ReplyDelete
 3. அருமையான கதை...நன்றி தலைவி ;)

  ReplyDelete
 4. அடிக்கடி ம.பா ங்கீறீங்களே அதென்ன மடையன் பாடாவதியா இல்லை மறு பாதியா?

  ReplyDelete
 5. அடிக்கடி ம.பா ங்கீறீங்களே அதென்ன மடையன் பாடாவதியா இல்லை மறு பாதியா?

  ReplyDelete